கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 1, 2012
பார்வையிட்டோர்: 20,468 
 

உலகத்தில் உள்ள அத்தனை கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று வேலைக்காரர்கள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.இரண்டு மூன்று பேர் நல்லவர்களும் இருக்கிறார்கள். எனக்கு வாய்த்த மெக்கானிக் துரதிர்ஷ்டவசமாக, முன் பட்டியலைச் சார்ந்தவர்.’தேமேனு‘ சென்று கொண்டிருந்த–என் காரின் உட்பகுதியில் சில வினோத சப்தங்கள் திடீரென்று ஜனிக்க, மெக்கானிக்கிடம் அழைத்துச் சென்றேன். அவர் ஒரு முறை ஓட்டிப் பார்த்து ‘ஸஸ்பென்ஷன் புடுங்கிக்கிச்சு‘ என்று சொன்னார்.

என்னதான் நான் இன்ஜினியாரக இருந்தாலும் என் திணை துறை எல்லாம் வேறு. மோட்டாரின் உள் அவஸ்தைகளைப் பற்றிய என் அறிவை ஒரு பஸ்டிக்கெட்டின் பின் பக்கத்தில் எழுதிவிடலாம் உதாரணமாக ஸஸ்பென்ஷன் எங்கிருக்கிறது என்று சுத்தமாகத் தெரியாது எனக்கு இருந்தும் என் அறியாமையை மெக்கானிக்கிடம் காட்டிக் கொள்ள விழையாமல்”அப்படியா? மாத்திட்டாப் போச்சு” என்றேன்

அந்த ஆள் உடனே ஒரு பழைய சாக்கை விரித்து காரின் அடியில் மறைந்தார்.அங்கிருந்து பேசினார் “கிட்டு நீங்க வாங்கிட்டு வரீங்களா! நான் வாங்கிட்டு வரவா”

உலகத்தில் உள்ள அத்தனை கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று வேலைக்காரர்கள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.இரண்டு மூன்று பேர் நல்லவர்களும் இருக்கிறார்கள். எனக்கு வாய்த்த மெக்கானிக் துரதிர்ஷ்டவசமாக, முன் பட்டியலைச் சார்ந்தவர்.’தேமேனு‘ சென்று கொண்டிருந்த–என் காரின் உட்பகுதியில் சில வினோத சப்தங்கள் திடீரென்று ஜனிக்க, மெக்கானிக்கிடம் அழைத்துச் சென்றேன். அவர் ஒரு முறை ஓட்டிப் பார்த்து ‘ஸஸ்பென்ஷன் புடுங்கிக்கிச்சு‘ என்று சொன்னார்.

என்னதான் நான் இன்ஜினியாரக இருந்தாலும் என் திணை துறை எல்லாம் வேறு. மோட்டாரின் உள் அவஸ்தைகளைப் பற்றிய என் அறிவை ஒரு பஸ்டிக்கெட்டின் பின் பக்கத்தில் எழுதிவிடலாம் உதாரணமாக ஸஸ்பென்ஷன் எங்கிருக்கிறது என்று சுத்தமாகத் தெரியாது எனக்கு இருந்தும் என் அறியாமையை மெக்கானிக்கிடம் காட்டிக் கொள்ள விழையாமல்”அப்படியா? மாத்திட்டாப் போச்சு” என்றேன்

அந்த ஆள் உடனே ஒரு பழைய சாக்கை விரித்து காரின் அடியில் மறைந்தார்.அங்கிருந்து பேசினார் “கிட்டு நீங்க வாங்கிட்டு வரீங்களா! நான் வாங்கிட்டு வரவா”

“அது எங்க கிடைக்கும்?”

“ஜே,ஸி, ரோடு போகணும்” சரிதான் நீங்க ஒண்ணு செய்யுங்க மொத்தமா ரிப்பேருக்கு எவ்வளவு ஆகும்னு எஸ்டிமேட் போட்டு சொல்லிடுங்க”

“அதெப்படிங்க முளுக்க பார்க்காம சொல்லிட முடியாதே”

“முளுக்கப் பாருங்களேன்”

அவர் பார்க்கும் நேரத்தில் நான் அந்தப் பட்டறையை விட்டு வெளியே வந்தேன்.திரும்பிப் பார்த்தால் என் கார் ஜாக்கி போடப்பட்டு பரபரவென்று முன் சக்கரங்கள் நீக்கப் பட்டு எண்ணைக் கசிவுடன் வெவ்வேறு வடிவங்களில் உதிரிப் பாகங்களை இழந்து கொண்டிருந்தது. என் வயிற்றில் கவலை கவ்விப் பிடித்தது. கழற்றிக் கழற்றி இதற்கு நூறு-அதற்கு ஐம்பது என்று ஏற்றிக் கொண்டே செல்லப் போகிறார்.கார் உள்ளே சத்தம் வந்தால் என்ன குறைந்து போய்விடும் ? வெட்டி வம்பில் மாட்டிக் கொண்டேன் என்று சுயமாகச் சபித்துக்கொண்டே வெளியே வந்தேன்.

அந்தப் பட்டறை தெரு முனையில் இருந்தது.மில்கார்னர் சென்ட்ரலுடன் ஒட்டிக் கொள்ளும் இடம். காலை பத்து.போக்கு வரத்து கணிசமாக இருந்தது.எத்தனையோ கார்கள் ஆரோக்கியமான சஸ்பென்ஷனுடன் சென்று கொண்டிருந்தன.அருகே ஒரு ஓட்டலில் காப்பி சாப்பிட்டு விட்டு என் பலிபீடத்துக்குத் திரும்புகையில் அந்த விபத்தைப் பார்ததேன்.

ஒரு கிழவன் சென்ட்ரல் தியேட்டர் பக்கத்திலிருந்து சைக்கிளில் ‘லொடக்கா லொடக்கா‘என்று சப்தமிட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தான். மெயின் ரோடில் காவி நிறத்தில் ஒரு ‘மெட்டடார்‘ வேன் வந்து கொண்டிருந்தது. கிழவன் யோசிக்காமல் ,பார்க்காமல்,நிறுத்தாமல், முட்டாள்தனமாக சரேல் என்று திரும்பி வேனின் குறுக்கே சென்று விட்டான்.அதன் டிரைவருக்கு ப்ரேக் போட சந்தர்ப்பமே கிட்டவில்லை . டம் என்று சப்தம் கேட்டது அப்புறம் நான் கிழவனைப் பார்க்கவில்லை. என் வயிற்றில் பந்து சுருண்டு கொண்டது.

பரபரவென்று கூட்டம் கூடிவிட்டது. எனக்கு என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ளும் ஆவல் பற்றிக் கொண்டது. ஆனால் அங்கே செல்லத் தயக்கமாக இருந்தது . இருந்தும் மெல்ல நெருங்கினேன். வேன் நின்றிருந்தது.கிழவன் மேல் சுத்தமாக ஏறிவிட்டது. சைக்கிள் காய்ச்சிய அப்பளம் போலக் கிடந்தது.

கிழவன் கீழே ஒருக்களித்துப் படுத்தவாறு இருந்தான்.அவன் மண்டையில் அடிபட்டு பக்கவாட்டில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது வாய் திறந்திருந்தது.உடல் ஒரு வித நடுக்கம் போல் ஆடிக் கொண்டிருந்தது அவன் உயிர் விரைவில் பிரிந்து கொண்டிருந்தது. அவனைச் சுற்றியிருந்த நாங்கள் அதாவது பங்களூர் நகரத்தின் பொறுப்புள்ள பிரஜைகள் எப்படி நடந்துகொண்டோம்? சொல்கிறேன்.

“டிரைவர் எங்கய்யா?”

“அதோ உக்காந்துக்கிட்டிருக்காரு”

“நான் இல்லிங்க டிரைவர்”

“ஆசாமி இறந்துக்கிட்டிருக்கான் தூக்குங்க”

“தூக்காதிங்க! போலீஸ்–வரட்டும்”

“அந்த ஆட்டோவை நிறுத்துய்யா” நிறுத்தப் பட்ட ஆட்டோ கூட்ட வளையத்தை முத்தமிட்டுவிட்டு உடனே வேகம் பிடித்துப் பறந்தது።

அருகே கடந்த பி.டி.எஸ் பஸ்ஸின் ஜன்னல் பூரா முகங்கள்!”பிரசன்னா சீக்கிரம் வந்து பாரு!” என்று பஸ்ஸின் உள் ஒரு அழைப்புக் கேட்டது.

“போலீஸ் வரட்டும் அது வரைக்கும் ஒண்ணும் செய்யக் கூடாது”

“டெலிஃபோன் செய்யுங்களேன்”

“ஸார் நீங்கதான் போய் செய்யுங்களேன்”

“எனக்கு அர்ஜண்டா வேலை இருக்கு.போலீஸ் வந்துருவாங்க”

இப்போது கிழவனின் நடுக்கம் நின்றிருந்தது. வாயால் பெரிசாக மூச்சு விட்டதால் வழிந்த ரத்தத்தில் காற்றுக் கொப்புளங்கள் வெடித்தன.

“ஆள் யாருங்க”

“யாருக்குத் தெரியும்”

“கூட ஒருத்தரும் வரலியா”

“நீங்க என்ன பண்றிங்க எதிர்த்தாப்பல ஓட்டலுக்குப் போய் போன் பண்ணிடுங்க” என்று என்னை ஒருவர் தேர்ந்தெடுத்தார். நான் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் ஓட்டலுக்குச் சென்றேன்.அங்கே உற்சாகமாக எல்லோரும் டிபன் பண்ணிக் கொண்டிருந்தார்கள்

“டெலிஃபோன் செய்யணும்”

“எழுபத்தஞ்சு பைசா”

“தர்றேன்”

“முதல்ல கொடுத்துடுங்க எஸ்.டி டி கூடாது”

“இல்லை . போலீசுக்கு ஃபோன் செய்யணும். ஒரு ஆக்ஸிடெண்ட்”

“பண்ணிக்கங்க”

“டைரக்டரி வேணும்.அவசர போலீஸ்-உதவிக்கு என்ன நம்பர் செய்யணும்?”

“தெரியாது”

“டைரக்டரி இல்லையா?”

“இல்லை!”

“அந்தாளு இறந்துகிட்டு இருக்கான்”

“ஸார் நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா-”

“என்ன?”

“இதில மட்டும் மாட்டிக்காதீங்க”

“எதில?”

“ஆக்ஸிடெண்ட் கேஸில நான் ஒரு முறை ,இந்த மாதிரி ஆக்ஸிடெண்ட்–கேஸ்தான், வழில கிடக்கான்.கார்ல எடுத்திட்டு ஆஸபத்திரிக்குப் போனேன்.’அங்க ஏன் கொண்டு வந்தே மெடிக்கோ லீகல் கேஸ். விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போ’ன்னாங்க.விக்டோரியா எவ்வளவு துரம்?- அங்கே போனேன் .”அங்க போனா ‘போலீஸ்காரங்க இல்லாம எப்படி நீ பாடிய மட்டும கொண்டு வரலாம்’னு ஒரு ஓரத்தில் ஒன்றரை மணி நேரம் காக்க வெச்சாங்க அதுக்கப்புறம் அங்க ஃபோன்–பண்ணி இங்க ஃபோன் பண்ணி போலீஸ்-வந்தாங்க።

முதல்லயே என்மேல ஏறினாங்க’எப்படிய்யா எங்களுக்கு சொல்லாம இங்க கொண்டுட்டு வரலாம்னுட்டு என்னைத் திட்டினாங்க அவங்க ஆஸபத்திரில கேஸ் எடுத்துக்கிட்ட போது ஆள் போய்ட்டான்’ டெட் ஆன் அரைவல்’னு முடிச்சுடடு கையெழுத்துப் போட்டு கிடங்குங்குக்கு அனுப்பிச்சுட்டாங்க.”கேஸ் அத்தோட நின்னுச்சா? இல்லை நான்தான் ஸார் சாட்சி ஆறு மாசம் இழுத்து அடிச்சாங்க கோர்ட்டுககு .சம்மன்ஸ் வரும் அங்கே போவேன் இன்ஸ்பெக்டர் வந்தா கவர்மெண்ட் வக்கீல் வரமாட்டாரு ரெண்டு பேருமே வந்தா டிரைவரோட வக்கீல் ஒத்திப் போட்டுருவாரு “அன்னிக்கு ஒரு சின்ன கணக்குக்காக மொத்தம் என்ககு ஆன செலவை கணக்குப் பண்ணிப் பார்ததேன். கிட்டத் தட்ட ஆயிரம் ரூபா அதோட நின்னுச்சா கேஸ் ? என்ன ஆச்சு கேளுங்க ஏறக்குறைய அந்த விபத்துக்கு நானே காரணம்ஙகற மாதிரி குறுக்கு கேள்வி போட்டு கண்ல விரலை விட்டு ஆட்டிட்டான் வக்கீல். விட்டாப் போதும்னு ஆயிருச்சு எல்லாம் எதுக்காக? ஒரு குடிமகன்ங்கற முறையில் என் பொறுப்பை என் கடமையை செஞ்சதுக்கு”

“நான் பிரமிப்புடன்–கேட்டுக் கொண்டிருந்துவிட்டு “யாராவது போலீசுக்கு ஃபோன் செய்ய வேண்டாமா” என்றேன்

“நீங்க தாராளமா ஃபோன் பண்ணுங்க கூப்பிட்டா கூட போய்ட்டு வாங்க .எனக்கு நடந்ததெல்லாம் சொல்லிட்டேன்”

“நம்பர் தெரியலையே”

“நூறு பண்ணுங்க”

நான் போலீசுக்கு–டெலிஃபோன் செய்துவிட்டு திரும்ப அங்கே சென்றேன்.ஏற்கெனவே இரண்டு டிராஃபிக் போலீஸ்–ஆசாமிகள் நின்று சாக்கட்டியில் கோடு போட்டுக் கொண்டிருந்தாரகள் நான் சென்றதும் “இவர்தாங்க ” என்றார் ஒருவர் என்னை சுட்டிக்காட்டி “போலீசுக்கு சொல்லிட்டேன்” என்றேன்

“போலீஸ் வந்தாச்சு .பக்கத்தில்தானே சேஷாத்ரிபுரம் போலீஸ்–ஸ்டேஷன். அங்கே போய் கூட்டி வந்துட்டார் டிரைவரு”

போலீஸ்-இன்ஸ்பெக்டர் என்னைப் பார்தது “கொஞ்சம் வாங்க” என்றார் நான் தயக்கத்துடன் சென்றேன்.

“நீங்க இந்த ஆக்ஸிடெண்ட்டை பார்த்திங்களா?”

” ம்.. பார்த்தேன்”

“உங்க பேரு?”

அவர் பையிலிருந்து ஒரு டயரி புறப்பட்டது.என்னுள் எச்சரிக்கை சக்திகள் உயிர் பெற்றன .

”எதுக்கு?”

” எதுக்கா?..விட்ன்ஸ் ஸார்! சாட்சி. நீங்க பார்க்கலை?”

“அது வந்து … பார்த்தேன் துரத்தில இருந்து சரியாப் பார்க்கலை”

“இப்பதான் பார்த்தேன்னு சொன்னிங்க? அட்ரஸ் சொல்லுங்க”

“அட்ரஸ் வந்து.. நான் ஊருக்குப் புதுசுங்க”

“ஊருக்குப் புதுசா? பங்களுர்ல தங்கறவர்தானே?”

“அதாவது மெட்றாஸ்காரன் நான்”

” சரி. இங்க வேலை செய்யறவரா?”

” இல்லை.. இன்ஃபாக்ட் நான் இன்னிக்கு பிருந்தாவன்ல திரும்பிடறேன்” அவர் நான் சொன்னதை சுத்தமாக நம்பவில்லை.என்னை வருத்தத்துடன் பார்த்துச் சிரித்தார்

“ஏன் ஸார் சாட்சி சொல்றதுக்கு அவ்வளவு பயமா?”

“பயம்னு இல்லிங்க. வந்து நான் ஊர்லயே இல்லாம இருந்தா எப்படி சாட்சி சொல்ல முடியும் இதோ இவர் கூடப் பார்த்தார்”

“அய்யோ நான் பார்க்கலை இப்பத்தான் வரேன்”

“யாராவது பாத்தவங்க சாட்சி சொல்ல வரமாட்டிங்களா? யாராவது?

கூட்டம் மெல்லக் கலைந்தது நான் ஒரு சின்ன சமாதான முயற்சியாக ”ப்ளீஸ் லுக் இன்ஸ்பெக்டர் ! தி ஃபாக்ட் இஸ் திஸ்! என்னால சாட்சிக்கு வரமுடியும் எனக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது.சந்தோஷமா வருவேன். ஆனா வெளியூர்க்காரன்.. அதனால மெட்றாஸ்ல இருந்தா எப்படி..”

இன்ஸ்பெக்டர் கோபத்துடன் “போய்யா! மெட்றாஸ் போய்யா இங்க ஏன் நிக்கறே ! போ” என்றார்.கிழவனின் அருகில் சென்றார் அவன் இந்த-நேரத்தில் இறந்திருந்தான் நான் சற்று நேரம்-நின்றேன். மெதுவாக அருகில் இருப்பவரிடம்”மெட்றாஸ்ல இருந்து வந்து எப்படி சாட்சி சொல்ல முடியும் சொல்லுங்க”

“அதானே! ஆவுறதில்லை அது” என்று அனுதாபித்தார்.

திரும்ப மெக்கானிக் ஷாப்பிற்கு வந்தேன் அவர் என் காரின் அக்கக்கான பாகங்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்

“கிளட்சு ப்ளேட்டு கூட தேஞ்சிருக்கு மாத்திரலாமா” என்றார்

“செய்யுங்க”

“இன்ஜினை டவுன் பண்ணணும் மூணு நாளாகும்”

“செய்யுங்க. எஸ்டிமேட் கொடுத்துடுங்க”

“மொத்தம் முன்னூத்தம்பது, எல்லாத்துககும் பில் கொடுத்துர்றேன்”

“சரி”

“உங்க அட்ரஸ் சொல்லுங்க” சொன்னேன்

“எத்தனை வருசமா அந்த ஃபாக்டரில இருக்கிங்க”

“ஒம்பது வருஷமா”

“புதன் கிழமை வந்துருங்க”

“சரி” என்று வெளியே வந்தேன்

இப்போது அந்த காவி வர்ண வேனைக் காணவில்லை. கூட்டம் விலகியிருந்தது ஒன்றிரண்டு பேர்களே இருந்தனர். போலீஸ்காரர்களையும் காணோம். நான் விபத்து நடந்த இடத்தை மறுபடி கடக்க வேண்டியிருந்தது கிழவன் கிடந்த இடத்தில் அடையாளமாக உறைந்த ரத்தத்திட்டு இருந்தது. சைக்கிள் கிடந்தது. ஏறக்குறைய கிழவனின் வயசிருக்கும் போல் புராதன சைக்கிள். அதன் ஹாண்டில் பாரில் ஒரு அழுக்குப்பை மாட்டியிருந்தது அதில் கிழவன் அரை கிலோ அரிசி வாங்கி வைத்திருந்தான் போலும். அந்த அரிசி சாலையில் சிதறியிருந்தது. பாதி அரிசி ரத்தத்தில் இருந்தது இரண்டு சிறுவர்கள் ரத்தம் படாத அரிசி மணிகளை ஆர்வத்துடன் அள்ளி டிராயர் பைக்குள் அவசரமாகத் திணித்துக் கொண்டிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *