நாமதேவருக்கு உணவு ஊட்டிய ஸ்ரீபாண்டுரங்கன்!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,287 
 

நாமதேவருக்கு உணவுபரம பக்தரான உத்தவர் சகாயத்தால் குருவாயூரில் குடிகொண்டிருக்கும் குருவாயூரப்பர் நமக்குக் கிடைத்தது பெரும் பேறு. ஸ்ரீகிருஷ்ண பகவானால் பூஜிக்கப்பட்ட நாராயண விக்கிரகத்தை குரு பகவானிடமும், வாயு பகவானிடமும் சேர்ப்பித்தவர் உத்தவர். குரு, வாயு இருவராலும் ஸ்தாபிக்கப்பட்டதால், ‘குருவாயூர்’ என்று பெயர் பெற்றதாகப் புராணம் மூலம் அறிய முடிகிறது. ஸ்ரீமத் பாகவதத்தில் கண்ணன், உத்தவருக்கு உபதேசம் செய்தது ‘உத்தவ கீதை’ எனப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் உத்தரவுப்படி உத்தவர், ‘நாமதேவர்’ என்ற பெயரில் மறுபிறவி எடுத்து பக்தியை பரப்பினார் என்று புராணம் கூறுகிறது.

பண்டரிபுர நகரில் தையல் வேலை செய்யும் குலத்தில் பிறந்த தாம்சேட்டியும் அவர் மனைவி குணாபாயும் பாண்டுரங்கன் மீது அபார பக்தி உடையவர்கள். இவர்களுக்குப் பிள்ளை இல்லாத ஒரு குறை இருந்தது. தங்களது குறை நீங்க, பண்டரிநாதனைத் தினமும் தூய பக்தியுடன் ஆராதித்தனர். ஒரு நாள் குணாபாய் கனவில் பண்டரிநாதன் தோன்றி, ‘‘உனது குறை தீரும். நாளை மறு நாள் அருட் குமாரனைப் புத்திரனாக அடைவாய்!’’ என்று கூறி மறைந்தார். கனவு பற்றித் தன் கணவரிடம் மறுநாள் சொன்னாள் குணாபாய்.

3&வது நாள் நீராடுவதற்காக சந்திரபாகா நதிக்குச் சென்றார் தாம்சேட்டி. நீராடிவிட்டு, நதிக்கரையில் அமர்ந்து பகவானின் திருநாமத்தை ஜபிக்கத் தொடங்கும்போது குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அந்த இடத்துக்கு விரைந்தார். அங்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று கிளிஞ்சலின் மீது படுத்து அழுது கொண்டு இருந்தது. அந்தக் குழந்தையை (ஸ்ரீகிருஷ்ணரின் ஆணைப்படி மறு ஜன்மம் எடுத்த உத்தவர்) வாரி எடுத்த தாம்சேட்டி, குணாபாயிடம் கொடுத்து நடந்ததைக் கூறினார். குணாபாய் எல்லையில்லா மகிழ்ச்சியு டன் குழந்தையை அணைத்து உள்ளம் மகிழ்ந்தாள். எல்லாம் பாண்டுரங்க னின் கருணை என்று எண்ணிக் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்தனர். குழந்தைக்கு ‘நாமதேவன்’ என்று பெயர் சூட்டினர்.

ஒரு நாள் தாம்சேட்டி முக்கியமான வேலையாக வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. தன் கணவர் ஊரில் இல்லாததால், பண்டரிநாதனின் நிவேதனத்தை யாரிடம் கொடுத்தனுப் புவது என்று யோசித்தாள் குணாபாய். ‘நான் கோயிலுக்குப் போய் வருகிறேன்!’ என்று கூறி, அம்மாவிடமிருந்து நிவேதனத்தைக் கேட்டு வாங்கிய நாமதேவர், ‘ஹரஹர விட்டல… ஜெய ஜெய விட்டல’ என்று பாண்டுரங்கனைத் துதித்தபடி நடந்தான். அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களது பந்து தவறு தலாக நிவேதனத்தில் விழுந்தது. இதை கவனித்த குணாபாய், ‘‘இது அசுத்தமாகி விட்டது. வேறு நிவே தனம் தருகிறேன்!’’ என்றாள். நாமதேவரோ, ‘‘அதெல்லாம் வேண்டாம். சுவாமி ஏற்றுக் கொள்வார்!’’ என்று கூறி பந்தைச் சிறுவர்களிடம் கொடுத்துவிட்டு அந்த நிவேதனத்துடன் கோயிலுக்குச் சென்றார்.

ஆலயத்தில் இவரைத் தவிர வேறு எவரும் இல்லை. கர்ப்பக்கிரகத்துக்குச் சென்று பண்டரிநாதனை கண்குளிர தரிசித்து நிவேதனத்தை பகவான் முன் சமர்ப்பித்தார்.

‘சுவாமி சாப்பிடுவதை யாரும் பார்க்கக் கூடாது!’ என்று கேள்விப்பட்டிருந்ததால் சற்று நேரம் கண்ணை மூடி உட்கார்ந்தார். பிறகு கண்ணைத் திறந்தபோதும் நிவேதனம் அப்படியே இருந்தது. பாலகனுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ‘பந்து விழுந்து அசுத்தமானதால் சுவாமி சாப்பிடவில்லை போலிருக் கிறது. அம்மா சொன்னதைக் கேட்காமல் வந்தது தப்பு!’ என்று அழுது அரற்றினார். பண்டரிநாதனிடம் மன்னிப்புக் கேட்டு, பீடத்தில் முட்டி மோதிக் கொண்டார்.

குழந்தை நாமதேவரின் கதறலுக்கு மனமிரங்கிய பாண்டுரங்கன் பிரசன்னமானார். நாமதேவருக்கு அப்போது ஏற்பட்ட சந்தோஷம் அளவிட முடியாது. பாண்டுரங்கன், நாம தேவரிடம் ‘‘இருவரும் சேர்ந்து உணவருந்தலாம்’’ என்றார். அதன்படி நாமதேவர் பாண்டுரங்கனுக்கு அமுதூட்ட; பாண்டுரங்கனும் தமது திருக்கரத்தால் நாமதேவருக்கு அமுதூட்டினார். எத்தனை பெரும் புண்ணியம் செய்தது அந்தக் குழந்தை!

பிறகு பாண்டுரங்கன், நாமதேவரின் கைகளிலும் மார்பிலும் சந்தனம் பூசினார். வெண்பட்டுப் பீதாம்பரத்தை நாமதேவருக்கு அணிவித்தார். உடனே நாமதேவர் தாம் உடுத்தியிருந்த துணியை எடுத்து பாண்டு ரங்கனுக்குப் பரிவட்டம் சாற்றினார். பாண்டு ரங்கன் மீண்டும் சிலையானார். ‘‘ஜெய ஜெய விட்டல… பாண்டுரங்க விட்டல’’ என்று கூறிக் கொண்டு வீட்டுக்கு வந்த நாமதேவர், நடந்தவற்றைத் தன் தாயிடம் கூறி னார். பகவான் அளித்த பீதாம்பரத்தையும் காட்டினார்.

குணாபாய் ஆச்சரியம் தாங்காமல் மகனை வாரி அணைத்து உச்சி முகர்ந்தாள். தாம்சேட்டி வந்தவுடன் நடந்ததைக் கேள்விப்பட்டார். மகனிடம், ‘பகவானை எனக்கும் காட்டு!’ என்று கேட்டார். அதற்குச் சம்மதித்த மகன் உடனே பெற்றோருடன் கோயிலுக்குச் சென்றார்.பாண்டுரங்கனை அமுது உண்ண அழைத்தார் நாமதேவர். ஆனால், பாண்டுரங்கன் நாம தேவருக்கு மட்டும் கேட்கும்படி, ‘‘உன் பெற் றோருக்கு தரிசனம் கிடைக்காது. உனக்கு மட்டும் தான்!’’ என்று கூறினார்.

‘‘அப்படியானால், உன் பக்தனான நான் கூறிய வார்த்தைகள் பொய்யாகி விடும். உன் சுந்தர ரூபத்தை என் தாய், தந்தையர் தரிசிக்க அருள் செய்!’’ என்று பாண்டுரங்கனிடம் வேண்டினார் நாமதேவர். பக்தனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட ஸ்ரீபாண்டுரங்கன், உடனே பிரசன்னமானார். நிவேதனத்தை நாமதேவர் பாண்டுரங்கனுக்கு ஊட்ட, பாண்டுரங்கன் நாமதேவருக்கு ஊட்டினார். பாண்டுரங்கன் மறைந்ததும், நாமதேவர் எல்லோரது வணக்கத்துக்கும் உரியவரானார். இதைக் கண்டு உள்ளம் பூரித்தனர் பெற்றோர். தாம்சேட்டி, தன் மனைவி மற்றும் குமாரனுடன் நாம பஜனை செய்தபடி வீட்டுக்குச் சென்றார்.

நாமதேவர் வாழ்நாள் முழுவதும், இல்லறத்தில் இருந்து கொண்டே பண்டரிநாதனை பஜனை செய்வதில் ஈடுபட்டுக் காலம் கழித்தார். பகவத் சேவை செய்தார். கலியுகத்தில் மக்களை நல்வழிப்படுத்தக் கூடியது நாம சங்கீர்த்தனமே என்று மக்களுக்கு எடுத்துரைத்தார்.

– கே. கௌரி, சென்னை-28 – நவம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *