அந்த சில நிமிடங்கள்!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 7,860 
 
 

ஒருவிதப் பர பரப்போடு அலுவலகம் அடைந்தவர்கள் பன்ச் மெஷினில் கார்டை தேய்த்து விட்டு உள்ளே நுழைந்தனர்.  சரியான நேரத்தில் அலுவலகம் வந்ததால் அதுவரை காணப் பட்டிருந்த டென்ஷன் அகன்று ஆசுவாசப்பட்டனர். சற்றே தளர்ந்த நடையுடன் சென்றார்கள்.

இரண்டாவது தளத்தில் ‘ஏ’  பிரிவில் இயங்கும் பி.ஆர்.வோ. செக்ஷ்னில் ஒருவரைத் தவிர அனைவரும் வந்திருந்தனர்.

“சார்…”  டைப்பிஸ்ட் காந்தா, பக்கத்தில்  அமர்ந்துள்ள மனோகரை அழைத்தாள்.

“யெஸ்!”

“என்ன சார் இன்னும் நம்ப செக்ஷ்ன் ஹெட்டை காணோம்?”

“அதுதாம்மா எனக்கும் தெரியல்ல!  சரியா ஒன்பதேமுக்காலுக்கே வந்துவிடுவார். ஃபோனும் பண்ணல்ல….”

“நீங்க காண்டக்ட பண்ணிப் பாருங்களேன்!”

அதுதான் சரி என நினைத்த மனோகர்  செக்ஷ்ன் ஹெட் சரவணனின் கைப்பேசிக்கு
தொடர்பு கொள்ள முயற்சிக்க ‘ ஸ்விட்ச்  ஆஃப் ‘  என்று பதில் வந்தது. தன் கைப் பேசியில் ஸ்டோர் பண்ணி வைத்திருக்கும் சரவணனின் வீட்டு லேண்ட் லைன் நம்பரை தொடர்பு கொள்ள முயன்றார்.  சிக்னல் பிராப்ளம்…அதனால் வெளியே சென்று மாடிப்படிகள் அருகில் உள்ள ஜன்னலோரம் நின்று கொண்டு முயன்ற போது, இரண்டு தடவை ரிங் போய் ஒரு வழியாக  ரிஸீவர் எடுக்கப்பட்டது.  “ஹலோ!”  ஒரு பெண்ணின் குரல்.

“ஹலோ! நான் மனோகர் பேசறேன். சாரோட வேலை செய்யறேன். அங்க யார் பேசறதுன்னு தெரிஞ்சுக்கலாம்மா?”

“ஐயா…நான் வீட்டு வேலைக்காரி பேசறேனுங்க..!”

” சரிம்மா. சார் இன்னும் ஆஃபீஸ் வரல்ல.. அதான் என்ன தகவல்ன்னு தெரிஞ்சுக்க
ஃபோன் பண்ணினேன்!”

மறுமுனையில் கொஞ்சநேரம் மெளனம். பிறகு மீண்டும் ஒலித்தது குரல். “ஐயா!  என்னத்தச் சொல்றதுங்க …” தயங்கிவிட்டுத் தொடர்ந்தாள் . “சாரு! காலைல எட்டுமணிக்கு பூஜையறையை விட்டு வெளியே வந்த அய்யா அப்படியே நெஞ்சைப் பிடிச்சிக்கிட்டு சாய்ஞ்சாரு. ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போனாங்க….ஆனா…9 மணிக்கு  உயிர் பிரிஞ்சிடிச்சு. எல்லாரும் ஆஸ்பத்திரியிலதான் இருக்காங்க. ” குரல் பிசிரடித்தது.

‘என்ன சரவணன் சார் இறந்து விட்டாரா’ அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்து போன மனோகர் பிறகு சுதாரித்துக் கொண்டார். “எந்த ஆஸ்பத்திரிம்மா?”  குரல் கம்ம கேட்டார்.

“சபரி ஆஸ்பத்திரிங்க!”

கைப்பேசியை சோர்வுடன் அணைத்தார் மனோகர்.  நம்புவதற்கே கஷ்டமாக இருந்தது.
54 வயதுதான் ஆகிறது. எத்தனை உயர்ந்த மனிதர்! சிரித்த முகம். எள்ளளவும் கோபம்
வராது. செக்ஷ்ன் ஹெட் என்கிற கர்வம் இல்லாமல் அனைவரிடமும் சமமாகப் பழகுவார்.
இரண்டு வருடம் முன்னால்தான் பெண்ணிற்கு திருமணம் நடந்தது.  போனமாதம்
பெண்ணிற்கு வளைகாப்பும் நடந்தது.  தனக்கு விரைவில் தாத்தா பிரமோஷன் கிடைக்கப் போகிறது என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டிருந்தார்.

இது மட்டுமா…கூடிய விரைவில் ஏ.ஜி.எம். பிரமோஷனும் கிடைப்பதாக இருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் உதறிவிட்டு  அதற்குள் விண்ணுலகம்  சென்று   விட்டாரே!  என்று உள்ளுக்குள் சோகத்துடன் மாய்ந்துபோனார் மனோகர்.

முதலில் தன் செக்ஷ்னில் உள்ளவர்களுக்கு விஷயத்தைத் தெரியப்படுத்த வேண்டும்.
பிறகு போர்டில் சரவணனின் டெத் மெசேஜை எழுதலாம் என நெஞ்சு கனக்க திரும்பி
நடந்தார் மனோகர்.

அப்பொழுது லிஃப்ட் வந்து நின்றது. அதலிருந்து ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.
கடைசியாக வந்த நபரைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது மனோகருக்கு.  சாட்சாத்  சரவணன்தான் கையில் லஞ்ச் பேக்குடன் வெளிப்பட்டார்.

“குட் மார்னிங் சார்!” என்றார் மனோகர் மனதில் தோன்றிய நிம்மதி கலந்த ஆசுவாசத்துடன்.

“குட்மார்னிங் மனோகர்! என்னடா இது இவர் லேட்டா வர்றாரேன்னு திகைச்சுப் போயிட்டீ ங்களா?”

” ஆமா…..சார்!”  அசடு வழிய சொன்னார்  மனோகர்.

“வழக்கமா வர்ற வழியில ஒரு ஆக்சிடெண்ட். டிராஃபிக் ஜாமாயிடிச்சு. அதனால சுத்தி வரவேண்டியதாப் போச்சு!”

“உங்க செல்லுக்கும் காண்டக்ட் பண்ண முயற்சி செஞ்சேன்.  ஆனா ஸ்விட்ச் ஆஃப்
ஆகியிருந்தது.”

“யெஸ்…டிரைவிங்ல இருக்கறப்ப செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணறது வழக்கம்.”

“அதனால உங்க வீட்டு லேண்ட் லைனை காண்டக்ட் பண்ணனும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அதுக்குள்ளாற நீங்களே வந்தும்டீங்க…சரி சார்…நான் டாய்லெட் போயிட்டு வரேன்.”

சிரித்தபடி சரவணன் செக்ஷ்னுக்குள் நுழைந்தார்.  அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்த மனோகர் பிறகு டாய்லெட்டுக்குள் சென்றார்.

இது எப்படி சாத்தியம்? …..எங்கோ தவறு நிகழ்ந்திருக்கு. தான் வேலைக்காரியுடன்
பேசியதை ரீவைட் செய்து பார்த்தார். எந்த இடத்திலும் சரவணனின் பெயரை உச்சரிக்க
வில்லை . அதைப்போல் வேலைக்காரியும்  ‘அய்யா’  என்றுதான் இறந்தவரைப்பற்றி
கூறினாள். ஸோ முதலாவது கேள்விக்கு  விடை கிடைத்துவிட்டது.

இரண்டாவது தொலைபேசி நம்பர். அதை பரீட்சித்துப்பார்த்தபோது சுரீர்ரென்றது
மனோகருக்கு. அதாவது கடைசி மூன்று நம்பர்கள் 192க்கு பதிலாக 182ஐ அழுத்திப் பேசியது நன்றாக நியாபகம் இருந்தது. சே! பதட்டத்தில் தான் அவசரப்பட்டதால் இத்தனை குழப்பம்! அந்தத் தவறான கால் பண்ணிய ஃபோன் இருக்கும் வீட்டில்தான் அசம்பாவிதமே நடந்திருக்கு!

நல்லவேளை! அவசரப்பட்டு செக்ஷ்னில் இருப்பவர்களிடம் சொல்லாமல் விட்டது நல்லதாய் போய்விட்டது. சொல்லியிருந்தால் மிகவும் ரஸாபாஸமாய் இருந்திருக்கும்! அதற்குள் சரவணன் வந்தது தெய்வச்செயல்! என எண்ணி நிம்மதி அடைந்தார் மனோகர்.

ஆனாலும் மனசு கேட்கவில்லை.  இறந்துபோன யாரோ அந்த மூணாவது மனுஷருக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்திவிட்டு வெளிப்பட்டார்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “அந்த சில நிமிடங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *