அது ஒரு மாலை நேரம், மூன்று நான்கு மணியிருக்கும் 1996 ஆம் ஆண்டு என நினைவிருக்கிறது.இன்று போலவே பெருத்த மழை சோ என்று பெய்துகொண்டிருந்தது. இடையிடையே இடி மின்னல் முழக்கம் காதை பிளந்து கொண்டிருந்தது. எப்பவும் போல இடிமின்னல் வந்தால் “ அர்ச்சுணா” என்று சொல்ல வேண்டும் என்பது அம்மாவின் கட்டளை. வீட்டுக்கு வெளியே உழவு இயந்திரம் தரித்து நிற்பதற்காக பெரிய கொட்டகை ஒன்று இருந்தது. அதில் ஒரு வாங்கு எப்பொழுதும் போடப்பட்டிருக்கும். அப்பா எப்பொழுதும் அந்தக்கொட்டகையில் மதியபோசனத்திற்கு பிறகு ஒரு மணி நேரம் நித்திரை செய்வது வழக்கம்.
அன்றும் அப்படித்தான். நல்ல நித்திரையில் இருந்தவரை “ஐயா ஐயா எழும்புங்கள் எழும்புங்கள் “ என்று ஒருவர் வெளிக் கேற்றை திறந்து கொண்டு அழுதவாறு வந்து கொண்டிருந்தார். அவர் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்ப்பவர் என்பது தெரிந்தது. குரல் கேட்டு எழுந்தவர் உடனே மோட்டார் சைக்கிலை எடுத்துக்கொண்டு வந்தவரையும் ஏற்றிக்கொண்டு தோட்டம் நோக்கி புறப்பட்டு விட்டார்.
ஒரு மணி நேரம் களித்து மீண்டும் யார் யாரோ வருகிறார்கள். உழவு இயந்திரத்தில் படங்கு, வாளி என்று ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள்.
தோட்டத்தில் ஏக்கர் கணக்கில் புகையிலை பயிரிடுவது வழக்கம். அதைவிட அவற்றை பதப்படுத்துவதற்கென புகையிலைக்கூடும் இருக்கும். அன்று மின்னிய இடி மின்னல் புகையிலை அடுக்கி வைக்கப்பட்டிருந்த கொட்டகையை தாக்கி முற்றிலும் கருக்கி விட்டிருந்ததாம். இதில் பரிதாபம் என்னவெனில் தோட்டத்திற்கு பொறுப்பாக ஒருவர் இருந்தார். அவருடைய வீடும் அதற்கு அருகிலேயே இருந்தது. “மழை பெய்கிறது தண்ணீர் ஏதும் கசிகிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன்” என்று தனது வீட்டிலிருந்து புறப்பட்டு புகையிலை கொட்டகையை நெருங்கிய அதேவேளை மின்னலும் தாக்கியிருக்கிறது. அவரும் அந்த இடத்திலேயே போய்விட்டார்.
கொட்டகை காண்டாவனத்தில் வேயப்பட்டதால் இடிமின்னல் தாக்கியது என்பார் அம்மா. ஏற்கனவே இது பற்றி அப்பாவுக்கு அச்சுறுத்தல் விடுத்தார் அம்மா. அப்பா அது பற்றி பொருட்படுத்தாததற்கு காரணம் மழை வந்தால் புகையிலை முழுவதும் நனைந்துவிடும் என்பதுதான். கொட்டகை வேயப்பட்ட அன்று காண்டாவனம் என்பது உண்மை என்பது ஒரு புறம் இருக்க, காண்டாவனத்திற்கும் மின்னலுக்கும் என்ன சம்மந்தம்? ஏதோ விஞ்ஞான ரீதில் எழுதப்படாத காரணம் இருக்கு என்பதை யார் ஆய்வு செய்வார்கள்.
எது எப்படி இருப்பினும். அவ்வளவு பெரிய இழப்புகளை காப்புறுதி வசதியில்லாத நாட்டில் எப்படி தாங்கினார்கள். எப்படி மீண்டெழுந்தார்கள்? அப்பாவிடம் இருந்தது தொழிற்சாலைகள் என்று இன்றுதான் உணர முடிகிறது. எப்போதாவது அருமையாக சுற்றுலாப் பயணிகள் போல் பார்வையிடுவதுதான் என் வேலை.