அப்போ வருடம் 2019ன்னு நினைக்கின்றேன், இப்போ இருக்கிறது போல ஊரு அமைதியாக இல்லே, பட்டித் தொட்டியெல்லாம் இதே பேச்சு,
பட்டித்தொட்டினா?
ஊரெல்லாம் இதே பேச்சுதான்.
அப்போ நான் எங்கே இருந்தேன்?
நீ சாமிகிட்டே இருந்து இருப்பாய். என தன் பத்து வயது பெயரன் பரத்திடம் கூறிக்கொண்டு இருந்தார் எழுபது வயது பாட்டி
அஞ்சலையம்மாள்.
நீங்கள் போய் பார்த்திங்களா? என கேட்டான்.
நான் போயிருந்தேன், ஆனா பார்க்க முடியலை.
ஏன் பாட்டி? என்றான் ஆர்வமாக.
அந்த சமயத்தில் நானும் உன் தாத்தாவும் மயிலாடுதுறை நகராட்சியிலேதான் துப்புரவு பணியாளாராக வேலைப் பார்த்தோம்.
உங்க ஆபீஸ் எங்க இருந்தது?
மயிலாடுதுறை – சீர்காழி ரோட்டிலே இப்போது ஒரு ஃப்ளைஓவர் இருக்கில்லே அது நடுவிலே கால்டாக்ஸ்னு ஒரு ஸ்டாப் இருக்கு, அதற்கு கீழே இருந்தது நகர துப்புரவாளர்களுக்கான ஆபீஸ்.
துப்புரவுன்னா? என்றான்.
அதான்டா செல்லம், தெருவெல்லாம் கூட்டறது, ஊரையே தூய்மையா வச்சுக்கிறதுதான் எங்கள் வேலை.
அதான் நிறைய ரோபோக்கள் இருக்கே! பாட்டி.
அது இப்பத்தானே வந்தது. அப்போவெல்லாம் கையாலேயே அள்ளிக்கிட்டு கிடந்தோம்.
ஒவ்வொரு நகராட்சியிலிருந்தும் முப்பது நபர்களை காஞ்சிபுரத்திற்கு அனுப்பினாங்க, நான் அப்போ உங்க அப்பாவை என் வயிற்றிலே சுமந்துகிட்டு இருந்தேன், உன் தாத்தாவும் இல்லாம தனியாக இருக்க பயமா இருந்திச்சா, அதனாலே அது கூடவே நானும் கிளம்பி போனேன்.
நீ அங்கே போன பின்பும் சாமியை பார்க்கலையா?
நாங்க போனது சுத்தம் பண்ற வேலைக்குத்தானே, நேரம் அதிலேயே போயிடுச்சு,ஒரு நாளைக்கு சுமார் ஆறு லட்சம் பேரு பார்க்க வந்தார்கள்.
அப்போதைய மந்திரிங்க, அரசியல்வாதிகள்,நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா
மற்றும் பல திரை நட்சத்திரங்கள் எல்லாம் வந்து காஞ்சிபுரமே பரபரப்பாக இருந்தது.
ரஜினிகாந்த், நயன்தாரா.. யாரு பாட்டி அவங்க?.
நீங்களாவது யார்னு கேட்கிறீங்களே!அதுவே பெரிய சந்தோஷமா இருக்குய்யா.
அப்புறம்..?
பாதுகாப்பு,தூய்மைப்பணிகள் செய்த எல்லாரும் கடைசி நாள் போய் தரிசனம் பண்ணலாம்னு சொன்னாங்க.
வாவ்!! போனீங்களா? என்றான் ஆர்வமாக..
எங்கே? மீதம் இரண்டு நாள் இருக்கையிலே உங்க அப்பா பிறந்திட்டாரு..அதனால பார்க்க முடியாம போயி, நாங்களும் ஊருக்கு திரும்ப வந்து விட்டோம்.
இப்பத்தான்,மெட்ரோ,புல்லட் ரயில், விமானம் எல்லாம் நம்ம ஊருக்கே வந்திடுச்சு, போய் ஒரு எட்டு பார்த்திட்டு வரவேண்டியதுதான் என்றாள் பாட்டி.
நாற்பத்தி எட்டு நாட்களுக்கு அனந்த சயனகோலத்திலும், நின்ற கோலத்திலுமாய் அத்திவரதர் பக்தர்களின் வழிபாட்டிற்காக
அனந்தஸரஸ் குளத்திலிருந்து வெளிவந்து அருள் பாலித்துக்கொண்டு இருக்கிறார் என்றும்,
பக்தர்களின் வசதிக்காக அரசு பல ஏற்பாடுகளை தீவிர படுத்தியுள்ளதாகவும் காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு ஆட்சியராக திரு.அத்திவரதர் இந்திய ஆட்சிப்பணி அவர்கள் நியமிக்கப்படுகிறார் என்று போட்டோவுடன் தொலைக்காட்சியில் காண்பித்தவுடன்,
அய் அப்பா! என துள்ளிக் குதித்து தன் மகிழ்வை வெளிப்படுத்திய பரத்,
ஏன் பாட்டி? நம்ம ஊருக்கு கலெக்டரா அப்பா வரமாட்டாரா?
மாவட்டமா மாறினா வருவாருப்பா?
எப்ப பாட்டி மயிலாடுதுறை மாவட்டமாகும்?
தெரியலையேப்பா… என கையை விரித்தாள்.
குறிப்பு 18.08.2019
எட்டு வருட கோரிக்கையான மயிலாடுதுறை மாவட்ட கோரிக்கை நிறைவேற ஒரு வருடம் காத்து இருக்குமாறு அமைசர் ஒ ஸ் மணியின் அறிவித்த வேளையில் எழுதியது .