ஒரு சதுரம் இருளாக ஒரு சதுரம் ஒளியேறும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 3,416 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கனகராயர் இவளுடைய பயம் என்ற ஓவியத்தை பரிசுக்குத் தெரிவு செய்யாமல் இருந்திருக்கலாம்…..”

“அவள் பரிசளிப்பு விழாவுக்குப் போகாமல் இருந்திருக்கலாம்….”

“பயம் என்ற ஓவியமே தன்னால் முதற் பரிசுக்குரியதாய்த் தேர்ந் தெடுக்கப்பட்டது என்பதைக் கனகராயர் மேடையில் கூறாமலாவது இருந்திருக்கலாம்…”

“விழா முடிவதற்கு முன்னர் எழுந்து இவள் வீட்டுக்கு வந்திருக்கலாம்”

“விழா அமைப்பாளர், போட்டி நடத்திய ஓவியக் களத்தின் தலைவர், செயலர், பொருளர் எல்லாமாகிய அவர் திருவாளர் ரகுராமன் விழா முடிந்தபின் வெளியில் வைத்துத் திருவாய் மலர்ந்தருளிய குத்தல் மொழிகளைக் கேட்காமல் இருக்கும்படி அவளது காதுகள் செவிடு பட்டிருக்கலாம்….

ஐந்து நிகழ்தகவுகளிற் குறைந்த பட்சம் ஒன்றுகூட நடக்காது போய்விட்டதன் விளைவு….!

வானத்தில் வயதுக்கு வந்த நிலவு அமைதியின்மை என்னும் முகில் மூடிச் சோகை பிடித்து வெளுத்துக் காணப்பட்டது.

உள்ளே மெல்ல மெல்ல ஊர்ந்து வரும் இருளின் கரங்கள்!

நேரம் முன்னிரவு ஏழு மணி!

அம்மா இறக்கி வைத்த இட்டலிச் சட்டியில் நீர் தெளித்து துணிகளில் இருந்து இட்டலியை விலக்கிப் பெட்டியில் போட்டபோது!…

வாசலிற் படலை திறந்து மூடும் சத்தமும், ஒரு கனத்த குரலும் ஒருங்கே கேட்டன,

“பிள்ளை ! சாந்தி….!”

முன்வீட்டு முருகேசு மாமாதான் வருகிறார்.

அவர் வரவேண்டும் என்றே அவள் காத்திருந்தாள். முருகேசு மாமாவுக்கு ஓவியம் கீற வராது. இரசிக்கவரும். ஓவியம்பற்றி நிறையப் படிக்கவரும்.

உலக சௌந்தரியங்கள் யாவும் முகத்தில் பூத்துவிட்டது போல் சிரித்துக் கொண்டு வருகிறார்!

அதுவரை அவள் வயிற்றில் இருந்த கவலைக் குமிழிகள் சில உடைந்து போயின.

மிகச் சுயாதீனமாயும், சுதந்திரமாயும் நீர்த் தொட்டியடிக்குச் சென்ற மாமா தொட்டித் தண்ணீரை ஓசை எழ முகத்தில் எறிந்து கழுவிக் கொண்டு சால்வையால் துடைத்தபடி உள்ளே வருகிறார். கால் கழுவாமல் அவர் யாருடைய வீட்டுக்குள்ளும் நுழைய மாட்டார் !

நிலா வெளிச்சம் தெரியாமல் மேகம் முற்றாகக் கவிந்திருந்தது. இந்த மேகத்தினால் நிலாவை எவ்வளவு நேரத்துக்கு மறைக்க முடியும் என்று நினைத்தபோது, அவளுக்குச் சிரிப்பு வந்தது.

“ஏன் பிள்ளை இந்தக் கதிரையைப் பின்னுவிக்கிறதுக்கு இன்னும் காசு கிடைக்கேலையோ?”

என்று கேட்டுப் பிய்ந்து போய்க் கிடந்த பின்னற் கதிரையைச் சற்றுப் பின்னே தள்ளி, அறுவதற்கு ஆயத்தமாய் இருந்த மறு கதிரையில் மெதுவாக அமர்ந்தார் மாமா.

இந்த இல்லத்திற்குக் காசு வருவது குறைவு. அப்பாவின் இரண்டு பரப்பு விவசாயம் ஒருபோதும் உச்சங்களைத் தொடமுடியாது.

வருகின்ற சிறிதளவு பணமும் நிறச் சோக்குகளாய் உருமாறும்; கடதாசிகளாய் விரியும்; தூரிகைகளாய் பரவும்; நிறமைகளாய் மாறும்; ஆடம்பரப் பொருள்களாய் ஒருபோதும் மாறாது. அது மாமாவுக்குத் தெரியும். தெரிந்தும் கேட்கிறார்!

“பிள்ளை ஓவியக்களம் நடத்தின போட்டிக்கு நீ அனுப்பின அந்த ஓவியம்…. அந்தக் கண்களிலை தெரிஞ்ச பயம்…ம்…. யாழ்ப்பாணத் தின்ரை நிலையை ஒரு கண்ணிலை காட்டின வடிவு…. ஓவியத்தைப் பற்றித் தெரிஞ்ச ஆர் பார்த்திருந்தாலும் அதுக்குத்தான் பிள்ளை முதல் பரிசு குடுத்திருப்பினை…”

அந்த ஐயாயிரம் ரூபாப் பரிசு அவளுக்கு கிடைக்கவில்லை என்பதில் மாமாவின் கவலை தான் அதிகம்!

அந்தக் காசு கிடைத்திருந்தால்… இந்தத் திண்ணையில் இரண்டு புதுக்கதிரைகள் தன் வரவைப் பார்த்திருந்திருக்கும் என்று உள்ளுக்குள் நினைத்தாரோ இப்போது?

அந்த ஓவியம்… பயம்!

எங்கும் இருள் கவிந்து ஒரு பகலின் கதை சோகமாக முடிகிற நேரம் ஒரு வீடு….. அந்த வீட்டின் பின்னால் உள்ள தக்காளித் தோட்டத்தில் தக்காளிப் பழம் பிடுங்கும் ஒரு பெண். வானத்தில் வட்டமிடும் ஒரு பொம்மர்……

தான் எந்தக் கணத்திலும் இறந்து விடக்கூடும் என்ற மரண பயம் அவள் முகத்தில்….

கடகத்தைத் தூக்கி ஓட ஆயத்தமாகும் அவள் நிலை…. அவளது கிழிந்த முந்தானையைப் பிடித்துக் கொண்டு பதறும் ஒரு சின்னப் பையன்…… அவன் அவள் மகனாக இருக்கலாம். கள்ளங்கபடமற்ற அந்தப் பிஞ்சு முகத்தின் திணறல்….. இருவருக்கும் மரணம் நிகழப் போவதைக் குறியீட்டில் காட்டும் சில நிழல் வடிவங்கள்…

இதுதான் பயம்!

“அதுக்குப் பரிசு வரும் எண்டு நான் எதிர்பார்த்திருக்கேல்லை மாமா….”

“உன்னை ஆர்பிள்ளை எதிர்பார்த்திருக்கச் சொன்னது….? ஆனால் அந்தப் பழுத்த ஓவியர் கனகராயற்றை தீர்ப்புக்கு ஒரு மதிப்புக் குடுத்திருக்க வேணுமோ இல்லையோ?”

“முடிஞ்சதை விடுங்கோ மாமா”

“மற்றதாராம் ஓவியங்களைப் பார்த்து மாக்ஸ் போட்டது”

“தெரியேல்லை …”

*இரண்டு பேர் பார்த்ததெண்ணினம். மற்றவர் ஆரெண்டு தெரி யேல்லை. பேரில்லாத அந்த மற்றவர் இன்னொரு ஓவியத்துக்கு முதல் பரிசு போட்டிருந்தாலும்…. உனக்கு இரண்டாம் பரிசு வந்திருக்க வேணுமெல்லே… ஒரு நடுவர் முதலாம் பரிசு போட்ட ஓவியத்துக்கு ஆறுதல் பரிசுகூட இல்லாமல் போறது எப்பிடிப் பிள்ளை …?”

“எந்தப் போட்டி இப்ப ஒழுங்காய் நடக்குது… நாட்டிலை எதுதான் ஒழுங்காய் நடக்குது….?”

“அப்ப… எல்லாம் தலைகீழாய்ப் போகட்டும் எண்டு விட்டுப் போடவோ?”

“இட்லி ஒண்டு சாப்பிடுங்கோ மாமா….”

அந்த நிகழ்வினால் அதிகம் பாதிக்கப்படாதவள் போல அவள் பதில்களும் செய்கைகளும் அமைந்திருந்தாலும் உண்மை அதுவே என்று கொள்ளமுடியாது.

ஓவியப் போட்டி முடிவுகள் பத்திரிகையில் வந்த போது இவளது பெயர் பரிசுக்குரியோர் பட்டியலில் இருக்கவில்லை . இவள் அதனால் சிறிதும் பாதிக்கப்படவில்லை .

பரிசு பெறுவதற்கான தகுதி தனக்கு இருக்கும் என்று அப்போது அவள் காத்திருக்கவில்லை.

பரிசளிப்பு விழா அழைப்பு வந்தபோது முதலாவது பரிசுபெற்ற அஜந்தனின் “வயது” என்ற ஓவியத்தைப் பார்க்கவேண்டுமென உள்ளூர ஒரு விருப்பம் ஏற்பட்டது. அவை பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுக்கட் பட்டதற்கான காரணங்களை நடுவர்கள் சொல்லக் கேட்பது ஓர் அநுபவமாயிருக்கும்.

போனாள்,

பரிசுபெற்ற ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படவில்லை.

ஏன் என்ற கேள்வி முதல் முள்ளாய் மனதில் ஏறியது. ஒருவேளை நடைமுறைச் சிக்கல்கள் ஏதும் இருந்திருக்கலாம்.

போட்டியின் பிரதம நடுவராக இருந்த ஓவியர் கனகராயர் பரிசு பெற்ற ஓவியங்களைப் பற்றிக் கருத்துக்கூற அழைக்கப்பட்டார்.

“நல்லதோர் ஓவியன் சில சமயங்களில் ஒரு சிறிய கோடு மூலமே தனது வலுவான கருத்து ஒன்றைச் சமுதாயத்திற்குக் கொடுத்து விடுவான்”

அவரது கருத்துக்களை அவதானமாய்க் கேட்டுக் கொண்டிருந்த போது முற்றிலும் நம்பமுடியாத செய்தி ஒன்று ஒலி அலை வடிவில் செவியை அடைந்து இறுகிற்று.

“பயம் என்ற ஓவியத்துக்கே நான் முதற் பரிசு கொடுத்தேன். ஆனால் ஏனோ தெரியவில்லை. அதற்கு இங்கு பரிசு வழங்கப்பட வில்லை, பரிசு பெற்ற ஏனைய ஓவியங்களைக்கூட இங்கு பார்க்க முடியாமல் போனது துர்அதிர்ஷ்டம்.”

அவளது புறாக்குஞ்சு இதயம் திடீரெனப் படபடவென அடிக்க ஆரம்பித்து விட்டது.

“அப்படியா?”

“அப்படியானால் ஏன்?”

“ஏன்? ஏன்? ஏன்?

“பயம்” ஓவியத்துக்குப் பரிசு கொடுக்க என்ன பயம்?”

ரகுராமன் பதிலுரையில் “நடுவர்களின் முடிவில் வேண்டிய திருத்தங்களை நாங்கள் செய்தோம்” என்றார்.

இவளது மனதுக்குக் கொஞ்சம் அமைதியின்மையும், கவலையும், விரக்தியும், பரபரப்பும் கிடைத்தன.

நாட்டில் ஓவியம் தொடர்பான சகல விடயங்களுக்கும் மேலதிகாரி ரகுராமன் என்று தோன்றியது.

நடுவர்களை நியமிப்பது, நியமிக்காமலே முடிவு செய்வது, எதையும் அவர் தீர்மானிக்க முடியும்! யாரும் அதைக் கேட்கக் கூடாது, கேட்கவும் முடியாது!.

விடயம் அவ்வளவோடாவது முடிந்திருக்கலாம். விழா முடிந்து வெளியேறினாள் சாந்தி..

ரகுராமன் அவசரமாய் அழைத்தார்.

“வாங்கோ மிஸ். ஒரு “ரீ” எடுத்திட்டுப் போங்கோ. நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த விழாவுக்கு வந்ததுக்கு நாங்கள் உங்களைத் “தாங்” பண்ண வேணும்.’

உபசரணை, உண்மை போன்ற மயக்கத்தை ஏற்படுத்தியது. தேநீரை அருந்தினாள்.

*எண்டாலும்….”

உண்மையை விட்டு வெகு தூரம் விலகி நிற்கும் விடயங்களில் ரகுராமன் இறங்கினார்.

இரட்டை மொழிகள்…. அநாகரிகமான பகிடிகள்… சிரிப்புக்கள்….

“ரகுராமன் ஒரு கலைஞன்” என்று ஏற்றுக்கொள்ளவே இவளுக்கு மிகக் கஷ்டமாக இருந்தது.

“கனகராயர் பிழை விட்டிட்டார். அதுதான் முழுசிக்கொண்டு நிண்டவர்…” அதற்கொரு பெரிய சிரிப்பு!

தேநீர்ச் சாலையின் ஈக்களினால் அசுத்தமான காற்று இந்தச் சிரிப்பினால் இன்னொரு படி அதிகமாய் மாசுற்றது.

தேநீர்க் கோப்பையைப் பாதியிற் கைவிட்டு இவள் வெளி யேறினாள்.

அவளது ஓவியம் கணிக்கப்படாதிருந்திருக்கலாம்! கிடைக்கப் பெற்ற ஒரு நேர்மையான கணிப்பு எழுந்தமானத்திற் கொச்சைப்படுத்தட்ட படுத்தலை ஜீரணிக்க முடியாதிருந்தது.

‘Unjust Criticism” என்று பழைய குடையை விரித்து மூடவும் முடியவில்லை .

அடியிற் கிழங்கு கிடக்க முளைக்கும் கோரையென…ப் பிடுங்கப் பிடுங்க மீண்டும் முளைவிட்டது ஓர் அரிப்பு!

இருளுடன் போரிட்டுத் தோற்றுப்போய் அழுது வடியும் நிலவு!

“வேண்டத்தக்கது அறிவோய் நீ” என்று சொன்ன மணிவாசகரில் இவளுக்கு விருப்பம். அதனால் இறைவனிடம் எதையும் வேண்டுவது குறைவு! “பரிசு வேண்டும்” என்று கேட்காத இவள் “அமைதி வேண்டும்” என்று கேட்க வேண்டிய நிர்ப்பந்தம்!

“இதுவரைக்கும் எங்கடை நாட்டிலை வரையப்பட்ட ஓவியங் களிலை ரகுராமன் நாப்பது வருஷத்திதுக்கு முந்தி வரைஞ்சு “ஒரு பசுத்தோல்” எண்ட ஓவியந்தான் சிறந்தது எண்டு… போனமாதம்

ஓவியக்களம் ஒரு பரிசு குடுத்தது… தெரியமோ பிள்ளை ?”

மாமா இவளை நிகழ்காலத்துக்கு இழுத்தார்.

“தெரியும்…”

“ரகுராமன் இப்ப உள்ளூர்ட் போட்டிகளிலை கலந்து கொள்கிற தில்லைப் பிள்ளை….. சர்வதேசப் போட்டியளிலை மட்டுந்தான் கலந்து கொள்கிறார்…”

வாழ்வில் நடிக்க முனைவர்களுக்குத்தான் மன உளைச்சல் அதிகம் என்று சொல்வார்கள். இவளுக்கு ஏன் இந்த வேதனை? இவள் செய்த தவறு என்ன? போட்டிக்கு ஓவியம் அனுப்பியது ஒரு தவறோ?

“சரி இனிமேல் போட்டியும் வேண்டாம். பரிசும் வேண்டாம். கெடுப்பட்டதுகள் எல்லாம் கொண்டு போகட்டும்….”

காற்றுக்கு மட்டும் கேட்கும்படி ஒரு சபதம்! விரக்தியைத் தொட்டுப் பார்த்திருந்தாள். அது அவளை நெருங்கிவர விரும்பிற்று.

முந்திய எண்ணக் கோவைகளை உதிர்த்துவிட மீண்டும் முயன்று தோற்றாள்.

“பிள்ளை … நான் வந்த விசயம்… மறந்து போனன்… பாத்தியே…..? மாமா சால்வையை உதறித் தோளில் போட்டுக் கொண்டு எழுந்தார்.

“இந்தா… இந்தக் கொழும்புப் பேப்பரை ஒருக்காப் பார்… நான் விடிய வாறன்…”

சின்னச் சிரிப்புடன் படியிறங்கிக் காற்றைக் குத்திக் கிழித்தபடி விறுவிறென்று நடந்து போனார்.

அரைகுறை மனதுடன் பேட்டரை விரித்துப் புற்பாயில் இருந்தாள் இவள்.

படப்பானில் நடைபெற்ற சர்வதேச ஓவியப் போட்டி முடிவுகள் வெளியாகியிருந்தன.

சாந்தியின் “தவம்” என்ற ஓவியம் முதற்பரிசு பெற்றிருந்தது.

– முரசொலி 03-09-1989

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *