அழிவற்றது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2022
பார்வையிட்டோர்: 10,433 
 
 

முப்பது வருடங்களுக்கு முன்பு நான் போயிருந்தபோது அயோவா சிடி மிகச் சின்ன ஊர். ஆனால், அது அந்த மாநிலத்தின் தலைநகராக இருந்திருக்கிறது. ஆனால் நான் போயிருந்த போது அது தலைநகர் அந்தஸ்தை இழந்ததோடு அதன் விமான தளமும் பயனற்றுப் போய் விட்டது என்று அறிந்தேன்.

ஊர் சின்னதாக இருந்தாலும் நகரங்களின் வசதிகள் பல இருந்தன. இரண்டு வங்கிகள் சாதாரணத் தேவைகளுக்கேற்ப டவுண்ட்டவுன் என்ற கடைத் தெரு. ஐந்தாறு சிற்றுண்டிச் சாலைகள். இரண்டு டிஸ்கவுண்ட் கடைகள். அதாவது தள்ளுபடிக் கடைகள்.

ஒரு நாள் நானாக வழி தெரியாமல் ஒரு சிறிய தெருவில் நுழைய அங்கும் ஒரு கடை இருந்தது. அங்கு விலைகள் மிகவும் குறைவாக இருந்தன.

எனக்குக் கிடைத்த அமெரிக்க நண்பர்களிடம் இதைச் சொன்னேன். “அப்படி எல்லாம் இருக்காதே. இங்கே கடைக்காரர்கள் எல்லாரும் நாணயமானவர்கள்.”

அந்தக் கடையில் பாத்திரங்கள், துணிமணி, சூட்கேஸ், குடை, காலணி முதலின கூட இருந்தன.

ஒருவனுக்குப் புரிந்து விட்டது. “நண்பரே, அவை எல்லாம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டவை. நீங்கள் மாதக் கணக்கில் இங்கு வசிக்கப் போகிறீர்கள். இருக்கும் வரை நல்ல, புதிய பொருள்களையே பயன்படுத்துங்கள். நான் அங்கு பொருள் கொடுத்துவிடத்தான் போவேன். வாங்க அல்ல.”

“இந்தக் கம்பளிக் கோட்டை ஐம்பது டாலருக்கு நீ வாங்கிக் கொடுத்தாய். அங்கே இதே போலக் கோட்டு பத்து டாலருக்கு இருக்கிறது.”

இந்தக் கம்பளிக் கோட்டுகள் முழுங்கால் வரை நீண்டிருக்கும்.

“சரி, சரி,” அவன் பேச்சை மேற் கொண்டு வளர்த்தாமல் போய் விட்டான். “நீ எதைக் கற்பனை செய்து கொண்டாலும் குளிரைக் கற்பனை செய்து கொள்ள முடியாது” என்று அவனே ஒருமுறை சொல்லியிருந்தான். நான் கற்பனை செய்து பார்க்க முடியாத குளிரை அனுபவிக்க வேண்டியிருந்ததால் எனக்குத் திரும்பத் திரும்பக் கம்பளிக் கோட்டுகள்தான் கவனத்தில் வந்தன. ஒருவன் முகத்தைப் பார்ப்பதற்கு முன்னால் அவர் அணிந்திருக்கும் கோட்டுதான் என் கண்ணில் தெரிந்தது.

அயோவா ஸ்டேட் பாங்க் அண்ட்டிரஸ்ட் கம்பெனி பல பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். எனக்கு அங்குதான் வங்கிக் கணக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என்னை அழைத்துப் போன இளைஞனின் பேச்சு, அந்த மானேஜர் பேச்சு எதுவும் எனக்குப் புரியவில்லை. திடீரென்று அந்த மானேஜர் பக்கத்திலிருந்த இயந்திரத்திலிருந்து ஒரு அட்டை மேஜை மிது விழுந்தது. அதில் என் புகைப்படம்! என் மற்ற புகைப்படங்கள் விசேஷமானவை என்று சொல்லமாட்டேன். ஆனால், அந்த வங்கி அடையாள அட்டையில் இருந்த புகைப்படம் என்னைத் தூக்கி வாரிப் போடச் செய்தது. நான் எங்கு காசோலை கொடுத்தாலும் கூடவே அந்த அடையாள அட்டையையும் காட்ட வேண்டும். ஒரு முறைக்கு இருமுறை என் முகத்தையும் அந்த அட்டைப் புகைப்படத்தையும் உற்றுப் பார்க்காமல் யாரும் என் காசோலையை ஏற்றுக் கொண்டதில்லை. என்னைப் புகைப்படம் எடுக்கப் போவதாக அந்த மானேஜர் சொல்லியிருந்தால் நான் என் குல்லாவையும் கம்பளிக் கோட்டையும் கழட்டியிருப்பேன் வாயைப் பிளந்தபடி வைத்திருக்கமாட்டேன்.

வங்கி வாஷிங்டன் தெருவில் இருந்தது. விசாலமான தெரு, தெருவின் முழு நீளத்திற்கும் நடுவில் தீவு போல ஏற்பாடு செய்து அதில் சில பெஞ்சுகளும் போடப்பட்டிருந்தன. நன்றாகச் சாய்ந்து கொள்ளக்கூடியவை. ஒரு குறை, அவை வங்கியின் எதிர்சாரியைப் பார்த்துப் போடப்பட்டிருந்தன. எதிர்சாரி முழு நீளமும் ஒரு மிகப் பெரிய கட்டடத்தின் பின் பக்கம். ஜன்னல்கள் தான் உண்டு. ஒரு வாசற்படி கிடையாது. அந்தப் பக்கத்து நடைபாதையில் நடமாட்டமே இருக்காது. நான் வங்கிக்கு அழைத்துச் செல்லப் பட்ட முதல் நாளே வங்கிக்கு நேர் எதிரே இருந்த பெஞ்சில் ஒரு மனிதனின் முதுகு தெரிந்தது. கருநீல நிறக் கம்பளிக் கோட்டு அணிந்திருந்தான். காலர் மடிப்புக்கடியில் சிறிது முயற்சி எடுத்தால் படிக்கும் படியாகக் கென்வுட் என்ற முத்திரை தெரிந்தது.

அடுத்தமுறை நான் வங்கிக்குப் போன போது அந்த மனிதனின் முதுகு தெரிந்தது. அதே கோட்டு. அடுத்த முறையும் அவன் உட்கார்ந்திருந்தான். அப்படி என்றால் அவன் தினமும் அங்கு உட்கார்ந்து வெறும் சுவரைப் பார்த்தபடி இருக்கிறான்.

நான் வங்கி ஜன்னலுக்குப் போனபோது என் பின்னால் யாரும் இல்லை. அந்தப் பெண் பணத்தை எண்ணிக் கையில் கொடுத்தாள். “அங்கே பெஞ்சில் ஒருவர் உட்கார்ந்திருக்கிறாரே, அவர் யார் என்று தெரியுமா?” என்று அவளைக் கேட்டேன்.

அவள் கலவரமடைந்தாள், “என்ன கேட்கிறீர்கள்?” என்று கேட்டாள். நான் கையைக் காட்டி, “அந்த மனிதன்?”என்றேன்.

அவளுடைய கலவரம் நீங்கிவிட்டது. “தெரியாது” என்றாள். அவளுக்கு நிஜமாகவே தெரியாமல் இருக்கலாம். வெளியூர்க்காரனுக்கு கண்ணில் படுவதெல்லாம் உள்ளூர்வாசிகளுக்குத் தெரிவதில்லை. தனக்குச் சம்பந்தமற்றது என்றும் இருக்கலாம். எனக்கு மட்டும் அந்த மனிதனைப் பற்றி தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது.

ஆனால் திரும்பத் திரும்ப ஒருவனை ஒரே இடத்தில் பார்க்க நேர்ந்தால் சம்பந்தமில்லை என்று விட்டுவிட முடியவில்லை. உறைபனி விழுந்து கொண்டிருந்த நாட்களில் கூட அவன் உட்கார்ந்திருந்தான். அவனைப் பற்றிப் பலரிடம் விசாரித்தேன். அவன் தனியாகப் பல நாட்களாக அந்த ஊரில் வசிப்பதாகச் சொன்னார்கள்.

அந்த ஊரில் எவ்வளவோ பேர் தனியாக வசித்து வந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லா நேரமும் ஏதோ ஒரு சுவரைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்ததில்லை. அவரவர்களுடைய வசிப்பிடங்களில் தான் தனி. வெளியே வந்து விட்டால் அவர்கள் தான் அதிகம் கும்மாளம் போடுவார்கள்.

கிரிஸ்துமஸ•க்கு இன்னும் நான்கு நாட்கள். அசாத்தியக் குளிர். ஆனால் அதையும் மீறி கடைகளில் கூட்டம். அந்தச் சிறிய ஊரிலிருந்து வேறெங்கோ இருக்கும் தாய், தந்தை, சகோதரன், சகோதரி என யாருக்காவது கிறிஸ்துமஸ•க்கு ஒரு பரிசாவது அனுப்ப வேண்டும், குறைந்தது இருபது வாழ்த்துக் கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்ற இலக்கோடு மக்கள் கடைகளில் குவிய, அயோவாசிடி தபாலாபீஸில் இரு தனி ஜன்னல்கள் பரிசுப் பார்சல்கள் வாங்கிக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன. என் வங்கியில் இருக்கும் துளியிடத்தை அடைத்துக் கொண்டு ஒரு கிறிஸ்துமஸ் மரம். வங்கியிலும் கூட்டம். என் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். குல்லாவைக் காது மூட இழுத்துவிட்டுக் கொண்டேன். கையுறைகள் அணிந்திருந்தும் கைகளைக் கம்பளிக் கோட்டின் பைகளில் நுழைத்துக் கொள்ள வேண்டியிருந்தது, ஒரு பொட்டு மேகம் கூட இல்லாது வானம் தெளிவாக இருந்தது. ஆனால் குளிர் சாலையில் விழுந்திருந்த உறைபனியை ஜ்ஸ் பாளங்களாக மாற்றியிருந்தது.

அந்தக் குளிரிலும் அந்த மனிதன் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். ஒரே ஒரு மாற்றம். அவன் தொப்பி அணிந்து கொண்டிருந்தான்.

என் உடல் குளிரில் நடுங்குவதையும் பொருட்படுத்தாது நான் அவன் உட்கார்ந்திருந்த பெஞ்சின் மறு கோடியில் உட்கார்ந்தேன் அவனை வெகு நாட்கள் தெரிந்தது போல, “கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்கள் வாங்கியாயிற்றா?’ என்று கேட்டேன்.

அவன் திடுக்கிட்டான். “என்னிடமா பேசுகிறீர்கள்? என்று கேட்டான்.

நான் புன்னகை புரிந்தேன். “ரொம்பக் குளிராக இல்லை? நான் உறைந்து போய் கொண்டிருக்கிறேன்” என்றேன்.

“அப்போது வீட்டுக்குப் போக வேண்டும்” என்று அவன் சொன்னான்.

என் உற்சாகம் முற்றிலும் வற்றி விட்டது. “நீ சொல்வது ரொம்பச் சரி” என்றேன். எழுந்து நின்றேன். அவனைக் கடந்து செல்லும்போது, “ஊருக்குப் புதிதா?” என்று கேட்டான்.

“அதனாலென்ன?”

“இந்த ஊரில் நான் யாருடனும் பேசுவதில்லை.”

நான் பதில் சொல்லாமல் நின்றேன்.

“விசேஷமான காரணங்கள் இல்லை, எனக்கு யாருடனும் பேச விஷயம் இல்லை”.

நான் அப்படியே நின்றேன்.

“கோபித்துக் கொள்ளாதே, இளைஞனே. நான் கடைக்குப் போனால் கூடப் பேசுவதில்லை. ஒரு முறை பால் திரிந்து போய் விட்டது. நான் கீழே கொட்டி விட்டேன்.

“பேசாமலே இருப்பது சாதனைதான்.”

“நான் சொல்ல வேண்டியதெல்லாம் எழுதி விட்டேன்.”

“நீங்கள் எழுத்தாளரா?”

அந்த மனிதன் நிராசை தெரியப் புன்னகை செய்தான்.

“தங்கள் புத்தகங்களை வாசிக்க முடியுமா?”

“அங்கே இருக்கிறது” அவன் எதிரில் இருக்கும் கட்டிடத்தைக் காட்டினான்.

“அங்கே கடை இருக்கிறதா?”

“அது நூலகம். இந்த ஊர் நூலகம்.

நான் அந்த நூலகத்திற்குப் போயிருக்கிறேன். ஆனால் அது வாஷிங்டன் தெரு வரை இருந்தது தெரியாது. நூலகம் என்பதால்தான் ஒரு பக்கம் முழுதும் வெறும் ஜன்னல்கள் மட்டும் அமைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

“உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனக்கு ரொம்பக் குளிருகிறது. வெட்ஸ்டனில் போய் காபி குடிக்கலாமா?”

அவன் முடியாது என்று சொல்வான் என்று நினைத்தேன். அவன் முகம் அப்படித்தான் நினைக்க வைத்தது. ஆனால் மெதுவாக எழுந்தான். என்னை விட ஓரடியாவது உயரமாயிருப்பான்.

“வெட்ஸ்டன் வேண்டாம். ரிவர்வ்யூ போவோம்,” என்றான்.

ரிவர்வ்யூ சிற்றுண்டிக் கடைக்குச் செல்லச் சாலையைக் கடந்து பத்து நிமிடங்கள் நடக்க வேண்டியிருந்தது. குளிர் தாங்க முடியாது போலிருந்தது.

“எனக்குக் குளிர் தாங்க முடியவில்லை.”

அவன் என்னைத் திரும்பிப் பாராமலே, “நீ போட்டிருக்கும் கோட்டு இந்தக் குளிருக்குப் போதாது. ஒரு கடை இருக்கிறது. அங்கே போ. மிகக் குறைந்த விலையில் நீ ஒரு கோட்டு வாங்கிக் கொள்ளலாம்”

“எங்கே இருக்கிறது?”

“வாஷிங்டன் தெரு முனைக்குச் சென்று இடது புறம் திரும்ப வேண்டும்.”

“அந்த தெரு குறுகலாக இருக்குமோ?”

அப்படி என்றால் நீ அங்கே போயிருக்கிறாய்.”

“அங்கே எல்லாம் பழையது என்கிறார்களே?”

“இருக்கலாம்.”

ரிவர்வ்யூயில் காசு கொடுத்துவிட்டுக் காபி எடுத்துவர வேண்டும். அந்த மனிதன் அவனுக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டுக் காபி எடுத்துக் கொண்டான். அப்புறம் நானும் ஒரு தட்டு கோப்பை எடுத்துக் கொண்டு ஜாடியிலிருந்து காபி டிகாஷன் விட்டுக்கொண்டு மேஜைக்குப் போனேன். அங்கு பாலுக்குப் பதில் பால் பவுடர். காபி காபியாகவே இருக்காது. வெட்ஸ்டனில் பால் இருக்கும்.

அந்த மனிதன் காபியை மிகவும் மெதுவாகக் குடித்தான். அவன் குடித்து முடிக்கப் போகும் நேரத்தில் நான் எழுந்திருந்து, “நான் போக வேண்டும் என்றேன்.

“சரி.”

“பெயர் சொன்னால் நூலகத்தில் தங்கள் நூல்களைப் படிப்பேன்.”

“வேண்டாம்.”

“என்ன!”

“வேண்டாம், போய் வா.”

எனக்கு மிகவும் சங்கடமாயிருந்தது மற்றவர்களும் அவனால் சங்கடத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்கள். அவனைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளாததற்கு அவனே காரணமாயிருக்கலாம்.

அந்த நூலகத்தில் பட்டியலைப் பார்த்துத்தான் நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நூலகப் பெண்களை விசாரித்தேன். அவளுக்குத் தெரியவில்லை. “அவன் இந்த ஊர்க்காரனாகத்தான் இருக்க வேண்டும்,” என்றேன்.

“நான் கூட இந்த ஊர்க்காரிதான். என் பக்கத்து வீட்டில் காலியாயிருக்கும் அறைக்கு என்ன வாடகை என்று கேட்டால் எனக்குத் தெரியாது.”

அவனை மீண்டும் ஒரே முறை அந்த நாற்காலியில் பார்த்தேன். நான் அவன் கண்ணில் பட வாய்ப்பில்லை. அப்படி என்னைப் பார்த்தால் கூட அவன் யாரோ அயலானைப் பார்த்தது போலத்தான் இருப்பான்.

அவன் என்ன புத்தகங்கள் எழுதியிருப்பான்? விஞ்ஞானம், வரலாறு, பொருளாதாரம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு எதுவும் இருக்காது. இந்தத் துறைகளுக்கு மற்றவர்களுடன் விவாதமும் பரிமாற்றமும் தேவை. அவன் படைப்பிலக்கியக் காரனாகத்தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன் என்ற பெயரில் அவர்கள் தான் எங்கோ உச்சாணிக் கொம்பில் தனியாக இருப்பார்கள்.

உச்சாணிக் கொம்புக்காரன் ஏன் பிறர் பார்க்க வெட்ட வெளியில் நாளெல்லாம் உட்கார்ந்திருக்க வேண்டும்? அவனைப் பற்றி எல்லாரிடமும் விசாரிக்கவும் முடியாது. அப்படி விசாரிப்பது ஓட்டுக் கேட்பதற்கு இணை என்று நினைக்கும் சமூகம் இது. அதன் பிறகு மதிக்கவே மாட்டார்கள். பெரிய மதிப்பு என்று வேண்டாம். சிறு சிறு உதவி கூடச் செய்ய மாட்டார்கள்.

அவன் உயரமாக இருந்தாலும் மிகவும் ஒல்லியாகவும் இருந்தான். ஆனால் பட்டினி கிடப்பவன் அல்ல. குடிகாரனும் அல்ல. அவன் சிகரெட் குடித்துக் கூடப் பார்த்ததில்லை. (முப்பது ஆண்டுகளுக்கு முன்பு புகையிலைக்குத் தடையேதும் கிடையாது.) அதுவே கூட அவன் தனியனாகப் போனதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். சில பழக்கங்கள் தவிர்க்க முடியாதவை என்று கருதுவோம் அல்லது கருதுவதாகத் தோற்றம் தருவோர் எப்போதும் நண்பர் குழாம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ரசிகர் சங்கங்களின் ஆதாரமே ஏதோ ஒரு மனிதர் தவிர்க்க முடியாதவர் என்ற நம்பிக்கை. இந்த பெஞ்சு மனிதன் தவிர்க்க முடியாதவன் அல்ல என்று அந்த ஊர் தீர்மானித்து விட்டது. தீர்மானித்து விட்டது என்று சொல்வது கூடச் சரியல்ல. இது யாரோ நான்கு பேர் கூடி விவாதித்து எடுத்த முடிவல்ல. யாருமே நேரடியாகக் காரணமில்லாமல் எல்லாருமே அந்த முடிவுக்கு நகர்ந்து சென்றார்கள் என்றே கூற வேண்டும். அவனுக்கு யாருடனும் எழுத்து மூலமாகக் கூடத் தொடர்பு வேண்டாமென்று தோன்றிவிட்டது.

கிறிஸ்துமஸ் போய்ப் புது வருடம் வந்தது. நான் பதினைந்து நாட்கள் கழித்துத்தான் வங்கிப் பக்கம் போக நேர்ந்தது. அன்று அவன் இல்லை. அவனுக்காக அடுத்த நாள் சென்றேன். அன்றும் இல்லை. அவனை அப்புறம் காணவில்லை. எனக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்தேன். அந்த ஊர் தபாலாபீசில் விசாரித்தேன். அந்த ஊருக்கான காவல் நிலையம் கிடையாது.

இன்னும் நான்கு மாதங்கள் கழித்து நானே அந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு எனக்கு அறிமுகமானவர்களிடம் என் அறையில் இருந்த சிலவற்றைத்தான் தர முடிந்தது. “ஸால்வேஷன் ஆர்மி கடையில் கொடு, தேவைப்படுகிறவர்கள் வாங்கிக் கொள்வார்கள்” என்று சொன்னார்கள். எல்லாவற்றையும் இரண்டு பெரிய காகிதப் பைகளில் போட்டு அந்தச் சந்துக் கடைக்குச் சென்றேன். “மிக்க நன்றி” என்றார்கள். அப்போது எனக்கு அந்த பெஞ்சு மனிதன் சொன்னது நினைவுக்கு வந்தது, எனக்கு இனி கம்பளிக் கோட்டு தேவைப்படாது. “கடையைச் சுற்றிப் பார்க்கலாமா?” என்று கேட்டேன்.

“இதற்கென்ன அனுமதி? தாராளமாகப் பாருங்கள்.”

நான் துணிமணிகள் வைத்திருக்கும் இடத்திற்குப் போனேன். அவை பழைய உடைகள் தான். சலவை செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஒரு கம்பியில் கம்பளிக் கோட்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தன. என் புறங்கையை நகர்த்த அவை செங்குத்தான அலைகள் போல அசைந்தன. ஒரு கோட்டருகில் என் கை நின்றது. கருநீல நிறக்கோட்டு. கழுத்துப் பட்டையடியில் “கென்வுட்” என்று எழுதியிருந்தது.

கடையைக் கவனித்துக் கொண்டிருந்த அம்மாளிடம் அந்த கோட்டைக் காண்பித்தேன். “இது யாருடையது என்று தெரியுமா?”

“தெரியும்.”

“யார்?”

“யார் என்று தெரியாது. கிறிஸ்துமஸ•க்கு முந்தின தினம் இறந்துவிட்டான். அவன் குடியிருந்த வீட்டுக்காரர் அவனுடைய பொருள்களில் மீண்டும் பயன்படுத்தக் கூடியவையை இங்கு கொண்டு வந்து கொடுத்தார்.”

இங்கிருக்கும் பொருள்கள் எல்லாம் இறந்தவர்களுடையதா?”

“இப்போது நீங்கள் கொண்டுவந்திருக்கிறீர்களே, அப்படியும் இருக்கலாம் அல்லவா? ஆனால் எந்தப் பொருளானாலும் நாங்கள் தீவிர சுத்திகரிப்புக்குப் பிறகுதான் விற்பனைக்கு வைக்கிறோம். நீங்கள் பௌதிக மாணவரா என்று தெரியாது. ஒரு அடிப்படை உண்மை, பொருள் அழிவற்றது.”

“என்ன?”

“பொருள் அழிவற்றது, பொருளை அழித்து விட முடியாது.”

“இந்த மனிதர் பொருளில்லையோ?”

அவள் உதட்டைப் பிதுக்கினாள்.

நன்றி: தீராநதி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *