பரபரப்பான அந்த சாலையில் !
அதி வேகமாய் வந்த இரு சக்கர வாகனத்தை கை காட்டி நிறுத்தினேன்.என்னை தாண்டி செல்ல நினைப்பது போல் வேகமாக வந்த வண்டி எனது போலீஸ் உடுப்புக்காக மரியாதை தரும் விதமாய் சடக்கென நின்றது. கீரிச்..சத்தம் உடன் டயரின் தேய்மான வாசனை..
ஏம்ப்பா இவ்வளவு வேகமா போக கூடாதுன்னு உனக்கு தெரியாதா?
சார் ப்ளீஸ் அவசரம்..எனக்கு தெரிஞ்சவங்க போன் பண்ணாங்க, ஹாஸ்பிடல்ல ஒருத்தருக்கு “ப்ளட்” கொடுக்கணுமாம், அதுதான் வேகமா போய்க்கிட்டு இருக்கேன்.
உங்களை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன், லைசென்ஸ் வச்சிருக்கியா ?
சார் ப்ளீஸ் லைசென்ஸ் இருக்கு, ஆனா எடுத்துட்டு வரலை, வீட்டுல வச்சுட்டு வந்துட்டேன்.
ம்..ம்..சரி வண்டிக்கு ஆர். சி புக்காவது இருக்கா?
இருக்கு சார், ஆனா..அவன் இழுக்க…
ம் அதையும் வீட்டுல வச்சுட்டு வந்துட்ட? அப்படித்தானே ?
சார் ப்ளீஸ் என்னை நம்புங்க, எனக்கு அவசரமா வர சொன்னதுனாலதான் போயிட்டிருக்கேன், நீங்க என்னை தடுத்து லேட் பண்ணறதுனால அங்க ஒரு உயிர் ஊசலாடற நிலைமையில இருக்கு..
சரிப்பா நான் நீ சொல்றதை நம்புறேன், ஆனா லைசென்ஸ் இல்லை, கேட்டா வீட்டுல இருக்குங்கறே, வண்டி ஆர்.சி இல்லை, கேட்டா அதுக்கு சரியா பதில் சொல்லமாட்டேங்கறே ? சரி ஹெல்மெட்டாவது போட்டிருக்கியான்னா அதுவும் இல்லை. இப்ப நான் எப்படி உன்னை நம்புறது, வண்டி உன்னுதா? இல்லே எங்காவது களவாண்டுட்டு வந்திருக்கியா? ம்..உண்மையை சொல்லு.
சார் உண்மைய சொல்லிடறேன், வண்டி என் பிரண்டுது, அவங்கிட்டே கேட்டுட்டுத்தான் எடுத்துட்டு வந்திருக்கேன், காரணம் என்னோட பிரண்டு அப்பா யாருக்கோ காமாட்சி ஹாஸ்பிடலுக்கு பிளட் கொடுக்கறதுக்கு வர சொன்னதாலே போயிகிட்டு இருக்கேன், அந்த அவசரத்துல வண்டிய பத்தின கவனமெலாம் எங்கிட்ட இல்லை. ப்லீஸ் என்னை நம்பி இப்ப விடுங்க, நானே ஹாஸ்பிடல் போயிட்டு வந்து உங்களுக்கு பதில் சொல்றேன்.
ஹூஹும் அசையவேயில்லை, அவனையே உற்றுப்பார்த்தேன், பார்த்தால் படித்தவனாக தெரிகிறான், கண்டு கொள்ளமாட்டேனெங்கிறானே ! என் மனதை படித்து விட்டானோ என்னவோ, சட்டென தன் பாக்கெட்டில் இருந்து ஒரு நோட்டை எடுத்து என் கையில் திணிக்க, மெல்ல அவனுக்கு வழி விட்டு விலகி நின்றேன்.
அரை மணி நேரத்தில் சக போலீஸ்காரர் ஓடி வந்தார். ரகுபதி சீக்கிரம் காமாட்சி ஹாஸ்பிடலுகு ஓடு, அங்க உன் சம்சாரத்துக்கு ஆக்சிடெண்டாம், உன் செல்லுக்கு ரொம்ப நேரமா போன் பண்ணிகிட்டிருக்காங்க. எடுக்கவேமாட்டேங்கறயாம்.
ஐயோ செல் எடுத்து பார்க்க நிறைய மிஸ்டு கால்கள். சட்டென அவரை ட்ராபிக்கில் நிற்க சொல்லிவிட்டு, ஹாஸ்பிடல் விரைந்தேன்.
இப்ப பரவாயில்லைன்னு டாக்டர் சொன்னார். நிறைய இரத்தம் போயிடுச்சாம். என் பையனுக்கு போன்பண்ணி சொன்னேன். அவன் பிரண்ட்சுக, நாலைஞ்சு பசங்க வந்து இரத்தம் கொடுத்தாங்க, பக்கத்து வீட்டுக்காரர் சொல்லிக்கொண்டிருந்தார். இதா இவங்கதான், அப்பொழுதுதான் இரத்தம் கொடுத்து விட்டு சோர்வில் வந்த நான்கைந்து பேரில் நான் பணம் வாங்கிய பையனும் !