அன்றாட விட்டில்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 4,810 
 
 

வேலம்மா மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டு தன் புருஷனை உற்றுப் பார்த்தாள்.

‘இன்னும் ஏன்யா குத்துக்கல் மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க? போய்யா, போய் எங்கியாவது நாலு காசு தேத்திக்கிட்டு வாய்யா!…வயிறு ரெண்டு நாளா தண்ணியைத் தவிர ஒண்ணும் காணலய்யா!…’

‘…’

‘நீ ஆம்பள! உனக்கு எங்கியாவது எதாவது கெடச்சுடும். இந்தப் புள்ளிங்களப் பாரு. சுருண்டு, சுருண்டு தூங்குதுங்க. இப்படியே உட்டோம், செத்துரும்.’

முருகன் குத்துக்காலிட்டுக் கொண்டு பீடி புகைத்தான். அவன் காதில் செருகி வைத்திருந்த கடைசி பீடி. ஒரு இழுப்பு இழுத்து விட்டுத் தன் குழந்தைகளைப் பார்த்தான். இரண்டும் பொட்டை! குச்சியாய்க் கைகால்கள். வயிறு மட்டும் பானை மாதிரி வைத்திருந்தன. கண்களில் சோர்வு. உணவுக்காய் அலையும் தன்மை.

முருகனுக்கும் பசித்தது. நேற்று காலை ஒரு டீ குடித்ததுதான். வயிறு அவ்வப்போது இரைந்து பசியை நினைவூட்டியது. அந்தக் குழந்தைகள் பசியில் கண் செருகிக் கிடப்பது மனசை வாட்டியது.
சிம்னி விளக்கு அவ்வப்போது கண் சிமிட்டியது. அந்தச் சின்னக் குடிசையில் மிகக் குறைந்த உயரத்தில் அடர்த்தியாய் மேற்கூரை வேய்ந்திருந்தார்கள். ஒரே ஒரு அறை. கதவுக்கும், ஜன்னலுக்கும் இடையில் கொடி கட்டிக் குப்பையாய்த் துணிகள். ஆச்சரியமாய் ஒரே ஒரு படம், முருகனின் தலைவர் படம் மாட்டியிருந்தது.

முருகனுக்குத் தெய்வம் தலைவர். தலைவதான் ரிக்-ஷா வாங்கிக் கொடுத்தார். இன்னிக்குக் கல்யாணம் செய்து, புள்ள பெத்து, தான் நினைக்கவே முடியாத வாழ்க்கைக்குத் தலைவர்தான் காரணம். இவ்வளவு செய்த தலைவருக்குப் பெரிதாய்த் தான் எதுவும் செய்ததாய் முருகனுக்கு ஞாபகம் இல்லை. ஒரு முறை ஒரு போராட்டத்துக்காகத் தண்டவாளத்தில் தலையைக் கொடுத்திருக்கிறான். தலைவர் அவனைப் பார்த்துப் புன்னகைத்து, ‘ நேர்மையா இரு! பொய் சொல்லாதே!’ என்று சொன்னது அவனுக்கு வேதவாக்கு. இப்போது கூட மூன்று நாள் நாடு தழுவிய பந்த் தலைவர்தான் நடத்துகிறார். அவனால் ரிக்-ஷா ஓட்ட முடியவில்லை. பட்டினி கிடக்க வேண்டும். என்றாலும் தலைவருக்காக என்ற போது மகிழ்ச்சியாக இருந்தது.

பீடியை நசுக்கி விட்டு, ‘தே! சும்மா கெட! நா ஒரு ரவுண்டு போயாறேன். எதாவது கெடக்குதா பாப்பம்.’ லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு எழுந்தான். வெளியேறி மரத்தடியில் நின்றிருந்த ரிக்-ஷாவைக் கிளப்பினான்.

வானம் மாதிரியே பூமியும் வெறிச்சென்றிருந்தது. நிலாவைத் துண்டு துண்டாய் நறுக்கிக் கம்பங்களில் வைத்தது போல மெர்க்குரிகள் வெளிச்சம் பொழிந்தன மௌனமாய். முருகன் ரிக்-ஷாவில் அமர்ந்து கொண்டிருந்தான். ‘ஏதாவது கிராக்கி வராதா? சாவு கிராக்கி.’

கொஞ்ச தூரத்தில் இரண்டு பெண்கள் வருவது தெரிந்தது. முருகன் மலர்ந்தான். அவர்கள் அருகில் வந்ததும் அணைந்தான். ‘அடச்சே! பார்த்தா பிரசவ கேஸ் போலத் தெரியுது. நம்முது தலைவர் தந்த வண்டி பிரசவத்துக்கு இலவசம் ஆச்சே! சரி உடு! நேர்மையாவது ஒண்ணாவது, வவுறுன்னு ஒண்ணு இருக்கே!’ என்று நினைத்துக் கொண்டான். ரிக்-ஷாவினுள் துழாவ, நாளை ஊர்வலம் போகும் போது ஒட்டுவதற்காக வைத்திருந்த, தலைவர் படம் போட்ட ஸ்டிக்கர் அகப்பட்டது. அவசரமாய் எடுத்து, ரிக்-ஷாவின் பின் பிரசவத்துக்கு இலவசம் என்ற எழுத்துக்களை மறைத்தான். படத்தில் தலைவர் அகலமாய்ப் புன்னகைத்தார்.

அவர்கள் இவன் அருகில் வந்து நின்றனர். கர்ப்பிணிப்பெண் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவஸ்தையாய் நெளிந்தாள். இன்னொருத்தி, ‘கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்குப் போகணும்.’ என்றாள்.
முருகன் சற்று விரைப்பாக, ‘ஐம்பது ரூபாய் ஆவும்.’ என்றான். அந்தப் பெண்ணின் கண்களில் கலக்கம் தெரிந்தது. இருப்பினும் உடனே ஏறிக் கொண்டார்கள். முருகன் உற்சாகமாய்ப் பெடலை மிதித்தான். நிலா பிடிவாதமாய் இவன் கூட வந்தது. ஐம்பது ரூபாய் இவன் நெஞ்சில் சந்தோஷம் கிளறிற்று. ‘கண்ணுங்களா! உங்கப்பன் உங்களுக்கு பிரியாணி வாங்கிட்டு வர்றண்டா!’
ரிக்ஷாவை ஆஸ்பத்திரி வாசலில் நிறுத்தி, ஐம்பது ரூபாயை வாங்கிக் கொண்டு, ‘ ல்லபடியா ஆம்பளப் புள்ளயா பெத்துக்கம்மா!’ என்று வாழ்த்தினான். பணத்தைப் பையில் செருகிக் கொண்டு சீட்டி அடித்துக் கொண்டே பெடல் மிதித்தான்.

பாலம் தாண்டிச் செல்லுகையில் இரண்டு பேர் கூப்பிட்டார்கள். கிட்டச் சென்று பார்த்ததில் கட்சிக்காரர்கள். புன்னகைத்தான். அவர்கள் அதை அலட்சியம் செய்து, ‘இறங்குடா கீழே.’ என்றார்கள்.

‘ஏண்டா நாடே தலைவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடங்கிக் கெடக்கு, அவரு கட்சியில இருந்துகிட்டு அவருக்கே துரோகம் பண்றியாடா நாயே!’ ஒருவன் எட்டி வயிற்றில் உதைத்தான்.

சட்டையைப் பற்றி இழுத்து பாக்கெட்டில் இருந்து பணத்தை உருவினான். ‘தலைவர் போட்ட பிச்சையில வண்டி வாங்கிட்டு, பிரஸ்வ கேஸுக்குப் பணம் வேற வாங்கறியா?’ அவன் கைமுஷ்டி முருகன் கடைவாயைப் பெயர்த்தது. உதடு கிழிந்து ரத்தம் கரித்தது. முருகன், ‘கண்ணுங்களா!’ என்றான். மயங்கினான்.

நிலாத்துண்டுகளைக் கம்பங்களில் பதித்தது மாதிரி வெளிச்சம் பொழிந்த மெர்க்குரிகளுக்குக் கீழே முருகன் கிடந்தான். லுங்கியைத் தூக்கிப் பணத்தை அண்டர்வேரில் செருகியபடி அவர்கள் நடந்தார்கள், எங்கேனும் ரகசியமாய்த் திறந்திருக்கும் பிராந்திக் கடையை நோக்கி.

– 28 -08-1993

Print Friendly, PDF & Email

1 thought on “அன்றாட விட்டில்கள்

  1. முருகனுக்கு யாராவது அருளியிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *