இண்டியானா ஜோன்ஸ்ம் அப்பாவு வாத்தியாரும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 10,302 
 
 

”இண்டியானா ஜோன்ஸ்” இந்த பெயரை முதல் முறை கேட்ட போது ஏதோ சாப்பிடுகிற ஐஸ்கீரிமின் பெயர் என்று தான் நினத்தேன்.ஆனால் இந்த பெயரும்,இதை எனக்கு அறிமுகபடுத்தியவரும் என் வாழ்வில் மிகமுக்கியமான மாற்றங்களுக்கு காரணமாயின.ஏன் எங்கள் பள்ளியில் படித்த பலரிடம் இவையிரண்டும் பல விதமான மாற்றங்களை உண்டு பண்ணின.அதுவரை வெறும் 45 சதவீதமாக இருந்த பள்ளியின் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடு 80 சதவீதமாக உயர்ந்தது உட்பட.

அதுவரை கற்கால மனிதனையும்,ஹரப்பா,மொகஞ்சதாராவையும் இடைநிலை வகுப்புகளுக்கு போதித்து வந்த அப்பாவு வாத்தியார் அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பள்ளி மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக உலகப்போர்களையும்,உட்ரோ வில்சனின் 14 அம்ச கோட்பாடுகளையும் விவரிக்க உயர்நிலை வகுப்புகளுக்கு பணி உயர்வு பெற்றார்.

அப்பாவு வாத்தியார்,நாற்பதுகளின் மத்தியில் இருந்த மனிதர்,முன் வழுக்கை தலையில் பக்கவாட்டில் எண்ணெய் வைத்து வாறியிருப்பார்.கருத்த தடிமனான உருவம் எப்பொழுதும் வெள்ளை வேட்டி,சட்டை சகிதம் இருப்பார்.குமார் கடை வெத்தலயால் செஞ்சாந்தாயிருக்கும் வாய் .எப்போதும் பொங்கல் சாப்பிட்டது போன்ற ஒரு முகபாவனை.பள்ளி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நடத்தப்பட்டது அதனால் பெரும்பாலான ஆசிரியர்களும் அச்சமூகத்தை சார்ந்தவர்களாகவே இருந்தனர்,அப்பாவு வாத்தியார் உள்பட.அப்போதைய கால கட்டத்தில் பள்ளி வாட்ச்மேன் போத்திவேலு உட்பட அனைவரின் கவலை எங்களின் மேல் இருந்தது.கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளியின் தேர்ச்சி விகிதம் நாற்பது சதவீதத்தை தாண்டாததால்,இந்த வருட தேர்வு முடிகளை பொறுத்து அரசு எங்கள் பள்ளிக்கு வழங்கி வந்த மானியத்தை மறு பரிசீலனை செய்யும் என்ற அரசாணை தான் மொத்த பள்ளியின் கவலைக்கு காரணம்.

இந்த சூழலில் தான் அப்பாவு வாத்தியார் எங்களுக்கு வரலாற்றாசிரியராக நியமிக்கப்பட்டார்.ஏனோ தெரியவில்லை ஒவ்வொர் ஆண்டும் கணிதத்தை விட வரலாற்றில் எங்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்துவந்தது.உலக வரைபடத்தில் இலண்டன் மாநகரத்தை அமெரிக்க கண்டத்தில் குறித்துவைக்கும் அளவு தான் எங்களின் வரலாற்றறிவு இருந்தது.வகுப்பு கால அட்டவணையில் ஏனோ தெரியவில்லை எப்போதுமே ஆங்கிலமும்,கணிதமும்,அறிவியலும் காலை வேலையிலேயே வந்துவிடிகின்றன.மதியசாப்பாடிற்கு பிறகான மயக்கத்துடன் வரலாறும்,தமிழும் தோற்றுபோய்விடுகின்றன.

ஒன்பதாம் வகுப்பில் இருந்த ஐம்பத்தைந்து பேரில் தேறிய முப்பது பேர் கொண்ட எங்கள் வகுப்பில் சிபாரிசின் பேரில் ஒன்பதாவது வகுப்பில் மூன்றுமுறை தவறிய பள்ளி தாளாளார் பொய்யாமொழியின் உறவுக்கார பையன் சாந்தகுமாருடன் நான்கு பேர் கொண்ட குழு மாப்பிள்ளை பெஞ்சை கைப்பற்ற நாங்கள் முப்பத்தைந்து பேர் ஆனோம்.இந்த முப்பத்தைந்து பேரையும் எல்லா பாடங்களிலும் முப்பத்தைந்து விழுக்காடு வாங்க வைப்பதுதான் அப்பொழுது எல்லோருக்கும் அர்ச்சுனனுக்கு தெரிந்த புறாக்கண்ணாக இருந்தது.

நடைமுறை வாழ்விற்கு எந்தவித நேரடி தொடர்புமில்லாத ஒரு கல்வி திட்டம்,அதை போதிக்க அதே கல்வி திட்டத்தில் பயின்ற ஆசிரியர்கள்,இந்த அடிப்படையிலான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் நடைமுறை வாழ்வின் பங்களிப்பு மிகமுக்கியமானதாக கருதப்படுவது முரண்களின் மொத்த தொகுப்பு.ஆனால் அப்பாவு வாத்தியார் இந்த நியதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருந்தார்.ஜூன் மாதத்தில் ஆரம்பித்தது பள்ளி,அரசின் எல்லா இலவச பாடபுத்தகங்கள் எங்களை வந்தடைந்ததற்கு மறுநாள் காலை இறைவணக்க கூட்டத்தில் தனக்கோடி ஹெட்மாஸ்டர் தேசியகொடியை ஏற்றிவைத்து சுதந்திரதின சிறப்புரை ஆற்றினார்.ஒருவழியாக பாடங்களும் நடந்தேறிக்கொண்டிருந்தன.

எல்லா ஆசிரியர்களின் வகுப்புகளும் அவரவர் எல்லைகளுக்குள்ளேயே இருக்கும்.தமிழைய்யா முத்துவீறு வள்ளுவனையும்,கம்பனையும் விட்டு அடுத்த மாநிலத்திற்கு கூட போகமாட்டார்.ஜெயசீலி மேடம் வோர்ட்ஸ் வொர்த்திடம் சத்தியம் வாங்கிவிட்டார்கள் போலும்,ஆங்கிலத்தை தமிழ்வழிசொல்லிகொடுக்கும் அதிபுத்திசாலி.நடராஜன் சாருக்கு தேற்றங்களுடன் போராடவே நேரம் சரியாயிருக்கும்.சுகந்திபாய் டீச்சரைப்பற்றி சொல்லவே வேண்டாம்.அமிபாவையும்,பாக்டிரியாவையும் தவிர மற்றவற்றில் தலையிடாத பலசெல் உயிரினம்.பள்ளிகல்வியை குறைந்தபட்சம் நடைமுறை வாழ்க்கையின் அருகில் கொண்டுசெல்பவர் அப்பாவு வாத்தியார் மட்டும்தான்.

நாற்பத்தைந்து நிமிட வகுப்பு நேரத்தில் குறைந்தபட்சம் முப்பது நிமிடங்களாவது அவர் பொதுவான விசயங்களைப்பற்றிதான் பேசுவார்.கடைசி பதினைந்து நிமிடத்தில் தான் கூறியவற்றை பாடத்துடன் இணைக்கும் திறன்படைத்த காந்தி காண நினைத்த ஆசிரியர்.கம்ப்யூட்டர்,இணையம்,இமெயில்,இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்,பங்குசந்தை முதலீடு,பாலியல் கல்வி,ஹாலிவுட் திரைப்படங்கள்,ஹெமிங்வே,காரல் மார்க்ஸ்,சிக்மெண்ட் ப்ராய்டு,தஸ்தாவெஸ்கி,ஜெயகாந்தன் என தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே மேற்கூறியவற்றை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்,ஆனால் வகுப்பில் ஏன் பள்ளியிலேயே பலருக்கு இது செவுடன் காதில் ஊதிய சங்காய்போனது.அப்பாவு வாத்தியார் அறிமுகம் செய்து வைத்த பல விசயங்களுடனான தொடர்பு எனக்கு கிட்டதட்ட பத்துவருடங்கள் கழித்துதான் கிடைத்தது.காலத்தை விஞ்சிய மனிதர்கள் அவர்கள் வாழ்நாளில் கவனிக்கபடாமல் விடப்படுவதை வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் காணலாமென அவர் அடிக்கடி சொல்லுவார்.அவரும் இதற்கு விதிவிலக்கல்ல.

எங்கள் பள்ளியில் ஒவ்வொர் ஆண்டும் ஒருமுறை ஒரு திரைப்படத்திற்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.தாளாளர் பொய்யாமொழியின் சபாபதி டாக்கீஸ்தான் அதற்கான ஆஸ்தான ஸ்தலம்.எங்கள் பள்ளி மாப்பிள்ளை பெஞ்ச் மைனர்களை ஊக்குவிக்க அடிக்கடி பலமொழி கொக்கோக படங்கள் ரீலீஸ் ஆகும். கடந்த ஐந்தாண்டுகளில் இருமுறை கப்பலோட்டிய தமிழன் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஒருமுறை திருவிளையாடல்.எங்கள் பள்ளி கட்டிடம் கட்ட முப்பதாண்டுகளுக்கு முன்பே சிவாஜி கணேசன் பதினைந்தாயிரம் கொடுத்தாராம் அதனால் அவர் படங்கள்தான் எல்லா முறையும்.தன்வாழ்நாளில் பெரும்பாலான படங்களில் ஒவர் ஆக்டிங் செய்யும்படியான கதாபாத்திரங்களை மட்டுமே பெற்ற மகாநடிகன்.பாவம் தயிர் சாதம் மட்டும் தான் கிடைத்தது அந்த சிங்கத்திற்கு.

இந்தமுறை “ஆப்பிரிக்காவில் அப்பு” என்றார்கள்.அப்பாவு வாத்தியார் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.மாணவர்களுக்கு குறைந்தபட்ச உலகறிவாவது வேண்டும்.தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து அவர்களை அறுபதுகளுக்கு இழுத்து செல்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை.பலதரப்பட்ட எதிர்ப்புகளுக்கிடையே முடிவு அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.ஓரிரு நாளில் முடிவு தெரிவிப்பாதாக கூறினார்.அதற்கிடையில் அரையாண்டுத்தேர்வும் வர இருந்தது.தேர்வு அட்டவணையின்படி கடைசி தேர்வு சமூக அறிவியல். தேர்வு முடிவுகள் வந்தவுடன் திரைப்படம்,இதுதான் அப்பாவு வாத்தியாரின் முடிவு.ஒருமனதாக முடிவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அப்பாவு வாத்தியார் எங்களுக்கு ஒரு நிபந்தனை விதித்தார்.அதன்படி ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் முப்பத்தைந்து சதவீதம் எல்லா பாடங்களிலும் எடுக்க வேண்டும் எனவும் அப்படி செய்தால் எங்களை திருச்சி சிப்பி தியேட்டருக்கு அழைத்து சென்று புதிதாக வந்திருக்கும ஆங்கில படம் ஒன்றை காட்டுவதாகவும் படம் பார்த்தபின்பு முக்கொம்பு வரை இன்பசுற்றுலா செல்லலாம் என்று கூறினார்.சிப்பி தியேட்டர் திருச்சிக்கும் ஹாலிவுட்டுக்குமான ஒரே தொடர்பு.தொழில்நுட்பம் மட்டும் இல்லை அமெரிக்க திரைப்படங்கள் கூட காலதாமதமாகவே திருச்சிக்கு வரும்.

நாங்களும் அவரின் நிபந்தனக்கு சம்மதித்தோம்.

அடுத்த இரண்டு வாரங்கள் எங்களின் நாட்காட்டியிலிருந்தே தொலைந்து போனதுபோலாகியது.நாங்கள் பரஸ்பரம் உதவி செய்துகொண்டு தேர்விற்கு தயார் ஆனோம்.எங்களுக்கு தெரியாமலேயே எங்களுக்குள் ஒரு புரிதல்,அதை ஏற்படுத்தியவர் அப்பாவு வாத்தியார்.

தேர்வும் முடிந்து நாங்கள் அரையாண்டுத்தேர்வு விடுமுறையில் சென்று திரும்ப பத்து நாட்கள் ஆகியது.பதினோராவது நாள் பள்ளி திரும்பிய அன்றே தேர்வு முடிகள் வந்தது.அப்பாவு வாத்தியார் தான் ஜெயித்தார்.வரும் ஞாயிரன்று ”இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த லாஸ்ட் க்ருஸேட்” என்ற படத்திற்கு கூட்டிசெல்ல இருப்பதாக கூறினார்.பாதிகிணறு தாண்டிய சந்தோசத்தில் பள்ளியிருக்க நாங்கள் சினிமாவிற்கு கிளம்பினோம்.முக்கொம்பு போய்விட்டு திரும்பும் வழியெங்கும் தொப்பி மாட்டிக்கொண்டு அந்த கதாநாயகன் செய்த சாகசங்களையும் அதற்கான காரணங்களையும் அப்பாவு வாத்தியார் விவரித்தவாறே வந்தார்.ஊர் திரும்ப இரவு பத்தாகியது..

அதன்பின்பு அப்பாவு வாத்தியாருக்கு நாங்கள் தீவிர ரசிகர்களாகிப்போனோம்.மற்ற பாடத்திலிருக்கும் சந்தேகங்களை கேட்குமளவிற்கு அவருடனான உறவு வளர்ந்தது.

ஏனோ தெரியவில்லை அப்பாவு வாத்தியார் கல்யாணமே செய்துகொள்ளவில்லை.அதனால் விடுமுறை நாட்களில் கூட பள்ளிக்கு வந்துவிடுவார்.ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் மதிய உணவு கூடமாயிருந்த நூலகத்தை நூலகமாக்கியது அவர்தான்.அப்பாவு சாரும்,மக்கிய காகித மணமும் எப்போதுமே நுலகத்திலிருக்கும்.

அரசுபொதுத்தேர்விலும் எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் அப்பாவு வாத்தியார் ஜெயித்தார்.அதுவரையிலான பள்ளியில் தேர்ச்சி விகிதமும் மாறி அரசின் அங்கீகாரமும்,மானியமும் உறுதியாயின.

தேர்வு முடிவு வெளியானவுடன் அவரை சென்று பார்த்தேன்.மார்க்கை பார்த்துவிட்டு,

“என்ன படிக்க போற?” என்றார்.

“டிப்ளமோ படிக்காலம்னு இருக்கேன் சார்” என்றேன்.

“இந்த மார்க்குக்கு ப்ளஸ் டூ சேரு,நம்ம ஸ்கூல்ல இல்ல,திருச்சில இருக்கிற ஜோசப் ஸ்கூல,அங்கே எனக்கு தெரிந்த பாதர் ஒருத்தர் இருக்காரு, நீ அவரபோய் நான் சொன்னேன்னு பாரு மத்தத அவரே பார்த்துக்குவாரு” என்று கையோடு ஒரு லெட்டரும் கொடுத்து அனுப்பினார்.

அன்று தான் அவரிடம் அவ்வளவு நேரம் பேசினேன்,அதன்பின் அவர் வேலையில் அவரும் என் வேலையில் நானும் மூழ்கிப்போனோம். ப்ளஸ் டூ முடிவுகள் வெளியானவுடன் அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.கொஞ்ச சிரமப்பட்டே அடையாளம் கண்டுகொண்டார்.கேள்வியே கேட்காமல் பொறியியல் சேர சொன்னதோடு,எந்த கல்லூரியில் என்ன படிக்க வேண்டும் என்று கூட சொன்னார்.அதன் படியே செய்தேன்.

அதற்கு பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பே எனக்கு கிடைக்கவில்லை.

நானும் திருச்சி,சென்னை,பெங்களூரு என கல்வி மற்றும் வேலை நிமித்தமாக அவரை விட்டு வெகுதூரம் சென்றிருந்தேன்.

இந்த முறை விடுப்பில் ஊருக்கு சென்றபோது பள்ளிக்கு சென்றேன்,அப்பாவு வாத்தியார் தாளாளருடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணாமாக கட்டாய பணி ஓய்வில் சென்றுவிட்டதாக கூறினார்கள்.அவருடைய வீட்டு முகவரியை வாங்கிகொண்டு அவருடைய சொந்த ஊரான வாளவந்தான் கோட்டைக்கு சென்றேன்.விசாரித்து அவர் வீட்டை அடைந்தபோது ஒரு மூதாட்டி தான் அங்கு இருந்தார்.

நான் அவரிடம் அப்பாவு வாத்தியாரைப் பற்றி விசாரித்தேன்.அந்த மூதாட்டி அவர் வீட்டில் வேலை செய்ததாகவும் அவர் பொறுப்பில் வீட்டை ஒப்படைத்து விட்டு அவர் காரைக்குடி பக்கம் சென்றுவிட்டதாக கூறினார்.மற்ற விவரங்கள் தனக்கு தெரியாதெனவும் சொன்னார்.

அவர் இருந்த வீட்டை ஒருமுறை பார்த்தேன்.கனத்த மனதுடன் வீடு திரும்பினேன்.

பெங்களூர் திரும்பி அலுவலக வேலையில் முழ்க ஒருவாரம் பிடித்தது.

ஒருநாள் இணையத்தில் துலாவியபோது “இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த கிங்டம் ஆஃப் தி கிரிஸ்டல் ஸ்கல்” ரிலீஸாகியிருப்பதை பார்த்தேன்.

தலையில் தொப்பியும்,தோளில் சாட்டையுமாக அப்பாவு வாத்தியார் சிரித்தார்.

Print Friendly, PDF & Email

1 thought on “இண்டியானா ஜோன்ஸ்ம் அப்பாவு வாத்தியாரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *