நிஜப்படம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 15, 2021
பார்வையிட்டோர்: 6,050 
 

காலை 7 மணி.அப்பாவுக்கு போன் வந்தது.போன் பேசின உடனே சந்தோஷத்தில் துள்ளி குதிச்சாரு.அவர் சந்தோஷத்துல நான் பலியாக போறேன்னு, அவர் அப்போ,கவலை படவே இல்ல.

எனக்கு வயசு 14 தான் ஆகுது. ஆனா என்னைய சினிமாவுல நடிக்க சான்ஸ் குடுத்துருக்காங்க.

இன்னைக்கு எனக்கு முதல் நாள் ஆடிஷன்.

எட்டு வயதிலேயே பூப்படைஞ்சு,பெரிய பொண்ணா வந்துட்டேன். 11 வயதிலேயே என் உடல் தேகமெல்லாம் 20 வயசு பொண்ணு மாதிரி ஆகிடுச்சு. மார்பகம் பெருசாயிடுச்சு. அதனாலே எங்க அபார்ட்மென்ட்க்கு எதிர் அபார்ட்மென்ட்ல குடி இருக்கவங்க சிலர் என்னைய தப்பான கண்ணோட்டத்துலயே பாப்பாங்க. என் தெருவுல குடியிருக்குற எல்லா பசங்களும் என்னைய அசிங்கமா கிண்டல் பண்ணுவாங்க.ஸ்கூல்ல கூட படிக்கிற பொண்ணுங்களும் அப்பப்ப அசிங்கமான கமெண்ட் சொல்லுவாங்க. எனக்கு ரொம்ப அவமானமாக இருக்கும். என்னோட பத்து வயசுல எங்க அம்மா ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அப்பா மட்டும் தான் இருக்காரு. என்னுடைய சுக துக்கங்கள, கஷ்ட நஷ்டங்கள அப்பாகிட்ட ஷேர் பண்ண முடியாது.சில நேரங்களில் எனக்கு வேதனையாக இருக்கும். அப்பாவுக்கும் தொழில்ல ரொம்ப நஷ்டம். நிறைய கடன் வந்துருச்சு.அந்த கடனை அடைக்க வழி தெரியாமல் இருந்ததாரு. இப்போ ஒரு வழி கிடைச்சிருச்சு.இரண்டு மாசத்துக்கு முன்னாடி எங்க ஸ்கூல்ல நடந்த ஆனுவல் டே ஃபங்சன் சீப் கெஸ்ட் சினிமா ஃபேமஸ் டைரக்டர் மணிராஜ்.அப்ப நான் குரூப் டான்ஸ்ல, ஸ்டேஜ் பர்பமென்ஸ் பண்ணத பார்த்து, அவருக்கு புடுச்சு போச்சு. அவரோட அடுத்த படத்துல என்னைய ஹீரோயினா நடிக்க வைக்க நினைச்சாரு. அவரோட அசிஸ்டன்ஸ் மூலமா என்னைய பத்தின விவரங்களை தெரிஞ்சுகிட்டு, அதுக்கு அப்புறம் அவர் மேனேஜர் மூலமா எங்க அப்பாகிட்ட பேசி,கதை சொல்லி, இன்னைக்கு ஆடிஷன் வர சொன்னாரு.அதனால அப்பா ரொம்ப சந்தோஷம் ஆகிட்டார்.

எனக்கு சினிமா பாக்கவே புடிக்காது.சினிமாவுல நடிக்கவும் விருப்பமில்ல.

ஆடிஷன்ல செலக்ட் ஆகிட்டா, இந்த படத்துல ஹீரோயினா எனக்கு கிடைக்க போற சம்பளம் 15 லட்சம். இந்த பணம் கிடைச்சா,கிட்டத்தட்ட எங்க அப்பாவுக்கு கடன் எல்லாம் முடிஞ்ச மாதிரி. “அப்புறம் எனக்கு அடுத்த வாய்ப்பு வர வர நாங்க பெரிய கோடிஸ்வராகிடலாம்னு” அப்பா திட்டம் போட்டாரு. “சினிமாவில நடிக்க எனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கான்னு” ஒரு தடவை கூட அப்பா என்கிட்ட கேட்கல.ஆனாலும் பிடிவாதமா “நான் முடியாதுன்னு” சொல்லியும்,அப்பா என்னைய ரொம்ப நச்சரிச்சு,கடன் சூழ்நிலைய சொல்லி ஒத்துக்க வச்சாரு.

அதுவும் எனக்கு இன்னக்கி பீரியட்ஸ் ஆரம்பிக்க போது,ஆனா இந்த முறை உடம்புக்கு முடியாம கஷ்டமா இருந்தது. அதனால “கலந்துக்க முடியாதுன்னு” மறைமுகமா நான் சொன்னேன்.ஆனா என் வேதனைய அப்பா கேட்கல.பிடிவாதமா “ஆடிஷன் போய்தான் ஆகனும்னு” என்னைய கூப்புட்டாரு.யூனிட்ல இருந்து கார் வந்தது.நானும்,அப்பாவும் அதுல ஏறி பிலிம் ஸ்டூடியோவுக்கு போனோம்.

பிரமாண்டமான ஸ்டூடியோ.அந்த ஸ்டூடியோ உள்ள கூட்டிட்டு போனாங்க. டைரக்டர், போட்டோகிராஃபர்ன்னு யூனிட்ல மொத்தமா 100 பேருக்கு மேல இருந்தாங்க. இன்னக்கி காலையில எனக்கு மட்டும் காஸ்ட்யூம் போட்டு போட்டோ எடுப்பாங்க. மதியம் தான் ஹீரோ வருவாரு.அப்பறம் அவர் கூட சேர்ந்து போட்டோ எடுப்பாங்க.இரண்டு பேர் காம்பினேஷனும் ஒத்து வந்தா.சூட்டிங் ஸ்டார்ட் பண்ணுவாங்க.ஏற்கனவே டைரக்டர் “நான்தான் நடிக்கனும்னு” முடிவு பண்ணிருந்ததுனால அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கிரும்.

செட்டிங்ஸ் எல்லாம் போட்டு வச்சுருந்தாங்க. காஸ்ட்யூம் டிசைனர் எல்லாம் வந்துட்டாங்க. நாங்க நேரா போயி டைரக்டரை பார்த்து “வணக்கம்” சொன்னோம். அவர் என்ன பார்த்து, “அந்த ரூம் போ, காஸ்ட்யூம் கொடுப்பாங்க. போட்டுக்கிட்டு, மேக்கப் போட்டுகிட்டு, இங்க வாங்க அப்படின்னு” சொல்லிட்டு கேமரா மேன்கிட்ட பேசிட்டு இருந்தாரு.நான் மட்டும் உள்ள போனேன்.காஸ்ட்யூம் எல்லாம் பார்த்தா ஷார்ட்ஸ்,டைட் டிரஸ், தொடை தெரியுற மாதிரி, இடுப்பு தெரியுற மாதிரி, மேல மார்பகம் தெரியுற மாதிரி இருந்தது அந்த டிரஸ். அதை எல்லாம் பார்த்தவுடனே எனக்கு போட்டுக்க அருவருப்பா இருந்தது. “வேண்டாம் இதெல்லாம் போட்டு எனக்கு பழக்கம் இல்லைன்னு” சொன்னேன்.

“இப்ப எடுக்கப் போற போட்டோ ஷூட் நீச்சல் குளம் பக்கத்துல போட்டோ ஷூட். அதனால இந்த காஸ்டும் போடணும்னு” பிகினி உடைய காட்டினாரு காஸ்ட்யூம் டிசைனர்.

“வெறும் உள்ளாடைகள் மட்டும் போட்டு அதை மட்டும் போட்டோ எடுக்க போறாங்கன்னு”

அவரு பக்கத்துல இருந்த மேகப் மேன் சொன்னாரு. பிகினி குடுத்து போட சொன்னாங்க. எனக்கு தலை சுத்துச்சு. அதுவும் 100 பேர் முன்னாடி, வெறும் உள்ளாடைகளை மட்டும் போட்டு, அதை போட்டோ எடுத்து, அந்த போட்டோவ கோடிக்கணக்கான மக்கள் பார்க்க போறத நினைச்சா பயமாகவும், வேதனையாக இருந்தது. அதுவும் “எனக்கு பீரியட்ஸ் டைம் இந்த நேரத்துல இந்த டிரஸ் போட்டு நீச்சல் குளத்தில எனக்கு போட்டோ ஷூட் எடுக்க ஒத்துக்க மாட்டேன்னு” ரூம் விட்டு வெளிய வந்து அப்பாகிட்ட அழுதேன்.

அப்பா என்னைய எவ்வளவோ சமாதானப்படுத்தினார். ஆனா நான் எதுவும் கேட்கலை. அப்பாக்கு தேவை, இப்ப பணம். அவர் கடனை அடைக்கணும். அந்த படத்தோட புரொடியூசர் என்னை வந்து பார்த்தார். “மிகப் பெரிய டைரக்டர், மிகப்பெரிய ஹீரோ நடிக்கிற நடிக்கிற படம்.இதுல நடிச்சது அப்பறம் உன்னுடைய வாழ்க்கையே மாறப் போகுது. யாருக்கும் இப்படிப்பட்ட ஒரு சான்ஸ் கிடைக்காது. இந்த படத்துக்கு அப்புறம் உன்னுடைய எதிர்கால வேற எங்கேயோ போகப்போகுது. அதை நீயே,கெடுத்துக்காத அப்படின்னு” என்னை சமாதானப்படுத்தினர்.

“சார் ‘கிராமத்து கதை அப்படின்னு’ சொல்லி தானே நடிக்க கூப்புட்டீங்க. ஆனா இப்ப ‘பிகினி போடணும். குட்டைப்பாவாடை போடணும். போட்டோ சூட்டிங் எடுக்கணும் அப்படின்னு’ சொன்னா. எப்படி ஒத்துக்க முடியும்ன்னு” நான் சொல்லி வருத்தப்பட்டேன். அரை மணி நேரம் ஆச்சு.டைரக்டர் வந்து பேசி, சமாதானப்படுத்தி,காஸ்டியூம் மாத்த சொல்லி, ஜீன்ஸ் போட வச்சு.தாவணி,புது டிசைன் சாரீஸ் கட்ட வச்சு, போட்டோ எடுத்தாங்க. முதல் நாள் மனவலியோட,உடல் வலியும் இருந்தது. அந்த வேதனையோட தான் நான் அப்போ, போட்டோ ஷூட்ல கலந்துகிட்டேன்.

மதியம் படத்தோட ஹீரோ வந்தாரு. “சினி இண்டஸ்ட்ரிலயே அழகான ஹீரோன்னு” சொல்லுவாங்க.ஆனா நேர்ல பாக்குறப்ப 60 வயசு ஆள் மாதிரி தெரிஞ்சாரு.ஆனா அவரோட வயசு 42 தான்.முகமெல்லாம் சுருக்கமாக இருந்தது. தலைமுடி பாதி கொட்டி,மீதி முடி எல்லாம் நரைச்சு போய் இருந்தாரு.அவருக்கு ‘நான் ஜோடின்னு’ சொன்னா,அவரோட ரசிகர்களை தவிர வேற யாரும் ஏத்துக்க கூட மாட்டாங்க.

“ஆனா,அவர் சினிமா இண்டஸ்ட்ரியலயே பெரிய ஹீரோ,வசூல் சக்கரவர்த்தி, இவர் படம் நடித்தாலே, அந்த படம் நூறு கோடிக்கு மேல மேல வசூலாகும். அதுமட்டுமில்லாமல் நிறைய பேருக்கு உதவி செய்கிறார். அப்படின்னு” நிறைய சொல்லுவாங்க. ஆனா ஒவ்வொருத்தருக்கும் ஒரு மறுபக்கம் இருக்கும். அந்த மறுபக்கம் அவங்களோட வக்கிரபுத்தியைக் காண்பிக்கும். அந்த மாதிரிதான் இவரோட மறுபக்கத்தை நான் பார்த்தேன்.

அங்க வந்தவரு டைரக்டரை தனியா கூப்பிட்டு பேசினார். அவங்க தூரமா நின்னு பேசினாதுனால, அவங்க ‘என்ன பேசிகிட்டாங்கன்னு’ தெரியல. டைரக்டர் கிட்ட கோபமா பேசினாரு.அப்பறம் முகம் சுளிச்சு வந்தாரு. என்னை பார்த்து முறைச்சுகிட்டே,கேரவனுக்கு போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு, வேஷ்டி சட்டை,மேகப் போட்டு வந்தாரு.இப்ப மேகப்புல பார்க்குறதுக்கு 30 வயசு மாதிரி இருந்தாரு. என் கூட போட்டோஷூட்டில் கலந்து கொண்டார்.

போட்டோ சூட்டில, என்னைய கட்டிப்புடிச்சு நிக்கிற மாதிரி போட்டோ எல்லாம் எடுத்தாங்க. அப்ப நான் ஒரு மாதிரி ஃபீல் பண்ணேன். என் இடுப்ப புடிச்சு தூக்குற மாதிரி ஒரு போட்டோ எடுத்தாங்க. எனக்கு ரொம்ப அருவருப்பா இருந்தது.அந்த ஹீரோவுக்கு மகள் மாதிரி நான் இருக்கேன். “என்கூட எப்படி நெருக்கமா நடிக்கிறாருன்னு தெரியலை” போட்டோ ஷூட் எடுத்துட்டு அப்பறமும் டைரக்டர்கிட்ட போய் பேசினாரு.அப்பறம் “நாளைக்கும் போட்டோஷீட் இருக்கு.அப்பறம் அடுத்த வாரம் சூட்டிங்ன்னு” அப்பாகிட்ட, டைரக்டர் பேசி அட்வான்ஸ் செக் 5 லட்சம் குடுத்தாங்க.அப்பாவுக்கு அப்போ,ரொம்ப சந்தோஷமா இருந்தது.

மறுநாள் எனக்கு பீரியட்ஸ் ஆச்சு. வலி அதிகம் ஆச்சு. இந்த வலியோட போட்டோ ஷூட் போக முடியல.அதை அப்பாகிட்ட சொல்லவும் முடியல.அப்புடியே சொன்னாலும் அவர் புரிஞ்சுக்க மாட்டாரு.அப்பா மட்டுமில்ல,எல்லார் வீட்டிலயும் சில மூடர்கள் இருப்பாங்க.அவங்க புரியாம “மூன்று நாட்கள் தானேன்னு” சொல்லுவாங்க.

அந்த வேதனை மூன்று நாள் மட்டும் இல்ல.அந்த நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அசதி தொற்றி அலைகழிச்சிடும்.கை கால் குடைந்து குழப்பிவிடும்.மார்பக இறுக்கமதில் மரணவலி.அந்த நாள் வர
மூன்றிலிருந்து முப்பது நாள் வரை கூட என்ன மாதிரி இருக்கவங்களை ஓரமா முடக்கிவிடும்.உடல் சூட்டினாலோ, ஹார்மோன், சேட்டையினாலோ, சிலருக்கு மாதம் முழுவதுமா குருதி வெளியேரும். கனம் சுமந்த ரணத்தை சொல்ல முடியவில்லை.

புரண்டுப் படுக்கையில போர்வை நனைஞ்சு விடுமென பதற்றத்தில் பயந்து பதுங்கிப்படுப்பேன்.

அணையாடை உரசலில் உயிர்ப்போகும்.நான்கைந்து மாற்றியே ஓய்ந்திடுவேன். நாள் கணக்கிட்டு பார்த்தால், என் நாடி நரம்பும் கண்ணீர் சிந்தும்.அந்த நாள் நெருங்கும் காலங்களிலும், ‘திடீரென வந்துடுமோன்னு’ பயந்து நடப்பேன்.அப்புடிதான் நேற்று போட்டோ ஷூட் க்கும் போனேன்.

‘அணையாடை உரசிய தொடையில காயம் சரியாச்சுன்னா’ பெண்கள் எல்லாரும் அடுத்த மாத பயணத்திற்கு தயாராகனும்.

இத்தன வேதனை ஆண்களுக்கு புரியவா போகுது!

வலிகளை பொறுத்துக் கொண்டு உடைகளை மாற்றி நான் ரெடியா இருந்தேன். யூனிட்டில இருந்து கார் அனுப்பி இருந்தாங்க. கார்ல நானும் அப்பாவும் கிளம்பி பிலிம் சிட்டிக்கு போனோம். அங்க உள்ள போய் டைரக்டரை பார்த்தோம். “காஸ்ட்யூம் சேஞ்ச் பண்ணி’ வர சொன்னாரு.

“என்ன டிரஸ் கொடுக்க போறாங்கன்னு” பயந்துகிட்டு போனேன். ஆனால் சாரீஸ் தான் இருந்தது. “அப்பாடான்னு” மனதை திடப்படுத்திக்கிட்டு நியூ டிசைன் சாரீஸ் எடுத்து கட்டிகிட்டு, மேக்கப் போட்டுக்கிட்டு வெளியில வந்தேன்.அப்போ அடிவயிறு எனக்கு ரொம்ப வலிக்க ஆரம்பிச்சது. இருந்தாலும் அதை பொறுத்துக்கிட்டு வந்தேன்.

அப்போ ஹீரோ அவரோட கேரவனுக்கு கூப்பிட்டார். “பெரிய ஹீரோ, போய் பாரு அப்படின்னு” எங்க அப்பாவும் சொல்ல, அவருடைய கேரவனுக்குள்ள போனேன். நானும் ஹீரோ மட்டும் தான் உள்ள இருந்தோம். அப்பா,மத்தவங்க எல்லாரும் வெளியில் இருந்தாங்க. ஹீரோ கதவை குளோஸ் பண்ணனாரு. என்னை அவர் பக்கத்துல உட்கார வெச்சு பேசினார். “என்னம்மா இந்த சின்ன வயசுல இவ்ளோ மெச்சூரிட்டியா இருக்க. இவ்வளவு அழகா இருக்க. உனக்கு பெரிய ஃப்யூச்சர் இருக்கு அப்படின்னு” என்னைத் தொட்டு தொட்டு பேசுனாரு.

“உனக்கு பேருதான் நல்லாவே இல்ல. ஏதாவது ஸ்டைலா ஒரு பேரு நான் யோசிக்கிறேன். இல்ல டைரக்டர்கிட்ட சொல்லி பேரு மாத்திடலாம்.மீடியால ஹீரோயின் உன்னைய அறிமுகம் பண்ணுறப்ப, உன் பேர நாம சேஞ்ச் பண்ணி தான் கொடுக்கப் போறோம். அந்த பேரு வேற லெவலுக்கு போகப்போகுது அப்படின்னு” என் கண்ணத்தை பிடிச்சு கில்லி சொன்னாரு.

நான் அவர் கையை தட்டிவிட்டு,இரண்டு அடி தள்ளி உட்காந்தேன்.

“என்னமா, இப்படி கூச்சப் படுற அப்படின்னு” சிரிச்சுக்கிட்டே சொல்லிட்டு,”நான் சூப்பரா சமையல் எல்லாம் செய்வேன். உனக்காக சூட்டிங் நேரத்துல ஸ்பெஷலா ஒரு ரெசிபி செஞ்சு தரேன்னு” சிரிச்சுகிட்டே பேசினாரு.

“இப்பவே, இவ்வளவு டார்ச்சர்ன்னா,இன்னும் படபிடிப்புல என்ன நடக்க போகுதோ தெரியல.

பத்து நாள் கழிச்சு படத்தோட சூட்டிங் தொடங்குச்சு. ஆனால் “கதையில நிறைய மாற்றம் செஞ்சிருக்கத” டைரக்டர் என் கிட்ட சொன்னாரு.திரைகதை மாற்றம் செய்யல, கதையவே மாத்தி இருக்கார்.
“சார், இந்த படத்துல காதல் காட்சி எல்லாம் நிறைய வருது நான் நடிக்கலைன்னு” சொன்னேன்.

“இதுல என்னமா இருக்கு. ஒரு டூயட் சாங். அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்ல அப்படின்னு” டைரக்டர் சமாதானப்படுத்தினாரு. அப்பாவும் சேர்ந்துகிட்டு, “அதெல்லாம் என் பொண்ணு நடிப்பா. நீங்க ஒன்னும் நினைச்சுக்காதீங்கன்னு” டைரக்டர்கிட்ட சொன்னாரு.

“நான் நடிக்காம போயிடுவேன்னு” அப்பாவுக்கு கவலை.ஏன்னா! வர வேண்டிய பணத்தை திருப்பிக் கேட்டா. என்ன செய்றது. அதனால அவரும் சமாளித்தார்.

“ஆக மொத்தம் என்னைய வித்துட்டாரு. அது மட்டும் நல்லா தெரியுது” மனசுக்குள்ள அவ்வளவு வருத்தமா இருந்தது.

இந்த கதைய மாத்துறதுக்கு ஹீரோ தான் முக்கிய காரணம்.

“இந்த நடிகரை பத்தி அவரோட ரசிகர்கள் உயர்வான எண்ணத்துல இருக்காங்க. ‘மனித கடவுள், தெய்வம் அப்படின்னு’ புகழ்ந்து தள்ளுவாங்க. ஆனா இவரோட வக்கிரபுத்தி யாருக்கும் தெரியாது. நடிகைகளை தொட்டு பேசுவதும், அடைய நினைக்கிறதும்.இவங்கள மாதிரி நடிகர்கள் திரையில சரியாவே நடிக்கிறது இல்ல.திரைக்கு பின்னாடி நல்லவர் மாதிரி நடிக்கிறாங்க.அதை நம்ப ஒரு கூட்டமே இருக்கு.

இந்த ஹீரோ டைரக்டர்கிட்ட போயி சண்டை போட்டு, “கிராமத்துக் கதையா இருந்தாலும் முத்தக் காட்சி வேணும். ஒரு ஐட்டம் சாங் வேணும்னு” கேட்டிருக்காரு. இந்த படம் நான் நடிச்சு முடிச்சதுக்கப்புறம் மீடியால, “இவரு நல்லவரு, இவர் கூட நடிச்சது பாக்கியமாக நினைக்கிறேன். சந்தோஷமா ஃபீல் பண்றேன் அப்படின்னு” பொய்யா பேட்டி கொடுக்கணும்னு” எனக்கு டைரக்டர் சொல்லி குடுத்தாரு.

முதல் காட்சி படப்பிடிப்பு நடந்தது. ஹீரோவுக்கான காட்சியை மட்டும் எடுத்தாங்க. ஒரு கடையில வேலை பார்க்கிற குழந்தை தொழிலாளர்கள் பத்தி பேசுற மாதிரி ஒரு சீன் எடுத்தாங்க.
கதைப்படி ஹீரோ பேரு நம்பியாரு.பெரிய ஹோட்டல் முதலாளி.அப்போ காலிங்பெல்லை அமுக்கினாரு.உடனே வெளியில் இருந்த பையன் உள்ளே வந்தான்.அவன் ரொம்ப சின்ன பையன். அவனை பார்த்தது, “யார்ரா நீ வேலைக்கு புதுசா ?, அப்படினு” கேட்டாரு.

அவனும் “ஆமா சார்ன்னு” தலையாட்டினான்.

சரி,”என் கார்ல இருக்குற பையை எடுத்துட்டு வான்னு” சொன்னாரு.

அவன் வேகமா போய் அந்த பேக்கை எடுத்துட்டு வந்தான். ஆனா,அவன் வேகமா ஓடி வந்த வேகத்துல பேக்கை கீழ போட்டான். அதைப் பார்த்த அவருக்கு ரொம்ப கோவம் ஆயிருச்சு.

“அறிவு கெட்டவனே!, அப்படின்னு” திட்டிகிட்டே, காலிங் பெல்லை அடிச்சாரு. அவரோட ஹோட்டல் மேனேஜர், நிறுவன அசிஸ்டன்ட் எல்லாரும் வந்தாங்க.

“யாரு சார் இந்த சின்ன பையனை வேலைக்கு வச்சது. இவனுக்கு என்ன தெரியும் ?,இவனுக்கு படிக்கிற வயசு. அதுவும் சின்ன பையனை வேலைக்கு வைக்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா?, அரசாங்கம் சொல்லுறத கேட்க மாட்டீங்களா ? அப்படின்னு” சொல்லி ஹீரோ சத்தம் போட்டு வசனம் பேசுறாரு. எல்லாத்தையும் ஓரே டோக்கில எடுத்தாங்க. ஹீரோ நல்லாவே நடிக்கல. ஆனாலும் எல்லாரும் “நல்லா நடிச்சதா தான்” சொல்லுவாங்க. ஏன்னா இப்ப அவரு பெரிய ஹீரோ.

“அடப்பாவிகளா! அப்ப நான் மட்டும் யாருடா சின்ன குழந்தை தான். “கடையில வேலை செய்யகூடாதுன்னு சொல்லுற கவர்மெண்ட் சட்டம். சினிமாவுல மட்டும் நடிக்கலாமான்னு சொல்லுதா ?, சினிமாவும் ஒரு வேலைதானே. அப்படின்னு” மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.

படப்பிடிப்பு முடிஞ்ச உடனே, “அவரோட கார்ல என்னையும் கூட்டிட்டு போறதா” மேனேஜர் கிட்ட ஹீரோ சொல்லி இருக்காரு. எல்லாரும் சொல்ற மாதிரி என் வாழ்க்கை இப்படித்தான் மாறப் போகுதோ!,
அவரோட லிஸ்டில் இப்ப என்னையும் சேர்க்க நினைக்கிறாரோ, என்னமோ!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *