கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 21, 2023
பார்வையிட்டோர்: 3,053 
 
 

(1996ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 

முன்னுரை

இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத்தடுப்பு முகாம் அனுபவங்கள்!

1983 இலங்கை இனக்கலவரத்தைத்தொடர்ந்து, பிறந்த மண்ணை விட்டுப் புகலிடம் நாடிக் கனடா புறப்பட்ட வேளை, வழியில் பாஸ்டன் நகரிலிருந்து கனடாவின் மான்ரியால் நகருக்கு ஏற்றிச்செல்ல வேண்டிய “டெல்டா ஏர் லைன்ஸ்” நிறுவனம் எம்மை ஏற்றிச் செல்ல மறுத்து விடவே, அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் எம்மை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்துவதில் மும்முரமாகவிருந்தார்கள். அதிலிருந்து தப்புவதற்காக அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து சுமார் மூன்று மாதங்கள் வரையில் நியூயார்க் மாநகரிலுள்ள புரூக்லின் நகரிலுள்ள தடுப்பு முகாமொன்றினுள் அடைத்து வைக்கப்பட்டோம். அக்காலகட்ட அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணத்தின் விளைவே இச்சிறு நாவலான “அமெரிக்கா”. 

தடுப்பு முகாமிலிருந்த சமயம் அவ்வப்போது அங்கு நானடைந்த அனுபவங்களை, எண்ணங்களைச் சிறு குறிப்புப் புத்தகமொன்றில் எழுதி வைத்திருந்தேன். பின்னர் கனடாவுக்குப் புகலிடம் நாடி வந்த பின்னர், கனடாவில் டொராண்டோவில் எழுத்தாளர் ஜோர்ஜ். இ. குருஷேவை ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் கொண்டு வெளியான “தாயகம்” பத்திரிகையில் எனது அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்களை நாவலாகப் பதிவு செய்ய விரும்பியபோது, அதற்கு ஆசிரியர் வெளியிட்டு ஊக்கம் தந்தார். அதற்காக எழுத்தாளர் ஜோர்ஜ்.இ. குருஷேவுக்கு நன்றி. பின்னர் “அமெரிக்கா” என்னும் இந்நாவல், ஏனைய சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்தின் ஸ்நேகா பதிப்பகம் மற்றும் கனடாவின் “மங்கை பதிப்பகம்” வெளியீடாக “அமெரிக்கா” என்னும் பெயரில் 1996இல் வெளியாகிப் பரவலான கவனிப்பைப் பெற்றது. 

ஜனநாயகத்தின் தொட்டில் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் அமெரிக்காவில் புகலிடம் நாடி வந்து அகதி அந்தஸ்து கோரியவர்கள் பலர் அமெரிக்காவின் பல்வேறு நகர்களிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். சிலர் ஆண்டுகள் பலவாக, அகதிக்கோரிக்கைக்கான வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டுச் செல்வதனால், அத்தடுப்பு முகாம்களில் வாடுகின்றார்கள். நாம் தடுப்பு முகாமினுள் அடைக்கப்பட்டபோது அங்கு ஏற்கனவே ஓரிரண்டு ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலரைச் சந்தித்தோம். இந்நிலையில் இந்நாவல் முக்கியத்துவம் மிக்கது. இவ்விதமான அகதிக்கோரிக்கைக் காரர்களின், சட்டவிரோதமாக நுழைந்தவர்களின் தடுப்பு முகாம் அனுபவங்களை வெளிப்படுத்தும் நாவல் என்னும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகின்றேன். 

தடுப்பு முகாமிலிருந்து வெளிவந்ததும் எனது வாழ்க்கை நியூயார்க் மாநகரத்தில் சட்டவிரோதக் குடிவரவாளனாகக் கழிந்தது. அவ்வனுபவங்களை மையமாக வைத்து ‘அமெரிக்கா’ நாவலின் தொடர்ச்சியாகக் ‘குடிவரவாளன்’ என்னுமொரு நாவலை எழுதினேன். ஆரம்பத்தில் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் தொடராக வெளியான அந்நாவல் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாகக் ‘குடிவரவாளன்’ என்னும் பெயரில் 2015இல் நூலாக வெளிவந்தது. 

முன்னர் தொகுப்பாக வெளியான ‘அமெரிக்கா’ நாவல் தற்போது, திருத்தப்பட்ட பதிப்பாக, இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகத் தனி நூலாக வெளியாகின்றது. இந்நாவலுக்கான அட்டைப்படத்தினைக் கட்டடக்கலைஞர் சிவசாமி குணசிங்கம் (சிட்னி, ஆஸ்திரேலியா) வரைந்துள்ளார். அவருக்கு எனது நன்றி. நூலினைச் சிறப்பாக வெளியிடும் மகுடம் பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் மைக்கல் கொலின் அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. அத்துடன் நூலுக்குச் சிறப்பான முன்னுரையினை அளித்த பேராசிரியர் செ. யோகராசா அவர் களுக்கும் என் இதயங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திருத்தப்பட்ட பதிப்பக வெளியீடாக வெளிவரும் ‘அமெரிக்கா’ நாவலை நீங்கள் அனைவரும் வரவேற்பீர்களென்ற நம்பிக்கை எனக்குண்டு. 

அன்புடன்,
வ.ந.கிரிதரன் 
(நூலாசிரியர்) 


அத்தியாயம் ஒன்று

இளங்கோவின் பயணம் 

உலகப்புகழ்பெற்ற நியூயார்க் மாநகரின் ஒரு பகுதி புரூக்லீனின் ஓர் ஓரத்தே. கைவிடப்படும் நிலையிலிருந்த, பழைய படையினரால் பாவிக்கப்பட்ட கட்டடத்தின் ஐந்தாம் மாடி. அந்தக்கட்டடத்திற்கு எத்தனை மாடிகள் உள்ளன என்பதே தெரியாது. எனக்குத்தெரிந்ததெல்லாம் நான் இருந்த கட்டடத்தின் பகுதி ஐந்தாவது மாடி என்பது மட்டும்தான். என்னைப்பொறுத்தவரையில் இந்த ஐந்தாவது மாடி அமெரிக்காவைப் பொறுத்த வரையில் இன்னுமோர் உலகம். ‘ஒய்யாரக்கொண்டை யாம். தாழம்பூவாம். உள்ளேயிருப்பது ஈரும். பேனும்’ என்பார்கள். எனது அமெரிக்கப்பிரவேசமும் இப்படித்தான் அமைந்து விட்டது. உலகின் செல்வச்செழிப்புள்ள மாபெரும் ஜனநாயக நாடு! பராக்கிரமம் மிக்க வல்லரசு! இந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கும் மட்டும் எனக்கு அமெரிக்கா ஒரு சொர்க்க பூமிதான். மனித உரிமைகளுக்கு மதிப்புத் தருகின்ற மகத்தான பூமிதான். ஆனால். என் முதல் அனுபவமே என் எண்ணத்தைச் சுட்டுப்பொசுக்கி விட்டது. ஒரு வேளை என் அமெரிக்க அனுபவம் பிழையாகவிருக்குமோ என்று சில வேளை நான் நினைப்பதுண்டு. ஆனால் மிகுந்த வெற்றியுடன் வாழும் என்னினத்தைச்சேர்ந்த ஏனைய அமெரிக்கர்களை எண்ணிப்பார்ப்பதுண்டு. உண்மைதான்! பணம் பண்ணச்சந்தர்ப்பங்கள், வெற்றியடைய வழிமுறைகள் உள்ள சமூகம்தான் அமெரிக்க சமூகம். ஆனால் அந்தச் சமுதாயத்தில்தான் எனக்கேற்பட்ட அனுபவங்களும் நிகழ்ந்தன என்பதையும் எண்ணித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. சுதந்திரதேவி சிலை நீதி, விடுதலை. சம உரிமையை வலுயுறுத்துகிறது. அமெரிக்க அரசியலமைப்பும் மனிதரின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்துகிறது. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. வெளியி லிருக்கும் மட்டும் அப்படித்தானிருந்தது. எல்லாம் உள்ளே வரும் மட்டும்தான். 

இதை எழுதுகின்ற இந்தச்சந்தர்ப்பத்தில் நானோர் இளம் எழுத்தாளன். எழுத்துலகில் பலவற்றைச் சாதிக்க வேண்டுமென்ற சோதிக்க வேண்டுமென்ற பேரார்வத்துடன் முயன்று கொண்டிருக்கின்ற இளம் எழுத்தாளன். அதே சமயம் நானொரு தமிழ்க்கனடியன். இன்றைய சூழ்நிலையில் எனது அமெரிக்க அனுபவங்களை மீளாய்வு செய்யும்போதுதான் பல உண்மைகள் வெளிப்படுகின்றன. புரூக்லீன் நகரில், தடுப்பு முகாமில் எனது மூன்று மாத கால அனுபவமும். நியுயார்க் நகரில் எனது ஒரு வருட அனுபவமும் எனக்கு எத்தனையோ விடயங்களைத் தெளிவுபடுத்தின. வாழ்வு பற்றிய பல்வேறு உண்மைகளைப் புரியவைத்தன. அனுபவங்கள் கசப்பானைவையாக இருந்தபோதும், அவ்வனுபவங்கள் தந்த படிப்பினைகள் மகத்தானவை. விலை மதிக்க முடியாதன. எனது இந்த அனுபவங்களை, இன்று அமெரிக்காவில் பல்வேறு தடுப்பு முகாம்களில் கைதிகளாக. ஏக்கங்களுடன், எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கிடக்கும் பல்வேறு நாட்டு மக்களுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன். 

ஆ. எனது பெயரைக்கூட கூற மறந்து விட்டேனே. இளங்கோ! என் பெயர்தான் அது. என் அப்பா ஒரு சிலப்பதிகாரப்பித்தர். அந்தப்பித்தில் எனக்கு வைத்த பெயர்தான் இளங்கோ. இளங்கோ வென்று பெயர் வைத்த ராசிபோலும் எழுத்தில் ஈடுபாடு ஏற்பட்டதோ? விரைவதே தெரியாமல் விமானம் விரைந்துகொண்டிருக்கின்றது. இன்னும் நான்கு மணித்தியாலங்களில் பொஸ்டன் நகரை விமானம் அடைந்து விடும். மிகமிக விரைவாகவே சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. திண்ணைவேலியில் பதின்மூன்று இராணுவத்தினரைப்புலிகள் சுட்ட செய்தியுடன் பெரிதாக வெடித்த கலவரம் நாடு முழுவதும் பரவியது. நான் பொறியியலாளனாக வேலை செய்துகொண்டிருந்த அரசாங்கத் திணைக்களத்துக்குச் சொந்தமான கார்கள் ஐம்பது வரையில் வாகனத் தரிப்பிடத்திலிருந்தன. யாருமே உதவிக்கு வரவில்லை. கடைசியில் எங்கள் திணைக்களத்தில் கடமையாற்றிய ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தைச் சேர்ந்த இந்தியப் பொறியியளாளர் ஒருவருடன் ஒரு மாதிரித்தப்பி வெளியேறி வெள்ளவத்தை ராமகிருஷ்ண மண்டபத்தைப் போய்ச்சேர்ந்தால்… குண்டர்களின் அட்டகாசம் அங்கும் வெடித்தது. அச்சமயம் மண்டபத்தில் சுமார் ஐம்பதுபேர் வரையில் இருந்தோம். எல்லாரும் மண்டபத்தின் மொட்டை மாடிக்கு ஓடினோம். பெண்கள், ஆண்களில் சிலர் தண்ணீர் தாங்கிக்கும். தளத்துக்குமிடையிலிருந்த பகுதியில் ஒளிந்து மறைந்துகொள்ள. எஞ்சிய நாங்கள் மொட்டை மாடியில் நீட்டிக்கொண்டிருந்த தூண்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டோம். நாங்கள் பதுங்கி ஒளிவதை எதிரே பிரைட்டன் ஹொட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பயணிகள் வீடியோ படம் எடுப்பதை அவதானிக்க முடிந்தது. 

வெள்ளவத்தைப் பகுதியிலிருந்த வீடுகளிலிருந்து அடித்து விரட்டப்பட்ட தமிழர்கள் குடும்பம். குடும்பமாகத் தெகிவளை பக்கமாக, புகையிரத இருப்புப்பாதை வழியே ஓடி வருவது தெரிந்தது. வெள்ளவதைப்பகுதியிலிருந்து புகை மண்டலம் நானா பக்கங்களிலும் பரவிக்கொண்டிருந்தது. புகையிரத இரும்புப்பாதை வழியாக வயதான தமிழ்ப்பெண்கள் முழங்கால் வரை சேலைகளை இழுத்துப்பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். பார்க்கப் பாவமாகவிருந்தது. 

இராமகிருஷ்ண மண்டபத்துக்கு முன்பாக, புற்றரையில் நின்றிருந்த யாழ்ப்பாணப்பிள்ளையார் விலாஸின் சொகுசு பஸ் வண்டி யொன்றைக் குண்டர்கள் கொளுத்தி விட்டார்கள். மண்டபத்தின் நிலத்தளத்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்தார்கள். மண்டபத்தைக் கொளுத்த முற்பட்ட போது அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொலிஸார் உள்ளே நுழைந்தார்கள். 

மாலை வரையில் இராமகிருஷ்ண மண்டபத்தில் தங்கியிருந் தோம். அங்கிருந்ததைக்கொண்டு ஆக்கிச்சாப்பிட்டோம். அன்றிரவே லொறிகளில் சரஸ்வதி மண்டபத்துக்குக்கொண்டு செல்லப்பட்டோம். லொறிகளில் ஏற்றியபோது பெண்கள் அழுதார்கள். யாருக்குமே எங்கு போகின்றோமென்று தெரிந்திருக்கவில்லை. சரஸ்வதி மண்டபத்தில் அகதிகளாகச் சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம் போகும் வரையில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியுருந்தோம். 

யாழ்ப்பாணத்துக்குச் சிதம்பரம் கப்பலில் சென்று கொண்டிருந்த போதுகூட நான் வெளிநாட்டுக்குப் புறப்படுவேனென்று எண்ணியிருக்கவில்லை. அழிவும். கொள்ளையும், இரத்தகளரியுமாக நாடிருந்த சூழ்நிலையில் நான் வெளியில் போவதே நல்லதாகப் பெற்றோருக்குப்பட்டது. கனடாவுக்கு அகதிகளாகப்போகலாமென்று விஷயம் காதில் பட்டது. இந்தச்சமயத்தில் சின்னம்மாவின் பணம்தான் வெளிநாடு போவதற்கு மிகவும் உதவியது. சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குள் முகவன் ஒருவனின் உதவியுடன் கனடா புறப்பட்டு விட்டேன். பலாலியிலிருந்து இரத்மலானை வரை இரண்டு மூன்று பேர் வரை அமர்ந்திருக்கக்கூடிய . தனியாரின் சிறிய விமானமொன்றில் பயணம். பின் கட்டுநாயக்காவிலிருந்து பாரிஸ் வரையில் YTA விமானத்தில் பயணம். பாரிஸிலிருந்து பொஸ்டன் வரையில் TWA விமானத்தில் பயணம். பின் பொஸ்டனிலிருந்து மான்ரியால், கனடா வரை டெல்டா விமானத்தில் பயணம். இவ்விதமாகத்தான் திட்டமிருந்தது. 

முதற் பிரச்சினை பாரிஸ் விமான நிலையத்தில் தொடங்கியது. பாரிசிலிருந்து. பொஸ்டனுக்கு விசா இல்லாமல் விமானத்தில் ஏற்ற மாட்டோ மென்று தடுத்தார்கள். கனடாவுக்குச் செல்லப்பொதுநல வாய நாடுகளில் ஒன்றான இலங்கையிலிருந்து செல்வதற்கு விசா தேவையில்லை யென்று எடுத்துக்காட்ட ஒரு வழியாகச்சம்மதித்தார்கள். அதற்கு எங்களுடன் பயணித்துக்கொண்டிருந்த இன்னுமோர் இலங்கை அகதி ஒரு வேளை உதவக்கூடுமென்று எடுத்து வைத்திருந்த அவ்விடயத்தை விபரிக்கும் புகைப்படப்பிரதி கை கொடுத்தது. அடுத்த தடை பொஸ்டனில் ஆரம்பமானது. அங்கிருந்து மான்ரியால் செல்வதற்கு விசா இல்லாமல் அனுப்ப முடியாதென்று தடுத்து விட்டார்கள். இவ்விதமாகக்கனடா செல்வதாக இருந்த எங்கள் திட்டம் பொஸ்டனின் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் முடிவுக்கு வந்தது. 

அத்தியாயம் இரண்டு 

அகதிக்கோரிக்கை! 

“என்ன இளங்கோ! ஒரே யோசனை?” அருள்ராசா தான் கேட்டான். ஊரில் இவனொரு கணக்காளன் (அக்கவுண்டன்). இவனும் என்னை மாதிரித்தான். கனடாவுக்கு அகதியாக நான் பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் சென்று கொண்டிருந்தான். அண்மையில்தான் திருமணம் செய்திருந்தான். அண்மைய கலவரங்களில் பாதிக்கப்பட்டிருந்தான். கலவரங்களின் பாதிப்பு அவனை நாட்டை விட்டே துரத்தியிருந்தது. அவனுடன் பணிபுரிந்த ஒரு தமிழ்ப்பெண்ணைக் குண்டர்கள் மானபங்கப் படுத்தியதை நேரிலேயே பார்த்தவன். அந்தப்பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத அருள்ராசா “போகிற இடத்திலை வரவேற்பு எப்படி இருக்குமென்று யோசித்துப்பார்த்தன்” என்றான். 

“பிரச்சினை அவ்வளவு இருக்காதென்றுதான் படுகுது. ஆனா இந்தைப் பிளைட்டிலை மட்டும் ஐந்து பேராவது எங்கட ஆட்கள் இருக்கினம் போலை படுகுதே?” 

“அதுவும் ஒரு பிரச்சினைதான். ஆனால் எல்லாம் நல்லபடியா முடியுமென்றுதான் படுகுது” 

இவ்விதமாகக்கதைத்துக்கொண்டிருந்த பொழுதே லோகன் சர்வதேச விமானநிலையத்தில் நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த விமானம் மெல்ல வந்து தரையிறங்கியது. எங்கள் எல்லாருடைய நிலையும் ஒரே மாதிரித்தான். அகதிகளாகப்பயணித்துக் கொண்டிருந் தோம். இவ்விதம் ஒரே நாட்டைச்சேர்ந்த நாம் ஐவரும் ஒன்றாகப் பயணித்தது. விமான நிலையக் குடிவரவு அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. எல்லாருடைய கடவுச்சீட்டுகளிலும் ‘ட்ரான்சிட்’ விசா பதித்தவர்கள். கடவுச்சீட்டுகளைத் திருப்பித் தரவேயில்லை. இதே சமயம் எங்களைக் கனடாவின் மான்ரிலால் நகருக்கு ஏற்றிச்செல்ல டெல்டா விமான நிர்வாகம் மறுத்து விட்டது. பிரச்சினை ஆரம்பமாகியது. எங்கள் ஐவரையும் விமானநிலையத்தின் ஒரு பகுதியில் பொலிஸ் காவலுடன் வைத்தார்கள். “என்ன நடக்குமோ?” என்ற யோசனையில் எல்லாரும் மூழ்கிப்போனோம். எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு, வீட்டை ஈடு வைத்து, வட்டிக்குப்பணமெடுத்து வந்தவர்கள்தாம் எங்களில் பெரும்பான்மையினர். இந்நிலையில் திருப்பி அனுப்பினார்களென்றால்… நேரம் போய்க்கொண்டிருந்தது. பிற்பகல் இரண்டு மணியளவில்தான் விமான நிலையத்தை வந்தடைந் திருந்தோம். வந்ததிலிருந்து ஐந்து மணித்தியாலங்கள் சென்றதே தெரியவில்லை. பசி வயிற்றைக்கிள்ளியது. சோர்வு எல்லார் முகங்களிலும் படரத்தொடங்கி விட்டிருந்தது. இதற்கிடையில் நாம் ஐவரும் ஒருவருக்கொருவர் பழக்கமானவராகி விட்டோம். 

இராஜசுந்தரம் இலங்கை வங்கியொன்றில் மனேஜராகக் கடமையாற்றியவர். நாட்டில் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு. இந்த வயதில் இன்னுமொரு புது வாழ்வினை வேண்டிப்பயணித்திருந்தார். மற்றவர் சிவகுமார். இவருக்கு வயது முப்பதுதானிருக்கும். ஆனால் அதற்குள்ளேயே தலையில் இலேசாக வழுக்கை விழுந்து விட்டிருந்தது. இவர் கொழும்பில் மகாராஜா நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண் டிருந்தவர். திருமணமாகாதவர். அடுத்தவன் ரவீந்திரன். பதினெட்டு வயதுதானிருக்கும். இரத்மலானை இந்துக்கல்லூரியில் க.பொ.த. (உயர்தரம்) படித்துக்கொண்டிருந்தவன். 

இதற்கிடையில் குடிவரவு அதிகாரி ஒருவர் வந்து எங்களைப் பத்து மணி “சுவிஸ் எயார் பிளைட்டில்” கொழும்புக்கு திருப்பி அனுப்பப்போவதாகவும். தயாராக இருக்கும்படியும் கூறினார். எங்களுக்கு இலேசாகப் பயம் ஏற்பட்டது. உண்மையிலேயே “திருப்பி அனுப்பிப் போடுவார்களோ?”. 

இதற்கிடையில் இராஜசுந்தரம் கூறினார்: “பை போர்சா எங்களைத்திருப்பி அனுப்பப்போறாங்கள் போலை இருக்கு. என்ன பிரச்சினை வந்தாலும் எதிர்க்க வேண்டும்.” 

இச்சமயம் முன்பு வந்த அதே “இமிகிரேசன்” அதிகாரி மீண்டும் வந்தார். எனக்குப் பசி வயிற்றைக்கிள்ளியது. சிவகுமாரால் அடக்க முடியவில்லை. 

‘சேர்! வீ ஆர் சோ ஹங்ரி இஃப் யூ அல்லோ அஸ் டு பை சம்சிங் டொ ஈட் இட் வுட் பி ரியலி கிரேட் ஃபுல்’ என்று சிவகுமார் கூறியதற்கு ‘யூ கான் காவ் யுவர் பிரெக்பாஸ்ட் இன் கலம்போ’ என்று அந்த அதிகாரி எகத்தாளமாகப்பதிலிறுத்தபோது எல்லாருக்கும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆத்திரப்பட்டு என்ன பயன்? பேசாமலிருந்தோம். 

அந்த அதிகாரி திரும்பிக் கொழும்பு செல்வதற்கான “போர்டிங் பாஸ்” எல்லாவற்றுடனும் வந்திருந்தார். ‘போர்டிங் பாசை’த்தருவதற்காக எங்களது பெயர்களைக் கூப்பிட்டார். 

ஒருத்தரும் அசையவில்லை. பதில் பேசாது மௌனாக விருந்தோம். அந்த அதிகாரியின் முகத்தில் ஆத்திரம் படரத் தொடங்கியதை அவதானித்தோம். இதற்கிடையில் இன்னுமொரு பெண் ‘இமிகிரேசன்’ அதிகாரியும் அவ்விடத்துக்கு வந்தார். அவரைப் பார்க்கும்போது எங்களுக்கும் ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது. எங்கள் நாட்டுப் பிரச்சினையை, நாட்டு நிலைமையினை விளங்கப்படுத்தினோம். அவர் எங்களது பிரச்சினைகளை மிகவும் அக்கறையுடன் செவி மடுத்தார். 

இராஜசுந்தரம் கூறினார்: “மேடம், நாங்கள் எவ்வளவோ பிரச்சினைகள் பட்டுக் கனடாவுக்குப் போவதற்காகப்புறப்பட்டிருக் கின்றோம். கனடாவைப் பொறுத்தவரையில் எங்களுக்கு விசா தேவையில்லை. எங்களுடைய பயணச்சீட்டுகளை டெல்டா விமான நிறுவனம் ஏன் ஏற்கவில்லையென்று தெரியவில்லை.” 

அதற்கு அந்தப்பெண் ‘இமிகிரேசன்’ அதிகாரி கூறினார். ‘சட்டப்படி அவர்கள் உங்களை மறுப்பது சரியில்லை என்றுதான் படுகிறது. ஆனால் எங்களால் செய்வதற்கொன்றுமில்லை. ஏற்கனவே மூன்று சிறிலங்காத் தமிழர்களை மான்ரியாலில் இவ்விதம் இறக்கியதற் காகக் கனடிய அரசு டெல்டா நிறுவனத்தை அபராதம் கட்டும்படி பணித்துள்ளது. இந்நிலையில் அவர்களால் செய்வதற்கொன்றுமில்லை. 

இதற்கு இராஜசுந்தரம் “இந்த நிலைமையில் எங்களுக்கு அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோருவதைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் எல்லாரும் அமெரிக்காவில் அகதிகளாக விண்ணப்பிக்கின்றோம்.” என்றார். 

இராஜசுந்தரம் அகதிக்கோரிக்கையை விண்ணப்பித்ததும் அந்தப்பெண் அதிகாரியின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அருகில் கடுகடுத்தபடியிருந்த ஆண் அதிகாரியின் முகத்திலும் கடுமை சிறிது குறைந்ததை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. இவ்விதம் எங்கள் அகதிக்கோரிக்கையுடன் எங்கோ சென்ற அந்தப்பெண் அதிகாரி விரைவிலேயே திரும்பி வந்தார். வந்தவர் 

நீங்கள் அகதிகளாக விண்ணப்பித்துள்ள காரணத்தினால் உங்களைத்திருப்பி அனுப்புவதில்லை என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. எல்லாருக்கும் மகிழ்ச்சிதானே’ என்றார். 

உண்மைதான். எல்லாரும் மகிழ்ச்சியுடன் இராஜசுந்தரத்தை நோக்கினோம்.

– தொடரும்…

– அமெரிக்கா (நாவல்), முதற் பதிப்பு: 1996, மகுடம் பதிப்பக வெளியீடு, இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *