காபூல் திராட்சை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 7,830 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சமீபத்தில் இணையத் தளங்களில் ஓடும் ஒரு பிரபலமான நகைச்சுவைத் துணுக்கை படிக்க நேர்ந்தது.

பெண்கள் உரிமைக்காகப் பாடுபடும் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்கு பயணம் செய்தார். அங்கே ஆண்கள் முன்னே நடக்க, பர்தா அணிந்த பெண்மணிகள் பின்னே ஆறு அடி தூரத்தில் தொடர்வதைக் கண்டார். ‘சீ, இது என்ன அடிமைத்தனம்’ என்று மனம் நொந்துபோய் திரும்பிவிட்டார்.

இதே பெண்மணி தலிபான்கள் ஆட்சி நடந்தபோது மீண்டும் காபூலுக்கு போனார், ஆச்சரியம். இப்போது பெண்கள் மொட்டாக்கை பின்னே எறிந்துவிட்டு முன்னே நடக்க, ஆண்கள் பின்னால் போனார்கள். அமெரிக்கப் பெண்மணி பரவசமானார். “ஓ பெண்ணே, என்ன மாயம்! எப்படி இதைச் சாதித்தாய்?” என்றார். அதற்கு அவள் “அது ஒன்றுமில்லை. மிதிவெடிதான் காரணம்” என்றாள்.
இதைப்படித்த பிறகு என் காபூல் அனுபவம் ஒன்றை எழுதலாம் என்று தோன்றியது. அதுதான் கீழே வருவது.

குருட்டு அரசன் திருதராட்டினனை மணமுடித்த காரணத்தினால் தன் வாழ்நாள் முழுக்க கண்களைக் கட்டிக்கொண்டு அரசியாகக் காலம் கழித்தவள் காந்தாரி. யானைப்படை அதிபதியாகிய சகுனியின் சகோதரி. அவளுடைய நாடுதான் காந்தாரம். அப்படி ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட கண்டஹார் நகரை நோக்கி அந்த சிறிய விமானம் பறந்து கொண்டிருந்தது.

அதற்குள் நாங்கள் பத்து பேர் இருந்தோம். இதுவே எனது முதல் ஆப்கானிஸ்தான் பயணம். விமானப் பணிப்பெண்கூட இல்லாத அந்தப் பிளேன் ஒரு வெள்ளிப்பறவைபோல பஞ்சு முகில்களில் தத்தித்தத்தித் பறந்தது. அதனுடைய பக்கவாட்டு உடம்பில் நீல வர்ணத்தில் UN என்று கொட்டை எழுத்துக்களில் எழுதியிருந்தது. அந்த எழுத்துக்கள் மந்திரசக்தி படைத்தவை. கண்டஹாரை ஆண்ட தலிபான்கள் எட்டு வாரங்களுக்கு முன்பு விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்த முயன்றார்கள். இந்த இரண்டு அட்சரங்களும் விமானம் சுட்டு வீழ்த்தப்படும் அபாயத்தில் இருந்து எங்களைக் காக்கும்.

இரு வெள்ளைக்கார விமான ஓட்டிகளையும், ஒரு பெண்ணையும், என்னையும் தவிர்த்து மற்ற எல்லாப் பயணிகளும் சிறு சிறு தாடிகளை வளர்த்திருந்தார்கள். ஆறு மாதங்களுக்கு முன்னர் என் சக ஊழியர் ஒருத்தர் தலிபான்களால் கைது செய்யப்பட்டார். அவருடைய குற்றம், தாடி மூன்று விரற்கடை தூரம் வளர்ந்திருக்கவில்லை என்பதுதான். சிறையில் நாலு வாரம் வைத்தார்கள். அந்த நேரத்தில் தாடி போதிய நீளம் வளர்ந்து ஒத்துழைத்து அவரை விடுதலை செய்தது.

இப்பொழுது தலிபான்கள் தங்கள் விதிகளை கொஞ்சம் தளர்த்திவிட்டார்கள். அந்நியர்களின் தாடியை அவர்கள் அளப்பதில்லை. ஆனபடியால் பல வெளிநாட்டு விருந்தாளிகளும், பத்திரிகைக்காரர்களும் பழையபடி கண்டஹார் நகரை நோக்கிப் படை எடுத்தார்கள். இந்தப் பயணத்திற்கு நான் ஒருவித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. மேல் அதிகாரியின் உத்தரவு. மறுப்பு சொல்லமுடியாமல் வேகமாக கிளம்பவேண்டி வந்தது. காலையில் புறப்பட்டால் வேலையை முடித்துவிட்டு அதே பிளேனில் மாலை வந்துவிடலாம் என்று சொன்னார்கள் நானும் அதை அப்படியே நம்பிவிட்டேன்.

அங்கேயும் எனக்கு பெரிய வேலை என்று சொல்லமுடியாது. தலிபான்கள் மேலே அவர்கள் போதைப்பொருள் உற்பத்திக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. அதை அவர்கள் மறுத்தார்கள். கடத்தலில் அகப்பட்டவர்களிடம் கைப்பற்றிய இரண்டு மில்லியன் டொலர் மதிப்புள்ள போதைப் பொருளை பகிரங்கமாக தீ வைத்து கொளுத்துகிறார்கள். அதை நேரடியாகப் பார்த்து அறிக்கை தயாரிப்பதுதான் என் வேலை.

அதன்படியே நடந்தது. பெரிய மைதானத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தார்கள். நீண்ட ஆடை நிலத்திலே இழுபட தலிபான் உயர் அதிகாரி வந்தார். முன்கோணத் தொப்பி அணிந்த நெப்போலியன் வெள்ளைக் குதிரையில் அமர்ந்தபடி ரஸ்ய எல்லையில் தன் துருப்புகளைப பார்வையிட்டது போல ஒரு பார்வை பார்த்தார். தீப்பந்தத்தை உயரத்தூக்கி தீ மூட்டியதும் கைதட்டல் போல கரும்புகையும் எழுந்தது. அந்தப் புகையைச் சுவாசித்தவர்கள் சிறிது நேரம் வேறு உலகில் சஞ்சரிக்கப் போய்விட்டார்கள்.

இந்த நாளைக் கொண்டாட தலிபான் அதிகாரி பார்வையாளர்களுக்கு ஒரு மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கட்டிடம், சிறியதாகவும். அடக்கமாகவம், சுத்தமானதாகவும் இருந்தது. பூச்செடிகள் சுற்றிலும் பூத்துக் குலுங்கின. வெடிக்காத குண்டுகள் எல்லாவற்றையும் சேகரித்து மண்ணிலே புதைந்து ஒரு அடி மட்டும் மேலே தெரியும்படி வட்டமாக பூந்தொட்டிகளைச் சுற்றி அலங்கரித்திருந்தார்கள். குண்டுகளிலும் அழகு இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒருவேளை வாழ்வின் அநித்தியத்தை காட்டும் முயற்சியாகவம் இருக்கலாம் அல்லது ரஸ்யர்களிடம் வெடிக்கும் குண்டுகளில், பார்க்க வெடிக்காத குண்டுகள் தான் அதிகம் என்பதைச் சொல்லாமல் உணர்ந்துகிறார்களோ புரியவில்லை.

எந்த நேரத்திலும் ஒரு குண்டு தனது மனதை மாற்றி வெடிக்கலாம். ஆப்கானிஸ்தான் நீட்டு ரொட்டியை வெட்டிச் சாப்பிட முடியாது. கடித்தும் உண்ண இயலாது. பிய்த்து பிய்த்துதான் சாப்பிடலாம். அதுவும் விரைவில் பிய்ந்து ஒத்துழைக்காமல் ரப்பர்போல இழுபடும். இவ்வளவு கஷ்டம் இருந்தும் அன்று நான் சாப்பிட்ட வேகத்தில் என்றுமே சாப்பிட்டது கிடையாது.

