இயற்பியல் இரண்டாம் ஆண்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 5,815 
 

களம்: கல்லூரி வளாகம் அல்ல

காலம்: 1971-72

சென்னை விமான நிலையம் இருக்கும் ஊரில் இரயில் வண்டி நிலையத்துக்கு மிக அருகில் இருக்கும் கலைக் கல்லூரி.

அதோ நம் நாயகன் கல்லூரி முடிந்து வேக வேகமாக வந்து கொண்டிருக்கும் இளைஞன். நல்ல உயரம். மெல்லிய உடல் வாகு. உடலுக்குத் தேவையான எல்லா எலும்புகளும் உள்ளதா என்பதை எந்தவித ஊடுருவிக் கருவியும் இல்லாமல் அறியலாம். மாநிறத் தோலுக்குக் கீழ் சதைக்கு நிறைய பற்றாக் குறை இருந்தது. காற்று பின் பக்கமாக அடிப்பதால் எப்போதும் செல்லும் வேகத்தை விட சற்று கூடுதலாக நடந்து கொண்டு இருந்தான்.

பின்னாலிருந்த நண்பர்கள் “டேய் கார்த்திக், நில்லுடா..,”

காதில் விழுந்தாலும் கேட்காதது போல் சென்று கொண்டிருந்தான். வேகமாகச் சென்றால்தான் முதலில் வரும் மின் இரயில் வண்டியைப் பிடிக்க முடியும். இல்லை என்றால் மேலும் பத்து நிமிடம் தாமதமாகிவிடும். நண்பர்களுடன் சேர்ந்தால் ப்ளாடஃபாம் SLR கான்டீனில் டீ, காப்பி சாப்பிட வேண்டும். பத்து பைசா ஆகும். அவனிடம் இல்லை.

தண்டவாளத்தைத் தாண்டும் முன் இரு புறமும் பார்த்து தூரத்தில் அவன் ஏற வேண்டிய வண்டி வருவதையும் அறிந்து கொண்டான். பின்னால் அவன் நண்பர்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்று அறிய திரும்பிப் பார்த்தான். நீங்கள் கவனித்தீர்களா…? சற்று நீள்வாக்கான

மிக மென்மையான முகத்தில், அந்த கூர்மையான நாசி – எல்லாவற்றிற்கும். மேல் அந்தக் கண்கள். உங்களைப் பார்க்கும் போது உங்களையும் தாண்டி ஊடுருவிச் செல்கிறதே. சட்டென்று நம் கண்ணை எடுக்க முடியவில்லை. அவனே தாழ்த்திக் கொண்டு ஓடிச் சென்று வண்டியில் ஏறிக் கொண்டான்.

போஓஓய்ங்…… என்ற ஓசையுடன் வண்டி புறப்பட, மறுபுரம் சென்று கதவின் நடுப்புறம் உள்ள கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றான். கன்னத்தை லேசாக கம்பி மீது வைக்க அதன் சில்லிப்பு இதமாக இருந்தது. வண்டி வேகம் பிடித்து மீனம்பாக்கத்தை விட்டு அகல, மனம் பல சிந்தனைக்குள் நுழைந்து வண்டியின் தடக் தடக்கினூடே பயணித்தது.

நல்ல பணியில் இருந்த அப்பா யார் பேச்சையோ கேட்டு தனியாக வியாபரக் கம்பெனி ஆரம்பிக்க சிறிது நாட்களிலேயே போட்ட முதலும், பல ஆண்டு சேமிப்பும் காணாமல் போக வருமானமும் இல்லாமல் போய் விட்டது. கூட இருந்த கூட்டாளிகள் மெல்ல நழுவி தலை மறைவானார்கள். சென்ற வாரம் கூட அப்பா அவனை அவர் வியாபார கூட்டாளி ஒருவர் வீட்டுக்கு அனுப்பி பணம் வாங்கி வரச் சொல்ல, உள்ளிருந்து கொண்டே இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார். அப்பாவின் திறமைக்கு எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும். ஏதோ கௌரவம் பார்க்கிறார் போல. பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமே…? சீக்கிரம் ஒரு முடிவெடுப்பார்… பார்ப்போம்….

சட்டென்று சுற்றியுள்ள கூட்டம் கலைய மாம்பலம் வந்து விட்டதை உணர்ந்தான். வேகமாக இறங்கி தண்டவாளத்தின் மேல் ஒவ்வொரு கட்டையாகத் தாண்டி ஒரு தாள கதியில் நடந்து, ஒரு குட்டைச் சுவரைத் தாண்டி வீதியை அடைந்தான்… வீடு வந்தவுடன் அம்மா கொடுத்த காப்பியக் குடித்து, ரெகார்ட் நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுத ஆரம்பித்தான்… நாளைக்குள் பேராசிரியரிடம

காண்பித்தாக வேண்டும்….. அவனுக்கு மாலை 5.45 மணிக்குள் எவ்வளவு முடியுமோ எழுதியாக வேண்டும்…

எழுபதுகளில் நடுத்தர குடும்பங்களின் தலையான கனவு ஒரு இளங்கலைப் பட்டம், கூடவே தட்டெழத்து, சுருக்கெழுத்தில் தேர்ச்சி… முதலாம் ஆண்டு கல்லூரிப் படிப்பு படிக்கும் போதே இணையாக (வேண்டா வெறுப்பாக சேர), இரண்டிலும் தேர்ச்சி பெற்றுவிட்டான் – இதில் மாநிலத்தில் முதல் வகுப்பில் வென்ற நால்வரில் ஒருவர் என்ற பெருமையும் கூட…. இதன் விளைவே இப்பொழுது கல்லூரிப் புத்தகத்தை மூடிவிட்டு சிறிது ஒப்பனையுடன் கிளம்புகிறான்.. கிளம்பும் முன் அம்மா மென்மையாக

‘இன்னிக்காவது கேட்டுப் பார்டா….’ அவள் கவலை அவளுக்கு.

‘ம்ம்ம்……’ என்று கிளம்பினான்.

இப்ப வேகமாக நடத்தால்தான் 6:15 மணிக்கு வரும் காஞ்சீபுரம் ஃபாஸ்ட் பாசன்ஜரைப் பிடிக்க முடியும். எங்கும் நிற்காத வண்டி 6:30க்கு தாம்பரம் அடைய 6:45க்குள் அவன் இலக்கை அடைய முடியும்….

சீக்கிரமே வந்து ஜோசபின் காத்துக் கொண்டிருப்பாள்…. வட்ட முகம், மாநிரத்துக்கு கொஞ்சம் கம்மி, வசீகரமான கண்கள், பளீர் பற்கள், மிக திருத்தமான ஆடை அலங்காரம்.. எப்பொழுதும் குனிந்த தலை. அவன் பார்க்காத போது பார்ப்பதை ஓரக்கண்ணால் கவனித்திருக்கிறான்… சீக்கிரம் போக வேண்டும்… இல்லை என்றால் நேரமாகி விட்டது என்று கிளம்பி விடுவாள்….

ஓட்டமும் நடையுமாக சென்று அந்த அறைக்குள் நுழைய ஜோஸபின் தலை நிமிர்த்தி “குட் ஈவினிங் சார்..” என்றாள்.

கார்த்திக் ‘குட் ஈவினிங்’ கூறி ஆசிரியருக்கான இருக்கையில் அமர்ந்தான். அடுத்த இரண்டு மணி நேரம் அங்கு வரும் பத்து பேருக்கு அவன் ‘சுருக்கெழத்து பயிற்சி ஆசிரியன்(ர்?)’ அதிகமாக பெண்கள் இருக்கும் வகுப்பில் ஒரே ஒரு ஆண் மாணவன். விடா முயற்சியின் உதாரணம். விஸ்வரூப வெற்றிதான் கைக் கெட்டாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது அவரை. இருபத்தி எட்டு வயதைத் தாண்டியவர் இன்னும் நிறைய சந்தேகங்களுடன் தாடையைச் சொறிந்து கொண்டிருந்தார். கஜனி ‘எங்கே இவர் தன் சாதனையை மீறிடுவாரோ’ என்ற கலக்கத்தில் கல்லரையில் லேசாகப் புரண்டார்.

எல்லோருக்கும் பாடம் முடித்து எட்டு மணிக்குள் அனுப்ப, ஒய்யாரமாய் ஆடி அசைந்து வருவாள் ஷ்யாம்… கொஞ்சம் சீக்கிரம் வந்தால் கார்த்திக் சீக்கிரமாக வீட்டுக்குப் போகலாம். ஆனால் அவளுக்கு அந்த நேரம்தான் வசதியாம்… அதீதமான அலங்காரத்துடன் லேசான பர்ஃயூம் வேறு. கார்த்திக்கு லேசாக தலை வலிப்பது போல் இருந்தது. ஷ்யாம் டெஸ்கின் மேல் முன்பக்கமாக சாய்ந்து அமர கார்த்திக் கூச்சத்துடன் பார்வையை வேறுபக்கம் திருப்பினான்…. பாடத்தைத் தவிர வேறு விஷயங்களில் அவள் ஆர்வம் அதிகமாக இருந்தது… தான் அமர்ந்திருந்த நாற்காலியைச் சற்று பின்னுக்குத் தள்ளி அமர்ந்து விரைவாகப் பாடத்தை நடத்தி முடித்து எழுந்தான்…

“நாளை முதல் கொஞசம் சீக்கிரம் வாம்மா….” என்று கூறிவிட்டு தான் நிலையத்தின் முதல்வரைப் பார்க்கச் செல்வதாக கூறி நகர்ந்தான். இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பாள் என்று அவள் முகம் காட்டியது.

மாடியில் முதல்வர் இருந்தார். அப்பாடா! இன்று கேட்டு விட வேண்டும். கார்த்திக்கைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டு

சம்பந்த மில்லாத எல்லா விஷயத்தையும் பேசி விட்டு வகுப்பு எப்படிப் போகிறது என்று விசாரித்தார்.

“ஷ்யாம் மட்டும் கொஞ்சம் சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும், சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்” என்றான்.

“யாருப்பா ஷ்யாம்? அந்தப் பெயரில் யாரும் இல்லையே?”

“அதான் சார் எட்டு மணிக்கு வராங்களே..,!”

“அவளா…? அலமேலு!

ஏன் பெயரை மாத்திச் சொல்றா…?”

“தெரியலை சார்.,..”

அவராக கார்த்திக் கேட்க இருப்பதைப் பற்றி குறிப்பிடுவார் என்று எதிர் பார்த்தவன், பொறுமை மீறவே தானே கேட்டுவிட முடிவு செய்தான். மிகுந்த தைரியத்தை வரவழைத்து

“சார் சம்பளம்…..” என்று இழுத்தான். தேதி பதினெட்டைத் தாண்டியிருந்தது.

“அதுக்கென்னப்பா…. நாளைக்கு வாங்கிக்க..,!”

“இல்ல சார் இப்ப கிடைச்சா நல்லாயிருக்கும்…”

மிகுந்த யோசனைக்குப் பிறகு பாக்கெட்டிலிருந்து ஐம்பது ரூபாயை பிரிய மனமில்லாமல் எடுத்துக் கொடுத்தார். கார்த்திக் மனதில் மகிழ்ச்சி. அம்மா முகத்திலும் இன்று கொஞ்சம் பார்க்கலாம்… ஓடிப் போய் மின்சார ரயில் பிடித்தால் இரவு பத்து மணிக்கு வீடு சேரலாம்…

அதற்குப் பின் அந்த இயற்பியல் இரண்டாம் ஆண்டு

மாணவனின் கனவில் ஜோஸபின், தாடி சொரியும் கஜனி அண்ணா, ஷ்யாம் என்கிற அலமேலு, நியூட்டன். பாஸ்கல்….. மாறி மாறி ஒருவரை ஒருவர் துரத்தினர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *