ஆத்மநாதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 10,343 
 
 

“பின்னிட்டீங்க!”

“ஒங்களாலேயே இன்னொரு தடவை இவ்வளவு அருமையா பாட முடியுமாங்கறது சந்தேகம்தான்!” மேடையைவிட்டு இறங்கிய காமவர்த்தனியின் கையை இழுக்காத குறையாகப் பிடித்துக் குலுக்கினார்கள் பலரும். அந்த ரசிகர்களின் முகத்திலிருந்த பரவசம் அவளையும் தொற்றிக்கொண்டது.

“போதும். போதை தலைக்கேறிடப்போகுது”. யாரும் கவனிக்காத நிலையில் பக்கத்தில் நின்றிருந்த கணவன் அடிக்குரலில் சீறினான். “வீடுன்னு ஒண்ணு இருக்கிறது நெனப்பிருக்கா, இல்லியா?”

அவள் தடுமாறிப்போனாள். அவன் பேசியது யார் காதிலாவது விழுந்திருக்கப்போகிறதே என்ற பதைப்பு உண்டாயிற்று. அங்கிருந்து எங்காவது ஓடிவிட வேண்டும்போல உத்வேகம் எழ, “பாத்ரூம் எங்க இருக்கு?” என்று கேட்டு வைத்தாள்.

உள்ளே இருட்டாக இருந்தது.

“இதோ ஸ்விட்ச்!” என்றது ஒரு குரல். ஆண் குரல்.

பகீரென்றது அப்பாடகிக்கு. “தாங்க்ஸ்” என்றபடி கையைச் சுவற்றின் மேல் நீட்ட, அவளுடைய கரத்தைப் பற்றியது அந்த ஆணின் வலுவான கை. அக்கையை உதறிவிட்டு வெளியே ஓடினாள்.

“போகலாங்க,” என்று படபடத்த மனைவியை அதிசயமாகப் பார்த்தான் கணவன். “சீக்கிரமா வந்துட்டே!” என்றான் போகிற வழியில.

அப்போதுதான் அவள் அந்தத் தவறு செய்தாள்: “அதை ஏன் கேக்கறீங்க!” என்று அப்பாவித்தனமாக ஆரம்பித்து, எவனோ அந்த இருட்டறையில் தன் கையைப் பிடித்த பயங்கர அனுபவத்தைப் படபடப்புடன் விவரித்தாள். தனது கசப்பான அனுபவத்தை அவன் எப்படி எதிர்கொள்வான் என்று அவள் யோசிக்கவில்லை. ஆனால், கண்டிப்பாக பழியை அவள்மேலேயே திருப்புவான் என்றுமட்டும் அவள் நினைத்தும் பார்க்கவில்லை.

“அவன்மேல என்னடி தப்பு? நாலு பேர் பாக்கணும்னுதானே இப்படிப் பளபளன்னு டிரெஸ் செய்துக்கிட்டு, மேடை ஏறிப் பாடறீங்க ஒன்மாதிரி பொம்பளைங்க எல்லாம்!” கணவனது ஒவ்வொரு வார்த்தையிலும் வன்மம் தொக்கி நின்றது. இந்த அயோக்கியன்களின் பேச்சில் மயங்கி, எவனையாவது இழுத்துக்கொண்டு ஓடிவிட்டால் என்னாவது என்ற இனம்புரியாத அச்சம் அவனை அப்படிப் பேசவைத்தது. அவனுடைய தங்கை இப்படித்தானே கண்டவனோடு ஓடிப்போய், குடும்பத்துக்கு மாறாத அவமானத்தை உண்டாக்கி இருந்தாள்! அது இந்த ஜன்மத்தில் மறக்கக்கூடியதா!

இவளை இன்றோடு அடக்கி வைத்துவிட வேண்டும் என்று உறுதி செய்துகொண்டவனைப்போல், “நீ ஆசைப்பட்ட மாதிரியே, அதான் பத்து ஆம்பளைங்க பல்லை இளிச்சுக்கிட்டு ஒன் பின்னாலேயே வந்தாங்களே! பின்னே எதுக்கு என் முன்னால பயந்தவமாதிரி நடிக்கிறே?” என்று தாக்கினான். தொடர்ந்து, “ஆரம்பத்தில இப்படித்தான் கையைப் பிடிப்பான், அப்புறம், புடவைத் தலைப்பைப் பிடிச்சு இழுத்து.. !” என்று அடுக்கிக்கொண்டே போனான்.

அவளுக்குப் பயம் வந்தது — தன்மேலேயே.

குழப்பம் ஏற்பட்டது — கணவனது போக்கால்.

ஏன் இவர் அப்பாமாதிரி இல்லை?

அவளுடைய தந்தைக்குப் பாட்டுதான் உயிர். முப்பது மைல் சுற்றுவட்டாரத்தில் எங்கு சங்கீதக் கச்சேரி நடந்தாலும் தப்பாமல் போய்க் கேட்டு, ரசித்துவிட்டு வருவார். அருகிலிருக்கும் இடங்களுக்கு நான்கு வயதுக் குழந்தையாக இருந்த மகளையும் தோள்மீது படுக்கவைத்து ‘ஆட்டுக்குட்டி’ தூக்கிப்போவார்.

அதனால்தானே, “நானும் பாட்டு கத்துக்கறேம்பா!” என்று அவள் கொஞ்சலாகக் கேட்டபோது, அவளை இசையில் ஈடுபடுத்தினார், “இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப்போற பொண்ணுக்கு எதுக்கு பாட்டும், கூத்தும்?” என்று அம்மா ஆட்சேபித்ததையும் பொருட்படுத்தாது!

அப்போது குழந்தைத்தனமாக அம்மாமேல் ஆத்திரப்பட்டோமே, தன் ஆசைக்கு முட்டுக்கட்டை போடப்பார்க்கிறார்களே என்று!

இவளது குற்றச்சாட்டைக் கவனமாகக் கேட்ட அம்மா, “இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்!” என்று நொடித்தாள். “என்னதான் இருந்தாலும், தான் தொட்டுத் தாலிகட்டின பொண்டாட்டியை நாலு ஆம்பளைங்க தொட்டா, சூடு சொரணை இருக்கற எவன் சும்மா இருப்பான்?” என்று மாப்பிள்ளைக்கு வக்காலத்து வாங்கினாள்.

ஏதோ கீழ்த்தரமான இச்சையுடன் தொட்டுப் பார்க்கவா எல்லாரும் கைகுலுக்கினார்கள்? அவளால் அதை ஏற்க முடியவில்லை. ஆனால், யாரும் அறியாது, அவள் கரத்தைப் பற்ற இருளில் ஒளிந்திருக்கவில்லை ஒரு கயவன்? குழப்பம் அதிகரித்தது.

அப்பாவாவது தன் பக்கம் பேசுவார் என்ற நம்பிக்கையுடன், பெண் அவர் முகத்தைப் பார்த்தாள். அவரோ, தான் ஏதோ தவறு செய்துவிட்ட பாவனையில் குனிந்த தலையை நிமிர்த்தாது அமர்ந்திருந்தார்.

வெகுநேரம் அங்கு கனத்த மௌனம் நிலவியது.

சாப்பிட ஆரம்பிக்கையில், ஒரு கவளம் சோற்றைக் கையில் எடுத்தவர், “இப்படியெல்லாம் கஷ்டப்படறதுக்கு, பாடாமலேயே இருக்கலாம்,” என்றார் ஆழ்ந்த வருத்தத்துடன்.

“ஒனக்குப் பாட்டே கத்துக் குடுத்திருக்க வேண்டாம்!” என்று ஒத்துப் பாடினாள் அம்மா.

பெற்றோர் இருவரும் ஒருசேரக் கூறியதை அப்படியே ஏற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு.

அப்போது அவளுக்குப் புரியவில்லை, இசை அவளுடைய உயிர்மூச்சிலேயே கலந்திருந்தது என்பது.

பாட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்து இரண்டு, மூன்று வருடங்களில் கீர்த்தனை பயில ஆரம்பித்தபோது, “உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்மா!” என்று புல்லரித்துப்போய் ஆசி கூறினார் அவளுடைய ஆசிரியர்.

அவர் சொற்படி, தினமும் விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து, முந்தைய நாளிரவு தாமிரக் குவளையில் பிடித்து வைத்திருந்த நீரைக் குடித்து குரல் தெளிவாக, ஸ-ரி-க-ம-ப-த-நி-ஸ என்று சரளி வரிசையில் தொடங்கி, ஜண்டை வரிசை, அலங்காரம் முதலான ஆரம்பப் பாடங்களில் இருபது நிமிடங்களுக்குக் குறையாமல் அகார சாதகம் பண்ணிவிட்டு, ஆதி தாளம் அல்லது அட தாளத்தில் அமைந்த ஏதாவது ஒரு வர்ணத்தை மூன்று காலங்களில் பாடி குரல் வளத்தைப் பெருக்கிக்கொள்ள என்ன பாடுபட்டிருப்பாள்!

அந்த நிசப்தமான வேளையில், தான் மட்டும் விழித்துக்கொண்டு அதிசயமாக ஏதேதோ செய்வது பயமாக இருக்க, ஒவ்வொரு மூச்சு எடுத்து விடும்போதும், தன்னெதிரில் உள்ள பிள்ளையாருக்கு வாசமிகுந்த மல்லிகை மலரொன்றினைச் சாற்றுவதுபோல் கற்பனை செய்துகொள்ள, அதுவே தியானமாகி, மனத்திற்குப் பெரும் இதத்தைக் கொடுக்கவில்லை?

கச்சேரி இருக்கும் நாட்களில் வேறு விதமான கட்டுப்பாடு! இரண்டு நாட்களுக்கு முன்னரே மௌன விரதம்தான், பாடும்போது எங்காவது தொண்டை கரகரப்பாக இருந்துவிடப் போகிறதே என்று. எண்ணையில் பொரித்த எதையும் சாப்பிட மாட்டாள். சுடுநீரில் ஒரு சொட்டு நெய்யைக் கலந்து அடிக்கடி குடிப்பாள், குரல் பிசிறில்லாமல், இனிமையாக இருக்க வேண்டுமென்று. தினமும் இரவில் சுண்டக் காய்ச்சிய பால் — ஒரு ஸ்பூன் தேன் கலந்து.

“கச்சேரிக்கு போறதுக்கு முன்னால, வயிறு நிரம்ப சாப்பிடாதே. நான் ஒரு தடவை அப்படிப்போய், மூச்சுப்பிடிச்சுப் பாட முடியாம திணறிட்டேன். அதுவே, வயிறு காலியா இருந்தாலும் கஷ்டம்தான்! குரலே எழும்பாது! கருமிளகு, ஜீரகம், பனங்கல்கண்டு — இதையெல்லாம் பொடிச்சுப்போட்டு, ரெண்டு லோட்டா ஜலத்தைக் காய்ச்சி, ஃபிளாஸ்கிலே மேடைக்கு எடுத்துண்டு போக மறந்துடாதே!”

குருவின் பற்பல அறிவுரைகளையும் தெய்வ வாக்காக ஏற்று, அப்படியே கடைப்பிடித்துதான் இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்திருக்கிறாள். அதுவே வாழ்க்கை முறையாகிவிட்டிருந்தது. கணவருக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு நிற்பது பெரிய வேதனையாக இருந்தது.

‘வெளியில்தானே பாடக்கூடாது? சாமிக்கு முன்னால நாலு பாட்டு பாடினா என்ன!’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு, ஒரு நாள் சந்தியா காலத்தில், குத்துவிளக்கு ஏற்றிவிட்டுப் பாடத் தொடங்கினாள். போதிய பயிற்சி இல்லாததாலோ, மனம் ஒரு நிலைப்படாததாலோ, குரல் ஒத்துழைக்க மறுத்தது. ‘பாடப் பாட ராகம், மூட மூட ரோகம்!’ என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்! துக்கமாக இருந்தது.

இவள் குரல் கேட்டதுமே பூஜை அறைக்குள் எட்டிப் பார்த்த கணவன் கனகோபத்துடன், “ஆரம்பிச்சுட்டியா?” என்று இரைந்தபடி வெளிநடப்பு செய்தபோது, பயம் அதிகரித்தது. அவன் வீடு திரும்பாமல், அப்படியே எங்காவது போய்விட்டால்?

சுருதிப்பெட்டியை ‘கண்டா முண்டா’ சாமான்களுடன், ஸ்டோர் அறையின் ஒரு மூலையில் கொண்டு வைத்தாள். அடிக்கடி கண்ணில் பட்டால்தானே துயரம்!

சொல்லி வைத்தாற்போல், மறுநாள் ஒருவர் அவளைத் தேடி வந்தார்.

“எங்க சபாவிலே மும்மூர்த்தி விழா நடத்தறோம்மா. நீங்க வந்து தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி — இவங்க பாடின பாட்டை ஒரு மணி நேரம் பாடணும். ஒங்களுக்கு நல்ல சிட்சை, பாடாந்திரம் எல்லாம் இருக்கு. சின்ன வயசு வேறயா! நல்லா மூச்சுப்பிடிச்சுப் பாடறீங்க. ஒங்க குரல் இருக்கே– என்னத்தைச் சொல்றது, போங்க! போன ஜன்மத்தில சுவாமிக்குத் தேன் அபிஷேகம் பண்ணி இருப்பீங்க!” அவர் புகழப் புகழ, அவளுக்குப் பயம் வந்தது.

கச்சேரிக்குமுன் ஒருவர். முடிந்தவுடன் ஐம்பது பேரா!

ஒரு பெரிய மூச்சை உள்ளுக்கிழுத்துக்கொண்டு, “இப்போ சௌகரியப்படாதுங்க,” என்று அந்த சமாசாரத்துக்கு ஒரு முடிவு கட்டினாள்.

சௌகரியமோ, இல்லையோ, பாடவேண்டிய அவசியம் வந்தது.

இசைவழி தான் தெய்வங்களை ஆராதிப்பதைத் தடுத்த கணவர்மீது கோபங்கொண்டே அவர்கள் அவரைத் தன்னிடமிருந்து விலக்கி எடுத்துக்கொண்டுவிட்டார்கள் என்று தோன்றியது அவளுக்கு. அவளுடைய பெயரைக்கூட அல்லவா பழித்தான்!

“இது என்ன இப்படி ஒரு பேரு வெச்சிருக்காங்க ஒங்க வீட்டிலே? காமவர்த்தனியாம் காமவர்த்தனி!”

பள்ளிக்கூடத்தில் அவள் படித்தபோது, தேவி, மாலா, மகேஸ் என்று எல்லாப் பெயர்களிலும் மூன்று, நான்குபேர் இருந்தார்கள். ஆனால், இவள் பெயர் மட்டும் யாரும் கேள்விப்படாததாக இருந்தது. இப்போது கணவனும் அதைப்பற்றிக் கேட்கிறார்! உற்சாகமாக, “அது ஒரு ராகத்தோட பேருங்க! பந்துவராளின்னுகூட சொல்வாங்களே!” என்றாள்.

‘காமவர்த்தனி ராகம் இருக்கே, இது ஆயிரத்து இருநூறு வருஷங்களுக்கு முன்னேயே இருந்திருக்கு, ‘ராமக்ரிய’ங்கிற பேரில. தாய் ராகமானதால, ஏழு ஸ்வரங்களும் இதில இருக்கு! கச்சேரி ஆரம்பத்தில பாடினா, கச்சேரி களை கட்டும்’. என்றோ தந்தை தன்னிடம் கூறியதை அட்சரம் பிசகாது கணவரிடம் தெரிவித்தாள். ஆனால் அவளுடைய பெருமையில் பங்குகொள்ளும் மனநிலையில் அவன் இருக்கவில்லை.

“ஒன்னோட புத்திசாலித்தனத்தை எங்கிட்டயே காட்டறியா! நீ காமத்தில எப்படிங்கறது என் ஒருத்தனுக்கு மட்டும் தெரிஞ்சாப்போதும்,” என்று அவன் விகாரமாகச் சிரித்தபோது அவளுக்கு உடலெல்லாம் பற்றி எரிவது போலிருந்தது.

பதினைந்து வயதாக இருந்தபோது, “காமம்னா என்ன அர்த்தம்பா?” என்று கேட்டதற்கு, “காமம்னா ஆசை. அது எந்த ஆசையா இருந்தாலும் சரி. ஆனா, ஆண்-பெண் உடல் கவர்ச்சிக்கு மட்டும்னு பயன்படுத்தி, அதைக் கெட்ட வார்த்தைமாதிரி ஆக்கிட்டாங்க இந்தக் கதை, கிதை எல்லாம் எழுதறவங்க!” என்று சொன்னார். குரல் அடித்தொண்டையிலிருந்து வர, அவரது முகம் இறுகி இருந்தது.

அவளுக்கும் கோபம் வந்தது — தன்னுடைய அழகான பெயரை அசிங்கப்படுத்தியவர்கள்மேல்.

வாழ்க்கையே அலங்கோலமாக ஆகி விட்டபோதும் விதவைக்கோலம் பூணாது, எப்போதும்போல அலங்கரித்துக்கொண்டு, மீண்டும் கச்சேரி செய்யப்போனாள் காமவர்த்தனி. தன்னை மறந்து பாடும்போது, அந்தந்த பாடல்களின் பொருளான தெய்வங்களே தனக்குள் ஐக்கியமாகிப் பாடுவதுபோல் நிறைவாக இருந்தது. கூடுமானவரை, ‘நான் ஒங்க ரசிகன்’ என்று சொல்லிக்கொண்டு அருகில் வந்து, தொட்டுத் தொட்டுப் பேசியவர்களைத் தவிர்த்தாள்.

“வணக்கங்க! எனக்கு ஒங்க பாட்டு ரொம்பப் பிடிக்கும். அதுவும் இன்னிக்கு கரஹரப்ரியாவில ‘சக்கனிராஜ’ பாடினீங்களே! ஆகா! ‘ராஜ பாட்டை இருக்கும்போது, குறுக்குச் சந்திலே போவாங்களா?’ — இது பல்லவி. அனுபல்லவியிலே.. ‘பால் இருக்கையில், யாராவது மதுவை நாடிப் போவாங்களா?’ அப்படின்னு தியாகராஜர் கேக்கறாரு. அற்புதங்க! என்னையே மறந்துட்டேன். விட்டிருந்தா, ரெகார்ட் பண்ணி, தினமும் கேட்டு ரசிச்சிருப்பேன்!”

வழக்கமான ரசிகர் கும்பலில் அந்த இளைஞன் வித்தியாசமாக இருந்தான். அவள் வயதுதான் இருக்கும் அவனுக்கும்.

பக்கத்திலிருப்பவரிடம், ‘இது என்ன ராகம்?’ என்று விசாரித்துத் தெரிந்துகொண்டுவிட்டு, ஒரு பாட்டுக்கும், இன்னொன்றுக்கும் இடையே கிடைத்த அவகாசத்தில், ‘காம்போதி என்னமா இருந்திச்சு!’ என்று முன்னாலிருப்பவரிடம் அளக்கும் சிலரின் பிரதிநிதி இல்லை இவன். விஷயம் புரிந்து பேசுகிறான்.

அவள் ஒருவித சுவாரசியத்துடன் அவனைப் பார்த்தாள். “பாடுவீங்களா?” என்று விசாரித்தாள்.

“அதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணுங்க. நான் வெறும் பாத்ரூம் பாடகன்தான்”. அவன் உண்மையான வருத்தத்துடன் பேசுவதாகத்தான் தோன்றியது. “ஒங்களைமாதிரி யாராவது தாளமும், சுருதியும் இழைய, அர்த்தம் புரிஞ்சு, பாவத்தோட பாடினா ரசிப்பேன்!”

அடுத்தடுத்து அவளுடைய கச்சேரி எங்கு நடந்தாலும், முரளியும் தப்பாமல் வந்து கேட்டு, அக்குவேறு, ஆணிவேறாகப் பிரித்து விமரிசனம் செய்ய ஆரம்பித்தபோது, ‘இப்படி நமக்குப் பிடித்ததை இன்னொருவர் புரிந்துகொண்டு பேசினால், மனசுக்கு எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது!’ என்று எண்ண ஆரம்பித்தாள்.

‘நமக்கு வாய்த்தவர் ஏன் இப்படி இல்லாமல் போனார்?’ என்ற ஏக்கம் காலங்கடந்து எழுந்தது.

‘எத்தனை நாளைக்கும்மா நீ இப்படி தனியாவே இருப்பே? எங்களுக்கு அப்புறம் ஒனக்குத் துணை வேண்டாமா?’ தந்தை அடிக்கடி அவள் மறுமணம் செய்துகொள்ளவேண்டிய அவசியத்தைப்பற்றி நாசூக்காகக் கேட்டது நினைவில் எழுந்து கிளர்ச்சியை உண்டுபண்ணியது..

இந்த முரளியைக் கல்யாணம் செய்துகொண்டால் என்ன? இருவருக்கும் இடையே பாலமாகப் பாட்டு இருக்கும், என்றென்றும்.

ராகங்களின் அழகையும், பாடல்களின் அர்த்தங்களையும், அவைகளை இயற்றியவர்களின் பக்தியையும் ஒத்த மனத்தோடு அசைபோடமுடிவது பெரும்பாக்கியம் என்று தோன்றியது. பரவசத்துடன் கண்ணை மூடிக்கொண்டாள். முரளியினுடைய பெண்மை கலந்த முகச்சாயலோ, ஆஜானுபாகுவான தோற்றமோ அதில் பிரதானமாகத் தெரியவில்லை.

அவளுடைய எண்ணங்கள் அவன் மனத்திலும் எதிரொலித்து இருக்கவேண்டும். அடுத்துவந்த சந்திப்பில், “எனக்கு ஒங்ககிட்ட பிடிச்சது ஒங்க பாட்டு மட்டும் இல்லீங்க!” என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு, ‘கோபித்துக்கொண்டுவிட்டாளோ!’ என்ற பதைப்புடன் அவள் முகத்தைப் பார்த்தான் முரளி.

அவள் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டாள்.

“ஒங்க குரல், சங்கீத ஞானம், அடக்கம், பக்தி எல்லாமே பிடிச்சிருக்கு. ஒங்களைமாதிரி ஒரு பொண்ணுதான் என்னோட மனைவியா வரணும்னு எனக்கு ஆசை!” என்றான்.

“என்னை மாதிரியா, இல்லே நானேவா?” என்று கேட்டாள் காமவர்த்தனி. பொங்கியெழுந்த உணர்ச்சிகளை அடக்க முயற்சித்ததில், குரல் பிசிறடித்தது.

அவன் பூரிப்புடன் சிரித்தான். “நீங்க எப்படி எடுத்துக்குவீங்களோன்னுதான் சுத்தி வளைச்சுப் பேசினேன்!”

“நான் பாடுவேன்கிறது மட்டும்தான் ஒங்களுக்குத் தெரியும். மத்த விஷயமெல்லாம்..!”

“தேவை இல்லீங்க!” வன்மையாக மறுத்தான் முரளி. “இப்ப ஒங்க குரலைக் கேக்கறதுக்காக நாப்பது, அம்பது மைல் வரேன். ராத்திரி பகலா, எப்போ வேணுமானாலும் அதைக் கேட்டுக்கிட்டே இருக்கலாம்னு ஒரு நிலை வருமானா.., வாழ்க்கையில வேற என்ன சுகம் வேணும், சொல்லுங்க!”

அவளுக்கு அழுகை வந்தது. இவ்வளவு மனம்திறந்து பேசுகிறானே! தனக்குக் கொடுத்து வைக்கவில்லையோ!

“என்னோட பூவையும், பொட்டையும் பார்த்து நீங்க ஏதோ தப்பா நினைச்சுட்டீங்க. நான் விதவைன்னு தெரிஞ்சா, நாலுபேரு சுத்திச் சுத்தி வருவாங்கன்னு பயந்து, நான் போடற வேஷம் இது”.

அவன் திகைப்பிலிருந்து மீளுமுன் அவள் அப்பால் அகன்றாள். கச்சேரியில் சிறப்பாகப் பாடிவிட்டோமென்ற பூரிப்பு இருந்த இடம் தெரியாது மறைய, அவள் மனம் கனத்திருந்தது.

ஆனால், அடுத்த கச்சேரிக்கும் முரளி வந்தான்.

அவளைப் பார்த்துச் சிரித்தான்.

“ஒங்களுக்கு நல்ல துணையா இருப்பேன்னு நம்பறேன்,” என்றான். வாழ்க்கைத்துணையாக ஆனான்.

அடுத்தடுத்து வந்த கச்சேரிகள் முடிந்ததுமே அவளுடைய இடுப்பைச்சுற்றித் தன் கரத்தை வளைத்துக்கொண்டு, உரிமையாக முரளி நடந்தது எந்த ஆணையும் மிரளவைக்கப் போதுமானதாக இருந்தது.

அதையும் மீறி, “இன்னிக்கு ஒங்க பாட்டு அற்புதங்க, காமவர்த்தனி அம்மா. ஷண்முகப்ரியாவிலே, “சரவணபவ எனும் திருமந்திரம்தனை”ன்னு பாபநாசம் சிவனோட உருப்படி ஒண்ணு பாடினீங்களே, அப்படியே முருகன் சந்நிதியையே கண்ணு முன்னால கொண்டு வந்துட்டீங்க!” என்று ஒரு முதியவர் பாராட்டியபோது, அவள் முகமெல்லாம் விகசித்துப்போயிற்று. தான் எதை எண்ணிப் பாடுகிறோமோ, அது கேட்பவரையும் போய் அடைவது என்ன பாக்கியம்!

ஆனால், வீடு திரும்பியதும், சாப்பிட்டபடியே, அவள் பாடிய ஒவ்வொரு ராகத்தையும், பாட்டையும் விரிவாக விமர்சித்து, விளையாட்டாக மதிப்பெண்களும் போடும் வழக்கத்தைக் கொண்டிருந்த முரளி அன்று எதுவும் பேசாது, நேராகப் படுக்கப்போனபோது குழப்பம்தான் எழுந்தது.

“ஒடம்புக்கு முடியலியா?” நெற்றியில் வைக்கப்பட்ட அவளது கையை முரட்டுத்தனமாக விலக்கினான் கணவன். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, அவளை முறைத்தான். “நீ இனிமே எந்தக் கச்சேரியும் ஒத்துக்க வேணாம்!”

யாரோ மென்னியைப் பிடிப்பதுபோல் இருந்தது அவளுக்கு. “ஏங்க? முந்தியெல்லாம் நீங்க..?” என்று குழறினாள்.

“அது அப்போ. மத்தவங்க ஒன் கிட்ட, கிட்ட வந்து சிரிச்சுப் பேசறது எனக்குப் பிடிக்கல!” மறைந்த கணவனே வேறு உருவத்தில் வந்து மிரட்டியதுபோல் இருந்தது.

ஒருமுறை இசையைப் பறிகொடுத்துவிட்டு, தனது ஆத்மாவின் நாதத்தைத் தொலைத்து நின்ற வேதனை போதாதா? அந்தக் கொடுமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், பூவையும், பொட்டையும் தொலைத்ததுகூடப் பெரிதாகத் தோன்றவில்லையே!

காமவர்த்தனி அதிநிதானமாகத் தலையை நிமிர்த்தினாள். அவனுடைய கண்களை உற்றுப் பார்த்தாள். “ஒங்களுக்கும், என்னோட இசைக்கும் ஒரு போட்டி வெச்சா, நான் பாட்டைத்தான் தேர்ந்தெடுப்பேன். இனிமே இந்தப் பேச்சு வேணாம்!” தெளிவான குரலில் அவளுடைய பதில் ஒலித்தது.

இப்போதெல்லாம் தனியாகவே கச்சேரிகளுக்குப் போய்வருகிறாள் காமவர்த்தனி.

யாராவது தெரிந்தவர்கள், “அவர் எங்கே, கண்ணிலேயே படறதில்லியே?” என்று விஷமத்தனமாகவோ, வாய் உபசாரமாகவோ விசாரித்தால், “வீட்டில பிள்ளைங்களைப் பாத்துக்க ஆள் வேண்டாமா!” என்று அசட்டுச் சிரிப்புடன் சமாளிக்கிறாள்.

தான் நினைத்ததில் உறுதியாக இருந்து சாதித்துவிட்டதில் அவளுக்கு நிறைவு ஏற்படவில்லை. மாறாக, வேதனைதான் எழுகிறது, ஒரு நல்ல ரசிகனை இழந்ததற்காக.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *