ஹித சத்துரு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2023
பார்வையிட்டோர்: 2,008 
 

(1922ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

I

காலையில் சுமார் பத்து நாழிகையிருக்கும். சாலையில் அதிக நடமாட்டம் இல்லை. சுமார் நாற்பத்தைந்து வயதுள்ள ஒரு பிராமணர் சாலையோரமாக உள்ள ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு ஒரு பற்குச்சியால் பல் துலக்கிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் பல் துலக்குவதும், எச்சில் உமிவதும், பிறகு சுற்று முற்றும் பார்ப்பதும், சற்று நேரம் ஆழ்ந்த யோசனை யிலிருப்பதுமா யிருந்தார். சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு வாலிபன், சுமார் பதினெட்டு வயதிருக்கும், அவ்வழியே வந்தான். அவனைக் கண்டதும், அந்தணர் எழுந்து வாலிபன் அருகில் வருவதை எதிர்பார்த்தவராக நின்று கொண்டிருந்தார். வாலிபன் வந்ததும், அவர் முன் நின்று, “ஐயா, வேதபுரிக்கு இன்னும் எத்தனை கல்லிருக்கும் ?” என்று கேட்டான். 

“வேதபுரி இன்னும் பத்து கல் உள்ளது. அங்கு எங்கே போகிறாய்?” 

“சும்மாதான் போகிறேன்.” 

“சும்மா என்றால்,அங்கே யாராவது பந்துக்கள் இருக்கிறார்களா?” 

“இல்லை. அங்கே ஒருவரும் இல்லை.” 

“பின்னே?” 

“இல்லை – ” சற்று யோசித்தான் வாலிபன். அவரிடம் சொல்லலாமா சொல்லக் கூடாதா என்று தயங்கினான். பிறகு, “ஊரிலிருக்க சரிப்படவில்லை. அதனால் வயிறு வளர்க்க வேண்டி அந்த ஊர் போகிறேன்.” 

“ஏன், எதாவது தாயார் தகப்பனாருடன் சண்டை போட்டுக்கொண்டு வந்து விட்டாயோ?” 

“தாயார் தகப்பனார் காலமாகி வெகு நாளாகிறது.” 

“என்னிடம் உன் விருத்தாந்தத்தைச் சொல்லுவாயானால், என்னால் ஏதாவது உபகாரம் செய்ய முடியுமானால் செய்கிறேன. வா, என்னுடன். இந்த வாய்க்காலுக்குப் போவோம் சொல், உன் சங்கதியை.” 

பிராமணர் பல் குச்சியை ஏறிந்து விட்டு கால்வாயண்டை போனார். பையனும் அவருடன் போனான். அந்தணர் பல் துலக்கினதும், துணிதுவைக்கப் போட்டிருந்த ஒரு கல்லில் உட் கார்ந்தார்: பையனை கரையில் புல்லில் உட்காரச் சொல்லி, 

“என்னப்பா, சொல், கேட்போம்” என்று கேட்டார்.

“நானிருப்பது மருதங்குடி. மகாதேவ தீக்ஷதருடைய ஸீமந்தபுத்ரன். நான் பிறந்து ஐந்து வருஷமான பிறகு எனது தாயார் இறந்து போனார். மறுபடி கல்யாணம் செய்து கொண்டார். எனது சிறு தாயாருக்கு என்னிடத்தில் அபிமான மென்பதே கிடையாது. அது தான் ஸகஜம். லோகம் முழுவதும் அப்படித்தான். அதைப்பற்றி நான் குறை கூறுவதற்கில்லை. அவளுக்கு என் தகப்பனார் விஷயத்திலும் அபிமானம் கிடையாது. அவளுக்குப் பிறந்தகத்து ஜனங்களிடத்தில் தான் பிரியம் அதிகம். ஸொத்துக்களை யெல்லாம் பல விதத்தில் அழித்து விட்டாள்; தன் உடன் பிறந்தார்களுக்கு பல விதத்தில் பண உதவிசெய்து அவர்களைப் பணக்காரர்களாக்கினாள். என் தகப்பனாரைப் பலவிதத்தில் ஹிம்ஸை செய்து வந்தாள். இவை யெல்லாம் கூட வருத்தமில்லை. என் தகப்பனாரிருந்தால் நான் கொஞ்சங் கூடக் கஷ்டப்பட வேண்டியதில்லை. அவருக்கு எனது சிறு தாயார் மருந்திட்டு மனஸை மாற்றின பிறகு கூட, அடிக்கடி அவர் என்னை ஹிம்ஹித்து வந்தாலும், சில ஸமயத்தில் என்னிடம் பிரியமாகவே யிருந்து வந்தார். வாஸ்தவத்தில் நான் ஸ்வல்பம் கஷ்டப்பட்டாலுங் கூட அவர் ஸகிக்க மாட்டார் : எனது சிறு தாயார் முன்னிலையில் தான் அவர் மனம் என்மேல் வெறுப்பாயிருக்குமே யொழிய, அவள் பிறந்த ஊர் போயிருந்தாலுஞ் சரி, வீட்டுக்கு வெளியில் நாங்கள் தனிமையாக இருந்தாலுஞ் சரி, அவர் என்னிடம் பிரியமாகவே இருந்தார். ஆனால் எனது சிறு தாயார் இதோடு நிற்கவில்லை, ஸொத்துக்களைப் பலவிதத்தில் அழித்து, மிச்ச மானவைகளைத் தன் ஸ்வாதீனம் செய்து கொண்டு, என் தந்தையை விஷம் வைத்துக் கொன்று விட்டாள். அதன் பிறகு நான் இருப்பது கூட அவர்களுக்குப் பொறுக்கவில்லை. எனக்கும் விஷம் வைக்க பிரயத்தனப்பட்டாள். ஆனால் தெய்வம் என் பக்கமிருந்தது. நான் தப்பி வந்து விட்டேன். அவளுடைய உடன் பிறந்தார்கள் துஷ்டர்கள். அங்கிருந்து ஸொத்தை யடையப் பிரயத்தனப்படுவது ஆபத்தென்று தோன்றிற்று. அதனால் வேதபுரி போய்ப் பிழைக்கலா மென்று புறப்பட்டேன்.” 

அந்தணர் சிறிது நேரம் யோசித்தார். பிறகு, “சரி, ஸ்நானம் செய். வீட்டுக்குப் போவோம். வெயில் அதிகமாயிற்று. இனிமேல் நீ வேதபுரி போகமுடியாது. இன்று, இங்கேயேயிரு. வேதபுரியில் எனக்குத் தெரிந்தவர்கள் உண்டு. அவர்களிடம் சொல்லி உனக்கு பிழைப்புக்கு ஏற்பாடு செய்கிறேன். அல்லது இங்கேயே ஏதாவது வழியிருந்தாலும் சரி” என்றார். 

வாலிபன் “ஆகா” என்று ஒப்புக் கொண்டான். இருவரும் ஸ்நானம் செய்தார்கள். வாலிபன் தன் துணியை உலர்த்தி உடுத்திக் கொண்டான். அந்தணரும் அது வரையில் அவனுக்காகக் காத்திருந்து அவனையழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனார். 


II

கீரனூர் என்பது வேதபுரிக்கு பத்து நாழிகை தூரத்தில் உள்ளது. அது ஒரு சிற்றாற்றங்கரை யோரத்திலுள்ளது. அதற்கும் வேதபுரிக்கும் நல்ல சாலை கிடையாது. அவ்வூரைச்சுற்றிலும் பத்து நாழிகை வழிக்கு வேறு கிராமம் ஒன்றுமே கிடையாது. அதிலுள்ள ஜனங்கள் ஒரு சிறு குடியரசுபோல் தங்கள் சொந் வியவகாரங்களை கவனித்து வந்தார்கள். வேதபுரியில் உள்ள தாசில்தார் வ்ருஷத்துக்கு ஒரு முறை கீரனூருக்கு சிப்பாய்களுடன் வந்து வரியை வாங்கிக் கொண்டு போவார். அவருக்குக் கீழ்ப்பட்ட எந்த ராஜாங்க உத்யோகஸ்தரும் அவ்வூருக்கு ராஜாங்க வேலையாகப் போவதில்லை. அவ்வூரில் மாந்தரீகர்களும் அதர்வண வேதம் பயிற்சியுள்ளவர்களும் அதிகம் ஏதாவது உத்யோக தோரணையாகப் போய் அதிகாரம் காட்டினால், கண்டிப்பாக ஏதாவது ஆபத்து வந்து சேரும். ஆனால் வேதபுரி தாசில்தாருக்கு மாத்ரம், அங்கு தாராளமாக வந்து போக அனுமதியுண்டு. ஏனென்றால், கீரனூர் முதல் முதலில் ஏற்பட்ட போது வேதபுரியில் முன்பு ஆண்டுவந்த அரசர் ஒருவர் தம்மை ஆபிசாரப்பிரயோகங்களிலிருந்து காத்துக்கொள்ள வேண்டி, கீரனூரை ஏற்படுத்தி, அதில் தமக்கு வேண்டியவர்களாக சில பிராம்மணர்களைக்குடியேற்றினார். அவர்கள் தங்கள் அரசருக்கு யாதொரு கெடுதலும் வராமல் பார்த்துக் கொள்வதோடு அரசருடைய பிரதிநிதிகளுக்கும் அவ்விதம் அபயதானம் செய்வதாயும் வாக்குக் கொடுத்திருந்தார்கள். வேதபுரி தாசிலுக்கு மாத்ரம் அரசருடைய பிரதிநிதியாக, ராஜவிருதுகள் உண்டு. கீரனூருக்கு அவர் வரும்போது, ராஜா வருவதாகவே ஜனங்கள் பாவித்து, ராஜமரியாதைகள் செய்வார்கள். அவர் விஷயமாக எந்தக்கெடுதலும் எவரும் செய்ய மாட்டார்கள். வருவதற்கு ஒரு மாஸத்துக்கு முன்னமேயே அறிவிப்பு வரும். அதற்குள்ளாக, ஜனங்கள் வரித்தொகையை வஸூலித்து சேர்த்து வைத்திருந்து, தாசில்தார் வந்த வன்று, ஊர்த்தலைவர், ஜனப் பிரதிநிதியாக இருந்து வரி யென்று சொல்லாமல் காணிக்கையாக ஸமர்ப்பிப்பார். பண மேயன்றி வேறு வகைக் காணிக்கைகளும் ஸமர்ப்பிப்பதுண்டு. தாசில் வருவதற்கு இன்னம் மூன்று வாரம் இருந்தன. ஒரு நாள் மேலே சொன்ன அந்தணர்- விசுவேசுவர தீக்ஷதர் என்று பெயர் – வாலிபனையழைத்துப் பேசினார். வாலிபன் அந்தணர் வீட்டுக்கு வந்து மூன்று நாளாயிற்று. தக்க துணையகப்படாததால் வாலிபனை வேதபுரிக்கு அவர் அனுப்பவில்லை. “பையா, இன்னும் இருபது நாளில் தாசில் வருகிறார், காணிக்கையை ஏற்றுக்கொள்ள. அப்போது அவரிடம் சொல்லி ஏதாவது வழி உனக்குச் செய்கிறேன். அதுவரையில் பொறுத்திரு. இங்கேயே இருப்பதற்கும் மார்க்க மிருக்கிறது. நாட்டாண்மை நாராயண சர்மாவுக்கு ஒரு ஆள் வேண்டியிருக்கிறது. நல்ல யோக்கியனாயும் புத்திசாலியாயும் ஒருவன் கிடைத்தால், வைத்துக் கொள்வதாகச் சொன்னார். பத்து பொன்னுக்குக் குறையாமல் பதினைந்து பொன்வரையில் வேதனமாகக் கொடுப்பார். தொகை கொஞ்சம் முன்னைப்பின்னாக இருந்தாலும் அவர் நல்லவர். உன்னை நல்ல ஸ்திதிக்குக்கொண்டு வருவார். அவர் வீட்டிலேயே சாப்பிடலாம், அவர் வீட்டில் நித்யம் வேளைக்கு இருபத்தைந்து, முப்பது இலைக்குக் குறையாமல் விழும். ஆகையால் நீ சாப்பிட்டால் அவருக்குக் குறைந்து போய்விடாது.” 

“ஏதோ, நீங்கள் தான் என்னை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும், எந்தவிதம் தங்களுக்கு யுக்த மென்று தோன்றுகிறதோ அப்படியே செய்யுங்கள்.”

“கீரனூர் நாட்டாண்மை யென்றால் வேதபுரி முழுவதும் நடுங்கும். ராஜாவுக்குக் கூட சற்று பயந்தான். இப்போதிருக்கும் ராஜாவுக்கு பிரபிதாமகன் முன்பு வேதபுரியில் தான் இருந்தார். அப்போது பலவகையில் அவருக்குக் கஷ்டங்கள் நேர்ந்தன. நாட்டாண்மையின் பிதாமகருக்குப் பிதாமகனை யடுத்து அவருடைய ஸகாயத்தால் கஷ்டங்களிலிருந்து நீங்கினார். அவரை வேதபுரிக்குக் கூட்டிக்கொண்டு வந்து அவருடைய உத்தரவின் பேரில் நடுக்காட்டிலுள்ள இந்த ஊரை ஏற்படுத்திக் கொடுத்தார். அந்தப் பெரியவர் நாளில்தான் இந்த ஊர் ஏற்பட்டது. அவருடைய உபாஸனா தெய்வமாகிய காளி ரொம்ப சக்திவாய்ந்தது. கேட்ட தெல்லாம் கொடுக்கக்கூடியவள். அவளே லக்ஷ்மி, அவளே துர்க்கை, அவளே ஸரஸ்வதி, அவளே எல்லாம் என்ற பாவத்துடன் அவளை உபாஸிக்க வேண்டும். நீ நாட்டாண்மையின் அரண்மனையி லிருந்தாலுஞ்சரி, வேதபுரிக்குப் போவதானாலுஞ்சரி நான் உபகாரம் செய்கிறேன். உனக்கு எங்கிருக்க வேண்டுமென்று அபிப்பிராயமோ சொல்” என்றார். 

விசுவேசுவர தீக்ஷதரைக் கண்டது முதல் வாலிபனுக்கு – ஸ்ரீதரன் – அவர்மேல் அதிக பிரியம் உண்டாயிற்று. தனது தந்தைபோல் பாவித்தான். அவர் மனைவி லலிதாம்பாளும் அவனிடம் அதிக அன்பும் ஆதரவுமாக இருந்தாள். தாயையும் தந்தையையும் இழந்து, மாற்றாந் தாயால் அடித்துத் துரத்தப் பட்டு, திக்கற்று, பிழைக்க வழியின்றித் தவிக்கும் பையனுக்கு இவ்விடம் ஸௌக்கியமாயிருந்தது. விச்வேசுவர தீக்ஷதருக்கு ஒரு பெண் உண்டு. அவள் பார்க்க வெகு ஸுந்தரமாயும், அவள் முககுளிர்ச்சியாயும், சிரித்த பார்வையாயும், சந்திரனை விடத் தெளிவாயு மிருந்ததால், அவளுக்குச் சந்திரவதனியென்று பெயரிட்டார்கள். சந்திரவதனிக்கு பத்து வயதுதானிருக்கும். அவ்வூரில் அவளுக்கேற்ற வயதுள்ள வரனில்லாததாலும், வேறு சில காரணங்களாலும், இன்னும் கல்யாண மாகவில்லை. லலிதாம்பாள் ஸ்ரீதரன் வந்த வன்றே அவனுடைய குலம் கோத்திரங்களை விசாரித்து, தன் பெண்ணுக்கு ஏற்ற புருஷன் தான் என்று தீர்மானம் செய்து விட்டாள். தன் புருஷனிடமும் தன் அபிப்பிராயத்தைச் சொல்லி அவரை ஸம்மதிக்கச் செய்தாள். சந்திரவதனியும் ஸ்ரீதரனிடம் வாத்ஸல்யம் கொண்டு, அவனையே புருஷனாக அடையப்போவதாய் எண்ணி ஸந்தோஷமடைந்தாள். ஏனென்றால் ஸ்ரீதரன் நல்ல அழகு வாய்ந்தவன். குணசாலி. இன்பமாகப் பேசக் கூடியவன். 


III 

ஸ்ரீதரன் கீரனூருக்கு வந்து ஒரு வர்ஷமாயிற்று. நாட் டாண்மை நாராயண சர்மாவிடம் அவன் வேலைக் கமர்ந்துகொண்டான். அவனுக்கு சம்பளம் கொஞ்சமென்றாலும், அவன் செல்வாக்கிலும் அந்தஸ்திலும் உயர்ந்து வந்தான். சிலநாள் விச்வேசுவர தீக்ஷதர் வீட்டிலும், சிலநாள் நாட்டாண்மை அரண்மனையிலும் சாப்பிட்டு வந்தான். ஊரிலுள்ள எல்லாரும் அவனைக் கொண்டாடினார்கள். நாட்டாண்மையும் அவனிடத்தில் அதிகப் பிரியமும் நம்பிக்கையும் கொண்டிருந்தார். அநாதையாகச் சோற்றுக்குத் துணிக்கு வழியில்லாமல் தவித்து வந்த ஒரு பையன் இவ்விதம் தம்மைக் கூட அடக்கியாளக்கூடிய அந்தஸ்தை யடைந்தது, விச்வேசுவர தீக்ஷதருக்கு சற்று பொறுக்கவில்லை. அவனுக்குத் தம் பெண்ணைக் கல்யாணம் செய்துவைப்பதாக இருந்த எண்ணங் கூட சற்று குறைந்தது. அறியாத பெண்ணாகிய சந்திரவதனி மாத்திரம் அவனிடம் பிரியம் கொண்டிருந்தாள். அந்தப் பிரியம் நாளுக்கு நாள் விருத்தியடைந்து வந்தது. 

இப்படியிருக்க விச்வேசுவர தீக்ஷதர் ஸ்ரீதான் மேல் தீராப் பகை கொள்ள ஒரு ஸந்தர்ப்பம் நேர்ந்தது. நாட்டாண்மை உத்தரவின் பேரில் ஸ்ரீதரன் தீக்ஷதரிடம் சற்று அதிக கண்டிப்பாயிருந்து விட்டான். அவ்வளவு கண்டிப்பாக இருந்திருக்க வேண்டிய தில்லை. சிறுவயதின னாகையாலும், புதிதாக அந்தஸ்து ஏற்பட்டதாலும், அவன் தன்னை மறந்து விட்டான். இதற்குத் தக்கபதில் செய்ய வேண்டுமென்று தீக்ஷதர் வைராக்கியம் கொண்டார். 

கீரனூர் முதலில் ஏற்பட்டபோது ஆபிசாரப் பிரயோகம் தெரிந்தவர்கள்தான் அதிகம். அந்த முறைகள் நாளடைவில் குறைந்து போயின. அது தெரிந்தவர்கள் இப்போது ஸ்வல்பந் தான். அவர்கள் நாட்டாண்மையினிடம் அனுமதிபெற்றே பிரயோகங்கள் செய்யலாம். அதுவும் பிற ஊர்களில்தான். ஊருக்குள் எதுவும் செய்யக்கூடாது. அவ்வித கட்டுப்பாட் டுக்குள் அடங்கி நடப்பதாக நாட்டாண்மைக்கு ஸத்தியம் செய்து கொடுத்திருந்தார்கள். விச்வேசுவர தீக்ஷதர், மாத்ரம் ஸத்தியம் செய்து கொடுத்திருந்தும், அதற்குக் கட்டுப்படாமல் இரண்டொருதடவை முறை தவறி நடந்து விட்டார். இதனால் அவருக்கு ஊரில் மதிப்பே கிடையாது. அவர் பெண்ணுக்கு வானகப்படுவதும் அரிதாகி விட்டது. நல்ல வேளையாக ஸ்ரீதரன் வந்தான். அநாதை, அவனைக் கெடுத்தால் தம் பெண்ணும் கெடுவாள். ஆகையால், அவர் ஸ்ரீதரனைக் கெடுக்கமாட்டார். என்று எவரும் ஸ்ரீதான் விஷயத்தில் தலையிடவில்லை. 

ஆனால் இப்போதோ, தீக்ஷதர் தீராப் பகை கொண்டுவிட் டார். அதுமாத்ரமல்ல, வெளிக்கு அதிக விசுவாஸம் பாராட்ட லானார். நிஷ்கபடியான ஸ்ரீதரனும் ஒன்றும் ஸந்தேகப்படாமல் எப்போதும் போலவே இருந்து வந்தான். 

கீரனூர் காளிகோயிலுக்கு அரை நாழிகை வழி தூரத்தில் ஒரு சிறு கருவேலங்காடு உண்டு. அதில் ஒரு அரசமரத்தடியில் ஒரு பெரும் புதையலிருப்பதாக வெகு காலமாக ஒரு வதந்தி உண்டு. அதைக்காளியேகாத்து வருவதாகவும், அதையடையவிரு ம்பினால் ஸர்வலக்ஷணமும் அமைந்த ஒரு பிராமணரைப் பலியிட வேண்டு மென்றும் ஐதீகம். ஊர் முழுவதும் இது தெரியும். ஆனால் எவரும் அதையடைய முயலக் கூடாதென்று நாட்டாண்மையின் ஆஜ்ஞை. அதனால் அந்தப் புதையலை இதுவரை எவரும் அடைய முயலவில்லை. 

விச்வேசுவர தீக்ஷதர் தமது பகையைத் தீர்த்துக்கொள்ளவும் புதையலைப்பெறவும் நல்ல ஸந்தர்ப்பம் நேர்ந்ததென்று ஸந்தோஷப்பட்டார். ரகஸ்யமாக இந்தக்காரியத்தை முடித்து விட்டு, அது வெளியில் வராதபடி ஸேதுயாத்ரை போவதாகப் பாசாங்கு செய்ய உத்தேசித்தார். அதன்படியே ஸேதுயாத்திரை செய்யப்போவதாக ஊரில் சொல்லிக்கொண்டார். 


IV 

சந்திரவதனி கொஞ்சகாலம் ஸ்ரீதரனுக்கு வாழ்க்கைப்படப்போவதாக எண்ணியிருந்தாள். அது அவளுக்கு பிரியமாகவே இருந்தது. ஸ்ரீதரனுக்கு வாழ்க்கைப்படுவதில் அவளுக்கு ஸந்தோஷந்தான். ஆனால் அவளுடைய ஸந்தோஷத்துக்கு சீக்ரம் அழிவுவந்தது. தீக்ஷதர் அவன் மேல்பகைகொண்டதில் வேறு வரன்தேட நிச்சயித்துவிட்டார். அவர் மனைவி லலிதாம்பாளும் இதற்கு ஸம்மதித்தாள். அவ்வூருக்குப்புதிதாக ஒரு அந்தணர் வந்திருந்தார். வந்து இரண்டு மூன்று வாரமாயிற்று. லலிதாம்பாளுக்கு ஐந்தாறு முறைகள் விட்டு ஏதோபாத்தியமாம். அவர் மதுரா புரிக்கு அருகில் விஜயபுரியில் உள்ளவர். சந்திரசேகரய்யர் என்று பெயர். ஆபிசாரம் கற்றுக்கொள்ள வேண்டி கீரனூர் வந்தார். உறவு தெரிந்ததும் தீக்ஷதர் வீட்டில் குடி கொண்டார். 

அவருக்கு ஒரு புத்திரன் உண்டு. நன்றாய் அத்யயனம் செய்தவன். புத்திசாலி, ஸொத்துண்டு. இதைத் தவிர, வேறு நல்லவரன் என்ன வேண்டும் ! கல்யாணம் நிச்சயமாயிற்று. நாளும் ஏற்பாடாயிற்று. 

இவ்விதம் ஏற்பாடானது சந்திரவதனிக்கு வருத்தம். ஆனால் அவள் என்ன செய்யக்கூடும். நாளுக்கு நாள் அவளுக்கு ஸ்ரீதரன் மேல் பயபக்தியும் அன்பும் அதிகமாகிக் கொண்டு வந்தன. எவ்விதமாகவாவது இந்த ஏற்பாடு தவறிப்போகக் கூடாதா என்று காளியை தினந்தோறும் வேண்டிக்கொண்டுவந்தாள். 

இப்படியிருக்க ஒரு நாள் தன் வீட்டில் ஒரு அறையில் பகலில் படுத்துக்கொண்டிருந்தாள். சற்றுத் தூக்கக் கலக்க மாயிருந்தது. அருகில் கூடத்தில் அவள் தகப்பனாரும் தாயாரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவள் தாயார் கூப்பிட்டாள். “குழந்தே”- எழுந்து போனால் ஏதாவது வேலை செய்யவேண்டிவரும் என்று சோம்பலால் தூங்குபவள் போல் பாசாங்கு செய்து பதில்சொல்லாம லிருந்துவிட்டாள். கூப்பிட்டதனால் தூக்கக்கலக்கம் போய்விட்டது. அவர்கள் பேசுவதைக் கவனிக்கலானாள். 

“இப்போது எதற்காக ஸேதுயாத்ரை?” 

“ஸேதுயாத்ரைக்கு நாளென்ன, நக்ஷத்திரமென்ன ?” 

“இல்லை, எப்போது வேண்டுமென்றாலும் போகலாம். கல்யாணத்துக்கு நாள் வைத்திருக்கிறது. இன்னும் சரியாக ஒரு மாஸமில்லை. பெண்ணோ குதிர்போல் வளர்ந்து விட்டது. ஊரெல்லாம் ஹேளனம் செய்கிறார்கள். அதைக் கவனிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டா இருக்கிறது?” 

“ஸமாச்சாரம் வேறு. இரண்டு காரணத்தை உத்தேசித்து இந்த ஏற்பாடு”

“என்ன?” 

“அந்தப் பையன் ஸ்ரீதரன், அவனை ஒழித்து விடவேண்டும். அவன் திமிர்பிடித்துப் போய்விட்டான்.” 

“என்ன?” 

“அவன் என்னை மிகவும் அலக்ஷியம் செய்து உதாஸீனமாகப் பேசினான். அது எனக்குப் பொறுக்கவில்லை. அவனை ஒழித்துவிடவேண்டும். அதற்குவழி அவனைக் காளிக்கு பலி யிட்டுப் புதையலை எடுத்துக்கொண்டு, அது தெரியாமலிருப்ப தற்காக ஸேதுயாத்திரை வியாஜம் சொன்னேன். கொஞ்ச தூரம் போய்க் கல்யாணத்துக்கு அவர் அவலாப்படுத்துவதாகச் சொல்லித் திரும்பி விடுவோம். அவன் எங்கேயோபோய் விட்ட தாகக் கதை கட்டிவிடுவோம்.” 

“அவன் இப்போது சற்று திமிர்பிடித்துத்தான் அலைகிறான். முன்பிருந்த ஸ்திதியைக் கொஞ்சமும் நினைக்கவில்லை. அவனை ஆளாக்கிவிட்டது நாம் என்பதைக்கட்டோடு மறந்துவிட்டான். ஆனால் இதுவிஷயத்தில் அதிகஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.” 

“இதை ஒருவரிடமும்சொல்லிவிடாதே.” 

லலிதாம்பாள் இவ்விஷயத்தை பரமரகஸ்யமாக வைத்திருப்பதாய் ஒப்புக்கொண்டாள். பிறகு பேச்சு வேறு விஷயங்களில் சென்றது. 

சந்திரவதனி இதைக்கேட்டதும் பரம துக்கத்தை யடைந்தாள். மகாபாபமான ஒரு செயலைத் தன் தகப்பனார் செய்ய உத்தேசிக்க, அதற்குத் தன் தாயார் ஸம்மதித்தாளே என்று வருத்தப்பட்டாள். அவர்களுக்கு தான் பெண்ணாய்ப் பிறக்க நேர்ந்தது தனது தௌர்ப்பாக்கியமென்று கலங்கினாள். அவனிடம் பிரியமாக நடந்து அவனைக் கெடுக்க உத்தேசிக்கிறதை எண்ணி “ஆஹா! அவருக்கு இவர்களுடைய சூது ஒன்றும் தெரியாதே. நிஷ்கபடியாக அவர் இவர்கள் சொல்லுகிறபடி யெல்லாம் நடந்து கடைசியில் இவர்களுடைய சூதில் அகப்பட்டு உயிரிழக்க நேரிடுமே. யார் அவருக்கு தக்க சமயத்தில் உதவி செய்யப் போகிறார்கள். நானே அவருக்கு விஷயங்களைச் சொல்லி அவரைத் தப்பித்துக்கொள்ளும்படி சொல்லட்டுமா? அதனால் நமது தாய் தகப்பனாருக்குக் கெடுதலேற்படக்கூடாதே. இரண்டு பேர்களுக்கும் யாதொரு ஆபத்தும் வராமல் நானும் இதில் அகப்பட்டுக்கொள்ளாமல் இருக்கும்படி என்ன உபாயம் செய்யலாம்” என்று பலவாறு யோசித்தாள். அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. கடைசியில் அவள் இன்னும் என்ன நடக்கிறதென்று பார்ப்போம், அதற்குத் தகுந்தபடி யோசிப்போம் என்று தீர்மானித்தாள். மறுநாள் தீக்ஷதர் ஸ்ரீதரனிடம் ஸேதுபோவதாகவும் அவனும் கூடவந்தால் ஸௌகர்ய மாயிருக்கு மென்றும் சொன்னார். அவன் ஒப்புக்கொண்டான். யாத்திரைக்கு நாள் குறிப்பிட்டாயிற்று. இனிமேல் தாமஸித்தல் காரியம் கெட்டுப் போகுமென்று பெண்மணி பயந்தாள். ஸமயம் வாய்த்தவுடன் வாலிபனிடம் சொல்லி விடுவதாகத் தீர்மானித்தாள். அன்று மாலையில் அவள் தாயார் வீட்டுக் கொல்லையில் வேலையாயிருந்தாள். தீக்ஷதர் வெளியில் போயிருந்தார். சந்திரவதனி ஒரு சமயம் ஸ்ரீதரன் வரலா மென்று அவனுக்காக வீட்டின் முன்புறத்தில் காத்துக் கொண்டிருந்தாள். ஸ்ரீதானும் வந்தான். உடனே உட்கார்ந்து கொண்டிருந்த பெண்மணி எழுந்து நின்றாள். 

“உன் தகப்பனார் இருக்கிறாரோ?” 

“இல்லை” 

“வந்தால், நாளைய தினம் நாலையில் நான் எழுப்பவருவதாகச் சொல்.” 

இவ்விதம் சொல்லிவிட்டுப் போகத் திரும்பினான். 

“அவஸரமோ? ஒரு வார்த்தை சொல்லவேண்டும்.” 

தான் ஒருவரனென பேச்சு வந்தது முதல் ஸ்ரீதரன் அவளுடன் அதிகம் பேசுவது இல்லை. அவளும் அவனிடம் பேச நாணுவாள். இப்போது தைரியமாக அவள் நின்று வார்த்தை சொல்லவேண்டினது அவனுக்குச் சற்று வியப்பா யிருந்தது. அவளை ஏற இறங்கப் பார்த்தான். என்ன தன்னிடம் தனிமையில் பேச விரும்புகிறாள் என்று ஆலோசித்தான். பிறகு “என்ன விசேஷம்? அவஸர மொன்றுமில்லை. இன்னும் அரைநாழிகை தாமஹிக்கலாம்.” என்றான் 

பெண்மணி பேசத் தயங்கினாள். என்ன ஆபத்து நேருமோ விஷயங்களைச் சொன்னால், என்று கலங்கினாள். பிறகு தன் மனஸை ஒருவாறு திட்டப்படுத்திக் கொண்டு, “தங்களிடம் ஒருவிஷயம் சொல்லவேண்டும்.” என்றாள். 

“சொல்லேன்.” 

“அதற்கு முன் ஒன்று கேட்கவேண்டும். நான் சொல்லும் விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது.” 

“என்ன அப்படிப்பட்ட விஷயம்?”

“ரகஸ்யமாக வைத்திருப்பதானால் சொல்லுகிறேன்.”

“விஷயத்தைச் சொல்லாமல் நான் எப்படி வாக்குக் கொடுக்கமுடியும்?” 

“வாக்குக் கொடுத்தால்தான் நான் சொல்லலாம். அது எப்படிப்பட்ட விஷயமானாலும் நீங்கள் வெளிவிடுகிறதில்லை யென்று வாக்குக் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் சொல்ல முடியாது. இருந்தாலும் நான் சொல்லவேண் டியதாகவும் இருக்கிறது. வெளியில் தெரியவும் கூடாது. உங்கள் ஸௌகர்யத்தை உத்தேசித்துத்தான் அவ்விஷயம்.” 

“சரி, எவரிடமும் சொல்லவில்லை.” 

“அப்படிச் சொன்னால் போதாது. விஷயத்தைக் கேட்ட பிறகு கோபங்கொண்டு – “

“ஸ்ரீதரன் ஒரு தடவை வாக்குக்கொடுத்து விட்டால் மறுபடி ஸூர்ய சந்திரர்கள் தென்வடலாகப் போனாலும் மாறமாட்டான்.” 

“சரி, சொல்லுகிறேன். அவஸரப்படாமல், கோபங் கொள்ளாமல் கேளுங்கள். முன்பு என் தகப்பனாரை நாட்டாண்மை பேச்சைக் கேட்டுக்கொண்டு உதாஸீனமாகப் பேசினீர்களே, ஞாபகயிருக்கிறதா?” 

“ஆம், அதற்கென்ன? சற்றுப் பதட்டமாயிருந்துவிட்டேன். மறுநாளே அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். அதற் கென்ன இப்போது?” 

“இப்போதும் அவர் அதைஞாபகத்தில் வைத்திருக்கிறார்.” 

“அதற்காக என்ன செய்யப் போகிறார்?” பெண்மணி மறுபடியும் தயங்கினாள். 

“என்ன சொல், பயப்படாதே. எவரிடமும் நான்சொல்ல மாட்டேன்.” 

“உங்களைக் காளிக்குப் பலிகொடுக்க உத்தேசித் திருக்கிறார். பலிகொடுத்துப் புதையலை எடுத்துக்கொண்டு அதை மறைபதற்காக ராமேசுவரம் போவதாக நடிக்கப்போகிறார்.” 

“சிவ, சிவ, ஆனால் அப்படிச் செய்யக்கூடியவ ரல்லவே. மேலும் எனக்கு உன்னைக் கொடுப்பதாக வல்லவோ சொல்லியிருக்கிறார். அது நாட்டாண்மைக்கும் தெரியுமே.” 

“அந்த ஏற்பாடெல்லாம் மாறிவிட்டது. இங்கொரு மாமா வந்திருக்கிறாரே, அவர் பிள்ளையை நிச்சயம் செய்திருக்கிறது.” 

“இது நிச்சயந்தானா. என்னிடம் அதிகப் பிரியமாகப் பேசுகிறாரே.” 

“அதெல்லாம் மேலுக்கு. ஆகையால் ஜாக்கிரதையாக இருங்கள். ஆனால் ஒன்று கேட்டுக் கொள்ளுகிறேன். நீங்கள் தப்பித்துக்கொள்ள வழிதேடுங்கள். இதற்காக என் தகப்பனாரைக் கெடுக்க வேண்டாம்.” 

ஸ்ரீதரன் சற்று யோசித்தான். 

“என்று நாள் வைத்திருக்கிறது?” 

“அது இன்னும் தெரியவில்லை. தெரிந்தவுடன் சொல்லுகிறேன். நான் சொன்னது ஞாபகமிருக்கட்டும். ரகஸ்யமா யிருக்கவேண்டும். கோபமும் கூடாது. அம்மா வருகிறாள். நான் சொன்னதற்கு பதில்?” 

“சரி, அப்படியேரகஸ்யமாயிருக்கும். கோபமும் கிடையாது.”

லலிதாம்பாள் அங்கு வரவே, ஸ்ரீதரன் அவளுடன் சற்றுப் பேசியிருந்து போனான். அவள் தன் பெண்ணிடம் சற்றுஞ் சந்தேகங் கொள்ளவில்லை. 


ஸ்ரீதரன் சந்திரவதனியினிடம் தனக்கு வந்திருக்கும் ஆபத்தைக் கேட்டதுமுதல் அவன் மனம் துடித்தது. அதை நாட்டாண்மையினிடம் சொல்லிவிடலாமா என்று யோசித்தான். ஆனால், அவன் சந்திரவதனிக்கு வாக்குக் கொடுத்திருந்ததால், அது சரிப்படவில்லை. தீக்ஷதர்மேல் கோபமுண்டாயிற்று அதையும் சந்திரவதனிக்காக அடக்கிக்கொண்டான். தனக்கு சந்திரவதனிகிடைப்பதாக இருந்து தவறிப்போனதைப்பற்றி வருத்த மடைந்தான். அவள் தன்னிடம் பிரியமா யிருப்பதை எண்ணி ஸந்தோஷப்பட்டான். அவள் தனக்கே கிடைக்கும் படி அனுக்கிரகம் செய்யவேண்டும் என்று காளியை ஸ்தோத்திரம் செய்தான். தீக்ஷதரிடம் ஸர்வ ஜாக்கிரதையாக நடந்து கொள்வதென்று தீர்மானித்தான். 

மறுநாள் தீக்ஷதரைப்பார்க்கப் போனான். அவர் அவனை அதிக பிரியமாக வரவேற்று, அன்புடன் பேசினார். இது பாசாங்கு என்று அவனுக்குத் தெரியுமாதலால், அவனுக்கு உள்ளூற சிரிப்பு வந்தது. சிறிதுநேரம் இருவரும் ஊர் விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு தீக்ஷதர், “அப்பா, ஸ்ரீதரா, நாளைய ஸோமவாரம் ஸேதுவுக்குப் புறப்பட வேண்டும். நாட்டாண்மையினிடம் சொல்லி, அனுமதியும் அனுக் கிரகமும் பெற்றுக்கொள். போய் ஒரு மாஸத்தில் திரும்பி விடலாம்.” என்றார். 

“ஸேதுவா, ஆம். முன்பே சொன்னீர்களே. ஆனால் எனக்கு உடம்பு ஒரு மாதிரியாக இருக்கிறது. இரண்டு மாஸமாக அதிக அலைச்சல்; அது உடம்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இன்று ராத்திரி நாட்டாண்மையினிடம் சொல்லி ஏதாவது வைத்தியத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டு மென்றிருக்கிறேன். நீங்களும் சற்று சொன்னால் நன்றாயிருக்கும். ஆகையால் ஸேதுவுக்கு நான் வரவில்லை. நீங்கள் போய் வரும்போது எனக்கென்று சிறியதாக ஜ்யோதிஷத்துக்கு ஏற்றதாக கொஞ்சம் சோழி கொண்டுவர வேண்டும் ” 

“வரவில்லையா? வருவாயென்றல்லவோ நினைத்தோம். நீ வந்தால் துணையாக இருக்கும். எனக்கு வயதாயிற்று. நீ இல்லாமல் எப்படி நான் போகப்போகிறேன். நான் நாட்டாண்மையிடம் சொல்லுகிறேன். சீக்கிரம் உடம்பு குணமாகும்படி மருந்து தரச் சொல்லுகிறேன். இன்னும் நான்கு நாளிருக்கின்றன. வித்தியாஸாகர பண்டிதர் அதிக கெட்டிக்காரர். ராஜவைத்தியர். வேதபுரி தாசிலுக்கு அவர்தான் வைத்தியம். அவரிடமும் சொல்லி அவரைக்கொண்டே வைத்தியம் செய்யச் சொல்லுகிறேன். நாட்டாண்மை சொன்னால் வித்தியாஸாகரர் தட்டமாட்டார்.” 

“ஏது, நான் வருவது ஸந்தேகந்தான். வித்தியாஸாகரர் மூன்று நாளில் குணப் படுத்திவிடுவாரா?” 

“மூன்றுநாளா? ஒரே வேளையில் குணப்படுத்தக்கூடிய மருந்து அவரிட மிருக்கிறதே.” 

“சரி, செய்யுங்கள். நானும் நாட்டாண்மையிடம் கேட்கிறேன்.”  

சிறிது நேரத்துக் கெல்லாம் ஸ்ரீதான் அரண்மனைக்குப் போனான். போகும் வழியில் யோசனை செய்யலானான். 

“உடம்பு சரிப்படவில்லை யென்றோம். வைத்தியம் பார்க்கிறேன் என்கிறார். அவர் உண்மையில் பாசாங்குக்காகவா சொல்லி யிருப்பார். நம்மை முன்னுக்குக் கொண்டுவந்த அவரா, அல்பம், நான் ஏதோ உதாஸீனமாகப் பேசினதை மனஸில் வைத்துக்கொண்டு கெடுக்கப்பார்ப்பார், நம்பத்தக்கதாயில்லை. ஆனால் சந்திரவதனி பொய் ஏன் சொல்லவேண்டும். அவள் வாஸ்தவத்தைத்தான் சொல்லி யிருப்பாள். கல்யாணங்கூட நின்று போயிற்று. வேறுவரன் நிச்சயம் செய்துவிட்டார்கள். ஆகையால் நாம் ஜாக்கிரைதையாக நடந்துகொள்ள வேண்டும். ஆனால் எப்படி ஸேதுவுக்கு வரமாட்டேன் என்று சொல்லுகிறது. பண்டிதரோ ரொம்ப கெட்டிக்காரர். உண்மையில் எனக்கு உடம்பு ஒன்று மில்லை. கையைப் பார்த்து ஏதாவது ரஸாயனம் கொடுப்பார். அவரைக்கண்டு ஸேது போகாதவழிக்கு ஏதாவது மருந்து கொடுக்கும்படி கேட்போமா. நமக்குத் தட்டமாட்டார். ஆனால் அவர் ஸத்தியஸந்தர், தப்புவழிக்குப் போகமாட்டார். அவரிடம் உண்மையைச் சொன்னாலொழிய தப்பவழியில்லை. ரகஸ்யத்தை வெளியிடுவதில்லை யென்று வாக்குக் கொடுத்துவிட்டோம். என்ன செய்யலாம். ஈசுவரன்தான் காப்பாற்றவேண்டும்.” 

நல்ல வேளையாக வித்தியாஸாகர பண்டிதர் வேதபுரிக்கு அன்று காலைதான் போயிருந்தார். வர நாலைந்து நாள் செல்லும். அந்த மட்டுக்குத் தான் தப்பினதாக ஸ்ரீதரன்ஸந்தோஷித்தான். விசுவேசுவர தீக்ஷதருக்கு இது வருத்தமாயிருந்தது. வேறு வைத்தியர்களைக் கொண்டு வைத்தியம் பார்க்க எண்ணினார். இதற்காக ஸ்ரீதரனை அழைத்துப் பேசினார். ஆனால் அவன் வித்தியாஸாகரரைத்தவிர வேறு யாரிடமும் நம்பிக்கையில்லை யென்றும், அவர் வந்தபின் வைத்தியம் பார்த்துக்கொள்வதாகவும் சொல்லிவிட்டான். 

மறுநாள் மாலையில் இருவரும் ஆற்றங்கரையில் சந்தித்தார்கள். பேசிக்கொண்டே தீக்ஷதருடைய வீட்டுக்கு வந்தார்கள். லலிதாம்பாளும் சந்திரவதனியும் அவர்கள் வந்தபின் கோவிலுக்குப்போனார்கள். தீக்ஷதரும் ஸ்ரீதரனும் உள்ளேபோனதும் தீக்ஷதர் திடீரென்று ஸ்ரீதரனைக்கட்டிப்பிடித்து வாயில் துணியை அடைத்து கையையும் காலையும் கட்டிவிட்டார். வேறு சிந்தனையி லாழ்ந்து அஜாக்ரதையாயிருந்தனாலும், ஒரு மூலிகையை தீக்ஷதர் அவன் மூக்கில் காட்டினதில் அவன் சற்று மயக்கமாகி ஒன்றும் செய்ய முடியாமலிருந்ததாலும், அவன் ஸுலபத்தில் அகப்பட்டுக் கொண்டான். அவனை தீக்ஷதர் ஒரு அரையில் தள்ளி ஒரு கட்டிலில் படுக்கவைத்து, மயக்கம் பலமாகும்படி மூலிகையை அதிகமாக முகத்தினருகில் வைத்து, கதவைச்சார்த்திப் பூட்டிவிட்டார். 


VI 

மறுநாள் காலையில் ஸ்ரீதரனைக்காணவில்லை ஊரெங்கும் யாவரும் தேடலானார்கள். விச்வேசுவர தீக்ஷதர் தம்மேல் ஸந்தேக முண்டாகாமலிருக்க வேண்டியும், வாலிபன் விஷயமாக எவரும் அதிக முயற்சி யெடுத்துக் கொள்ளாமலிருக்கவேண்டியும், அவன் வேதபுரிக்குப் போய்வருவதாய் முதல் நாள் மாலையில் தன்னிடம் சொன்னதாக பிரஸ்தாபித்தார். அதைக் கேட்டு யாவரும் கவலை நீங்கியிருந்தார்கள். 

தீக்ஷதர் மாந்தரீகத்தில் தேர்ந்தவர். வைத்தியமும் தெரியும். அதனால் அவர், வேண்டும்போது ஸ்ரீதரனை பிரஜ்ஞைக்கு கொண்டுவந்து, அவன் பேசமுடியாதபடி மந்திரத்தால் கட்டி, ஆகாரம் செய்யச்சொல்லிய பிறகு அவனைப் படுக்கவைத்து விடுவார். இப்படி இரண்டு நாள் சென்றது. இவ்விஷயம் லலிதாம்பாளுக்கு மாத்திரம் தெரியும். அவள் தன் புருஷனுக்கு துணையாக இருந்தாள். ஸ்ரீதான் இருந்த அறையைத் திறக்கும்போதும் ஆகாரம் போடும் போதும், அவர்கள் சந்திரவதனியை ஏதாவது காரியமாக வெகு நேரம் கழித்து வரும்படி வெளியில் அனுப்பிவிடுவார்கள். அவளுக்கு ஸ்ரீதரன் வேதபுரி போயிருப்பதாகவே எண்ணம். அந்தமட்டில் அவன் தப்பினதாக எண்ணி ஸந்தோஷப்பட்டாள். அவன் தன்வீட்டில் ஒரு அறையில் அடை பட்டிருப்பதாக அவள் ஸ்வப்னத்திலும் நினைக்கவில்லை. 

மறுநாள் காலையில் அவள் வழக்கம்போல பெற்றோர்களால் அனுப்பப்பட்டு வெளியில் போனாள். போனவள் சீக்கிரமாகவே திரும்பிவிடநேர்ந்தது. வழியில்சற்று தன் ஸகிகளில் டொருவருடன் பேசிவிட்டுத் திரும்பி வந்தவள் வீட்டுக்குள் நுழையும்போது கால் தடுக்கவே, சற்று உட்கார்ந்தாள். ஸ்ரீதரனைப் பற்றி நினைவு வந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் தன் பெற்றோர்கள் பேசும்குரல் கேட்டது. அதை கவனித்தாள்.

“சந்திரா வந்துவிடப்போகிறாள். சீக்கிரம் அவனைப்படுக்க வையுங்கள்”. 

“இப்போதுதானே போளள்.” 

“இல்லை, போய் நேரமாயிற்றே.” 

“நாளையதினம் சாயந்திரம் புறப்படவேண்டும்.” 

“சரி, அப்புறம் பேசிக்கொள்வோம்.”

“இது கைகூடுமானால் நம்மைப்போல் அதிருஷ்டசாலி கிடையாது. தலைமுறை தலைமுறையாக தனவந்தர்களாகவே இருப்போம்.”

பிறகு கதவைச் சார்த்திப்பூட்டும் சத்தம் கேட்டது. இனி உள்ளே போகலாமா மென்று எண்ணி மெதுவாக நடந்து போனாள். தாயாரைக்கண்டதும் போன வேலையைப்பற்றிப் பேசி ஸந்தேகம் கொள்ளாதபடி செய்தாள். இருவருக்கும் அவள் மேல் சற்றும் ஸந்தேகம் ஏற்படவில்லை. 

சந்திரவதனிக்கு ஸ்ரீதரன் பாடு ஆபத்துதான் என்று தோன்றிற்று. அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டு மென்றும் அதிலும் சீக்ரமாக முயற்சிசெய்ய வேண்டு மென்றும் எண்ணினாள். தன் தாயார் தகப்பனாரைக் காட்டிக் கொடுக்காமல் எப்படி அவனைக்காப்பாற்றுவது என்பது அவளுக்குத் தெரியவில்லை. பலவாறாகப் பகல் முழுவதும் யோசித்தாள். அவளுக்கு ஒன்றும் புலப்படவில்லை. தனது பெற்றோர்கள் வெளியே போயிருந்த சமயம் பார்த்து கதவின் சந்தால் ஸ்ரீதரன் அறையில் ஒரு கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்தாள். அவள் மனம் பகீரென்றது. அவளுக்கு மகாதுக்கமாயிருந்தது. அவளுக்கு சற்று நேரம் அழவேண்டும் போல் கூடஇருந்தது. ஒரு தனி அறையில் உட்கார்ந்து கண்ணீர் விட்டாள். பிறகு எழுந்து எப்போதும் போல நடமாடினாள். இருந்தாலும் அவளுக்கு ஸ்ரீதானைப்பற்றிய ஞாபகம் ஸதா இருந்து கொண்டிருந்தது. அவனை எப்படிக்காப்பாற்றுகிறது என்பதைப்பற்றி ஸதா சிந்தையாக இருந்தாள். ஸாயந்திரம் அவளுடைய தாயார் குளத்தங்கரைக்குப் போனாள். அவளுடைய தகப்பனார் வெளியில் போயிருந்தார் – சற்று நேரம் சென்ற பின் விஜயபுரி பந்துவும் வெளியில் போய்விட்டார். சந்திரவதனிக்கு தைரியம் வந்தது. கொத்துசாவி சுவரில் ஒருமுளையில் தொங்கவிட்டிருந்தது. அதை எடுத்து ஸ்ரீதான் இருந்த அறையைத் திறந்தாள். அவனைப்பார்த்தாள். நித்திரையிலிருப்பவன்போல் படுத்திருந்தான். அவனைப்பார்த்ததும் மெய்ம்மறந்து நாலைந்து வினாடிநின்று விட் டாள். பிறகு தன்னிலைக்கு வந்து சிறிதுநேரம் துக்கப்பட்டு விட்டு யாராவது வந்துவிடப்போகிறார்களே என்றுபயமடைந்து வெளியில் வந்து கதவைப்பூட்டினாள். முற்றத்தில் ஒரு கட்டிலில் வந்து உட்கார்ந்து யோசிக்கலானாள். 

“இனி என்ன செய்வது. நாளையதினம் ஸேது யாத்ரைக்குப் புறப்படப்போகிறோம். போகும் வழியில் காளி கோயிலுக்குப்போவோம். போகும்போதோ அதற்கு முன்னாலோ அவரை கோவிலுக்கு அழைத்துக்கொண்டு போய்விட ஏற்பாடாகும். பிறகு அவரைக்காப்பாற்ற முடியாது. ஆகையால் சீக்கிரம் ஏதாவது செய்யவேண்டும். என்ன செய்யலாம், நாட்டாண்மையிடம் சொல்லலாமா? அதனால் அப்பாவுக்குக் கெடுதலே. அம்மாவுக்கும் கெடுதல்தான். அவர்களுக்குக் கஷ்டம் வந்தால் நமக்கும் கஷ்டந்தான். என்ன செய்கிறது. இதைப் பார்த்தாலோ அவர் போய்விடுவார். அவரைப்பலி கொடுக்கிற தென்றால், எனக்கு வருத்தமாயிருக்கிறது. அதை எப்படியா வது தடுக்கவேண்டும் – “. என்றிப்படிப்பலவாறு யோசித்தாள் 

அவள் தாயார் வந்து சேர்ந்தாள். அவளைப்பார்க்கும்போது மிருத்துயு போல் தோன்றிற்று: சந்திரவதனிக்கு தன் தாயார் முன்னிலையில் இருக்கப்பிடிக்கவில்லை. ஒரு வாலிபனை பணத் தாசை பிடித்துக்கொல்லத்துணிந்த ஒருத்தி வேறு என்ன தான் செய்யத்துணியாள். “இங்கிருக்கவேண்டாம். சற்று வெளியில் போவோம். கோவிலுக்காவது போய் வருவோம். அங்குபோய் என்ன செய்வதென்று யோசிப்போம்” என்று தீர்மானித்து தன் தாயாருடன், கோயிலுக்குப்போய்வருவதாகச் சொல்லி வெளியில் போனாள். 

நேரே கோயிலுக்குப் போனாள். அங்கு அதிக பயபக்தியுடன் ஈசுவானை உபாஸித்தாள். அங்கு இரண்டொரு நாழிகை இருந்து பலவாறாக யோசித்து, கடைசியில் எது வந்தாலும் வாட்டும், நாட்டாண்மையிடம் தெரிவித்து விடுகிறது என்று தீர்மானித்தாள். ஸ்ரீதரனிடம் அவளுக்கு அவ்வளவு பிரியம் ஏற்பட்டிருந்தது. அதனால் தன் பெற்றோர்களிடம் வெறுப்பும் அதிகரித்தது. 

நாட்டாண்மை வஹிக்கும் தெருவில் போகும் போது அவள் மனம் கலங்கிற்று. சிறு பெண், இவ்வளவு தைரியமாகப் போய் அவரிடம் எப்படிப் பேசுகிறது என்று பயந்தாள் திரும்பிவிடலாமா என்று எண்ணினாள். அரண்மனையண்டை போனதும் திரும்பிப்போக எண்ணி சற்று நின்றாள். பிறகு மறுபடியும் தைரியங்கொண்டு வெளிக்காவலண்டைபோனாள். அப் போது அஸ்தமித்து மூன்று நான்கு நாழிகையிருக்கும். ஸ்வல்பம் நிலா இருந்தது. காவல்காரன் அவளைப் பார்த்து “ஏனம்மா இருட்டில் வந்தாய்? வீட்டுக்குபோக வழி தெரிய வில்லையா? யாரையாவது துணையனுப்பட்டுமா?” என்றான். 

“இல்லையப்பா, நாட்டாண்மையைப்பார்க்க வேண்டும். இப்போது சரிப்படுமா. அவஸரமாகப்பார்க்க வேண்டும். சற்று கேட்டுச் சொல்.” 

“அப்படியே கேட்டுச் சொல்லுகிறேன்” என்று சொல்லி காவல்காரன் தன் அருகில் தூங்கிவிழித்து கொண்டிருந்த மற்ற காவலாளியை எழுப்பி நாட்டாண்மையிடம் அனுப்பினான். 

நாட்டாண்மையிடம் யார் வேண்டுமென்றாலும் புகார்சொல்லிக்கொள்ளப்போகலாம். யாசகம் கேட்கப்போகலாம். அதற்குக் கால வரையறை கிடையாது. ஆனால் வீண் வம்புபேச அவர் இணங்கமாட்டார். எதாவது காரியமாகத்தான் பேசலாம். ஒரு குழந்தை வந்தாலும் குளிர்ந்த முகமாகப் பேசுவார். அவரிடம் தமது குறையைக்கூறப்போய் அதிருப்தியாகத் திரும்பினவர் கிடையாது. யார் வந்தாலும், ஸமயத்தை முன்னாடிகேட்டுத் தெரிந்து உள்ளே விடும்படிகாவலுக்கு உத்தரவு. வெளிவாயிலில் எப்போதும் நான்குகாவலாளிகள் இருப்பார்கள். அரண்மனையின் இந்த வாயில் வழியாகத்தான் நாட்டாண்மையைப்பார்க்கப்போக வேண்டும். மற்ற வாயில்களின் வழியாக-இன்னும் இரண்டு உண்டு- சாப்பிடவும், இதர அலுவலாகவும் போகலாம். 

நாராயண சர்மா போஜனமாகித் தாம்பூலந் தரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். சந்திரவதனி காவலாளியுடன் போய் நாராயணசர்மாவைக்கண்டு நமஸ்காரம் செய்தாள். அவர் ஆசீர்வாதம் செய்து எழுந்திருச்சச்சொல்லி, “அம்மா, நீ விசுவேசுவர தீக்ஷதர் பெண்ணல்லவா! ஏது இருட்டில் இவ்வளவு நேரங்கழித்து இங்கே வந்தாய். என்ன ஸமாசாரம். இப்போது வந்திருப்பதைப்பார்த்தால் ஏதோ அவஸரமான காரியமாக வந்திருக்கிறாயென்று தோன்றுகிறது. உன் தகப்பனாருக்கு ஏதாவது உடம்பு சரிப்படவில்லையா?” என்று கேட்டார். 

சந்திரவதனி பேசத்தயங்கினாள். நாராயண சர்மாவின் முகத்தை ஏறிட்டுப்பார்த்துப் பிறகு தலைகுனிந்து சிந்தனையி லாழ்ந்தாள். 

”என்னம்மா? சொல்லேன்.” 

“சொல்லவும் வேண்டியிருக்கிறது. பயமாகவும் இருக்கிறது.” 

“பயப்படாதே. உனக்கு ஒரு கேடும் வராமல் பார்த்துக் கொள்ளுகிறேன்”. 

“சொன்னால் ஒரு பக்கம் ஆபத்தாயிருக்கிறது. சொல்லா விட்டோலோ இன்னொரு பக்கம் ஆபத்தாயிருக்கிறது. ஆகை யால் என்ன செய்கிறதென்று தவிக்கிறேன்.”

“என்னவென்று சொல்லேன். கேட்போம். எவ்விதத்திலும் ஆபத்து நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுகிறேன்.” 

“அந்த மாதிரி அபயம் கொடுத்தால் போதும். சொல்லுகிறேன்.”

“அப்படியே அபயம் கொடுத்தேன். சொல்.”

“உங்களிடம் புதிதாக காரியஸ்தராக வந்தாரே. அவ இப்போது எங்களகத்தி லிருக்கிறார்.” 

“வேதபுரியிலிருந்து வந்து விட்டானா ஸ்ரீதரன். சிறுபிள்ளை; சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டான்.” 

“அவர் வேதபுரி போகவில்லை. எங்களகத்திலேயே இருக்கிறார்.” 

“வேதபுரி போகவில்லையா? அப்படியானால் ஏன் இங்கே வரவில்லை. உடம்பு ஏதாவது சரிப்படவில்லையா? அப்படியிருக்கவும் நியாயமில்லை. உங்கள் வீட்டிலிருந்தால் தீக்ஷதர் சொல்லியிருப்பாரே? அவர்தானே வேதபுரி போயிருப்பதாகச் சொன்னார். அவர் பொய்யா சொன்னார்? ” 

“அவர் சொன்னது வாஸ்தவமில்லை”. 

“பின்னே ஸ்ரீதான் உங்கள் வீட்டிலா இத்தனை நாளாக இருந்தான்? ஏன் இங்கு தலைக்காட்டவில்லை? உன் தகப்பனார் ஏன் பொய் சொன்னார்?” 

பெண்மணி மறுபடியும் தயங்கினாள். 

“என் தகப்பனார்தான் அவனை இருக்கச் செய்தார். ஸ்ரீதரர் தானாக இருக்கவில்லை. வலுக் கட்டாயத்தின் பேரில் இருந்து வருகிறார்”. 

“நீ சொல்லுவது ஒன்றும் விளங்கவில்லையே. ” 

“விவரமாகச் சொல்லுகிறேன். என் தகப்பனாருக்கும் ஸ்ரீதாருக்கும் கொஞ்ச நாளாக மனஸ்தாபம். அதனால் என் தகப்பனார் அவரைக் காளிக்குப் பலியிட்டுப்புதையலை எடுத்துக்கொள்வதாக எண்ணியிருக்கிறார். அதற்காகத்தான் ஸேது யாத்திரை போவதாகச் சொல்லி, போகும் வழியில் காளிக்குப் பலியிட்டுப் புதையலுடன் ஸேது போய்த் திரும்புவதாக உத்தேசம். ஸ்ரீதரர் ஸேதுவுக்குப் போக இஷ்டப்படவில்லை. அதனால் பலியிடுவது தவறக் கூடாதென்று ஸ்ரீதரரை வீட்டில் ஒரு அறையில் பூட்டி வைத்திருக்கிறார். மந்திரத்தாலோ மருந்தாலோ அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். நாளையதினம் ஸேதுவுக்குப் புறப்படுகிறோம். அதற்குள் அவரைக் காப்பாற்றவேண்டும். அதோடு ஒன்று கேட்டுக் கொள்ளுகிறேன். என் தகப்பனாரையும் கெடுக்கக்கூடாது. ஏற்கனவே அபயதானம் செய்து விட்டீர்கள். அவருக்குக் கெடுதல் வந்தால் எனக்கும் கஷ்டந்தானே.” 

“அதிருக்கட்டும், உன்னை ஸ்ரீதரனுக்குக் கொடுப்பதாக ஏற்பாடல்லவா? அப்படியிருக்க, தீக்ஷதர் இப்படிச் செய்வானேன் ?” 

“அந்த ஏற்பாடு இப்போது நின்று விட்டது. வேறு ஏற்பாடு செய்திருக்கிறார்.” 

“என்ன ஏற்பாடு.” 

“விஜயபுரியி லிருந்து ஒரு பந்து வந்திருக்கிறார். அவர் புத்திரனுக்கு நிச்சயமாகியிருக்கிறது.” 

“அதனால்தான் நாட்டாண்மை காரியஸ்தன் என்பதைக் கூட லக்ஷ்யம் செய்யாமல் தீக்ஷதர் மிதம்மீறி விட்டாரோ?” 

சிறிது நேரம் இரண்டு பேரும் பேசாம லிருந்தார்கள். பிறகு நாராயண சர்மா எழுந்து, “சரி, உன் வீட்டுக்குப் போவோம். யாரது, காவல்? பத்துபேர் ஸன்னத்தமாகட்டும். வெளியில் போகவேண்டும். சீக்கிரம்” என்றார். 

சொன்ன ஸ்வல்ப நேரத்துக் கெல்லாம் காவலாளிகள் பதினைந்து பேர்கள் ஆயுதபாணிகளாய் வந்து சேர்ந்தார்கள். நாராயண சர்மா, முன்னால் ஐந்து பேர், பின்னால் ஐந்து பேர், பார்சங்களில் ஐந்து பேராக தம்மைச் சூழ்ந்து வர, சந்திரவதனியுடன் வேகமாக தீக்ஷதர் குடியிருக்கும் வீட்டை நோக்கிப்போனார். சிறிது தூரம் போனதும் தமக் கெதிரில் தெருவின் கோடியில் ஒரே கூட்டமாகவும் கூச்சலாகவும் இருந்தது. நாட்டாண்மை வேகமாக நடந்து போனார். கூட்டம் அவரை நாடி வந்து கொண்டிருந்தது. ஸமீபத்தில் வந்ததும், கூட்டத்தின் மத்தியிலிருந்து தீக்ஷதர் கையில் ஒரு கட்டப்பாரையை எடுத்துக் கொண்டு ஆவேசத்துடன் ஒரே பாய்ச்சலாக ஓடி வந்து நாட்டாண்மையின் முன் நின்றார். நாராயணசர்மா தமது கையைத் தூக்கி “பொறு” என்கிற பாவனையாகக்கையைத் தாழ்த்தவே, தீக்ஷதர் பெட்டியில் அடங்கின பாம்புபோல் ஆட்டம் அடங்கி நின்றார். பிறகு பேசினார். 

“இந்த ஊர்க்கு அரசராக விளங்கும் தங்களுக்கு ஒரு விஜ் ஞாபனம். இந்தக் கட்டபாரையை எனது ஆயுதமாகக் கொண்டு இரண்டு ஜீவன்களை ஹதம் செய்தேன். அது அவர்களுக்கு ஏற்றது. அவர்கள் செய்த குற்றத்துக்கு அதுதான் சரியான தண்டனை.” 

நாட்டாண்மை வெகுநேரம் அவரிடம் பேச்சுக் கொடுத்த பிறகுதான் விஷயம் முழுவதும் வெளிவந்தது. அவர் அன்று மாலையில் வெளியேபோய் திரும்பி வந்தபோது வீட்டில் தமது மனைவியும் விஜயபுரி பந்துவும் ஏகாந்தத்தில் உல்லாஸமாகப் பேசி காமமயக்கத்திலிருக்கக் கண்டு மனம் பொறாமல் கோபங் கொண்டு, சித்தம் கலங்கி ஆவேசம் கொண்டு ஒரு கட்டப் பாரையால் இருவர் தலையையும் பிளந்து கொன்றுவிட்டார். பிரும்மஹத்தி சூழவே பைத்யம் கொண்டு நாட்டாண்மையிடம் வந்து முறையிட்டுக் கொண்டார். இந்த ஸம்பாஷணையில் ஸ்ரீதரன் பேச்சு வரவேயில்லை. தீக்ஷதருக்கு அவனைப்பற்றி ஞாபகமேயில்லை. 

நாராயண சர்மா தமது காவலாளிகளில் பலசாலிகளான ஐந்து பேர்களை தீக்ஷதரைப் பிடித்துக் காவலில்வைக்க ஏற்பாடு செய்து விட்டு தீக்ஷதர் வீட்டுக்குப் போனார். 

அங்கே பார்க்க சகிக்காத காட்சியா யிருந்தது. தீக்ஷதர் மனைவி ஒருபுறம் மண்டைகிறந்து ரத்தம் ஆறாய்ப் பெருக தேக மெல்லாம் ரத்தம் பூசிப் பார்க்கவிகாரமாக இருந்தாள். விஜயபுரி அந்தணரோ கழுத்து முறிந்து, ரத்தங் கக்கி வேறு ஒரு மூலையில் விழுந்து கிடந்தார். தெரு ஜனங்கள் ஏற்கனவே அங்கு கூடி, வைத்யர்களைக் கொண்டு ஏதாவது சிகித்ஸை செய்ய முடியுமா என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

நாட்டாண்மை, வீட்டண்டை வந்ததும், பெண்மணியை வெளியில் நிறுத்தி உள்ளே போய்ப் பார்த்து, பிணங்களை அப்புறப்படுத்தவும் சுத்தம் செய்யவும் உத்தரவிட்டுவிட்டு, மறுபடி பெண்ணண்டை வந்து, 

“அம்மா, நான் எதுவும் செய்யு முன் ஜகதீசுவரியே செய்ய வேண்டியதைச் செய்து விட்டாள். ஆகையால் நான் ஒன்றும் நல்லதோ கெடுதலோ செய்யப்போகிறதில்லை. உன் தகப்பனாருக்கு என்ன செய்யவேண்டு மென்பதைப் பற்றி நாளைக்கு யோசித்துக் கொள்வோம். ஸ்ரீதரன் எங்கே? காட்டு பார்ப்போம். ” என்றார். 

சந்திரவதனிக்கு ஒன்றுந் தோன்றவில்லை. பிரமை பிடித்து விட்டது. நாராயண சர்மாவின் ஆதரவான பேச்சால் சற்றுத் தெளிந்து, அவருடன் வீட்டினுள் போய், திறவு கோல்களை எடுத்து ஸ்ரீதரன் இருந்த அறையைத் திறந்தாள். முன் பார்த்த படியே அவன் படுத்திருந்தான். நாராயண சர்மா சிறிது நேரம் அவனைத் தொட்டுப் புரட்டிப்பார்த்துப் பிறகு சில விநாடி எதோ மந்திரம் ஜபித்தார். 

உடனே அவன் தூங்கி விழித்தவன் போல் எழுந்து உட்கார்ந்தான். 


VII

இரவில் பன்னிரண்டு நாழிகைக்கு நாட்டாண்மை அரண்மனையில் ராஜமண்டபத்தில் தர்பார் நடந்தது. ஸுமார் ஐம்பது காவல்வீரர்கள் ஆயுதபாணிகளாய் நாட்டாண்மையைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். நடு மண்டபத்தில் ஒரு பெரிய ஆஸனத்தில் நாராயண சர்மா உட்கார்ந்திருந்தார். அவருக் கெதிரில் விசுவேசுவர தீக்ஷதர் இரண்டு காவலாளிகளால் பிடிக்கப்பட்டு நின்று கொண்டிருந்தார். இரு பாரிசங்களிலும் ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் வந்து நின்று கொண்டிருந்தார்கள். 

சற்று நேரம் எங்கும் நிசப்தமாயிருந்தது. பிறகு நாட்டாண்மை உட்கார்ந்தபடியே பேசலானார். 

“மகா ஜனங்களே, இதுவரையில் நமது கிராமத்தில் இப்படிப்பட்ட விஷயம் எதுவும் நடந்ததில்லை. முதலாவது நாட்டாண்மைக்கு அபசாரம் ஏற்பட்டது. நம்மிடம் காரியம் பார்க்கும் ஒரு பையனை இந்த விசுவேசுவர தீக்ஷதர் தம் வீட்டில் அடைத்துவைத்தார். வேறு யாராவதென்றாலும் போகிறது. நாட்டாண்மை கார்யஸ்தர்களுக்கே இவ்வித ஆபத்து வருமென்றால், அதைத் தடுக்க நாட்டாண்மைக்கு சக்திபில்லை யென்று வேதபுரி முதலான இடங்களுக்குப் பரவுமானால், இந்த கிராமத்துக்கும், நாட்டாண்மைக்கும் உள்ள கௌரவம் போய்விடும். நாளைக்கு ராஜாங்ககாரிய மென்று சொல்லிக்கொண்டு எவன் வேண்டுமானாலும் இங்கு வந்து அட்டஹாஸம் செய்யக்கூடும். ஆகையால்நாட்டாண்மையின் செல்வாக்குக்குறையவில்லை; இந்த ஊநில் அவரிட்டதுதான் தர்மம் என்பது யாவருக்கும் தெரிய வேண்டும். இரண்டாவது இந்த ஊரில் யாவரும் ஊரிலுள்ள வர்களிடம் ஆபிசாரம் பிரயோகிக்கக் கூடாதென்று கட்டுப் பாடு; நமது பிரபிதாமகர் நாளில் ஏற்பட்ட ஆஜ்ஞை. அது இப்போது தவறிவிட்டது. இந்த ஊரில் வெகுநளாக வஸித்து வருகிற ஒரு வாலிபனை மூன்று நாளாகக் கட்டிப்போட்டு வைத்தார் விசுவேசுவா தீக்ஷதர். அதிலும் நமது காரியஸ்தரை.

“மூன்றாவது அவர் அவன் விஷயமாகப் பொய் சொன்னார். நாம் ஸ்ரீதரனைத் தேடாமலிருக்க வேண்டி வேதபுரி போனதாகச்சொன்னார்.” 

“காளிதேவி நாட்டாண்மைபின் குலதெய்வம். காளியின் திரவ்யம் நாட்டாண்மைக்குப் பிறகுதான் மற்றவர்களுக்கு. அபபடியிருக்க அந்தப்புதையலை எடுக்க முயன்றதுபிசகு. மேலும் நரபலி கொடுத்த நமது அனுமதிவேண்டும். அதைக் கேட்க வில்லை. போதாக் குறைக்கு அரண்மனைக் காரியஸ்தர் ஒருவரை பலிகொடுக்க ஏற்பாடு செய்தார். ஆகவே விசுவேசுவர தீக்ஷதர் செய்த அபசாரங்கள் அதிகம். இதற்கு அவருக்கு தக்க தண்டனை செய்யவேண்டும். 

“ஆனால் அவர் பெண் சந்திரவதனிக்கு நாம் ஏற்கனவே அபயதானம் கொடுத்திருக்கிறோம், அவர் தகப்பனாரையாவது, ஸ்ரீதானையாவது கெடுக்கிறதில்லை யென்று. இந்த விஷயங்களையெல்லாம் அவள் நம்மிடம் சொல்லுமுன், சொன்னாலும் ஆபத்து, சொல்லாவிட்டாலும் ஒரு வகையில் ஆபத்து; இரண்டு விதத்திலும் கேடுவராமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டாள். ஆகையால் விசுவேசுவர தீக்ஷதருக்கு குற்றத்துக் கேற்ற தண்டனை ஒன்றும் ஏற்படுத்தப்போகிறதில்லை. தேவி இவ்விஷயத்தில் தக்க தண்டனை ஏற்படுத்திவிட்டாள். பிறரைக் கெடுக்கப் போகத் தன் மனைவி தன்னையே மோசம். செய்ய, அதனால் அவர் மனைவியும், அவளுடைய பந்துவும் பரலோகம் போனார்கள். இப்போது தீக்ஷதரும் பைத்தியம் பிடித்துப் போனதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள். ப்ரும்ம ஹத்திக்கு அதன் தோஷமே தக்க தண்டனையாயிற்று. ஆனால் அவர் வெளியில் திரிந்தால் ஊரிலுள்ளோருக்குக் கெடு தலாகை யால், அவர் காவலில் இருக்கவேண்டு மென்பது நமது ஆஜ்ஞை. அவருக்கு வேறு மனிதர்களால் ஏற்படக் கூடிய கெடுதல் எதுவும் ஸம்பவிக்கக் கூடாதென்பதும் நமது ஆஜ்ஞை 

“நமது ஊரில் விசுவேசுவர தீக்ஷதர் வீடு இனி இருக்கக் கூடாது, ஸூர்யன் அதைப் பார்க்கக் கூடாது. உதயத்துக்குள் அதை இடித்து தரையோடு தரையாகச் செய்து விடவேண்டும். வீட்டிலுள்ள ஸாமான்களும் மற்ற ஆபரணாதிகளும் அவர் பெண் சந்திரவதனியைச் சேர்ந்தவை. அவைகளை அவளிடம் சேர்க் கும் வரையில் அரண்மனையிலிருக்க வேண்டியது.” 

“சந்திரவதனியை நாம் காப்பாற்றுவதாக வாக்குக் கொடுத்த படியால், அவளை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்து அவளை ஸௌக்கியமாக இருக்கும்படி செய்யவேண்டியது நமது கடமையாகும். ஏற்கனவே விசுவேசுவர தீக்ஷதர் அவளை ஸ்ரீதரனுக்குக் கொடுப்பதாக ஏற்பாடு செய்தது பிரஸித்தமாகையால், அதை யனுஸரித்து சந்திரவதனியை ஸ்ரீதானுக்குக் கொடுக்கிறோம். அவர்களிருவரும் அரண்மனையில் இருக்கட்டும். அவர்களுடைய ஸௌகர்யங்களுக்கு குறைவு வராமலிருக்கட்டும். 

“நமது ஊரில் இப்படிபட்ட விஷயங்கள் ஏற்பட்டதற்கு தேவிக்கு அபிஷேகம் நடக்கட்டும். அன்று கல்யாணமும் நடந் தேறட்டும். இது நமது ஆஜ்ஞை.” 

பிறகு சபை கலைந்தது. அவரவர் தம் தம்வீடு போனார்கள். தீக்ஷதர் காவல் கூடம் போனார். சில வேலையாட்கள் வீட்டை இடிக்கப் போனார்கள். ஸொத்துக்களை ஜாக்கிரதையாக எடுத்து வைக்க அரண்மனை காரியஸ்தர்கள் ஐவர் ஒலையும் எழுத்தாணியுமாகப் போனார்கள். நாட்டாண்மையுடன் சந்திரவதனியும் ஸ்ரீதரனும் அரண்மனை போனார்கள். அங்கே போனதும் நாராயண சர்மா சந்திரவதனிக்கும் ஸ்ரீதரனுக்கும் ஆதரவாக சிறிது நேரம் பேசிவிட்டுப் படுக்கப்போனார். வேலையாட்கள் அவர்கள் இருவரையும் ஒரு பெரிய அறைக்கு அழைத்துப் போய் அங்கு தங்கியிருக்கச் செய்தார்கள். 

“உன்னாலல்லவா நான் தப்பினேன். இல்லாவிட்டால் அவஸ்தைப்பட வேண்டியதுதான்.” 

“அதைப்பற்றிப் பேசாதேயுங்கள். எனக்குப் பயமா யிருக்கிறது. ராத்திரி எப்படித் தூங்கப்போகிறேனோ தெரியவில்லை. அவர்கள் செத்துக்கிடந்ததைப் பார்த்தது முதல் ஸதா பயங்காரமாக இருக்கிறது. என் தகப்பனார் பைத்தியம் பிடித்து கட்டப்பாரையுடன் ஓடி வந்ததை நான் பார்த்தேன். அது இன்னம் என் முன்னிருப்பது போல் தோன்றுகிறது.” 

அவர்கள் இருவரும் ஒரு கட்டிலில் உட்கார்ந்திருந்தார்கள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, சந்திரவதனி “எனக்குத் தூக்கம் வருகிறது ” என்று சொல்லிக் கொண்டே அவன் முன் கட்டிலில் படுக்கப்போனாள். பிறகு “என்னவோ பயமாயிருக்கிறது ” என்று சொல்லி அவன் மடிபில் தலை வைத்துப் படுத்துக்கொண்டாள். அவனிடத்தில் அவ்வளவு நம்பிக்கை, அவ்வளவு பிரியம். ஸ்ரீதரனும் “நானிருக்கிறேன். நீ பயப்படாதே. விசாரமற்றுத் தூங்கு” என்று சொல்லி அவளைத் தட்டிக்கொடுத்துத் தேற்றினான். அவளும் பயமும் கவலையும் நீங்கினவளாக ஆனாள். இருவரும் தமக்கு இனி நேரப் போவதை நினைத்துக் கொண்டு படுத்துக்கொண்டார்கள்.

– சிறுகதைகள், முதற் பதிப்பு: 1922, வி.நாராயணன் & கம்பெனி, மதராஸ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *