(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தேசம் மிக முக்கியம். அவளை எந்த தேசத்தவள் என்று கேட்கிறார்கள். அவளுக்கே அது தெரியாது. தகப்பன் இலங்கையைச் சேர்ந்தவர், தாய் மலையாளம். பிறந்தது துபாய், படித்தது இங்கிலாந்து, இப்போது வேலை பார்ப்பது அமெரிக்காவில்.
அம்மாவில் அவளுக்கு எப்போதும் கோபம். அவள் யார், என்ன தேசம் என்று அவளுக்கு கற்றுத்தரவில்லை. அம்மா தொலைபேசியில் அழைப்பாள். அது ஒரு நடுச்சாமமாக இருக்கும், அல்லது ஒரு ஞாயிறு காலை ஐந்து மணியாக இருக்கும். சூரியன் கிழக்கே உதிக்கிறான். ஆகையால் கிழக்கே இருக்கும் தேசத்தவர்களுக்கு முதலில் விடிந்துவிடும். இப்படி அவள் சொல்வது அம்மாவுக்குப் புரிவதில்லை. ‘மீனுக்குட்டீ’ என்று அழைத்து தொலைபேசிக்கு கொடுத்த ஒவ்வொரு சதத்தையும் மீட்கும் விதமாக அட்லாண்டிக் இரைச்சலுக்கு மேலாக பேசிக்கொண்டே போவாள்.
அவளுடைய வீட்டுத் தோழி அமண்டா. அவளுடைய தேசம் வியட்நாம். ஒரு மர அலங்காரியாக (Topiarist) வேலை பார்க்கிறாள். மரங்களிலே யானை, கரடி, அன்னம் என்று உருவம் செதுக்குவாள். இந்தக் கலை மிகவும் சுலபமானது, தேவையற்ற திசையில் போகும் கிளையை வெட்டிவிடுவதுதான் என்பாள். தேவையற்ற கிளையை எப்படித் தீர்மானிப்பது என்று கேட்டால் அதற்குத்தான் படிக்கவேண்டும் என்ற பதில் வரும்.
அவளுடைய கிரேக்க காதலனுடன் வெளியே போகும் சமயங்களில் மரத்தை அலங்காரம் செய்வதுபோல தன் தலையையும் அலங்கரிப்பாள். மீனுவைப் பார்த்து ‘எப்படி? எப்படி என் தலை அலங்காரம்?’ என்பாள். ‘கிரேக்க அழகி மெடூஸாவின் தலை போல இருக்கிறது’ என்பாள் மீனு. அவளும் நன்றி கூறிவிட்டு கதவைச் சாத்தாமலே ஓடுவாள். இன்றுவரை அவளுக்கு மெடூஸாவின் தலை அலங்காரம் பற்றிய உண்மை தெரியாது என்றே நினைக்கிறாள்.
அலுவலகத்தில் மீனுவுக்கு பக்கத்து அடைப்பில் இருப்பவள் பெயர் எஸ்தர். அவளுடைய தேசம் ஜமய்க்கா. எந்த அறையினுள் நுழையுமுன்பும் அவள் கண்கள் பார்ப்பது வாசல் கதவுகளின் அளவுகளை. நுழைந்த பிறகு பார்ப்பது இருக்கைகளின் அகலங்களை. இரண்டு முழங்கைகளின் உதவியால் மார்புகளைத் தூக்கிக்கொண்டு வருவாள். சமீபத்தில் குழந்தை பெற்றவள். அந்தக் குழந்தையுடன் பிறந்த இருபதடி தொப்புள் கொடியை தன்னிடம் கொடுக்கும்படி ஆஸ்பத்திரியில் கேட்டபோது மறுத்துவிட்டார்கள். அவள் நாட்டிலே செய்வதுபோல சில சடங்குகளை அவளால் செய்ய முடியவில்லை. அது பெரிய வருத்தம் அவளுக்கு.
தினமும் அவளுடைய மூன்று மாதக் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்கிறாள். குழந்தையின் இரண்டுவேளை உணவுக்கும் முலைப் பாலைக் கறந்து இரண்டு போத்தல்களில் அடைத்துக் கொடுத்துவிட்டு வருகிறாள். ஆறுமணி அடித்ததும் குழந்தையின் இரவு உணவு, முன் ஆடையை நனைக்க, குழந்தைகள் காப்பக வாசலில் வந்து நிற்கிறாள். இந்தக் குழந்தை விபத்தாகப் பிறந்தது. புத்தகங்கள் கூறிய உத்திகளை எல்லாம் அனுசரித்தும் எப்படியோ நடந்துவிட்டது. இப்பொழுது முன் காப்பாக அவளுடைய கணவன் எந்நேரமும் ஆணுறை அணிந்தபடியே இருக்கிறான் என்கிறாள்.
எஸ்தரிடம் ஒரு றொட்வைலர் நாய் இருக்கிறது. உலகத்திலேயே உத்தமமானது. உலகத்திலேயே மோசமானது. இப்படி அதைச் சொல்வாள். கறுத்து பளபளக்கும் மேனியும், மஞ்சள் முகமும், மடிந்த செவிகளும், ஒட்டிய வாலுமாக கம்பீரமாக இருக்கும். பயிற்சி கொடுத்து கூர்மைப்படுத்தப்பட்டது. சத்தமே போடாமல் எசமானியை விசுவாசிககும் அற்புதமான காவல் நாய்.
அதைப் பார்த்ததில் இருந்து மீனுவுக்கு ஒரு மயக்கம். றொட்வைலர் தத்து கொடுக்கும் நிறுவனத்துக்கு அவளும் விண்ணப்பம் செய்தாள். ஆறுபக்க நீளம் கொண்ட விண்ணப்பப் படிவத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு வருடக் குட்டியை கேட்டிருந்தாள். அவள் கொடுத்த விபரங்கள் அவர்களுக்கு சம்மதமாக இருந்ததாகத் தெரிவித்தார்கள்.
ஒருநாள் நேர்முகப் பரீட்சைக்கு அந்த நிறுவனத்தினர் வீட்டிற்கு வந்தார்கள். நாயை வளர்ப்பதற்கு ஆரோக்கியமான சூழல் உண்டா என்பதை ஆராய்வதற்காக. வீட்டை ஒட்டி இருந்த குளமும், புல் தரையும் அவர்களுக்கு பிடித்துக்கொண்டது. கேள்வி மேல் கேள்வி கேட்டு உறுதி செய்தார்கள். வீட்டுத் தோழி என்ற முறையில் அமண்டாவைப் பார்த்தும் ஒரு கேள்வி.
“ஒரு றொட்வைலர் நாய் குட்டியை காசு கொடுத்து வாங்கலாம். ஏன் தத்து எடுக்கிறீர்கள்?”
அமண்டா அங்கும் இங்கும் பார்த்தாள். ஒன்றும் பேசவில்லை. பிறகு தரையைப் பார்த்தாள். அங்கு அவள் எதிர்பார்த்த பதிலை ஒருவரும் எழுதி வைக்கவில்லை. மீனு இரண்டு நாள் முழுக்க அவள் தலைமுடியைப் பற்றிப் பேசவே இல்லை.
ஆவி பறக்கும் கப்புச்சீனோ கோப்பியை ஒழுகும் கடுதாசிக் குவளையில் வைத்து உறிஞ்சியபடி எஸ்தர் அடைப்பு வாசலில் வந்து நின்றாள். அவள் இருக்கமுடியாது. உட்காருவதென்றால் இருக்கையில் நாலாபக்கமும் சரிசமமாக உடலை விநியோகிக்க வேண்டும். அதற்கு அவகாசம் இல்லை. “ஹனி, உன் றொட்வைலர் விண்ணப்பத்துக்கு பதில் வந்துவிட்டதா?” என்றாள்.
“இல்லையே, ஒவ்வொரு நாளும் முடிவை எதிர்பார்த்தபடி இருக்கிறேன்.”
“மீனு டியர், என்ன பதில் வந்தாலும் கலங்காதே. என்னை இரண்டு வருடம் பெயிலாக்கினார்கள்.”
“எஸ்தர், எனக்கும் அதுதான் கவலை. நாள் முழுக்க வேலை செய்த விட்டு வீட்டுக்குப் போனால் விசுவாசிக்க ஒரு ஜீவன் வேண்டும் அவர்கள் நிராகரித்தால் என்னால் தாங்க முடியாது.”
“இந்த வருடம் தேறாவிட்டால் அடுத்த வருடம் இருக்கிறது. உன் எசமானித்தனத்தில் அவர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். என்ன கவலை? ‘நீங்கள் காட்டும் ஆர்வமும், செய்த ஆயத்தங்களும் திருப்திகரமானவை. உங்களுக்கு எல்லாத் தகுதிகளும், அதற்கு அதிகமாகவும்கூட இருக்கின்றன. ஆனாலும் விண்ணப்பத்தில் கொடுத்த விபரங்களை தீவிரமாக ஆராய்ந்ததில் நீங்கள் இன்னும் தயாராக இல்லை என்ற துக்கமான முடிவுக்கு வந்திருக்கிறோம்.’ அநேகமாக இப்படித்தான் கடிதம் வரும்” என்றாள் எஸ்தர்.
முதல்நாள் இரவு புஷ் இரண்டு முறை ஜனாதிபதியாகிவிட்டார். அல்கோர் மூன்று தடவை ஜனாதிபதி ஆகியிருந்தார். அமெரிக்காவுக்கு இரண்டு நாளில் ஐந்து ஜனாதிபதிகள். அடுத்த வாரம் முடிவதற்கிடையில் 20 ஜனாதிபதிகள் தோன்றுவார்கள் என்று சிலர் ஆருடம் சொன்னார்கள். இரவு கண் விழித்து டீவி பார்த்ததில் மீனு முதல் முறையாக பத்து நிமிடம் லேட்டாகிவிட்டாள்.
லிப்ட் மூடும்போது யாரோ காற்றை எதிர்த்து நடப்பதுபோல குனிந்தபடி வருவது தெரிந்தது. ‘திற’ பட்டனை அமுக்கிப்படித்து காத்திருந்தாள். உயர்ந்த மடிப்புக் கலையாத ஆடைகள். மினுக்கிய சப்பாத்துகள். புதுசாக காட்சியளிக்கும் கழுத்துப்பட்டி. நறுமணம் ஒன்று லிப்டை நிறைத்தது. இரண்டாவது தலைமை அதிகாரி, அவளுடைய தலைவிதியை ஒரு கையெழுத்து மூலம் மாற்றக்கூடியவர். ரோஸ்டரில் முன் தீர்மானித்த சூட்டை அடைந்துவிட்ட ரொட்டிபோல அவள் துள்ளி விழுந்தாள்.
பெயர் ரொனால்டு மொரிஸன், அவருடைய தேசம் அமெரிக்கா. சிநேகமாகப் பார்த்து நன்றி கூறினார். பிறகு “முதல் பறவை புழுவைப் பிடிக்கும்” என்றார் சிரிப்புடன். இவள் ஓர் அசௌகரியமான புன்னகையை வெளியே விட்டாள். அது உதட்டை கடந்ததும் மறைந்துவிட்டது. பறவை என்றால் சரி, புழுவாக இருந்தால் முதல் புழுவாக இருக்கக் கூடாது என்று சொல்ல நினைத்தாள். சொல்லவில்லை. இரண்டாவது எலிதான் பொறியில் வைத்த வெண்ணெய்க் கட்டியைச் சாப்பிடும் என்று சொல்ல நினைத்தாள். சொல்லவில்லை, லிப்டின் சுவரோடு ஒட்டிக் கொண்டு 41வது மாடி வரும்வரைக்கும் மேலே தோன்றும் சிவப்பு எண்களை, அவளுடைய வாழ்க்கையே அதில்தான் தங்கியிருக்கிறது என்பதுபோல உன்னிப்பாகக் கவனித்தபடியே நின்றாள்.
வாசல் கதவில் சங்கேத அட்டையை உருவியதும் அது திறந்தது. பிறகு அவளுடைய அடைப்புக்குள் புகுந்து கைப்பையை வைத்தாள். அவளுடைய உயரத்திலும் பார்க்க பைல் கட்டுகள் உயரமாக வளர்ந்து விட்டன. பதினாறு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தாலும் அவை குறைவதில்லை. நின்றபடியே அன்றைய தகவல்களை கம்புயூட்டரில் படித்தாள். அவை அவளுக்கு உற்சாகத்தைத் தரவில்லை.
மீனுவுக்கு உற்சாகம் தரும் ஒரே இடம் கழிவறைதான். காரணம் அங்கே ஸ்க்ர்ட் உடுத்திய பெண்ணின் உருவம் வரைந்த ஒரு கதவு இருந்தது. அதற்குள் நுழைந்தவுடன் அது அவளுக்குச் சொந்தமாகிவிடும். ஜன்னல் விளிம்பிலிருந்து ஆகாயம்வரைக்கும் ஒரே வெளிதான். அடைப்புகள் இல்லை.
அவளுக்கு ஒரு கனவு உண்டு. அவள் பெயர் பொறித்த, கதவு மூடக்கூடிய ஒரு அறை வேண்டும். அப்பொழுதுதான் சந்திப்பு முடிந்து வெளியே போகும் ஆட்களிடம் ‘தயவுசெய்து கதவைச் சாத்தமுடியுமா?’ என்று கேட்கலாம். தொலைபேசியில் பேசும்போது கதவை அடைக்கலாம். அன்னியர்கள் உள்ளே வரும்போது கதவில் டக்டக் என்று தட்டிவிட்டு வரவேண்டும் என்று எதிர்பார்க்கலாம். காரியதரிசியை எட்டிப் பார்த்து ‘Hold my calls’ என்று உத்தரவிடலாம். கோபமான சமயங்களில் கதவை அடித்துச் சாத்தலாம். இது எல்லாம் சாத்தியமாகும், இரண்டு முறை தவறிய மனேஜர் பதவி அவளுக்கு கிடைக்கும்போது.
அவள் எழுந்து நின்றால் மேலும் இரண்டாயிரம் அடைப்புகள் தெரிகின்றன. அப்பொழுது இன்னும் சில கோழிகளும் எழுந்து நின்று பஞ்சி முறிக்கின்றன. சும்மா போகிறவர்களும், வருகிறவர்களும் விசாரிக்கிறார்கள். வெள்ளரிக்காய் வைத்த சாண்ட்விச்சை அவள் கடிக்கும்போது என்ன என்ன என்று கேட்கிறார்கள்.
எப்பொழுது கழிவறைக்குப் போனாலும் அவளுடைய தாயாரின் ஞாபகம் வந்துவிடும். ஆரோக்கியம் குறித்த இரண்டு அறிவுரைகள். மூக்கை சீறி வெளியே எறியக்கூடாது. கைக்குட்டையிலே சேமித்து வைக்கவேண்டும். கழிவறை சுருள்தாளை உபயோகிப்பதில் ஒரு முறை இருக்கிறது. அதற்கு அவள் தாயார் கட்டிய ஒரு ரைம்கூட உண்டு.
‘மேலிருந்து கீழே
மீனுக்குட்டி மோளே’
இப்பொழுதுகூட சுருள்தாளை பாவிக்கும்போது அவள் வாய் அவளை அறியாமல் அந்தப் பாடலை முணுமுணுக்கிறது.
மார்த்தா இளம் பெண். அவளுடைய தேசம் ஸ்வீடன். பயிற்சியிலிருக்கிறாள். அவள் சருமம் வெங்காயச் சருகுபோல மெல்லியது. உற்றுப் பார்த்தால் அவள் உடம்பில் ரத்தம் ஓடுவது தெரியும். விரல்கள் முடிந்த பிறகு இன்னும் சிறிது தூரம் வளர்த்து வடிவாக்கப்பட்டு சிவப்பு பூசிய நகங்கள். கையிலே ஒரு வளையம் மாட்டி அதிலே சாவிகளைக் கோத்து வைத்திருந்தாள். கடற்கரை நண்டுபோல நகர்ந்தபடியே கோப்புகளைச் சேகரித்துவிடுவாள். எப்போதோ ஒருத்தன் அனுப்பிய வலண்டைன் கார்டைப் பத்திரப்படுத்தி அடைப்புச் சுவரில் ஒட்டி வைத்திருக்கிறாள்.
‘உன் அங்கங்களை
வெளியேயும், உள்ளேயும்
அனுபவிக்க
காத்திருக்கிறேன்.’
ஆண்டு நிதி அறிக்கை இரண்டாயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. அவற்றை இரண்டாயிரம் பங்குதாரர்களுக்கு அனுப்பியிருந்தார்கள். அதற்குப் பிறகுதான் அந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டது. மார்த்தா ‘ஜுன் 30’ என்பதற்கு பதிலாக ‘ஜுலை 31’ என்று பதிந்திருந்தாள். மேலாளர் 2000 பிழைகள் என்று சொன்னார். மீனுவின் மேற்பார்வை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்றார். அவள் திகைத்துப் போனாள். அவருடைய அறையின் மூலையிலே, அளவான தண்ணீர் கிரமமாக ஊற்றி தொட்டியிலே பராமரித்த அக்லனீமா செடி வளர்வதைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
மேலாளர் பெயர் புரூஸ். அவருடைய தேசம் கனடா, அவரிடம் அறை இருந்தது. அதற்குக் கதவு இருந்தது. ஜன்னல் இருந்தது. அவருடைய இரண்டு மகள்களும் கீறிய படங்கள் சுவரை அலங்கரித்தன. மாலையில் துப்புரவுப் பணியாளர்கள் வரும்வரை வேலை செய்வார். ஏதாவது உதவி தேவை என்றால் அவருடைய இரண்டாவது மகளைப் புகழ்ந்து ஏதாவது சொல்லவேண்டும். ஒரு விபத்தில் அவருக்கு மணக்கும் சக்தி போய்விட்டது. கண் இல்லாதவர், காது கேளாதவர், வாய் பேசாதவர், கை கால் ஊனமடைந்தவர் என்று எல்லோரையும் மீனு பார்த்திருக்கிறாள். ஆனால் இதுவே முதல் முறை மணக்க முடியாதவரை சந்திப்பது. “பழைய ஞாபகங்கள் முதலில் நினைவுக்கு வருவது மூக்கினால் நுகரும்போதுதான். மணக்கும் சக்தி போனபோது என் இளமையும் தொலைந்துவிட்டது” என்பார்.
ஆனால் மீனுவுக்கு தன் இளவயது ஞாபகங்களை எவ்வளவு முயன்றும் மறக்க முடியவில்லை.
அவளுக்கு வயது 13. ஐஸ்கிரீம் சாப்பிட அவன் கூட்டிப் போகிறான். அவனுடைய தேசம் இங்கிலாந்து. பிளாஸ்டிக் கத்தி கீறி அவளுக்கு காயம்பட்டுவிட்டது. அவளுடைய சருமம் திராட்சைப் பழத்தோல்போல மெல்லியது என்று அவன் வர்ணிக்கிறான். உருண்டையாக கடும் சிவப்பு ரத்தம் ஒரு துளி வந்தது. அவன் நாக்கை நீட்டி அதை உறிஞ்சினான். அந்தக் கணம் அவன் முகம் ரத்தம் குடிக்கும் நரிபோல மாறி அருவருப்பாகியது. அதற்குப் பிறகு அவள் அவனைப் பார்க்கவில்லை.
அவளுக்கு வயது 16. இன்னுமொருத்தன் வீட்டிற்கு வருகிறான். அவனுடைய தேசம் தேவலோகம். அழகாகத் தலை வாரியிருந்தான். ஒழுங்கான உடை. பாலிலே போட்ட திராட்சைபோல அசையும் தொண்டை உருண்டை. இரண்டு முழங்கால்களும் ஒட்ட, ஒரு கையை மறுகை மேல் வைத்து, நாற்காலி நுனியில் இருக்கிறான். சுத்தமான விரல்கள்.
முழுக்கையையும் பாவித்து சேலைத்தலைப்பை தூக்கியபடி அவள் அம்மா வருகிறாள். புட்டு அவிந்துவிட்டதா என்று ஈர்க்கினால் குத்திப் பார்ப்பதுபோல ஒரு பரீட்சை செய்வதுதான் அவள் நோக்கம். அவன் மரியாதையாக எழுந்து நிற்கிறான். “என் மகளுக்கு பதினாறு வயது தொடங்க நாட்கள் இருக்கின்றன. அவள் தனியாக வருவதற்கு இன்னும் தயாராக இல்லை.” இப்படிச் சொல்கிறாள். அந்த தேவலோகத்துக்காரனை பிறகு அவள் காணவில்லை.
“நீங்கள் கூப்பிட்டீர்களா?” என்றாள். மேலாளர் கடிதத்தை நீட்டினார், அப்படிக் கொடுத்தபோது அவள் கண்களை அவர் பார்க்கவில்லை. வாங்கும்போதே நெஞ்சு பக்கென்று அடித்தது. அவளுடைய வேலை உயர்வு பற்றிய கடிதம். இப்படிப் போனது அதன் வாசகம்.
“கடந்த வருடத்தில் நீங்கள் அளித்த அளப்பரிய சேவைக்கு எங்கள் நிறுவனம் கடமைப்பட்டிருக்கிறது. இந்தக் கம்பனி மேலாண்மை சார்பில் உங்களை மனமாரப் பாராட்டுகிறோம். உங்கள் வேலைத்திறன் பற்றிய கோப்பை ஆழமாகவும், தீர்மானமாகவும் ஆராய்ந்ததில் மனேஜர் பதவியை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு நீங்கள் இன்னும் தயாராகவில்லை என்றே கருதுகிறோம். எதிர்வரும் வருடங்களில் உங்கள் சேவை இன்னும் உயரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.”
போர்க்களத்து சைனியம்போல அவளுடைய பற்கள் மோதிக்கொண்டன.
நீ தயாராக இல்லை. நீ தயாராக இல்லை.
அவளுக்கு ஒரு பக்கத்து வீட்டுக்காரன். அவனுடைய தேசம் ஈரான். அவன் முகம் காரட் நிறத்தில் இருந்தது. நீண்டுபோய் இருப்பான். அவன் வீட்டில் எந்த பல்பையும் நின்றபடியே மாற்றிவிடுவான். நாற்காலியை இழுத்து வைத்து ஏறி நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டு தரம் அவனைச் சந்தித்திருக்கிறாள். ஒருமுறை தவறுதலாக அவன் வீட்டுக்கு போயிருந்த கடிதத்தை கொண்டுவந்து கொடுத்தான். அது அவளுடைய வீட்டுத்தோழி அமண்டாவுக்கு வந்தது. நன்றி என்று விட்டு தன்னுடைய பெயரைச் சொல்வதற்கு வாயைத் திறந்தாள். அதற்கிடையில் அவன் திரும்பிவிட்டான்.
அடுத்த தடவை குப்பைப் பையை பொது இடத்தில் போடச் சென்றபோது அவனும் வந்திருந்தான். தலை மூடி வைத்த சாம்பல் நிற அப்பியாச உடுப்பு அணிந்திருந்தான். கன்னம் மழுமழுவென்று மழித்திருந்தது. சிவந்த முகத்தில் பச்சைப் புள்ளிகள் தெளித்ததுபோல மயிர்கள் வளர்வதற்கு உத்தேசித்திருந்த இடங்கள் தெரிந்தன. அவளுடைய பையை வாங்கி இடது கையால் சுழற்றி கொள்கலனுக்குள் எறிந்தான். என்ன கை, என்ன வலிமை, என்ன லாகவம். அப்போது அந்தக் கையினுடைய மிச்சப்பகுதிகளை அறிமுகம் செய்துகொள்வதற்கு அவளுக்கு ஆவல் பிறந்தது.
‘நன்றி’ என்றாள், இன்னொரு இருதயம் நெஞ்சில் புகுந்துவிட்டது போல அவளுக்கு அடித்துக்கொண்டது.
இரண்டு நாட்களாக அவனுடைய Lionel Landscaping வாசகம் எழுதிய வாகனத்தின் பின்பக்கத்தில் சிவப்பு ரோஜா பூச்செண்டு ஒன்றிருந்தது. இன்னும் ஒரு நாள் விட்டால் அது காய்ந்து கருகிவிடும். யாருக்காக வாங்கினான்? ஏன் கொடுக்கவில்லை? அன்றிரவு நடுச்சாமம் போய் அவனுடைய கதவைத் தட்டுவாள். நீண்ட ஈரானிய உடையில் ஒரு சிவப்பு முகம் தோன்றும். ‘உன்னுடைய பூச்செண்டு வாடுகிறது. நான் இங்கேதான் இருக்கிறேன்’ என்று அப்போது சொல்லாம்.
அவள் அலுவலகத்தை விட்டு புறப்பட்டாள். அவசரமாக வீட்டுக்கு போகவேண்டும். அவளுக்கு அழுவதற்கு நிறைய இருந்தது. எட்டு வீதி மாஸ்பைக் நெடுஞ்சாலையில் வாகனங்கள் இருபக்கமும் நெருக்கிக் கொண்டு பறந்தன. அப்பொழுதுதான் கவனித்தாள். அவளுக்கு பக்கத்துக்கு பக்கமாக சிவப்பு நிற கிறைஸ்லர் காரில் ஒருத்தன் வருகிறான். மஞ்சள் வாசகம் எழுதிய கறுப்பு ரீசேர்ட் அணிந்திருக்கிறான். அவனுடைய பெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அவனுக்கு ஒரு தேசம் இருந்தது. அது டூனிஸியாவாக இருக்கலாம். அல்லது துருக்கியாக இருக்கலாம். குளிர்கால ஆரம்பத்தை அவமதித்து மூடி திறந்துவிட்ட கார். அவன் சிகை பின்புறமாகப் பறக்கிறது. அவன் ஒரு இருபது டொலர் நோட்டை எடுத்து அவளை நோக்கி ஆட்டுகிறான். பார்க்காததுபோல அவள் வேகத்தை அதிகமாக்குகிறாள். அவனும் விடவில்லை. வேகத்தைக் கூட்டுகிறான். ஸ்டியரிங் வளையத்தைப் பார்த்துச் சிரிக்கிறான். இரண்டு 20 டொலர் தாள்களை எடுத்து ஆட்டுகிறான். அவள் வேகத்தை மட்டுப்படுத்த அவனும் அப்படியே செய்கிறான். மற்ற வீதிக்கு மாறுகிறாள். அவனும் எப்படியோ மாறி பக்கத்தில் வந்துவிடுகிறான். அவன் கைகளிலே இப்போது 100 டொலர் தாள் ஆடுகிறது. காரை மிகவும் லாகவமாக ஓட்டுகிறான். அவளுடைய விலை இரண்டு நிமிடத்தில் ஐந்து மடங்கு உயர்ந்துவிட்டது.
நான் தயாராக இருக்கிறேன், நான் தயாராக இருக்கிறேன் என்று கத்த வேண்டும்போல அவளுக்குத் தோன்றியது. அவன் எங்கே கொண்டு போவான். மின் அட்டையில் திறக்கும் கதவுகள் கொண்ட, உயர்தரமான படுக்கை விரிப்புகள் விரித்த, குளியல் அங்கியும், துணிச்செருப்பும் இலவசமாகத் தரும் ஐந்து நட்சத்திர ஹொட்டலுக்கா, அல்லது முகம் சுருங்கிய கிழவி ஒருத்தி மணிக்கு இவ்வளவு என்று வாடகைக்கு விடும் குளியல் தொட்டி இல்லாத அறைக்கா?
எதிரே கட்டண கேட் வந்தது. அவன் தடுப்பில் நின்றபோது இவள் ‘வேக சாலை’ வழியாக புகுந்து முதலாவது வெளி வீதியை எடுத்து தப்பி வெளியே வந்துவிட்டாள். தண்டனைக் காசை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தாள். பத்து நிமிடம் கழித்து மறுபடியும் நெடுஞ்சாலையில் போய் கலந்துகொண்டாள். அப்பொழுதும் அவள் நெஞ்சு படபடவென்று அடித்தது. மணிக்கட்டுகள் நடுங்கின். முன்னுக்கும் பின்னுக்கும் பார்த்தாள். அவனைக் காணவில்லை. நிம்மதி ஏற்பட்டது.
அமண்டா அன்று வீட்டில் இருக்க மாட்டாள். அவளுடைய கிரேக்கக் கடவுளுடன் வெளியே போயிருப்பாள். வீடு முழுக்க அன்று மீனுவுக்கே சொந்தம். அழுவதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வளவு பெரிய ஆகாயத்தை மேலே வைத்துக்கொண்டு இரண்டு பறவைகள் நிலத்தைத் தொட்டபடி பறந்தன. காரிலே மோதுவதுபோல வந்து பிறகு விலகின. நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்திலும் பார்க்க பத்து மைல் கூடிய ஸ்பீடில் மீனு விரைந்து கொண்டிருந்தாள்.
கறுப்பு நாய் படம் போட்ட கடித உறை ஒன்று அவளுக்கு வீட்டிலே காத்திருந்தது. அவளுடைய அழுகையை திறம்படச் செய்து முடிப்பதற்கு கூடுதலான ஒரு காரணம் அதனுள் இருந்தது அவளுக்குத் தெரியாது.
– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.