சொன்ன நேரத்துக்கு எங்கள் விமானம் கண்டஹாரை விட்டு கிளம்பியது. ஆனால் எல்லையை அடையும் சமயம் பைலட்டுக்கு ஓர் அவசரக் செய்தி வந்தது. அதன்படி அவர் பிளேனை திருப்பினார். ஒரு பொதுநல ஊழியர் குண்டுவெடிப்பில் சிக்கி ஆபத்தில் இருக்கிறார். அவரை காபூலில் ஏற்றி பெஷாவார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும். நாங்கள் ஓர் இரவு காபூலில் தங்கி மறுநாள் எங்கள் பயணங்களைத் தொடரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டோம். வேறு வழியில்லை.

இப்படி ஒரு விபத்துபோலத்தான் என் காபூல் பயணம் நிகழ்ந்தது, காரணம் தெரியாமல் என் மனம் அடித்துக்கொண்டது. தாகூர் எழுதி பிரபலமான காபூலிவாலா கதையை மறக்கமுடியுமா? தாகூரின் ஐந்து வயது மகளுக்கும், காபூலில் இருந்து வந்த முரட்டு பட்டான் பழ வியாபாரி ஒருவனுக்கும் இடையில் ஏற்படும் அன்புப் பிணைப்பை சொல்லும் கதை அது. அந்தக் குழந்தையின் பெயர் மினி. அவள் மிடுக்கோடு உட்கார்ந்திருக்க, இந்த காபூலிவாலா அவள் காலடியில் பணிவோடு அமர்ந்து அவள் சொல்லும் கதைகளைக் கேட்பான். அவன் விற்கும் காபூல் திராட்சை பழங்களை மினிக்கு இலவசமாக கொடுப்பான். இப்படி கதை போகும்.

அன்றிலிருந்து இந்தக் காபூல் திராட்சைப் பழங்களில் எனக்கு ஒரு மோகம். சிறு வயதில் காபூலிவாலா கதையைப் படித்தபோது காபூலுக்கு ஒருநாள் நான் வரக்கூடும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. விமான தளத்தில் பிளேன் இரவு இறங்குவதற்கு அவசியமான ஓடுதரை விளக்கு வேலை செய்யவில்லை. எனினும் ஓடுதரையின் இருபக்கமும் நிறுத்திவைத்த கார்கள் விளக்குகளைப் போட்டு சமிக்ஞைகொடுத்தன. அதை வைத்து விமானி சாமாத்தியமாக பிளேனை தரை இறக்கிவிட்டார். ஒரு நல்ல மனிதரின் உயிரைக் காப்பாற்ற விமானி பத்து பயணிகளை பணயம் வைக்க நேர்ந்தது. நல்லவேளை தப்பிவிட்டோம்.

உயிராபத்தில் இருந்த ஊழியரை ஏற்றிக்கொண்டு பிளேன் மறுபடியும் உயர எழும்பிப் பறந்தது. நாங்கள் காபூலில் தங்குவதற்கு இடம் தேடி ஒவ்வொரு திசையில் புறப்பட்டோம். என்னுடைய வழிகாட்டி அது ஹொட்டல் என்பதை உறுதி செய்தார். ஒரு ஹொட்டலுக்கான எந்தவிதத் தகுதியையும் அது கொண்டிருக்கவில்லை. வரவேற்பாளர் என் பாஸ்போர்ட் விபரங்களை ஒரு நீண்ட பேப்பரில் ஒவ்வொரு எழுத்தாக எழுதிப் பதிந்தார். அவருக்கு பின்னால் ஓர் அறிவிப்புப் பலகையில் பெரிய எழுத்துக்களில் ஆங்கிலத்திலும், புஸ்துவிலும், டாரியிலும் இப்படி எழுதி வைத்திருந்தது.

1. கள்ள பாஸ்போர்ட்காரருக்கும், அடையாள அட்டை இல்லாதோருக்கும் அனுமதி கிடையாது.
2. வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்றவற்றை வரவேற்பறையில் பாதுகாப்புக்கு விடவும்.
3. தகுந்த துணையுடன் வரும், முழுக்க முகத்திரை அணிந்த பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
4. ஆண்களுடன் வரும் பெண்கள் தங்கள் மணப்பதிவை உறுதிசெய்ய வேண்டும்.

இப்படியாக இன்னும் பல கட்டளைகள். மோசஸின் பத்து கட்டளைகள் அப்போது எனக்கு வெகு சாதாரணமாகப்பட்டன. என்னுடைய அறை ஒரு நீண்ட நடைபாதையின் முடிவில் இருந்தது. சாவியை நுழைத்து பூட்டை திறந்த பிறகும் கதவு நகர மறுத்தது. பெரும் பலத்தை பிரயோகித்து தள்ளியபோது தான் திறந்தது. மரக்கட்டிலில் விரித்த போஃம் மெத்தையில் இரண்டு வெவ்வேறு கலர் உறைகள் போட்ட தலையணைகள் கிடந்தன. ஒரு மேசை மின்விளக்கு. அடிக்கடி மின்வெட்டு இருக்கும் என்பதன் அறிகுறியாக மெழுகுவர்த்தியும், நெருப்புப் பெட்டியும். கதவிலே தீ விபத்து சமயம் எப்படி தப்பிக்க வேண்டும் என்ற வரைபடம்.

அந்த அறையிலே இருந்த பொருட்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலைப்பட்டியல் இருந்தது, அவற்றின் முறையான பாதுகாப்புக்கு நானே உத்திரவாதம் என்ற கடுமையான எச்சரிக்கையுடன். விலைகளைப் பார்த்தபோது இந்த ஹொட்டல் நிறுவனத்தினருக்கும், பாட்டா காலணி கம்பனிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்று பட்டது. ஆப்கானிஸ்தான் பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருந்தபடியால் எல்லாப் பொருட்களின் விலைகளும் டொலரிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தன.

கிளாஸ் 1.95 டொலர்டவல் – சிறியது 4.95 டொலர்டவல் – ரியது 7.95 டொலர்நிலைக் கண்ணாடி 16.95 டொலர்மேசை 49.95 டொலர்நாற்காலி 14.95 டொலர் எப்படியும் ஓர் இரவு நான் இங்கே தங்கவேண்டும். அடுத்த நாள் காலை பிளேன் திரும்பிவிடும். என்னுடைய கடமை இந்தப் பொருட்களை சேதம் அடையாமலும், களவு கொடுக்காமலும் பாதுகாத்து அவர்களிடம் திரும்பவும் ஒப்படைக்கவேண்டும் என்பதே. அதற்கு முன் பசிக்கு ஏதாவது ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.

உணவகத்தில் என்னைத் தவிர இன்னொருத்தர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மெனு அட்டை புஸ்துவில் இருந்தது. அதற்குப் பக்கத்தில் ஆங்கிலத்தில் மையினால் எழுதி வைத்திருந்தார்கள். எல்லா அயிட்டமும் ஆடு, மாடு, ஒட்டகம் என்று தழை சாப்பிடும் மிருகங்கள் சம்பந்தப்பட்டவையாகவே இருந்தன. என் தவிப்பைப் பார்த்த அந்த நல்ல மனிதர் தன்னுடைய பிளேட்டை தூக்கிக்கொண்டு என் மேசைக்கு வந்தார். இவர் தலையில் குஞ்சம் வைத்து தோளிலே தொட்டுக்கொள்ளும் தலைப்பா அணிந்திருந்தார். காபூலிவாலா இப்படித்தான் தோற்றியிருப்பார் என்று என் மனது சொல்லியது. அவர் உதவியால் ஒம்லெட்டுக்கும், இரண்டு மரக்கறிக்கும் ஆணை கொடுத்தேன்.

காபூலிவாலா அடிக்கடி வரும் வாடிக்கைக்காரர். தன் இங்கிலீசை தீட்டிப் பார்ப்பதற்கு நான் அகப்பட்டதில் மகிழ்ந்து போனார். மரியாதை காரணமாக என் முகத்தை நேரே பார்க்காமல், என் வலது காதில் இருந்து இரண்டு அடி தூரத்தில் தன் பார்வையை வைத்துக்கொண்டு பேசினார். தன் இரண்டு கைகளையும் உபயோகித்து வெகு வேகமாகச் சாப்பிட்டார். அவர் ஒரு போராளியாக இருக்கலாம். தசைகள் அடக்கமாகத் திரண்டு, அசைந்து அவருடைய தோலுக்குள் ஒரு விலங்கு வாழ்வது போன்ற பிரமையை கொடுத்தன. எலும்புகளை நறுக்நறுக்கென்று கடித்தார். சிலவற்றை விழுங்கினார். சிலவற்றைச் சப்பி கோப்பையிலேயே துப்பினார். இந்த தெரிவுகளை அவர் எப்படிச் செய்தார் என்பது எனக்குப் புரியவில்லை.

தன் வீட்டுச் சிறையில் மூன்று கைதிகளைத் தான் பராமரிப்பதாகவும், இரண்டு நாள் வீட்டுக்குப் போகவில்லை என்றும். அவர்களைப் பார்க்க யாருமில்லையென்றும், அன்று இரவு முடிவதற்கிடையில் திரும்ப வேண்டும் என்றும் கூறினார். அநாதரவான கைதிகள் மேல் அவருக்கு இருந்த பாசம் என்னை புல்லரிக்க வைத்தது. என் சாப்பாடு வருவதற்கு இன்னும் சமயம் கிட்டவில்லை. வரவேற்பாளரிடம் ஒரு ஏகே 47 ஐயும், கைத்துப்பாக்கியையும் திருப்பி பெற்றுக்கொண்டு காபூலிவாலா என்னிடம் விடைபெற்றுச் சென்றார். நான் தனித்து விடப்பட்டேன். அவர் பிளேட்டில் விட்டுப்போன எலும்புக் குவியல் மட்டும் எனக்குத் துணையாக இருந்தது.

தலைக்குமேல் தூக்கிப் பிடித்தபடி ஒரு சேவகன் என் உணவைக் கொண்டுவந்து வைத்தான். இவ்வளவு மோசமான முட்டைகளை ஒரு கோழி இடும் என்பதோ, அவற்றை இவ்வளவு மோசமாக சமைக்க முடியும் என்பதோ நான் அன்றுவரை அறியாதது. இங்கே சாப்பிடுவது காபூலிவாலா போன்றவர்களுக்கே சாத்தியம் என்று எனக்கு பட்டது.

வெளியே காற்றாடப் போனேன். அந்தப் பாதை என்னை பின் புறத்துக்கு கொண்டுபோய் விட்டது. கண்களை நம்ப முடியவில்லை. பெரிய பராமரிப்புகளை எதிர்பார்க்காத ஒரு திராட்சைத் தோட்டம். ஆரோக்கியமான முந்திரிக் கொடிகள் உருண்டு திரண்டு படர்ந்து ஆகாயம் தெரியாமல் மறைத்தன.முதலில் ஒன்றும் கண்ணுக்குப் புலப்படவில்லை. பிறகு பழங்கள் தோன்ற ஆரம்பித்தன. காபூல் திராட்சைகள். ஒரு சேதம் இல்லாமல் கொடியிலேயே கொழுத்துப்போய் குலக்கு குலக்காகத் தொங்கின்.

மெல்லிய சந்திர ஒளி இருந்தது. சிவப்பு திராட்சை தங்கம்போல ஜொலித்தது. அதற்கு நடுவே ஒரேயொரு விதை கறுப்பு முத்துபோல காட்சி தந்தது. கையெட்டும் தூரத்தில் இருந்த ஒன்றைப் பறித்து வாயிலே போட்டேன். அது முன் பற்களால் கடிக்க முடியாதபடி பெரிதாக இருந்தது. பாக்கு கடிப்பதுபோல கொடுப்பு பற்களிலே வைத்துக் கடித்தேன். பழத்திலே இருந்த சாறு சீறிப் பாய்ந்து, கண்ணிலேயும் மூக்கிலேயும் பட்டு வாயெல்லாம் வழிந்தது. தேன்போன்ற தித்திப்பு.

தாகூரின் காபூலிவாலா கதையில் வரும் மினியின் வயதுதான் என் மகளுக்கும், அவளுக்கும் இரண்டு பழங்கள் பிடுங்கலாம் எனறு யோசித்தேன். காபூல் நகரத்தில், தாவிபான்கள் ஆட்சியில், திராட்சைக் கொடியில் தானாகக் கனிந்த பழங்களைத் தன் கையால் கொய்யும் பாக்கியம் உலகில் எத்தனை பேருக்குக் கிட்டும்!

என் மகளின் பெயர் டிடி. அவள் வாய் சிறிதாக, உருண்டையாக இருக்கும், ஒரு அணில் வாயைப்போல சிவந்துபோய். டிடி முழு வாயைத்திறந்தாலும் ஒரு முழுப்பழம் அவள் வாய்க்குள் போவது சிரமமான காரியமே. இருந்தாலும் பழங்களை வெகு கவனமாக காம்பு ஒடியாமலும், தசைகள் நசுங்காமலும் பிடுங்கினேன். தொட்டவுடன் இங்க் கையிலே வரும் ஆப்கானிஸ்தான் புஸ்து பேப்பரில் அந்தப் பழங்களைச் சேகரித்து பொட்டலமாக்கிக் கொண்டு என் அறைக்குத் திரும்பி வந்தேன். அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது காபூலில் திருட்டு குற்றத்திற்கு கையை வெட்டி விடுவார்கள் என்பது.

முதல் நாள் இரவு டிடி தடுப்பு வைத்த தன் கட்டிலில் படுத்து தனக்குத் தானே தாலாட்டு பாடியபடி நித்திரை போனாள். அந்த தாலாட்டில் ‘லாலா, னானா’ போன்ற சொற்கள் இல்லை. அவள் உண்டாக்கிய முழுவார்த்தைகளும், இனிமேல் கண்டுபிடிக்கப் போகும் வார்த்தைகளுமாக அந்தத் தாலாட்டு இருந்தது. காலையில் அவள் விளையாட்டு போனில் மும்முரமாக இருந்தாள். அவள் கூப்பிடும் சிநேகிதிகள் ஒருவாராவது போனுக்கு வரவில்லை. ஆகவே அவர்களுடைய பதில் சொல்லும் மெசினில் தகவல்களை விட்டாள். இரவு எனக்காகக் காத்துக்கொண்டிருப்பாள். அவளுக்கு ஒரு சிறு முத்தம்கூட கொடுக்காமலே நான் புறப்பட்டு வந்துவிட்டேன். இந்த திராட்சையைக் கண்டால் அவள் கண்களும் திராட்சை அளவுக்குப் பெரிதாக விரியும்.

இன்னும் நித்திரை வரவில்லை. பசி காரணமாக இருக்கலாம். ஆப்கானிஸ்தான் பறவைகள் நேரமில்லாத நேரத்தில் இரவு ஒலி எழுப்பியது ஒரு பயத்தைக் கொடுத்தது. அதுவாகவும் இருக்கலாம். பொட்டலத்தைப் பிரித்து ஒவ்வொரு பழமாக உண்ணத் தொடங்கினேன். பழம் சீறி கன்னத்தில் அடித்த ஒவ்வொரு முறையும் டிடியின் முகம் நினைவுக்கு வந்தது.

இப்போழுது புரிந்தது. என்னைச் சுற்றி நெருக்கியபடி பணம் இருந்ததுதான் பயத்திற்கு காரணம். என் கண்கள் பார்த்த இடம் எல்லாம், மேலுக்கு, கீழுக்கு, பக்கவாட்டில் எங்கேயும் பணம்தான். காந்தார அரசி செய்ததுபோல கண்ணைக் கட்டிக்கொண்டு துயிலுவோமா என்றுகூட யோசனை ஓடியது.

விலைப்பட்டியலில் 1.95 டொலர் குறித்த கிளாஸில் இருந்து தண்ணீரைக் குடித்தேன். 29.95 டொலர் மேசையில் நிற்க வைத்த 31.95 டொலர் விளக்கை அணைத்தேன். என்னுடைய தலையை 9.95 டொலர் தலையணையில் சரித்தேன். 17.95 டொலர் போர்வையால் போர்த்தினேன். மேலே 21.95 விலை பதித்த காற்றாடி சுழன்றுகொண்டு இருந்தது. அதிலே இருந்து வீசிய காற்றின் விலை தெரியவில்லை. நாளை காலை பில் கிடைக்கும்போது அது தெரியவரலாம்.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *