”குருவே, எனக்கு ஒரு பிரச்சனை” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“என்னப் பிரச்சனை?”
“என்னை எல்லோரும் ஏமாற்றிவிடுகிறார்கள். நானும் ஏமாந்துவிடுகிறேன்” என்று சொன்னவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
‘ஒரு பணக்காரன் தன்னுடைய பெரிய காரில் போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு புல்வெளியை அவனுடைய கார் கடந்த போது, அந்தப் புல்வெளியில் இரண்டு பேர் புல்லைப் பிடுங்கி சாப்பிடுவதைப் பார்த்தான். ‘புல்லைத் தின்கிறார்களே’ என்று ஆச்சர்யப்பட்டு காரை நிறுத்தி அவர்களிடம் போனான்.
”என்னாச்சு, புல்லை சாப்பிடுறீங்க?” என்று கேட்டான். அதற்கு ஒருவன், “நாங்க ரொம்பக் கஷ்டத்துல இருக்கோம், எங்களுக்கு வேலை இல்லை சாப்பிடவும் ஒன்றும் இல்லை.அதனால் புல்லை சாப்பிடுகிறோம்” என்று சோகமாய் சொன்னான்.
”அப்படியா, அப்போ எங்க வீட்டுக்கு வாங்க, அங்க நீங்க நிம்மதியா இருக்கலாம்” என்று அவர்களை அழைத்தான் பணக்காரன். இதைக் கேட்டதும் ஏழைகள் இருவருக்கும் மகிழ்ச்சி, ஆனாலும் ஒரு தயக்கம்.
“நாங்க மட்டும் இல்ல, எங்க குடும்பமும் எங்க கூட இருக்கு, அவங்களையும் கூட்டிட்டு வரலாமா” என்று தயங்கிக் கொண்டே கேட்டார்கள்.
“எல்லோருக்குமே என்னோட பண்ணை வீட்டுல இடம் இருக்கு. நீங்க அங்க வந்து இருக்கலாம்” என்று அழைத்தான் பணக்காரன். அவர்களுக்கு தன்னுடைய விலாசத்தையும் தந்தான்.
அடுத்த நாள் இரண்டு ஏழைகளும் தங்கள் குடும்பங்களோடு பணக்காரனின் பண்ணைக்கு சென்றார்கள்.
“வாங்க, நீங்க வந்தது ரொம்ப நல்லதாப் போச்சு” என்று பணக்காரன் அவர்களை ஆர்வமாய் வரவேற்றான். பண்ணை பரந்து விரிந்து இருந்தது.
“எவ்வளவு புல்லு வளர்ந்து கிடக்கு பாருங்க, நீங்க வந்ததுனால எனக்கு வெட்டுர செலவு மிச்சம். உங்களுக்கும் சாப்பாடு பிரச்சனை இல்லை” என்றான். அப்போதுதான் பணக்காரன் தங்களை அழைத்ததன் நோக்கம் ஏழைகளுக்குப் புரிந்தது.’
இந்தக் கதையை சொன்னதும் வந்தவனுக்கு தன்னுடைய பிரச்சனை என்னவென்று புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: அவசரப்பட்டு யாரையும் நம்பக் கூடாது.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)