அறமற்ற மறம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 13,231 
 
 

டிசம்பர் காலை பத்துமணிக் குளிரில் கஸ்தூர்பா ரோடு குளிர்ந்து கிடந்தது. போன வருஷம் இதே நேரம் இந்த தில்லிக்கு வந்த போது நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று இருந்தது. ” இந்த நவம்பர்ல, சரியான குளிர் சமயத்ல வந்து சேர்ந்திருக்கே. நல்லதுதான் போ. அடுத்த வின்டருக்கு நீ தயாராயிடுவே ” என்று சாமித்துரை அவன் வந்த புதிதில் சொல்லிச் சிரித்தார். வந்த ஒரு வாரம் அவர் கூடத்தான் அவன் தங்கியிருந்தான். அப்புறம் சரோஜினி நகரில் ஒரு பஞ்சாபி வீட்டில் தங்க இடம் கிடைத்தது. அவன் கூட கடைகளுக்கு வந்து ஸ்வெட்டர், மப்ளர், ரஜாய் என்று குளிரை இரவும் பகலும் எதிர்த்துப் போராடக் கூடிய கவசங்களை வாங்கிக் கொடுத்தார். ஒரு வருஷப் பழக்கத்தில், அதே தில்லி அவனை மயக்கிப் பிடித்துக் கொண்டு விட்டது.

நீலகண்டன் காலை எட்டிப் போட்டு நடந்தான். பத்து மணிக்கு அவன் ராமன் வீட்டை அடைந்து விடவேண்டும் என்றிருந்தான். ஆனால் சரோஜினி நகர் பஸ் டிப்போவில் பஸ் பிடிக்கும் போதே நேரமாகி விட்டது.. அவன் வரப் போவது பற்றி அவன் ராமனிடம் முன் கூட்டியே சொல்லவில்லை. ஒரு வருஷத்தில் அவர் கூட அவனுக்கு இருந்த நெருக்கம் அதிகமாகி விட்டது. எதற்காக இந்த மாதிரியான ஒட்டுதல்? அவனும் தஞ்சாவூரிலிருந்து வந்தவன் என்றா? அப்படியென்றால் அவருக்கு தில்லியில் உள்ள முக்கால்வாசித் தமிழர்கள் நெருக்கமானவர்களாக இருக்க வேண்டும்.

அவனை மாதிரி ராமனை விரும்புவர்கள் பலர் இருக்க வேண்டும் என்று நினைத்தபடி நீலகண்டன் நடந்தான். அவரது எழுத்தின் மேல் மோகம் கொண்டவர்கள் அவர்கள் என்று. அவனுக்குத் தெரிந்ததுதான். அவர் எப்போதும் விரும்பத் தக்க மேதை. ராமனை அவன் அவரது ஆபிஸில் நாலைந்து முறை சந்தித்திருக்கிறான். பார்வையிலும்,பேச்சிலும்,மற்ற செய்கைகளிலும் அவரது அலுவலகத்தில் உள்ளவர்கள் அவரிடத்தில் காண்பிக்கும் மரியாதையையும், நேசத்தையும் நேரடியாகப் பார்த்திருக்கிறான். யாரிடமும் முரண்பட்டு முரட்டுத்தனமாக போரிடும் சுபாவம் அவரது அல்ல. இயல்பிலேயே ‘ சரிதான் ‘ என்று ஒதுங்கிப் போகும் சுபாவம் கொண்டவர் ராமன் என்று ஒரு தடவை சாமித்துரை அவனிடம் சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது.

கர்ஸான் ரோடில் இருந்த பலமாடிக் கட்டிடங்கள் ஒன்றில் ராமன் குடியிருந்தார். லிப்டில் ஏறி அவரது வீட்டை அடைந்து காலிங் பெல்லை நீலகண்டன் அழுத்தினான். கதவைத் திறக்க சற்று நேரம் ஆயிற்று. ராமன்தான் வந்து கதவைத் திறந்தார்.

அவனைப் பார்த்ததும் ” நீலுவா, வா, வா, பார்த்து ரொம்ப நாளாச்சே! ” என்று வரவேற்றார்.

வழக்கத்துக்கு விரோதமாக வீடு ‘ கல் ‘ லென்று நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது.

” எல்லாரும் வெளியே போயிருக்காளா? ” என்று நீலகண்டன் அவரை விசாரித்தான்.

” ஒ, நீ இந்தப் பக்கமே வராததாலே, விஷயம் தெரியாதோ ? மாமியோட அண்ணா பொண்ணுக்கு கும்பகோணத்துல கல்யாணம்னு எல்லாரும் கிளம்பிப் போயிருக்கா . போன வாரம்தான் போனா. பொங்கலுக்கு மின்னாலேதான் திரும்பி வருவா ” என்றார் ராமன். “அப்படியா ? ” என்று கேட்டபடி நீலகண்டன் ஹாலில் போட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டான். ” இங்க உட்கார்ந்தாதான் பாந்தமா இருக்கு ” என்று ராமனைப் பார்த்துச் சிரித்தான்.

” வரவால்லாம் சோபால உட்கார்றதுதான் சௌகரியமா இருக்குன்னு போய் விழறா. எதுக்கு இந்த கண்டான் முண்டானை நடு ஹால்ல பரத்தி வச்சிருக்கான்னு நினைக்கிறா. எனக்கு இந்த ஊஞ்சல்ல உட்கார்ந்துண்டா, இல்ல படுத்துண்டா ,இந்த இந்திரபிரஸ்தம் மறந்து , மறைஞ்சு போய் தஞ்சாவூர் ஞாபகம் வரது.” என்றார் ராமன். அவர் குரலில் ஒலித்த ஏக்கத்தை நீலகண்டன் உணர்ந்தான்.

” நீங்களும், மாமி, குழந்தைகளோட ஊருக்குப் போயிருக்கலாமே. ஒரு பத்து இருபது நாள் இந்த நடுக்குகிற குளிர்லேந்தும் தப்பிச்சிருக்கலாம். தஞ்சாவூர்லேர்ந்து ஒரு வாரம் மெட்ராஸ் பக்கம் போய் நாலு சபாக்களுக்கும் போயிட்டு வரலாம்” என்றான் நீலகண்டன் பரிவுடன்.

” மெட்ராஸ் சபாக்கா ? எதுக்கு? பேஷா மூக்கைப் பிடிக்க தின்னுட்டு வரதுக்கா? என்று ராமன் சிரித்தார்.” யாரோட சமையல் , என்ன பண்ணிப் போடறாங்கற லிஸ்டைப் பாத்துட்டுன்னா சபாக்களுக்கு கூட்டம் அலை மோதறதாம்! திருவள்ளுவர் மெட்ராசுக்கு வந்து பார்த்தார்ன்னா , என்ன இது திருக்குறளையே மாத்திட்டான்களேன்னு வெலவெலத்துப் போயிடுவர் ”

நீலகண்டன் உரக்கச் சிரித்தான்.

“கச்சேரிகளும் கூட நாலைஞ்சு விஷயம் தெரிஞ்சவாளோடதைத் தவிர மத்ததெல்லாம் ஏண்டா கேக்கறோம்னு ” ஆயிடறது. யூ டோன்ட் மிஸ் மச் ” என்றார் ராமன்.

” நீங்க அப்பவே சொன்னேளே காக்காய்கள் ஒண்ணோட மூக்கிலே இன்னொன்னு மூக்கை விட்டு குழற்ரப்போ கேக்கற சப்தம்னு . அது மாதிரியா ..? ” என்று நீலகண்டன் மறுபடியும் சிரித்தான்.

” காலம் மாறிண்டே இருக்குன்னு சொன்னாலும், சில விஷயங்கள்ல காலம் மாறாமதான் இருக்கு.”

” மனுஷா மாறிண்டே வரா, அந்தந்த சமயத்துக்கு ஏத்தாப்பிலே ” என்றான் நீலகண்டன். ” போன வாரம் விஜய மார்த்தாண்டன் அவரோட பத்திரிகைல உங்களைப் பத்தி மறைமுகமா கிண்டல் பண்ணி கதை எழுதி இருக்கார் . முதல்ல எனக்கு ஒரு மாதிரி எரிச்சலா இருந்தது. ரெண்டு மூணு நாள் கழிச்சு மறுபடியும் படிச்சேன். அப்ப அவர் மேல பரிதாபம்தான் வந்தது.”

“அப்படியா ? ” என்று கேட்டார் ராமன்.

“பெண்கள் மேல நீங்க வச்சிருக்கற அபரிமிதமான அன்பையும், மரியாதையையும் கிண்டல் பண்ணி எழுதியிருக்கார் சந்தடி சாக்கில தஞ்சாவூர் வசவுகளை தாராளமா யூஸ் பண்ணிண்டு கதை போறது. உங்க எழுத்துக்களை அவரால ஜீரணிச்சுக்க முடியலைன்னு நன்னாவே தெரியறது. ஐ மீன் யுவர் மாஸ்டரி ஓவர் லாங்வேஜ், அண்ட் கன்சர்ன் பார் விமென்… அவரை ரொம்ப சிரமப் படுத்தறதோண்ணு எனக்கு சந்தேகம்”

“அவரே ரொம்ப நன்னா எழுதறாரே ! திடீர்ன்னு என் மேலே என்ன கோபம்? ” என்று ஒரு குழந்தையைப் போல ராமன் கேட்டார்.

நீலகண்டனுக்கு வியப்பாக இருந்தது. எவ்வளவு உயர்ந்த மனது இவருக்கு ! இந்தப் பாராட்டும் மனம் எதிராளியிடம் இல்லை என்பதைக் கூட இவர் சட்டை செய்வதில்லை என்பது எதைக் காண்பிக்கிறது ?

” ஒரு லெவெல்ல தனக்கு முன்னோடியா இருந்தவாளுக்குத் தெரிஞ்சதை விட தனக்குத்தான் ஜாஸ்தி தெரியும்னு , இப்பல்லாம் எழுதறவனுக்கு ஒரு வியாதி , ஒரு போபியா , வந்துடும் போல இருக்கு” என்றான் நீலகண்டன்.

” நீலு, ஒவ்வொரு தலைமுறையும் .முன்னதை விட கெட்டிக்காரத்தனமாவும், அறிவு ஜாஸ்தியாயும்தான் வளர்றது. அது இயற்கை. ஆனா எப்பவுமே, ஒருத்தன் தன் காலத்தில,சமரசம் இல்லாம, சமரசம் பண்ணிக்காம, தனக்குத் தோணினதை , சரின்னு பட்டதை செய்யறானாங்கறதுதான் முக்கியம். ” என்றார் ராமன்.

நீலகண்டன் அவரை உற்றுப் பார்த்தான். இவர் என்ன சொல்கிறார் ? விஜயமார்த்தாண்டன் இலக்கியத்தைப் பற்றி அலுக்காமல் ஊர் ஊராய்ச் சென்று கூட்டங்கள் போட்டுப் பேசுவதும், பக்கம் பக்கமாக எழுதுவதுமாக இருந்தாலும், சினிமாப் பாட்டு எழுதுகிறேன் என்று போய்த் தஞ்சமடைந்ததை சமரசம் நிரம்பிய செயல் என்கிறாரா ? ஆனால் நீலகண்டன் நேரடியாக இப்போது கேட்டால் ராமன் அவனைப் பார்த்துச் சிரிப்பார். அவ்வளவுதான்.

” நீங்க பொண்களை பூஜித்து எழுதறது, அவரை ரொம்ப உறுத்தறது. கலவரப் படுத்தறது. அந்தக் கதைல, கெட்டிக்காரத்தனமா உங்களை ரிடிக்யூல் பண்ண ரொம்பவும் முயற்சி பண்ணிருக்கார்.யாரை திருப்திப் படுத்தறதுக்காக இதெல்லாம்னு தெரியலை.” என்றான் நீலகண்டன்.

ராமன் சிரித்தார்.” நீ சொல்றதை கேக்கரச்சே, எனக்கு கும்பகோணத்துல நான் காலேஜில படிச்சிண்டு இருந்தப்போ நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வரது. நான் தங்கி இருந்த ஆத்துக்கு எதிர்த்தாப்பில ரோடுக்கு அந்தப் பக்கமா ஒரு சுவரை கட்டி வச்சிருந்தா. உள்ளே இருந்த தோப்புக்கு வேலி போல இருந்துண்டு இருந்தது அந்த சுவர்..ஒரு நா. நான் வாசல் திண்ணைல உட்கார்ந்து வேடிக்கை பார்த்துண்டு இருந்தேன்.அவ்வளவா நடமாட்டமில்லை. திடீர்னு பாத்தா, ஒரு சின்ன பையன் , ஏழெட்டு வயசு இருக்கும், அந்த சுவத்து மேல ஏறப் பாக்கறான்.அந்த சுவர் அவனை விட ஒரு மடங்கு ஒன்றரை மடங்கு உசரமா இருந்தது. . விடாம காலை மாத்தி மாத்திப் போட்டு ஏறப் பாக்கறான். பத்து நிமிஷமாச்சு, பதினஞ்சு நிமிஷம் ஆச்சு, அந்தப் பொடியன் சளைக்கலை. மாங்கு மாங்குன்னு முயற்சி பண்ணிண்டே இருக்கான் . ம், ஹூம்,அவன் பாச்சா ஒண்ணும் பலிக்கலே. சட்டுன்னு பண்ணிண்டிருந்த வேலையை நிறுத்திட்டான். ரெண்டு நிமிஷம் சும்மா நின்னுண்டு இருந்தான். அப்புறம் டிராயரை கழட்டி அம்மணமா நின்னுண்டு அந்த சுவர் மேல டிராயிங் போடற மாதிரி வளைஞ்சு வளைஞ்சு ஒண்ணுக்கு போனான் . அப்புறம் டிராயரை மாட்டிண்டு சுவரைப் பாத்து சிரிச்சிண்டே போயிட்டான்.”.

நீலகண்டனுக்கு விஜயமார்த்தாண்டனின் கதையை இரண்டாவது தடவையாகப் படித்த போது தனக்கு ஏற்பட்டதாகச் சொன்ன பரிதாப உணர்ச்சி மீண்டும் மனதில் பரவிற்று.

” நீலு, உனக்கும்தான் தெரியுமே. கு.ப.ரா., என் ஆசான் , பொண்களைப் பத்தி பரிவோட எழுதினார். அது பொண்களை அடக்கி வச்சிருந்த காலம், பொண்கள் மனசைக் காட்டிக் கொள்ளக் கூடாதுன்னு அப்படி ஒரு கட்டு, திட்டம் அப்போ. அவா மேல ஒரு பரிவோட , அன்போட அவா பிரச்சனைகளை அவர் எழுதினார். அதுக்காக சுத்தி இருந்த எழுத்தாள கனவான்களுக்கு அவர்கள் வேலை பார்த்த பத்திரிகைக் காரர்களுக்கு அவர் மேல அப்படி ஒரு கோபம். என்ன பண்ணறது, அவர் பார்த்த , சந்தித்த அனுபவங்களைத்தானே அவர் எழுத முடியும். என் வரைக்கும் நான் பிரமிக்கத் தக்க பொண்களைப் பார்த்தேன், பார்க்கறேன் . அதனாலே அவாளைப் பத்தி எழுதறேன். எனக்குக் கிட்டின அம்மா, அக்கா, எதிராளாத்து பொண்கள் அப்படி. உனக்கு அப்படி கிடைக்கலே, நீ பேசினதில்லே, பார்த்ததில்லேன்னா என் மேலே கோபிச்சுண்டு என்ன பிரயோஜனம் ? ” என்றார் ராமன்.

அப்போது காலிங் பெல் ஒலித்தது. எழ முயன்ற ராமனைத் தடுத்து விட்டு, நீலகண்டன் சென்று வாசல் கதவைத் திறந்தான்.

“வாங்கோ, வாங்கோ ” என்று நீலகண்டன் வரவேற்றான்.

“அட, நீ என்ன பண்ணறேய்யா இங்கே ? ” என்று கேட்டபடி உள்ளே சாமித்துரை வந்தார்.

ராமன் எழுந்து அவரை வரவேற்றார்.

சாமித்துரை ஊஞ்சல் அருகே இருந்த மோடாவில் உட்கார்ந்து கொண்டார்.

” என்ன நீலு, போன வருஷத்துக்கு இந்த வருஷம் குளிர் பரவாயில்லையா?” என்று கேட்டார் சாமித்துரை.

” ஐ லவ் டெல்லி, ஐ லவ் திஸ் விண்டர் ” என்றான் நீலகண்டன் சிரித்துக் கொண்டே.

” அப்ப இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு கழகம் ஆரம்பிச்சு கூட்டம் போட்டுருவேன்னு சொல்லு”

” ஸார், நீங்க என்ன சொல்றேள் ? என்று கேட்டான் நீலகண்டன் சற்றுக் குழப்பத்துடன்.

” அட, அதுதானேய்யா நம்ம ஊர்ல நடந்துக்கிட்டு இருக்கு. வர்க்கலைலேர்ந்து வர்றவன் கன்யாகுமரிக்குப் போய் பத்து பேரைக் கழுத்தைப் பிடிச்சுக் கட்டிக்கிறான். நாமெல்லாம் ஒண்ணுங்கிறான் . ஒரே ஊர்க் காரங்கன்னு கொடி பிடிக்கிறான். நம்ம க்ரூப்ப பத்தி நாமாதான பேசணும்கிறான். நீயும் தஞ்சாவூர்லேர்ந்து டெல்லிக்கு வந்தவன்தானே. நாலு பேரைப் பிடிச்சு இங்க க்ரூப்புன்னு சத்தம் போட்டா டெல்லியிலே நீ பெரிய சண்டியரா ஆயிடலாம் ”

நீலு சிரித்தான். ” அப்படியா சொல்றேள் ? ”

சாமித்துரையும் சிரித்தபடி ” கொஞ்சம் பொறு, சொல்றேன் ” என்று ராமன் பக்கம் திரும்பினார். ” நேத்த சுப்புணியை க்ருஷி பவன்ல பாத்தேன். அவன் வேலை முடிஞ்சதும், என்னையும் அழைச்சிண்டு அவன் ஆபீஸுக்குப் போனான். ஸ்காட்லாந்து போயிட்டு நாலு நாள் மின்னேதான் வந்தேன். இந்தா , இதை எடுத்துண்டு போன்னு கொடுத்தான். பென் நெவிஸ்னு முப்பது வருஷம் ஊறின சரக்குன்னு குடுத்தான். நீர்தான் ஆத்துல யாரும் இல்லே, ஊருக்குப் போயிட்டான்னு முந்தா நேத்தி போன்ல சொன்னீரே , சரி குளிருக்கு இதமா ,தனியா இருக்கற மனுஷருக்கு ஒரு கம்பனி கொடுப்போமேன்னு வந்தேன் ” என்று கையில் இருந்த பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்தார்.

ராமன் மூன்று தம்ளர்களையும், ஐஸ் கட்டிகளையும், தண்ணீர் பாட்டில்களையும் உள்ளே சென்று எடுத்து வந்தார்.

” நீலு, உனக்கு இந்த தீர்த்தப் பழக்கம் எல்லாம் உண்டா? ” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் சாமித்துரை.

” நான் ஷிவாஸ் ரீகல்தான் சாப்பிடுவேன்! ” என்றான் நீலகண்டன் கேலியாக.

” அடி சக்கை . போன மாசம்தான் படிச்சேன் ஒரு தமிழ் இலக்கியப் பத்திரிகைல அதோட ஆசிரியர் எழுதியிருக்கார்..தமிழ் எழுத்தாளர்கள் இலக்கிய கூட்டம்னு முதல்ல சேருவா. அப்புறம் எல்லாரும் சேர்ந்து குடிக்க ஆரம்பிச்சப்பறம் பேசறேன்னு ஆரம்பிப்பாளாம். அவா குடிக்கிற தண்ணி நாத்தத்தை விட மோசமா பேசி சண்டையில முடியும்னு.”

” அப்போ அவர் குடிக்கற ஆசாமி இல்லையா ? ” ” யார் சொன்னா ? அதெல்லாம் ஒண்ணும் இல்லே அவர் தனியா ஒண்ணு ரெண்டு பேரோட மட்டும் சேர்ந்துண்டு டீச்சர்ஸ் வாங்கி அடிப்பாராம். நீ அவர் க்ரூப் ஆள் போல இருக்கு ” என்றார் சாமித்துரை. ” எப்படியாவது என்னை ஒரு க்ரூப்பிலே மாட்டி விடறதா இன்னிக்கு நீங்க தீர்மானம் பண்ணிண்டு வந்திருக்கேள் இல்லையா ? ” என்றான் நீலகண்டன்.

” அப்பதானய்யா கல்லை விட்டு எறியறது யாரு, எறியச் சொன்னது யாருன்னு கண்டுபிடிக்க முடியாம இருக்கும் ? ”

“நாங்க அதைப் பத்தித்தான் பேசிண்டிருந்தோம் ” என்றான் நீலகண்டன். பிறகு ,சாமித்துரையிடம் விஜயமார்த்தாண்டன் கதையைப் பற்றியும், ராமன் சொன்ன சின்னப்பையன் கதையையும் நீலகண்டன் விவரித்தான்.

சாமித்துரை ராமனைத் தலையோடு கால் வரை பார்த்தார்.

“ராமன், உம்மைக் கண்டாலே எனக்கு ஆச்சரியமா இருக்கு. அவன் மாஞ்சு மாஞ்சு பக்கம் பக்கமாய் எழுதினதை, ஒரு சின்னப் பையனையும் சுவரையும் வச்சு நாலு வரியிலே விளாசி …பெரிய எம்டன்யா நீர் ! ” என்று ராமனைப் பார்த்துச் சிரித்தார்.

ராமன் தன் கையிலிருந்த விஸ்கியின் மணத்தை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

‘”நம்மூர் சரக்குல, ஏன் இந்த மாதிரி ஒரு ப்ளசன்ட் ஸ்மெல் வரதில்லே ? ” என்று கேட்டார் ராமன்.

“முப்பது வருஷமான்னா ஊறப் போட்டிருக்கேன்னு சொல்றான். நீர் கதையை ஊறப் போட்றீம். அவன் விஸ்கியை பண்ணறான் ..” என்றார் சாமித்துரை.

“என்ன இருந்தாலும் பாரின் சாமான்னா , அதான் தரமே வேறதான்” என்று சிரித்தான் நீலகண்டன்.

“இந்த மோகம்தான்யா, என்னென்னமோ பண்ணச் சொல்றது. ‘ ஜூ ‘ வுல கூட பாத்திருக்காத ஓநாயை நம்ப லிங்கராஜூ கதாநாயகனா வச்சு கதை எழுதினான் . என்னைய்யா இது , ஏற்கனவே அமெரிக்கால ரொம்ப வருஷத்துக்கு முன்னாலயே இந்தக் கதையை எழுதிட்டானேன்னு சொன்னேன். நீ தமிழ் நாட்டில பெரிய யதார்த்த எழுத்தாளர்னு நீயும் சொல்லிக்கிறே, மத்த எல்லாரும் வேறே சொல்றான்கள் நீ எப்ப , எங்கேய்யா ஓநாயை பார்த்தே ? எப்பவாவது பார்த்திருக்கியான்னு கேட்டேன். அதில ஆரம்பிச்சது கலாட்டா. பெரிய கும்பலே சேர்ந்து என்னைத் திட்ட ஆரம்பிச்சு, கைகலப்பு நடக்காத குறைதான்.

“திருட்டுக்கு ஆதரவா கும்பலா? ” என்று நீலகண்டன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

“எல்லாம் பயம்தான். அடுத்தது நம்ப மேலே கையை வச்சிடுவானோன்னு…”என்று சாமித்துரை சிரித்தார்.

” சாமித்துரை சொல்றது ரொம்ப சரி. நீலு, நாப்பது வருஷத்துக்கு மின்னே நடந்ததை நீ கேள்விப் பட்டிருக்கலாம். எங்கேயாவது படிச்சிருக்கலாம். சாமித்துரை அதை நேருக்கு நேரா பாத்தவர். நாம நல்லவன், சிநேகிதன், பொறுப்பானவன்னு நம்பி பழகிண்டு இருந்தவன்கள் போட்டுண்டு இருந்த சட்டைகள் கழண்டுண்டு கீழே விழுந்தா , பாம்பு, நட்டுவாக்களி, தேள்ன்னு மாறி சீறிண்டு வரான்கள்.. சாமித்துரைதான் ஒண்டியா நின்னு அடிச்சு துவைச்சு போட்டார் அன்னிக்கு அதுகளை ” என்றார் ராமன்

“அதுகள் இப்ப என் கிட்டே வரப் பயந்துண்டு , உங்களை மாதிரி ஆசாமிகளைப் பாத்து விஷமா கக்கிண்டு இருக்கக் கிளம்பி இருக்கே ” என்றார் சாமித்துரை.

” யாரைச் சொல்றேள் ? ” என்று கேட்டார் ராமன்.

” இப்ப லிங்கராஜூ நாலைஞ்சு புது ஆட்களைச் சேர்த்துண்டு விஷமம் பண்ண ஆரம்பிச்சிருக்கான். அவனுடைய பழைய பிரண்ட்ஸ் எல்லாம் கட்சி, அரசியல், கவர்ன்மன்ட் கம்பனில சேர்மன் அப்படீன்னு போய் சௌகரியமா செட்டில் ஆயிட்டான்கள். லிங்கராஜூ இப்ப தன் கைக்குள்ள வச்சிண்டு இருக்கற ஒரு முக்கிய ஆள் நம்ம விஜயமார்த்தாண்டன். ராமன், உங்களுக்குத்தான் தெரியுமே, சின்ன வயசிலேயே விஜயமார்த்தாண்டன் கிட்ட அப்படி ஒரு படிப்பு, அயர அடிக்கற எழுத்து எல்லாம் இருந்துதுன்னு . ஆனா இப்ப அந்த மேதமை எல்லாம் விருதாப் பேச்சா ஓங்கி ஒலிச்சுண்டு இருக்கு. எனக்கு இந்த ரெண்டு பேர்ல யார் யாரை அதிகாரம் பண்ணறான்னு சந்தேகமாவே இருக்கு. நாம விஜயமார்த்தாண்டனோட படிப்பை , எழுத்து மேதைமையை பத்தி எல்லாம் சந்தேகப் படற மாதிரி, திடீர்னு அவன் தமிழ்ல எழுத்தாளர்களிலேயே லிங்கராஜூ தான் தமிழ் இலக்கிய எவரெஸ்ட் என்கிறான்.. ரண்டு பேரும் உம்ம கிட்ட வரும்போது ஒரு குரல் மாதிரி நமக்கு கேக்கறது. ஒருத்தன் பேட்டி குடுக்கறேன்னு சொல்றான். இன்னொருத்தன் அதே விஷயத்தை தன் பத்திரிகையிலேயே எழுதறான், ராமனோட எழுத்து தளுக்கா இருக்குன்னு. உளர்றான். தளுக்குன்னா என்னடா புடுங்கின்னு யாரும் கேக்கலை இதுவரைக்கும். தாசின்னா தளுக்கு பண்ணுவா. ராமன் அப்படீங்கறையா ? சினிமாக்காரன் கூடப் போயிண்டு, அவனுக்கு சாமரம் வீசிண்டு, மாஞ்சு, மாஞ்சு புகழ்ந்துண்டு அவன்கிட்ட இல்லாததை எல்லாம் பாத்துட்டதா இழைஞ்சுண்டு..நாலு சினிமாப் பாட்டு எழுதணும்ங்கிறதுக்காக தளுக்கும் மினுக்கும் பண்ணறது யாரு? ராமனா?” என்றார் சாமித்துரை, சற்று உரத்த குரலில். பிறகு கையில் இருந்த தம்ளரை வாய்க்கு அருகே கொண்டு சென்று, நிதானமாகப் பருக ஆரம்பித்தார்.

” ஆமா, நானும் பாத்தேன். ராமனுக்கு நாவல் எழுதத் தெரியாதுன்னு சொல்றா. ஒரு படி மேல போய், ராமனோட நாவலை எல்லாம் அடுத்த செஞ்சுரியிலதான் மதிப்பு போட முடியும்கிறார் இன்னொருத்தர்.. ஏதோ போனாப் போறதுன்னு பிச்சை போடறது மாதிரி அவர் சிறுகதைகள் பெட்டர்னு ரெண்டு பேரும் சொல்றா. என்ன பொறாமை ! என்ன புழுக்கம் ! ” என்று நீலகண்டன் சொன்னான்.

” நான் ஏழெட்டு வருஷத்துக்கு மின்னே ஒரு தடவை மெட்ராசுக்கு போயிருந்தப்போ விஜூன்னு ஒருத்தரைப் பார்த்தேன். ரொம்ப இண்டரெஸ்டிங் கேரக்டர். செய்ய முடியாதுன்னு ஒரு காரியம் அந்த ஆசாமி கிட்ட கிடையாது. இளகின சுபாவம். தானாப் போய் உதவற குணம் உங்களுக்குத்தான் தெரியுமே, இந்த லிங்கராஜூ ஒலகத்து சோகங்களை எல்லாம், தானே தாங்கிண்டு இருக்கற மாதிரி ஒரு சோக மூஞ்சியை வச்சிண்டு இருப்பன். அவன் கதைகள்ள எழுதற சோகத்தை மூஞ்சில பாக்கறோமா இல்லே மூஞ்சில வர்ற சோகத்தை கதைகள்ள பார்க்கறோமான்னு எனக்கு எப்பவும் சந்தேகம் வரும். விஜூவும் அப்பப்போ எழுதறவர்தான். அதனாலதான் லிங்கராஜூ கூட பழக்கம் ஏற்பட்டிருக்கு. பழகினவன் தன் கஷ்டம்னு போய் விஜூ கிட்ட சொல்ல, அவர் இவன் குழந்தைகள் படிப்புக்கு, மாதா மாதம் பணம் கொடுத்திண்டு வந்திருக்கார் . ஒவ்வொரு தடவையும் எப்படியும் பணத்தைத் திருப்பிக் குடுத்திடறேன்னு இவன் சொல்லுவானாம். திருப்பிக் குடுக்கணும்னு நான் தரலை ஸார்ன்னு அவர் சொன்னாலும், லிங்கராஜூ அதையே சொல்லிண்டு இருப்பானாம். நாலஞ்சு வருஷத்தில லிங்கராஜுவோட பசங்க படிச்சுட்டு பெரியவன் வேலைக்கு போயிட்டான். அடுத்தவனும் படிப்பை முடிக்க இருந்தான். அப்ப இந்த விஜூ தன்னோட நாவல் ஒண்ணை வெளில கொண்டு வறதா ஏற்பாடெல்லாம் பண்ணிண்டு இருந்தார். நம்ம ஆள் அவரிடம் போய் உன் புஸ்தகத்துக்கு நான் முன்னுரை எழுதித் தரேன்னான். அவரும் சரி பெரிய எழுத்தாளர் பெரிய மனசு பண்ணி தானா முன் வந்து சொல்றாரேன்னு சரின்னுட்டார்.. புஸ்தகம் வந்தது. முன்னுரை எல்லாம் பிரமாதமாக இருந்தது ” என்று ராமன் நிறுத்தினார்.

அவரது தம்ளர் காலியாக இருந்ததால், நீலகண்டன், அதை நிரப்பினான். “லாங் லிவ் சுப்புணி ! இந்தக் கசப்பான களேபரங்களுக்கு, இரை ஆகாம காப்பாத்தற பென் நெவிஸ் வாழ்க ” என்று சிரித்தான் நீலகண்டன்.

ராமன் விஸ்கியை ஒரு வாய் அருந்தி விட்டுத் தொடர்ந்தார்.

” போன வருஷம் விஜூ இங்க வந்திருந்தார். நம்பாத்லதான் தங்கியிருந்தார். ஒரு நா அவரோட புஸ்தகத்தைப் பத்தி பேச்சு வந்தது. லிங்கராஜூவைப் பத்தி கூட. ‘ முன்னுரை எல்லாம் பிரமாதமா இருந்ததே ‘ ன்னேன். ‘ எல்லாத்துக்கும் ஒரு விலை வச்சுட்டார் லிங்கராஜூ ‘ னார், ‘ என்னது ‘ ன்னேன். ‘ என்னோட ஆப்த சிநேகிதன் கிட்டே போய் ‘ விஜூவுக்கு நான் பட்டிருந்த நன்றிக் கடனை அடைச்சுட்டேன், அவர் புஸ்தகத்துக்கு முன்னுரை எழுதிக் குடுத்து’ ன்னாராம் .அப்புறம் ‘மௌனிக்குப் பக்கத்தில கொண்டு போய் நிறுத்திட்டேன் உங்க சிநேகிதரை என்னோட முன்னுரைல ‘ ன்னாராம். ‘ என்ன அக்கிரமமா இருக்கே ! ‘ன்னு நான் விஜூவைக் கேட்டேன். ‘ உலகத்திலேயே, ஒரு முன்னுரைக்கு இத்தனை பெரிய தொகை கொடுத்த ஒரே எழுத்தாளன் நானாத்தான் இருப்பேன். என் பேர் கின்னஸ் புக்ல வர சான்ஸ் இருக்கு’ ன்னு விஜூ சிரிச்சார்.” என்றார் ராமன்.

அறையில் மௌனம் நிலவிற்று.

” இப்ப காலம் எப்படி இருக்குன்னா, உதவி பண்ணினவனை மறக்காம முதுகில குத்திடணும். உம்ம விஜூ விஷயத்தில இதுதான் நடந்தது. விஜயமார்த்தாண்டனை யாரெல்லாம் நல்ல எழுத்தாளன்னு சரியான சமயத்தில அடையாளம் பாத்து சொன்னாளோ , அவா கிட்டே இப்ப அவன் வாலாட்டறான். ஒருத்தர் என்கிட்டே சொன்னார், விஜயமார்த்தாண்டன் உணர்ச்சி வசப் பட்டு எழுதறதுதான் இதெல்லாம் , சீரியஸ்ஸா எடுத்துக்க வேண்டாம்னு . நம்ம கிட்டேவரும் போது அவன் உணர்ச்சி வசப்பட்டா , அது திட்டும் வசவுமா . இன்னொருத்தன் கிட்டே அதுவே எவரெஸ்ட்னு புகழாரமாயிடறது.. அது எப்படி.? இதுக்கு காரணம் ஈகோதான்.அது கூட சரியா சொல்லணும்னா அவனோட இன்பீரியாரிட்டி காம்ப்லக்ஸ்தான் . ராமன் திடீர்னு சர்வ மட்டமான ரைட்டர் ஆனதுக்கு காரணம் அவரோட நாவல்தான் தமிழ்ல தலை சிறந்த நாவல்னு பேசப்படறது , இவங்களை ஆசன வாயில போய் குத்தறது..எரிச்சல் தாங்காம முதல்ல வண்டி விட்டுப் பாக்கறாங்கள். ஒண்ணும் பெரிசா எதிர்ப்பு இல்லைன்னா, கூட்டத்தை சேர்த்துண்டு, எல்லா பக்கத்துலேர்ந்தும் மழைக் கால தவளைகள் மாதிரி கத்தித் தீர்த்திடுவான்கள். நம்ம ஊர் ஜனமோ, எது பெரிய சத்தமோ, அதுதான் சரியானதுன்னு கம்முனு ஆயிடும். மறம்தான் அறம்னு நம்பிடுவான்கள் , இது நக்கீரன் காலத்திலேர்ந்து நடக்கற காரியம்தானே ” என்றார் சாமித்துரை.

” இதை இப்படியே விடக் கூடாது ” என்றான் நீலகண்டன்.

” என்ன பண்ணப் போறே ? ” என்று ராமன் கேட்டார்.

“ஆரம்பிச்சுட வேண்டியதுதான் ” என்றான் நீலகண்டன், “நீங்க சொன்ன மாதிரி ” என்று சாமித்துரையைப் பார்த்து.

” என்னது ? ”

” ஒரு சங்கத்தைத்தான் ! க்ரூப்பு ! இப்பவே மூணு மெம்பர்கள் கைவசம் ” என்றான் நீலகண்டன்.

மற்ற இருவர் முகத்திலும், புன்னகை தென்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *