கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 9,007 
 
 

பால்கனிக்கு தமிழில் என்ன வார்த்தை என்று சட்டென்று நினைவுக்கு வரவில்லை. அதிகாலை கண் விழித்த பின் எவ்வளவு புரண்டும் தூக்கம் வரவில்லை. சீக்கிரம் எழுந்து வெட்டி முறிக்க வேண்டிய வேலை எதுவும் இல்லை…. வேலை ஓய்வுக்குப் பின் ஐந்து வருடமாக நானே தேர்ந்தெடுத்த V.I.P. உத்தியோகம். அதாவது வேலை இல்லாப் பயல்….

இன்று விழிக்கும் முன் வந்த கனவில் முப்பது வருடம் முன் வேலையை விட்டு வந்த கம்பெனியில் மீண்டும் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். எற்கனவே அறிமுகம் ஆனவர்கள் ஆதலால் ஒவ்வொருவரையும் சந்தித்து நலம் விசாரித்தேன். எல்லோர் முகத்திலும் புன்னகை…. மகிழ்ச்சியுடன் வரவேற்பு. CEOவின் ஆங்கிலோ இந்தியக் காரியதரிசி (மூதாட்டி) புன்னகையால் வரவேற்று கை குலுக்கினாள்…. எதிரே அவள்… மனம் பட படத்தது…. தலையை குனிந்து கொண்டு பென்சிலால் டேபிளில் தாளம் போட்டாள். சட்டென்று உணர்ந்தேன்…. நான் ஏன் இவ்வளவு கேவலமாக உடையணிந்திருந்தேன்… ஒரு சுமாரான வேட்டி சட்டை, கையில் ஒரு மஞ்சப்பை அதில் சில புத்தகங்கள்… திடுக்கிட்டு கனவு கலைய எழுந்து விட்டேன்…. இந்தக் கனவு அடிக்கடி வருகிறது…. எத்தனை முறை கனவில் அந்தக் கம்பெனியில் போய் மீண்டும் சேர்ந்திருக்கிறேன். நிஜத்தில் அந்தக் கம்பெனியை மூடி பல வருடங்கள் ஆகிறது.

பால்கனிக்கு வருவோம்…. சீக்கிரம் எழுந்ததால் பல் துலக்கி முகம் அலம்பி பால்கனிக்கு வந்து அமர்ந்தேன்…. வெளியே பார்த்தால் ஈரமாக இருந்தது… நேற்று இரவு கொஞ்சம் மழை பெய்திருக்கும் போலும்…… இன்னும் உதயமாக வில்லை… ஆனாலும் இருட்டாக இல்லை….. சூரியன் உதிக்கும் முன் வானத்தில் தோன்றும் வர்ண ஜாலம் என்னால் பார்க்க முடியாது…. எதிரே சமீபத்தில் கட்டிய கட்டிடம் மறைக்கும்…. ஒரு வருடம் முன் வரை அந்த ரம்மியமான காட்சி தெரிந்தது…… உதய சூரியனை ஆ.தி.மு.க. காரர் கட்டிய கட்டடம் மறைத்தது எனலாம். எதுக்கு வேணாம் அரசியல். ஆனால் உண்மை அதுதான்.

பறவைகளுக்கு எல்லாம் விடிந்து விட்டிருந்தது…. ஒரே கூச்சல். இங்கே ஒன்று குரல் கொடுத்தால் சிறிது தூரத்திலிருந்து ஒரு எதிர் குரல் கேட்கிறது. எல்லாம் ஏதோ ஒரு அவசரத்தில் உயரமான இடம் தேடி அமர்ந்து குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டிருந்தன. நிறைய புறாக்கள், காக்கைகள், குயில்கள், ஒரு ஜோடி இரட்டை வால் குருவிகள், மைனாக்கள்… எனக்கு சற்று வியப்பாக இருந்தது…. நம்மைச் சுற்றி இத்தனைப் பறவைகளா அதுவும் இந்த நகரத்தில்…. இன்னும் உற்றுப் பார்த்தால் வேறு பல பறவைகளும் இருக்குமோ.?

வீதியில் மகளிர் இரவு உடையின் மேல் ஒரு துப்பட்டாவை போர்த்திக் கொண்டு நடை பயிலத் துவங்கியிருந்தனர்…. சிறு சிறு குழக்களாக ஆடவரும் பெண்டிரும் நடந்தனர். ஒரு சிலருக்கு இப்பொழுதே வேர்க்கத் தொடங்கி இருந்தது…. ஆனால் நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறன் உடல் எடை குறைப்பதற்காக நடக்கிறார்கள் என்றால் யார் எடையும் குறைந்ததாகத் தெரியவில்லை… ஆனால் என்னை வியக்க வைப்பது அந்த எண்பது வயதைத் தாண்டிய முதியவர் தினம் இரு வேளை விடாமல் நடப்பது… அதே போல் அந்த அறுபத்து ஐந்து வயதைத் தாண்டிய மூதாட்டி ஒரு பெரிய பையில் பால் பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று அதிகாலையில் வினியோகிப்பது.. இந்த வயதான காலத்தில் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை நினைத்து வருத்த மாகத்தான் உள்ளது.

இன்னும் மனைவி எழுந்திருக்கும் நேரம் வரவில்லை… நான் சீக்கிரம் எழுந்து விட்டேன் என்பதால் அவர்களை தொந்தரவு செய்வது நியாயம் இல்லை. அவர்கள் வேலையெல்லாம் கடிகார நேரப்படிதான் நடக்கும். கொஞ்சமும் இப்படி அப்படி இருக்காது… ராணுவத் துல்லியம். விடுதிக் காப்பாளர் என்று நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு…

சீக்கிரம் எழுந்ததால் உதவியாக காப்பி போட்டு வைக்கலாம் என்றால் அதில் ஒரு வில்லங்கம் உண்டு. எழுந்து வந்தவுடன் சரமாரி கேள்விளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும். பாலுக்கு ஏன் இந்தப் பாத்திரம் எடுத்தீர்கள்…. காப்பி பொடி ஏன் கம்மி/அதிகம் இத்தியாதி… அதைவிட முக்கியம் அவர்கள் போடும் காப்பி மிக அருமையாக இருக்கும்… காத்திருத்தல் நன்மையே!

ஓய்வாக இருக்கும் போது வாருங்களேன், நல்ல காப்பி சாப்பிடலாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *