முடிவிலிருந்து தொடக்கம் வரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 3,191 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்னும் மூன்று நாட்கள்தான் இருப்பேன். இது என் அமானுஷ்யத்தின் வெளிப்பாடு. 

சில நேரங்களில் நான் சொல்வது பலித்துவிடுகிறது. அது எதார்த்தமாக இயல்பாக வந்த ‘குறி’யாக இருக்க வேண்டும். நியாயமானதும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும். இருக்கிறது. எனவேதான் அறிவிக்கிறேன். மகன்களிடத்திலோ மருமகள் மற்றும் பேரன் பேத்திகளிடம் இதை நான் சொல்லவில்லை. 

வாசகர்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். 

மனைவி யாருடைய கனவிலாவது வந்து சொல்லிவிடுவாளோ? அதுதான் பயம். அவள் எங்களை விட்டுப்போய் சித்திரை மாத பௌர்ணமி திதி வர இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வெளிச்சத்தோடு வெளிச்சமாய் நானும் ஐக்கியமாகி விடப்போகிறேன். 

அவள் போனபிறகு ஒவ்வொரு சித்ரா பௌர்ணமிக்கும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நாங்கள் முதன் முதலில் சந்தித்த காவெரி ஆற்றின் படிக்கட்டில் போய் அமர்ந்திருப்பேன். ஓரமாய் சிற்றோடையாய் காவேரி சுருங்கி ஓடிக் கொண்டிருப்பாள். மேகங்கள் இல்லாத வானமாய் நானில்லாத நிலவொளியாய் அவள். நிரம்பி வழிந்து போவேன். நீரை எதிர்த்து நிலவு நகர்ந்து மறையும் காலைப் பொழுதில் வீடு திரும்புவேன். 

நான் எப்படி இல்லாமல் போவேன். இது அமானுஷ்யம் இல்லை. இறப்பு என்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது. எல்லோரும் போகத்தானே வேண்டும். செலவுகள் இல்லாத வரவு ஏது? அழுது புலம்பினாலும் மனிதர்கள் புதிது புதிதாக பிறந்துகொண்டுதானே இருக்கிறார்கள். அழுவதும் பிறப்பதும் போகிற போக்கு. நிலவு உச்சிக்கு வரும். இலைகள் அசையாது. பறவைகள் உறங்கிக் கொண்டிருக்கும். ஓசையின்றி ஓடை நகரும். ஒரு வலியெடுக்கும். தாங்கமுடியாது தவிக்கும் இதயத்தில் வலி ஓய்வதற்குள் தட்டு தடுமாறி படியில் உருண்டு ஆற்று நீரில் சங்கமிக்கையில் அஸ்ட நாடியும் ஓயும். அமானுஷ்யமும் ஆசையும். 


சென்ற வருடம் கார்த்திகை தீபத்தன்று மாலை நான்கு மணியிருக்கும் பெரிய மகன் அலுவலத்திலிருந்து தொலைபேசியில் அழைத்தான். 

தூக்கத்தை கலைத்துக்கொண்டு போய் போனை எடுத்து ஹலோ சொன்னேன். 

“என்னப்பா உனக்கு ப்ரமோஷன் வந்துருக்கா?” 

“ஐய்ய. எப்படிப்பா. அதை சொல்லத்தான் போன் பண்ணினேன். உங்களுக்கு எப்படி முன்னாடியே தெரிஞ்சிது?” 

“இப்பதான கனவு கண்டு முழிச்சேன்” 

அது அவனுக்கும் பெரிய ஆச்சர்யமாக தெரியவில்லை. பலமுறை நான் சொன்னது அப்படியே நடந்ததில் அவனுக்கும் பரிட்சயம். 

ஆரம்பத்தில் அரசு வேலைக்கு போகும் முன்பு தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்த போது சக ஊழியர்கள் எனக்கு கரு நாக்கு என்பார்கள். எங்கள் அலுவலகப் பிரிவு வெளிப்புறமாக சாலை தெரியும் படியான குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறை. ஒருநாள் முற்பகல் வழக்கம்போல கம்ப்யூட்டர் சென்டரருக்கு கம்பெனி டைரக்ட்டரின் மகள் சாலையில் நடக்கிறாள். ஆனால் அதிசயமாக பின்னால் அவள் தம்பியும் போகிறான். டைப்பீஸ்ட் அவர்களை பார்த்ததும் “என்ன இன்னக்கி தம்பிக்காரனும் கூடப் போறான்?” என்றாள். 

“யாரையாவது லவ் பண்ணி ஓடிப்புடப் போவுதுன்னு காவலுக்கு தம்பிய அனுப்பி இருப்பார். பாருங்களேன் தூக்குல தொங்கிடப்போவுது” என்றேன். 

இப்படி அவர்கள் செல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம். இப்படி சொன்னேன்? அவள் யாரையும் காதலிக்கிறாளோ ஓடிப்போக திட்டமிட்டுள்ளாளோ எனக்குத் தெரியாது. 

டைரக்ட்டரின் வீடு கம்பெனியிலிருந்து அரை கிலோ மீட்டர்தான் இருக்கும். மாலையில் அலுவகத்திலிருந்து வெளியே போய் ஒரு வில்ஸ் சிகரெட்டை சாம்லாக்கி புகையை குடித்து ஸ்டைலாக ஊதிக் கொண்டிருந்தபோது டைரக்ட்டர் வீட்டு வாசலில் கூட்டமாக மக்கள் நிற்பதை கண்டதும் அவ்வழியே வந்த சைக்கிலோட்டியிடம் விபரம் கேட்டபோது ‘அவரோட மகள் தூக்குப்போட்டு செத்துப் பொய்ட்டாம்’ என்றார். தகவலை சொல்ல பாதி சிகரெட்டை புகைக்காமல் வீசி விட்டு அலுவகத்திற்குள் நுழைந்ததும் காதல் தோல்வியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரத்தை எனக்குச் சொன்னார்கள். 

ஒரு நாள் நண்பர் பின்னே அமர்ந்திருக்க இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஒர் இளைஞர் என்னை உரசிவிட்டு வேகமாக முன்னே சென்றார். தவறி உரசி இருக்கலாம். நான் சற்று தடுமாறி கீழே விழாமல் சமாளித்து வண்டியை இயக்கி விட்டேன். என் வாய் சும்மா இல்லாமல் ‘எங்க வேகமாப் போறான். அப்படி என்ன அவசரம். ரயில்வே கேட் கிட்ட சாஞ்சி கிடப்பான்’ என்றேன். உண்மையில் முந்திச் சென்ற அவர் ரயில்வே கேட்டை கடந்ததும் சாய்ந்து கிடந்தார். பலத்த அடி இல்லை. பொதுமக்கள் தூக்கிவிட்டு வண்டியை நிமிர்த்துக் கொண்டிருந்தனர். அது என் இதயத்திலிருந்து வந்த வார்த்தைகள் இல்லை. அமானுஷ்ய சொற்கள். எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதற்கு நான் பொறுப்பும் இல்லை. இப்படி ஏராள சம்பவங்கள். கேட்டால் உங்களுக்கு அலுப்பு தட்டலாம். 

இன்னும் இரண்டு நாட்கள்.

சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா பௌர்ணமியன்றுதான் அந்த சம்பவம் நடந்தது. வேலைக்காரி அவளுக்கு ஒதுக்கப்பட்ட வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு ஏழு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிவிட்டாள். இரு மகன்கள் மருமகள் என நான்கு பேரும் வேலைக்குச் செல்பவர்கள். நானும் மனைவியும் ஓய்வூதியதாரர்கள். மூன்று பேரன்கள் இரண்டு பேத்திகள். பேரன் முவரில் ஒருவன் மகள் வயிற்று பேரன். இங்கேதான் தங்கி படித்து வருகிறான். வீட்டு வேலைகள், மனைவியுடன் ஒத்தாசையாய் நின்று சமைப்பது எல்லாம் வேலைக்காரிதான். அவள் கூட எங்கள் வீட்டின் ஒரு மனுஷி போல்தான். நெஞ்சம் நிறைந்த பஞ்சமில்லாத வாழ்க்கை. கூட்டுக் குடும்பம். இதுதான் எங்களைப் பற்றிய பயோடேட்டா. எங்களைப் பற்றி யார் யார் பொறாமைப் படுகிறார்கள் என்பது தெரியாது. அது பயோடேட்டாவில் அடங்காது. பெரிய மகனும் மருமகளும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் போக கிளம்பிக் கொண்டிருந்தார்கள். 

கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும் நடந்த கால் வலியில் காரை ஓட்டுதில் சிரமம் இருக்கும் என்பதாலும் ஒரு ஆக்டிங்க் டிரைவரை போன்செய்து வரச் சொன்னோம். 

அவர் வந்து ஹாலில் அமர்ந்திருந்தார். என் மனைவிதான் ஹாலுக்குப்போய் “டீ குடிப்பிங்கலா காப்பியா?” என்றாள். 

“இப்பதான் குடிச்சிட்டு வாறேன். ஒண்ணும் வேண்டாம்மா” என்றார் டிரைவர். 

“பரவாயில்ல எதாவது சாப்புடுங்க அப்பதான் ஆக்டிவா வண்டி ஓட்டலாம்” 

“வேண்டாம்னா கேக்க மாட்டேங்குறிங்க. சரி டீயே கொடுங்க” 

மனைவி தேநீர் தயாரிப்பில் இருந்தபோது சர்க்கரை வைத்திருந்த கண்ணாடி பாட்டில் கை தவறி கீழே விழுந்து டமாரென்ற சத்தத்துடன் உடைந்தது. என்ன என்ன என்று எல்லோரும் சமையல் கட்டுக்கு ஓடினார்கள். 

“ஒண்ணுமில்ங்கப்பா சீனி பாட்டிலை தவறி போட்டுட்டேன். அதான்” என்றாள் மனைவி. 

பாட்டில் மட்டும் உடையவில்லை. உடைந்த கண்ணாடி சில்லில் தவறி காலை வைத்ததில் உள்ளங்கால் கிழிபட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. பதறிப்போனோம். 

சின்ன மருமகள்தான் மாமியாரின் காலில் வழியும் ரத்தத்தை துடைத்து பஞ்சை வைத்து கட்டிவிட்டு “வாங்க டாக்டர் கிட்ட பொய்ட்டு வருவோம்” என்றாள். 

“லேசாதான் கிழிச்சிருக்கு. ஒண்ணும் அவசரமில்ல. அங்க கிளம்பி கோவிலுக்குப் போனதும் பாத்துக்கிடலாம்” 

“காப்பி போடுறதா இருந்தா என்கிட்ட சொல்லக்கூடாதா. வயதான காலத்துல பேசாம மூலையில இருக்க வேண்டியதுதானே? உங்களுக்கு ஏன் இந்த வேலை” என்றாள். 

மனைவியின் முகம் மாறிப்போனது. என்ன என்றுமில்லாமல் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்திவிட்டாளே என எல்லோரும் கருதியிருப்பார்கள் என்றே தோன்றியது. ஆனால் யாரும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

“கோயிலுக்கு இப்ப போகல. வாங்க மாமி டாக்டர்கிட்ட பொய்ட்டு வந்ததும் போய்கிடுறோம்” என்றாள் பெரிய மருமகள். 

“வேண்டாப்பா நீங்க கெளம்புங்க. நாங்க பாத்துக்கிடுறோம்” என்று அவர்களை கிளப்பி விட்டு வெளியில் வந்து வழியனுப்பினோம். வீட்டினுள் வந்து “கெளம்புங்க. வாங்க மாமி டாக்டர் கிட்டெ பொய் ஒரு டீட்டி இஞ்ஜக்ஷன் போட்டுகிட்டு வருவோம்” என சொல்லிக்கொண்டு கிச்சனிலிருந்து ஹாலுக்கு வந்த சின்ன மருமகள் மாமியாரைக் காணாமல் வீடு முழுவதும் தேடிப்பார்த்தாள். சிறிய மகன் பேரக் குழந்தைகள் எல்லோருமாய் வெளியில் சென்று தேடியும் காணவில்லை. 

முந்திரிக்கொட்டையாட்டம் பேரன் போன் செய்து விபரத்தை கேட்டதும் கோவிலுக்கு சென்ற மகன் பாதியில் திரும்பி வந்தான். எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்போடு இரவை கழித்தோம். 

அவள் வார்த்தைகள் அப்படியொன்றும் தடித்ததில்லையே. வயதான காலத்தில் என்றதும் தன்னை இயலாதவளாக சித்தரித்து விட்டாள் என கருதியிருக்கலாம். அதற்கும் மேல் மூலையில் இருக்க வேண்டியதுதானே என்ற சொற்கள் மனதின் ஆழம் வரை தைத்திருக்கும். இவ்வாறான வார்த்தை பிரவேசம் எங்கள் இல்லத்திற்கு புதியது. எண்ணங்களின் வெளிப்பாடுதானே அசாதாரண நேரங்களில் சொற்களாக வெளிப்படும். திட்டமிட்ட புண்படாமல் பேசவேண்டும் என்ற சம்பாஷணைகள் போலியை அடைத்ததாக இருக்கலாம். வயதானது உண்மைதான். நடமாட முடியாத அளவுக்கான வயோதிகம் இன்னும் நெருங்கவில்லையே. 

காவெரியில் லேசாக ஒரு ஓரத்தில் ஓடிய நீருக்குள் மறைந்து உறங்கும் ஒரு சுழலுக்குள் புகுந்து சற்று தூரம் தள்ளி வெளியே தோன்றி சடலமாகக் கிடந்தது மறுநாள் காலையில் தெரியவந்தது. 

மரணத்தைக் சந்திக்க எல்லோரும் பயப்படுகிறோம் என்பதே உண்மை. ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்றும் நான் மரணத்திற்கு பயந்தவன் இல்லை என்று மார் தட்டுபவர்களே உண்மையில் பெருத்த பயந்தாங்கொள்ளிகள். உள்ளுக்குள் உள்ள நடுக்கம் வெளியே நடிக்க வைக்கிறது. இளமையில் உள்ள விரக்தியில் அப்படி பேச வைக்கிறது. அந்திமக் காலத்தில் யாராவது நலம் விசாரித்தால், நல்லதான் இருக்கேன் சாவுதான் வரமாட்டெங்குது என வாழ்வின் மீதுள்ள தாகத்தில் சொல்வார்கள். ஆனால் மரணம் மீதான பயன் உள்ளுக்குள் உட்கார்ந்திருக்கும். மரணத்தை எதிர்க்கத் தெரியாத கோழைத்தனம் அது. தற்கொலைக்கு ஒரு வீரம் வேண்டும். முடிவுக்கும் சாவுக்கும் நடுவில் மனம் அல்லாடும். உறுதியோடுதான் ஆற்றில் இறங்கி இருப்பாள். ஏல்லாவற்றையும் வெறுத்து. என்னை ஏன் வெறுக்க வேண்டும்? பூனை அந்த பக்கமாக யோசிக்க முடியாத தூரத்திற்குப் போயிருக்கலாம். குதித்துவிட்டது. 

ஒருமாதம் கழித்து தனியே ஒரு வாடகை வீடு பிடித்து அதற்கு நான் மட்டும் போய்விடலாமென்று கிளம்பினேன். சின்ன மறுமகள் காலை கட்டிக்கொண்டு கதறினாள். “கால்ல ரத்தம் வந்ததும் பதறிப்போய் மாமி மேல உள்ள பாசத்தில்தானே அந்த வார்த்தைய சொன்னேன். என்ன மன்னிச்சிடுங்க மாமா” என்றாள். எல்லோரும் அழுதார்கள். தடுத்தார்கள். 

இன்னொரு தற்கொலை வேண்டாமென்று இருந்துவிட்டேன். 

முதல் நாள்.

சென்ற வாரம் போட்ட மாலையின் பூக்கள் உதிர்ந்துபோய் எஞ்சிய காய்ந்த சருகுகள் உதிர வழியின்றி நாரில் தொத்தி நின்றன நேற்று. 

இன்று சித்ரா பௌர்ணமி இல்லையா! அதெல்லாம் சரியாக ஞாபகம் வைத்திருப்பார்கள். பெரிய மருமகள் நேற்றே ஒரு மாலை வாங்கி வந்து இரவே புகைப்படத்திற்கு சூட்டி விட்டாள். 

பூச்சாரத்தின் நடுவே புன்னகைக்கும் முகம். நேற்றும் அப்படித்தான். எப்போதும் புன்னகைதான். இயற்கையின் வரம்.

சாமி கொடுத்ததாகக்கூட இருக்கலாம். எல்லோருக்குமாய் என்றாலும் என்னால் அதை பொதுமைப்படுத்த இயலாது. எனக்கே எனக்கானது. ஆமாம் அதில் ஒளிந்திருக்கும் காதலை யார் பங்குபோட முடியும். 

அதிகாலையில் தாயாருக்கு மகன்கள் திதி கொடுத்த பின் அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் எல்லோரும் சென்று விட்டனர். 

சோபாவில் ஓய்ந்து சாய்ந்து கிடந்தேன். 

“அய்யா காப்பி போடட்டா டீ போடட்டா” என வேலைக்காரி அடுக்களையில் இருந்து கேட்டவாறு ஹாலுக்கு வந்தாள். 

“இது என்ன கேள்வி. எப்பையும் காப்பிதானே போட்டாந்து கொடுப்பே!” என்றேன். 

“அய்யா ஒண்ணு சொல்லணும் ஒங்க கிட்டே” 

“என்னம்மா” 

“ராத்திரி கனவுல பெரியம்மா வந்தாங்க” என்றாள். 

சட்டென என்னால் உணர முடியவில்லை. வயது ஏறி வாழ்க்கையின் சின்டை பிடித்து ஆட்டுகிறதோ தெரியவில்லை. இருக்கலாம். வயசான காலம். பாரமாகக் கூட போகலாம். போகலாம் என்ன பாரம்தான். வள்ளுவர் சொன்ன சால மிகுத்துப்போன பீலி இல்லை. மரத்தை விட்டு பிரிந்து போகும் இலவம் பஞ்சுப் பொதி. கிளி காத்திருக்கிறதோ இல்லையே. வெடித்து சிதறி பிரிவது இயற்கையன்றோ. 

“என்ன” கலங்கிய ஞாபகத்துடன் மீளக் கேட்டேன். 

“கனவுல அம்மா வந்தாங்கன்னேன்” 

“என்ன சொன்னுச்சி. எங்க பாத்தே?” 

“இதே ஹால்லதான் உக்காந்து இருந்தாங்க. நீங்களும் இருந்திங்க. டீ போட்டுகிட்டு வான்னாங்க. அய்யா காப்பிதானே குடிப்பாங்கன்னேன். எனக்கு டீ குடிக்கணும்போல இருக்குன்னாங்க.” 

“நான் இருந்தேங்குறே. நான் பாக்கலையே” 

“அய்யா அது கனவு. பச்ச கலர் சேலையில மகாலெட்சுமி மாரி இருந்தாங்க.” 

“ஓ செத்தன்னக்கி கட்டின சேலைய இன்னும் மாத்தாமலே இருக்கா போல” 

“நான் கனவுன்னு சொல்லுறேன். நீங்க என்னன்னமோ பேசுறிங்க அய்யா” 

“ஔறுறேன்னு சொல்லு. அப்புறம் என்ன சொன்னாங்க” 

“அய்யய்யோ அப்படி சொல்லங்கய்யா. முழிச்சிட்டேன். ஒரு நிமிடம்தான் இருக்கும்” 

“என் கனவுல மட்டும் வரதே இல்லையே. அப்ப, டீயே போட்டுக் கொண்டாறியா” 

“சரிங்கையா” 

“அப்பறம் அம்மாவோட சாரி எல்லாத்தையும் எடுத்துத்தாறேன் நீ வாங்கிக்கிடுவியா?” 

“வேண்டாய்யா. ஞாபகார்த்தமா இருக்கட்டும் பீரோவுலயே” 

“அவளோட அடையாளம் வெறும் சாரியிலதான் இருக்கா என்ன.” 

“புரியலய்யா இல்ல. இந்த வீடு முழுக்க எல்லார்கிட்டையும் இருக்கு அய்யா.” 

“அது உடலும் இல்லை உணர்வு இல்ல. ஒரு ஜடம். கனவு காணமுடியாத ஏதோ ஒரு வஸ்து. அதெல்லாம் மருமகப் பொண்ணுங்க கட்டிக்க மாட்டாங்க. அந்த வஸ்துகள் இங்க இருக்க வேண்டாம் அதான் நீ எடுத்துகிட்டு பொய்டுன்னேன்.” 

“அப்டின்னா மருமகள்கள் வரட்டும் அவங்க கிட்டே வாங்கி கிடுறேன்” 

“ஓகே நான் சொன்னதா கேட்டு வாங்கிக்கிடணும்” 

“சரிங்கையா” 

என் கனவில் அவள் வந்ததே இல்லையே. மறந்துவிட்டாளா. உறக்கத்தை? நான் கனவுகான அவள் உறங்க வேண்டியதில்லையே. ஏதாவது கனவுகள் உறக்கத்தில் எப்போதேனும் வந்து போகிறது. அதில் ஒன்றில் கூட அவளை காணவில்லையே. ஒருவேளை புன்னகையை தொலைத்திருப்பாளோ. முகம்காட்ட போட்டோவில் இருப்பது அவளில்லையோ. அவள் இல்லை என்றால் அந்த போட்டோதான் எதற்கு? கழட்டி ஹாலில் போட்டு உடைத்தெரிய வேண்டும் போல் இருந்தது. என்ன மூர்க்கத்தனம் இது? இருந்துவிட்டு போகட்டுமே. யாருக்காவது புன்னகைக்கலாமில்லையா. அது போட்டோ என்று அவர்களுக்குத் தெரியவா போகிறது. அவளது புன்னகையின் மர்மம் என்னைத் தவிர யாருக்குத் தெரியப் போகிறது. மாலை மாட்டும்போது கை தவறி யாராவது போடும்போது உடைந்து நொருங்கட்டும் அது சாதாரணமானதுதானே. சர்க்கரை வைத்திருந்த பாட்டிலை கை தவறி அவள் உடைக்கவில்லையா? உடைத்தாளா? உடைந்ததா? 

ஆரம்பம். ஒன்றும் புரியவில்லை. எப்படி ஏன் எங்கிருந்து வந்தேன்? எப்படி ஏன் எங்கே போனாள்? அவள். 

அவளின் அனுபவங்கள் செலவிடாத சிந்தனைகள், பிறகொருநாள் சொல்லிக்கொள்ளலாம் என பூட்டிவைத்திருந்த எத்தனையோ ரகசியங்கள் எல்லாம் எங்கே போனது. ஆற்று நீரில் கரைந்து போயிருக்குமா? சுழலுக்குள் சிக்கிக்கொண்டதா. ஆன்மா எல்லாவற்றையும் வடிகட்டி வெற்றாய் வெளியே வருமா? அப்படியெனில் அது வாழ்வின் தொடர்ச்சி இல்லையோ. யாரும் எந்த சிந்தனையோடும் புரிதலோடும் பிறப்பதில்லையே. சேர்த்து வைத்ததையெல்லாம் கூட்டி தள்ளிவிடுகிறதே மரணம். எல்லாம் குப்பைதானா. அவளும் நானும் எங்கே? இருந்த இடம் எங்கே? இன்மையாக வெறுமையாகிப்போதோ. மாயை நாங்கள் மட்டுமா? எல்லாமும்தான்.

எனக்கு அனுபவங்கள் எந்த பாடத்தையும் கற்றுத்தரவில்லை. வாழ்க்கையின் அர்த்தம் புரியவுமில்லை. மாயமாய் வந்து மாயமாய் போவதாகத் தெரிகிறது. 

ஹிந்தி கட்டுரைப் போட்டியில் முதலாவதாய் வந்தமைக்காக பெற்ற கேடயத்துடன் மாலையில் மூத்த பேரன் வீடு வந்தான். அதை காண்பித்து வாழ்த்தும் பாராட்டும் பெற்றதும் கவிதைக்காக எப்போதோ வாங்கிய எனது இரண்டாம் இடத்திற்கான கேடயத்திற்கு பக்கத்தில் கொண்டு வைத்தான். 

மகன் வயிற்று பேரன் பள்ளியில் பாரதியாரின் மொழி பற்று குறித்த பேச்சுப்போட்டி அடுத்த வாரம் நடக்கிறதாம் “எழுதித்தாங்க தாத்தா” என்றான் 

“போட்டிக்கொல்லாம் அவங்க அவங்களேதான்டா எழுதணும். அப்பதானே உனக்கு திறமை வளரும்” 

“எப்படி எழுதுறதுண்ணு சொல்லுங்க தாத்தா” 

“புக் ஷெல்ப்ல இருக்குற பாரதியார் புத்தத்த எடுத்து நீயே ரெப்பர் பண்ணி எழுது பாப்போம்” 

“நான் எழுதுறேன் நீங்க கரேட் பண்ணித்தாரிங்களா?” 

“இது ஓகே” 

“நாளைக்கு எழுதட்டா தாத்தா” 

“எப்ப வேணும்னாலும் எழுது” என்றேன். 

இரவு உணவு வேண்டாம் என கூறிவிட்டேன். யாரும் கட்டாயப்படுத்த வில்லை. வழக்கமாக ஆற்றங்கரைக்கு போவேன் என்பது அவர்களுக்குத் தெரியும். தேட மாட்டார்கள். 

கடல் நோக்கும் நதி நோக்கினேன். 

பூக்கள் உதிர்வது 

போன்றது மரணம் 

அவை தாங்களே 

உதிர்த்துக் கொள்வதில்லை. 

– எட்டி மரக்காடு சிறுகதை தொகுப்பில் வெளியான சிறுகதை (நன்றி: FreeTamilEbooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *