அதித்தி எங்கே?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 4,500 
 
 

மாலை 4 மணி.

எஸ். எஸ். டீ. எஸ்டேட்.

“அம்மா.. கொஞ்சம் நேரம் சைக்கிள் ஓட்டிட்டு வர்றேன் மா” என்றாள் அதித்தி.

“சைக்கிள் வாங்கி இரண்டு நாள் தான் ஆகுது, ஒழுங்கா ஓட்டக்கூட தெரியாது, இப்ப வேண்டாம் அப்பா வந்ததும் போ” என்றாள் விஜி.

“எல்லாரும் ஓட்டுறாங்கமா. பீளிஸ் மா.. பத்திரமா ஓட்டிட்டு வர்றேன் மா..”

“நான் சொன்னா எங்க கேட்க போற. சரி இங்க பக்கத்துலயே ஓட்டு” என்று அம்மா சொல்லி முடிப்பதற்குள் சைக்கிளை எடுத்து ஓடினாள் அதித்தி

மாலை 5 மணி-

அதித்தியின் வருகைக்கு வாசலில் காத்திருந்த விஜி பக்கத்து வீட்டு குழந்தை மட்டும் வருவதை பார்த்து சற்று பதட்டத்துடன், அதி எங்கம்மா? என்றாள்.

“ஆண்டி, அவ ஒரு ரவுண்டு தான் வந்தா அப்புறம் பாக்கல” என்றாள்..

இதய துடிப்பு இருமடங்கு உயர, தன் கணவனுக்கு போன் செய்து “என்னங்க.. அதி நாலு மணிக்கு சைக்கிள் ஓட்ட போனா இன்னும் வரல.. பக்கத்து வீட்டு குழந்தை எல்லாருமே வந்துட்டாங்க, இவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.. ரொம்ப பயமா இருக்குங்க”.

“எங்கம்மா போக போற. நம்ம எஸ்டேட்ட விட்டு வெளிய எங்கேயும் போக முடியாது” என்று எதிர் முனையிலிருந்து பிரபு.

“சாயங்காலம் லோடு ஏத்திட்டு லாரி எல்லாம் கிளம்பும், அதுல ஏதாவது அடி பட்டிருக்குமானு பயமா இருக்குங்க..”

“ஏன் இப்படி நெகட்டிவா யோசிக்கிற .. சரி,நீ செக் போஸ்ட் கிட்ட வா நானும் மேனேஜர்ட்ட சொல்லிட்டு வர்றேன்” என்று கட் செய்தான் பிரபு.

இருவரும் செக் போஸ்ட் வந்தடைந்தனர்.

“அண்ணா அதித்தி இந்த பக்கம் வந்தாளா” என்றான் பிரபு செக்கியூரிட்டியிடம்.

“இல்ல சார் வரலயே . ஏன் என்னாச்சு..”

“புதுசா சைக்கிள் ஓட்டி பழகுறா. ரொம்ப நேரமாச்சு வீட்ட விட்டு கிளம்பி.. லாரி எல்லாம் திரும்ப போற நேரம் அதான் இவ பயபடுறா..”

“சார் இன்னைக்கு லாரி ஸ்டிரைக், அதனால லாரி எதுவும் வரல” என்றார் செக்கியூரிட்டி.

“சரி நாலு மணிக்கு அப்பறம் வேற ஏதாவது வண்டி போச்சா.”

“இல்ல சார் டாக்டரம்மா மட்டும் தான் போனாங்க. “

என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் நின்றபோது

சார், அந்த மூணாவது குடோன் போற இறக்கத்துல ரோடு சரியில்லை.. நல்ல வண்டி ஓட்டுரவங்க கூட அந்த பள்ளத்துல விட்டுருவாங்க.. கொஞ்சம் அங்க பாருங்க சார்.. தப்பா நினைச்சுகாதீங்க….

“பரவாயில்ல அண்ணா”, என்று சொல்லி இருவரும் வண்டியில் கிளம்பினார்கள்.

அடர்ந்த தேயிலை தோட்டத்தில் போகும் வழியில் “ஏங்க ஏற்கனவே அந்த பள்ளத்துல விழுந்தவன் பாடி கிடைக்கல.. நம்ம பொண்ணுக்கு அது மாதிரி ஏதாவது ஆன நா உயிரோடவே இருக்க மாட்டேன்” என்று அழுதாள் விஜி

“பேசாமா வா, இல்லாட்டி இறங்கி வீட்டுக்கு போ” என்று கத்திய பிரபுவை பார்த்து மௌனமானாள் விஜி..

மாலை 5:30 மணி

மூணாவது குடோன் போகும் வழி அடைக்கப்பட்டு, அதன் அருகில் நின்று கொண்டிருந்த நபர் “சார் இந்த பக்கம் போக முடியாது.. இரண்டு நாளா ரோடு வேல நடக்குது” என்றார்

அதை கேட்டு சற்றே நிம்மதியாய் வண்டியை நகர்த்திய பிரபு அங்கு சென்ற நாய் ஒன்றை பார்த்தவுடன், “ விஜி, வா பழைய ஃபேக்டரி கிட்ட போய் பாக்கலாம்”

“ஏங்க, அதி ஏன் அங்க போக போற..”

“இல்ல அந்த இடம் சைக்கிள் ஓட்டி பழக நல்ல சமமா இருக்கும்னு நேத்து சொன்னா..”

விஜி பதட்டத்தில், “இரண்டு நாள் முன்னாடி அங்க ஓநாய்கள் வந்ததுனு சென்னாங்களே” என்றாள்.

“ஆமா மா, அதி பயபடுவாளேனு அவ கிட்ட சொல்லல” என்று பதறிய பிரபு வேகமாக வண்டியை ஓட்டினான்.

அதியை ஓநாய்கள் அடித்திருக்குமோ, அந்த பிஞ்சு மேனியை நகங்களால் காயப்படுத்தியிருக்மோ என்று என்னென்னவோ சிந்தனை ஓட அழுதபடி வந்தாள் விஜி..

மாலை 6 மணி

மெல்ல இருள் சூழ ஆரம்பித்த நேரத்தில் பழைய ஃபேக்டரி சென்றடைந்தனர்.

அங்கு காவலுக்கு நின்ற தாத்தா, ஓநாய்களுக்கு மின்சார வேலி அமைத்திருப்தாகவும்.. அதித்தி அங்கே வரவில்லை என்றும் தெரிவித்தார்..

அப்படியே அவர் தயக்கத்துடன் “ சார், முதலாளி சொந்தகார பசங்க ரெண்டு பேர் வந்து பங்களால இருக்காங்க.. 2 நாளா ஓரே ஆட்டம் தாங்கமுடியால.. பாப்பா அங்க ஏதாவது போயிருக்குமானு பாருங்க சார்” என்றார்.

பிரபு கண்களில் நீர் கொட்ட, இதயம் நொறுங்கி தரையில் அமர்ந்தான்..

“கடவுளே.. என் குழந்தை பள்ளத்தாக்கில வீழ்ந்தாலும் பரவாயில்லை, ஓநாய் கிட்ட மாட்டிக்கிட்டாலும் பரவாயில்லை ஆனா ஒரு மனித மிருகத்துக்கிட்ட மாட்டி சீரழியகூடாது” என்று எந்த தாயும் வேண்டாததை விஜி கதறியபடியே கேட்டாள்..

மாலை 6:30 மணி

சற்று நேரத்தில் இருவரும் மனதை இறுக்கிக் கொண்டு பழைய பங்களாவை

நோக்கி செல்லும் போது.. பனிமூட்டம் நடுவே தேவதை போன்ற பெண் ஒருத்தி அதித்தியுடன் ஸ்கூட்டியில் வந்த நின்றாள்.. இருவரும் ஓடி சென்று அதித்தியை அணைத்துக்கொள்ள..

“சார் , எதுவும் ஆகல.. உங்க பெண் சைக்கிள்லயிருந்து கீழ விழுந்துட்டா..

அதான் கிளினிக் கூட்டிட்டு போயி மருந்து போட்டேன்.. அப்படியே இரண்டு பேஷன்ட் இருந்தாங்க அதான் லேட் ஆயிடுச்சு.. சாரி..” என்றாள் டாக்டர் நிலா…

“இல்ல டாக்டர் நாங்க தான் உங்களுக்கு தேங்ஸ் சொல்லனும். ரொம்ப நேரமா தேடுறோம். ரொம்ப பயந்துட்டோம்” என்றான் பிரபு..

“ஐந்து வயசுல இருந்து எங்கும் தனியா போக கூடாது, தெரியாத ஆள்கிட்ட பேச கூடாது, வெளிய ரொம்ப நேரம் போக கூடாதுன்னு தான் சொல்லி வளத்துருக்கோம்.. இருந்தாலும் தீடிரென காணாம போனதால துடி துடுச்சுட்டோம்” என்றாள் விஜி..

இதை கேட்டு டாக்டர் நிலா.. சற்று கோபத்துடன்..

“இந்த பொண்ணு என்ன பாவம் செஞ்சா. ஐந்து வயசுல இருந்து இப்படி பயம்படுத்தி வச்சிருக்கீங்க.. நீங்க மட்டும் இல்ல எல்லா வீட்டுலையும் தான்.. இந்த வயசுல விளையாடமா எப்ப விளையாடுவாங்க. குழந்தைகளுக்கு தைரியமா இருக்க சொல்லிக்கொடுங்க. அப்பறம் ஒழுங்க இருக்க பெண் பிள்ளைகளை விட ஆண் பசங்களுக்கு தான் நிறைய சொல்லித்தரனும்.. அப்பதான் இந்த பிரச்சனை எல்லாம் முடியும்” என்று வண்டியை நகர்த்தினாள் நிலா..

நன்றி.

இந்த கதையில் அதித்தி காணவில்லை என்றவுடன் அவள் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அனைவரின் எண்ணமும் சொல்கிறது.. அந்த அளவுக்கு நாம் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமுதாயம் இந்த மனநிலையிருந்து மாற, தவறு செய்தவனுக்கு தண்டனை உடனடியாக கிடைத்தால் தவறு செய்ய பயம் வரும்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *