கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,347 
 
 

ஐம்பது ஆண்டுகட்கு முன், தமிழகத்திலே சிறந்து விளங்கிய இசையறிஞர்

காஞ்சிபுரம் நாயனா பிள்ளை,
பிடில் கோவிந்தசாமி பிள்ளை,
மிருதங்கம் அழகு நம்பியா பிள்ளை,
கஞ்சிரா தக்ஷனா மூர்த்தி பிள்ளை,
கொன்னக்கோல் மன்னர்குடி பக்கிரிசாமி பிள்ளை,
இப்படிப்பட்ட இசைமாமேதைகள் சேர்ந்த இசையமைப்பு ஒருசமயம் நடந்தது – அதுபோன்ற அமைப்பு அவர்கள் காலத்துக்கு முன்பும். அவர்கள் காலத்திலும், அதற்குப் பின்பும் அமைந்ததில்லை.

அத்தகைய இசையரங்கு நிகழ்ச்சி – நாமக்கல்லிலிருந்து மோகனூர்க்குப் போகும் நெடுஞ்சாலையிலே, மாலை 6 மணிக்கு நடந்து கொண்டிருந்தது. பெரிய மண்டபம்; மேடையில் கூட்டம் அதிகமாகக் கூடியிருந்தது

அதுநெடுஞ்சாலை வழி –

அந்த ஊர்ப் பக்கத்து – பணக்காரர் ஒருவர் – சலங்கை கட்டிய இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்.

கையெழுத்து மறையும் மாலை நேரம் – சாலையில் ஒரே கூட்டம். அவர் பயந்து, தன் வண்டிக்காரனை, அது என்ன கூட்டம்? பார்த்து வா’ என்று அனுப்பினார். அவன் போய் விசாரித்து வந்து,

‘எஜமான், எஜமான் – ’ என்று கத்திக்கொண்டே ஒன்றும் சொல்லாமல் மாட்டைத் தட்டி விரைவாக ஒட்டிக் கொண்டிருந்தான்.

செல்வந்தர் ‘என்னடா?’ – என்று அதட்டிக் கேட்கவும்,

வண்டிக்காரன் – மிகவும் – பயந்து –

எஜமான், அது பெரிய கொள்ளைக்கூட்டம் –

‘”யாரோ’, காஞ்சிபுரம் நயினாவாம் – மீசையும் தொந்தியும் பார்த்தால் பயங்கரமாயிருக்குது அகப்பட்டுக்கொண்டு அலறு அலறு என்று அலறுகிறார்.

‘யாரோ’ கோவிந்தசாமியாம், அவன் விடலிங்களா –

‘யாரோ’ புதுக்கோட்டை தக்ஷணா மூர்த்தியாம் கெஞ்சு கெஞ்சு கெஞ்செனு கெஞ்சிராறாம் –

‘யாரோ’ மன்னார்க்குடி பக்கிரியாம் – அந்த ஆள் கன்னக்கோல் வைச்சிருக்கிறாரு –

அப்படியே கூட்டம் அவங்களை அமுக்கிக்கிட்டிருக்குங்க.

போலீஸ் சப்வீஸ் எல்லாம் அவங்களை வளைச்சு சுற்றிக்கிச்சுங்க –

நாம் இருட்டு முன்னே தப்பி ஊர் போய்ச் சேரனும்” என்று சொல்லிக்கொண்டே மாட்டைத் தட்டி விரட்டி ஓட்டுகிறான்.

– என்னே இசையறிவு!
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, தமிழர் தோன்றித் தமிழ்தோன்றி தமிழ்இசை தோன்றிய இசைக்கடல் இன்பத்தைச் சுவைக்கும் தமிழ்மக்கள் நடுவிலே – இப்படியும் சிலர் இருந்தனர் என்று தெரிகிறது.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *