இனியா ஹோட்டலில் அன்று கூட்டம் என்றும்போல் ரொம்பி வழிந்துகொண்டிருந்தது. நிறைய பசிகொண்ட வாடிக்கையாளர்கள் டோக்கன் வாங்கி வெளியே நின்றும் அமர்ந்தும் சென்னையின் சூடான மாலை வேளைக் காற்றை ரசித்துக்கொண்டும் செல்போனை நோண்டிக்கொண்டும் கழித்துக்கொண்டிருந்தனர்.
நாற்பத்தி எட்டு வயதான ராகவனும் அவர் மனைவி சுஜாதாவும் அக்குழுவில் இருந்தனர். ராகவன் ஒரு சிறு தொழில் அதிபர். ஒன்றரை வருடத்திற்கு முன் மென்னை அடைக்கும் அளவுக்கு ஏராளமாகக் குவிந்திருந்த கடனெல்லாம் ‘வேனில் சூரியன் முன் மறையும் மார்கழிப் பனிபோல’ மறைந்து போன சந்தோஷம் மனசை லேசாக்க, ராகவன் தனது அன்பான துணையுடன் அந்த இனிய மாலையை அனுபவித்துக்கொண்டிருந்தார். இனிமேல், தன் பெண்ணின் மேற்படிப்புக்கும் திருமணத்திற்கும் பணம் ஒரு தடையே அல்ல என்ற சந்தோஷம் அவர் மனதில் நிரம்பியிருந்தது.
“டோக்கன் நம்பர் 19 ” என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு வர, சட்டைப் பாக்கெட்டில் இருந்த டோக்கெனை சரிபார்த்த பின், உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தனர் ராகவனும் சுஜாதாவும்.
ஒரு சர்வர் அவர்களது டேபிளைக் காண்பிக்க அவர்கள் அமர்ந்து மெனு அட்டையைப் பரிசீலித்து ஆர்டர் செய்தனர். ஆர்டர் எடுத்த சர்வர் துறுதுறு என்ற கண்களோடு சுறுறுப்பாகவும் இன்முறுவலுடனும் மிகப்பணிவான சேவை புரிய, ராகவன் மிகவும் மகிழ்ந்தார். அந்த இளைஞனின் முகம் மிகவும் பரிச்சயமானதாக இருந்தது. ‘சதீஷ்’ என்று சட்டைப் பாக்கெட்டில் பெயர் வில்லை குத்தியிருந்தது.
அந்த இளைஞனுக்கும் அவ்வாறே. இவரை ‘எங்கோ பார்த்திக்கிருக்கிறோமோ?’ என்று தோன்றியது. அவரது நெற்றியில் இருந்த தழும்பும் சிறு கீற்றாக இடப்பட்டிருந்த விபூதியும் கூடத்தான். “எங்கே… எங்கே” என்று மூளை பல்வேறு பகுதிகளில் தேடியது.
அவர்கள் சாப்பிட்டு முடித்து பில் கொண்டு வரச்சொன்னார்கள். இளைஞனும் பில் தந்து சென்றான். அவன் குழப்பம் தீர்ந்தபாடில்லை. இன்னும் மூளைக்குள் நியூரோன்கள் இணையத் தேடிக்கொண்டிருந்தன. இரண்டு நிமிடங்கள் கடக்கச் சடாரென்று பொறி தட்டியது!
கோட்டூர்புரத்தில் நண்பர்கள் வீட்டு நவராத்திரி கொலுவுக்குச் சென்றுவிட்டு காரை நோக்கி ஒரு சந்தில் நடந்து சென்றுகொண்டிருந்த அந்தத் தம்பதியரை நோக்கி விரைந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் பின் சீட்டில் சதீஷ். ‘இதோ ஒரே எட்டுதான் அந்த நடுத்தரப் பெண்ணின் கழுத்தில் இருக்கும் நான்கு சவரன் சங்கிலி தன் கைக்கு வரும்’ என்று நினைக்க தெய்வம் வேறாக நினைத்தது.
எதிர்ப்புறம் எங்கிருந்தோ வந்த ஒரு ஆட்டோ ‘எஸ்’ போல ஓர் சிறு வட்டமடித்து நேராக பைக்கில் மோத, கீழெ தெறித்து விழுந்த சதீஷும் அவன் நண்பனும் இரு திக்கில் சிதறினர். வண்டியை ஓட்டிய நண்பன் ஹெல்மெட் அணிந்திருக்க, சிறு சிராய்ப்போடு தலை தெறிக்க பைக்குடன் மறைந்தான். சதீஷுக்குத் தலையில் பலமான காயம். ரத்தம் பெருக்கிட மயக்கமானான்.
கண் விழிக்க நெற்றியில் சிறு தழும்புடனும் கீற்றாக இடப்பட்ட விபூதியுடனும் கருணை பொங்கிய கண்கள் அவனை நோக்கின. ஹெல்மெட் ரொம்ப முக்கியம்ப்பா. “அரிது அரிது இந்த மனித வாழ்க்கை” என்று சொன்னார் இவன் பறிக்க இருந்த நகையின் சொந்தக்காரரின் கணவர்.
செய்த செயலுக்காக கூனிக்குறுகி அந்தத் தொழிலையே விட்டு வேலை தேடி சர்வர் ஆனான் சதீஷ்.
தன் வாழ்க்கையையே திருப்பிப்போட்ட இந்த மனித தெய்வத்துக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று டேபிளுக்கு விரைந்தான்.
டேபிள் காலியாக இருந்தது. பில்லுக்கான பணமும் மேலே ஆயிரம் ரூபாயும் டிப்ஸாக வைக்கப்பட்டிருந்தது. கூடவே ஒரு சிறு தாளில் “தாங்க முடியாத கடன் தொல்லையால் அன்று நான் தற்கொலை செய்ய நினைத்திருந்தேன். உன் உயிரைக் நான் காப்பாற்ற என் உயிரின் மதிப்பை உணரவைத்தாய். நன்றி சதீஷ்”.
சதீஷின் கண்ணீர்த் துளிகள் அந்தப் பேப்பரில் விழுந்தன.