அக்கரைப் பச்சைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 10, 2022
பார்வையிட்டோர்: 2,796 
 
 

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக கரையிலிருந்து விலகிக் கொண்டிருந்தது. அந்நகரின் உயரமான களைமிக்க கட்டிடங்கள் சின்னதாகிக் கொண்டிருந்தன. சபேசனுக்குக் கண்களில் நீர் திரையிட்டது. ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட மண்ணைப் பிரிவது அவருக்கு இலேசான செயலாக இல்லை. பிறந்ததற்கு என்று பெயர் சொல்ல ஒரு பூமி தூரதொலைவில் இருந்த போதிலும் இந்த மண்ணில் தான் சபேசன் வளர்ந்தார் வாலிபமானார் வாழ்ந்தார். அவருடைய பிரிவுக்காக அழுபவர்களோ, அங்கலாய்ப்பவர்களோ யாரும் இல்லாவிடினும் பிழைப்புதேடி வந்த மண்ணின் மீது தனக்கிருந்த பாசம் எவ்வளவு அதிகமானது என்பதைச் சபேசன் இப்போதுதான் நன்குணர்ந்தார்.

கப்பல் திரும்பி சிறிது வேகத்துடன் ஓட ஆரம்பித்தபோது அந்தத் தீவு அவருக்கு முகத்தைத் திருப்பிக்கொண்டது போல் கட்டிடங்கள் மரங்களுக்கு இடை மறையலாயின.

மற்றவர்கள் தங்களுடைய குத்தல்களுக்குத் திரும்பிப் பொருட்களைப் பிரித்துக் கட்டுவதிலும் படுக்கையைப் பரப்புவதிலும் மும்முரமாக ஈடுபட்டனர்.

சபேசனுக்கு அதிலெல்லாம் மனம் ஈடுபடவில்லை. இழக்கக் கூடாததை இழந்து விட்டது போலவும் கிடைப்பதற்கு அரியதொன்றை வீசிப் புறக்கணித்தது போன்றும் அவர் மனம் உடைந்து போயிருந்தார்.

‘ம்…. இவ்வளவு காலமாய் என்னத்தை வாழ்ந்து கிழிச்சிட்டேன்?’ என்று அவர் முனகிக் கொண்டபோது நினைவில் கசப்பு ஓடியது.

பத்துவயதுகூட நிரம்பாத சின்னப்பையனாய் இருந்தபோது ஜப்பான்காரன் காலத்துக்கு முன்பு அவர் கப்பலேறி வந்தார். வசந்தமாக மலர்ந்திருக்க வேண்டிய இளமைப்பருவம் அந்தச் சண்டைக்காலத்தில் கசங்கிய காகிதப்பூவாய் உருவாகியது.

வெம்பிய பிஞ்சாக அவர் வாலிபத்தை அடைந்தபோது சண்டை முடிந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகள் மழை விட்டும் தூறல் விடாத கதையாக இருந்தது.

உடலுழைப்புத் தொழிலாளியாய் ஏதேதோ வேலைகள் கிடைத்து வந்தன. அன்றாடங் காய்ச்சியாக வருமானம் இருந்தாலும் நாளை என்பது நிச்சயமாக இருந்தது. ஆனால் நிம்மதி இல்லை. இளமை ரத்தம் எதிர்காலத்தைப் பற்றி நினைக்காத செயல்களுக்கு இட்டுச் சென்ற போதிலும் நிலையில்லாத அந்தரத்தில் ஆதாரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருப்பதாய் அவ்வப்போது தோன்றும். ஆனாலும் என்ன செய்ய?

நாலு காசு பணத்தைச் சேர்த்துக்கொள்ள சபேசன் விரும்பினார். ஆனால் ஊரில் பெற்றோருக்கும் குடும்பத்துக்கும் அவர் செய்ய வேண்டிய கடன்கள்’ நிறைய இருந்தன.

இந்த நிலையில் ஒருமுறை வந்துவிட்டுச் செல்லுமாறு அவர் அனுப்பிய பணம் எல்லாம் கடிதங்களாகப் பெற்றோரிடம் இருந்து திரும்பி வந்து படையெடுத்தன.

அவரும் போனார். அவருடைய திருமணத்துக்காக மற்றவர்கள் எல்லாம் மிகக் கவலைப்பட்டனர். அதிக அக்கறை எடுத்துக் கொண்டனர்.

“நான் அங்கேயே கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்கேன் என்று மெல்லச் சொல்லி வைத்தார்.

அம்மா உச்சக்குரல் எடுத்து அழ ஆரம்பித்துவிட்டார். அந்த அழுகையினூடே அறிவுரைகள் ஓடி வந்து விழுந்தன.

“அந்த ஊர்க்காரிகள் பொல்லாதவளுக, யார் வீட்டிலாவது போய் சாப்பிடுவியா? ஏதாவது போட்டுக் கொடுத்திருப்பாளுவளே. அங்க உள்ளவளுக எல்லாம் சாகசக்காரிகளாமே. அங்கம்மா சொல்லிக்கிட்டு இருந்தா. வயசான பொம்பளைங்க எல்லாம் சின்னப் பையனுங்களாய்ப் பார்த்து சேத்து வைச்சுக்குவாளுங்களாமே. அவளுங்க மையல்லே இருந்து மீண்டு வர முடியாதாமே. உனக்கும் ஏன்டா புத்தி கெட்டுப் போச்சு?”

சோற்றைப்போட்டு விட்டு அருகிலேயே உட்கார்ந்து கொண்டு ஒரு கையால் குழம்பை ஊற்றிக்கொண்டே மறுகையால் மூக்கைச் சிந்தியவாறு தாயுள்ளம் பேசிக்கொண்டே இருக்கும்.

“அப்படி எல்லாம் இல்லே அம்மா. அங்க இருக்கிறவங்க எல்லாம் இங்க உள்ளவங்க மாதிரிதான். மானமரியாதை அவங்களுக்கும் உண்டு” என்று சபேசன் விளக்க முயன்றார்.

“நீ ஒண்ணு, உனக்கு எதுவும் தெரியாது. நெஞ்சுல துணிபோட்டு மூடாம திரிவாளுங்களாம். கிழவிங்க கூட சடை பின்னி பாடி போட்டுகிட்டு ஜிங்கு’ ‘ஜிங்குனு அலைவாளுங்களாமே. அங்கம்மா புருசன் தான் சொன்னாராமே” என்று இடைமறித்து அம்மா சொல்லவும் சபேசன் வாயடைத்துப் போனார்.

அப்பா விவரம் தெரிந்தவர். சொன்னால் புரிந்து கொள்வார் என்று நினைத்தார். அப்பா கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு “ஒன் மனசுக்கு பிடிச்ச பொண்ணு யாரும் அங்க இருக்கா?” என்று கேட்டார்.

“இல்லேப்பா. எங்கயாவது ஒரு இடத்திலே நிலையா காலூன்றனும். அங்கேயும் இங்கேயுமாக அலைக்கழியக்கூடாதுல்ல. வீணா கப்பக்காரன் ஏன் காசை தின்னனும்?” என்று சபேசன் தனது நியாயத்தை எடுத்துக் கூறினார்.

“அப்படின்னா எங்கள் யாரு பாத்துக்கிறது? மருமகள்னு ஒருத்தி இருந்தா தலையோ காலோ வலிச்சா உதவியா இருக்குமே. நீயும் ஒரேடியா இருந்திடாம அடிக்கடி வரப்போவ இருப்ப” என்று அப்பா முத்தாய்ப்பு வைத்தார்.

சபேசன் அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் சரணடைந்து விட்டார். நாட்டுக் கோழிக் குஞ்சுபோல் கூடாக மெலிந்து போயிருந்த ஒரு பெண்ணைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். கிலி பிடித்துப் போயிருந்த அவள் கழுத்தில் அவர் தாலி கட்டிவிட்டுக் கப்பலேறினார்.

நிலையில்லாத வேலையாய் அலைகிற வாழ்க்கையாய் சபேசன் அவிந்து புழுங்கிக் கொண்டு இருந்தபோது மெர்டேக்கா (சுதந்திரம் வந்தது.

தனக்கும் கூட இனி நல்ல வாழ்க்கை வந்துவிடும் என்று சபேசனுக்கு நம்பிக்கை துளிர்த்தது. ‘இதுவரை அடிமைச் சமூகமாக இருந்தோம். இப்போ … இனிமே ….” என்று எண்ணியபோது அவரது முகம் இரகசியமாய் என்னமாய் மலர்ந்தது!

இடையில் மருமகக்காரி சோறு போடாம விரட்டிட்டான்னு பெற்றோரிடமிருந்து கடிதம் வரவே அவசரம் அவசரமாகக் கப்பலேறிச் சென்று வழிவகை செய்துவிட்டு திரும்பினார்.

பிறகு ஒரு தடவை அம்மாவும் மறுதடவை அப்பாவும் மண்டையைப் போடவே போய் காரியங்கள் செய்துவிட்டு வந்தார்.

இந்த மூன்று போக்குவரத்திலும் மூன்று பிள்ளைகளுக்கு அப்பாவாக ஆனார்.

இந்தப் பய அவனோட தாத்தா மாதிரியே இருக்கான். இந்தக் குட்டி பாட்டி மாதிரியே இருக்காளே! அவங்க ரெண்டுபேரும் தான் வந்து பொறந்திருக்காங்க” என்று மற்றவர்கள் சொல்லும் போது அப்பா அம்மா செத்ததுக்கு வந்தப்போ உதிச்சதுகதானேனு’ சபேசன் மனம்குன்றிப் போய்விடுவார்.

பெற்றோர்கள் இறந்துவிடவும் மனைவியையும் பிள்ளைகளையும் தருவித்துக் கொள்ள முடிவு செய்தார். வளர்ந்துவிட்ட பிள்ளைகளை அழைக்க முடியாது என்று நினைவு வந்ததும் எண்ணமும் அடங்கிப் போய்விட்டது.

அதைவிடப் பெரிய பிரச்னை வந்துவிட்டது, அவருக்கு.

அவர் ‘சிவப்பு கார்டு’ என்பதுதான் அது. அதற்கு முன்பு சர்வ சாதாரணமாக இருந்த சிவப்பு கார்டு வேலை பர்மிட்டு வந்ததும் தீண்டத்தகாதது ஆகிவிட்டது.

அன்றாடங் காய்ச்சியாய் இருந்தாலும் அடுத்த நாள் பற்றிய நம்பிக்கை இருந்தது. இப்போது அதிலும் மண் விழுந்துவிட்டது.

நிலையில்லாத அந்தரத்தில் ஆதாரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாய் முன்பு அவ்வப்போது அவருக்கு தோன்றியது எவ்வளவு உண்மையாய்ப் போய்விட்டது?

சபிக்கப்பட்ட ஜென்மமாய் ஒன்டி ஒளிந்து வயிற்றைக் கழுவினார். அவ்வப்போது ஊருக்கும் பணம் அனுப்பினார்.

வேலை பர்மிட் எப்படி அவரை மனித நிலையிலிருந்து நான்கு கால் பிராணியாக ஆக்கிவிட்டது?

ஆம்! அவருக்கு வேலைபர்மிட்டு எடுத்துக்கொடுத்து வேலைதரமுன்வந்தவர்கள் அவர் மாடாகவும் நாயாகவும் உழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்களே ஒழிய மனிதராக நினைத்துப் பார்க்கக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை.

அவருடைய தோல் கருத்திருந்தும் கார்டு சிவப்பாகி விட்டதாலேயே மனிதப்பண்புகளை அவர் மறக்க வேண்டியிருந்தது.

ஓ! நிறங்கள் எவ்வளவு வலிமை உள்ளவை என்று சபேசனுக்கு நன்கு புரிந்தது. வேலைக்கு வைத்திருப்பவர்கள் அவருடைய உழைப்பை நன்கு உறிஞ்சினார்கள். அதை அவர் உணர்ந்து விட்டார் என்று சாடை மாடையாய்த் தெரிந்தால் கூட போதும் அடுத்த ஆண்டு வேலை பர்மிட்டைப் புதுப்பிக்க மாட்டார்கள்.

ஓராண்டு எங்காவது ஒண்டியிருப்பார். பிறகு எங்காவது ஒளிந்து வேலை செய்வார். திருடுவதற்கு மட்டுமல்ல, வேலை செய்யக் கூட ஒளிந்து திரிய வேண்டும் என்ற அனுபவம் பழகிவிட்டது. வேண்டாத விருந்தாளியாய், கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாய் ஏன் இன்னமும் இங்கு இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருள் துளிர்விட ஆரம்பித்தது.

ஆனால் அங்கு போய் என்ன செய்வது என்று கேள்வி விசுவரூபம் எடுக்கும். “ஆங்!….. அங்குள்ள கோடானுகோடி பேர் வாழலயா….. நான் மட்டும் தான் செத்துடப் போறனாக்கும். அப்படி செத்துட்டாதான் என்ன? கால்நடையாய் அலைவதைவிட நடைப்பிணமாய்ப் போய்விடலாம்” என்று முடிவுக்கு வந்தார்.

செழிப்பான மண்ணும் சிறப்பான கட்டிடங்களும் சபேசனுக்குக் கசந்து போயின. சேமநலநிதியைக் கூட வெட்டி எடுத்துக் கொள்ளாமல் (அப்படி என்ன சேர்ந்திருக்கப்போகிறது) கப்பலேறி விட்டார்.

ஆனால் நிரந்தரமாக இந்த மண்ணைப் பிரியப் போகிறோம் என்ற நேரம் வந்ததும் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஊரிலிருந்து புறப்பட்டு வரும்போது அவர் கண் கலங்குவது வழக்கம். ஆனால் அது அவரது குடும்பத்தாருக்காக, அந்த மண்ணுக்காக அல்ல.

இப்போது அவரது பிரிவால் வாடக்கூடிய உயிர்கள் ஏதும் இல்லை . ஆனால் வாழ்ந்து உழைத்து உருவாக்கிய மண்ணைவிட்டுப் பிரிவது தான் துயரமாக இருந்தது.

இருட்டி வெகு நேரமாகியிருந்தது. கலங்கரை விளக்கம் கண்ணசைத்துச் சிமிட்டி சிமிட்டி சபேசனை வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தது.

கப்பல் இருட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

***

அவர் கண் விழித்த போது விடிந்து இருந்தது. சில விநாடிகளுக்குப் பின்பே தான் வீட்டில் இருந்ததை சபேசன் உணர்ந்தார். கப்பல் பயண அவசதி அவர் உடம்பில் இன்னமும் இருந்தது.

பல் பிரஷையும் பற்பசையையும், தான் கொண்டு வந்திருந்த சோப்புகளில் பிரிக்காமல் இருந்த ஒன்றையும் எடுத்துக் கொண்டு குளத்துக்குக் குளிக்க கிளம்பினார். அவர் தோள்களில் பரவிக் கிடந்த அகன்ற வண்ணத் துண்டும் காலில் இருந்த மெத்தென்ற கித்தா செருப்பும் அவர் புதிதாக கப்பலில் இருந்து வந்தவர் என் பவிசைக் காட்டிக் கொண்டிருந்தன.

போவோர் வருவோர் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றனர். நிறைய பேர் நின்று நின்று குசலம் விசாரித்துக் கொண்டு போயினர்.

சபேசனின் கப்பல் துண்டு கண்ணில் பட்டதால் நிதானித்து ‘சபேசனா சபர்ல வந்திருக்கியா’ என்று கேட்டுக் கொண்டே பட்டாமணியம் அருகில் வந்து என்ன என்னவோ பேசத் தொடங்கினார்.

பட்டாமணியம் வேப்பங் குச்சியில் பல் துலக்கத் தொடங்க சபேசன் பிரஷில் பற்பசையைப் பிதுக்கினார். பட்டாமணியம் வேப்பங் குச்சியையும் பற்பசையையும் மனதுக்குள் ஒப்பிட்டுக் கொண்டார். பொறாமை கண்ணில் தெறித்தது.

என் எதிரே துண்டைத் தோளில் இருந்து இறக்காமல் நிற்கிறானே என்று ஒரு கணம் கோபப் பட்டவர் சபேசன் கையிலிருந்து சோப்பைப் பார்த்ததும் மறந்துவிட்டார்.

“கப்பல் சோப்பா அது?” என்று கேட்டு கையில் வாங்கி முகர்ந்து முகர்ந்து பார்த்தார் பட்டாமணியம். சங்கடத்தால் நெளிந்த சபேசன், “நீங்களே வச்சுக்குங்க சாமி” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

பட்டாமணியம் நன்றியும் மரியாதையும் கண்ணில் கொஞ்ச சபேசனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சபேசன் வந்து சில வாரங்கள் ஓடிவிட்டன. கையிலிருந்த காசு கரைந்து கொண்டிருந்தது. சீக்கிரம் ஒரு வியாபாரத்தில் பணத்தைப் போட்டுவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தார். வெளியில் பொட்ட வெயிலில் அவரது துண்டு காய்ந்து கொண்டிருந்தது. வெயில் தாங்காமல் கொஞ்சம் வெளுத்திருந்தது போல் அவருக்குப் பட்டது.

அன்று மாலை மூன்றாவது வீட்டுப் பையன் வந்தான். “பக்கத்து டவுன்ல புதுப்படம் வந்திருக்குது, வாரீங்களா?” என்று கேட்டான். சபேசனும் சரி என்று புறப்பட்டு விட்டார். இருவரும் சைக்கிள்களில் சென்றனர். வரும்போது இருட்டிவிட்டது. கிராமத்தை நெருங்கும்போது ஒரு போலீஸ்காரர் சபேசனின் சைக்கிளை நிறுத்தினார். அப்போதுதான் தனது சைக்கிளில் விளக்கு இல்லாதது சபேசனுக்குத் தெரிந்தது.

என்றைக்காவது ஒரு நாள் இப்படித் திடீரென்று கேஸ் பிடிப்பது போலீஸ்காரர்கள் பழக்கம். சபேசனுக்கு முன்பே பிடிபட்டவர்களில் ஒரு பள்ளி ஆசிரியரும் அங்கிருந்தார்.

சபேசனை அடையாளந் தெரிந்து கொண்டதும் அந்தப் போலீஸ்காரர் தோணையே மாறியது.

“ஓ கப்பல்காரரா? அந்த ஊர்ல ராவுன்னு பகல்னு வித்தியாசம் இல்லாம வெளிச்சமா இருக்கும். இங்கே அப்படி இல்லையே. இனிமே அப்படிச் செய்யாதீங்க” என்று மரியாதையாய்ச் சபேசனை வழியனுப்பி வைத்தார்.

வந்த புதிதில் டைகர் பாம் டப்பி ஒன்றை அந்தப் போலீஸ்காரருக்குக் கொடுத்து இருந்தது மட்டும் ஒரு மின்னலாய் சபேசனுக்கு நினைவுக்கு வந்தது.

பல வாரங்கள் ஓடிவிட்டன. சபேசன் கொண்டு வந்திருந்த துண்டு நிறம் மாறிச் சுருண்டு பரிதாபமாய்க் கொடியில் தொங்கிக் கொண்டிருந்தது.

வீட்டில் வறட்சி தலைகாட்டத் தொடங்கியிருந்தது நன்கு தெரிந்தது. இங்கேயே தங்கி வியாபாரத்தில் ஈடுபடும் யோசனை பற்றி மனைவியிடம் கூறியிருந்தார்.

அவர் மனைவி இந்த யோசனையைக் கடுமையாக ஆட்சேபித்தாள்.

பிள்ளைகள் தலையெடுக்கும் வரையிலாவது கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று அவள் சொன்னாள்.

அந்த ஊரில் இத்தனை நாள் கிடைத்த மரியாதை அவர் இங்கேயே தங்கிவிட்டால் குறைந்து மறைந்துவிடும் என்று சபேசனுக்குத் தெரிந்து இருந்தது.

பட்டா மணியமும் சைக்கிளில் விளக்கில்லாமல் பிடிப்பட்ட ஆசிரியரும் போலீஸ்காரரும் அவர் மனக்கண்ணில் வந்து நின்றனர். அவர்களுடைய தகுதியையும் பதவியையும் சபேசன் தலைகீழாக நின்றால் கூட அடைய முடியாது. ஆனால் அவர்கள் எல்லாம் சபேசனுக்கு எப்படி மரியாதை காட்டிப் பணிந்து போகிறார்கள்?

கப்பலேறி தான் நாயாய்ப் பட்ட அவதிகளையும் இந்த மரியாதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது அவருக்குச் சிரிப்பு வந்தது.

அவராவது சிவப்புக் கார்டினால் அந்த கதிக்கு ஆளானார். ஆனால் எந்தக் கார்டுமே இல்லாமல் ஏன் இவர்கள் கூனிப் போய்த் திரிகிறார்கள் என்று சபேசனுக்குத் தெரியவில்லை.

நிச்சயம் இவர்களுக்கு ஈடான அந்தஸ்தை சபேசன் இப்பிறவியில் அடையப் போவதில்லை. ஆனால் அவர்களில் ஒருவராய் – சிவப்புக் கார்டோ அல்லது எந்தக் கார்டோ இல்லாமலேயே அடிமையாய் – நசித்துப் போவதில் என்ன இருக்கிறது?

சபேசனுக்கு வறுமையைக் கண்டுகூட பயம் இல்லை. ஆனால் கட்டாயம் இல்லாமலே மரியாதையை அர்ப்பணிக்கவே தயங்கினர். மரியாதையை ருசிகண்டவர்களால் ருசித்த இடத்திலேயே அதனை மறக்க முடியாதே.

சபேசன் சீக்கிரத்தில் பயணம் வைத்து விட்டார். சிவப்புக் கார்டை நினைவாய் எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டார். சிவப்புக் கார்டின் உண்மை மதிப்பு இப்போது அவருக்குத் தெரிந்திருந்தது.

– ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1984, மழைச்சாரல், பேராக்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *