அந்நிய தேசத்தில் அழுகிறான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 8,782 
 

தமிழரிடமிருந்து ஏன் இந்தியரிடமிருந்தே வெகுதூரத்தில் நிகழ்கிறது அது. ஒருவன் தலை குனிந்து கஷகஸ்தான் நாட்டின் பரபரப்பான ஒரு வாகன வீதியில் புத்தகம் ஒன்றைக் கையில் விரித்துப் படித்துக் கொண்டே வருகிறான். ஒரு வாகனம் அவனை இடிப்பது போல் வந்து ஒதுங்கிப் போகிறது.

தன்னை, ஒவ்வொருவரையும் தனது நாட்டின் ராஜாக்களாகவும், ராணிகளாகவும் பாவித்துக் கொள்ளும் பிரஜைகளைக் கொண்ட அரபு தேசத்தின் வாசம் கொண்ட, ‘ரஷ்ய தேசத்தின் எல்லை தேசம் கஷகஸ்தான்.

ஏதோ ஒரு அரபு போன்ற மொழி பேசுகிறார்கள் அந்த தேசத்தினர். தமிழன் வாசனை கூட அங்கில்லை. தமிழரைப் பார்ப்பது அங்கு தெய்வத்தைப் பார்ப்பது போன்ற உயர்ந்த பொருட்டாக இருந்த நிலையில், இன்னொரு கஷகஸ்தான் நாட்டைச் சேர்ந்த வாலிபன் ஒருவன் அவனிப்படி குனிந்த தலை நிமிராமல் புத்தகம் படித்துக்கொண்டு வருவதை எரிச்சலுடன் கண்டு நேரெதிரேச் சென்று அவனுடய இடது தோளில் இடித்து விட்டுப் போகிறான்.

எதிரே வருபவன் வேண்டுமென்றே இடித்துவிட்டுப் போவதைக் கூட கண்டுக் கொள்ள வில்லை அவன். மாறாக இன்னும் சற்று ஒதுங்கியேச் செல்கிறான். வெற்றி ஏக்கத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்குத் தோல்வி மட்டுமல்ல, வெற்றியின் தாமதம் கூட நொடிக்கு நொடி மரணத்திற்கு சமம் தான். இவனுக்கு என்ன தோல்வியோ தெரியவில்லை. ஆள் மட்டும் பார்க்க கதாநாயகன் போலிருக்க அவனுடைய அழகை என் பார்வையும் கொஞ்சம் திருடிக் கொள்ளாமலில்லை.

ஏதோ ஒரு ஈர்ப்பான கலவரத்துடன் அவனை இப்படி தினமும் தான் பார்க்கிறேன். நானும் அவனும் ஒரே பாதையில் ஒரே நேரத்தில் இப்படி அவ்வப்பொழுது சந்தித்துக் கொள்ளும் அந்நிய தேசத்துப் பிரஜைகள். ஆச்சர்யமாக இன்று கையில் தமிழ்ப் புத்தகம் வேறு வைத்திருந்தான்.

“ஓஹோ… தமிழா?!” சற்றே மேலேறிக் கொண்ட என் புருவத்திற்கு இயன்ற வரை முயன்று ஆறுதல் சொல்லி, அவன் கையிலிருந்த புத்தகத்தை எட்டிப் பார்கிறேன். ஆம் தமிழே தான் ஏதோ வார இதழ் போல் இருந்தது. ஆனால் அவனின் குனிந்த தலை தான் என்னை ஏனென்று கேட்கக் கூட நிமிர்ந்த பாடில்லை, என்ன செய்வது, எங்கோ ஒரு தேசத்தின் மூலையில் இப்படிக் கையில் தமிழ்ப் புத்தகம் வேறு வைத்துள்ள ஒரு ஆளை கண்டுவிட்டு, யார் என்னவென்றுக் கூட கேட்காமல் எப்படி நான் விட்டுவிட முடியும். இன்னும் சற்று வேகமாக நடந்து அவனருகில் போகிறேன்.

அதற்குள் அவன் கீழிருந்தக் கல்லில் இடித்து கால் தடுக்கிக் குப்புற விழப்போக ஐய்யோ விழுந்து விட்டானே என தாங்கலாய்ப் பிடித்துக் கொள்ள நான் எட்டி ஓடுவதற்குள்…

அவனே சமாளித்து எழுந்து வேறு யாருக்கோ காலில் ‘கல் கிழித்து ரத்தம் வழிவதைப் போல மிகச் சாதரணமாக நடந்து போகிறான். அவனுடைய கால் கட்டை விரலின் நகம் கிழிந்து ரத்தம் வடிகிறது.

என்னடா இவன் பைத்தியக்காரனோ என பதறிப் போய் அவனை அழைக்க எத்தனிக்கிறேன். நான் திரும்ப வேண்டிய என் தினசரி பாதை வேறு குறுக்கே வந்துவிட்டது. எந்த பாதை வந்து என்ன செய்ய; என்ன தான் மனிதனோ இவன், தினமும் தான் பார்க்கிறேன் இப்படிதான் வருகிறான் இப்படிதான் போகிறான், இதில் தமிழனென்று வேறு தெரிந்து விட்டதே வேறென்ன செய்ய மீண்டும் அவன் பின்னாலேயே நடக்கிறேன்.

மடையனுக்குக் கால் வலிக்காதோ என்னவோ ரத்தத்தைக் கூட துடைக்கவில்லையே. சரி நாம் தான் சற்று அழைத்துப் பார்ப்போமே என்று அழைக்கிறேன்.

“ஏங்க… …’’

“…. …. …. …… ….”

“என்னங்க, ஏங்க தமிழுங்களா…?”

“… …. …. …. …. ….”

எங்கு மதித்தான். அருகில் வந்து கொண்டிருக்கும் கஷகஸ்தான் நாட்டினரெல்லாம் என்னைப் பார்த்து முறைக்கிறார்கள். அவன் என்னை சல்லிக்காசுக்கு மதிக்கவில்லை.

தெருமுனை சென்று ஒரு தேனீர் விற்கும் மலையாளி கடையில் ஒருவழியாக அமர்ந்து விட, அந்தக் கடைக்காரர் ஓடி வந்து “ஆஹா..” “ஓஹோ” என்கிறார், அது இருக்கு.. இது இருக்கு.. என்ன வேணும் அண்ணா, தம்பி-ன்னு என்னென்னவோ பேசுகிறார். அவன் எல்லாவற்றிற்கும் ஒரே பதிலாய் நிமிர்ந்து பார்த்து “ஒரு சிரிப்பினை” கில்லி வைத்தான், அவ்வளவுதான்.

இது வாடிக்கைப் போல இவனுக்கு. தேனீரும் தண்ணீரும் இவன் சொல்லாமலே மேஜைக்கு வந்தது. எனக்குத் தான் தேவையா இந்த வேலையென எரிச்சல் கொப்பளிக்க, அவனருகில் சென்று அமர்கிறேன். அவனேன் மதித்தான் என்னை. திரும்பிக் கூட பார்க்கவில்லை. “பைத்தியக்காரா..பைத்தியக்காரா…”என மனதில் திட்டிக்கொண்டு,“ஏம்ப்பா தம்பி…” என்றேன்.

“… … … … … …”

பதிலில்லை.

“ஏம்ப்ப்ப்ப்ப்பா… …. … கூப்பிடுறேன்ல மதிக்கிறியா நீயீஈஈஈஈஈ… … … … …” சற்று கோபத்தில் நான் கத்திவிட எல்லோரும் படக்கென என் பக்கம் திரும்பிப் பார்த்து முறைக்கிறார்கள். அய்யயோ! உணர்ச்சி வசப்பட்டு விட்டோமோ?

“ஐயா.. சாமி மன்னிக்கணும் நான் தமிழ்’’ மிகப் பவ்யமாக சொன்னேன்.

“பேரே தமிழா?” அவன்.

“க்க்கும்…, ஊரு தமிழ். பேரு நாராயணன்” சற்று நான் கோபமாகச் சொல்ல

“ஏனிப்படி சலித்துக்கொள்கிறீர்கள், பொறுமையா பதில் சொல்ல வராதா?”

“வரும்ப்பா. இத்தனை தூரம் என் பின்னாடி நீ நாய் மாதிரி வந்திருந்தா ரொம்ப பொறுமையா உனக்கு பேச வரும் என நினைக்கத்தான் செய்தேன். அவன் எழுந்தான். தேனீரை எடுத்துக் கீழே ஊற்றினான். தண்ணீரைக் குடித்தான். கடைக்காரர் ஓடி வர, ஏதோ கணக்கில் எழுதிக்கொள் என்பது போல் கையை ஆட்டிக்காட்ட, அவரோ “சரி எஜமான் என விடைப்பெறாத குறையாக பல்லிளிக்க.

இப்போது யார் பைத்தியக்காரனென எனக்குள் கேள்வி வேறு எழுந்தது. “ச்சே என்னடா உலகமிது ஏதோ தமிழாச்சேன்னு பேச நினைச்சது தவறா? இவனை மதித்துக் கூட இருக்க கூடாது. இவன் மனுசனேயில்லை. இல்லை. நிச்சயமாக இல்லை.”

அதற்குள் தேனிர் கடைக்கார மலையாள சேட்டா வந்து, “எந்தா அண்ணே ‘சாய்’ வேணுமா?”

“ஒண்ணும் வேணாஞ் சேட்டா”

“எந்தா ஆ அண்ணனிடத்து ஒடக்கு?”

“ஓடக்கா?”

“சண்டை.., சண்டை.. போட்டாச்சான்னு சோதிச்சது”

“ஐயோ, அவரு யாரோ நான் யாரோ ஆள விடு.. ….” நான் எழுந்து வீட்டுக்குக் கிளம்ப, மீண்டும் மனம் கேட்காமல் திரும்பி அவன் போன பாதையை பார்க்கிறேன். அவன் மீண்டும் பழையபடியே தலை குனிந்து புத்தகம் படித்தாற்போல நடுத்தெருவில் நிற்கிறான், வெகு வேகமாய் ஒரு பேருந்து அவனை இடித்துவிட நேர் கொண்டு வருகிறது. அடப்பாவி என தலை தெறிக்க நான் ஓடுகிறேன்.

அவன் குனிந்த தலை நிமிராது திடீரென ஒரு எட்டு வைத்துப் பேருந்து அருகில் வருவதற்குள் இலகுவாய் நகர்ந்து தெருவைக் கடந்து அதோ நடந்து சென்று கொண்டிருக்கிறான்.

“ச்சே!!!”

எனக்கு அந்தப் பேருந்து அவனை இடித்துத்தான் விட்டிருக்க கூடாதா என்றிருந்தது. ஆனால் பாவம். பாவப்பட்ட முகம் அவனுக்கு. முகத்தில் ஒரு தாடி இல்லை, தோளில் சால்வை இல்லை, கையில் வெண் சுருட்டில்லை, மது புட்டியில்லை; மிக நேர்த்தியாக தலை வாரி அழகாக உடையணிந்து தோள் பை கணினியை தோளில் மாட்டிக்கொண்டு அழகான தேவதாசைப் போலிருந்த அவனை பேருந்து இடித்திருந்தால், ‘பாவமென்று மனம் பரிதாபம் தான் பட்டிருக்கும். நான் இரண்டு மூன்று நாளிற்கு உறங்கிக் கூட இருக்கமாட்டேன், நல்ல வேலை இடிக்கவில்லை.

அதுசரி, இவ்வளோ கப்பலு கவுந்தா மாதிரி போக அப்படி என்ன தானிருக்கும் இவனுக்குள்? பேசித்தான் பார்ப்போமா, வேண்டாம்… வேண்டாம். மீண்டும் மீண்டும் என்னைப் பார்த்தால் கோபப்படுவான்.

இல்லை இல்லைப் படமாட்டான். கேரளா சேட்டாவைப் பார்த்து எத்தனை அழகாகச் சிரித்தான். ஆயிரம் உறவுகளின் பாசத்தை இதயத்தில் தாங்குபவனின் ஒற்றை சிரிப்பல்லவா அது. சற்றுப் பேசித் தான் பார்ப்போமே, ‘என்ன தலையையா வாங்கிடப் போறான். வா இன்னைக்கு ரெண்டுல ஒன்னை பார்க்காம விடுறதில்லை அவனை என மனதில் கங்கணம் கட்டிக் கொண்டு அவனை நோக்கி நடந்தேன்.

சற்று அவனருகில் சென்றதும் தான், அதும் இப்போது தான் பார்வையில் பட்டது. அவன் புத்தகம் படிக்கவில்லை புத்தகதின் உள்ளே ஒரு புகைப்படம் வைத்து பார்த்துக் கொண்டு வருகிறான்.

ஐய்யோடா…! ச்சு..! இதைத்தான் பார்க்கிறானா இவன் என மனம் கொஞ்சம் இளக, அதற்குள் அவனுடய கண்கள் கலங்கி மெல்ல ஒரு சொட்டுக் கண்ணீர் அந்தப் புத்தகத்தில் பட்டுத் தெறித்து புகைப்படத்தில் விழுவதை நானும் பார்க்கத்தான் செய்தேன். அதை மடக்கிக் கக்கத்தில் வைத்து கொண்டு எதையோ இழந்தவன் போல் மீண்டும் நடக்கிறான்.

நான் சற்று அதிர்ச்சியில் நின்று என்னவோ இவனுக்குள் இருக்கிறதென உணர்ந்து கொண்டு அவன் பின்னாலேயே நடக்க அவன் இன்னும் சற்று வேகமாக நடக்கிறான். எனக்கு மனது முற்றிலும் ஆறவில்லை, ஓடி மீண்டும் அவனருகில் சென்று ஏன் தம்பி என்னாச்சுப்பா என்றாவது கேட்டு விடலாமென நெருங்க.., நெருங்குவதற்குள் அவன் வேறு ஒரு சந்து வளைவில் திரும்பி வலதும் இடதுமாக மாறி.. ஒரு வீட்டிற்குள் நுழைந்து விடுகிறான்.

என்ன? ஏன் என் பின்னால் வருகிறாய்? யார் நீ? உனக்கென்ன வேணும்…? ம்ம்ம்ம்… ஒரு கேள்வியும் கிடையாது. அவன்பாட்ல போறானே.., வேறென்ன செய்யலாமென யோசித்து விட்டு, அவன் போன வழியிலேயே போய் வலதும் இடதுமாய் திரும்பி அவன் வீட்டுக் கதவைத் தட்டினேன்.

சில நொடிகளின் நிசப்தத்திற்குப் பிறகு கதவு திறந்தது. அவனே தான் வந்து கதவைத் திறந்தான். அழுதுக் கொண்டிருந்த முகத்தை துடைத்துக் கொண்டு வந்திருப்பது தெரிந்தது.

“என்ன வேணும்?”

“ஒண்ணுமில்ல தம்பி… சும்மா…”

“உள்ள வாங்க.” உள்ளே வந்து அமர்கிறேன். அவன் தண்ணீர் கொண்டு வர பக்கத்து அறைக்குள் செல்கிறான். நான் வீட்டைச் சுற்றிலும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன். கவிழ்ந்து கிடக்கும் சாப்பாட்டுத் தட்டும், சட்டைப் போடாத பிள்ளையைப் போல உரையணியாத மெத்தையும், மேஜையின் மேல் கிடக்கும் அழுக்குத் துடைக்காத கணினியும் ஆங்காங்கே சிதறிய தமிழ் புத்தகங்களும் கழற்றி வீசிய ஆடைகளும்.. பாதி கிருக்கிவிட்டு கசக்கி எறிந்த கடிதமாகிடாத காகிதங்களும்.. ஒற்றைச் சுவற்றில் மாட்டிய ஒரு சாமிப் படமும் ஏன் ஏன்.. ஏனென்ற ஆயிரம் கேள்விகளை எழுப்ப, அதற்குள் அவன் வந்து விட்டான்.

“என்ன பிரதர் வீடு இப்படி இருக்கேன்னு பார்க்குறீங்களா, என்ன பண்றது, க்ளீன் பண்ணனும்னு தான் நினைப்பேன்; அப்படியே நைட் வந்துடுது காலைல விடிஞ்சுடுது இரண்டு வருஷம் ஓடி போச்சு பிரதர். இப்பலாம் இந்த வாழ்க்கைக்கே நான் பழகி போயிட்டேன் பிரதர். குடும்பத்தை ஊர்ல விட்டுட்டு வெளி நாட்டுல வந்து பிரிஞ்சு வாழுற மனுஷன்; இப்படித்தானே பிரதர் இருக்கும்?”

அவன் கேள்வியைக் கேட்கிறானா அல்லது சொல்கிறானா புரியவில்லை. அவனுடைய எதையோ இழந்த ஒரு தோற்றமென்னை இன்னுமின்னும் பாதிக்க ஆமென்று சொல்ல முடியாமல் நான் தவிக்க என்னை நிமிர்ந்துப் பார்க்கிறான் அவன்.

“எங்க வேலை செய்றீங்க தம்பி?” என்றேன் நானாக.

“… … … … … ” எந்த பதிலும் இல்லை.

“எந்த ஊருன்னு தெரிஞ்சிக்கலாமா தம்பி?”

அவன் அவனுக்கான எந்த பதிலையுமே வைத்துக் கொள்ள விரும்பாதவனைப் போல என்னையே பார்த்தான்.

“தம்பி நீங்க எந்த ஊருன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“என்ன ஊரு பிரதர், பெரிய ஊரு. இதான்.., இதான் ஊரு.., இதான் வாழ்க்கை, இதான் தலை எழுத்து.., இது தான் எல்லாம். ஏன் நாமெல்லாம் இப்படி இருக்கோம் பிரதர்?”

“எப்படி?”

“ரெண்டாங்கட்டானா. சம்பாதிக்கவும் சம்பாதிக்கணும், வெளி நாட்டுக்கும் வரணும். ஆனா வீட்டை விட்டுட்டும் இருக்க முடியாது..”

“ஊர்ல யார் இருக்காங்க தம்பி?”

“ஊர்ல தான் பிரதர் வாழ்க்கையே இருக்கு. என் உயிரே அங்க தான் பிரதர் இருக்கு”

எனக்கு ஒரு நொடி தொண்டையே அடைத்தது. அவன் வேறு திடீரென அழுகிறான், நிறுத்துகிறான். மீண்டும் அழுது கொண்டே…

“என் மனைவி பாவம் தெரியுமா, கல்யாணம் பண்ணி ஒரு மாசம் கூட ஆகல விசா வந்துருச்சுன்னு விட்டுட்டு வந்துட்டேன். போன் பண்ணினாலே அழுவுறா பிரதர்”

எனக்குப் பேச நா எழவில்லை. நெஞ்சம் உடைத்துக் கொண்டு வந்தது. அதையும் மீறி.. “ஏன் ஊருக்குப் போகலையா” என்றேன். அவன் பதில் பேசவில்லை. “நடுவுல ஒருமுறை போய் வந்திருக்கலாமே” என்றேன் மீண்டும்.

“அட ஏன் பிரதர் நீங்க வேற..” கண்கள் கலங்கி அழுகை கூடியது அவனுக்கு.

“ஏன்; ரெண்டு வருசத்திற்கு ஒருமுறை கூட உங்களுக்கு விடுமுறைல போகமுடியாதா?”

“விடுங்க பிரதர்” கண்களை துடைத்துக் கொள்கிறான்… தொடைத்துக் கொண்டு…

“இதான் நம்ம வாழ்க்கை, பிறகு அதைபத்திப் பேசி என்னவந்துடும்.. இதோ மணி ஏழாச்சி. இப்படியே எட்டாகும் பத்தாகும்.. பண்ணிரண்டாயிடும்.. தன்னால தூக்கம் வரும். திரும்ப விடிஞ்சா எழுந்து குளிச்சி ஓடி போயி ஆபிஸ்ல விழுந்தா மீண்டும் மாலை காலை, காலை மாலை இது தான் வாழ்க்கை பிரதர். பணம்; எல்லாம் பணம் பிரதர். பாழாப் போன பணம்…” கையிலிருந்த எதையோத் தூக்கி எறிந்தான்.

எனக்கு பகீரெண்றது. அப்படியே உட்கார்ந்து கதறி அழுகிறான். நான் எழுந்து போய் அவனருகில் அமர்ந்து “சரியாயிடும்.. சரியாயிடும்.. அழாதிங்க அழாதிங்க..” என்றேன்.

“என் பொண்டாட்டி போன்ல எப்படி அழுவுறா தெரியுமா? வேலைக்குப் போனா வேலையே ஓடலை பிரதர். என்ன பண்றதுன்னே தெரியல, செத்துடலாமான்னு இருக்கு. தூக்கிப் போட்டுட்டு போங்கடான்னு படுத்துக்குனா ‘பெனாலிட்டின்ற பேருல ஒரு நாள் லீவுக்கு இன்னும் ரெண்டு நாள் சேர்த்து மூணு நாள் கட் பண்றானுங்க பாவிங்க. சரி, ஊருக்கேதான் போயி தொலஞ்சிடலாம்னு பார்த்தா, ஊர நினைச்சாலே பயம் வருது”

இத்தனை வருத்தங்கள் மனதில் இருந்து அழுத்த; யாரிடமாவது கொட்டிவிட இயலாமல் தான் இவன் இப்படி இருந்தானோ’ என நினைத்துக் கொண்டு, நான் அமைதியாக அவன் சொல்வதையே கேட்கிறேன்..

அவன் தொடர்ந்து.. “வெறும் கிராஜுவேட் பிரதர் நான். அங்க போய் என்ன செய்துட முடியும்? ஏதோ இங்க ஆள் பற்றாக் குறைன்னு என்னை இன்ஜினீயர் ஆக்கிட்டாங்க. ஐம்பதாயிரம் சம்பளம். ஊர்ல வருமா? எனக்கு முன்னாடி பத்துப் பேரு வேலை தேடி B.E. இன்ஜினீயர்னு நிப்பான். என் படிப்புக்கெல்லாம் அம்பதாயிரம் சம்பளம் கொடுத்து ஊர்ல எந்த கம்பனியும் வேலை தரமாட்டான் பிரதர். இதுல வேற எனக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கு. இன்னும் அது முகத்தை கூட பார்க்கல பிரதர்”

எனக்கு ஐயோவென்றானது. தூக்கிவாறிப் போட்டது. பரிதாபமாய் அவனைப் பார்க்கிறேன். அவன் பேசுவதை நிறுத்துவதாய் இல்லை.

“வெறும் நெட்டுல பார்த்து வாழ்க்கை போது பிரதர் எங்களுக்கெல்லாம். அன்னைக்கு வெப்கேம்ல பார்க்குறேன்.. குழந்தை கையை ஆட்டி ஆட்டி என்னமோ சொல்லுது. அப்பான்னு தான் கூப்பிடுமோன்னு ஒரு தவிப்பு எனக்கு, ஹெட் போனை அது காதுல வைக்க சொல்லிட்டு.. ‘செல்லம்.. பட்டுன்னு’ என்னன்னவோ சொல்லிக் கத்துறேன், அங்கேயே கண்ணெல்லாம் கலங்கிடுச்சி பிரதர், அவ அழுவுறா நானும் அழுவுறேன். நெட்டுக்கே போறதில்ல இப்பலாம்” மேஜை மேல் ஒரு குத்து குத்தினான். அழுதான். கதறினான். ஒரு நொடி அமைதியானான்.

“இன்னும் குழந்தை பிறந்து ஊருக்கே போகலையா?”

“போகலையே. குழந்தைய எப்படி தூக்கணும்.. எப்படி வெச்சிருக்கணும்னு தனியா ரூம்லயே கைய இப்படி வெச்சி.. அப்படி வெச்செல்லாம் பார்ப்பேன் பிரதர், என் தலையெழுத்து.. தலையெழுத்து..” தலையிலடித்துக் கொண்டு அழுகிறான்.

என்னால் அவன் கண்ணீரைத் துடைக்கக் கூட துணிவில்லை. கேள்வியும் பதிலும் அவனாக இருக்க நான் என்ன சொல்லியோ செய்திடவோ முடியும்?! இதெல்லாம் கேட்பதை விட இங்கிருந்து எழுந்து வெளியேறி விடலாமா என்று கூட இருந்ததெனக்கு. ஆனாலும் அப்படி விருட்டென அவன் உணர்வுகளை மதிக்காமல் விட்டு எழ இதொன்றும் வெற்றுத்தனமான விரக்தியோ அலல்து அவனின் கையாலாகாத்தனமோ இல்லை தானே.., எவரின் சாபம், என்ன வாழ்வின் உத்தி, யார் செய்த தவறின் காரணமோ இந்த அழுகை கதறலெல்லாமென வெறுமனே சொல்லத் துணியவில்லை நான். இன்னும் எத்தனை இளைஞர்கள் இப்படியெல்லாம் இன்னும் எந்தெந்த தேசங்களில் கண்ணீரும் கவலையுமாய் வாழ்க்கையை வெறுத்து வாழ்கிறார்களோ, யாரறிவார்..?

இதெல்லாம் காலத்தின் மற்றொரு கோலமன்றி வேறென்ன என நெஞ்சம் கனக்க, மனைவியும் குழந்தையுமான ஒரு புகைப்படத்தைக் கொண்டு வந்து அவன் என்னிடம் காட்டுகிறான். அவனுக்குள்ளேயே அவன் நினைத்து நினைத்து நடுங்கிக் கொண்டிருப்பது அவனுடைய ஒவ்வொரு செய்கையை கவனிக்கையிலும் தெரிந்தது.

“நாளைக்கு நான் ஊருக்குப் போனா ‘இந்த குழந்தைக்கு நான் யார்னு தெரியுமா பிரதர்? என் குழந்தை என்னை அப்பான்னு கூப்பிடுமா?” அவன் கேள்விக்கு என்னால் பதில் கூற இயலாமையை தலையசைத்து ஏதோ சொல்வதுபோல் ஒரு ஜாடை செய்து காட்டுகிறேன், வேறென்ன, அவனிடம் அவனை அவன் குழந்தைக்கு தெரியுமென்று என்னால் எப்படி வெறும் வார்த்தையால் சொல்லிட முடியும். ஒன்றுமே பேசாமல் நான் பிரம்மை பிடித்தவன் போல் அவனையேப் பார்கிறேன். “எனக்கும் குழந்தையைப் பார்க்கணும் கொஞ்சனும் தூக்கி வெச்சிக்கனும்னு ஆசையில்லாம எல்லாம் இல்ல பிரதர், எனக்கு குழந்தைன்னா கொள்ளை ஆசை, அதைவிட பணம் பெருசில்ல தான், ஆனா இந்த வேலையையும் விட்டுட்டா ஊர்ல போயி என்ன தான் பண்றது? எங்க போயி வேலை தேடுவேன்?? என் கூட அன்னைக்கு சுத்துன அதே பசங்க இன்னைக்கும் ஊர்ல அப்படியே தான் சுத்தறானுங்க, அதெல்லாம் பார்த்துத்தான் வேற வழி இல்லாம இங்கயே காலத்தை ஓட்றேன் பிரதர், எப்படின்னா கஷ்டப்பட்டு என் தங்கச்சிங்க கல்யாணத்தை முடிச்சுட்டா கூட ஊரப் பார்த்துப் போய்டுவேன்…”

“உனக்கு தங்கைங்க வேற இருக்காங்களா?”

“ஐயோ மூணு தங்கைங்க பிரதர்”.

“அப்புறும் எப்படி நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அவங்களுக்கு பண்ணாம?”

“என் சின்ன வயசுல எனக்கு கல்யாணம் பண்ணித் தான் மூத்த அக்காவிற்கு கல்யாணம் பண்ணினோம். அதில்லாம மூணு தங்கைச்சிங்க வேற இன்னும் இருக்காங்க, என்ன பண்றதுன்னே தெரியல ஒண்ணு ஒண்ணா முடிக்கணும். எல்லாம் வயசுப் பசங்க பிரதர்”

“யப்பா போதும்பா; போதும். என்னால இதற்கு மேல் தாங்க இயலாது”.

“ஏன் பிரதர்”

“இல்லப்பா நான் வரேன், பிறகொரு நாள் பார்க்கலாம், நான் புறப்படுகிறேன்.. கடவுள் உனக்கு துணையிருப்பார்”

“பார்த்திங்களா.. பார்த்திங்களா.. இதுதான் பிரதர். இதுதான் மனுசன்றது. அவங்க அவங்க வாழ்க்கை அவுங்கவுங்களுக்கு பெருசு…” அவன் வார்த்தை சுட்டது. நான்தான் சற்று அவசரப் பட்டுவிட்டேனோ என ஆசுவாசப் படுத்திக் கொண்டு நிற்க; அவன் பேசுகிறான்..

“நிறைய பேரோட வாழ்கையை நிறைய பேரால தாங்கிக்க முடியறதில்லை பிரதர், சங்கிலி மாதிரி வர பல சுமைகளுக்கு மத்தியில் வெறும் பணம் வருதேன்னு இங்க இருந்து எல்லோரும் மாதிரி என்னாலயும் சிரிக்க முடியலை. இதே என் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் மட்டும் என்னை பார்க்கணும்னு எண்ணமே இருக்காதா? நாங்க அழுற அழைக்கு ஆறுதல் சொல்ல வழி இல்லாம அவங்க தன்னோட கவலையை மறைச்சுக்கிறாங்க, இப்பலாம் பணம் தான் நிறைய பேரோட விதியை நிர்ணயிக்குது பிரதர்.

வீட்டை விட்டு வெளிய வந்துட்டா ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கனும்னா கூட இப்போ பணம் தேவைப்படுது. பணம் இந்தக் காலத்துல அரியணை இல்லாம ஆளுது பிரதர். நானெல்லாம் சம்பாதிக்கிறதைவிட அதிகம் சேமிக்கத் தெரிந்தவன்தான். ஆனால் என் ஒருத்தனால எவ்வளோ சேர்த்திட முடியும்? இப்படி என்னைப் போல அப்பா இல்லாமலும், இருந்தும் எத்தனை இளைஞர்கள் நம்ம நாட்ல இருந்து வந்து இந்த மாதிரி அயல் தேசங்கள்ல கஷ்டப் படுறாங்கத் தெரியுமா?

அவுங்கல்லாம் திரும்ப நம்ம ஊருக்கே வந்துட்டா, அத்தனைப் பேருக்கும் நம்ம ஊர்ல வேலைக் கிடைக்குமா பிரதர்? ஏதோ கிடைக்குற இடத்துல பொழப்ப ஓட்றதால உள்ளூர்ல இருக்கவுங்களுக்காவது குறைஞ்ச பட்ச வேலை வாய்ப்பு பெருகுது. நாங்கல்லாம் வெளியில் தெரியாம அணையிற விளக்கு மாதிரி பிரதர், வீட்டுக்குள்ள எரியிற நெருப்புக்கு எங்களைப் போன்ற இளைஞர்களின் வாழ்வும் கனவும் லட்சியமும்தான் தியாகம் செய்யப்படுதுன்னு எல்லோருக்கும் புரியறதில்ல.

ஏதோ, பாரின் போறான், வாசனையா சென்ட் அடிச்சிக்கிறான்னு நினச்சிக்கிறாங்க. ஆனா என்ன ஒன்னு; இங்க நின்னு அழுதாலும் துடைச்சிக்க பணமாவது கிடைக்குதேன்னுதான் எங்க வாழ்க்கையெல்லாம் இங்கயே போகுது. இங்கு சுருக்கமா சொல்லனும்னா பணத்தின் விலை கண்ணீர்; அவ்வளவுதான்… அவ்வளவுதான் தான் எங்க வாழ்க்கை. இதை விட்டுட்டு சுயநலத்திற்காக ஊருக்குப் போனா, பத்து நாள் சும்மா இருக்கறதை பார்த்துட்டு பதினோராவது நாள் பக்கத்து வீட்டு சின்னப் பசங்க கூட கேலியாத்தான் சிரிக்கிறாங்க. அக்கம்பக்கம், உறவு எல்லாமே நம் பலம் பொறுத்தே நமக்கு பலம்னு அனுபவிச்சா தெரியும். அவுங்களுக்கெல்லாம் பிறருக்கு உதவறதை விட; நலிஞ்சி போனவங்களைப் பார்த்துக் கிண்டலா சிரிப்பது சுலபம். அடுத்தவங்க பாரத்தைத் திரும்பிப் பார்க்கக் கூட அவர்களின் வாழ்வின் வேகம் அவர்களுக்கு வாய்ப்பை தரதில்ல பிரதர். அதனால தான் எல்லாம் பட்டுட்டு கடைசியா என்னோட வலி என்னோட போகட்டுமேன்னு, எப்படியோ இரண்டு வருடங்களை கடந்துட்டேன்” என்றபடி ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டான்.

அவன் பேசப்பேச எதையுமே என்னால் ஆகுமென்றோ இல்லையென்றோ சொல்ல இயலவில்லை. உறவுகளைப் பிரிந்த பிரிவின் வலி அவனுடையது. பிரிவு எத்தனை கொடியது, சமூகத்தின் மறுக்க இயலாத கருத்த பக்கம் எப்படி பிறரின் உணர்வுகளை ரணப்படுத்துகிறது, பிரிவு ஒருவரை தனிமையில் எப்படி வாட்டி எடுக்கும் என்பதற்கெல்லாம் இவன் ஒரு உதாரணம். இவன் கேட்கும் கேள்விகளுக்கு எதற்குமே பதிலற்றவனாகவே, பதில் கூற வேண்டாதவனாகவே, ‘நம் சமுகத்தின் போர்வைக்குள் ஒளிந்து நின்று நான் அவனைப் பார்க்கிறேன்.

“இந்த ரெண்டு வருஷம் இங்க இருக்கோமே இந்த ரெண்டு வருஷம் எத்தனை நீளம்; எவ்வளவு வலி தெரியுமா பிரதர்? எங்களோட சந்தோஷம் சிரிப்பெல்லாம் அந்த ரெண்டு வருஷத்தின் கண்காணா தொலைவுல போய் பொதிஞ்சிப் போச்சி பிரதர். நாமெல்லாம் யாராலோ சாபம் பெற்ற பாவிகள். எப்படியோ போகட்டும்னு வாழ்ந்து என் பிள்ளைகளை நம்மூரிலேயே பெரியாளாக்கி அவனையாவது வெளிநாட்டுக்கு வந்து கஷ்டபடாம பார்த்துக்கணும் பிரதர்.

ஆனா அதுக்கெல்லாம் அவனிடம் பாசம் இருக்குமா பிரதர்? என்னை நாளைக்கு மதிப்பானா பிரதர் அவன்? போடா; நீ யாரோன்னு சொல்லிடுவானா..? ஆனா ஒன்னு பிரதர்.. போன உடனே அவனைத் தூக்கி என் மார்மேல போட்டு, ‘நான்தாண்டா உன் அப்பா.. நான் தாண்டா உன் அப்பான்னு சொல்லிச் சொல்லிக் கத்திக்கத்தி மனசு தீர அழுவேன் பிரதர்”

அவனையறியாது அவன் கண்களில் கண்ணீர் சாரையாக வழிந்தது.

அழுகிறான், அழுது கொண்டே “கண்ணே தெரியாத குருடனைவிட என்னைக்காவது தெரியும்னு இருட்டில் வாழும் குருடில்லாத மனிதர்கள் கொடுமை இல்லையா பிரதர்? நாமெல்லாம் அப்படித்தானே இங்கே வாழுறோம் பிரதர்? பணத்தில் இருட்டின வாழ்க்கைதான் நம் வாழ்க்கை இல்லையா? நடுவுல சிரிச்சிப் பேசி மட்டும் என்னத்த வந்துடும் பிரதர்? அதான் மறுந்துட்டேன்.. சிரிக்க மறந்துட்டேன்.. பேச மறந்துட்டேன்.. சந்தோசம்னா என்னன்னு யோசிக்கவே மறந்துட்டேன்.. ‘ஏதோ வாழ்க்கை போகுது. இந்த கம்ப்யூட்டர், இந்த ரூம், இந்த ஆபிஸ், என் மனைவியின் நினைவை சுமக்கும் ஏன் ஓயாத கண்ணீர், அம்மா தங்கையோட போன், அவுங்க போடுற கடிதம்.., குழந்தை பத்தின ஏக்கம்… என இதுதான், இதுதான் என்னோட வாழ்க்கை பிரதர்” அவன் எங்கோ ஒரு முற்றுப் புள்ளியாய் நிறுத்தி விட்டு என்னைப் பார்க்கிறான். நான் திரும்பி இங்குமங்குமாய் அந்த அறையைச் சுற்றிப் பார்க்கிறேன்.

கிழே சிதறி இருக்கும் பொருள்களிலிருந்து, கவிழ்ந்து கிடந்த தட்டிலிருந்து, ‘நிர்வாணமாய் இருக்கும் மெத்தையிலிருந்து, அவன் கால் விரலில் கிழித்தும்; இதுவரை துடைத்திடாத இரத்தத்திற்கும் அவனுடைய கண்ணீரின் ஒவ்வொரு சொட்டின் ஈரமும் பதில் சொன்னது. வேறு வழியின்றி, ஏதோ விதியென்று வெறும் பார்வையில் அவனுக்கு ஆறுதல் வழங்கிவிட்டு எழுந்து வெளியே வருகிறேன்.

தெருவில் வெளிநாடுகளிலிருந்து வேலை செய்ய வந்துள்ள நிறைய பேர் என்னைக் கடந்து இங்குமங்குமாய் போகிறார்கள். தமிழன், இந்தியன், அந்நிய தேசமென அத்தனை மனித அடையாளங்களையும் கடந்து, அவர்களின் இறுகிய முகத்திற்கெல்லாம் எத்தனை கண்ணீரில் நனைந்த காரணங்கள் இருக்குமோ என்று நினைக்கையில் நெஞ்சு எனையறியாமலே அடைத்தது. என்னால் ஒரு நொடி நகரக் கூட முடியாமல், முகத்தில் கை வைத்து மூடி, யார் யார் வாழ்க்கைக்கு யார் யார் பொறுப்போ இறைவா…என அங்கேயே சற்று அமர்ந்து கொள்கிறேன்.

காலம், நிறைய பேரின் கண்ணீரை முதுகில் மூட்டையாய் கட்டித் தூக்கிக் கொண்டு யாருக்குமே காத்திராமல் வெகு வேகமாய் நகர்கிறது. அதன் ஈரத்தில் உடைந்து வீழ்கின்றன.. நம்மைப் போன்ற நிறைய பேரின் இதயங்கள்; இதுவரை இழந்த எண்ணற்ற இழப்புகளின் நினைவுகளில் ஏக்கத்தை சுமந்து கொண்டு.

போகட்டும்; அந்நிய தேசத்திலிருந்து தானே அழுகிறோம் நாமெல்லாம், நம் அழுகையோ கண்ணீரோ நம்மூரில் இருக்கும் யாருக்கேனும் தெரியவா போகிறது? பணம் தான் இருக்கிறதே எல்லாவற்றையும் தனக்குள் மறைத்து கொள்ளும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *