போட்டத தின்னுட்டு செவனேன்னு கெடக்க மாட்டியாப்பா..கொண்டு போய் முதியோர் இல்லத்துல விட்டிருவேன். எரிந்து விழுந்தான் பாஸ்கர் தந்தையை.

விடுவடா..விடுவ. இது என் வீடாக்கும் என்றார் சுந்தரேசன்.
நெனச்சிட்டிருக்கியா? என் பேருக்கு செட்டில்மென்ட் குடுத்தது மறந்து போச்சா. அதுக்கப்பறம் மாடியும் கட்டியாச்சி. எப்போ உன் வீடுன்னு சொல்ல ஆரம்பிச்சியோ, இனிமேல் உனக்கு இங்க இடமில்ல. கெளம்பு முதல்ல… என்று கையோடு ஒரு காப்பகத்தில் கொண்டு விட்டுவிட்டான்.
சுந்தரேசனுக்கு வயது மூப்பு காரணமாக மகனிடம் போராட முடியவில்லை. எனினும் மனதுக்குள் ஒரு வைராக்கியம் தொற்றிக் கொண்டது.. தான் இருந்த இல்லத்துக்கு அடிக்கடி அதன் வக்கீல் வந்து போவார்..அவரிடம் பரிச்சயம் செய்து கொண்டார்..
பாஸ்கருக்கு ஒரு முறை businessஇல் பணமுடை ஏற்பட..குடி இருந்த வீட்டை வங்கியில் அடமானம் வைக்க தயாரானான். வங்கி நிர்வாகம் எல்லா தஸ்தாவேஜுகளையும் சரி பார்த்துவிட்டு நடப்பு வில்லங்க சான்றிதழ் வாங்கிவரும் படி கூற.. அங்கே தான் பேரிடி காத்திருந்தது. வில்லங்க சான்றிதழில் செட்டில்மென்ட் ரத்தாகி இருந்தது. அதற்கான copy of document வாங்கி பார்த்த பின்பு தான் தெரிந்தது தனது தந்தையை சரியாக பராமரிக்காததாலும் காப்பகத்தில் கொண்டு சேர்த்து விட்டதாலும் மன உளைச்சல் ஏற்பட்டதால் உனது செட்டில்மென்டை ரத்து செய்கிறேன் என்பது போன்ற வாசகங்களால் அதிர்ச்சி அடைந்தான்..
அய்யா.. உங்கள பார்க்க உங்க மகன் வந்திருக்காரு..
யாரையும் பார்க்க நான் தயாரில்லேன்னு சொல்லு..
ஏமாற்றத்துடன் திரும்பினான் பாஸ்கர். பெற்ற தந்தையின் வைராக்கியத்தின் மீது மேலும் கோபமுற்றவனாய்.. அவர் காதில் விழும்படி சத்தமாக இனிமேல் நீ செத்தாகூட உன் மூஞ்சில முழிக்கமாட்டேன்..என்று கூறி விட்டு கிளம்பினான்..
அதுவும் நடந்தது சில நாட்களிலேயே. காப்பகத்தில் சுந்தரேசன் இறந்து விட்டார் என்ற செய்தி யார் மூலமாகவோ கேள்விப்பட்டு, தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்களே.. விரைந்தான் காப்பகத்துக்கு.. ஆனால் அதன் மேலாளர் அவனை பார்க்கவிட வில்லை. ஏனெனில் சுந்தரேசனின் கடைசி ஆசை அவரது மகனை அனுமதிக்கக் கூடாது என்பதே. பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? தீப்பந்தம் ஏந்த பேரனிருந்தும் அது நடக்கவில்லை. வாய்கரிசி போட பிள்ளை இருந்தும் அதுவும் நடக்கவில்லை.
சில மாதங்கள் கழித்து மீண்டும் சுந்தரேசனின் ஒரே வாரிசு தான்தான் என்ற சான்றிதழுடன் வங்கியில் லோனுக்கு அனுமதி கேட்டான். செட்டில்மென்ட் கேன்சல் ஆகி இருந்தாலும் வாரிசு என்ற அடிப்படையில் இவருக்குத்தான் இனி உரிமை உள்ளது என்பதை உறுதி செய்த வங்கி நிர்வாகம் கடன் வசதிக்கான மனுவை பரிசீலிக்கும் தருணத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி பாஸ்கருக்கு..
காப்பகத்து வக்கீல் வங்கிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார். பாஸ்கர் அவருக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ளும் சொத்து இனிமேல் எங்கள் காப்பகத்துகே. இதை உறுதி செய்யும் வகையில் சுந்தரேசன் தனது சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த அந்த சொத்தை காப்பகத்தின் பேரில் எழுதிய உயிலை காண்பித்தார்..
சுந்தரேசனின் வைராக்கியம் வென்றது. வீட்டை விட்டு வெளியேற்றியவன் வெளியேறினான்.
இம்மாதிரி பிள்ளைகளுக்கு இது போன்ற ட்ரீட்மென்ட் அவசியம்தானே…