இதினிக்கோ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 29, 2022
பார்வையிட்டோர்: 5,562 
 
 

‘டேய், முந்திரியையும் திராட்சையையும் நெய்ல இதினிக்கோ.’

நான் குரல் வந்த திசையில் பார்த்தேன். ராஜப்பா வாத்தியார்!

இலை இன்னும் போட்டாகவில்லை. முஹுர்த்தத்துக்கே இன்னும் நிறைய நேரம் இருந்தது. ஆனால் நாங்கள் ஏழெட்டு நண்பர்கள் — சேஷாசலம் ஒருவனைத் தவிர மற்ற எல்லோரும் தேனாம்பேட்டை ஏ.ஜி.ஸ். அலுவலகத்திலும் எல்.ஐ.சி.யிலும் வேலை செய்பவர்கள் — சீக்கிரம் கிளம்பிப் போயாகவேண்டும் என்பதால் எங்களை மட்டும் டைனிங் ஹாலுக்கு அழைத்து வந்திருந்தான் கிச்சாமி. கல்யாணப்பெண்ணின் சித்தப்பா அவன்; பதினோரு வகுப்பு வரை எங்களோடு படித்தவன்.

நானும் கிச்சாமியும் தலைமை சமையல்காரர் ராஜகோபால அய்யங்காருடன் பேசிக்கொண்டிருந்த போதுதான் இந்த “இதினிக்கோவை”க் கேட்டேன். அதற்குச் சொந்தக்காரர் சமையல்கட்டின் ஒரு மூலையில் கையை நீட்டி சப்தத்துடன் உத்தரவு போட்டுக்கொண்டிருந்தார்.

கிச்சாமியின் கையைத் தொட்டேன். ‘கொஞ்சம் இந்தப்பக்கம் பார். கணக்கு வாத்தியார் ராஜப்பாதானே அது?’

‘நான் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை. சாக்ஷாத் ராஜப்பாவேதான்.’

இருபது இருபத்தைந்து வருடங்களில் ராஜப்பா வாத்தியார் அதிகம் மாறிவிடவில்லை. தலை நன்றாக நரைத்திருந்தது; ஆனால் முடி அதிகம் கொட்டியிருக்கவில்லை. முகம் வற்றிப்போயிருந்தாலும் பழைய களை இன்னும் கொஞ்சம் இருந்தது; பழைய அலட்சிய பாவம் மட்டும் அப்படியேதான் இருந்தது. நெற்றியில் முன்பு இருந்த ஸ்ரீசூர்ணத்துக்கு பதிலாக அவசர அவசரமாகப் பெயரளவுக்குப் போடப்பட்ட நாமம். உடம்பு ஒடுங்கி எலும்பும் தோலுமாக ஆகிவிட்டிருந்தது. ஆனால் முதுகு நேராக நின்று கொண்டிருந்தது; பழைய விறைப்பும் அப்படியே இருந்தது. தோளில் ஒரு கசங்கிய துண்டு. இடுப்புக்குக் கீழே முட்டியளவுக்கு மட்டும் தொங்கும் ஒரு அழுக்கு வேஷ்டி. ஆளைப் பார்ப்பதற்கு முன்பே எனக்கு ராஜப்பா வாத்தியாரைக் காட்டிக்கொடுத்தது “இதினிக்கோ” என்ற வார்த்தைதான்.

‘சார், வாங்கோ, இலை போடுகிறேன்,’ என்று டைனிங் ஹாலை நோக்கி நகர்ந்தார் ராஜகோபாலன். கிச்சாமி பின்தொடர்ந்தான்.

‘வா, முகுந்த், என்ன பார்க்கிறாய்? ராஜப்பாவுக்கு இப்போது தளிகைதான் தொழில்.’

‘ரிடயர் ஆகிவிட்டாரா?

‘ரிடயர் ஆகி அஞ்சு வருஷத்துக்கு மேல ஆயிடுத்து. பென்ஷன் எதோ வருகிறது. போதாது; பெரிய குடும்பம். இன்னும் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஆகவில்லை — இனிமேல் ஆவதும் கஷ்டம். நான்தான் ராஜகோபாலய்யங்காரிடம் பேசி அவருடைய சமையல் டீமில் தள்ளிவிட்டேன்.’

‘அடப்பாவமே! சரி, சமையலில் எதற்கு நுழையவேண்டும்? டியூஷன் சொல்லிக்கொடுக்கக்கூடாதா?’

‘யு மஸ்ட் பி ஜோக்கிங்! ராஜப்பா வாத்தியார் சொல்லிக்கொடுத்து கணக்கு புரிஞ்சிண்டவா யாராவது இருக்காளா? ஆனால் அந்தக் கூத்தும் நடந்தது. ஆரம்பித்துக் கொஞ்ச நாளிலேயே டியூஷன் கடை மூடியாகிவிட்டது. வகுப்பறை சகிப்புத்தன்மை என்பது நம் தலைமுறையோடு முடிந்துவிட்ட விஷயம் என்று தோன்றுகிறது, முகுந்த். பட் எ குட் ட்ரெண்ட், வாட் டூ யு ஸே?’

சிந்தனையுடன் தலையாட்டினேன்.

‘சரி, சாப்பிடுங்கோ. ஊஞ்சல் ஆரம்பித்துவிட்டது. எனக்கு அங்கு வேலை இல்லை. ஜஸ்ட் ஒரு தடவை தலையைக் காமிச்சுட்டு வந்துடறேன்; அண்ணா நான் எங்கே என்று கேட்க ஆரம்பித்திருப்பான். ஸ்வாமி, இவாளை…’ என்று இழுத்தான் கிச்சாமி.

‘நான் கிட்ட இருந்து பாத்துக்கிறேன், நீங்க போங்க சார். அண்ணா தேடுவார்,’ என்றார் ராஜகோபாலையங்கார்.

இன்னும் ஒரு சிறிய கூட்டம் சாப்பிட வந்து உட்கார்ந்தது. மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டது. எல்லோருக்கும் அலுவலகம் போகவேண்டிய அவசரம்.

வெளியில் ஊஞ்சல் நடந்துகொண்டிருந்தது. பாட்டும் வாத்தியமும் சிரிப்பும் குழந்தைகளின் ஆரவாரமும் ஒன்று சேர்ந்து பொங்கி வழிந்து டைனிங் ஹாலிலும் நுழைந்து கொண்டிருந்தது. ‘ஆடிப்பூரத்துதித்த ஆண்டாள் நம் கோதை அணியரங்கருடன் ஊஞ்சல் ஆடினாள்’ என்று ஒரு வயதான குரல் நடுக்கத்துடன் மைக்கில் பாட முயன்று கொண்டிருந்தது. அதைக் குழலில் பிடிக்க முடியாமல் நாயனக்காரர் திண்டாடிக்கொண்டிருந்தார். ‘கல்யாண ஊஞ்சலைக் காணவாருங்கள்’ என்ற வரி மட்டும் பிசிறில்லாமல் வந்துகொண்டிருந்தது.

‘சார், கறிமது இன்னொருதடவை சாதிக்கலாமா?’ பரிமாறுகிற பையன் மிகவும் சம்பிரதாயமாகக் கேட்டான்.

‘வேண்டாம், வேண்டாம்,’ அவசரமாக இலையின் குறுக்கே கையை வைத்தேன்.

நான் நிமிர்ந்து பார்த்தபோது ராஜப்பா வாத்தியார் ஜோட்டுத் தவலை ஒன்றைத் தூக்கியபடி மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார். ‘அண்ணா, மேல போய் இதினிண்டு வந்தேன்,’ என்று ராஜகோபாலய்யங்காரிடம் கூச்சல் போட்டுச் சொல்லிவிட்டு சமையல்கட்டிற்குள் விறுவிறுவென்று நுழைந்தார்.

‘இதினிண்டு நாசமாப்போ! இதினிண்டானாம், இதினிண்டு! என்னத்தை இதினிண்டானோ! அப்படீன்னா என்ன அர்த்தமோ!’

சேஷு என்னைப் பார்த்து சிரித்தான். ‘ஆறாவது படிக்கும்போது நானும் இதைத்தான் கேட்டேன். கன்னம் கதை பாடித்து!’ இதை சொல்லி முடிக்கும்போது அவன் முகம் விகாரமாகிவிட்டது. அப்படி ஆகியபோது ஒரு வினாடி அவன் தலைமையாசிரியர் லிங்கமூர்த்தி போலவே இருந்தான்.

ஆறு, ஏழு, எட்டு இந்த மூன்று வகுப்புகளிலும் எங்களுக்கு கணக்கு வாத்தியார் ராஜப்பாதான். இன்றைக்கு எனக்கு 500 ரூபாயை கடையில் கொடுத்து 328 ரூபாய்க்கு சாமான்கள் வாங்கி கடைக்காரன் கொடுக்கிற மீதி காசு சரிதானா என்பதைக் கண்டறிய கைப்பேசி கால்குலேட்டர் தேவைப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் ராஜப்பா வாத்தியார்தான் என்று நான் அடித்துச் சொல்வேன். கிச்சாமியும் ரங்கனும் என்னைவிடக் கொஞ்சம் பரவாயில்லை. அனந்து என்னைவிட மோசம். அவன் கடைக்காரன் கொடுப்பதை எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை; அந்த அளவு இயலாமையை ஒப்புக்கொண்டவன். அலுவலகத்தில் எல்லா கணக்கீடுகளையம் கம்ப்யூட்டர் செய்துவிடுவதால் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறதே தவிர அடிப்படையில் எங்கள் எண்ணறிவு ரொம்பக் குறைவு. அதற்கு காரணமானவர்களில் முக்கியமான ஒருவர் ராஜப்பா வாத்தியார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

ஐந்தாவது வகுப்புவரை ஆசிரியர்கள் எதுவும் சொல்லிக் கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. எல்லாப் பாடங்களுக்கும் ஒரே வாத்தியார்தான். அவர் முக்கால்வாசி நேரம் வகுப்பறையில் இருக்கமாட்டார்; கோமதி டீச்சருடன் பேசிக்கொண்டிருப்பார். எப்படியோ தமிழ் மாத்திரம் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டோம். கூட்டல் கழித்தல் ஒரு அளவுக்குத் தெரியும். சில வாய்ப்பாடுகள் மனப்பாடம். இப்படிப்பட்ட கல்வியறிவுடன் ஆறாம் வகுப்புக்குப் புதிய பள்ளிக்கூடத்துக்கு வந்து சேர்ந்தோம். வகுப்புகள் கீற்றுக்கொட்டகைகளில்தான். ஆனால் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி வாத்தியார். கணக்குக்கு மாத்திரம் எந்த வாத்தியாரும் வரவில்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு ராஜப்பா வாத்தியார் வேறு பள்ளிக்கூடத்திலுருந்து மாற்றலாகி வந்தார்.

அவருடைய முதல்நாள் வகுப்பு எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் முதல் வரிசையில் முதல் மாணவனாக உட்கார்ந்துகொண்டிருந்த சேஷாசலத்தின் மீது அவர் பார்வை விழுந்தது. ‘எழுந்திர்ரா!’ என்று அவர் போட்ட கூச்சலில் சேஷு வெலவெலத்துப் போய்விட்டான். கையை நீட்டச்சொல்லிப் பிரம்பை முழுபலத்துடன் கீழே இறக்கினார். சேஷு துடிதுடித்துப் போய்விட்டான். அடிபட்ட வலது உள்ளங்கையை இடதுகையால் அழுத்தி இரண்டையும் துடைகளுக்கு இடையே வைத்துக்கொண்டு கதறினான். வாத்தியார் விடவில்லை. தோளிலும், முதுகிலும், திறந்த கால்களிலும் பிரம்பு சுரீல் சுரீல் என்று இறங்கியது. ‘மடையன்! வந்த மொதல் நாளே க்ளாஸ் கொடுக்கிறான்,’ என்று உறுமி பிரம்பை இரண்டாக உடைத்து ஏறிந்தார். பிறகு சேஷுவுக்கு போனஸ் அடி ஒன்றைக் கையாலேயே கொடுத்து உட்காரச் சொன்னார். தலைமையாசிரியர் லிங்கமூர்த்திக்கு விழவேண்டிய அடிகள் அவை.

அடுத்தது பாடம். மானிட்டர் துளசி எழுந்து நடுநடுங்கும் கைகளுடன் கணக்குப் புத்தகத்தைக் கொடுத்தான். வாங்கி எச்சிலைத் தொட்டுத் தொட்டு ஒவ்வொரு பக்கமாகத் திருப்பினார். ‘நாலாம் பக்கம் பாருங்கடா. மொதல் கணக்கு,’ என்று சொல்லிச் சிரித்தார். எதற்கு சிரிக்கிறார் என்று தெரியாமல் நாங்களும் சிரித்தோம். ஏன் சிரிக்கவில்லை என்று அடித்தால்? ‘என்ன கணக்குடா இது? முக்கா ரூபா, பன்னெண்டு, ஏழு, பதிமூணு, கால் ரூபா. இதினிண்டா எவ்வளவு வரது? முப்பத்திமூணு ரூபாயா? அம்பதுல அத இதினிண்டா பதினேழு. மனக்கணக்குடா இது! இதைப்போய்ப் பேப்பர்ல போட்டு பாக்கணுமா?’

மூன்று வருடங்கள் கணித வகுப்புகள் இப்படியே போய்க்கொண்டிருந்தன. ‘காலமும் வேலையும்’ என்ற ஒரு பாடம் வந்தது. அதை ரொம்ப சுலபமாக முடித்தார். ‘ராமனும் கிருஷ்ணனும் ஒரு வேலையை பதினைந்து நாளில் செய்வார்கள். கிருஷ்ணன் மட்டும் ம்ம்ம்ம்ம்ம்ம்….., ராமன் எத்தனை நாளில் செய்து முடிப்பான்? ரெண்டு பேரும் ஒரு நாள்ல செய்யற வேலையிருந்து கிருஷ்ணன் ஒரு நாள்ல பண்ற வேலைய இதினிண்டா ராமன் ஒரு நாள்ல எவ்வளுவு பண்ணுவான்னு தெரியப்போறது. இதுல போட்டுப்பாக்கிறதுக்கு என்னடா இருக்கு? பொம்மனாட்டி பால் கணக்கு!’

புத்தகத்தைத் தூக்கிப் போட்டார். ‘காலமும் வேலையும்’ அநேகமாக முடிந்துவிட்டது.

அந்த மூன்று வருடங்களில் கரும்பலகையையோ சாக்கையோ அவர் கையால் தொடவேண்டிய அவசியமே வரவில்லை; பாடப்புத்தககத்தில் இருந்த கணக்குகள் எல்லாமே அவருடைய பார்வையில் மனக்கணக்குகளாகவோ அல்லது “பொம்மனாட்டி பால்கணக்குகளாகவோ” அமைந்துவிட்டன! ஆனால் வீட்டுப்பாடம் நிறைய கொடுத்தார். மறுநாள் சேஷு கடைசி வரிசையில் ஒளிந்துகொண்டிருந்தாலும் தேடிப்பிடித்தார். ‘சேஷு நாயுடு, எக்கட உன்னாவு?’ என்று கேலியான பாசத்தோடு அழைத்து அவன் வீட்டுப்பாட நோட்புக்கைப் பிடுங்கிப் பார்ப்பார். அடுத்த நிமிஷம் நோட்புக் அவன் முகத்தில் வந்து விழும். இரண்டு மூன்று அடிகளும் விழும். இவருக்கு சேஷுவின்மீது அப்படியென்ன வன்மம்?

ஒரு நாள் சேஷு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டுவிட்டான். ‘இதினிக்கரதுன்னா என்ன சார்?’

ஒரு வினாடி — ஒரே ஒரு வினாடி — வகுப்பில் சிரிப்பலை எழுந்தது. பின்பு மயான நிசப்தம். என்ன பண்ணப் போகிறார் ராஜப்பா வாத்தியார்?

‘இங்க வாடா, என்ன கேட்ட?’

‘ஒண்ணுமில்லே, சார்.’

‘என்னமோ கேட்டயடா?’

‘அதில்லை, சார், இந்த இதினிக்கரதுன்னா…’

சொல்லி முடிக்கவில்லை, பளார் என்று கன்னத்தில் அறை விழுந்தது.

‘கிண்டல், கிண்ண்…டல்…’ அவன் காதைப்பிடித்து நிமிண்ட ஆரம்பித்தார். சேஷு வலியில் நடனமாடினான்.

‘வரேன், வரேன், உங்கப்பங்கிட்ட வரேன். பிய்யம் மண்டி கன்னைய நாயுடு அப்பாயியே காதா நுவ்வு?’

இது நடந்தது ஆறாவது வகுப்பில்.

அன்று சந்தியா வேளையில் சேஷு சபதம் செய்தான்: ‘டேய், அந்த ஆள் முடிவு என் கையிலேதான்.’

‘சும்மா உங்க நைனா கணக்கா கூவாதே,’ என்றான் துளசி.

‘வாய மூடுடா. தனியா மட்டும் மாட்டட்டும். ஒரு கல்ல விட்டு அந்த ஆள் பின் மண்டையைப் பொளக்கிறேனா இல்லையா பார்! இல்லேன்னா நான் கன்னையா நாயுடு கொடுக்கு இல்லை!’ அதற்குமேல் பேசமுடியவில்லை. விக்கி விக்கி அழுதான்.

சேஷுவின் கோபத்தில் அர்த்தம் இருந்தது. அவன் ரொம்ப புத்திசாலி. எல்லாப் பாடங்களிலும் — கணக்கு உள்பட — முதல் மார்க் வாங்குபவன். நல்ல பையன் என்று பெயர் எடுத்தவன். ராஜப்பா தவிர மற்ற எல்லா ஆசிரியர்களுக்கும் அவனைப் பிடிக்கும். ராஜப்பாவிற்கு அவன் மீது அப்படி என்ன வன்மம்? நோக்கமில்லாத வன்மம் — மோடிவ்லஸ் மலிக்னிடி — என்றுதான் எனக்கு இப்பவும் தோன்றுகிறது.

அதற்குப் பிறகு எவ்வளவோ அடிகள். ஒவ்வொரு முறையும் சேஷு தன் பழைய பிரதிக்ஞையைப் புதுப்பித்திருக்கிறான். நிறைவேறாத அந்த கபால மோக்ஷத்தைப் பற்றி நாங்கள் எவ்வளவோ முறை பேசியிருக்கிறோம். ஒவ்வொரு முறை கேட்டபோதும் சரியான கல் கிடைக்கவில்லை என்று சொன்னான் சேஷு. உண்மைதான். தொண்டை மண்டலத்தில் கல் ஏது? எல்லாக் கற்களையும் பல்லவ மன்னர்கள் மகாபலிபுரம் எடுத்துச் சென்று வீணடித்துவிட்டார்கள் அல்லவா!

எட்டாம் வகுப்பு வந்ததும் கணக்கில் நான் வாங்கும் மதிப்பெண்கள் குறித்து வீட்டில் எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ‘ஏண்டா, இங்கிலிஷ் கிராமர் ரொம்ப கஷ்டமான விஷயம். அதில் கெட்டிக்காரனா இருக்கே. கணக்கில் மட்டும் எப்படிடா இவ்வளவு மண்டுவா இருக்கே?’ என்று தாத்தா கேட்டார்.

‘இங்கிலிஷ் வாத்தியார் இளங்கோவன், தாத்தா; ராஜப்பா இல்லை. இதினிக்கவேண்டிய அவசியம் இல்லே.’

‘இதினிக்கறதா? என்னடா சொல்றே?’

நான் விளையாட வெளியே ஓடிப்போய்விட்டேன்.

நாட்கள் ஓடின. கணக்கில் அறிவிலிகளாய் ஒன்பதாம் வகுப்புக்குப் போனோம். அங்கு தலைமையாசிரியர் லிங்கமூர்த்தியே கணக்கு வாத்தியாராக வந்தார். இப்போது நானும் ஒரு கல் தேட ஆரம்பித்தேன்.

பத்தாம் வகுப்பு வந்தவுடன் வீட்டில் எல்லோரும் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த வருஷம் பொதுத்தேர்வு. பதினைந்து, இருபது என்று பையன் கணக்கில் மார்க் வாங்குகிறான்! பிரைவேட் டியூஷன் ஏற்பாடு செய்தார்கள். நாங்கள் எல்லோரும் ரமணி வாத்தியாரிடம் கணக்கு டியூஷனுக்குப் போனோம். அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது: பாரத தேசத்தில் பரீக்ஷைகளில் தேர்வு பெற எந்தப் பாடத்திலும் கருத்தியல் அறிவு அவ்வளவாக அவசியமில்லை; பழைய வினாத்தாள்களை வைத்துப் பயிற்சி செய்தால் போதுமானது. ரமணி வாத்தியார் இந்த விஷயத்தில் கெட்டிக்காரர். ஆக, ஒரு நீண்ட கதையைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாங்கள் எல்லோரும் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணினோம். பிறகு கல்லூரிப் படிப்பையும் முடித்து, வேலையிலும் சேர்ந்து இன்று நான்குபேர் மதிக்கும்படியாக இருக்கிறோம். சேஷு மட்டும் நன்றாகப் படித்து இரண்டு ஐ.ஐ.டி.களில் நுழைந்தான். ஐ.ஐ.டி. பாம்பேயில் எம்.எஸ்.ஸி கணிதம், ஐ.ஐ.டி. மெட்ராஸில் பி.எச்.டி. என்று படித்து ஐ.ஐ.டி.யிலேயே கணிதப் பேராசிரியராகவும் சேர்ந்தான்.

ராக பைரவி அருகில் ஒலித்தது. வாத்தியக்காரர்கள் டைனிங் ஹால் வாசலைத்தாண்டி மாடிப்படிக்குத் திரும்பினார்கள். மஞ்சள் வேஷ்டியில் மாப்பிள்ளைப் பையன் மணப்பெண்ணின் தூக்கிய கையை கெட்டியாகப் பிடித்து இழுத்துக்கொண்டு அவர்கள் பின்னல் விறுவிறுவென்று சென்றுகொண்டிருந்தான். அவளும் அடக்கமுடியாத சிரிப்புடன் அவன் பின்னால் ஓடினாள். அவர்களைப் பின்தொடர்ந்து கேலியும் சிரிப்பும் கும்மாளமுமாக பட்டுப் புடவைகள் படி ஏறிக்கொண்டிருந்தன. எங்கும் ஆனந்தம். இப்போது எதிர்ப்பக்க மாடிப்படி வழியாக தாம்பூலப் பைகள் பின்தொடர கிட்டத்தட்ட படிக்கட்டு அகலத்துக்கு கிச்சாமி தட்டுத் தடுமாறி இறங்கி வந்துகொண்டிருந்தான் — பிரஹலாத வரதர் அஹோபிலவல்லித் தாயாருடன் பல்லக்கில் தெப்பக் குளத்தில் இறங்குவது மாதிரி!

‘சாப்பாடு எப்படி?’ சுதாரித்துக்கொண்டு சைகையில் கேட்டான்.

‘பிரமாதம்!’ என்று சைகையிலேயே பதில் சொன்னேன். ‘ராஜப்பா சாரைப் பார்த்து விசாரிச்சுட்டு உடனடியா கிளம்பணும்,’ என்று உரக்க சொன்னேன். இபோது கிச்சாமி அருகில் வந்துவிட்டான். புகைவண்டி மாதிரி மூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.

‘சேஷுகூட வருவானா?’ என்றான் அனந்து.

‘நோ வே!’ என்றான் ரங்கன் அழுத்தம் திருத்தமாக. ‘அவன் இன்றைக்கும் கல் தேடிக்கொண்டிருப்பவன்தான். என்னடா சேஷு?’

சேஷு பதில் சொல்லவில்லை. அவன் முகம் சிணுங்கியிருந்தது. ஏனோ அவனைப் பார்க்கும்போது ஹெட்மாஸ்டர் லிங்கமூர்த்திதான் திரும்பவும் ஞாபகத்துக்கு வந்தார்.

இதற்குள் ராஜகோபாலய்யங்கார் போய் ராஜப்பா வாத்தியாரைக் கூப்பிட்டுக் கொண்டே வந்துவிட்டார். ராஜப்பா சார் ஒரு வினாடி எங்களை உற்றுப் பார்த்தார். பின்பு என்ன தோன்றியதோ, திரும்பினார். ‘ஒரு நிமிஷம், வேஷ்டியை இதினிண்டு வந்துடறேன,’ என்று சொல்லிக்கொண்டு சமையற்கட்டில் நுழைந்தார்.

திரும்பி வரும்போது பார்க்கும்படியான வேஷ்டி சட்டையில் இருந்தார். கிச்சாமி எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தான்.

‘யார், முகுந்தனா? சந்தானம் அய்யங்கார் பெரிய பையன் தானே? எங்கே? ஏ.ஜி.ஸ். ஆபிசா? என்னது? பைனான்ஸில் அசிஸ்டன்ட் டைரக்டரா? சபாஷ், நான் சொல்லிக் குடுத்தது வீண் போகலே!’

மற்ற ஒவ்வொரு அறிமுகமும் இதே மாதிரி நடந்தது. ராஜப்பா சார் தனக்குத்தானே சபாஷ் போடப்போட அவர் முதுகு மேலும் மேலும் நிமிர்ந்துகொண்டிருந்தது.

கடைசியாக சேஷு.

‘சேஷாசலமா? அது யாரு? ஓ, சேஷு நாயுடு, நுவ்வா பாபு?’ அவனைக் கட்டிக்கொண்டார்.

‘நான்னகாரு பாகுன்னாரா?’

‘அப்பா போய் ரெண்டு வருஷம் ஆச்சு, சார்.’ சேஷுவின் குரலில் நேசம் தொனிப்பதுபோல் எனக்குத் தோன்றியது.

‘அடடா, கன்னையா நாயுடு போய்ட்டாரா? தங்கமான மனுஷனாச்சே! என்ன ஒண்ணு , என்னை மாதிரி கூச்சல் போடுவார்… அதுக்குள்ள போய்ட்டாரா, பாவம்? என்னைவிட வயசில சின்னவராச்சே!’

இப்போது நாங்கள் யாரும் கேட்காத ஒரு கேள்வியை சேஷு கேட்டான்: ‘எப்படி இருக்கீங்க, சார்?’

இது கட்டாயம் கல் தேடுபவன் குரல் இல்லை; இருபது வருடங்களாக நீறு பூத்த நெருப்பாகக் கிடந்த ரௌத்ரம் இன்று எலும்பும் தோலுமாக இருக்கும் இந்தச் சமையல்காரனைக் கண்டதில் பயன்படுத்தப்பட்டு பஸ்பமாகிப் போனபின் அதிலிருந்து இன்று புதிதாகப் பிறந்ததுபோல ஒலிக்கும் குரல். அப்படி எனக்குத் தோன்றியது.

‘எனக்கென்னடா, நன்னா இருக்கேன். ரிடயர் ஆயிட்டேன். பொழுது போகணுமோல்லியோ, இந்த மாதிரி தெரிஞ்சவா ஆத்துக் கல்யாணங்கள்லே சர்வீஸ் பண்றேன். சரி, உன்னைப்பத்தி சொல்லு. ஏஞ்சேஸ்துன்னாவு?’

பதிலைக் கிச்சாமி சொன்னான். ‘அவன் இப்போ பெரிய்ய ஆளாயிட்டான், சார். டாக்டர் சேஷாசலம் நாயுடு அவன். ரெண்டு ஐ.ஐ.டி.யில படிச்சுட்டு, ஐ.ஐ.டி. மெட்ராஸ்ல மேத்ஸ் புரஃபஸரா இருக்கான்.’

‘சபாஷ்டா! ரொம்பப் பெருமையா இருக்குது. நான் பட்ட பாடு வீண் போகலே.’ சேஷுவின் தோளில் வைத்த கையை அவர் இறக்கவில்லை.

‘எல்லாம் நீங்க போட்ட பௌண்டேஷன், சார்,’ என்றான் சேஷு.

எனக்கென்னமோ அவன் குரல் தழுதழுத்த மாதிரி தோன்றியது. முஹாரியின் சாந்தமும் சோகமும் அதில் இழையோடியது. ஒருவேளை இதினித்துக் கொள்வது குறித்து சேஷுவுக்குள் ஒரு ஞானம் பிறந்துவிட்டதோ என்னமோ!

– நன்றி: https://solvanam.com/, Issue 243 / March 28, 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *