அட பைத்தியமே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 18, 2021
பார்வையிட்டோர்: 7,399 
 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கந்தர்வா ஸ்டுடியோ அன்று கல்யாணம்பட்டபாடு பட்டது. ‘காளி யம்மன்’ என்னும் மஹோன்னத படப்பிடிப்பின் கடைசி நாள் ஷூட்டிங் அன்றுதான்! ‘காளியம்மன’ன் கலர் விளம்பரங்கள் ஒரு வருஷமாகயே தமிழ்நாட்டு ரசிகர்களின் உள்ளக் கோட்டைகளை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்திருந்தன. படம் எப்போது வெளிவரும் என்று பஞ்சப் பிரதேசத்தானர் மழையை எதிர்பார்ப்பது போல் காத்திருந்தனர். பேசும்பட ரசிகர்கள்! நட்சத்திர திலகம் கண்ணாமணி பாய் நடிக்கும் படம் என்றும் சாமான்யமானதா என்ன?. படம் வெளியாகும் தேதியும் கொட்டகை விவரங்களும் பருமனான கொட்டை எமுத்துக்களில் பத்திரிகைகளின் முக்கால்வாசி இடத்தை அடைக்க ஆரம்பித்தன.

உள்ளம் உருகும் வண்ணம் கதாநாயகி கதறி அழுது கண்ணீர் சிந்தும் கட்டம் தான் அன்று காமராவில் கடைசியாக நுழைய வேண்டியிருந்தது. கதையின் போக்கிலேயே மிகவும் முக்யம் வாய்ந்த இடம்! கதாநாயகியின் கண்ணீரும் கதறலும் தான். அந்த இடத்தில் படத்திற்கு பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுக்க வேண்டியிருந்தது.

ஹரோயின் கண்ணாமணி பாய் சர்வாலங்கார பூஷிதையாக மேக்கப்புடன் அந்த காட்சியில் அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் கண்களில் கண்ணீரும் முகத்தில் சோக பாவமும் கண்டிப்பாக வர மறுத்தன! ஏன்? சத்தியாக்கிரகம் கூடச் செய்தது என்று சொல்லலாம். கண்களைக் கசக்கிக் கொண்டாள். தன்னைத்தானே கிள்ளிக் கொண்டாள். தனக்கு மிகவும் ஆப்தமான ஒரு நடிக நட்சத்திரம் தன்னிடம் விடை பெற்றுக் கொள்ளாமலேயே விபத்தின் மூலம் மோட்சத்திற்குப் போனதை நினைவு மூட்டிச் கொண்டாள். பிரயோசஜனமே யில்லை! அழுகையும் வரவேயில்லை!

டைரக்டர் தங்கதுரை தவியாகத் தவித்தார். தலையைச் சொறிந்துகொண்டார். ஒரே இழுப்பில் ஒரு சிகரெட்டை சாம்பாராக்கினார். மண்பானையைச் சுண்டிப் பார்ப்பதுபோல் தன் மண்டையைச் சுண்டிக்கொண்டார். கண்ணாமணி பாயின் அவஸ்தை அவருக்குத் தெரியாமலில்லை. அவர் மனமும் குழம்பியது. அழுகையின் போது வரும் பாட்டிற்க்கு இரவல் குசல் வாங்கியாய் விட்டது! முக பாவத்திற்கு இரவல் வாங்க முடியுமா? அப்புறம் கண்ணாமணி பாய் கண்காணாத நட்சத்திரமாகி அஞ்ஞாத வாசத்திற்கல்லவா போய்விடுவாள்!

விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. காமராக்காரர் தயாராக இருந்தார்.

‘ஏனம்மா கண்ணாமணி! உங்க வீட்டிலே யாரும் பாட்டி கீட்டி செத்துப்போயிருக்கமாட்டாங்க?. அதைக் கொஞ்சம் நினைச்சும் பார்த்துக்கரதுதானே?’ என்றார் தங்கதுரை கெஞ்சும் குரலில்.

கண்ணாமணி கரும்பு போல் இனிக்கும் புன்னகை பூத்தாள் . ‘என் பாட்டியை நினைச்சுக் கிட்டா எனக்கு சிரிப்புத்தான் வரது சார்! சுத்த பத்தாம் பசலி! ஒரு நாள் பாருங்க! நான் மேக்கப்புக்கு வைத்திருக்கும் சாமான்களை எடுத்து தாறுமாக தடவிக்கொண்டு…’ அதற்கு மேல் அவளால் பேசவே முடியவில்லை! விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். சிரிப்பு ஓய அரை மணி நேரம் பிடித்தது.

டைரக்டா தங்கதுரை அவள் பார்க்காதபோது தலையால் அடித்துக்கொண்டான் “கர்மம் கர்மம்!” என்று முணமுணுத்தார். “சரி! அது போகட்டும்! உன் கூட ‘கந்தர் கோனம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தாரே! ஆனந்த சாமி! அவர் குதிரையிலிருந்து தவறி விழுந்து மண்டை உடைபட்டதே! அந்தக் கட்டத்தை நினைத்துக் கொள்ளேன்!” என்றார் தங்கதுரை. கண்ணாமணிக்கு பதிலாக அவரை அழச்சொல்லி இருந்தால் அவர் அப்போது கதறி தீர்த்திருப்பார்! அவருக்குப் படம் உருவாகவேண்டுமே என்ற அவ்வளவு கவலை!

கண்ணாமணி ஒரு அதிர்வேட்டு சிரிப்புச் சிரித்தாள். “குதிரையோடு சேர்த்துக்கட்டி வைத்திருந்தும் மனிதன் கீழே விழுந்து மண்டையை உடைத்துக்கொண்டானே! அதை நினைத்தால் எனக்கு இன்னும் சிரிப்பு வருகிறது!”. மீண்டும் அசுரச் சிரிப்பல் ஈடுபட்டாள் அவள்! அவளுடன் சேர்ந்து ஸ்டூடியோவே சிரித்தது.

தங்கதுரைக்குக் கோபத்தால் கண்கள் சிவந்தன. “அட பைத்தியமே!” என்று மறைமுகமாக உதவி டைரக்டரைப் பார்த்து கடிந்து கொண்டார்.

“அட பைத்தியமே!” என்த வார்த்தை எப்படியோ கண்ணுமணி பாயின் காதில் விழுந்துவிட்டது! அவ்வளவு தான்! குலுங்கக் குலுங்க அழ ஆரம்பித்துவிட்டாள். கண்களிலிருந்து குற்றால அருவியாக ஜலம் பிரவாஹம் எடுத்தது! முகத்தில் அசோகவன சிதையின் பாவம் அப்படியே தாண்டவமாடியது. பழையகால ஹரிச்சந்திர மயான காண்டத்தில் நிறைய பங்கெடுத்துக்கொண்ட வசனகர்த்தா கூட அயர்ந்துபோய் விட்டார். காமிராக்காரர் கெட்டிக்காரர். காமிராவை முடிக்காவிட்டார். பிலிம் ஓடிக்கொண்டே இருந்தது. பிரமிப்பினால் தாக்கப் பட்ட தங்கதுரை கல்லாய் நின்று விட்டார். பிலிம் சுருள் நிறைய ஒடியபிறகும் காமிராக்காரர் நிறுத்தவில்லை. டைரெக்டர் ரசசியமாக “இந்த சீன் நிறையப்பிடியுங்கள், ரொம்ப பிரமாதம்! பிறகு யாராவது கண்ணமணி பாயின் அழுகைக்கட்டம் வேண்டுமென்றால் நல்ல விலைக்குக் கொடுக்கலாம்” என்றார்.

அரைமணி நேரத்திக்குப் பிறகு அழுகை ஓய்ந்தது. கண்ணாமணி கண்களைத் துடைத்துக்கொண்டாள். காமீரா நின்றது. படத்தின் வெற்றியைப்பற்ற தங்கதுரைக்கு இனிமேல் சந்தேகமே இல்லை. ஆனால் கண்ணாமணியை எது அழவைத்தது என்று மாத்திரம் அவருக்குப் புரியவில்லை. ஆனால் அவர் மனதை புரிந்து கொண்டவள் போல் அவளே சொன்னாள்.

“டைரக்டர் சார்! நீங்கள் ‘அட பைத்தியமே’ என்று சொன்னீர் களல்லவா? எனக்கு உடனே என்னை கதாநாயகியாக வைத்து பாதேவதை என்னும் படம்பிடித் தாரே பன்னீர் செல்வம்! ..அவர் நினைவு வந்துவிட்டது. பாவம்! படம் ஓடாமல் கடன்காரர்களுக்குப் பயந்து அவர் ஓடி கடைசியில் பைத்தியம் பிடித்தவராக விட்டார். அங்கு வேறு ஒரு படம் பிடிப்பதற்காக ஒருநாள் நான் அங்கு போயிருந்தேன், பன்னீர் செல்வம் பாவம்! குரோட்டன்ஸ் செடிகளை டைரக்ட் பண்ணிக் கொண்டிருந்தார். ஒரு வேப்ப மரத்தைப் பார்த்து “இந்தா கண்ணாமணி! பத்தாயிரம் ரூபாய் செக்!” என்று ஒரு குப்பைத் தாளைத் தூக்கிப்போட்டார். அவருக்குப் பைத்தியம் பிடித்தும் என் நினைவு போகவில்லையே என் நினைத்தபோது எனக்குத் துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது.” என்றாள் கண்ணாமணி.

“அட! நீயே ஒரு பெரிய பைத்தியம்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் தங்கதுரை. அதை இரைந்து சொல்லி அவளை மீண்டும் அழவிட அவர் விரும்ப வில்லை!

– 7-12-52

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *