கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 17, 2024
பார்வையிட்டோர்: 181 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கையிலே ஒரு தகரக் குவளையை நீட்டிய படியே அந்தப் பிச்சைக்காரன் தன்னுடைய அடித் தொண்டையிலிருந்து ஒரு கரகரப்பான தொனியை வருவித்துக்கொண்டு, “காலணாப் போடுங்க சாமி” என்று கெஞ்சினான். பஸ்ஸை விட்டு இறங்கின அவசரத்தில் அவனைக் கவனிக்கவோ, அவனுடைய குவளையில் காலணாப் போட்டுப் புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளவோ நேரமில்லை. அவனுக்குக் கண் இல்லை. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தபடியே பிச்சை கேட்டான். எனக்குக் கண் இருந்தும் அவனைக் கவனிக்க நேரம் இல்லை. 

ஆனால் அவள்மேல் என் பார்வை விழுந்தவுடன் என் அவசரத்தை நான் மறந்தேன். குருட்டுப் பிச்சைக்காரனுக்கருகில் எந்தச் சமயத்திலும் அவனைப் பிடித்துக்கொண்டு வழிகாட்ட அவள் நின்றிருந்தாள். அவன் நின்று பிச்சை கேட்டபோது அவனைத் தொடாமல் பாதுகாப்பாகமாத்திரம் நின்றிருந்தாள். நான் அவளைக் கவனித்தேன்; பிறகு அவனையும் கவனிக்கும்படி என் உள்ளம் தூண்டியது. 

‘கடவுள் என்ன என்ன விதமான ஜதைகளைச் சேர்க்கிறார்! கண் அவிந்த கபோதியாகிய இவன் எங்கே! நாணிக் கோணிக்கொண்டு வறுமையால் போர்த்தப்பட்டு மறைந்திருக்கும் மென்மையை யுடைய இவள் எங்கே! பாவம்!’ 

அவள் ஒன்றும் பேசவில்லை. தலைநிமிர்ந்து பார்க்கவில்லை. அவனையே, அவனது கால் நிலையையே, அவள் கண்கள் கவனித்துக்கொண்டிருந்தன. 

நான் இறங்கி ஒரு காலணாவை எடுத்து அந்தக் குவளையில் டொக்கென்று போட்டேன். குருடன் அந்தச் சப்தத்தைக் கேட்டுத் திருப்தியோடு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நகர்ந்தான். பக்கத்தில் ஒரு கல் இருந்தது. அவள் அவன் கையை மெல்லப் பிடித்துக் கல் தடுக்காதபடி ஒதுக்கி அழைத்துச் சென்றாள். மற்றொரு பஸ்ஸுக்கருகில் அவன் போய் நின்றுகொண்டான். 

ஹோட்டல் பொஸொட்டோவுக் கருகில் எழும்பூர் போகும் பஸ் நிற்குமிடத்தில் தினந்தோறும் இந்த இரட்டைகளைப் பார்க்கலாம். தலைகால் தெரியாமல் ஒரு பஸ் ஓடிவந்து டக்கென்று நிற்கிறது. மற்றொன்று புறப்படுகிறது. ஜனங்கள் இறங்கு கிறார்கள்; ஏறுகிறார்கள். அவ்விடத்தில் ஜீவயாத்திரை வெகு வேகமாக நடைபெறுகிறது. அந்த வேகத்தி னிடையே நின்றுகொண்டு கண் தெரியாத அந்தக் குருடன் பிச்சை வாங்கி ஜீவனம் செய்தான். அவ னுக்கு ஊன்றுகோலாகவும் துணையாகவும் அவள் இருந்தாள். அங்கே காணப்படும் பிரசண்ட வேகத்தி னிடையே மனித உள்ளத்தை ஒருகணம் ஸ்தம்பித்து நிற்கச்செய்தாள் அந்தப் பிச்சைக்காரி. 

ஒருநாள் அவள் முகத்தைப் பார்த்தேன்; பார்க்க வேண்டுமென்று முயன்று காத்திருந்து பார்த்ததால் தான் அந்த முகத்தைக் கவனிக்க முடிந்தது. அவள் கண்களில் ஆழங் காணமுடியாத சோகம் படர்ந் திருந்தது. முகத்திலே வேதனையும் துன்பமும் அவ மானமும் சேர்ந்து போராட அவற்றினிடையே தனியான ஒரு மென்மையும் நாணக்குறிப்பும், ஊடுருவிக் கவனிப்பவருக்குத் தோன்றின. ‘உலகத்தில் உயர்குடும்பத்தில் புருஷன் மனைவியர் இருக் கிறார்கள். எத்தனை சண்டை! எத்தனை சச்சரவு! இவர்கள் பிச்சைவாங்கினாலும் எத்தனை ஒற்றுமை யாக இருக்கிறார்கள்! இவள் தோற்றத்திலே உள்ள பெண்மை ஆயிரத்தில் ஒருவரிடத்தில்தானே காண முடிகிறது?’-என் சிந்தனை மலர்ந்து விரிந்து காவிய உலகத்தையும் லக்ஷியப் பிரபஞ்சத்தையும் எட்டிப் பிடித்தது. 

‘பெண்மையிலே தெய்வத்தன்மை இசைந்து நிற்கிறது. கொந்தளிக்கும் வாழ்க்கைப்புயலுக் கிடையே மனோசாந்தியை அளிப்பதற்குரிய சஞ்சீவி பெண்மைக்கோலத்தில் இருக்கிறது. பெண்மை இல்லாவிட்டால் உலகத்தில் உள்ள வேகத்திற்கு நிலை யில்லை; கலகத்திற்குச் சமாதானமில்லை; வீரத்துக்கு வெற்றி இன்பம் இல்லை; அலைச்சலுக்கு ஓய்வு இல்லை.’ 

“என்ன,நிற்கிறீர்களே; வருகிறீர்களா?ஏறுங்கள்” என்ற கண்டக்டரின் தொனியைக் கேட்ட போதுதான் நான் இந்த உலகத்துக்கு இறங்கி வந்தேன். 

சுற்று முற்றும் பார்த்தேன். நான் தேடிய பொருள் கண்ணில் படவில்லை. “அவர்கள் எங்கே?” என்று வாய்விட்டுக் கேட்டேன்; மனம் மாத்திரம், “அவள் எங்கே?” என்றுதான் கேட்டது. அன்று குருடனையோ அவன் மனைவியையோ காணவில்லை. திடுக்கிட்டுப் போனேன். யாரோ வேறொரு பிச்சைக்காரன் அங்கே வந்தான். அவனைக் கேட்டு என் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளலாமென்று எண்ணினேன்; அவன் ஏதாவது நினைத்துக்கொண் டால்-! என் மனத்தில் எழுந்த கேள்விக்கு விடை கிடைக்காவிட்டால் என் வேலை ஒன்றும் ஓடாது போல் இருந்தது. “இந்தா, இங்கே வா” என்று அவனை அழைத்தேன். அவன் வந்தான். என் ‘பர்ஸை’ எடுத்து அவனுக்கு ஆசை காட்டிக் கொண்டே மெல்லக் கேட்கலானேன். 

“ஏன் அப்பா, இங்கே ஒரு குருடனும் அவன் பெண்டாட்டியும் பிச்சைவாங்கி வந்தார்களே; அவர்களை எங்கே காணோம்?” என்று கேட்டேன். 

“ஐயோ, சாமி; அந்தக் குருடன் ஒரு வாரத்துக்கு முன் இறந்து விட்டான்”. 

என் கேள்விக்கு விடை சொல்லிவிட்டதாக அவன் நினைத்தான்; எனக்கு உண்மையில் விடை கிடைக்கவே இல்லை. அவன் சொன்னதைக் கேட்ட வுடனே என் உடம்பு ஒரு குலுங்கு குலுங்கியது; “அப்படியானால் அவள்?” என்ற கேள்வி என்னை அறியாமலே என் வாயிலிருந்து வந்தது. 

“எங்கேயோ போய்விட்டாள், சாமி” என்று சொல்லி நான் கொடுத்த தம்பிடியை வாங்கிக் கொண்டு மேலே அவன் வேலையைக் கவனிக்கப் போய்விட்டான். 

என் உள்ளத்துள் ஒருவிதமான வேதனை உண்டா யிற்று. வேகமும் சுறுசுறுப்பும் கப்பிக்கொண்டிருக் கும் அந்த இடம் வெறும் சூன்யமாக எனக்குத் தோன்றியது. அவளை மீட்டும் எங்கேயாவது கண்டால்தான் எனக்கு ஆறுதல் உண்டாகும்போல் இருந்தது. 

சரியாக மூன்று மாதங்கள் கழிந்தன. ஏதோ காரியமாக நான் மயிலாப்பூர் போகவேண்டியிருந்தது. பஸ்ஸில் ஏறிக்கொண்டு லஸ் மூலையில் வந்து இறங்கி னேன். ஒரு நோக்கமும் இல்லாமல் என் கண் கள் வான வெளியிலும் நிலப்பரப்பிலும் உலவின. என் கண்களையே நம்பமுடியவில்லை. அவளைக் கண்டேன். அதில் ஒருவித ஆச்சரியம் உண்டாயிற் றென்பதில் சந்தேகமில்லை.ஆனால் அதற்குமேலே மற்றொரு காட்சியைக் கண்டபோதுதான் என்னைத் தூக்கிவாரிப்போட்டது. வறுமைக் கோலத்திலும் பிச்சையெடுக்கும் பிழைப்பிலும் பெண்மை நலம் கனிந்து நின்றதாக நான் கருதின அந்தப் பெண் பிள்ளை ஒரு காலில்லா முடவன் உட்கார்ந்திருந்த சிறு வண்டியைத் தள்ளிக்கொண்டிருந்தாள். 

முன்பு கண்ட குருடனுடைய ஸ்தானத்தில் மற்றொருவனைப் பிடித்துக்கொண்டாள்போலும்! என் மனத்தில் கற்பனை செய்திருந்த அவள் குணசித்திரம் சுக்குநூறாகக் கிழிந்துவிட்டது. பாரதியார் குயிற் பாட்டிலுள்ள, “நீசக் குயிலே, நிலையறியாப் பொய்ம் மையே” என்ற அடியை என் வாய் முணுமுணுத் தது. எனக்கு அவளிடத்தில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவளை வாயாரத் திட்டவேண்டுமென்ற வேகம் உண்டாயிற்று. 

மெதுவாக அவர்கள் இருந்த இடத்தை அடைந் தேன். என் கால்களைத் துணிவாக எடுத்துவைக்க முடியவில்லை. அந்தப் புதிய பிச்சைக்காரனைப் பார்த் தேன். முன்னே பார்த்த குருடனைக்காட்டிலும் அவன் வயஸில் இளையவனாக இருந்தான். கால்கள் சூம்பிப்போய் இருந்தன. அதனால் தனக்குப் பீடமும் வாகனமுமாக உதவும் ஒரு வண்டியைச் சம்பாதித்திக்கொண்டு பிச்சை எடுக்கும் வியாபாரத்தை நடத்திவந்தான். வண்டியை அவள் தள்ளிவந்தாள்; அவன் வியாபாரத்தை அவள் பின்னே இருந்து ஓட்டி வந்தாளென்றுதான் சொல்லவேண்டும். 

இன்று அவள் முகத்தில் புதிய களை இருந்தது போல் தோன்றியது. ஆனால் பழைய வேதனையும் இல்லாமல் இல்லை. அவளைக் கண்டு ஒரு கேள்வி யாவது கேளாவிட்டால் மனம் அமைதியுறாதென்று தோற்றியது. 

“அவன் யார்?” என்று அவளைக் கேட்டேன். அந்தக் கேள்வி எழுவதற்கு என்ன அவசியமென்று அவள் யோசித்தாளோ என்னவோ? அவள் பதில் சொல்லவில்லை. மறுபடியும், “உன்னைத்தான் கேட்கிறேன். இந்த ஆள் உனக்கு என்ன வேணும்?” என்று முன் கேள்விக்கு வியாக்கியானம் போன்ற மற்றொரு கேள்வியைக் கேட்டேன். அதற்கு அந்தப் பிச்சைக்காரன்தான் பதில் சொன்னான்; “என் பெண்டாட்டி, சாமி” என்றான். அப்போது அவளைக் கவனித்தேன். அவள் உணர்ச்சியற்ற மரம்போல அதைக் கேட்டுப் பேசாமல் நின்றுகொண்டிருந்தாள். 

‘அப்படியானால் அந்தக் குருடன்-?’ என்று கேட்க எண்ணினேன். அந்தக் கேள்வி என் உள்ளத் துள்ளே அமுங்கிவிட்டது. இந்தப் ‘பிச்சைச் சிறுக்கி செய்த பேதகத்தைப்பற்றி இவ்வளவு ஆராய்ச்சி எதற்கென்று விட்டுவிட்டுப் பேசாமல் புறப் பட்டேன். என் மனம்மாத்திரம் பெருத்த ஏமாற்ற மடைந்த உணர்ச்சியிலே அமிழ்ந்திக் கிடந்தது. 

“சீ, உலகம் மகா கேவலமானது!” என்று சொல் லிக்கொண்டேன். உலகம் முழுதும் அந்தப் பிச்சைக்காரியிடத்தில்தான் அடங்கியிருக்கிறதா என்ன? என்னவோ பைத்தியக்கார எண்ணம்! 

மயிலாப்பூருக்கு நான் போன சில சமயங்களில் லஸ் மூலையில் அவர்களைப் பார்க்க எண்ணுவேன். ஆனால் அவர்களை ஒவ்வொரு தடவையும் பார்க்க இயலாது. ஏதோ இரண்டொரு தடவை மாத்திரம் அவர்கள் என் கண்ணில் பட்டார்கள். அவர்களுக்கு ஒரு தம்பிடிகூட நான் போடவில்லை. 

இப்படிச் சில நாட்கள் சென்றன. பிறகு சேர்ந்தாற்போல் ஒரு மாச காலம் அவர்களைக் காண முடியவில்லை. ‘சரி, மூன்றாவது பேர்வழி கிடைத்திருப்பான்’ என்று தீர்மானித்துக்கொண்டேன். அவளை மறக்கவும் முயன்றேன்; மறந்தேவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். 


“இது என்னடா கூத்து! இந்தச் சனியன் இங்கே எங்கேயடா வந்தது?” 

வாடி வதங்கிப் போய், ‘கஸ்டம் ஹவுஸுக் கருகில் ஜனங்கள் நடக்கும் நடைபாதையில் இருந்த படியே கப்பலிலிருந்து இறங்கிவரும் கூட்டத்தைப் பார்த்துக்கொண்டு அவள் நின்றிருந்தாள். அவளுக் குப் பக்கத்தில் ஒரு துணைவனையும் காணவில்லை. அந்த வழியே நடந்துவந்த நான் அவளைக் கண்டு நின்றேன். அவள் அவ்வளவு கூட்டத்துக்கிடையே யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு ஆவலாக நின் றாள். அந்த ஆவலை அவளுடைய ஆழமான கண் களிற் கண்டுகொண்டேன். 

“உன் புருஷன் எங்கே?” என்று கிண்டலாக அவளைக் கேட்டேன். 

“அதுதான், காணவில்லையே” என்று பளிச் சென்று அவள் பதில் சொன்னாள். அடுத்த கணத்தில் விழித்துக்கொண்டாள்; “உங்களுக்கு எப்படித் தெரியும், சாமி?” என்று என்னைக் கேட்டுவிட்டு என் பதிலை எதிர்பாராமலே, “பெனாங்குக் கப்பல் இன்னிக்குத்தானே வருகுது, சாமி?” என்று மற்றொரு கேள்வியைக் கேட்டாள். 

அவள் கேட்ட கேள்விகளின் பொருத்தம் என் மனத்துக்குச் சரியாகப் படவில்லை.”உன்னை ரொம்ப நாளாகத் தெரியுமே! அந்தக் குருடனை விட்டுவிட்டு முடவனைப் பிடித்துக்கொண்டு அலைந்தாயே; அவள் தானே நீ?” என்றேன். 

நான் என்ன கொடுமையான காரியத்தைப் பண்ணிவிட்டேன்! என் கேள்வியைக் கேட்டாளோ இல்லையோ அவள் உடம்பு முழுவதும் நடுங்கிய து. கண்களில் மளமளவென்று நீர் பொங்கிவந்தது. பேச முடியவில்லை; அழுகை அவள் தொண்டையை அடைத்தது. 

நான் அவள் ஹிருதயத்திலே குத்திவிட்டே னென்று தெரிந்துகொண்டேன். அவள் பெண்மை நலம் அவளிடம் பின்னும் ஆயிரமடங்கு பெருகி ஒளிர்ந்தது. எனக்குக்கூட அழுகை வந்துவிட்டது. அவள் கண்ணீர் தாரை தாரையாக வந்தது; அவள் வாய்விட்டு அழவில்லை; அவ்வளவுதான். 

“ஏனம்மா அழுகிறாய்?” 

அந்த வார்த்தைகளை நான் கேட்டபோது அவ ளுக்குக் கோடைக்கால வெயிலில் அலைந்துவந்தவன் மேல் தென்றற்காற்று வீசினதுபோல இருந்திருக்க வேண்டும். அவள் அதுகாறும் அடக்கிக்கொண் டிருந்த துக்கத்தை என்னிடம் நம்பிக்கை உண்டான தன் அறிகுறியாக வெளிப்படுத்தினாள்; விக்கி விக்கி அழத்தொடங்கினாள். 

“யாரைப் பார்க்கிறாய்? எதற்காக அழுகிறாய்?” என்று நான் இரக்கம் மிகுந்த குரலில் கேட்டேன். 

அவள் ஒருவிதமாகத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அவள் உணர்ச்சிவெள்ளம் நெடுநாட்களாகத் தடைப்பட்டுக் கிடந்தது. நாளாக ஆக அந்தத் தடை இறுகியதே ஒழியத் தளரவில்லை. இன்று அது கரையை உடைத்து வெளியே வந்து விட்டது. அவள் தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள். அவள் சொன்ன பாஷையே வேறு. உங்களுக்கு என் பாஷையிலே பெயர்த்துச் சொல்கிறேன். 

5 

சாமீ, நான் மகாபாவி! நீங்கள் என்னை வெகு காலமாகக் கவனித்து வருகிறீர்கள்போல் இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்த சமாசாரம் பெரிய கதை. எங்கேயோ ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தேன். ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு வாழ்க்கைப் பட்டேன். அவர் வேலை செய்து பிழைத்தார்.எனக் குக் கடினமான வேலை செய்ய வரவில்லை. என் துரதி ருஷ்டம்! அவருக்குச் சில சிநேகிதர்கள் சேர்ந்தார் கள். கடல் கடந்து அக்கரைச் சீமைக்குப் போனால் வேலை செய்து காசு சேர்க்கலாமென்று ஆசைகாட்டி அழைத்துப் போய்விட்டார்கள். நான் இருந்தால்-கால்கட்டாக இருக்குமென்று எனக்குச் சொல்லாமலே அவர் போய்விட்டார். அதற்குப் பின், என்ன செய்வது, எப்படிப் பிழைப்பது என்று ஒன்றும் தோன்றவில்லை. வேலைசெய்து அறியாத எனக்கு வேலை கொடுப்பவரும் இல்லை. சொந்த ஊரிலே இருப்பதைவிடப் பட்டணத்துக்குப் போனால் இரண்டு வீடுகளில் பெருக்கித் தள்ளி யாவது பிழைக்கலாமென்று இங்கே வந்தேன், சாமி. 

இங்கே உள்ள ஜனங்களைப் பார்த்தேன். எல்லாம் துரைமார்களைப்போல இருக்கிறார்கள். யாரிடம் போய் எப்படி வேலை கேட்பது? எனக்குத் துணிவு பிறக்கவில்லை. என் தலைவிதி என்னைப் பிச்சைக்காரக் கும்பலோடு சேர்த்துவிட்டது. என் புருஷனே எனக்குத் தெய்வம், சாமி. அவரை நினைத்துக்கொண்டு உயிர் வைத்திருந்தால் என்றைக் காவது மறுபடியும் அவரைக் காணலாம் என்ற ஆசை இருக்கிறது. 

பிச்சைக்காரர் கூட்டத்தில் அதிகச் சிரமம் இல்லாமல் சோறு கிடைத்தது. என் உயிரைக் காப் பாற்ற வழி உண்டாயிற்று. ஆனால் மானத்தைக் காப்பாற்றுவதுமாத்திரம் கஷ்டம், சாமி. ஐயையோ! அந்தக் கூட்டத்தாருடைய நடவடிக்கைப் பிசகு சொல்லிமுடியாது. நான் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டேன். நான் எதை இழந்தாலும் என் மானத்தை இழக்கச் சம்மதிக்கமாட்டேன். உயிரை விட்டாலும் விடுவேன்; ஒருவன் தொட்டுத் தாலி கட்டின இந்த உடம்பை மற்றொருவனுக்குக் கொடுக்க மாட்டேன். (இந்த இடத்தில் அவள் வீராவேசத்தோடு பேசலானாள்.) 

என் மானம் குலையாமல் வாழ வகையொன்றும் புலப்படவில்லை. அந்தப் பிச்சைக்காரக் கும்பலில ஒரு குருடன் இருந்தான். அவன் கொஞ்சம் நல்லவ னாகப் பட்டான். அவனும் நானும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டோம். வேறு இடத்திற்குப் போய் விடவேண்டும். நான் அவனுக்குக் கூட்டாளியாக இருப்பேன். வெளிவேஷத்துக்கு நாங்கள் இருவரும் புருஷன் பெண்டாட்டியாக இருப்போம். ஆனால் என்னை அவன் தன் மகளைப்போலவே பாவிக்க வேண்டும். இப்படி நாடகம் நடத்திவந்தோம். நான் ஒருவன் பெண்டாட்டியென்ற நினைவினால் என்னை எந்தப் பிச்சைக்காரனும் அணுகவில்லை. அப்படி அணுகினால் பெருங்கலகம் விளைந்துவிடுமென்று எனக்குத் தெரியும். நான் குருடனுக்கு மனைவியாக நடித்துக்கொண்டு என்னைக் காப்பாற்றி வந்தேன். பாழுந் தெய்வம் அந்தக் குருடனைக் கொண்டுபோய் விட்டது, சாமி ! (இங்கே அவள் சிறிது கண் கலங்கினாள்.) 

பிறகு வேறொரு புருஷனைத் தேடினேன். முடவன் கிடைத்தான். அவன் குருடனைப்போல் அவ்வளவு நல்லவனாக இராவிட்டாலும் மற்றவர்களை விட அவனிடம் எனக்கு நம்பிக்கை உண்டாயிற்று. அவனோடு மயிலாப்பூர்ப் பக்கத்தில் இருந்துவந்தேன். அவன் கெட்ட எண்ணக்காரனென்று பிறகு தெரிய வந்தது. அவனை விட்டு வந்துவிட்டேன். 

ஒவ்வொரு வாரமும் பெனாங்கிலிருந்து கப்பல் வருகிறதென்றும், அங்கே காசு சம்பாதித்தவர்கள் இங்கே வந்து இறங்குகிறார்களென்றும் எனக்குத் தெரியவந்தது. அதனால் பெனாங்குக் கப்பல் வரும் போதெல்லாம் இங்கே வந்து பார்க்கிறேன். அவர் வருவாரா என்றுதான் பார்க்கிறேன். அவர் வரு வாரா? சாமி, சொல்லுங்கள். 


என் கண்களில் நீர் ததும்பக் கேட்டுக்கொண் டிருந்தேன். “அவர் வருவாரா?” என்று அவள் கேட்டதுதான் அவள் வரலாற்றுக்கு முற்றுப் புள்ளி. ஆனாலும் நான் இன்னும் அவள் கதையிலேதான் மூழ்கியிருந்தேன். 

“உன் பெயர் என்ன? அம்மா” என்று கேட்க வாயெடுத்தேன். 

அவள் மின்னலைப்போல் யாரையோ கண்டு கூட்டத்துக்குள்ளே ஓடினாள். 

அவளைத் தொடர்ந்து ஓடவேண்டுமென்ற பைத்தியக்கார உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. ஆனால் கால்கள் வேலை செய்யவில்லை. “உன் பெயர் என்ன அம்மா?” என்ற கேள்வியைமாத்திரம் என் உதடுகள் மந்திரத்தைப்போல ஜபித்தன.

– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *