அரசியல் வியாதிகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 5,523 
 

மசூதிக்குப் போகிற வழியில் ப்ளாட்ஃபாம் ஓரத்தில் அந்த அற்புதமான ஓவியத்தைப் பார்த்தேன்.

சரஸ்வ தி. வெள்ளைத்தாமரைப் பூவில் வீற்றிருக்கிற சரஸ்வதி, வீணை மீட்டிக் கொண்டிருக்கிற சரஸ்வதி. வசீகர முகம் ஒளிரும் சரஸ்வதி.

கூட்டத்தோடு கூட்டமாய் நின்று அந்த ஓவியத்தை ரசித்தேன்.

வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள் வீணை செய்யும் ஒலியிலிருப்பாள் என்று முன்னொரு காலத்தில் பள்ளிக்கூடத்தில் படித்த பாடல் ஞாபகத்துக்கு வந்தது.

இந்த அற்புதமான ஓவியத்தை வரைந்த ஓவியக்கலைஞன் ப்ளாட்ஃபாமில் பின்புறச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.

தரைமட்டத்திலிருந்து கொஞ்சமே கொஞ்சம் உயர்ந்திருந்த நாலு சக்கரத் தள்ளுவண்டி. துணைக்கு ஒரு தெரு நாய். பார்வையாளர்கள் சில்லறையைப் போட்டுவிட்டுப் போவதற்கான வசூல்க் குவளையன்று.

இளம்பிள்ளை வாதத்தால் சூம்பிப்போன கால்களோடு தள்ளுவண்டியில் உட்கார்ந்திருந்த அவனுடைய கால்களில் உயிரில்லை, ஆனால் கைகளில் என்னவொரு கலை!

மசூதியிலிருந்து அசர் தொழுகைக்கான அழைப்பு, ஒலிபெருக்கியில் மிதந்து வந்த பின்னால்தான் அந்த இடத்தை விட்டு நகர மனசு வந்தது.

அவனுடைய குவளையில் ஒரு அஞ்சு ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டு மசூதிக்கு நடந்தேன்.

அடுத்த நாள் சாயங்காலம், அந்த ஓவியன் அதே இடத்தில் இருப்பானா என்கிற சந்தேகத்தோடே வந்தேன்.

இருந்தான்.

இப்போது லஷ்மியின் ஓவியம். ‘வரலக்ஷ்மி வருவாயம்மா திருமாலின் தேவி கடைக்கண் பாரம்மா’ என்று காலையில் ரேடியோவில் கேட்ட சுசீலாப் பாடலை என் வாய் முணுமுணுத்தது,

“என்ன பாய் சாமி, இந்துப் பாட்டப் பாடறீங்க” என்ற குரலுக்குப் பார்வையைத் திருப்பினேன்.

ஓவியன்.

போலியோ ஓவியன்.

என்னுடைய லுங்கியையும் தாடியையும் தொப்பியையும் பார்த்து என்னை இனங்கண்டு கொண்டு பாய் சாமி என்று பெயர் வைத்துவிட்டது ரசிக்கும் படித்தான் இருந்தது, அவனுடைய ஓவியத்தைப் போலவே.

பேச்சுக் கொடுத்தேன்.

“ஏம்ப்பா, தொப்பியும் தாடியும் வச்சிருந்தா இந்துக் கடவுள் படத்துல இருக்கிற கலைய ரசிக்கக்கூடாதா?”

“ஐயையோ, அழகா, தாராளமா ரசிக்கலாம் சாமி. ஒங்களப் போல போலித்தனம் இல்லாத ஆளுங்களத்தான் எனக்கு ரொம்பப் புடிக்கும் சாமி.”

“டெய்லி இங்க தான் படம் வரைவியா?”

“இங்கயிருந்து ஜனங்க வெரட்டி விடற வரக்யும் இங்கதான் கெடப்பேன் சாமி.”

“ஒன்ன யார்ப்பா வெரட்டிவிடப் போறாங்க. பார் ஒனக்கு எத்தன ரசிகர்கள் இருக்காங்கன்னு.”

“வெரட்டறதுன்னா அடிச்சி வெரட்டறதுதானா சாமி? ஜனங்களுக்கு அலுப்புத்தட்டிப் போயி வசூல் கொறஞ்சி போச்சின்னா, என்ன வெரட்டி விட்ட மாதிரிதான்.”

“கையில இருக்கிற மாதிரி, நாக்குலயும் ஒனக்கு விஷயம் இருக்கு.”

“ஐயையோ, நாக்குல விஷமா?”

“விஷமில்லப்பா, விஷயம். நல்லாவே பேசற. நீ படம் வரையற அழக நா பாக்கணுமே.”

“ஓ. பாக்கலாமே, நாளக்கி வாங்க. ஒரு மூணு மணி போல வாங்க, பாக்கலாம்.”

அடுத்த நாள் ரெண்டே முக்காலுக்கே ஸ்பாட்டுக்கு வந்து விட்டேன்.

எனக்காவே காத்திருந்த மாதிரி, என் முகத்தைப் பார்த் ததும் சந்தோஷமாய் அவன் படம் வரைய ஆரம்பித்தான்.

வர்ணங்கள் அவனுடைய விரல் நுனியில் உயிர் பெறும் அற்புதத்தைப் பார்த்துப் பிரமித்து நின்றேன்.

ஒரு மணி நேர உழைப்பில் உயிர் பெற்றது முருகக் கடவுளின் அழகான ஓவியம். பால் வடியும் முகத்துடன் பாலமுருகன்.

‘… திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…’

அதன்பிறகு, தினமும் மூணு மணிக்கு முன்பாகவே போலியோ ஓவியனுக்கு முன்னால் ஆஜராகிவிடுவதும், அவன் வரைந்து முடிக்கும் வரைக்கும் பார்த்துக் கொண்டேயிருப்பதும், பிறகு அவனோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பதும் வாடிக்கையாகி விட்டது.

ஒரு நாள் திருப்பதி வெங்கடாஜலபதி.

ஒரு நாள் விநாயகர். ஒரு நாள் தில்லை நடராஜர். ஒரு நாள் பரமசிவன் பார்வதி – ட்டு இன் ஒன்.

இப்படியாய்ப் போய்க் கொண்டிருக்க, ஒரு நாள் ஈஸா நபியின் (ஏசுநாதர்) படத்தைத் தத்ரூபமாய் வரைந்தான்.

அடுத்த நாள், ஈஸாநபியின் அன்னை , பீபி மர்யம் (கன்னி மேரி).

மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாயிருக்கியேப்பா நீ என்று நான் ஸர்ட்டிஃபிகேட் கொடுத்ததுக்கு அவன் சொல்லுவான்:

“இந்த நாட்டுல பிறந்து வாழ்ந்துட்டிருக்கிற ஒவ்வொரு உண்மையான மனுஷன் ஒடம்புலயும் மத நல்லிணக்க ரத்தந்தான் ஓடுது பாய் சாமி. நீங்க இந்துப் பாட்ட முணுமுணுக்கறீங்க. சாமிப் படங்கள ரசிக்கிறீங்க. நீங்க ஒரு உண்மையான இந்தியன். நெறைய பேர் உள்ளுக்குள்ள ஒங்களப் போலத்தான் இருக்காங்க. இந்த அரசியல்வாதிங்கதான் தங்களோட சுயநலத்துக்காக குட்டயக் கொழப்பி மீன் பிடிக்கிறாங்க. இந்த அரசியல்வாதிங்க திருந்தணும், இல்லாட்டி ஒழியணும். அப்பத்தான் நாடு உருப்படும்.”

“ரொம்ப அனுபவப்பட்டவன் மாதிரி பேசறியேப்பா.”

“அடிபட்டவன் சாமி. இப்பப் பாருங்க இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் வந்துருச்சு, சுவரெல்லாம் தேர்தல் வாசகம், கலர்க் கலராப் போஸ்டர். வாக்குறுதிகள், வசவுகள், சவால்கள், சவுடால்கள்…”

“நீயும் அடுக்கு மொழி தான் பேசற, அரசியல்வாதி மாதிரி.”

“அரசியல்வாதியோட என்ன ஒப்பிட்டுப் பேசாதீங்க சாமி. அது எனக்கு அடியோட புடிக்காது.”

“சரியப்பா பேசல, ஆமா, ஒன்னோட ஃப்ரண்ட், அந்த நாய எங்க காணல?”

“எங்கயாவது ஜோலியாப் போயிருக்கும்.”

“ஜோலி என்ன மண்ணாங்கட்டி ஜோலி, எங்கயாவது தெருப்பொறுக்கப் போயிருக்கும். தெரு நாய் தான!”

“தப்புசாமி. அது, நா பொற போட்டாத்தான் திங்கும். இந்த மனுஷங்கள விட அது நன்றியுள்ள பிராணி சாமி. அது தெரு நாய் இல்ல. நாந்தான் இப்பத் தெரு நாய். ஆனாலும் பரவாயில்ல, இந்த வாழ்க்க எனக்குப் புடிச்சித்தான் இருக்கு. துரோகிகளையும் திருட்டுப் பசங்களையும் நம்பியிருந்த என்னோட பழைய வாழ்க்கைய விட, நாயையும் ஒங்களப் போல ஒண்ணுரெண்டு நல்லவங்களையும் சார்ந்திருக்கிற இந்த பிளாட்பார வாழ்க்க எவ்வளவோ மேல்.”

“அதென்னப்பா ஒன்னோட பழைய வாழ்க்க?”

“அதெல்லாம் இப்ப என்னத்துக்கு சாமி, வுடுங்க. பாய் சாமி, நீங்க எனக்கு ஒரு உதவிணுமே.”

“செய்யறேம்ப்பா, சொல்லு.”

“பாய் சாமி, நா இந்துக் கடவுள் படமெல்லாம் வரஞ்சிட்டேன். கிறிஸ்தவக் கடவுள் படமும் வரஞ்சிட்டேன். ஒங்க அல்லா படம் மட்டும் மாதிரிக்கிக் கெடக்யவேயில்ல. எனக்கு அல்லா படம் ஒண்ணு கொண்டு வந்து தர்றீங்களா சாமி.”

“அல்லா படம் கெடக்யாதுப்பா. அல்லாவுக்கு உருவம் கெடையாது. ஒண்ணு செய்யறேன். எங்க மக்கா மதினா மசூதிப் படம் வேணா கொணாந்து தாறேன். அதப் பாத்து நீ வரை.”

மக்கா மதினா படத்தைக் காலையில் கொண்டு தருவதாய் வாக்களித்து விட்டு அங்கிருந்து அகன்றேன்.

ராத்திரி இஷாத் தொழுகை தொழுதுவிட்டு வீட்டுக்குப் போனால் திருச்சியிலிருந்து எஸ்ட்டிடி. தில்லை நகரில் ஒரு கம்பெனிக்கு சரக்குக் கொடுத்த வகைக்கு ரொம்ப நாள் பேமென்ட் பாக்கி. காலையில் ஒன்பது மணிக்கு வந்தால் பார்ட்டியை மடக்கிச் செக்கைக் கறந்து விடலாம் என்று தகவல் வந்தது.

ராத்திரியோடு ராத்திரியாய் ராக்ஃபோர்ட்டைப் பிடித்துக் கிளம்பினால், செக்கை வாங்கிக் கொண்டு பஸ் பிடித்து நாளை ராத்திரிக்குள் மெட்ராஸ் வந்து சேர்ந்து விடலாம்.

“திருச்சிக்குப் போய் வந்த பின்னால் மக்கா மதீனா படத்தைக் கொண்டு வந்து தருகிறேனப்பா” என்று போகிறபோக்கில் நம்ம ஓவியனைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போக வேண்டும்.

ஆட்டோவில் எழும்பூருக்குப் போகிற வழியில் அவனுடைய இடத்தில் நிறுத்தி இறங்கினேன். ஒரு ஓரமாய் அவன் முடங்கிப் படுத்திருந்தான். பக்கத்தில் படுத்திருந்த அவனுடைய நாய் என்னைப் பார்த்ததும் எழுந்து வாலை ஆட்டிது. பிறகு தன் எஜமானுடைய முகத்தை நக்கி அவனை எழுப்பியது.

“பாய் சாமி, என்ன இன்னேரத்துல” என்று எழுந்தான்.

நான் என்னுடைய விஷயத்தைச் சொல்ல, அவன் அவனுடைய விஷயத்தைச் சொன்னான்:

“சாயங்காலம் இருட்டற நேரத்துல, கரை வேஷ்டிக் கோஷ்டியண்ணு வந்துச்சு சாமி. நாங்க சொல்ற எடத்துல வந்து எங்க தலைவரோட படத்த வரஞ்சிக் குடுத்துட்டுப் போடா, ஐநூறு ரூவா தர்றோம்னாங்க. அந்த கோஷ்டி போன கொஞ்ச நேரத்துல இன்னொரு கோஷ்டி வந்துச்சு, எங்க தலைவியோட படத்த வரஞ்சிக் குடுத்துட்டுப் போடா, ஆயிரம் ரூவா தர்றோம்னாங்க. சாமி படம் வரையற கையினால சாத்தான்கள் வரைய மாட்டேன் போங்கடான்னு திட்டி அனுப்பிச்சிட்டேன். ஒரு கோஷ்டி போயிருச்சி. இன்னொரு கோஷ்டி நாளக்கித் திரும்பவும் வர்றோம் யோசிச்சு வைய்யின்னு மெரட்டிட்டுப் போயிருக்கு. இந்த மாதிரி எத்தன கோஷ்டிங்களப் பாத்தாச்சு. இவனுங்க மெரட்டலுக் கெல்லாம் அடி பணியிற ஆள் நா இல்ல. சரி நீங்க கெளம்புங்க சாமி, நாளக்கிப் பாப்போம்.”

அடுத்த நாள் காலையில் திருச்சி, மதியம் வரைக்கும் தாமதித்தால், செக்குக்கு பதிலாய்ப் பணமாகவே தந்து விடுவதாய்ப் பார்ட்டி சொன்னதால் பணத்தைப் பெற்றுக் கொண்டு தாமதமாய்த்தான் திருச்சியில் பஸ் பிடிக்க முடிந்தது. மெட்ராஸ் வந்து சேர்வதற்கு ராத்திரி மணி பத்தரையாகிவிட்டது. வீட்டுக்குப் போகுமுன்னால், ஓவியனைப் பார்த்துவிட்டுப் போக வேண்டுமென்று தோன்றியது. நேற்று ஒரு கோஷ்டி மிரட்டிவிட்டுப் போனதாய்ச் சொன்னானே!”

ஓவியனுடைய இருப்பிடத்தை அடைந்தபோது ஓர் அதிர்ச்சி. ஓவியன் ப்ளாட்ஃபாமில் அலங்கோலமாய்க் கிடந்தான். அவனுடைய நாய் அவன் முகத்தை நக்கிக் கொண்டு நின்றிருந்தது. கலர்ச் சாக்ப்பீஸ்கள் சிதறிக்கிடந்தன. வர்ணக் கலவைகள் கொட்டிக் கிடந்தன.

நடந்திருப்பது என்னவென்று புரிந்தது.

நேற்று வந்து மிரட்டிவிட்டுப் போன கோஷ்டி இன்றைக்கு வந்து அவனைப் புரட்டியெடுத்துவிட்டுப் போயிருக்கிறது.

அவன் வரைந்திருந்த கிருஷ்ண பரமாத்மாவின் ஓவியம் சோடியம் வெயிலில் தகதகத்துக் கொண்டிருந்தது.

‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே’ என்று பாடியிருப்பேன், சுமூகமான சூழ்நிலையாயிருந்திருந்தால்.

கோயம்பேட்டிலிருந்து நான் வந்த ஆட்டோவிலேயே, டிரைவரின் உதவியுடன் அந்த ஓவியனைத் தூக்கிப் போட்டுக் கொண்டு போய் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தேன். திருச்சியில் கிடைத்த பணம் உபயோகமாயிருந்தது.

ஆட்டோவின் பின்னாலேயே ஓடி வந்த நாய், நர்ஸிங் ஹோம் வாசலில் தவங்கிடந்தது. சிகிச்சைக்குப் பிறகு கண் விழித்த ஓவியன், தான் படுத்துக்கிடக்கிற மேட்டுக்குடி சூழ்நிலையை நாலாபுறமும் பார்த்துவிட்டு நன்றிப் பெருக்கோடு என்னைப் பார்த்துக் கரங்கூப்பினான்.

பிறகு, நடந்த கதையைச் சொன்னான்.

நான் நினைத்தது சரிதான். அந்தக் கறை வேஷ்டிக் கோஷ்டிகளிலொன்று வந்து மிரட்டிப் பார்த்திருக்கிறது.

பணிய மறுத்த இவனைப் புரட்டிப் புரட்டி அடித்திருக்கிறது.

“என்னோட நாய் மட்டும் இல்லன்னா என்னக் கொலையே பண்ணிப் போட்டுட்டுப் போயிருப்பானுங்க சாமி” என்று நன்றியோடு நாயை நினைவு கூர்ந்தான்.

நான் கேட்டேன். “அவங்கதான் ஐநூறு ஆயிரம்னு தர்றாங்கள்ளப்பா, அவங்க கேக்கற படத்த வரஞ்சிக் குடுத்துர்றது தான. அப்படியே நீ தொழில் விருத்தி பண்ணி ஆயிர ஆயிரமா சம்பாதிக்கலாமே! ப்ளாட்ஃபாம்ல உண்டியல் குலுக்கி நீ எந்தக் காலத்துல அவ்வளவு சம்பாதிக்கப் போற! ”

ஓவியனுக்குக் கோபம் வந்துவிட்டது.

“சாமி, நா போலியோ மனுஷன்தான், போலி மனுஷனில்ல, காசுக்காகக் கட்சி மார்ற ஜாதியில்ல. கடவுள வரஞ்ச கையால கண்டவங்களயும் வரையமாட்டேன். நா சொன்னா சொன்னதுதான்.”

“அதென்னப்பா அரசியல்வாதிங்க மேல அப்படியரு கோபம் ஒனக்கு? என்று அவனை நான் சாந்தப் படுத்தினேன்.”

சாந்த தென் தாப்பா அரசியல்வாதிங்க மேல அப்படியரு கோயம்

“அரசியல்வாதிகள் எல்லாருமே அயோக்கியங்க இல்லப்பா. நாம தப்புத் தண்டாவுக்குப் போகாம அரசியல்ல சம்பாத்யம் பண்ண முடிஞ்சா அதுல தப்பே இல்ல.”

சுவாரஸ்யமே இல்லாமல் ஓவியன் என்னைப் பார்த்தபடி இருந்தான். அவனை சுவாரஸ்யப்படுத்துவதற்காகவும் உற்சாகப் படுத்துவதற்காகவும் எனக்குத் தெரிந்த விசேஷமான ஒரு விஷயத்தை அவனோடு பகிர்ந்து கொள்ள முற்பட்டேன்:

“ஒனக்கு பேப்பர், பத்திரிகையெல்லாம் வாசிக்கிற வழக்கம் உண்டா? நீ என்னத்தப் படிச்சிருக்கப்போற. இப்ப நா சொல்லப் போற விஷயத்தக் கேளு, ஒனக்கு சந்தோஷமாயிருக்கும், தெம்பாயிருக்கும். அஞ்சாறு வருஷத்துக்கு முந்தி நடந்த சங்கதி. ஒரு கிராமத்தான், ஒன்னயப் போலவே போலியோ விக்ட்டிம். சூம்பிப்போன கால். ஆனா அவனோட மனசு சூம்பிப்போகல. தன்னம்பிக்கையாலயும் விடாமுயற்சியினாலயும் கொஞ்சங்கொஞ்சமா முன்னேறினான். முன்னேறி, பஞ்சாயத்துத் தலைவரா ஆனான் அவன். அந்த கிராமத்துக்கே அவன் தலைவனப்பா! எல்லாப் பேப்பர்லயும் அவனோட ஃபோட்டோ வந்தது. எல்லாப் பத்திரிகையிலயும் அவனோட பேட்டி வந்தது. தமிழ்நாடு பூரா அவனப்பத்தித்தான் பேச்சு. அரசியல்வாதிகள புத்திசாலித்தனமா பயன்படுத்திக்கிட்டு அவன் முன்னுக்கு வந்துட்டான். நீயும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு ஒன்னத் தேடிவர்ற அரசியல்வாதிகளப் புத்திசாலித்தனமா பயன்படுத்திக்கிட்டேன்னா, நீயும் முன்னுக்கு வந்துரலாம், அந்த ஆளப் போலவே.”

ஒரு பெருமூச்சோடு அவன் என்னைப் பார்த்தான்.

பிறகு சொன்னான்: “பாய் சாமி, நாந்தான் சாமி அந்த ஆள்.”

– 16.05.2004 (ஓவியன்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *