1938-1940 – ஒரு வசீகர வரலாறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2022
பார்வையிட்டோர்: 3,162 
 

முன்னுரை:

வரலாறு என்றால், மண்டிலம், மன்னர் . போர், என்று மட்டுமே இருக்க வேண்டுமென்று சட்டம் உண்டா? இல்லை. அகவே 1938-40 வரை, உள்ள காலத்திலே நடைபெற்ற ஒரு குடும்ப வரலாறு, இங்கே பொறிக்கப்பட்டிருக்கிறது; அரச குடும்பமல்ல, குடிபடைதான்!

ஆதாரம்:

இந்த வரலாற்றுக்கு மூலம், ஆதாரம் உண்டா ? வரலாறுகளுக்குக் கல்வெட்டு, காவியம், கட்டுக்கதை, புதை பொருள், என்று பல ஆதாரங்களைத் துணை கொள்வதுதானே வாடிக்கை. அதுபோல், இந்த பிரத்யேக வரலாற்றுக்கும் மூலம், ஆதாரம் உண்டு. அவை, மூன்று ஏடுகளிலே காணப்படும் சில வாசகங்கள்.

1. மண்டிக்கடை சொக்கலிங்கம் செட்டியாரின் செல்வுப் பட்டிப் புத்தகம்.
2. லேடி டாக்டரின் டைரி.
3. பிறப்புக் கணக்குக் குறிப்பு.

இனி, வரலாறு தீட்டப்படுகிறது. படித்துப் பாடம் பெறுக; படமும் காண்க, மனக்கண் கொண்டு.

1938

கண்ணுசாமி, தங்கமானவன், சாது; நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். அவனை நம்பியே கடையின் முழு பொறுப்பையும் ஒப்புவித்திருக்கிறேன். காலையில், கண்ணுசாமிதான் கோழியை எழுப்புவான் போலிருக்கிறது. அவ்வளவு விடிய எழுந்திருந்து, குளித்துவிட்டுக் கோபுர தெரிசனம் செய்து விட்டு, வீட்டிற்கு ஓடி வருகிறான். சாவிக் கொத்து எடுத்துக்கொண்டு போய், கடையைத் திறந்து வைத்துத், தானே கூட்டிச் சுத்தம் செய்து, நான் உட்காரும் ஆசனத்தைச் சரிப்படுத்திவைத்திருக்கிறான். அவன் அவ்வளவு அக்கரையோடு வேலை பார்ப்பதால் தான், நான், 8 மணிக்கு எழுந்திருக்கிறேன். நிதானமாகப் பல் விளக்கிக் குளித்து விட்டு, விநாயகரகவலை முடித்துக்கொண்டு, சாவ தானபாக டிபன் சாப்பிட்டுவிட்டு, 9, 9-30-க்குக் கடைக்கு நிம்மதியாகப் போக முடிகிறது. கடை வீதியிலே, எத்தனையோ, துண்டு மீசைகளும் துடை கால்களும் இருக்கின்றன! எங்கள் கண்ணுசாமியைப் போன்ற பிள்ளையை கடை வீதியிலே காண முடியாது. வளர்த்துவானேன். பலர், அவனை என் மகன் என்றோ, அல்லது மிகவும் நெருங்கிய பந்து என்றோ கூடக் கருதுகிறார்கள். அவன் என்னமோ பாபம், நாயுடு வகுப்பு. நான் சொக்கலிங்க செட்டி. பாருங்கள் எப்படியோ அந்தப் பையனுக்கு என் மீது அவ்வளவு வாஞ்சை, அவ்வளவு பிரியம். எனக்கோ ஆண் பிள்ளை இல்லை, ஒரே மகள்; அதுவும் விதவை. எனக்குப் பிறகு கடையைக் கண்ணுசாமிதான் அடைய வேண்டும், அவனுடைய யோக்கியதைக்கும் நடத்தைக்கும் ஆண்டவன் அவனுக்குச் சகாயம் செய்யாமல் இருக்கமாட்டார்.

மண்டிக்கடை வைத்திருந்த சொக்கலிங்கம் செட்டியாரின் டைரியில், இதுபோல் எழுதப்பட்டிருந்தது; 1938-ம் வருஷக் குறிப்பிலே என்றே வைத்துக்கொள்ளலாம். ஏன் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறேன் என்றால், உண்மையில் அவர் இதுபோல் எழுதி இருக்கவேண்டும், ஆனால் எழுதவில்லை. இவ்வளவு எழுதுவதற்குப் பதிலாக, அவருடைய செலவுப் பட்டியிலே ஒரே வாசகம் குறிக்கப் பட்டிருந்தது,

கொண்டு திவ்ய தேஜசோடு இருக்கிறான். தீர்க்காயுசாக இருக்க வேண்டும். பகலும் இரவும் பாடுபட்டுப் பதினைந்து ரூபாய் சம்பாதிக்கிறான். அதிலே பதினைந்து தம்படிகூட அவன் எடுத்துக் கொள்வதில்லை. அந்தப் பணத்தை வாங்கும் போதே தனி இன்பம் மீனாட்சிக்கு. அவள் பணத்தைப் பார்க்காதவளா! கத்தை கத்தையாக நான் நோட்டுகளை வீசி எறிவேன், மீனாதான் பெட்டியிலே அவைகளை எடுத்து வைப்பாள். அப்படிப் பணத்தோடு பழகியவள் தான் மீனாட்சி என்றாலும், என் பையன் கொண்டு வரும் 15 ரூபாய் அவளுக்குப் பத்தாயிரமாகத் தோன்றுகிறது “கண்ணு இன்று சம்பளம் வாங்கிக்கொண்டு வந்தான்” என்று, சிந்து பாடுகிறாள். இருக்கத்தானே செய்யும் நான் முன்பு அவளிடம் வீசிய நோட்டுகள், என் சம்பாத்தியப் பணமா என்ன அவளுக்குக் களிப்பு பிறக்க? வீடோ தோட்டமோ, நஞ்சையோ, நகையோ, எதையோ ஒன்றைவிற்றுச் செலவு செய்து விட்டது போக மிகுந்த பணத்தை மீனாட்சியிடம் கொடுத்திருப்பேன். அவளுக்குச் சந்தோஷம் எப்படி இருக்கமுடியும்? கண்ணன் கொண்டுவந்த பதினைந்து ரூபாயோ, அவன் பாடுபட்டுச் சம்பாதித்தது. குடும்பத்துக்கு உயிர் ஊட்டுவது! என்னைப் பட்டை நாமத்துடனும் பஜனைப் பாட்டுடனும், பிச்சை எடுக்கச் சொல்லாமல் தடுத்த தனம்! கண்ணுசாமியின் குணத்தை அவன் தாயும் நானும் மட்டுமா புகழ்கிறோம். அவன் தீர்க்காயுசுடன் இருந்தால், நான் தோற்று விட்ட செல்வமெல்லாம் திரும்பவும் கிடைத்துவிடும் என்று கோபால ஜோதிடர்கூடச் சொல்லியிருக்கிறார். என் மகனுடைய நற்குணத்தைக் கடத்னாலேதான், அவனுடைய முதலாளி இந்த மாதம் முதல் 5- ரூபாய் சம்பளத்தில் கூட்டி இருக்கிறார். அவர் மகாராஜனாக வாழவேண்டும். இன அவர் தரும் இருபது ரூபாயிலே மாதம் இரண்டு ரூபாயாவது, கண்ணுசாமியின் கலியாணத்துக்கென்று ஒதுக்கி வைக்க வேண்டும். கண்ணனுக்கு வயது 22- ஆகிறது. இதே வயதிலே, எனக்கு முக்கியமான திவ்யக்ஷேத்திரங்களிலே எந்தெந்த “ரகம்” கிடைக்கும் என்பது தெரியும். அப்படித் தறுதலையாக இருந்தேன். கண்ணன் ஞானஸ்தன். வீண்வழி போகாதவன். அவனை நீதான் பட்சிக்க வேண்டும், மேலும் மேலும் விருத்திக்குக் கொண்டு வரவேண்டும். இப்போது, எப்படி, கடை முதலாளி சொக்கலிங்கம் செட்டியார், கண்ணனிடம் விசுவாசமாக இருக்கிறாரோ அதேபோல என்றைக்கும் இருக்க வேண்டும். அவருக்கும் வியாபாரம் பெருக வேண்டும், இலாபம் வளரவேண்டும். அவருக்குப் பணம் ஏராளமாக இருக்கிறதேயொழிய மனநிம்மதி இல்லை, பாவம் கிளி போன்ற ஒரே மகள், விதவையாகி விட்டாள். கல்யாணியை எண்ணிக்கொண்டால், கண்களிலே அவருக்கு நீர் தாரை தாரையாக வழியும் என்று கண்ணு சொல்லியிருக்கிறான். என்ன செய்வது! அது அவரவர் விதிவசம்!”

இவ்வளவும், ஆதிநாராயண நாயுடு அவசியம் எழுதி இருக்க வேண்டும், டைரியில். பங்கஜவல்லித் தாயார் கோயிலிலே, கண்ணுசாமி பேரால் ஒரு அர்ச்சனையும், சொக்கலிங்கம் செட்டியார் பேரில் ஒரு அர்ச்சனையும் செய்துவைத்துப் பிரசாதம் பெற்றுக்கொண்டு வந்தார். அந்த இரண்டு அர்ச்சனைகளிலே, ஏழெட்டு பக்கங்களில் எழுதவேண்டிய குறிப்புக்கு மேலான ஆழ்ந்த கருத்துக்கள் இருந்தன.

1938-ல் கலியாணிக்கு எழுதுவதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. தாங்க முடியாத துக்கத்தை அந்தத் தையல் எப்படி எழுதமுடியும், எழுத்துக்கள் ஏது! பூ இழந்து புலம்பிக்கிடந்த பூவைக்கு, மனதிலே மூண்டிருந்த எரிமலை, நெருப்பைக் கக்கியபடி இருந்தது. அந்த நிலையிலே அவள் தன் கெஞ்சில் உற்றது என்னவென்று எங்ஙனம் தொகுத்து எழுத முடியும்? ஒரு விநாடி அவள் கண் முன், இந்த உலகம் முழுவதுமே அஞ்ஞானம் குடி கொண்ட ஒரு அக்ரம புரியாகத் தோன்றும் சில சமயம் அவள் கண் முன், உலகமே இன்பம் என்ற கணவனை இழந்து விட்ட விதவைக் கோலத்தில் இருப்பதாகத் தோன்றும். ஆடிப்பாடிச் சுகித்திருக்கும் ஆடவர் பெண்டிர் அனைவரும் நெடுங்கால விரோதம் பூண்டு தன்னைப் பழி தீர்க்கக் கேலி செய்யும் பாதகர்களாகக் கல்யாணியின் கண்களுக்குத் தோன்றினர். எப்படித்தான் பதினெட்டு வயதுப் பெண் கல்யாணிக்கு, மணமான மூன்றாம். மாதம் மார்வலியால் மணாளன் இறந்து போன துக்கம் மாறும் அவள் மனம் பட்டபாடு, எடுத்துக் கூறக்கூடிய தன்று, அவளாலும் எழுதிக் காட்டக் கூடியதல்ல. ஓவியக்காரனோ காவியக்காரனோ முயன்றாலும் தோற்றுத்தான் போக வேண்டும், அந்த சோகச் சித்திரத்தைத் தீட்ட முடியாமல். கல்யாணி அதிகம் படித்தவளல்ல, பள்ளியிலும் சரி, உலகிலும் சரி!

1938

கண்ணுசாமி தங்கக் குணமுடையவன். ‘என் வீட்டுக் காரருடைய விசாரம், அவருக்கு இருந்த வியாபாரத் திறமை யைக் கூடக் கெடுத்துவிட்டது. கல்யாணி புருஷன் இறந்தான் என்ற தந்தி வந்ததும் கதறியதைக் கண்டபோது, அவருடைய மூளையே சிதறிவிடும் போலாகிவிட்டது. என் தலையிலே இந்தப் பேரிடி விழ நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன் ! பகவத் கைங்கரியத்தை மறந்தேனோ? தருமம் தவறி நடந்தேனோ? பொய் பேசித் திரிந்தேனோ? என் ஒரே மகள் விதவையானாளே இனி எனக்கு வீடு வாசல் ஏன் மாடு மனை எதற்கு, கடையும் கணக்கும் யாருக்கு வேண்டும், பேசாமல் நான் தேசாந்தரியாகிவிடப் போகிறேன். வீடு நமக்குத் திருவாலங்காடு, உண்டு கையில் திரு ஓடு என்ற மொழிப்படி என்றெல்லாம் அவர் அழுதபோது, கண்ணு சாமிதான், ஆறுதல் கூறினான், வீட்டையும் கடையையும் கவனித்துக்கொண்டான், அவனுடைய உதவியும் மகா ணையும் இல்லாவிட்டால் அவர் உயிர் போய்விட்டிருக்குள் அந்தப் பிள்ளையாண்டானுக்குப் பாவம், எங்கள் குடும்பத்தினிடம் அவ்வளவு அக்கரை. சொந்தப் பிள்ளைகளேல்லாம் குடும்பச் சொத்தைப் பாழாக்கிக்கொண்டு கெட்டுக்கரை வழியாகின்றன. கண்ணன், நம்ப ஜாதியார் குலமா? இல்லை ஆனாலும், அவனுக்கு எங்கள் குடும்பத்தினியும் இருக்கும் அன்பு, எங்கள் உறவின் முறையாருக்குக் கடுகுப் பிரமானமும் கிடையாது. பொறாமையும் கெட்ட எண்ணமும் கொண்டவர்கள் எங்கள் பந்துக்கள். எதிரில் இது தேன் ஒழுகும். தலைமறைவாகவோ தாறுமாறுதான் பேசுவார்கள். இப்படிப்பட்ட சனியன்கள் நமக்குப் பந்துக்களாம்! கண்ணுசாமியின் கால் தூசுக்குக்கூடக்கலம் டார்கள்!! என்று சீதாலெட்சுமி அம்மையார் தமது டைரியிலே எழுதிவைக்கவில்லை, அம்மாவிடம் டைரியும் கிடையாது. டைரி வேண்டுமானால் கூடக் கிடைத்துவிடும், கிடைத்தால் மட்டும் என்ன! சீதாலெட்சுமி அம்மைக்கு எழுதவே தெரியாது. எண்ணம், எழுத்தறிவு இல்லாமலும் ஏற்படுகிறதல்லவா! ஆகவே எழுதாத எண்ணங்களைச் சீதாலெட்சுமி, ஒவ்வோர் நாளும்,

“தம்பீ! போய்விடாதே இதோ ஒரே ஒரு தோசை சாப்பிட்டுவிட்டுப் போ”

“இவ்வளவு காலையிலே எழுந்திருக்கிறாயேடா கண்ணு உனக்கு உடம்புக்கு ஜுரம் கிரம் வந்தால் என்னடப்பா செய்வது”

“பொரிவிளங்காய் உருண்டை கொடுத்தனுப்பினேனே கடைக்கு, நீ சாப்பிட்டாயா, கடைவேலையில் அதைக் கூட மறந்து விட்டாயா” என்று ஏதாவது அன்பு மொழி பேசுவதன் மூலம் சீதாலெட்சுமி அம்மையார் தமது டைரியை எழுதிக்கொண்டிருந்தார்.

1938ல் கண்ணுசாமியின் டைரி, சுருக்கமாகவே இருந்திருக்கவேண்டும்; முதலாளிக்கு அடங்கி நடக்க வேண்டும். ஊருக்குப் பயந்து வாழ வேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். கடை வீதியிலே கண்ணியமானவன் என்று பெயரெடுக்க வேண்டும், கண்ணுசாமி ஓதிவந்த நாலடியார் இது. அவனுடைய கண்களுக்கு, முதலாளி சொக்கலிங்கம் செட்டியார், “பரிதாபத்துக்குரிய, தர்மகுணம் படைத்த பரமசாது” வாகத் தெரிந்தார். சீதாலெட்சுமி அம்மையார், கண்ணுசாமியின் கண்களுக்குத் தாயாகவே இருந்தார்கள். கல்யாணியோ? அவளை அவன் சரியாகப் பார்த்ததில்லை. ஆம்! பார்க்காததால் தான் 1938-ம் வருஷ டைரியில், இப்படி இருந்திருக்கவேண்டும் என்று கூறக் கூடிய விதத்திலே விவகாரம் இருந்தது.

1939

1938-ல் இருந்த உலகுக்கும் 1939-ல் இருந்த உலகுக்கும் எவ்வளவு மாறுதல்! அழிந்த ராஜ்யங்கள்! அரண்மனை விட்டு வெளியேறிய மன்னர்கள்! உடைந்துபோன ஒப்பந்தங்கள்! ஓய்ந்து போன ராஜதந்திரிகள் தேய்ந்த கனவுகள்! தீய்ந்துபோன சிருங்கர்கள்! இப்படிப் பலப் பல பத்திரிகைகள் மூலம் இவைகள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, பொதுமக்கள், வாழ்க்கையின் தரம் மாறுவதைக் கண்டே, பயங்கரமான போராட்டத்தின் மத்தியிலே நாம் வாழ்கிறோம் ஆகவே வதைகிறோம், என்பதைத் தெரிந்து கொண்டனர். ராஜ்ய ரசாபாசங்களும், அரசுகளின் அல்லல்களும், பண்டங்கள் பாழாவதும், இவை களுக்கான காரணங்களும், ஜனங்களுக்குத் தெரியும். அதிலும் சென்னை மக்களுக்குப் பத்திரிகைகளுக்குக் குறைவா, உலகமே, மாலை ஐந்து மணிக்குச் சென்னை மக்களின் கண் முன் வந்து நின்றுவிடுறது. அந்தக் கைங்கரியத்தைச் செய்யத்தான் ஆசிரியர்கள் இருக்கிறார்களே! சென்னை மக்கள் உலகநிலையைத் தெரிந்துகொள்ளும் வேலையிலே முனைந்திருந்தபோது, மண்டி சொக்கலிங்கம் செட்டியாரின் 1939-ம் ஆண்டுக் குறிப்பு ஏட்டைப் பற்றியா அக்கரை கொள்வார்கள்? ஆனால் மக்கள் மனதிலே உலக நிலைகண்டு மருட்சி ஏற்பட்டதற்கு எள்ளளவும் குறைந்த்தல்ல, சொக்கலிங்கம் செட்டியாருக்குக் கண்ணுசாமியின் நடவடிக்கையிலே ஏற்பட்ட மாறுதலைக் கண்டு உண்டான மருட்சி. அவன் , பீரங்கி துப்பாக்கி தூக்கிக்கொண்டு செட்டியாரின் சித்தத்தைச் சிதைக்கவில்லை. அவனுடைய படை எடுப்பு முறையே “கத்தியின்றி இரத்தமின்றி” இருந்தது. கண் இருக்கக் கட்கம் தேடுவார் உண்டா, காதற் போரில் அதிலும், கல்யாணி குருடல்ல! கண்ணுசாமி குறள் அறியாதவன்! குறளாசிரியரோ எவ்வளவோ கல்யாணிகளையும் எத்தனையோ கண்ணுசாமிகளையும் பார்த்த பிறகுதானே, “கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில்” என்று எழுதியிருந்தார்! அந்தக் கண்ணோடு: கண், காணத் தலைப்படும் நேரத்திலே கண்டுவிட்டார் செட்டியார் சோகித்தார், மருட்சி அடைந்தார். தங்கமான நமது கன்ணுசாமி ஏன் மாறிவிட்டான்? மாசு மருவற்ற அவன் மனதுமா, கெட்டுவிட்டது? என்று துக்கித்தார். அவன் மட்டுமென்ன துக்கப்படாமலா இருந்தான்? எவ்வளவு அழகு! அழகு தங்கும் பருவ அழகுகொண்டுள்ள அங்கங்கள் ! அங்கங்களைத் தாங்கிக்கொண்டு தங்கக்கொடி! அப்படிப்பட்ட கல்யாணிக்குக் கணவன் இல்லை! கைம்பெண்! நிலவுக்குத் திரையிட்டு வைப்பது போல, புனுகு ஜவ்வாதைச் சிமிழியில் இட்டு முடிவைப்பது போல, கல்யாணியின் அழகைக் கட்டுப்பாடு என்ற பெட்டிக்குள் மூடி வைத்திருக்கிறார்கள். பெட்டிய பாம்பு போலவ படுத்துக் கிடக்கும் இச்சை! அது பெட்டிக்கு அடியிலே சிறு துவாரம் செய்து கொண்டு வெளியே வந்து விடுகிறது. சொத்து இருந்தும், சொர்ணபிம்பப் போன்ற உருவம் அமைந்திருந்தும், கல்யாணிக்குக் கணவன், இலலை! உலகிலே ஆண்களா இல்லை? கல்யாணியைக் கண்டும் கவலை கொள்ளாத ஆடவன் குருடனாகவன்றோ இருக்க வேண்டும்! அவளைப் பார்க்கப் பார்க்க, என் மனம் காலை ஏற ஏற ஜுரவேகம் அதிகரித்துக்கொண்டே போகும் காய்ச்சல்காரன் போலாகிவிடுகிறது என் நிலை – எனறு கண்ணுசாமியும் துக்கித்தான், சோகமுற்றான்.

எப்போதாவது ஒர் சமயம் கல்யாணியின் சிரிப்பு சிகிச்சை முறையாகப் பயன்படும். மற்ற நேரங்களில் அவன் மனக் குரங்கை அடக்கப், பார்த்துப் பார்த்துத் தோற்றுக் கொண்டிருந்தான். கடையிலே கவனம் குறைந்ததற்குக் காரணம், கலயாணி! முதலாளியின் கோபம் கண்ணுசாமி மீது பாயும்படி நேரிட்டதற்குக் காரணம், கல்யாணி! டைரி எழுதுவதற்குப் பதிலாகச, செட்டியார், கண்ணுச்சாமிக்குச் சம்பளத்தில் இரண்டு ரூபாய் குறைக்கவேண்டியது என்று வழக்கமான வசன கவிதையை, அதன் பொருள் தெரிந்தோர் தெரிந்து கொள்ளட்டும் என்ற முறையிலே எழுதிவிட்டார்.

ஆதிநாராயண நாயுடு. “என்னமோ போறாத வேளை” என்ற பேச்சால் திருப்திப்படலானார், சீதாலெட்சுமி, “அந்த இரண்டு ரூபாயினால் உங்களுக்கென்ன பிரமாதமான செலவா ஏற்பட்டு விட்டது. ஏழை அவன்; அவன் மீது பாய்கிறீரே” என்று வக்கீல் வேலை செய்து பார்த்தாள், வழக்கு தள்ளுபடியாகிவிட்டது; அப்பில் கோர்ட் இல்லை!!

1938-ல் குணவானாக இருந்த கண்ணுசாமி 1939-ல் அதாவது ஒரே வருஷத்திலே, தனக்குச் சோறிடும் “தர்ம தாதா” விற்குத் துரோகம் செய்யும் தூரத்தனாக மாறிவிடடான் ஊரிலே நம்மைப்போல எத்தனையோ, விதவைகள் நமது தலை எழுத்துப்போலாகிவிட்டது, என்ற பேச்சினாலும் நினைப்பாலும், பருவ உணர்ச்சியைக் கட்டுப்படுத்திப் பார்த்த பரிதாபத்துக்குரிய கல்யாணி, “நான் என்ன செய்யட்டும்? நானும் எவ்வளவோ முயன்றுதான் பார்த்தேன், முடியவில்லை. இதிலென்ன அதிசயம்! முல்லை, கொடியிலே பூத்திருக்கும்போது, சாலையிலே நடப்பவன் அந்த நறு மணத்தை ரசிக்கிறான், அதற்கு முல்லை என்ன செய்வதும் கண்ணுசாமியை இங்கே ஏன் உலவவிட்டீர்கள்? காந்த கதை ஏவிவிட்டு, இரும்புக்குச் சட்டம் இடுவதா? முடியுமா? வீணையை மீட்டிவிட்டு, இசை எழும்பக்கூடாது என்று கட்டளையிடுவதா? முட்டாளல்லவா செய்வான் அதனை -” என்றெல்லாம், வாதாடக்கூடிய வக்கிரபுத்திக்காரி’யாகிவிட்டாள் கல்யாணி, ஒரே வருஷத்திலே! அவள் பாபம் உண்மையிலே என்ன செய்வாள். சொக்கலிங்கம் செட்டியார், இச்சை நசித்துக்கொண்டே போகும் பருவத்தினர். ஆகவே, அவருக்கு உலக மாயை, வாழ்க்கையின் அனித்தியம், காமவிகாரத்தினால் வரும் அபசாரம் ஆகியவைகள், மனதிலே குடிகொள்ள முடிந்தது. கல்யாணியோ, அலை மோதிடும் மனம், அதை அடக்க முடியாதபருவம், நாளுக்கு நாள் அலையின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்தது – குற்றம் அவளுடையதா? சேச்சே! அவள் என்ன செய்வாள்? பருவம் அவளைப் பணிய வைத்தது.

கடை குமாஸ்தாவாகக் கண்ணுக்குத் தெரிந்த கண்ணுசாமி, “அப்பாவுக்கு மிக்க வேண்டியவர்” என்ற ரூபமெடுத்து, காலையும் மாலையும் கனியோ மலரோ, கடையிலிருந்து கொண்டுவந்து தரும் ‘பக்தன்’ வேடத்தில் தோன்றி, கடைசியில் காதலனாகவே காட்சியளித்து விட்டான். அவள், விதி வழியிலே போய்க்கொண்டிருந்தவனைக் கைப்பிடித்து இழுத்துவரவுமில்லை. அவள் இருக்கும் இடத்துக்கு அவனை அனுப்பியது, அவள் தந்தை தான்! அவன் வசந்தத்தின் தூதனாக வந்தான். அந்த வடிவழகியின் மனதிலே இடங்கொண்டான். அதற்கு அவள் மீது குறை கூறியப் பயன் என்ன?.

அந்த ஒரு வஷத்திலே நடந்ததனைத்தும் அவளுக்கு நன்றாக நினைவிருந்தது.

1938-ல், தங்கமானவன், சாது. 1939-ல் அவனே தறுதலை, போக்கிரி! – இது செட்டியாரின் கணக்கு. அவர் கணக்குப்படி பார்த்தால், 1938-ல் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக இருந்த கண்ணுசாமி, 39ல் நயவஞ்சகனாகிவிட்டான். அந்த ஒரு வருஷத்தில் புத்திசாலி என்று புகழ்ந்த செட்டியாரே, அதே ஆசாமியை மூட்டாள் என்று தூற்றினார். பைத்யக்காரன், ஒன்றும் அறியாதவன் என்று எந்தக் கண்ணுசாமியைச் சொன்னாரோ, அதே பேர் வழியை, கைகாரன். ஆஷாடபூதி என்று திட்டலானார். வா, தம்பீ உள்ளே ! என்று அன்போடு 1938-ல் அழைத்தவர், 1939ல் அவனாக உள்ளே நுழைந்தால், “போடா கழுதே! வெளியே போய் இரு” – என்று விரட்டலானார். இப்படி அவர் மாறி விட்டார். அதுபோலவேதான். கல்யாணியும் மாறிவிட்டாள். மாறுதல் சகஜந்தானே!

ஆண் பிள்ளைகள் எதிரிலே நாம் போவானேன் – என்று இருந்தாள் முதலில், செட்டியார் தான் “அட யாரும் இல்லைம்மா. நம்ம கண்ணுசாமி” என்று தைரியம் கூறினார். கண்ணுசாமியிடம் அவள் பேசுவதே கிடையாது; செட்டியாராகவேதான் பேசும் வழக்கத்தை உண்டாக்கிவைத்தார்! கடையிலே அவர் உட்கார்ந்து கொண்டு, வீட்டுக்குக் கண்ணுசாமியை “கல்யாணிக்குக் காரப் பலகாரம் என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வா” என்று சேதி சொல்லி அனுப்புவார். அவள் ஏதோ வேண்டும். வேண்டாம் என்று இரண்டே பேச்சுப் பேசி அவனை அனுப்பிவிடவேண்டும் என்று தான் நினைத்தாள் முதலில். ஆனால் அவனுடைய பார்வையிலே ஒரு பாசம் இருந்தது. பேச்சிலே ஒரு மயக்க மருந்து கலந்து இருந்தது. ஆகவே, காயாணியின் அகமும் முகமும் மலரத் தொடங்கிற்று அதற்கு அவள் என்ன செய்வாள்? அவளைக் கேட்டால் தெரியும், யார்மீது குற்றம் என்பது, கலயாணி கிடக்கட்டும் அவளுடைய கண்களைக் கேளுங்கள், “இப்படி நீ அக்ரமத்தின் மீது ஆசைப் படலாமா? காம இச்சை தகுமா? கண்ணுசாமியிடம் நான் காதலைச் சொரிந்தாய்?” என்று கேட்டுப் பார்த்தால் தெரியும்! பேச முடியாது, கண்ணால்! ஆனால் இரண்டொரு முத்து உதிரும். அந்தக் கண்ணீரின் பொருள் என்ன தெரியுமா? பைத்யக்கார உலகமே! பழிகார உலகமே! நான் திடீரென்றா தாவிக் குதித்தேன், அந்தத் தங்கரூபன்மீது? இன்று, என்னிடம் தாபம் தளும்பிக் கிடப்பதைக் காண்கிறாயே. இதே கண்களிலே முதலிலே, ஏன் இதே கண்ணுசாமி அடிக்கடி நம்மை ஒருவிதமாகப் பார்க்கிறான் என்ற கோபம் குடி கொண்டிருந்தது. அந்தக் கோபத்தை அவன் சட்டை செய்யாமல் இருந்தான், என்ன துணிவு இவனுக்கு என்று கோபத்தை மேலும் கக்கினேன். அவனை அது சுடவே இல்லை. அவன் முன்போலவே தனது அன்பை அபிஷேகித்த படி இருந்தான், எது வந்தாலும் வரட்டும் என்ற துணிவுடன் இருக்கிறான், பாவம். அவனுக்கு அவ்வளவு ஆசை இருக்கிறது போலும் என்று எனக்குத் தோன்றிற்று. அதனால் பரிதாபம் பிறந்தது. அந்த உணர்ச்சியை அவன் பயன் படுத்திக்கொண்டான். அது கண்டு நான் பயத்தைப் பொழிந்தேன். அவன் புன்சிரிப்புடன் என்னைப் பார்க்கலானான். செ! அவனுக்குள்ள தைரியத்தில் ஆயிரத்தில் ஒரு பாகம்கூட நமக்கு இல்லையே, நாம் என்ன கோழையா, என்ற நினைப்பு பிறந்தது. அப்போது சபலம் குடியேறிவிட்டது. சபலம் வெகு விரைவில் பிரேமையைக் கூட்டி வந்து குடி யேறச் செய்துவிட்டது. இப்போது தாபம் என்னிடம் தளும்பிக் கிடக்கிறது. இதை அறியாமல் என்னைக் கண்டிக்கிறாயே கன்னெஞ்சு படைத்த உலகமே! கைம்பெண்ணின் கண், எவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு, தாபத்துக்கு இடமளிக்க நேரிட்டது என்பதை அறிவாயா? உனக்கென்ன தெரியும்? தெரிந்தால் கூட நீ ஊமை! கேள்வி கேட்கமட்டும் உனக்கு வாய் உண்டே தவிர, பதில் சொல்லவேண்டிய அவசியம் வந்ததும் நீ ஊமையாகிவிடுகிறாய்! உன்னிடம் எனக்கென்ன பேச்சு!”- என்பது தான் அந்தக் கண்ணீரின் பொருள். அறிந்தோர் அறிவர்; அறியாதவர் பலர், எனினும் பயனிலை அவரால். அந்தக் கண்களை அதே நேரத்தில் கல்யாணியின் கரம் துடைப்பது காண்பவர்கள். “கண்களைக் கசக்கிக் காட்டுகிறாள் கள்ளி!” என்று வழக்கமான பேச்சு பேசுவர். அவர்கள் அறியார்கள், அவளுடைய கரம், கண் களைத் துடைப்பதல்ல அது! மெதுவாகத் தடவிக் கொடுத்துக்கொண்டு, தன் கஷ்டத்தை எடுத்துக் கூறி, கல்யாணியின் கண்களுக்கு ஆறுதல் கூறும் அழகான காட்சி அது என்பது.

“கலங்காதே கண்ணே! நீ உனக்குத்தான் இந்தக் கஷ்டம் ஏற்பட்டது என்று நினைக்கிறாய். பைத்யக்காரி! நான் பட்ட கஷ்டம் உனக்குத் தெரியுமா? கேளடி கதையை! அன்றொரு இரவு அவர் என்னைத் தொட்டார், முன் அறிவிப்பு இன்றி. அப்போது அவரை உதறித் தள்ளியதை, பிறகு ஓர் நாள் உள்ளே தாய் இருக்கிறாள் என்பதைச் சுட்டிக் காட்டும் சிகப்புக் கொடியாக மாறி, அதற்குப் பிறகு சத்தம் செய்யாமல் வா என்று வாயைப் பொத்திக் காட்டத் தொடங்கி, போகாதே இரு, இதோ வந்து விடுகிறேன் என்றும் சைகை செய்து, உன்னை என்ன செய்கிறேன் பார், என்று விளையாட்டுக்கு மிரட்டும் குறி காட்டி பிறகு அவரை அணைத்து ஆனந்தம் பெற்று, இன்று அடிவயிற்றைத் தடவி அல்லற்படுகிற கதை உனக்குத்தான் தெரியுமா?” – என்று கல்யாணியின் கரங்கள் கூறி, கண்களுக்குத் தேறுதல் தரும் உபகார காரியம் அது. உலகின் கண்ணுக்கு, அது, என் கண்ணைக் கசக்கும் செயலாகத் தெரிகிறது. உலகம் அதற்கு என்ன தெரியும் உள்ளத்தைப்பற்றி!

“யாரோ . ஆம்பளே வருகிறாப்போலிருக்கு” எனது கல்யாணி அச்சத்தோடு கூறிக்கொண்டிருந்தாள். செட்டியார் தான், “யாருமில்லையம்மா! நம்ம கண்ணன்! அசட்டுப் பெண்ணே! அவனைப் பார்த்துவிட்டு என்னம்மா வெட்கம் நம்ம கடைப் பையன்!” என்று தைரியம் சொன்னார். அந்தத் தைரியம் வளர்ந்த பிறகுதான் தெருவாயற்படி அருகே காலடிச் சத்தம் கேட்டதும், “யார் வருவது என்று சொக்கலிங்கம் செட்டியார் கேட்டு முடிப்பற்குள், கல்யாணியால், “யாராக இருக்கும்? நம்ம கண்ணுசாமியாகத் தான் இருக்கும்” என்று கூற முடிந்தது. காலடிச் சக்தமே அவள் செவிக்கு ஒரு இன்பம்தரத் தொடங்கியவேன் வந்துவிட்டது. அவள் என்ன செய்வாள் ! அதற்குக் அடுத்த கட்டத்திலே, கண்ணுசாமி ‘பூனை போல ஓசை செய்யாமல் வருவதும், தன் ஒய்யாரியுடன் குலவுவதும், ஆள் அவம் கேட்டதும் மெள்ள நழுவி விடுவதும், “யாரோ வந்ததுபோலச் சத்தம் கேட்டதே யாரம்மா அது?” என்று தாய் கேட்க, கல்யாணி, “யாரும் இல்லம்மா! நம்ம கண்ணுசாமிதான்” என்று சொந்தம் பாராட்டிப் பதில் கூறுவதுமாக நிலைமை இருந்தது. இவ்வளவுக்கும் காரணம், கல்யாணியா? இந்த நிலைமையைக் கண்டும், வளரவிட்ட, நிலைமை உண்டாகாமலே தடுக்கத் திறமையற்றுப்போன செட்டியாரல்லவா இவ்வளவுக்கும் காரணம்!! கல்யாணி அப்படி ஒன்றும் தொட்டதும் துவண்டு விடவில்லை; கண்ணுசாமியும் கண்டதும் காதல் கொண்டு, கைப்பிடித்து இழுத்து விடவில்லை. இருவர் மனதிலும் பலமான போராட்டம், பல இரவுகள்!

“நீ விதவை! தாலி இழந்தவள், தெரிகிறதா? தப்பு தண்டாவிலே மாட்டிக்கொள்ளாதே. உனக்கு மட்டுமல்ல, குடும்பத்துக்கே கெட்ட பெயர் உண்டாகும்” என்று தலையணையின் வலது பக்கம் கல்யாணியின் வலது காதிலே உபதேசம் செய்யும் இடது புறத்திலே இருந்து கிளம்பும் குரலோ, “உன் அழகும் இளமையும் வீணாகப் போகிறது. வாலிய விருந்தை உண்ணாமல் வாடுகிறாய். உன் கணவன் இறந்து விட்டான். நீ என்ன செய்வாய் அதற்கு போனவன் உன்னுடைய உணர்ச்சியையும் கவர்ச்சியையும் பறித்துக் கொண்டா போய்விட்டான். இல்லையே! தலை சீவிக்கொண்டு நிலக்கண்ணாடியிலேபார் உன் அழகை! அதை அவனுக்கு அர்ப்பணம் செய்தன்னை அவன் உள்ளன்போடு நேசிக்கிறான்” என்று பேசும். வலதுபுறம் உபதேச மொழி, இடதுபுறம் இன்பத் தூது மொழி, என்ற வகையில், தலையணை, கல்யாணிக்குப் பல இரவுகள் போதனை புரிந்தது.இடது பக்கமும் திரும்பிப் படுக்காமல், வலது புறமும் சாயாமல், நேராகப் படுத்துக் கொண்டு, இரண்டு விதமான பேச்சையும் கேட்க மறுத்தாள் , கல்யாணி. முடிந்ததா? அதுதான் இல்லை; படுக்கை அறையின் சுவர்களிலே தேவன் தேவியோடு திருக்கோயில் கொண்டிருக்கும் காட்சியும், சினிமா நட்சத்திரங்கள் காதலருடன் கொஞ்சும் காட்சியும் படங்களாக இருந்து கொண்டு, கண்ணுக்கும் கருத்துக்கும் கசையடி தந்தன! கண்ணை மூடிக்கொள்வாள், சில இரவுகளில்; இக்காட்சிகளைக் கண்டால் தானே கருத்துக்குத் தொல்லை தரும் என்று எண்ணி. ஆனால் அந்த அழகியின் நிலைமையை என்னென்பது! கண்களை மூடினதும், கண்ணுசாமி வந்து நிற்பான், புன்சிரிப்புடன், பசி நிரம்பிய கண்களுடன்!! அந்த மனக்காட்சி, படக்காட்சிகளை விட அதிகக் கஷ்டம் தரும் மீண்டும் தலையணை மீது வலதுபுறமோ, இடது புறமோ சாய்ந்து படுப்பாள் அந்தப் பாவை. இரண்டு புறமும் இன்பத் தூதுமொழி பேசும்!! என் செய்வாள் கல்யாணி!

“கண்ணு தூக்கம் வரவில்லையா? ஏன்? கொசுக்கடியா?” என்று கல்யாணியைச் சில இரவுகளிலே தாயார் கேட்பதுண்டு.

“ஆமாம்” என்று பதில் பிறக்கும் கல்யாணியிடமிருந்து. தான் கேட்டதற்குத்தான் அந்த “ஆமாம்” பதிலாகக் கிடைத்தது என்று எண்ணிக்கொள்வாள், தாயார்! கல்யாணி, “ஆமாம்” என்று சொன்னது தன் தாயாரின் கேள்விக்கு அல்ல. அவள் மனதிலே சதா எழுப்பியபடி இருந்த கேள்விக்கு அளித்தாள் அந்தப் பதிலை.

“ஏன் வீணாக முயற்சிக்கிறாய் பெண்ணே! அவன் உன் நெஞ்சிலே குடிபு தந்து விட்டான். இனி அவனை உபதேசமோ உருட்டல் மிரட்டலோ எதுவும் வெளியேற்ற முடி =யாது. காலம், உன் சம்மதத்தைக் கேட்டுக்கொண்டா உன் கணவன் உயிரைப் பறித்துக்கொண்டது! அதுபோலவே, உன் நெஞ்சிலே அவன் புகுந்து கொண்டது, உன்னைக் கேட்டுச் சம்மதம் பெற்ற பிறகு அல்ல. நீ எவ்வளவோ தடுத்தாய், போரிட்டாய்; அவனைச் சுட்டுவிடுவது போலப் பார்த்தாய், அவன் நெஞ்சம் கலங்கவில்லை, பின் வாங்கவில்லை. நீ எதிர்க்க எதிர்க்க அவனுடைய உறுதி பலப்பட்டது. நீ உதாசீனம் செய்வது போலப் பாசாங்கு செய்யச் செய்ய அவனுடைய பிரேமை, ஒன்று பதினாயிரம் என்ற அளவிலே வளர்ந்தது. இதோ பார், கல்யாணி! அதே கண்ணுசாமி உன்னைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதித்தால் உனக்கு என்ன தடை? பதறாதே! தாலி இழந்தவளுக்குக் கலியாணமா என்று தாத்தா காலத்துக் கதை பேசாதே. தாலி கட்டுவதற்கு ஆள் இருக்குமவரை, தாலியை இழப் பது என்ற பதத்திலே பொருள் ஏது? இப்போது சொல்லு. கண்ணுசாமியைக் கலியாணம் செய்து கொள்வது என்றால் உனக்குக் களிப்புதானே? ஒளிக்காமல் பேசு! இஷ்டம் தானே?” என்று மனதிலே கிளம்பும் கேள்விக்குக் கல்யாணி “ஆமாம்” என்ற பதிலை அளிப்பாள். அதை அந்தத் தாய் கொசு கடிக்கிறதா என்று கேட்ட கேள்விக்குக் குமரி கூறிய பதில் என்று எண்ணிக்கொண்டு போய்விட்டாள் படுக்க!

கனியை அந்தக்கட்டழகியின் கரத்திலே தந்து கண்ணுசாமி தன்னையும் மறந்தவனாய், அவள் கரத்தைத் தொட்டு இழுத்துவிட்டான்.

“ரொம்ப நல்லாயிருக்கு யோக்யதை!” என்று அந்தச் சிற்றிடையாள் சீறினாள். கண்ணுசாமி, “தெரியாத்தனமாகச் செய்துவிட்டேன், கோபிக்க வேண்டாம். இனிமேல் ….” என்று குளறிக்கொண்டிருக்கும் போதே, கல்யாணி கூடத்து அறைக்குள் சென்று விட்டாள், கண்களிலே ததும்பிய நீரைத் துடைத்துக்கொள்ள. மிரண்ட பார்வையுடன் நடந்து சென்றான் கண்ணுசாமி வெளியே. தடுமாற்றம் தலை இறக்கம், தவிப்பு இவ்வளவும் அவனைத் தாக்கின தகர்ந்ததா அவன் ஆசை! இல்லை! பதுங்கிற்று, பாய்வதற்கு பாயவும் செய்தது மற்றோர் நாள் அன்று நிலைமை கோழைக்குக்கூடத் தைரியம் கொடுக்கக் கூடியதாக இருர்ந்து. செட்டியார் கடையிலே அதிக வேலையிலே ஈடுபட்டிருந்தார். செட்டியாரின் சம்சாரமோ, சொந்தக்காரர் வீட்டிலே தீடிரென்று ஏற்பட்ட ஒரு சாவுச் சடங்குக்குச் செல்லவேண்டி நேரிட்டது. கலயாணி அன்று கட்டிக் கொண்டிருந்த சேலை நீலநிறம் கண்ணுசாமி சவியல்ல; ஆனால் அந்த நீலநிறச் சேலைக்கும், நிலவையொத்த முகத்துக்கும், நட்சத்திரங்கள் போல் ஜொலித்த கண்களுக்கும், மிக அருமையான பொருத்தம் இருக்கக் கண்டான். நிர்மலமான நீலநிற வானத்திலே முழு நிலவு காட்சி தருவதுபோலிருந்தது, அன்று நீலநிறச் சேலையைக் கட்டிக்கொண்டு கலயாணி வீட்டிலே இருந்த சாயை. ஒரு முறை தொட்டு விட்டுத் தீயால் தாக்குண்டவனாதலால், கல்யாணியைக் கண்டதும் கொஞ்சம் கலக்கம் ஏற்பட்டது. அதைக் கண்ட தும் அவளுக்கே சிரிப்பு உண்டாயிற்று! கேலியாகச் சிரித்த படி, “வா! கண்ணுசாமி ! கைகாரன் நீ!” என்று வரவேற்றாள். அந்தச் சிரிப்பு, கண்ணுசாமிக்கு டானிக்காகிவிட்டது அருகே சென்றான், அவள் கொஞ்சம் அஞ்சி ஒதுங்கினாள். “அடடா! சமயற்கட்டுக்குள் பூனை …..” என்று கூறினான், “எங்கே?” என்று கேட்டுக்கொண்டே சமயற்கட்டுப் பக்கம் கல்யாணி திரும்பினாள். கண்ணுசாமி எங்கிருந்தோ தைரியத்தை அமோகமாக வரவழைத்துக்கொண்டு, கல்யாணியை அப்படியே அணைத்துக்கொண்டான். கன்னத்திலே கன்னம்! பிறகு உதடுகளுடன் உதடு! ஆனந்த அணைப்பு! அமிர்தரசம் போன்ற முத்து மழை ! இவ்வளவும் மின்சார வேகத்தில்! கல்யாணியின் கண்கள் மூடிக்கொண்டிருக்கையில் கண்ணுசாமியின் உடல் ஒரே ஆட்டம் பயத்தால்! மிகக் கஷ்டத்துடன் தன்னை அந்த அணைப்பிலிருந்து விடு வித்துக்கொண்டு, “இதென்ன சனியன் ! யாராவது பார்த்தால் என்ன ஆகும்?” என்று கோபம் கொஞ்சம், பயம் பாதிகத்துக்குமேல், மற்றப் பகுதி பெண்களுக்கே சொந்தமான அந்த சாகசம், ஆகிய கூட்டுக் கலவைக் குரலிலே, கேட்டாள் கல்யாணி.

அடுத்த கட்டத்தின் போது “அம்மா வந்து விடுவாங்க, விடுங்க! கண்ணில்லே! அதோ சத்தம் கேட்குது” என்று கூடத்திலே கொஞ்சுவாள், கண்ணுசாமியின் கரத்திலே சிக்கிக்கொண்டு. “சும்மா இரு கண்ணு! சமயல் கட்டிலே இருந்து அவங்க வருவதற்குள்ளே இன்னும் ஒரே ஒரு …” என்று கண்ணுசாமி கொஞ்சுவான். காதலர்கள் முத்தங்களைக் கணக்கெண்ணும் போது தான் தவறுமே! பத்து ஐந்தாகும், பதினைந்து ஒன்பதாகும்! கூடத்திலே வாலிய விருந்து தயாராகும்; சமயற்கட்டிலே, சீதாலெட்சுமி அம்மையார் குழம்புக்குக் காரமும் உப்பும் சரியாக இருக்கிறதா என்று சத்தற்ற (ஆனால் தேவையான) கணக்கிலே ஈடுபட்டுக் கிடப்பதகள்.

1938-ல் தங்கக் கம்பியாக இருந்தவனை 39-ல் தடிக் கழுதையாக்கி, 39 முடிவதற்குள், கண்ணுசாமியைக் கடையை விட்டே நிறுத்திவிட்டு, கலியாணியின் மீது செட்டியார் தமது சீற்றத்தை ஏவினார் – எலி ஓடி வந்தால் கூட பயப்படும் சுபாவமுடைய கல்யாணிக்கு, எங்கிருந்துதான் அந்தத் தைரியம் பிறந்ததோ தைரியவில்லை.

“நடந்தது நடந்துவிட்டது. என்னை வேண்டுமானால் கொன்று போட்டுவிட்டு, நீங்கள் சுகமாக வாழுங்கள். உங்க கௌரவம் நிலைக்க வேண்டுமல்லவா! என் யௌவனம் பாழா விதைப்பற்றிக் கவலை வேண்டாம். என்னைக் கொன்றுவிடு, அப்பா. குலம், குடும்பம், கௌரவம் இவற்றுக்கு ஆபத்து இராது. ஒரு மங்கை சாவாள், ஒரு சிசுவும் கருவிலேயே சாகும். ஸ்திரிஹத்தி சிசுஹத்தி மகா பாதகம் என்று பயப்படவேண்டாம்! விதவைகளைக் கொடுமை செய்து பழக்ககப்பட்ட இந்தத் தர்மவான்களுக்கு இந்தப் பாதகங்கள் பழைய சோறு. பயப்படவேண்டாம்” என்று சொன்னாள் கல்யாணி.

“கல்யாணி கர்ப்பவதியாமே!” என்று கூறித், தலையிலே அறைந்து கொண்டார் செட்டியார்! கல்யாணி, கண்ணுசாமி கடையை விட்டு நிறுத்தப்பட்ட பத்து நாட்களிலே, அவனுடன் வெளியூர் சென்றுவிட்டாள். “ஓடிவிட்டாள்! ஓடி விட்டாள்! கடைக்காரப் பையனுடன் கல்யாணி ஓடிவிட்டாள்” என்று ஊரிலே பேசிக்கொண்டனர். 1940-ல் கண்ணுசாமி டைரி எழுதியிருந்தால்,

“என் இன்பவல்லியும் நானும் சுகமாக இருக்கிறோம். இந்தக் காஞ்சீபுரத்துக்கு வந்து கடை வைத்ததிலிருந்து, எனக்கு வருமானத்துக்கும் குறைவில்லை. என் அன்பான மனைவிக்கு, சுகப் பிரசவம். லேடி டாக்டர் அக்கரையோடு, பிரசவ காரியத்தைக் கவனித்தார்கள், என் மகனுக்கு ஆதிலிங்கம் என்று இரண்டு தாத்தாக்களின் பெயரைக் கூட்டிப் பெயரிடத் தீர்மானித்திருக்கிறேன்” என்று எழுதி இருப்பான். ஆனால், டைரி ஏது, பலசரக்குக் கடை கண்ணு சாமிக்கு! லேடி டாக்டரின் டைரியில் காணப்பட்ட குறிப்பு இதனைத் தெரிவித்தது.

குழந்தை – ஆண்; நிலைமை: ஆரோக்கியமாக அழகாக இருக்கிறது; தகப்பனார் பெயர்: கண்ணுசாமி; தொழில்: வியாபாரம்; தாயார் பெயர்: கல்யாணி.

கண்ணுசாமி டைரியிலே எழுதியிருக்கவேண்டியதை வேறு மொழியிலே, லேடி டாக்டரின் டைரி எடுத்துக்காட்டிற்று. நகரசபை ஜனன மரணப் பதிவாளரின் புத்தகத்திலும், குழந்தை: ஆண்; பெயர்: ஆதிலிங்கம்; தகப்பனார் பெயர்: கண்ணுசாமி; தாயார் பெயர்: கல்யாணி – என்ற குறிப்பு பதிவாகிவிட்டது.

– சாது முதலிய 3 சிறுகதைகள், பரிமளம் பதிப்பகம், காஞ்சீபுரம். முதல் பாதிப்பு: மே 1950

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *