(1967ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பொறி எட்டு | பொறி ஒன்பது | பொறி பத்து
ஆளுக்கு ஓர் அத்தியாயம்
நாவல் திசைப்பக்கமே திரும்பியவனல்ல நான். ஒரு விருந்து வைத்து ஆசிரியர் என்னை இதில் சிக்க வைத்துவிட்டார். ஆரம்பத்தில் பங்கு பெற இருப்பவர்கள் பட்டியலில் என் பெயர் வந்து கொண்டிருந்தபோது, பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். ஒரு சமயம் மறுத்து விடலாம் என்றுகூட நினைத்ததுண்டு. ‘அது அழகல்ல’ என்றும் சொல்லிக்கொண்டேன்; புலியும் வந்து விட்டது.
ஒருவரே எழுதுகிற நாவலில் கதைச் சிக்கல்களை ஏற்படுத்தி விடுவித்துக் கொள்வது அந்த ஆசிரியரது பொறுப்பு; எளிதுங்கூட. ஆளுக்கொரு அத்தியாயமாக கதைப் போக்கை எப்படி எப்படி யெல்லாமோ திருப்பிவிட்டு எங்கோ கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள் முன்னோடிகள். நானும் என் பின்னோடியைப் பற்றி கவலைப்படாமல் அல்லியையும், இன்னாசியையும் ஒரு நிலையில் நிறுத்திக்குழப்பி விடுகிறேன். அடுத்தவர் பி. வி. ஆர். அவர் பார்த்துக்கொள்கிறார்!
சி.சு.செல்லப்பா
பொறி ஒன்பது
உச்சநிலையில் அல்லிக் கொடி!
சாத்தையன் தலையில் விழுந்த இரும்புக் கம்பியைப் பிடித்திருந்த கை அருணாசலத்தினுடையதாகவோ ராஜநாயகத்தினுடைய தாகவோ, அல்லது கண்ணப்பனுடையதாகவோ கூட இருந்திருந்தால், அல்லியின் பதட்டம் தணிய வழி இருந்திருக்கும். பேராபத்திலிருந்து தப்பி விட்ட நிம்மதி ஏற்படவும் காரணமாக இருந்திருக்கும். ஆனால் அது இன்னாசியாக இருந்து விடவே, சற்று முன் ‘அல்லி’ என்று கூவிக்கொண்டு வெறிக் கண்களுடன் தன் மீது பாய்ந்த அதே மிருகம், தன் முதல் பாய்ச்சல் குறி தவறிவிட, இன்னொரு பாய்ச்சலுக்குத்தயார்செய்து கொண்டிருப்பது போலத்தான் அவளது மருண்டு போன கண்களுக்குப் பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த சாத்தையன் ஞாபகமே அவளுக்கு இல்லை. உண்மையில், தன் முன் நிற்பது யார், எவன் என்ற தனிப்பட்ட நபர்களைப் பற்றிய உணர்வு நிலையைப் பெற்றவளாகவே இல்லை அல்லி.
அன்று, திருக்கார்த்திகை தினத்தன்று மாங்குடியை விட்டுக் கிளம்பி நான்கு வயல்களைக் கடந்து வண்டிப் பாதையில் கால் வைத்த போது ஏற்பட்ட முதல் ஆபத்திலிருந்து சங்கிலித் தொடராக ஏற்பட்டு வரும் அத்தனை சோதனைகளுக்கும் ஒரு சிகரமான, தன்னையே அழித்து விடும் ஒரு தீக்கங்கு என அவள் முடிவு கட்டிவிட்ட அந்த ஆபத்து. சந்தர்ப்பத்தின் நீடித்த விநாடிகளாகத்தான் அவளுள் ஓடிக்கொண்டேயிருந்தது.
இன்னாசிதான் முதலில் தன் திகைப்பை நீக்கிக் கொண்டவன், அவன் தன் கையில் இருந்த கம்பியைப் பார்த்துக்கொண்ட போது அவன் உணர்வு ஒரு நிலையிலிருந்து நகர ஆரம்பித்துவிட்டது தெரியவந்தது. கையிலிருந்த கம்பி அவனுடைய வலது கையிலிருந்து கீழே விழுந்த வீதம், அதை அவன் தன்னையறியாமல் நழுவ விடவில்லை, சுயபிரக்ஞையுடன் வேண்டுமென்றே கீழே சற்று வீசியெறிந்த மாதிரியே போட்டான் என்பதைக் காட்டியது.
கம்பியைக் கீழே போட்டுவிட்டு அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அல்லியை ஒரு பார்வை பார்த்தான். அப்போதுதான் அல்லியின் உடம்பினுள் ஒரு புதிய நடுக்கம் ஓடியது. இரும்புக் கம்பி அந்த மிருகத்தின் கையில் இருந்தவரையில் அவளுக்குப் பயம் இல்லை.கீழே சாத்தையன் மண்டை உடைந்து கிடந்தது அதை நிரூபித்திருந்தது.ஆனால் அந்த ஆயுதத்தை அந்த மிருகம் தன் மீது உபயோகிக்காது; அது அவளுக்கு நிச்சயம்.உபயோகித்து விட்டிருந்தால் கூட தேவலை; ஒருவழியாக தனது இந்த முள் வாழ்வுக்கு ஒரு ஓய்வு கிடைத்திருக்கும்; நிம்மதியும் ஏற்பட்டிருக்கும். இப்போது நடக்கஇருந்த – இன்னும் நடக்கிற அத்தனையிலிருந்தும் தான் தப்பியிருக்க முடியும். அந்தவிநாடிக்கு அல்லி இதைத்தான் விரும்பினாள். ‘சிங்கப்பூரான் மண்டையைப் பிளந்த கையோடு என்னையும் கபால மோட்சம் பெறச் செய்திருக்கக் கூடாதா? இந்த மிருகம் ரத்தவெறி பிடித்ததுதானே! ஏன் கீழே போட்டது?’ முகத்தை மட்டும் இன்றி அவனது உடல் அசைவு, வாய் அசைவையும் பார்வை பிசகாமல் நுட்பமாக அவள் கண்கள் ஆராய்ந்து கொண்டிருந்தன. இன்னாசியின் கண்களிலிருந்து அவள் தகவல்களை அறிந்து கொள்ளப் பார்த்தாள், அன்று தினம் ‘அல்லி, நீமொந்தைக்கள்ளு; குடிவெறி கொண்ட பயலுங்க ஊரிலே அதிகம்’ என்று அம்மா சொல்லிச்செத்தபிறகு, தன் ஒவ்வொரு அசைவையும் பார்த்த அத்தனை கண்களும்பேசிய பாஷை ளும் உணர்த்திய அர்த்தங்களும் அவளுக்கு எவ்வளவோ தகவல்களைக் கொடுத்திருக்கின்றன; அருணாசலம், ராஜநாயகம் பார்வைகள்கூட அவளுக்கு எவ்வளவு விஷயங்களை அறிவித்திருக்கின்றன!
ஆனால் இன்னாசியின் கண்களிலிருந்து அவள் இப்போது எதுவும் தகவல் அறியமுடியவில்லை. காரணம், இன்னாசியின் கண்கள் இன்னும் அல்லியை மட்டும் முனைத்துப் பார்க்கும் நிலை எடுத்துக்கொள்ளாததுதான். அல்லியைப் பொருட்படுத்திதன் மனதுக்குள் நிலைக்கச்செய்து அதற்கு மேல் அவளோடு தான் அப்போது உறவு கொள்ளவேண் டிய முறை சம்பந்தமாக எவ்வித முடிவுக்கும் இன்னும் அவன் வரவில்லை என்றமாதிரி நடந்துகொண்டான்.விழி களைச் சுழற்றி சாத்தையன், ரத்தம்பெருகிக்கிடந்த அந்த இடம், கம்பி, தன்கை இவற்றைமாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். இவைகளை எல்லாம் ஒன்றுசேர்த்துப் பார்க்க முயன்று கொண்டிருந்த மாதிரி தோற்றம் காட்டினான்.
இன்னாசி எந்த நிமிஷமும் தன்னை நோக்கிஎட்டுவைப்பதை அல்லி எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று வண்டிப் பாதையில் கால் எடுத்து வைத்ததும் பின்னாலிருந்து ஒருகை பற்றி இழுத்ததும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க “எங்கே போறே?” என்று இடிச்சிரிப்புடன் இன்னாசி நின்றதும் அவள் கண் முன் குதித்து வந்து நின்றன. அதற்குப் பின் இப்போதுதான் அவனை மீண்டும் பார்க்கிறாள். இப்போதும் இன்னாசி என்ன கேட்கப்போகிறான்? ‘அல்லி நீ இந்த அருச்சுனனுக்கு தப்பிப்போயிற முடியும்னு எவ்வளவு தப்பாக நினைச்சுட்டே?’- இப்படித்தானே ஆரம்பிக்கப்போகிறான்? மறுபடியும் அந்த இடிச்சிரிப்பா? அப்போதாவது சாத்தையன் ஓடி வந்து சேர்ந்தான். அவர்களை மோதிக் கவிழ்த்துக் கொள்ள விட்டு தான் தப்பமுடிந்தது. ‘இன்னாசி வயிற்றில் குத்துடன் கீழே விழுந்ததும், விலாககுத்துடன் சாத்தையன் விழுந்ததும் தான் ஓடினதும் நினைவில் சுழல, இப்போதோ சாத்தையன் கீழே கிடக்கிறான். இன்னாசிக்கு இடம் ஒழிச்சுவிட்ட மாதிரி. இன்னொரு உடல் நடுக்கம் அவளைக் குலுக்கியது. என்னதான் ஒவ்வொன்றையும் சமாளிக்கப் பார்த்தாலும் ஒன்று மேலே ஒன்றாக வருகிற போது…’
இப்படி நினைப்பு ஓடிக்கொண்டிருக்கிறபோது, இன்னாசி ஏதோ தன்னைப் பார்த்துச்சொல்ல வருகிற மாதிரி அவன் உதடுகள் விரிய ஆரம்பிப்பதை சூட்சமமாகக் கவனித்தாள் அல்லி.
‘அல்லி’!- கூப்பிட்டு நிறுத்திவிட்டான் இன்னாசி. அதைக் கேட்டதுமே அல்லி அதென்னவோ அந்தப் பழைய அல்லி ராணியாகவே சீறினாள். ‘சீ.மிருகம்! நீ பிளைச்சா வந்திட்டே? வயிற்றிலே குத்துப்பட்டும் தப்பிச்சிட்டியா?’ என்று கீழே கிடந்த சாத்தையனைப் பார்த்தாள்.
இன்னாசி பளிச்சென கையால் தன் வயிற்றைத் தொட் டுப் பார்த்துக் கொண்டான். ஆழமாக இருந்த வடுவில் தன்விரலைக் கொடுத்து ஒருதரம் துளாவிக் கொடுத்துக் கொண்டான். சொக்கப்பனை இரவுச் சம்பவம் அவன் ஞாபகத்துக்கு வந்தது. கீழே கிடந்த சாத்தையனைப் பார்த்தான். ‘ஒரு வேளை, எழுந்து அவன் தன் வயிற்றில் மீண்டும் !…’ பீதியில் அவன் கண்கள் மீண்டும் ஒருதரம் கீழே கிடந்த இரும்புக்கம்பியைப் பார்த்தன.
ஆனால், அவன் அதைப் பார்க்கத் திரும்பிய போது அவன் கண்டது இதுதான். தனக்குப் பக்கவாட்டில் சற்றுமுன் தள்ளிக் கிடந்த இருப்புக் கம்பியின் மறுமுனையை எதிர்ப் பக்கத்திலிருந்து முன் பாய்ந்து குனிந்து அல்லி கையில் எடுத்துக் கொண்டிருந்தாள்.
‘இதோ பாரு, அல்லி!’ இன்னாசி கையைச் சற்று முன் வீசி லேசாக அசைவு கொடுத்து குனியப்போனவன், அந்த அளவிலேயே நின்றுவிட்டான். தான் ஒரே பாய்ச்சலில் அவள் கையை மணிக்கட்டோடு சேர்த்து பிடித்திருக்க முடியும். செய்யவில்லை. குனிந்தவன் நிமிர்ந்து விட்டான். அதே சமயம் கம்பியை வலது கையில் பிடித்து ஓங்கிக்கொண்டு பின்னால் பாய்ந்து நின்றாள் அல்லி.
“இதோ பாரு இன்னாசி நாயே! ஒரு எட்டு முன்வைத்தே, சாத்தையனுக்கு ஏற்பட்டதுதான் உனக்கும்!”
இன்னாசியின் இடதுகை வயிற்றின் காயவடுவைத் தொட்டுக் கொண்டிருந்தது. வலதுகை எந்தவிதமான அசைவும் காட்டாமல் உடலோடு ஒட்டி பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்தது. அவனது கண்கள் அல்லியையே பார்த்துக் கொண்டிருந்தன. அல்லி அவன் அசைவை எதிர் பார்த்து தன் முழுச் சுதாரிப்புடன் நின்றாள்.
இருந்தாற் போலிருந்து ஒரு இடிச் சிரிப்புச் சிரித்தான் இன்னாசி. அல்லி திடுக்கிட்டுப்போனாள். அந்தப் பழைய சிரிப்பு!
ஆனால் இந்தச் சிரிப்பில் அலட்சியமும் பரிகாசமும் தான் தொனித்தன. பழைய வெறியைக் காணவில்லை அல்லி. அந்தச் சிரிப்பு எழுந்தவாறே சட்டென தணிந்தும் விட்டது. இன்னாசி ‘அல்லி’ என்று அழைத்தான். அந்த அழைப்பில் எந்தவித வேகமும், அதைத் தொடர்ந்து வந்த பார்வையில் எந்த வெறியும் இல்லை.
இந்த நினைப்பில் அவளுடைய கையில் பிடித்திருந்த கம் =பிப்பிடி கூட சற்று தளர்ந்தது. மறுகணம் ‘சீ, அயோக்கியன்! வேஷம் போடுவான். என் கை ஓங்கி இருப்பது கண்டு!’ எனத் தனக்குள் சமாளித்துச் சொல்லிக் கொண்டதும் கம்பியைப் பற்றி இருந்த விரல்கள் இன்னும் பிடியை நெருக்கின.
இன்னாசி பேச ஆரம்பித்தான். பேச்சு மெதுவாக வந்தது. அவன் இடதுகை இன்னும் அந்த வடுவைத் தடவிக் கொண்டிருந்தது. அதையும் கவனித்தாள் அல்லி.
“அல்லி நீ இப்போ பார்க்கிறது வேறே இன்னாசி,” என்றான் இன்னாசி.
“இந்தச் சாமர்த்தியப் பேச்சிலே நான் கம்பியைக் கீழே போட்டுடுவேன்னுதானே நீ நினைக்கறே?” அல்லி ஒரு வெறியுடன் கூவினாள். “ஊரை விட்டு எச்சிக்கலை நாய்களுக்காகப் பயந்து ஓடி வந்த பழைய அல்லி இல்லை நானும், தெரிஞ்சுக்க!”
இன்னாசி சில விநாடிகள் மௌனமாக இருந்தான். பிறகு தன் குரலைச் சிறிதும் உயர்த்தாமல், ஆனால் தன் மனதில் உள்ளதை அவளுக்கு உணர்த்த விரும்பும் உறுதியுடன் சொன்னான்; “அல்லி, அந்தக் கம்பியும் கையுமாகவே நீ அதோ திறந்து இருக்கிற கதவு வழியாக வெளியே போகலாம்”.
தன்னை அறியாமலே அல்லி பிடித்திருந்த இரும்புக்கம்பி பிடி தளர்ந்து போக, அல்லி சிரமப்பட்டுத் தான் அதை இறுக்கி இறுக்கிப் பிடித்துக் கொள்ளவேண்டிய தாயிற்று. இவை இன்னாசியின் வரும் வார்த்தைகள் தாமா? அவள் அதிர்ந்து போனாள். தனக் காகச் சாத்தையனும் இன்னாசியும் குத்திக்கொண்ட போதும், ராஜநாயகம் தன்னை மணந்து கொள்ளக் கேட்டபோதும், சினிமாக் கொட்டகையில் எதிர்பாராத விதமாக சாத்தையனைக் கண்டதுமட்டுமன்றி அவன் அருணாசலத்துக்கு சினேகிதன் என்று தெரியவந்த போதும், அருணாசலம் சந்தேகப்பட்டு அவளைக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்ட போதும். சுகுணா என்று கையெழுத்திட்டிருந்த கடிதத்தைப் படித்த போதும், சூநாக காரில் அழைத்துச் செல்லப்பட்ட போதும், சாத்தையன் காரில் ஏறிய போதும்,அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளெல்லாம் சாதாரணமானவை என்று கருதும்படி செய்து விட்டது இன்னாசியின் வார்த்தைகளைக் கேட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சி. அவன் பேசியதை அவள் காதுகள் கேட்டன. ஆனால் நம்ப மறுத்தன. அவள் முயற்சி செய்யவேண்டிய அவசியம் இல்லாமலே, ”மேற்கொண்டு எந்தச் சூழ்ச்சிக்கு இப்படிப் பேசுகிறாய்?” என்று அவள் வாய் வெடித்துக் கேட்டது.
இன்னாசி அதைப் பொருட்படுத்தவே இல்லை. ”நான் நிற்கிற இடத்திலிருந்து ஒரு எட்டுக்கூட அசையாமல் நிற்கிறேன்.நீ போகும் போது வெளிக் கதவைத் தாளிட்டுக் கொண்டு வேண்டுமானால் போய்விடு.” அவன் குரலில் இருந்த அழுத்தம், உறுதி, அந்தரங்கம் அல்லியை அயர்த்தி விட்டன. இப்போது நம்புவதா, மறுப்பதா என்று இரண்டுங் கெட்ட நிலையில் அவதிப்பட்டாள். பட்டாமணியம் பாளையப்பத் தேவர் மகன் இன்னாசி, தூரத்திலிருந்து சீட்டியடித்து பிறகு ஊரில் தன்னைப் பற்றி வதந்தியைக் கிளப்பிய இன்னாசி – சாத்தையனுடன் வனக்காக கொலைக்கும் தயாரான இன்னாசி இப்படிப் பேசுகிறான்! இது நம்ப வேண்டிய, எடுத்துக் கொள்ள வேண்டிய வார்த்தைதானா?
ஒரு கணம் தயங்கினாள்.பிறகு, ‘அதனால் என்ன, சோதித்துத்தான் பார்ப்போமே’ என்று கம்பியை அவனுக்கு நேராக ஓங்கியவாறே நகர்ந்து போக நினைத்தாள். ‘எப்படியும் தான் அங்கிருந்து தப்பினால் போதும். இன்னாசியைப் பற்றித் தனக்கு என்ன கவலை?’ மனதிற்குள் கேட்டுக்கொண்டே நகரப் போனாள் அல்லி.
அப்போது இன்னாசியின் உதடுகள் அசைவதைக் கண்டாள் அல்லி.
“அல்லி இன்னாசி இனிமேல் உனக்கும் அருணா சலத்துக்கும் குறுக்கே வரமாட்டான். இந்தப் பிணமும் இனி ஏந்திருக்காது”
அல்லி கூவி விட்டாள். ஐயோ! கீழே கிடந்த சாத்தையனைப் பார்த்தாள். அவன் விறைத்துக் கிடந்தான் அலறிப் பின் பாய்ந்தாள் அல்லி. கையில் இருந்த கம்பி நழுவிக் கீழே விழுந்தது. அடுத்த வினாடி தன் தற்காப்பு ஆயுதம் இல்லாமல் தான் நிற்பதை உணர்ந்த அல்லி இன்னாசியின் முகத்தை மருட்சியுடன் பார்த்தாள். இன்னாசி அசையாமல் நின்றான். அவன் நின்ற நிலையைக் கண்டு ஒரு திடீர் நம்பிக்கை அல்லிக்கு ஏற்பட்டது. அவளும் அந்தக் கம்பியை மீண்டும் கையில் எடுக்க முயலவில்லை.
பிணமாகக் கிடந்த சாத்தையனை மறுபடியும் பார்த்து விட்டு அவள் பீதிப்படுவதை குறிப்பறிந்து கொண்ட இன்னாசி, அங்கிருந்த ஒரு துணியை எடுத்துப் பிணத்தை மூடினான்
அல்லிக்கு நம்பிக்கை பிறந்தது. இன்னாசியைச் சாந்தமாகப் பார்த்தாள். ”இன்னாசி நீஎப்படி மாறிவிட்டாய்? என்னால் நம்பமுடியவில்லை!” என்றாள்.
“ஆமாம்; ஊருக்குப் பெரியவரான பட்டாமணியம் பாளையப்பத்தேவர் மகன் இன்னாசி இப்படிக் கொலை செய்யப் போகிறான் என்பதாக யார்தான் நம்பி இருப்பார்கள்? இதோ பாரு அல்லி, இப்போ ரொம்பப் பேசுவதற்கு நேரமில்லை. நீ இதை விட்டுப் போகலாம்”.
‘நீ?’ என்று அல்லி கேட்க வாயெடுத்தாள். ஆனால் மனதில் அந்தக் கவலையே ஏற்படவில்லை. இன்று இன்னாசி இப்படி நடந்துகொண்டு விட்டதற்காக அத்தனை வெறுப்பும் மறைந்து விடுமா? அவனிடம் அவளுக்கு ஒரு அபிமானம் ஏற்பட்டு விடுமா?
“அல்லி, ஒரு தடவை உனக்காகக் கொலை வரைக்கும் போகத் தயாராக இருந்தேன். வெறியிலே செய்தது!” என்றான் இன்னாசி. வயிற்றுவடுவைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். “இன்னொருத டவை அதுக்குப் போக விரும்பவில்லை. உன்னை மறந்து விட்டுத்தான் இருந்தேன்.”
“இருந்தவனாகத் தெரியவில்லையே” என்று மறுத்தாள் அல்லி. “இல்லாவிட்டால் இப்போ மறுபடியும் என்னைத் தேடிக் கொண்டு இங்கே வந்திருக்க மாட்டியே? நீங்க இரண்டு பேரும் திரும்ப…”
அல்லியை முடிக்கவிடவில்லை இன்னாசி. ”அல்லி!” அவன் குரல் சற்றுக்கடுமையாகவே வந்தது. “சாத்தையனைக் கொன்றுவிட்டு உன்னைத் துன்புறுத்தவே நான் வந்திருப்பதாகச் சொல்ல வருகிறாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் சொல்கிறேன். ஐந்தாறு மாதங்களாக ஆஸ்பத்திரியிலிருந்து விட்டு செத்துப் பிழைத்தவனாக வெளியே வந்ததும், சினிமாவில் காலில் சதங்கை கட்டிக்கொண்டு நீ ஆடினதைப் பார்த்து விட்டு, உன்னைக் காணும் ஆவலுடன் நான் இங்கு வந்ததும் உண்மைதான். நீ இருக்கிற இடம் அறிந்து, அருணாசலத்துக்கும் உனக்கும் திருமணம் நடக்கப் போவதை அறிந்து, உன்னை முரட்டுத்தனமாக செல்ல முடியாது என்பதைப் புரிந்துகொண்டு உன் மனம் பேதலிக்கச் செய்ய சுகுணா என்ற பெயரால் கடிதம் எழுதியதும் உண்மை!”
‘அடப்பாவி!’ என்று கத்திவிட்டாள் அல்லி. “ஒரு மோசடிக் கடிதத்தால் என்ன விபரீதத்தை விளைவித்து விட்டாய்?” அந்த கடிதத்தைப் படித்து விட்டு ராஜநாயகத்திடம் நடந்து கொண்டதையும் நினைத்துக் கொண்டாள். ‘ஐயோ, அந்தக் கடிதம்!’ பல்லைக் கடித்துக் கொண்டாள். அதை அப்படியே போட்டு விட்டிருந்ததும் ஞாபகம் வந்தது. அருணாசலம் கையிலோ ராஜநாயகம் கண்ணிலோ பட்டிருந்தால்? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தன்னைத்தேடுகிறார்களா? என்று அவள் மனம் குழம்பியது. “சண்டாளா, உன் காரியம் நிறைவேற இந்த அளவுக்கா போய்விட்டாய்? உன்னை என்ன செய்தால் என்ன?…”
‘அல்லி!’
இடை மறித்தான் இன்னாசி, “என்னை என்ன செய்ய வேண்டும் என்பது உன் வசத்தில் இல்லை. விஷயம் அதற்கெல்லாம் மீறிப் போய்விட்டது!”
சொல்லிவிட்டு கீழே கிடந்த சாத்தையனின் பிணத்தைப் பார்த்தான். “ஒரு தடவை உனக்காக கொலை வரைக்கும் போனவன் மறுதடவை அதற்குப் போய் விடக்கூடாது என்ற முடிவுடன் தான் சூழ்ச்சியால் உன் மனசை அருணாசலத்தினிடமிருந்து திருப்பப் பார்த்தேன்!”
“கயவன்!” என்று முணுமுணுத்தாள் அல்லி. “உன்பக்கம் என் மனசு திரும்பி விடுமென்று நீ கனவு கண்டாயோ?…”
ஏளனச் சிரிப்புச் சிரித்தாள் அல்லி,
“திரும்பாது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், நீ அருணாசலத்துக்குக் கிடைக்கக் கூடாது. அது போதும் எனக்கு!”
அல்லி இன்னாசியைப் உறுத்துப் பார்த்தாள்.
“அருணாசலம் உனக்கு அப்படி என்ன செய்து விட்டான், இந்தப் பழி வாங்குவதற்கு என்று கேட்க வருகிறாயா அல்லி? அந்தத் தகவல் உனக்குத் தெரிய வேண்டாம். அருணாசலத்தை எப்படித் தெரியும் என்று நீ வேண்டுமானால் பிற்பாடு அருணாசலத்தையே கேட்டுத் தெரிந்து கொள்!…”
அல்லி திகைத்தாள்.
அருணாசலமும் சாத்தையனும் நண்பர்கள், அருணாசலமும் இன்னாசியும் இப்போது ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள். இன்னாசியும் சாத்தையனும் ஒரு ஊர்க்காரர்கள். அது அவளுக்குத் தெரியும். இதென்ன நச்சுவட்டம்! இதற்குள் அகப்பட்டுக் கொண்டு நான் படுகிற அவஸ்தை! எதுவும் புரியாமல் தவித்தாள். தான் என்ன, ‘பதினைந்தாம் புலி, ஆடுகளில் ஒன்றா, இவர்கள் விருப்பப்படி இரையாவதற்கு?’ அருணாசலத்தின் முன் வாழ்க்கை அவளுக்கு விவரம் தெரியாத, விளங்காத சிக்கலான ஒரு புதிர் ஏடாகப்பட்டது. அவள் சிந்தனையோட்டத்தை தடுக்கிற வகையில் இன்னாசி தொடர்ந்தான்.
“அல்லி, பேச்சை வளர்த்துக்கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. சுருக்க முடித்துவிடுகிறேன். நீ இந்த இடத்திலிருந்து போய்விட வேண்டும் நீ சுகமாக இருக்க வேண்டுமானால், இந்த இடத்தை நீ ஆராய விரும்பாதே. உனக்கு இந்த இடம் தெளிவு படாது. உன் கற்பனைக்கும் அப்பாற்பட்ட இடம் இது, ‘சாத்தையன், நான், அ…’ – உதட்டைப் பல்லால் கடித்துக் கொண்டு மீதியை உச்சரிக்காமல் அடக்கிக்கொண்டு மேலே தொடர்ந்தான். ஆனால் அந்த ‘அ’ சப்தத்தை அல்லி கவனிக்காமல் இல்லை.
“அல்லி, எங்களில் அருணாசலம் அதிர்ஷ்டக்காரன்; நீ அவனுக்குத்தான். உங்கள் உறவுக்குத் தடையாக இருந்த…” என்று சொல்லி நிறுத்தி சாத்தையனின் பிணத்தைப் பார்த்தான். பிறகு ஒரு பெருமூச்சுடன் “நானும் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடமாட்டேன். சரி, என் உதவி உனக்கு வேண்டுமானால், நீ என்னை நம்புவதானால், நானே உன்னைக் கொண்டுபோய் விடுகிறேன்!…”
அல்லியின் பார்வையில்-முகச்சுளிப்பில் அவ நம்பிக்கை!
“அல்லி உன் அவ நம்பிக்கை எனக்குப் புரிகிறது. நான் உனக்குப் பழைய இன்னாசியாகத்தான் படுகிறேன், உண்மை. என்னிடம் வந்த மாறுதலை நீ அறிந்துகொள் வதற்கான சூழ்நிலையில் அல்லது நான் மேற்கொண்டு உனக்கு நிரூபிக்கத்தக்க நிலையில் இப்பொழுது நான் இல்லைதான். எனக்குள் மாறுதல் ஏற்பட்ட காரணத்தையும் சமயத்தையும் மட்டும் உனக்குச் சொல்லிவிட்டால் எனக்குப் போதும். பொய்க் கடிதத்தை எழுதிவிட்டு அதன் விளைவைத் தெரிந்து கொள்ள உன் வீட்டு வாசலில் மறைந்து நின்றபோது நீ காணாமற் போய்விட்டது பற்றிய பரபரப்பைக் கண்டேன். போலீஸுடன் ராஜநாயகமும் அருணாசலமும் பேசிக்கொண்டிருந்ததில் சாத்தையன் பெயர் அடிபட்டது. பாம்பின் கால் பாம்பறியும். அதற்கு மேல் அவனும் நீயும் இந்த இடத்தில் இருப்பதைக் கண்டுபிடிக்க எனக்கு அதிக நேரம் ஆகவில்லை.”
“சீ, கொலைபாதகக் கும்பல்!” என்று முணுமுணுத்தாள் அல்லி. “சாத்தையன் நமக்கு முந்திக்கொண்டுவிட்டான் என்று ஓடிவந்தாய்!”
”அல்லி, நான் இப்போது கொலைபாதகன்தான். சாத்தையன் பொறிதட்டி விழச் செய்யும் அளவுக்குத் தான் பலத்தை உபயோகிக்க விரும்பினேன். வயிற்றில் முன்பு பாய்ந்த வேல் கம்புக்குத்து ஞாபகத்துக்கு வந்தது. என் நிதானத்தை இழந்துவிட்ட நிலையில் பலத்து விழுந்திருக்கிறது.சாத்தையன் முந்திக்கொண்டான் என்ற ஆத்திரத் தில் அல்ல – நீ நினைப்பது போல அல்லி! – அருணாசலம் கொஞ்சம் முன்னாடி உன்னால் திருந்திவிட்டான். இப்போது தான் நான் தெளிந்தேன்!…”
அல்லிக்கு பளிச்சென்று ராஜநாயகம் ராஜநாயகம் வார்த்தைகள் ஞாபகம் வந்தன. “நீ சாமான்யப் பெண் இல்லே. என்னைத் திருத்தினே. அருணாசலம் பயலை மயக்கித் திருத்தினே. இப்படி எத்தனை பேரை உன் அழகாலே ஆட்டிவச்சு மதியாலே திருத்த நீ பிறந்திருக்கியோ?’ இதென்ன, தனக்கு அத்தகைய சக்தியா இருக்கிறது?- முதலில் ஆட்டிவைக்கவும் பிறகு திருத்தவும். கீழே கிடந்த சாத்தையனின் பிணத்தைப் பார்த்தபின் இன்னாசியைப் பார்த் தாள், இன்னாசியின் முகத்தில் கண்ட அமைதி அந்த பிணத்தின் அமைதியின் பிரதிபலிப்பா? இல்லை. இது வரையுள்ள நாட்களின் நினைவே மாறி, மீண்டும் ஒரு பிள்ளையார்சுழி போட்டுத்தான் ஆரம்பிப்பதற்காக ஒரு புனர் வாழ்வின் ஆரம்பத்திற்கான அறிகுறியா? அவளால் நிதானிக்க முடியவில்லை. இன்னாசி ஒரு மிருகமாக இப்போது இல்லை என்பதை மட்டும் அவள் கண்டறிந்தாள்.
‘அல்லி.’ என்று உறுதியான குரலில் கூப்பிட்டான் இன்னாசி. “நீ புறப்பட்டுப்போய் அதோ நேரே படி இறங்கி இடது பக்கம் திரும்பிப் போனாயானால், வாசலுக்கு நேரான வழி தெரியும், போய்விடு. போய்விடு!”
அவன் குரல் விரட்டலாக வந்தது.
‘நீ’ என்று இரண்டு எட்டுகள் கதவை நோக்கி வைத்துக் கொண்டே கேட்டாள் அல்லி. அவள் குரலில் ஒருகனிவு தொனித்தது. முதன் முறையாக இப்போதுதான் அவனை ஒரு மனிதனாகக் கருதி அதற்குத்தக்கவாறு பேச வாயெடுத்தாள் அல்லி.
இன்னாசி சிரித்தான்: “கொலை செய்யும் உத்தேசம் இல்லாமலே கொலை பாதகனாக ஆகிவிட்டேன்!” அந்தப் பிணத்தின் பக்கம் திரும்பினான். ”இந்தப் பிணத்துக்கு ஒரு வழி செய்தாக வேண்டும்!”
”எந்தப் பிணத்துக்கடா வழி செய்யப் போகிறாய்?”
அவனுக்கு முன்னால், குரல் அதிகாரத்துடன் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பினான் இன்னாசி. அதே சமயம், தன் கைகள் பிடித்துக் கொள்ளப்படுவதை உணர்ந்தான் இன்னாசி. எதிரே நின்றவருக்குப் பின்னாலிருந்து முன் வந்த ஆளைக் கண்டதும் திடுக்கிட்டு விட்டான்.
“இன்னாசி,நீயா?” என்று கூவிவிட்டான் அருணாசலம்.
– தொடரும்…
– ஆடும் தீபம் (நாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1967, செல்வி பதிப்பகம், காரைக்குடி.