ஆதிக் கலைஞர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 13, 2022
பார்வையிட்டோர்: 2,870 
 

பாணன், பறையன் துடியன் கடம்பன் ஆகிய முல்லை நில உயர் குடிகள் அந்த அடர்ந்த காட்டை ஊடுருவிப் போய்க்கொண்டிருந்தன.

அந்திப்பொழுதானதால் காட்டினைக் குளிர் வளைத்துப் பிடித்திருந்தது. பொருனை நதி சலசலத்து ஓடும் ஓசை கூடுகளை நாடிவரும் பறவைகளின் சத்தத்தோடு இணைந்து காதுக்கு இனிமை செய்து கொண்டிருந்தது. அந்த இனிமை தந்த சுகம் அந்த இளம் பாணனின் மனதை வருடி இருக்க வேண்டும். அவன் தனது யாழினைக் கையிலெடுத்து நரம்புகளை மீட்டி பறவைகள் பலவற்றின் ஒலியை எழுப்பினான். பறவைகளும் உற்சாகம் அடைந்தவைபோல பதில் குரல் எழுப்பின.அந்தக் கூட்டத்தில் இருந்த முதியோன் மாங்குடி மருதன் அவனது திறமையை மனதில் வியந்த போதும் அவன் அங்கு மேலும் பொழுதைச் செலவழிப்பதை அனுமதிக்கவில்லை. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை .

இரவில் நீர்நிலைகளைத் தேடி கொடிய விலங்குகள் வருதல் கூடும் அதனால்.அவர்கள் இருட்ட முன் நதியைக் கடந்தாக வேண்டும். முதியவன் எல்லோரையும் விரைவாக நடக்குமாறு கேட்டுக் கொண்டான்..

அந்த வனத்துக்கப்பால் பரந்த வெளியில் அமைந்திருந்த இடுகாட்டை அக்கூட்டத்தினர் அடைந்த போது கிழக்கு வெளித்துவிட்டது. கதிரவனின் இளங்காலை வெய்யிலில் அங்கும் இங்குமாய் பரந்துகிடந்த நடுகற்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. கூட்டத்தினரின் நெஞ்சங்கள் கனத்திருக்க வேண்டும். அதுவரை ஆரவாரமாக வந்தவர்களின் குரலகள் அடங்கிப் போகின்றன. . சில கணங்கள் மௌனத்தில் கரைந்து போகிறது.

அவர்கள் அங்கிருந்த நடுகற்களில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யத்தொடங்கினர். ஒவ்வொரு கல்லையும் நீர் ஊற்றிக் கழுவினர். காட்டில் தாங்கள் பறித்துவந்த முல்லை, தும்பை, குருந்து முதலான மலர்களை மாலையாகக் கட்டி அந்தக் கற்களுக்குச் சூட்டினர். மயில் பீலிகளால் அலங்கரித்தனர், தாங்கள் கலங் கலமாகக் காவிவந்த மிகவும் புளித்ததும் சுவையானதுமான கள்ளை அக்கற்களின்முன் வைத்தார்கள், ஊணுணவும் வரகு. கொள்ளு . தினை அவரை முதலியனகொண்டு சமைக்கப் பட்ட உணவும் பரவப்பட்டன.

அக்கற்களின் கீழ் நிரந்தரமாகத் தூங்குபவர்கள் சாதாரண மனிதர்கள் இல்லை….அவர்கள் இக்குடிகளின் முன்னோர்கள்.

அவர்கள் தம்மோடு ஒத்துப்போகாது எதிர்த்து நின்ற பகைவரை தடுத்த போரில் புலியைக் கொல்லும் வீரம் படைத்த யானை மேல் வேல் எறிந்து கொன்று பின் தம் உயிரை நீத்த வீரர்கள்,….

மாரி போல அம்பு தைத்தாலும் வேல் நெஞ்சில் பட்டாலும் யானை தனது தந்தத்தால் நெஞ்சில் குத்த வந்தாலும் அதன் காலால் இடர நேர்ந்தாலும் புறமுதுகுகாட்டி ஓடாத வீரர்கள்.

ஆநிரைகளை மீட்க வேண்டி வெட்சி வீரருடன் போரிட்டு வென்று வீரமரணமடைந்த வீரர்கள்,

அவர்களது பெயரும் புகழும்அந்தக் கற்களில் பொறிக்கப்பட்டிருந்தன. அக்கற்களின் முன்னர் அவர்கள் பயன்படுத்திய வேலும் கேடயமும் வைக்கப்பட்டிருந்தன.

இத்தகைய வீரர்களே அவர்களின் கடவுளர்,

பாணன் யாழை எடுத்து சுருதி கூட்டும் பொழுதே துடியனும் பறையனும் தமது பறை துடி ஆகிய வாத்தியங்களை எடுத்துக்கொண்டு அங்கே வந்துவிட்டார்கள். விறலியரும் கூத்தரும் நடனமாடுவதுக்குத் தயாராகிவிட்டார்கள்.

பறையொலி துடியொலியும் இணைந்து அந்த இடுகாட்டையே அதிரவைக்கும் வகையில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.அந்த இசைக்கு இசைவாக கூத்தர்கள் குரவையிட்டு நடனமாடத் தொடங்கிவிட்டனர். கூத்தர்களின் உடலில் பேய் புகுந்து ஆட்டுவித்ததுபோல அக்கூத்து பார்ப்பவர்கலின் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்துவதாய்…பயங்கரமானதாய் இருந்தது.

இந்த ஆரவார இசை அடங்கிய பொழுதில் பாணர்கள் யாழை இசைத்தனர் இப்பொழுது பறையும் உடுக்கும் யாழிசைக்கு ஒத்திசைவாக மென்மையாக ஒலிக்கின்றன. இசைப்பாடகர் வீரர்களின் தன்னிகரில்லா ஆற்றலையும் அவர்களது தற்கொடையையும் தமது குடிப்பெருமையையும் சிறப்பித்துப் பாடத்தொடங்குகிறார்கள், அதில் மூத்தோனாகிய மாங்குடி மருதன் பாடல் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது.நெல் பரவி வழிபடுவது முதலான சில புதிய வழிபாட்டு முறைகளும் புதியதான உணவுப் பழக்கங்களும் மருதனைப் பொறுத்தவரை ஒவ்வாதனவாக இருந்தன. மேலும் மாறிவரும் சமூகநிலையும் தொல்குடிகளின் இருப்பைக் கேள்விக்குறியதாக மாற்றியதுடன் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதனையும் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவன் அங்குள்ள தம் மக்களை நோக்கி தன் குடி விளக்கமாக ஒரு நீண்ட பாடலைப் பாடுகிறான்.

“பாணன் ,துடியன் முதலான குடியினரான நாம் வெறும் இசைக் கலைஞர்கள் மட்டும் அல்லோம் நாம் கைகளில் வேலும் கேடயமும் கொண்டு போர் தொழிலில் ஈடுபடுபவர்களும் கூட. ஆதிக் குடிகளான நாங்களே மக்கட் தொகையில் வளர்ந்த போது குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய நான்கு நிலங்களிலும் பரந்து நிலைகுடியாகவும் வாழத் தொடங்கினோம், அரசுகளை உருவாக்கி நிர்வகித்து வருபவர்களும் எம்மவர்களே. எம் முன்னோளான கொற்றவை எம் தாய். அவள் சேய் முருகன் எம் கடவுள்.வீரச்சாவு அடைந்த எம் முன்னோர் எமது வழிபாட்டுக்குரியவர்.

அலை குடிகளாகி நிலங்கள்தோறும் நாங்கள் பயணிக்கிறோம். ஒரு நிலத்தில் நிலைத்து வாழ்ந்திருக்கும் எம்மக்கள் வாழ்வியல் செய்திகளையும் அரசர்களது சிறப்புக்களையும் கலை அற்றுகை மூலம் நிகழ்த்திக் காட்டி அவர்களை மகிழ்விப்பதுடன் செய்திப் பரிமாற்றமும் செய்கிறோம். .அதனால் உரிமையுடன் பாண்கடனாய் பொருள் பெறுகிறோம்”

என்று பொருள் பொதிந்த அப்பாடல் அங்குள்ளவரை மிகுதியும் கவர்ந்தது.

அங்கு கூடியிருந்தவர்கள் தம் குடிவரலாற்றுப் பெருமையை அறிந்த பெருமித்த்தோடு வீரரின் புகழ் மழையில் நனைகிறார்கள். அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது.

அது வீரர்களின் ஆற்றலை எண்ணியதால் வந்த ஆனந்தக்கண்ணீரா அல்லது உறவுகளை இழந்த சோகத்தால் உள்ளம் உருகி வெளிப்பட்ட கண்ணீரா என்று பாகுபடுத்தி நோக்க முடியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *