அற்பப் புழுவாகிய நான்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 5,125 
 
 

இந்த வரிகளை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில்,குற்றவுணர்வு கழுவிலேற்றியிருக்கும் நான்,மனம் சுருங்கிப் போன மனித மந்தையில் ஒரு துளி.

அலுவல் நிமித்தமாக வாரத்தில் நான்கு நாட்கள் பேருந்தில் பயணம் செய்யும்படி விதிக்கப்பட்டவன்.

பேருந்தில் ஏறியதும் ஜன்னலோர சீட்டைத் தேடி அமர்ந்து கொள்வேன் .ஜன்னலோர சீட் யாருக்குத்தான் பிடிக்காது.

நடுவில் ஸ்டேன்டிங்கில் நிறைய ஆட்களை ஏற்றுவதற்கு வசதியாக தனியார் பேருந்துகளின் இரட்டை சீட்டுகளெல்லாம்,வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் சராசரி இந்தியர்கள் ஒன்றரை பேர் மட்டுமே அமரக் கூடியது என்பதை நன்கு அறிந்திருந்தும் புஷ்டியான என் உடலைத் தளர்த்தி வசதியாக அமர்வேன். பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஜீவராசியும் பயணச்சீட்டு வாங்கியிருக்கிறது,பேருந்தில் எனக்குள்ள சகல உரிமைகளும் அதற்கும் உண்டு என்பது எனக்குத் தெரியாதென்றா நினைக்கிறீர்கள்.

முழுக்க முழுக்க என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஜன்னல் கண்ணாடியை முடுவது எனக்குப் பிடிக்காது. கேசத்தைப் பிய்த்து எறியும் காற்று,உங்களுக்கு தொந்தரவாக இருக்கிறதா என்று அருகில் இருப்பவரிடம் சம்பிரதாயத்திற்குக் கூட கேட்க மாட்டேன்.

ஒற்றை ஆளாய் அமர்ந்திருக்கையில்,கணவன் மனைவி அல்லது பெண்கள் கொஞ்சம் மாறி உட்காருங்க என்றால் முகத்தை வேகமாகத் திருப்பி ஜன்னல் வழியே பார்வையை வீசி எறிந்து, முடியாது என்பதை உடல்மொழியால் உணர்த்துவேன். ஏதாவது சொன்னால் அடுத்தடுத்து அஸ்திரங்கள் பாயும்.

காத்து வேணும்னுதான் முணு வண்டியை விட்டுட்டு இதில உட்கார்ந்திருக்கேன். ஏன் இது ஒரு வண்டிதான் இருக்கா? இஷ்டத்துக்கு உட்காந்துட்டு வரணும்னா அடுத்த வண்டில வாங்களேன்.

ஒருமுறை மாறி உட்காரச் சொல்லி கண்டக்டர் மாட்டிக் கொண்டார்.பழனியிலேர்ந்து வர்றேன்.பாதியில ஏறினவங்களுக்காக நான் முணுபேர் சீட்ல நெருக்கடியில உட்கார்ந்துகிட்டு வரணுமா? டிக்கெட்ல சீட் நம்பர் போட்ருக்கா? இல்ல நீங்க சொல்ற இடத்துலதான் உட்காரணும்னு சட்டம் இருக்கா,அப்படி இருந்ததா பஸ்சுக்குள்ள எழுதி வைக்கலாமே புகை பிடிக்கக் கூடாதுங்கற மாதிரி.

உங்க வீட்டுப் பொம்பளைக வந்தா அட்ஜஸ்ட் பண்ணி உட்கார மாட்டீங்களா?

இந்த மாதிரி அடுத்தவன் உயிரை எடுத்துத்தான் டிராவல் பண்ணணும்னு அவசியமில்லன்னு டாக்சில அனுப்பிச்சிருவேன்.

இடம் இல்லையென்று அந்த இரண்டு பெண்களும் இறங்கிப் போன பின் கண்டக்டர் கோபத்தை இஞ்சிமுரப்பா விற்பவரிடம்தான் காட்ட முடிந்தது

அப்புறம் இன்னொரு தலைவலி. படம் பார்க்க முடியாமல் நின்று கொண்டிருப்பவர்கள் மறைப்பது. கம்பியைப் பிடித்து படத்தை மறைக்கும் கையை வெட்டி விட்டால்தான் என்ன?

ஒருமுறை சுவாரஸ்யமான கட்டத்தில் மறைந்த ஒருவனை விலகி நிற்கும்படி சொன்னேன். அவன் சிரிக்காமல், நான் அங்க வந்து உட்கார்றேன். நீங்க இங்க வந்து நின்னுக்கிட்டு பாருங்க.படம் நல்லா தெரியும் என்றான்.திமிரெடுத்த நாய் என்ற என் முணுமுணுப்பு அவனை என்ன செய்து விடும்.

என்னால் தாங்கவே முடியாத என்னை எரிச்சலின் உச்சிக்கே தரதரவென இழுத்துச் செல்லும் விஷயம் ஒன்று இருக்கிறது.வீட்டில் துாங்கவே இடம் இல்லாதது போல் ஏறி உட்கார்ந்து ஐந்தாவது நிமிடத்தில் துாங்கி தோள் மேலே டங் டங்குன்னு விழுந்து உயிரை எடுப்பார்களே, அந்த நேரம் வர்ற ஆத்திரத்துல….. முதல் முறை தட்டி எழுப்பவேன்.இரண்டாவது முறை உலுக்குவேன். அப்படியும் சளைக்காத கும்பகர்ணன்களைச் சமாளிக்க ஒரு வழி வைத்திருக்கிறேன்.

சாமி வந்து ஆடி ஆடி சன்னதத்தின் உச்சத்தில் சாயும்வரை காத்திருந்து சாயும் போது டக்கென்று முன்னால் நகர்ந்து விடுவேன்.தடுமாறி விழுந்து துாக்கம் கலைந்து அசட்டுக் களையுடன் வெளிறிச் சிரிக்கும் முகத்தைக் காணும் போது குருர திருப்தி என்னுள் படரும்.

பாட்டிக்கு உடம்பு முடியவில்லையென கோயம்புத்துர் போனேன்.எல்லாம் முடிந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று ஒரு தெளிவு வந்து எழுந்து உட்கார்ந்து எப்படா வந்த? என்று கேட்டது. எல்லாம் பேரனைப் பார்த்த சந்தோஷம் என்று மாலதிக்கா சொன்னதைக் கேட்டு பாட்டிக்கு அவ்வளவு சிரிப்பு.

சரி லீவை ஏன் வீணாக்க வேண்டுமென்று இரவோடு இரவாக கிளம்பி விட்டேன். ஏன்டா வந்ததும் வராதததுமா உடனே கிளம்பணுமா தங்கிட்டு காலைல போனா என்ன என்ற அம்மாவின் பேச்சைக் கேட்டிருக்கலாமோவென்று பேருந்து நிலையத்தினுள் நுழையும்போதே தோன்றி விட்டது

திருவிழாக் கூட்டம்.நாளை முகூர்த்தம் வேறு. கள்ளைக் குடித்த குரங்கிற்கு தேள் கொட்டின கதைதான். நாலு பஸ் விட்டு ஐந்தாவது பஸ்ஸில் ஏறினேன்.ஒரு சீட் கூட இல்லை. படியில் கதவை அடைத்து உட்கார்ந்து விட்டார்கள். நின்று கொண்டே வந்தேன். துாக்கமில்லாதததால் கண்கள் பற்றி எரிந்து கொண்டிருக்க இரவு நீண்டு கொண்டே போனது.ஒரு வழியாக ஒட்டன்சத்திரத்தில் சீட் கிடைத்தது. அதுவும் ஜன்னலோர சீட்.களைத்துப் போன உடலுக்கும் மனதுக்கும் விடுதலை. பாய்ந்து சென்று உட்கார்ந்தேன்.

இருள் பிரியத் துவங்கயிருந்தது. விழித்திருந்த டீக்கடைகளையும்,வாசல் தெளித்துக் கொண்டிருந்த பெண்களையும் கடந்து விரைந்து கொண்டிருந்த பேருந்தின் ஜன்னல்கள் வழியே பீறிட்டுப் பாய்ந்தது குளிர் காற்று.

சார் சார் யாரோ யாரையோ கூப்பிட்டார்கள்.

சார் சார் லேசான உலுக்கலில் உலகில் வந்த விழுந்தேன்.

எரிந்து கொண்டிருந்த விழிகளை சிரமப்பட்டு பிரித்த பின்தான் தெரிந்தது அருகல் இருந்த பெரியவரின் தோள் மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருப்பது.

பதறியபடி விலகினேன். அவரது வெள்ளை கதர்ச்சட்டையின் தோள் பகுதியில் என் எச்சில் ஊறி நனைத்திருந்தது.

திருவிழா மேளச்சத்ததுக்குக் கூட அசைஞ்சு குடுக்காம துாங்கறீங்க. நல்ல அசதி போலருக்கு நான் செம்பட்டில எறங்கணும் அதான் எழுப்பினேன்.

சாக்கடையில் நெளிந்து கொண்டிருக்கும் என்னைச் சுமந்து விரைந்து கொண்டிருக்கிறது பேருந்து

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *