இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2021
பார்வையிட்டோர்: 4,251 
 

(1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூன்று | நான்கு | ஐந்து

அடுத்த நாள் மாலை சுமணதாசாவும், நானும், தர்மபாலாவும் நூல் நிலையத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது தம்மிகா எங்களி னெதிரே தனியாக வந்து கொண்டிருந்தாள். வழமைபோலவே வெள்ளை நிறமான சீலையுடுத்து ஒற்றைப் பின்னல் பின்னியிருந்தாள் தம்மிகா. அவளைக் கண்டவுடன் நான் சுமண தாசாவை உற்றுப் பார்த்தேன். அவனது பார்வையும் முகமும் அவஸ்தையினால் திணறிக்கொண் டிருந்தன, தம்மிகா எங்களைக் கண்டதும் வழமைபோலவே முகமலர்ந்து புன்னகை செய்தாள். பிறகு என்னோடும் தர்மபாலாவோடும் பரீட்சை சம்பந்தமாகக் கதைத்துக் கொண்டு வந்தாள். சுமணதாஸா மௌனத்தோடும், அவஸ்தையோடும் எங்களோடு வந்து எங்களுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. சுமண தாசாவைக் கண்டதாகவே சில நிமிடங்கள் தம்மிகா காட்டிக்கொள்ள வில்லை. ஏதோ கதை சொல்லிக்கொண்டு போனவள் இடைநடுவே அதை நிறுத்திவிட்டு தன் முன்னே பறந்த குருவிகளைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்: “உங்கள் நண்பர் சுமணதாசா என்னோடு நேரிலே கதைக்க முடியாமல் எனக்கு சித்ரா மூலம் கடிதமொன்று கொடுத்தனுப்பியிருந்தார்”

தம்மிகா வெகு நிதானமாகவே அதனைச் சொன்னாள். சிறுமையைத் தூக்கியெறியும் அலட்சியபாவம் குரலிற் தொனித்தது.

அவருடைய தாய் என்னை விரும்பவில்லையாம். பெரிய இடத்திலை திருமணம் செய்வதற்கு உத்தேசம் போலும்” என்று நிதானமாகச் சொல்லி விட்டு என்னைப் பார்த்தபடி கூறினாள் :

“தான் என்னை நிராகரித்ததற்காக கலங்கவோ, கண்ணீர்விடவோ வேண்டாமென்று சுமணதாசா எனக்கு எழுதியிருப்பது தான் சிரிப்பாக இருக்கிறது.”

சுமண தாசாவை நான் பார்த்தேன். அவனுடைய திடகாத்திரமான நிமிர்ந்த உடல் கூனிக் குறுகிப் போயிற்றுப் போல உணர்ந்தேன். பரந்த நெற்றியில் சுருக்கங்கள் கீற, முகமெல்லாம் கருமை படர்ந்து புடைத்துக் கொண்டிருந்தது. அவன் முகத்திலே ஆத்திரமும், அவமான உணர்ச்சியும் பீறிப் பொங்கிற்று. மீசையற்ற முகத்தில் துடிக்கும் ஆத்திரத்திற்கு, எங்களின் முன்பு தம்மிகா தன்னுடைய குட்டுகளை உடைக்கிறாளே என்ற வெறுப்பே காரணமாயிருந்திருக்க வேண்டும். அவன் குரல் ஓங்கி அதட்ட லாய் ஒலித்தது.

“தம்மீ”

தம்மிகா அவனின் அதட்டலையே கேட்காதவள் போல, உதாசீனமான பார்வையோடு சொன்னாள்;

“உங்கள் கடிதத்திற்கு நான் வாயாலேயே பதில் தந்து விடுகின் றேன். நீங்கள் என்னை நிராகரித்தமைக்காக நான் கொஞ்சமும் கலங்கவில்லை. காதலுக்கு இரண்டு முடிவுகள் – ஒன்றில் காதலில் வெற்றி பெற்றால் திருமணம். அல்லது அதில் தோல்வியுற்றால் தற்கொலை. இந்த இரண்டு முடிவுகள் மட்டுமே புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் இருக்கலாம்…ஆனால் நிஜவாழ்வில் அம்முடிவுகள் மாத்திரமே இருப்பதில்லை. அப்படியென்றால் அந்த வரட்டு முடிவால் உலகத்தில் பெரும் பகுதியே இன்று பிணக்காடாகத்தான் இருக்கும்… காதலித்து விட்டு அந்தக் காதலைத் தூண்டிக்கொள்ளுகின்ற உரிமையும் மனிதருக்கு உண்டு…”

சொல்லிக்கொண்டு போனவள் அழுத்தமாக ஒரு சிங்களப் பழமொழியைச் சிங்களத்திலேயே சொல்லிவிட்டு, உதடுகளை நாக்கினால் ஈரப்படுத்திக் கொண்டு தொடர்ந்தாள்:

“நான் உங்களைக் காதலித்தது உண்மை. ஆனால் சுயநலமும் கோழைத்தனமுமே உருவமான நீங்கள் என்னை நிராகரித்து எனக்குக் கடிதம் எழுதச் சில மணித்தியாலங்களின் முன்னரே உங்கள் குணத்திற்காக நான் உங்கள் மேலுள்ள காதலைத் துண்டித்துக்கொண்டு விட்டேன், இதனால் எனக்குக் கலக்கமில்லை. அமைதியே ஏற்பட்டது. மத்தியதர வர்க்கத்துக்கே உரிய உணர்ச்சிகள் சில என்னைப் பாதித்தமையால் இப்படி ஒரு தவறை நான் செய்துவிட்டேன்…ஏன், காதல் என்ற மத்தியதர வர்க்கத்துப் பொய்யைக்கூட இதுவரை நான் மனதினுள்க் கொண்டிருந்தமைக்காக மிக வெட்கப்படுகிறேன். அழுக்குப்படிந்த இவ்வமைப்புச் சிந்தனைகள் என்னையும் கௌவியிருந்தன….” அவள் சொல்லி முடிந்ததும் தர்மபாலாகூடத் திகைத்துப்போய் விட்டான். தம்மிகா, ஆவேசந் தணிந்து எதுவுமே நடவாதவள் போல எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து போய்விட்டாள்.

சுமண தாஸாவை நான் அவனின் கண்ணிற்கூடாகப் பார்த்தேன். தம்மிகா தன்னிடம் “என்னைக் கைவிட்டு விடாதீர்கள். உங்களைத் தவிர எனக்கு வேறு கதியில்லை” என அழுது கெஞ்சுவாள் என எதிர்பார்த்திருந்த அவனது முகம், பேராதனையின் மழைமுகிலாய் இருள் கப்பிக் கறுத்துப் போயிற்று.

ஓய்வு நாளென்று வந்தால் என் அறைக்குத் தர்மபாலா வருவதற்கு தவறுவதில்லை. தர்மபாலாவோடு பல மாணவர்கள் என் அறைக்கு வருவார்கள். அன்றும் இரண்டாம் ஆண்டிலே பயிலும் பல மாணவர்கள் தர்மபாலாவோடு எனது அறைக்கு வந்திருந்தார்கள். பல்கலைக் கழக மாணவர்களின் எதிர்காலம் பற்றி நாங்கள் கதைத்துக்கொண்டிருந்தோம். கிட்டத்தட்டப் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலையில்லாதிருப்பதைப் பற்றிச் சொன்ன மாணவன் ஒருவன் எதிர்காலத்தின் அவலம் பற்றி மிகவும் பயங்கொண்டான். பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் பட்டதாரி மாணவர்கள் எங்காவது வேலை கிடைத்தாலும் படிப்பை உதறித் தள்ளிவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். பல மாணவர்கள் வீட்டில்ப் புகைந்த பிரச்சினைகளாலும், வேலையில்லாது அலையும் பட்டதாரிகளைப் பார்த்த நிராசையினாலும் இடையிலேயே படிப்பை முறித்துக் கொண்டார்கள். இளமைப் பருவமே குழப்பம் சூழ்ந்த துயரமாய் இயங்கிற்று. பல்கலைக் கழகத்தினுள் மாணவர் சென்று படிக்க முடியாத பற்றாக்குறைகள், தங்குவதற்கு வசதிகள் இல்லாமை, உணவுப் பிரச்சினை ஆகியன பல்வேறு விதங்களாய், அதிருப்தியின் சீற்றமாய்க் கிளர்ந்தன. விரக்திகள் மனதினுள்ளே அமுங்கிப் புகையாது பல தடவைகள் சீறி வெடித்தன. வேலை நிறுத்தங்கள் அடிக்கடி ஏற்பட்டு ஒரு நிகழ்ச்சியின் முடிவிலே மற்றொரு அத்திவாரம் எழுப்பப்பட்டது.

மௌனம் சூழ்ந்த நிமிஷங்களினுள்ளே எங்கள் ஒவ்வொருவரின் சிந்தனைகளும் முக்காலத்திலும் தொட்டுத் தொடர்ந்தன,

ஆழ்ந்த யோசனையிலிருந்த தர்மபாலா அடங்கிய குரலிற் சொன்னான்:

“படித்தவர்களிடம் இப்போது தான் பிரச்சினையே தலை தூக்கி உள்ளது. ஆனால் கடும் பிரச்சினைகளுக்குட்பட்ட இலட்சக் கணக்கான விவசாயிகளும் தொழிலாளிகளும் அவலச் சேற்றினுள் புதைந்த நிலைமையிலிருந்து மீள்வதற்காக கடுமையாகத் தங்கள் விரோத சக்திகளோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு ஐக்கியப்படுவதின் மூலமே ஐக்கியப்பட்டுப் போராடுவதின் மூலமே விமோசனம் பிறக்க முடியும்…”

தர்மபாலா சொல்லி முடிப்பதற்கு முன்னர், புத்தகப்படிப்பைத் தவிர வேறெதையுமே அறியாத ஜயமன்ன கேட்டான்:

“அப்படியானால் நமக்கு வேலையே கிடையாதா?”

அவன் குரலில் ஏக்கத் தளும்பிற்று.

மெள்ளச் சிரித்தான் தர்மபாலா.

“ஒவ்வொரு பட்டதாரி மாணவனுக்கும் ஆயிரத்தி எண்னூற்றிப் பதினொரு ரூபா எண்பத்தியேழு சதம் ஒரு வருஷத்திலே செலவாகின்றது. வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு ஒரு வருடத்தில் மட்டும் மூன்று கோடியே எட்டுலட்சத்து முப்பத்திநாலாயிரம் ரூபா செலவாகியுள்ளது. எவ்வளவு அதிகமானது இந்தத் தொகை! ஆனால் இதனால் கிட்டிய பலன் தான் என்ன? இவர்களுக்கு வேலை என்று தான் கிடைக்கப்போகின்றது?… பேனா பிடிக்கும் சந்தர்ப்பந்தான் பட்டதாரிகளாகிய எங்களுக்கு இல்லாவிடினும் வேறுவேலை இல்லாமலா போய்விடப் போகின்றது?”

தர்மபாலா சொல்லிவிட்டு எதையோ யோசித்துக்கொண்டிருந்தான். எங்களோடிருந்த சிவானந்தனைப் பார்த்தேன். என்ன விஷயம் கதைத் தாலும் அதற்கு எதிர்க்கதையும் வியாக்கியானமும் சொல்லி வெகு உஷா ராகக் கதைக்கும் அவனே தர்மபாலா சொன்னதைக்கேட்டு ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். வீட்டைப்பற்றி யோசித்துக் கொண்டிருந் ததை நெற்றிப் புருவங்களின் ஏற்ற இறக்கத்திலிருந்து நான் அறிந்து கொண்டேன்,

சிவானந்தனைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பியபோது அறைக் கதவடியில் சுமணதாசாவின் உருவந்தெரிவதனைக் கண்டேன். கதவடியில் தெரிந்த அவனது முகத்தில் தயக்கம் மண்டியிருந்தது.

நான் வெளியே போனேன்.

என்னைத் தயக்கத்தோடு எதிர்கொண்ட அவனது முகத்தை ஏறிட்டேன். கம்பீரமான அவனது முகம் திடீரென வாடினாற்போல அவன் களைப்புற்றிருந்தான்.

“என்ன சுமணா, என்ன?”

வலிந்து சிரிக்க முயன்றவனின் புன்னகை வாயிலேயே கருகிப்போக சுமணதாசா தயங்கிக்கொண்டு சொன்னான்;

“கேட்கவேண்டும் ஒரு விஷயம். ஆனால் கேட்பதற்கோ மனம் மிகவும் சங்கடப்படுகிறது சிவா…”

நான் சிரித்துக்கொண்டே அவனைக் குத்திக்காட்டும் பாவனையில்,

“ஏன் சுமணா, எடுத்ததெற்கெல்லாம் சங்கடந்தானா? என்னிடம் கேட்பதற்குச் சங்கடப்படுகிறீரே…ஏன் உமக்கு உம்முடைய அம்மாவைத் தவிர வேறு யாருடனும் நெருங்கி உரிமையோடு பழகத்தெரியாதா? எதற்காகச் சங்கடப்படுகிறீர்…இனி இப்படி ஒரு நாளும் சொல்லவேண்டாம்” என்றேன்.

அவன் சலனமற்றுச் சிரித்தான். செத்த புன்னகை! அதே தயக்கத்தை மாற்றாது கேட்டான் சுமணதாசா: “எனக்கு மிக அவசரமாய் முப்பது ரூபா வேண்டும்….” சுமண தாசா இழுத்த குரலிலேயே தொடர்ந்தான்:

“அம்மாவுக்கு அடுத்த கிழமைவரை தான் பணங்கிடைக்கும். பணங் கிடைத்த உடனேயே திருப்பித் தந்து விடுகிறேன் சிவா”

என் மனம் பகீரென்றது. உயரத்தில் பறந்த மனக்குருவி கல்லடி பட்டு இறக்கைகள் சிதைந்து கீழே விழுந்து படபடத்த நெஞ்சப்பதைப்பு:

எனது சூட்கேசின் அடிமூலைக்குள் இருக்கும் பணத்தை மனக் கைகளினால் தடவி எடுத்துக் கணக்கிடுகின்றேன். ஒரே ஒரு தாளும் சில் லறைகளுமுட்பட மொத்தம் மூன்று ரூபா எண்பத்தைந்து சதங்கள்.

சுமண தாசா யாரிடமுமே கைநீட்டிப் பணங்கேட்பதில்லை என்பதை யாவரும் அறிவோம். அந்தத் தைரியத்திலே தான் என்ன கேட்கவேண்டுமோ அதைக்கேள் என்று மிகப் பிடிவாதமாக அவனை வற்புறுத்தினேன். இப்போதோ? இப்போது தான் முதல் தடவையாக சுமண தாசா பணங் கேட்டிருக்கின்றான் – அதுவும் தரித்திர நாராயணனாகிய என்னிடம் வந்து நம்பிக்கையோடு கைநீட்டி நிற்கிறான். இதுவரை ஒன்றையுமே எச்சந்தர்ப் பத்திலும் கேளாத ஒருவன், இப்போது கேட்கும் போது கொடுக்க வழியில்லாமற் போய்விட்டதே என்ற கவலையோடு மௌனமாய் நின்ற முகவாட்டத்திலே விஷயத்தைப் புரிந்து கொண்ட சுமணதாசா தன்னை மீறிப் பெருமூச்செறிந்தான்.

நான் சுமணதாசாவை எனது அறையடியிலேயே நிறுத்திவிட்டு எனக்குத் தெரிந்த அனேக நண்பர்களிடம் சென்று கடன் கேட்டேன்.

அன்று பெப்ரவரி மூன்றாந் திகதி.

அனேகமாக மாதத்தில் பத்தாந் திகதிக்குப் பிறகு தான் மாணவர்களாகிய எங்களிடம் காசு புழங்கும்.

ஏமாற்றத்தோடு சுமண தாசாவிடம் சென்று எனது நிலைமையைச் சொன்னேன். அவன் இப்போது எனது தயக்கத்தைப் பார்த்துச் சிரித்தான். அழுது கொண்டே சிரித்தான் போலும்!

– தொடரும்…

– ஒளி நமக்கு வேண்டும் (குறுநாவல்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1973, மலர் பதிப்பகம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *