மாதவி…. அன்றைய தினசரியில் வந்திருந்த அந்த விளம்பரத்தையே வெறித்தாள்.
‘வாடகைக்கு மனைவி தேவை. மாதச் சம்பளம் ரூபாய் 20,000. இருப்பிடம், உணவு இலவசம். சாதி மதம் தேவை இல்லை. 30 வயதிற்குள் உட்பட்ட படித்த இளம் பெண்கள், மணவிலக்குப் பெற்றவர்கள், விதவைகள், அனாதைகள்…. விருப்பமுள்ளவர்கள் அணுக வேண்டிய முகவரி…890, கீழ தெற்கு வீதி, கரிக்கலான் தோப்பு, காரைக்கால்’.
மாதவி சிறிது நேர வெறிப்பிற்குப் பின் ஒரு முடிவிற்கு வந்தாள்.
தலைவாரி தன்னைத் திருத்திக்கொண்டு கிளம்பினாள்.
அழைப்பு மணி ஒலி கேட்டு கதவைத் திறந்த பரத்திற்கு ஆளைப் பார்த்ததும் சின்ன அதிர்ச்சி.! சமாளித்து….
“எ… என்ன வேணும்…?” கேட்டான்.
“இந்த விளம்பர விசயமா வந்திருக்கேன். !” மாதவி தான் தயாராய்க் கொண்டு வந்த பத்திரிக்கையை நீட்டினாள்.
பரத்திற்குப் புரிந்தது.
“வாங்க..” கதவைத் திறந்து உள்ளே அழைத்தான்.
சோபாவில் அமர்ந்தான்.
“உட்காருங்க…” எதிர் நாற்காலியைக் காட்டினான்.
அமர்ந்தாள்.
“படிப்புச் சான்றிதழ் !” பார்த்தான்.
நீட்டினாள்.
முதல் தாள் சுயகுறிப்பில்….
மாதவி, வயது 26. படிப்பு : பட்டம் . பி.ஏ…. அடுத்து அதற்கான சான்றிதழ்கள். மூடினான்.
கழுத்தைக் கவனித்தான்.
“தி… திருமணம்…?” இழுத்தான்.
“ஆகிடுச்சு..! ”
பரத் மார்பில் கொஞ்சமாய் உதை.
“ஆனா….. அவர் என்னோட இல்லே…” மெல்ல சொன்னாள்.
“பு..புரியல…?! …”
“விவாகரத்து ஆகிடுச்சு. ! ”
“கா… காரணம் சொல்ல முடியுமா…? ”
“மன்னிக்கனும்..! உங்களுக்குத் தேவை இல்லாதது ! ”
“எனக்குத் தேவை மேடம். பின்னால் உங்க கணவரால சிக்கல் வரக்கூடாது. ”
“வராது ! ”
“எப்படி இப்படி உறுதியாய்ச் சொல்றீங்க…? ”
“மணவிலக்குக் கொடுத்த எந்த ஆம்பளையும் மனைவியைத் திரும்பி பார்த்ததா சரித்திரம் இல்லே !”
“மணவிலக்குப் பெற்ற நீதிமன்றத் சான்றிதழ்…?” பார்த்தான்.
“சான்றிதழ்களோட இருக்கு. ”
தன் கையில் உள்ளதை எடுத்துப் பிரித்துப் பார்த்தான்.
இருந்தது. திருப்தி !!
“இந்த விளம்பரத்தின் முழு அர்த்தம் தெரியுமா…? ”
“தெரியல. சொல்லுங்க…? ”
“தாம்பத்தியம் தவிர.. எனக்கு மனைவிக்குரிய அனைத்துப் பணிவிடைகளையும் செய்யனும்…”
அமைதியாக இருந்தாள்.
“புரியலையா…?”
“புரியுது..!”
“அப்போ சம்மதமா..?”
“சம்மதம் !”
“இன்னைக்கே வேலைக்குச் சேரத் தயாரா..?”
“தயார் !”
“ஒரு சின்ன சந்தேகம்..!”
“என்ன..?”
“மணவிலக்குப் பெற்ற கணவனிடமே வாடகை மனைவியாய் வரக்காரணம்..?”
“சட்டம் வேற, மனசு வேற. நீங்க இருதய நோயாளி. என்னால தாம்பத்தியம் கொடுக்க முடியலைன்னு நீங்க எனக்கு விலக்குக் கொடுத்தாலும் தம்பதிகள் வாழ்க்கைக்குத் தாம்பத்தியம் மட்டும் முக்கியமில்லே என்பது என் எண்ணம். !”
“மாதவி…!!”
“பொறுங்க. உடலும் உடலும் சேர்றது மட்டும் வாழ்க்கை இல்லே. உயிரும் உயிரும் சேர்ந்தது. மனசும் மனசும் சேர்ந்தது. பரத் ! விருப்போ. வெறுப்போ…மணவிலக்குக் கொடுத்த எந்த ஆம்பளைகளும் மனைவிகளைத் திரும்பிப் பார்க்கிறதில்லே.காரணம்..? ஆம்பளைங்க மனசு கல். பொம்பளைங்க மனசு அப்படி இல்லே. நான் இங்கே வேலைக்கு வந்த காரணம்… இதய நோயாளியாய் இருக்கிற உங்களைப் புதுசா வர்றவள் புரிஞ்சி நடக்க முடியாது. தேவைகள் அறிந்து செய்ய முடியாது. பணத்துக்காக வர்றவள் சரியாய் பணிவிடை செய்ய முடியாது. !” நிறுத்தினான்.
சட்டென்று எழுந்த பரத்…
“மன்னிச்சிக்கோ மாதவி. உன் மனசு புரியாம உனக்கு நல்லது செய்வதாய் நினைச்சி உனக்கு மணவிலக்குக் கொடுத்துட்டேன். ! நீதான் கடைசிவரை என் தாய், மனைவி !” தழு தழுத்து அணைத்தான்.
மாதவி மனதில் பூ மழை பொழிந்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது.