இந்த இனிய மாலை வேளையில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 10,384 
 
 

மாலை நான்கு மணிக்கு கூட்டம் ஆரம்பிப்பதாக அறிவித்து இருந்தாலும் காலையிலிருந்தே விழா ஏற்பாடுகள் சீக்கிரமாகவே துவங்கி விட்டன. பத்து மணிக்கு சாமியானா போடுபவர் வந்து

ஒரு மணி நேரத்தில் தன் வேலையை முடித்து விட்டார். அதற்குள் அரங்க மேடை அமைப்பவரும் வந்து தன் பணியை பணியாட்கள் சிலருடன் ஆரம்பித்து விட்டார். அப்பொழுது பார்வையாளர்கள் அமர்வதற்காக இருக்கைகளும் வந்து சேர்ந்துவிட்டன. இன்னும் ஒலிபெருக்கி, டியூப்லைட் மற்றும் மின்சார வேலையும் ஏற்பாடானது. தவிர தண்ணீர், மேடை அலங்காரம் இத்யாதி விஷயங்கள் நடந்தேறின. மேடையின் முன்புறம் கீழே சிவப்பு வர்ணத்தில் ஒரு நீண்ட சமுக்காளம் அரங்கத்தின் முகப்புவரை போட்டுவிட்டனர். இருபுறமும் அமர இருக்கைகள். ஆக விழா நடக்க எல்லாம் தயார்.

சாலையில் போவோர் வருவோர் திரும்பிப் பார்த்தவாறு சென்றனர். என்ன நடக்கப்போவுது இங்கே என்ற கேள்வியையும் சிலர் கேட்டு வைத்தனர். தள்ளு வண்டியில் பேரிச்சை ஆப்பிள் சாத்துக்குடி போன்ற பழங்கள் வைத்து விற்பவர் முகப்புக்கு அருகே வந்து நின்று கொண்டார். இவரைப்போலவே சைக்கிளில் டீ காபி விற்பவர் வந்து அவ்வப்போது உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டார். ஒரு பெட்டியில் விதவிதமான சிகரட் வைத்திருந்தார். பானிபூரி சாட் மசாலா வண்டியும் எதிரில் நின்றுகொண்டது.

நாலேகால் மணி அளவில் இரண்டுபேர் வந்து மேடையின் பின்புறம் ஒரு ஃபிளக்ஸ் பேனரை இழுத்துக் கட்டினர். அதில் சாதனை விருது வழங்கும் விழா எனப் பெரிதாக நீல வர்ணத்தில் அச்சிடப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து மூன்று நபர்கள் வந்து வெறுமனே சுற்றிப்பார்த்தனர். எப்போ ஆரம்பிக்கலாம் என்றார் ஒருவர். ஆளுங்க வந்து விடுவாங்க. வந்ததும் ஆரம்பிச்சுடலாம். மெல்ல ஒவ்வொருவராக மற்றும் நண்பர்கள் சகிதம் வந்தனர். கூட்டம் இன்னும் ஆரம்பிக்க நேரமாகும் என ஊகித்த சிலர் உள்ளே வராமல் வெளியே கூடிப் பேசிக்கொண்டு இருந்தனர். சிலர் டீ சிகரட் கையுமாக நின்றிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வந்ததும் ஓரளவுக்கு அரங்கம் நிரம்ப ஆரம்பித்தது. சரி நேரமாயிட்டே போவுது. ஐந்தரை மணி. வாங்க எல்லோரும் என ஒருவர் கை அசைத்து உள்ளே சென்ற சில நிமிடங்களில் கூட்டம் துவங்கியது ஒருவழியாக.

மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் விழா நடத்தும் அமைப்பைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்கள் என கருதப்படுபவர்கள் அமர்ந்துகொண்டனர். தலைவர் செயலாளர் பொருளாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள் அவர்கள். இவர்களுடன் விழாவிற்கான பெரும் செலவை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பிரமுகருக்கும் மேடையில் இடம் தரப்பட்டிருந்தது. மேடையில் அமர்ந்திருப்பவர்களில் நடுநாயகமாக சிறப்புப் பேச்சாளரையும் அவருக்கு வலது புறத்தில் விருது பெற வந்த சிறப்பு விருந்தினரையும் அமரச் செய்திருந்தனர். இதே வரிசையில் ஓரமாக ஒரு மடக்கு நாற்காலி போட்டு அதில் அமர்ந்திருந்தவர் எழுந்து மைக் எதிரில் நின்று தமிழ்த்தாய் வாழ்த்து இப்பொழுது என்றதும் எல்லோரும் எழுந்து நின்றனர்.

அரங்கத்தில் சில நாற்காலிகள் நகர்த்தப்படும் ஓசை எழுந்தது. ஒலிநாடா வாழ்த்துப் பாடலை பாடி முடித்ததும் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டனர். சிலர் பார்வைக்கு ஏற்றாற்போல் நாற்காலிகளை தள்ளிப் போட்டு அமர்ந்தனர். சிறப்பு விருந்தினரின் குடும்பத்தினரை பார்வையாளர்களின் வலப்பக்க முன் வரிசையில் அமர வைத்தனர். வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பவர்கள் மேடையின்கீழ் நின்றுகொண்டனர். மேடையில் இருக்கும் ஒவ்வொரு தலையும் தங்களுக்குள்ளாகவே மாற்றி மாற்றி பொன்னாடை அணிவித்துக் கொண்டனர். இவருக்கு அவர் அவருக்கு இவர் என சந்தன மாலையும் அணிந்து கொண்டனர். புகைப்படம் எடுப்பவர் கேட்டுக் கொண்டபடி சிலசமயம் பொன்னாடை போர்த்துவதுபோலவும் மாலை அணிவிப்பதுபோலவும் மீண்டும் மீண்டும் ஒத்திகை நடத்தி வீடியோவிலும் புகைப்படத்திலும் பதிவு செய்துகொண்டனர்.

வரவேற்பு, அறிமுகம் மற்றும் கௌரவப்படுத்திக்கொள்ளும் செயல்கள் முடிந்த பின் விழாத்தலைவர் எழுந்து மைக்கைப் பிடித்து பேசத் துவங்கினார். அப்பொழுது வெள்ளை ஆடையில் ஒருவர் அரங்கில் நுழைந்து பார்வையாளர்களுக்காக போடப்பட்ட நாற்காலிகளின் முன்வரிசை நடுவில் அமர இடம் தேடினார். இடம் காலி இல்லை என அறிந்து சில வரிசை பின் சென்று அமரப் போனார். அதற்குள் மேடையில் ஓரமாக அமர்ந்து இருந்தவர் கீழே இறங்கி வந்து முன் வரிசை நடுவில் ஏற்கனவே அமர்ந்திருந்தவரிடம் காதில் ஏதோ சொன்னதும் அவர் விருப்பமில்லாமல் எழுந்து கடைசி சில வரிசைகள் ஒன்றில் போய் அமர்ந்து கொண்டார். பிறகு மேடையில் இருந்தவர் அந்த வெள்ளைஆடை நபர் கையைப் பற்றி இழுத்து வந்து முன் வரிசை நடுவில் அமரச் செய்து மேடை ஏறிக் கொண்டார். முன் வரிசையில் தன்னை அமரச் செய்த மகிழ்ச்சியை பற்கள் தெரிய அவர் தலை அசைத்துக் கொண்டார். பற்களில் இரண்டு தங்க நிறத்தில் வெற்றிலைக் கறையுடன் பளிச்சிட்டன.

இந்த இனிய மாலை வேளையிலே என தன் பேச்சைத் துவங்கிய தலைவர் முதலில் தன் பராக்கிரமங்களை அடக்கமாக வெளிப்படுத்திக்கொண்டார். பின் சாதனை விருது ஏன் எதற்காக வழங்குகிறோம் என்ற நீண்ட பட்டியல் ஒரு அரைமணி நேரம் சொல்லி இவை அனைத்திற்கும் பெற வந்திருக்கும் சாதனையாளர் மிகவும் பொருத்தமானவர் என்பதை எடுத்துக் கூறி பல முக்கிய பணிகளுக்கிடையில் நேரம் ஒதுக்கி இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குறுகிய கால அவகாசத்தில் அழைப்பை ஏற்று வெகு தொலைவிலிருந்து வந்திருக்கும் சிறப்புப் பேச்சாளரை பேச அழைத்து தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மேடையில் அமர்ந்திருப்பவர்கள் அவ்வப்போது பக்கத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து எந்தக் காரணமுமின்றி புன்னகைத்துக் கொண்டனர்.

சிறப்புப் பேச்சாளர் சிறிது தண்ணீர் குடித்து மெல்ல எழுந்து மைக் எதிரில் நின்று ஒருமுறை கனைத்துவிட்டு விழாத்தலைவர் அவர்களே என்று ஆரம்பித்து பின் மேடையில் இருக்கும் ஒவ்வொருவரையும் விளித்துத் தன்னைச் சிறப்புப் பேச்சாளராக இருக்க வேண்டும் என்ற அன்பின் அழைப்பை தன்னால் தவிர்க்க முடியாத மன நிலையில் பல சிரமங்கள் ஏற்று வந்திருப்பதாக விவரமாக பேச ஆரம்பித்தார். பார்வையாளர்களில் சிலர் எழுந்து வெளியே போக ஆரம்பித்தனர். விழாவுக்கு வந்திருந்த பெண் பார்வையாளர்கள் இரண்டு வரிசைகளில் அமர்ந்திருந்தனர். அவர்கள் யாரும் எங்கும் எழுந்து போகவில்லை. முன் வரிசை நடுவில் அமர்ந்திருந்த தங்கப்பல் வெள்ளை ஆடை உடுத்தியவர் அவ்வப்பொழுது அலைபேசியில் பேசியபடி இருந்தார்.

சிறப்புப் பேச்சாளர் வெகுநேரம் எதை எதையோ பேசியபின் இந்த விழாவில் விருது பெற வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்மேல் தன் கவனம் பதித்தார். அவருடைய ஆளுமை, அயராத உழைப்பு, நேர்மைக் குணம், சீரிய பண்பு, சமூக சிந்தனை, சொல் ஆற்றல், வற்றாத செயல் திறம், உயர்ந்த இலட்சியம், அளவற்ற அன்பு, நட்பு, பாசம், மனித நேயம் என அனைத்துப் பரிமாணங்களையும் ஒவ்வொன்றாக சரளமாக விளக்கி அடுக்கிக்கொண்டே போனார். சிறப்பு விருந்தினர் முகத்தில் எவ்வித சலனமும் காட்டிக்கொள்ளாமல் மௌனமாக புகழ் மழையில் நனைந்து கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் இவரைப் பார்த்து புன்னகைத்தனர். பிறகு தங்களுக்குள்ளாக எதையோ மெல்லிய குரலில் பேசிக்கொண்டு திடீரென பற்கள் தெரிய சத்தமாக சிரித்தனர். உடனே சுதாரித்துக் கொண்டு பலமாக சேர்ந்து கை தட்டினர். பர்வையாளர்களில் பலரும் உடன் கைதட்டினர். தங்கப்பல் வெள்ளைஆடை அலைபேசியில் பேசியபடியே எழுந்து வெளியே போனார். சிறப்புப் பேச்சாளர் சிறப்பு விருந்தினரை நோக்கி சாதனை விருது இவருக்குச் சாலவும் பொருந்தும் அதை வழங்கும் இவ்விழாவில் தான் கலந்துகொள்வது தனக்குப் பெருமை அளிப்பதாக அறிவித்துக் கொண்டார். ஏறத்தாழ ஒருமணி நேரம் நீண்ட சொற்பொழிவை முடித்து இருகைகளையும் உயரே தூக்கி நன்றி வணக்கம் சொல்லியபடி தன் இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டார். எதிரில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் எடுத்து மடமடவென குடித்தார். விருது பெற வந்த சிறப்பு விருந்தினர் இவருடைய இருகைகளையும் இறுகப்பற்றி குலுக்கி தன் நன்றியையும் சந்தோஷத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

மேடையில் இருப்பவர்களுக்கு பிஸ்கட் டீ போன்றவை பேப்பர் பிளேட்டில் வைத்து உபசரித்தனர் அமைப்பின் இரண்டு உறுப்பினர்கள். முன்பு வெளியே எழுந்து போன பார்வையாளர்கள் வாயில் எதையோ மென்றபடி உள்ளே வந்து ஏற்கனவே அமர்ந்த இடத்தில் இல்லாமல் கிடைத்த வேறு நாற்காலிகளில் அமர்ந்து தங்களுக்குள்ளாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து சமோசா வாசனை வந்தது. தங்கப்பல் வெள்ளைஆடை அரங்கத்தின் வெளியே நின்று வெகு நேரம் அலை பேசியில் பேசிக்கொண்டிருந்தவர் திரும்பவும் உள்ளே வரவேயில்லை. எப்பொழுது அந்த இடம்விட்டு நகர்ந்து சென்றார் என்பதிலும் யாரும் கவனம் கொள்ளவில்லை.

விழாத்தலைவர் எழுந்து, வெகு ஆவலாக இதுவரை காத்திருந்த நேரம் வந்துவிட்டது. சாதனை விருது பெற்றுக்கொள்ள நம்முடைய சிறப்பு விருந்தினரை எங்கள் அமைப்பின் சார்பாக அழைக்கிறேன் என்று பலமாகக் கைதட்டினார். சிறப்பு விருந்தினர் எழுந்திருக்கும் அந்த நேரத்தில் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் ஒரு பெரிய தட்டில் பிஸ்கட்களை வைத்து பார்வையாளர்கள் முன் காண்பித்துக்கொண்டே சென்றார். விரும்பியவர்கள் எடுத்துக் கொண்டனர். அவர்பின் இன்னொரு உறுப்பினர் பேப்பர் கப்பில் டீ தந்து கொண்டே சென்றார்.

மேடையில் விழாத்தலைவரும் உள்ளூர் பிரமுகரும் சிறப்புப் பேச்சாளரும் சேர்ந்து சாதனை விருதை சிறப்பு விருந்தினர் கழுத்தில் அணிவிக்கும் அதேநேரம் செயலாளர் பொருளாளர் இவர்களும் எழுந்து வீடியோவுக்கும் புகைப்படத்திற்கும் போஸ் கொடுத்தபடியே நின்றனர். இந்த விருது தங்கமுலாம் பூசப்பட்டு உள்ளங்கை அளவு வட்டமாக இருந்தது. அதில் மேற்புறம் உள்ள சிறு துளையொன்றில் தங்க நிறத்தில் ஒரு சிறிய சேஃப்டிபின் நுழைத்து வழவழப்பான நீல வர்ண ரிப்பன் ஒன்றுடன் இணைத்திருந்தனர். எதிர்பாராமல் ரிப்பனில் இணைத்த சேஃப்டிபின் கழன்று, விருது மேடையில் விழுந்து, வட்டமாக இருந்ததினால் உருண்டு மேடைமேலிருந்து கீழே அப்படியே முன்னால் விரித்த சிவப்பு சமுக்காளத்தின்மேல் இன்னும் வேகமாக உருண்டபடியே சென்றது. யாரும் இதைப் பார்க்கவில்லை. விழாத்தலைவர் மட்டும் பார்த்து சிறப்பு விருந்தினரிடம் உங்க விருது உருண்டு கீழே ஓடுது பாருங்க. சீக்கிரம் அதைப் பிடிங்க யாராச்சும் என விரட்டினார். விருது பெற்றவரும் மேடையிலிருந்த பொருளாளரும் சிலரும் கீழே இறங்கி ஓடாத குறையாக வேகமாகச் சென்றனர். ஏன் இவர்கள் அவசரமாக வெளியே போகிறார்கள். யாராவது பெரும்புள்ளியை வரவேற்கப் போகிறார்களா என்று பார்வையாளர்களில் சிலர் திரும்பி இவர்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தனர். அதற்குள் விருது அரங்கம்விட்டு வெளியே உருண்டோடி எங்கோ மறைந்தது.

அரங்கத்தின் முகப்பில் நான்கைந்து டியூப்லைட்கள் போடப்பட்டு நல்ல வெளிச்சமாக இருந்தது. ஆனாலும் உருண்டு வந்து எங்கே போய் விழுந்திருக்கும் எனத் தெரியவில்லை. உள்ளேயிருந்து விருது தேடவந்தவர்களை தள்ளுவண்டிக்காரர் பார்த்ததும் வாங்க சார் ஆப்பிள் ஃப்ரெஷ்ஷா இருக்கு. சிம்லா ஆப்பிள். கிலோ நூத்திஅம்பது ரூபா. நூத்திநாப்பதுக்கு எடுத்துக்குங்க எனக் கூறினார். யாரும் பதில் தரவில்லை. எல்லோர் கண்களும் விருதைத் தேடியபடி இருந்தன. பழக்காரர் விடாமல் இல்லன்னா சாத்துக்குடி வாங்கிக்குங்க நல்லா ஜூஸ் வரும் புளிக்காது நான் கேரண்டி எவ்ளோ சார் வேணும் என்று திரும்பத்திரும்ப நச்சரித்துக்கொண்டேயிருந்தார். அப்பொழுது விருது சிறப்பு விருந்தினர் பார்வையில் பட்டுவிட்டது. அது பழங்கள் உள்ள தள்ளுவண்டியின் கீழே கொஞ்சம் மண்ணில் மறைந்து தெரிந்தது. இதோ இங்கிருக்கு என ஆவலாக தள்ளுவண்டியின் அருகே சென்றார் அவர். உடனே பழக்காரர் வாங்க ஐயா என்னா வேணும் ஒரு கிலோ போடட்டுமா என்று கேட்க அவர் ஒண்ணும் வேண்டாம்ப்பா. இதெ எடுக்கத்தான் வந்தோம் என்று பதில் கொடுத்தபடியே வண்டியின் கீழே குனிந்தார். பழக்காரர் வியாபாரம் செய்வதிலேயே குறியாக இருந்தார். ஐயா இந்த பேரிச்சம் பாக்கெட்டாவது வாங்கிக்குங்க அரகிலோ கால்கிலோ ஏதாச்சும் எடுத்துக்குங்க எனக் கெஞ்சினார். சரி அப்புறம் கூட்டம் முடிஞ்சப் பின்னால் வந்து வாங்கிக்குறோம் என்று பொருளாளர் குரல் கொடுத்தார்.

ஐயா, நீங்க நகருங்க நான் எடுத்துத் தர்றேன் என்று யாரோ உதவ வந்தவருக்கு, பரவாயில்லெ இங்கதான் இருக்கு. எடுத்துட்டேன் என்று மேலும் குனிந்தபோது அவருடைய வேட்டிநுனி தடுக்கி கீழே சாயப்போனவர் சுதாரித்து மண்டியிட்டு சமாளித்துக் கொண்டார். உள்ளே கைவிட்டு மண்ணிலிருந்து விருதை எடுக்கும்பொழுது கன்னத்தில் கொஞ்சமாக மண் ஒட்டிக்கொண்டது. ஐயா, நல்லதாப் போச்சு உங்க கையாலயே திரும்ப எடுத்துக்கிட்டீங்க. வாங்க வாங்க உள்ளே போகலாம் என்று பக்கத்தில் நின்றவர் அழைத்தார். இதுக்கா இவ்ளொ கஷ்டப்பட்டீங்க, சொல்லியிருந்தா நான் எடுத்துத் தந்திருக்கமாட்டேனா என்றார் பழக்காரர். யாரும் கண்டு கொள்ளவில்லை. எல்லோரும் சாகசம் புரிந்த பாவனையில் அரங்கத்தின் உள்ளே போனார்கள். அப்போது உள்ளூர் தொலைக்காட்சி நிருபர் கையளவே இருக்கும் காமிரா ஒன்றையும் பேண்ட் பின் பாக்கெட்டில் பேனாவும் சிறிய நோட்டும் வைத்துக்கொண்டு அரங்கத்திற்குள் வந்தார். ஒருவகையில் நிருபர் தாமதமாக வந்ததும் நல்லதுதான் என்று விழாத்தலைவர் மனசுக்குள் சொல்லிக்கொண்டார். ஐயா வாங்க, மேடையில் இருந்தவங்க எல்லோரும் மேலே வாங்க எனத் தலைவர் அழைத்தார். விருதில் ஒட்டியிருந்த தூசி, அழுக்கு நன்றாகத் துடைத்து சிறப்பு விருந்தினர் கழுத்தில் இருக்கும் நீல வர்ண ரிப்பனுடன் மீண்டும் சேஃப்டிபின் கொண்டு இணைத்து ஒருமுறை இழுத்துப் பார்த்து மேடையில் நின்று கொண்டனர். திரும்ப ஒருமுறை விருது தருவது போலவும் பெறுவது போலவும் தொலைக்காட்சிக்காக ஒத்திகை மேற்கொண்டனர். விழாத்தலைவரிடம் சிறு குறிப்பு ஒன்றையும் பெற்றுக்கொண்டு தொலைக்காட்சி நிருபர் சீக்கிரத்தில் கிளம்பிச் சென்றார். பத்துமணி செய்திகளில் ஒளிபரப்பாகும் என்றார்.

விருது கீழே உருண்டு சென்றது அதைத் தேட விருது பெற்றவர் உட்பட சிலர் வெளியே போனது திரும்பக் கிடைத்தது போன்ற எதுவும் நிறைய பார்வையாளர்களுக்குத் தெரியவில்லை என்றாலும் அவர்கள் மத்தியில் வேறுவேறு வடிவங்களில் புதுப்புதுக் கதைகள் உருவாயின. அங்கங்கே கசமுசா என பேச்சு எழுந்து கூட்டத்தில் சத்தம் கூடியது. விழாத்தலைவர் எழுந்து எல்லோரும் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டிக்கொள்கிறேன். இப்பொழுது சிறப்பு விருந்தினர் தம்முடைய ஏற்புரையை வழங்க அன்புடன் அழைக்கிறேன் என்று சொல்லி விட்டு செயலாளர் பக்கம் திரும்பி இவர் பேசி முடிச்சதும் நீங்க நன்றியுரை பார்த்துக்குங்க எனக் கையால் சைகை செய்து திரும்பிக்கொண்டார்.

விருதுபெற்ற விருந்தினர் பணிவுடன் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு தன் உரையை வழங்கலானார். தான் எதையும் சாதித்துவிட்டதாக இதுவரை நினைத்ததில்லை. இன்னமும் தான் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது என்றபோதும் தன்னை இந்த விருதுக்குத் தேர்வு செய்து இருப்பதாக இவ்வமைப்பின் தலைவர் தன்னைத் தொடர்பு கொண்டு அறிவித்தபோது இவர்கள் தன்மீது வைத்திருக்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் அடிபணிந்து ஏற்றுக்கொள்ள ஒப்புதல் வழங்க முடிந்ததே தவிர தான் போகும் பயணத்தில் விருது வாங்குவதுபற்றிய சிந்தனை எப்பொழுதும் தனக்கு எழுந்ததில்லை என்று ஒரு வாக்குமூலம் தந்தார். மேலும் தன்னைப் பாராட்டிப் பேசிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருப்பதாகக் கூறித் தன் உரையை சுருக்கமாக பதினைந்து நிமிடங்களில் முடித்துக்கொண்டார். மீண்டும் பார்வையாளர்கள் மத்தியில் சிறு சலசலப்பு தோன்றியது. அப்பொழுது தலைவர் செயலாளரைப் பார்த்தார்.

செயலாளர் எழுந்து மைக் அருகே சென்று நன்றியுரையைத் துவக்கினார். அவர் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது பார்வையாளர்களில் ஒருவர் எழுந்து கூட்டம் முடிக்கும் முன்பு ஒரு விளக்கம் தர வேண்டுகிறேன் என்றதும் அருகில் அமர்ந்திருந்தவரும் அவருக்குச் சாதகமாக குரல் எழுப்பினார். பதட்டமில்லாமல் செயலாளர் அவர்களை நோக்கி என்ன விளக்கம் வேண்டும் உங்களுக்கு எனக் கேட்டார். அதற்கு அவர் விருது உருண்டு போனது நிறைய பேருக்குத் தெரியாது. அதுமட்டுமல்ல சிறப்பு விருந்தினரையே இறங்கிச்சென்று எடுக்க வைத்தது தவிர்த்திருக்கலாமே என்றார். செயலாளர் அதற்கு, இது எதிர்பாராமல் நடந்துவிட்டது. இனி வருங்காலத்தில் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்றார். உடனே பார்வையாளர்கள் நடுவிலிருந்து, வேண்டுமென்றால் இப்படிச் செய்யலாம். முன்கூட்டியே விரித்துப் போட்டிருக்கும் நீண்ட கம்பளத்தின் இருபக்கமும் பத்தடிக்கு ஒருவரை அமரச் செய்து அவரவருடைய எல்லையில் விருதைப்பெற்றவர்க்குப் பதிலாக உருண்டு வரும் விருதைத் தடுத்து அதிக தூரம் உருண்டு போகாமல் இருக்கச் செய்யலாம். இதனால் கூட்டமும் தடைபடாது என ஒருவர் தன் கருத்தை முன்வைத்தார். பின்பக்க மூலையிலிருந்து யாரோ கூச்சலிட்டனர். வேண்டாம் இது. முன் கூட்டியே விருது எந்தத் திசை நோக்கி ஓடும் என முடிவு செய்ய இயலாது. அதனால் விருதைக் கேடய வடிவில் செய்து விடலாம் என்றது கூட்டத்தில் ஒரு குழு. எதிர் திசையிலிருந்து ஒருவர் எழுந்து அதெப்படி, விருது எப்பவும் கழுத்தில்தான் அணிவிக்க வேண்டும். அதனால் உருண்டு ஓடாமல் இருப்பதற்காக கேடயமாய் செய்வதைவிட விருதை சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ அமைத்துவிட்டால் சௌகரியமாக இருக்கும். அப்படியே மேடையிலிருந்து கீழே விழுந்தாலும் தூரமாய் ஓடிப் போகாது. உடனே எடுத்து விடலாம் என்றார். பெண் பார்வையாளர்களில் சிலர் கையால் வாயை மூடிக்கொண்டு தலை குனிந்து சிரித்துக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர் தள்ளுவண்டியின் கீழ் குனிந்தபோது உதவ முன் வந்த அதே குரல், வேண்டும் என்றால் இப்படிச் செய்தால் என்ன, நவீன பாணியில் விருதை எந்தக் குறிப்பிட்ட வடிவம் என்றில்லாமல் ஒவ்வொருமுறை வழங்கும்போதும் புதுப்புது மாடலில் அமீபா போலச் செய்து அணிவிக்கலாம். தவறி விழுந்தாலும் மேடையின்மீது காலடியில்தான் கிடக்கும். குனிந்து அப்படியே எடுத்துக்கொள்ளலாம். எடுக்கும்பொழுது முக்கியமா மண் ஒட்டாதில்லே எனச் சற்றே தாழ்வான குரலில் ஒரு புதுக் கருத்தை மொழிந்தது. விழாத்தலைவர் பொறுமை இழந்து ஆளாளுக்கு பேசிக்கிட்டே போனா நல்லாவா இருக்கு என்று சொன்னதும் சலசலப்பு அடங்கியது. எந்தக் கருத்தை சொல்வதென்றாலும் இந்தக் கூட்டத்தில் இப்பொ வேண்டாம். அதுக்குன்னு செயற்குழு கூட்டம் இருக்கு. அங்க உங்க கருத்தை பார்வைக்கு கொண்டுவந்து நல்ல முடிவு எடுப்போம். இப்போ கூட்டத்தை நடத்துறதிலே கவனம் குடுங்க. சிறப்புப் பேச்சாளர் இரவு ஒன்பது மணிக்கு ட்ரெயினைப் பிடிக்கணும். இப்பவே மணி எட்டரையாவுது. செயலாளரே, சீக்கிரமா நன்றியுரையை முடிங்க என்று செல்லமாகக் கட்டளையிட்டார் விழாத்தலைவர். அவரும் சில நிமிடங்களில் பேசி முடித்ததும் கூட்டத்தின் ஆரம்பத்தில் மேடையில் மடக்கு நாற்காலியில் அமர்ந்திருந்த நபர் மேடையின் பின்னாலிருந்து ஓடிவந்து மைக் முன்பு நின்று தேசியகீதம் என்றார். சிறிது நேரத்தில் ஒலிநாடா தேசியகீதம் முழங்க எல்லோரும் எழுந்து நின்றனர்.

பி.கு: விருது பெற்ற விருந்தினர் தம் குடும்ப சகிதம் விழாத் தலைவர், விழாக்குழு மற்றும் எல்லோருக்கும் கைகூப்பி வணக்கம் கூறி பிரியாவிடை பெற்று அரங்கம் வெளியேறினார். அவர் குடும்பத்தினர் கையில், அணிவித்த பொன்னாடையும் மாலையும் ஒரு கேரிபேக்கில் நிறைய ஆப்பிள்களும் பேரிச்சை பாக்கெட் ஒன்றும் இருந்தன. அவர்களை அழைத்துச் செல்ல ஒரு கார் தயார் நிலையில் நின்றிருந்தது. பழங்கள் விற்பவர் புன்னகையுடன் தள்ளு வண்டியை நகர்த்திச் சென்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *