கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 2,340 
 
 

(சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-9

மழை ஆவேசம் வந்தாற் போல் கொட்டித் தீர்க்கிறது. நவராத்திரிக் கோலாகலங்களிடையே, காந்தி நூற்றாண்டு விழாக்களும், அரசியல் சண்டைக் கூட்டங்களுங்கூட அந்த மழையில் சிக்கித் தவிக்கின்றன. நீருவின் கல்யாண முகூர்த்தம் அக்டோபருக்குத் தாவி உறுதிப் படுகிறது. வீட்டில் அத்தைகளும், மாமன் மாமிகளும் வந்து போகும் கூட்டம். யமுனா ஒன்றிலும் பட்டுக் கொள்ளாமல் நாட்களைக் கடத்துகிறாள்.

“பொறுமை… உனக்குப் பொறுமை வேண்டும் மகளே!” என்று மட்டும் எழுதிவிட்டு வேடிக்கை பார்க்கும் அம்மாவனிடம் குழந்தையைப் போல் கோபம் கொள்கிறாள்.

“யமு? என் ஃபிரன்ட்ஸெல்லாம் உன்னோடு காந்தி ரயிலைப் பார்க்க வரணும்னு ஆசைப்படறாளே. நீ எங்களுக்கெல்லாம் மனுகாந்தியை இன்ட்ரட்யூஸ் பண்றியா?”

யமுனா வழக்கம் போல் சிரிக்கவில்லை.

“அங்கே உங்களுக்கு என்ன இருக்கிறது?”

“அந்தப் பழைய மூக்குக் கண்ணாடி, கடியாரம், பாதக் குறடுகள் இதெல்லாவற்றையும் பார்ப்பதற்கு இந்த மழையில் க்யூ வேறு நிற்க வேண்டும்; வேற வேலையில்லை!”

“பின் இந்த ரயிலுக்குப் பள்ளிக்கூடங்களிலிருந்து வாண்டுகளெல்லாம் கூடப் போறாங்களே?” என்று வியந்து கேட்கிறாள் சின்னம்மா.

“பிழைப்பில்லாமல் போகிறார்கள். நீ என்னமோ ஹங்கேரியன் லேஸ் வேணுன்னியே? அதற்காகக் கடைகளெல்லாம் போய்த் தேடினாலும் பலன் உண்டு. அந்த வற்றல் காய்ச்சி அம்மாவைக் கண்டு உனக்கு என்ன ஆக வேணும்? நீ தண்டத்துக்குக் கதர்ப் புடவையை வாங்க வேண்டி இருக்கும். ஸ்கிரீனுக்குக் கூட ஆகாது” என்று எரிச்சலுடன் மறுமொழி கூறுகிறாள் யமுனா.

“சபாஷ் யமு; இப்படிக் கையைக் கொடு. உனக்கு என் கல்யாணத்துக்கு ஸ்பெஷலா இரண்டு பட்டுப் புடவை. புது டிசைனில்…” என்று ஆரவாரிக்கிறாள் நீரு.

“மிக்க நன்றி. ஆறு சமுத்திரத்தில் விழுந்தாலென்ன, சமுத்திரம் ஊரில் புகுந்து ஆற்றை விழுங்கினாலென்ன, நீயே என்னை மாற்றி விடு. வம்பே இல்லை!”

“உன்னை மாற்ற முடியாதுன்னு நினைக்கிறியா?”

“நான் அப்படிச் சொன்னேனா?”

நீரு கண்களில் ஒளி தெறிக்கச் சிரிக்கிறாள். “இப்படி வைராக்கியமாக இருப்பவர்கள் தான் ‘காதல்’ன்னு ஒண்ணில் இடறி விழுந்து விடுவார்கள். பிறகு பார்க்கணுமே? சற்று முன் சொன்னியே? அதப் போல இந்த ஆறு எந்த சமுத்திரத்தில் போய் விழுதோ?”

பிறகு உடனே தொடர்ந்து “யார் கண்டது? நாளைக்கே நீ ஒரு மந்திரியின் ‘மனைவி’யாராக ஆகலாம். உனக்கு அந்த அளவுக்கு ‘பிராஸ்பெக்டஸ்’ இருக்கிறது” என்று கிண்டுகிறாள்.

“போகிறது, நீயே ‘மந்திரி’யாராக ஆவாய்னு சொல்லாம விட்டியே?”

“அப்படிச் சொன்னால் நான் மாட்டேன்னு முறைப்பே? இப்படிச் சொன்னதால் ஒப்புக் கொள்கிறாய். ஏ…ய்! யாரடி அந்த ஆள்?”

இம்மாதிரி நாள் முழுதும் பேசிக் களிக்க நீரு தயார் தான். ஆனால், பெரியப்பாவின் குரல் வீச்சாக ஒலிக்கிறது.

“யமுனா! யமுனா!…”

யாரேனும் கடிதம் எழுதியிருக்கிறார்களோ?

பரபரப்புக்குக் காரணம் ஒரு அஞ்சலட்டைதான்.

“இந்தா பாரு, இது… யாரிது?”

“எது?”

“இதப் பாரு!”

புருவங்கள் நெருங்கிக் கடுமையை வெளியிடுகின்றன.

“சுடர்ப் பொறிகள்” என்ற தலைப்பு.

முற்போக்குக் குழுவினர் என்று ஒரு முகவரி, மக்கள் முற்போக்கு இலக்கியப் பொறிகள் சிதறுமிடமாம்.

‘அன்புள்ள மிஸ் யமுனா,

எங்கள் வட்டத்தில் தாங்கள் ஒரு நாள் வந்து சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற வேண்டுமென்று நாங்கள் பெரிதும் விரும்புகிறோம். தாங்கள் ஒப்புதல் தெரிவித்தால் நேரில் வந்து காண்கிறோம்.

அமைப்பாளர்,
ரமேஷ்’

“யாரிது?”

“எனக்குத் தெரியவில்லையே பெரியப்பா?”

“உனக்குத்தான் நேரடியா எழுதியிருக்கிறார்கள். இந்த சுடர்ப்பொறி, தீப்பந்தமெல்லாம் கத்தி கபடாக்காரங்க கூட்டம். உன்னைத் தெரிஞ்சு தைரியமா எழுதியிருக்கிறானே? இந்த ரமேஷை உனக்குத் தெரியுமா? கத்தி கபடாக் கட்சிக்காரனுக சகவாசம் உண்டா உங்கம்மாவுக்கு?”

பெரியப்பா ஏன் அம்மாவை இழுக்க வேண்டும் இதில்? கண்ணுக்குத் தெரியாக் காற்றுக்கு நடுநடுங்கும் ஒட்டடைத் தூசு போல் அவளுள் ஓர் நடுக்கமும் உண்டாகிறது.

“இது யாராக இருந்தாலும், என்னைக் கேக்காம இங்கே ஒரு பயலையும் விடவேண்டாம். இந்த மாதிரிக் கூட்டத்துக்கெல்லாம் நீ போகக்கூடாது, என்ன?”

“எனக்கு யாரென்றே தெரியவில்லையே, பெரியப்பா?”

“அதெல்லாம் தெரியாது. கடுதாசியைக் கிழித்தெறி. நீ இதற்கெல்லாம் பதில் கூட எழுதக் கூடாது!”

இது அலர்ஜியா? இந்தக் கார்டில் கட்சிச் சின்ன வாடை கூட இல்லையே? ஆனால் இம்மாதிரியான இலக்கியம், சமுதாயம் என்ற போர்வைகளைப் போர்த்துக் கொண்டு தான் அந்த அறிவியல்வாதிகள் கட்சி வலையை விரிக்கிறார்கள் என்பதை அவள் அறிந்திருக்கிறாள்.

மேல் – கீழ் என்ற பாகுபாடுகள் இருந்தே தீர வேண்டும் என்ற உடும்புப் பிடிக்குள் தங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் தலைமுறைக்கு ஆத்திரம் வருகிறது.

தனிமையில் அந்தக் கசங்கிய அட்டையைப் பிரித்துப் பார்க்கிறாள். ஒவ்வோர் எழுத்திலும் கதிர் ஒளிந்திருப்பதைப் போல் பிரமை உண்டாகிறது. எதிரான கொள்கைக்காரர்களென்றால் அழைப்பை கிழித்துப் போட்டுவிட்டு ஒளிந்து கொள்வதா நெறியுள்ள செயல்? அது தானன்றோ அவளுடைய களம்?

இதற்கு என்ன செய்வதென்று இரவு பகலாய்ச் சிந்தனை செய்கிறாள்.

பெய்யாத மழை கொட்டித் தீர்த்து, ஏரி குளங்களை நிரப்பிவிட்டு, குடிசைகளை மிதக்கவிட்டு, இன்னமும் தூற்றலும் முணுமுணுப்பாக இருக்கிறது. மாலை ஐந்து மணியளவில் பெரியப்பா, குச்சியைச் சுழற்றிக் கொண்டு பேட்டை நிலவரம் அறியப் போகிறார். நீருவும் ரவியும் புதிய சினிமாவுக்குப் போயிருக்கின்றனர். சின்னம்மா எங்கோ மடத்தில் கந்தபுராணம் கேட்கச் செல்கிறாள்.

“யமு? நீ எங்கும் போகலியா?” என்று ஒவ்வொருவரும் கேட்கும்போதெல்லாம் அவள் உடம்பு சரியில்லாதது போல் பாவனை செய்து கொள்கிறாள்.

வீட்டில் ஒருவரும் இல்லை என்று அறிந்த பின் தொலைபேசியை எடுத்து, அந்த வட்டத்துக் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தைக் கூப்பிடுகிறாள். “ஹலோ… இந்துநாத் இருக்கிறாரா?”

“ஸ்பீக்கிங்…”

“யமுனா பேசறேன். உங்களை என்ன அன்றைக்குப் பிறகு காணவே இல்லை?”

“நான் என்ன செய்ய வேண்டும்? நீங்க தான் அரசியல்னாலே அலர்ஜின்னு தீத்துட்டீங்களே?”

“இல்லை, எனக்குச் சில விஷயங்கள் கேட்க வேண்டும், பேச வேண்டும். நீங்க வந்தால் கேட்கலாம் என்று நினைக்கிறேன்.”

“என்ன விஷயம்? ஃபோனில் சொல்ல முடியாத விஷயமா யமுனா?”

அவளுக்கு முகம் சிவந்து போகிறது.

“இல்லே. சுடர்ப் பொறின்னு ஒரு அமைப்பில் பேச எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. பெரியப்பாவுக்கு அது கத்தி கபடாக் கட்சியைச் சார்ந்ததுன்னு ஒரே கோபம். கடிதாசியையே கிழிச்சிப் போடச் சொல்றார். அப்படியெல்லாம் அதில் ஒன்றுமில்லை. உங்களிடம் கேட்கலாம்னு…”

“டோன்ட் வொர்ரி. கட்டாயம் நீங்க போய்ப் பேச நான் ஏற்பாடு செய்கிறேன். இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தை விடுவது முட்டாள் தனம்.”

“நீங்கள் புரிந்து கொண்டது போல அவர் புரிந்து கொள்ளலியே?…”

“கவலை வேண்டாம். நான் நாளையே போய் ஏற்பாடு செய்யறேன்.”

“அப்படியென்றால்?”

“அந்த இடத்தில் மிஸ் யமுனா ஏற்பாடு செய்து, நாள் கொடுத்துவிட்டு வருவேன்னு அர்த்தம்.”

“ரமேஷ்னு பேர் போட்டிருக்கு…” என்று முகவரியைப் படிக்கிறாள்.

“அப்ப சரியோ, குட்லக்? நாளைக்கு வரேன்” என்று விடை பெறுகிறான்.

அவன் மறுநாள் சொன்னபடி வரவில்லை. யமுனா புதிய குரல் கேட்கும்போதெல்லாம் அவன் வருகிறான் என்று பார்த்து ஏமாந்து போகிறாள். வழக்கம் போல் நாள்தாளைப் பார்த்து, ‘பாங்கி தேசியமயம், ரபாட், கொட்டித் தீர்க்கும் மழை, பிவாண்டி’ என்று பெரியப்பாவின் மனசுக்கேற்ப அரட்டையடிக்க அவர் வயசுக்கொத்தவர்கள் யாரேனுந்தான் வந்து போகிறார்கள்.

நான்கு நாட்களுக்குப் பின் ஒரு நாள் மாலையில் அவன் தலையைக் காட்டுகிறான். நீரு ரவி இல்லை; சின்னம்மா சமையற்காரியுடன் பின்புறம் ஏதோ வேலையில் மூழ்கிக் கிடக்கிறாள். பெரியப்பா கூட்டுறவுச் சங்க போர்டுக் கூட்டத்துக்குச் சென்றிருக்கிறார். பரபரப்பை அடக்கிக் கொண்டு அவள் அவனை வரவேற்கிறாள்.

“பெரியப்பா இல்லையா?” என்று அவன் விஷமமாகக் கண்ணைச் சிமிட்டுகிறான். அது எப்படியோ இருக்கிறது.

“இல்லை… உட்காருங்கள்.”

“நாளை ஞாயிறு மாலை ஐந்தரைக்கு, ‘சுதா’ நுங்கம்பாக்கத்தில் – முற்போக்கு இளைஞர் மன்றத்தில் யமுனா காந்தீய இலட்சியங்கள் – உரை. அரேஞ்ச்ட்.”

அவளுடைய விழிகள் அகலுகின்றன. “அப்ப எப்படிப் போவது?… பெரியப்பா இப்போது வருவார். நீங்களே பக்குவமாகச் சொல்லிவிடுங்கள்…”

அவன் சிரிக்கிறான்…

“ரொம்பப் பயப்படுகிறாயோ?”

சட்டென்று அவன் ஒருமையான வசனத்துக்கு இறங்கி விட்டதை அவள் கவனிக்கவில்லை.

“பயமில்லை, இது மரியாதை. அவரை எதிர்க்காமல் அவருடைய கருத்து சரியில்லை என்று அறிவுறுத்த வேண்டும்…”

“ஏதேனும் சொல்லி சமாளியேன்?”

“அது சரி உண்மையிலேயே அவர் அபிப்பிராயப்படுவதைப் போல் அது கட்சியைச் சார்ந்த அமைப்பா?”

“நீ… இலேசில்லே, தெரிஞ்சுதானே நீ பூச்சிகாட்டறே. ஒண்ணு வைச்சுக்கோ. கிழம் பழம் அங்கே கிடையாது. பெரிய மனுஷ வீட்டுத் தலைமுறைகளெல்லாம் இருக்கு. அந்த ரமேஷ் இந்துஸ்தான் கம்பெனிக்காரர் வகையறா. அங்கேதான் டிரேட் யூனியன் லீடரா உற்பத்தியாயிருக்கான்! சுதீர்குமார்னு கேள்விப்பட்டிருப்பியே; ‘டெரரிஸ்ட்’ சபோர்ட்டர்னான்; ஒரு சோடாபாட்டில் கண்ணாடி. நோஞ்சான் கருத்துக்களை மோத விடறது இந்த அமைப்பின் இலட்சியம்னான். அவா ரொம்ப பிஸி எனக்கே பார்க்கிறது கஷ்டம். எப்படியோ ஃபிக்ஸ் பண்ணிட்டேன். போஸ்டர் நிச்சயம் போடணும்னேன். அப்போ, ஞாயிற்றுக்கிழமை அஞ்சுமணிக்கு ரெடியா இரு. சரிதானே?”

“பெரியப்பாவிடம்…”

“அடாடா… என்ன நீ பூச்சி காட்டறே? அவரிடம் நான் சொல்லிக்கிறேன். வந்து கூட்டிப் போறேன்.”

“ச…ரி…”

எங்கேயோ அறிமுகமில்லாத கானகப் பாதையில் அடிவைப்பதைப் போலிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று நாள்தாளில் இன்றைய நிகழ்ச்சிகளின் வரிசைப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.

நல்ல வேளையாக அதில் அறிவிப்பு வரவில்லை. சுவரொட்டிகளை எங்கே ஒட்டினார்களோ, பெரியப்பா கண்களில் பட்டிருக்க நியாயமில்லை என்று தெம்பு கொள்கிறாள். ஆனால் சொன்னால் சொன்னபடி இந்துநாத் அம்பாஸடர் வண்டியில் வந்து இறங்கிய போது வேர்த்து கொட்டுகிறது. பெரியப்பா வறுத்த முந்திரிப் பருப்போடு மாடு கறந்த பின் புதிய பாலில் கலந்த காப்பியுடன் ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கிறார்.

“நமஸ்காரம் மாமா?”

“அடேடே… கார் வரதே யாரோன்னு பார்த்தேனே. வா, கண்ணிலேயே காணோம்?”

“ஒண்ணுமில்லே தலைவர்கள் பண்ணும் மானக் கேடு – தலை நீட்ட முடியலே நமக்கு. நம்ம வட்டத்தின் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் போட்டுக் காந்தி நூற்றாண்டை நடத்தணும்னு பார்க்கறேன். சரியாக போகிறது…”

“யாருக்குப் பிறந்த நாள்?”

“யாருக்குப் பிறந்த நாள்? காந்திக்கு. அதோட, இந்த வட்டத்துக்கே பெரியவராக இருக்கேள் – அதோ காந்தி பரம்பரை வழி. உங்களுக்குத்தான் கொண்டாடக் கூடாதா? உங்களைப் போல் பெரியவாள்ளாம் ஒதுங்கி மறக்கும்படி பண்ணினதே தப்பு. எப்படியும் இந்தப் பிளவு எப்படிப் போறதுன்னு பார்த்துத்தான் யோசிக்க வேண்டியிருக்கு; இப்பக் கூட ஒரு மீட்டிங்குக்குத்தான் போறேன். யமுனாஜி, நமஸ்காரம்!” மாடிப்படியின் கீழ் தயங்கி நிற்கும் அவளுக்கு ஒரு பெரிய கும்பிடாகப் போடுகிறான்.

“எங்கே கிளம்பறாப்போல, நான் சகுனத் தடையா வந்திருக்கேனா? சேவா நிலையம் வரைக்குமா? கிளம்புங்க. உங்களை ‘டிராப்’ பண்ணிடறேன்.”

அவள் புன்னகை பூக்கிறாள், “அதெப்படி நிச்சயமாகக் கேட்கிறீர்கள்?”

“பின்ன நீங்க எங்க போறிங்கன்னு புரிஞ்சுக்க முடியாதா?”

கேட்டுக் கோண்டே அருகில் நகர்ந்தபடி கண்களால் ஒரு அதட்டல், ‘அசட்டுப்பிசட்டென்று பேசாமல் வண்டியில் ஏறிக்கொள்’ என்று பொருள்பட, அவள் பின்புறம் ஏற கதவு திறக்கிறான். அந்தப் பெரிய வண்டியில் முன்னே ஒரு ஓட்டி அமர்ந்திருக்கிறான். இந்துநாத் அவன் அருகில் தான் அமருகிறான்.

வண்டி எல்லை கடக்கும் வரையிலும் அவன் பேசவில்லை.

யமுனா குழப்பத்தை மறைத்துக் கொள்ள வெளியே பார்வையை ஓடவிடுகிறாள்.

சுவரில் புதியவைகளாகப் பளீரென்ற கறுப்பு சிவப்பு வண்ணக் கொட்டை எழுத்துத் தாள்கள்.

“அறிஞர் அண்ணாவின் அறுபதாவது பிறந்தநாள் விழா! முத்தமிழ்ச் செல்வி, இசைக்குயில், கலையழகி, அருணா –

அண்ணா கதைப் பாட்டு.

அண்ணா வழி நடக்கும் இளவல்கள் செய்யும் சாதனைகள்.

அனைவரும் திரண்டு வருக! செல்வி அருணா!

அண்ணா புகழ்ந்து ஆசி கூறிய செல்வி அருணா!”

எல்லாத் தாள்களிலும் அருணா உதயசூரியன் டாலர் சங்கிலி மார்புக்குழியில் பளிச்சிட, கறுப்புப் பின்னணி சிவப்பு ரோஜாப் புடவையில் சிரிக்கிறாள்.

“இந்த அண்ணா திடல் எங்கே இருக்கிறது?”

“நம்ம வீட்டுக்குப் பின் தெருவோடு போனால் குடிசையெல்லாம் வருதே. அங்கே குப்பை கொட்டிக் கொட்டி முட்டு முட்டாத் தெரியறதே? அதுக்குப் பின்னாலெல்லாம் தான் அண்ணா திடல். வில்லிப் பயல்களுக்குக் குடிசைக் கட்டிக்க புறம்போக்கைக் கொடுத்து செட்டில் பண்ணதே நாமதான். இப்ப இவங்க கொடியைப் போட்டு எங்க சாதனைங்கறான்…”

யமுனா சிரித்துக் கொள்கிறாள்.

எல்லா இடங்களிலும் மண்ணின் சுவடறியாக் குழந்தைகளைத் தாம் இந்த அரசியல்வாதிகள் ஆசைகாட்டிக் கைக்குள் போட்டுக் கொள்கிறார்கள்?

அத்தியாயம்-10

சுடர்ப் பொறிகள்…

மிஸ் யமுனா எம்.ஏ. என்று எழுதப்பட்ட கரும்பலகை வாயிலில் தெரிகிறது.

வாயிலில் கார்களாக நிற்பதிலிருந்து, உயர்படிக்காரர்கள் பலர் கூட்டத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று புரிகிறது.

யமுனாவும் இந்துநாத்தும் வண்டியிலிருந்து இறங்குகையில் சுருண்ட கிராப்பும் இறங்கிய கிருதாவுமாக ஒரு இளைஞன் முன்வந்து கைகூப்புகிறான். வயது இருபதுக்குள் தானிருக்கும். அழகிய பூ வேலை செய்த அரைக்கை ஜிப்பாவும் பைஜாமாவும் அணிந்திருக்கிறான்.

“ரமேஷ்…”

“நீங்கள் ஒப்புக் கொண்டதில் ரொமப் சந்தோஷம்.”

“பேராசிரியர் சூரிய நாராயணா…”

தலை நரைத்துப் பல் விழுந்த கிழவரை அவளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அவர் தாம் தலைமை தாங்கப் போகிறார்.

“அந்த நாளில் உங்கப்பா, என்னுடைய – காலேஜ் மேட்…” என்று அவர் முன் வரிசை ஒற்றைப் பல் தெரியச் சிரிக்கிறார்.

யமுனாவுக்கு எப்போதும் ஏற்படாத நடுக்கமும் குழப்பமும் தோன்றுகின்றன. இம்மாதிரியான கூட்டம் ஒன்றில் அவள் பேசியதில்லை என்று, நினைவு குறுக்கிடுகிறது. எதிரே வரிசை வரிசையாக அமர்ந்திருக்கும் முகங்களில் ஒன்று கூடப் பெண்ணுக்குரியதில்லை! இன்றைய இளம் பெண்கள், அரசியலிலோ, வேறு வகையான சமுதாய வாழ்விலோ எந்த அளவுக்கு ஆர்வம் கொள்கின்றனர் என்பதற்கு ஓர் அளவு கோலாக அந்தக் கூட்டம் இருப்பதாக நினைக்கிறாள். சிந்தனைகள் விஷய வட்டத்துள் வராமலே சுழல்கின்றன. குறுந்தாடி, நீண்ட கிருதாக்கள், அரும்பு மீசை, உள்ளத்தின் விகாரங்களை வெளியாக்கும் வகையில் ரோமக் கோலங்கள்… காந்தியடிகள் கூடச் சில படங்களில் மீசை வைத்துக் கொண்டிருக்கிறார். ‘சிலருக்கு இயற்கையாக மீசை சாந்த இயல்பைக் காட்டுவதில்லை. அம்மாவனின்…’ அவள் தன்னைக் குலுக்கிக் கொள்வது போல் நிமிர்ந்து உட்காருகிறாள். அந்த ரமேஷ்தான் அவளை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்.

“காந்தியின் வழியிலேயே எண்ணங்களை வளர்க்க, அதே பாதையில் முதிர்ந்திருக்கும் அவர் பேச்சைக் கேட்க இங்கே கூடியிருக்கும் கூட்டத்தை வரவேற்கிறேன். மாறுபட்ட கருத்துக்கள் மோதிச் சிதறிக் குழம்பிக் கலங்கி புதிய எண்ணங்கள் உருவாக வேண்டும் என்பது எங்கள் நோக்கம்…”

முகங்களைப் பார்த்துக் கொண்டே இருந்ந்தவர்களுக்குச் சட்டென்று எல்லாம் அசைவற்று நின்றாற் போல் இருக்கிறது. வரவேற்புரையின் வாசகங்கள் செவிகளில் எழுந்து எங்கோ பொருளின்றி வறண்டு போகின்றன. அங்கே சுதீர்… சுதீர் தான்… வாயிலில் யாருடனோ பேசிக் கொண்டு…

ஒரு கணம் சித்தத்தை உள் நிறுத்தி இறையருள் வேண்டுகிறாள். பேசும்போது ‘தான்’ என்ற உணர்வு குறுக்கிடும் போது, அடுத்து என்ன என்று பொருளே மறக்கக் குழம்பி விடுவாள். முன்பு கல்லூரியில் மேடையேறி வரவேற்புரை, நன்றி நவிலல் கூறிப் பழகிய நாட்களில் அவளுக்கு இத்தகைய அநுபவங்கள் நேர்ந்ததுண்டு. அந்தக் கூச்சங்களெல்லாம் திரும்பி வந்து விட்டாற் போலிருக்கின்றன.

‘ஆண்டவனே இன்று ஏன் இப்படியாகிறது?’ என்று மனசைத் துடைத்துக் கொண்டு எதிரே குழந்தைகள் அமர்ந்திருப்பது போல் நினைத்துக் கொள்கிறாள்.

“ஜனநாயகம் சிறக்க, தனி மனிதன் செம்மை நெறியில் ஒழுகுதல் வேண்டும். தேவைகளை அதிகரித்துக் கொள்ளும் ஒரு மாய சுபீட்சம் உண்மையில் வண்மை அல்ல. விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியினால் மனிதனின் விலங்கியல் தன்மையே பெருகுமானால், அவன் உண்மையில் ஒளியை நோக்கி விடுதலை பெற்றிருப்பவனல்ல. பகிர்ந்துண்ணும் மனமும் அடுத்தவனும் வாழ வேண்டும் என்ற எண்ணமும் பிறக்க அவை தடை செய்யும். இந்த உண்மையான சுதந்திரத்தையும் சமத்துவத்தையும், தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளாத அன்புநெறியில் வாழ்ந்தால் காணலாம் என்கிறார். அந்த நெறி அவர் புதிதாகக் கண்டதொன்றுமில்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாரத நாட்டில் அறிவோர் வகித்த நெறிதான்.” அவளுக்கு நேரான பாதையில் தங்கு தடையில்லாமல் செல்லச் சரளம் வந்து விட்டது. அடுக்கு மொழிகள் செய்யும் ஜாலங்கள் ஏதுமில்லை. குரலில் தேனின் இனிமையும் ஆலயமணியின் நாதமும் குலவுகின்றன. அது உள்ளத்திலிருந்து ஒலிப்பூக்களைக் கொண்டு வந்து கேட்பவர்களின் செவிகளை நிறைக்கின்றன.

முடிவில் கரகோஷம் நீண்டு ஒலிக்கிறது.

அவள் உட்கார்ந்த பிறகு கொல்லென்று அமைதி படிகிறது.

ரமேஷ் மேடையில் நிற்கிறான். “நண்பர்கள் கேள்விகள் கேட்கத் துடித்துக் கொண்டிருப்பதை அறிவேன். கேள்விகள் சுருக்கமாக இருக்க வேண்டும். கால்வரையறை என்ற ஒன்றை நினைவில் வைத்துக் கொண்டு கேட்பது நல்லது…”

இந்த ஒரு அம்சம் கூட்டத்தின் பிற்பகுதியில் தலை நீட்டும் என்பதை அவள் எதிர்பார்க்கவே இல்லையே? நினைக்க நேரமில்லை.

கேள்விகள் வந்து விடுகின்றன.

முதலில் ஒரு கிருதா மீசைக்காரன் எழுந்திருக்கிறான்.

“காந்தியம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத இலட்சியம். சந்திரனில் மனிதன் கால் வைக்கும் நாளில் கைராட்டையைக் கட்டிக் கொண்டு அழுவது மடத்தனம். விண்வெளியில் சீறிப் பாயும் நிலவுக் கப்பலை விட, கைராட்டை எந்த வகையில் மேன்மையாகிறது என்பதை விளக்க வேண்டும்?”

ரமேஷ் அவளைப் புன்முறுவலுடன் பார்க்கிறான்.

அவளோ அமைதியுடன் “நான் கேள்விகளை குறித்துக் கொள்கிறேன். எல்லாக் கேள்விகளையும் கேட்டு விடட்டும்” என்று மறுமொழி கூறுகிறாள்.

“அஹிம்சை என்பதன் தத்துவம் என்ன? பிற நாடுகள் சர்வ நாச சக்தி படைத்த ஆயுதங்களைத் தயாரிக்கும் போது, இன்னொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டுகிறேன் என்று சொல்வது நகைபுக்கிடமில்லையா? இந்த அஹிம்சைத்தனத்தைப் பிறகு வாழ்விக்க, சகோதரியின் இனத்தில் ஒரு பூண்டு கூட மிஞ்சாதே? இதற்கு என்ன சொல்கிறீர்கள்?”

“மனிதன் தேவைகளைக் குறைக்காமற் போனால் குலம் அழிந்து போகும் என்று அச்சுறுத்தும் சகோதரி மனிதன் வீடு வாசலுமின்றி, விலங்கோடு போர் புரிந்து பச்சை ஊனைப் புசித்த நாட்களில் தேவைகள் மிகக் குறைவாக இருந்ததால், அந்தக் காட்டுமிராண்டியே இன்றைய மனிதனை விட மேலானவன் என்று கருதுகிறாரா? எப்படி? விளக்கம் தேவை.”

ஒரு குறும்புக்காரன் குடும்பக் கட்டுப்பாட்டை ஆராய்கிறான்.

“காந்தியம் செயற்கைச் சாதனங்கள் உபயோகிக்காமல் கருத்தடை என்று சொல்கிறது. வருடம் 365 நாட்களும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தாலும், ஒரே ஒரு நாள் பொல்லாத எழுச்சி ஏமாற்றிவிடக் கூடுமே! இத்தனை கோடியும் மகாத்மாக்களாகி விடலாம் என்று அம்மையார் கருதுகிறாரோ? அது எப்படி முடியும்?”

“இலட்சியங்கள் செயலளவுக்கு எளிதாக இருந்தாலே நிலைக்க முடியும். காந்திய இலட்சியங்கள் அவர் காலத்திலேயே படுதோல்வி கண்டன. இன்று அடிபட்டு வீழ்ந்த அவற்றைக் குற்றுயிரும் குலையுயிருமாகத் தட்டியெழுப்ப வேண்டிய அவசியம் என்ன?”

கேள்விகளைக் கேட்பவர்கள், மான்போல் நிற்கும் ஒருத்தியைத் தாக்க வந்திருக்கும் காட்டெருதுகளைப் போல் கேள்விகளைத் தொடுக்கின்றனர்.

இந்துநாத் பரபரப்புடன் ரமேஷைப் பார்த்து, “இதென்ன ஸார், இர்ரலவெண்ட் கேள்வியெல்லாம் கேட்க விடுகிறீர்கள்? இது இண்டலக்சுவல் மீட்டிங்கா, இல்லே உங்கள் சட்டசபைன்னு நினைச்சேளா?” என்று சீறுகிறான்.

“இது யாரையா பேச்சாளருக்கு வக்காலத்து வாங்கிட்டு வருபவன்?”

“கருத்து மோதல் என்றால் கத்தரிக்காய் என்று எண்ணமா?”

கேலி, கிண்டல், சிரிப்பு, ஏளனம், தீ வெடிகள்…

“அமைதி அமைதி!” என்று சூரியநாராயணர் மேசையைத் தட்டுகிறார்.

“நீங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்லப் போறேளோன்னோ?” என்று யமுனாவிடம் குனிந்து மெல்லிய குரலில் கேட்கிறார். யமுனா புன்முறுவலுடன் ஒலி பெருக்கியின் முன் வந்து நிற்கிறாள்.

“சகோதரர்களே, அமைதி வேண்டுகிறேன். மனிதன் விலங்குத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியின் படிகளேறி மனிதத் தன்மையின் படியில் வந்து நிற்கிறான். இந்தப் படியிலிருந்து மீண்டும் விலங்குத் தன்மைக்கு இழிந்து கொண்டிருப்பதையே இப்போது உலகெங்கும் நிகழும் பல நிகழ்ச்சிகளிலிருந்து தெளிவாகக் காண்கிறோம். விஞ்ஞான அறிவியல், மெய்ஞானத்தை நோக்காகக் கொள்ளாதவரை, மனிதனைக் கீழ்நோக்கி இழுக்கத் துணை செய்கிறது. இது தவிர்க்கப் பட வேண்டும். அந்த எல்லை, இருக்கும் சக்திகளைப் பகிர்ந்து கொண்டு, எல்லோரும் உணவு – உடை – உறையுள் என்ற அடிப்படைத் தேவைகளையேனும் அநுபவிக்கப் போதுமான இடத்தில் குறிக்கப்பட வேண்டும். நூறு பேர் வாழக்கூடிய விசாலமான மாளிகையில் நான்கு பேர் குடியிருக்கின்றனர். அதே மாளிகையின் பின்புறம் கழிவு நீரோடைக்கரைக் குடிசையில், நான்கு பேர் இருக்கப் போதுமான இடத்தில் பதினான்கு பேர் நெருக்குகின்றனர். அந்த மாளிகை வாசிகளான நால்வர், எட்டுப் பேர் வாழக்கூடிய இடத்தை எடுத்துக் கொள்ளட்டும். மீதியை இல்லாதவருக்குப் பங்கிட முன் வரட்டும். இம்மாதிரி விட்டுக் கொடுக்கத் தனிமனிதனின் தரம் உயர வேண்டும். அதற்கு அந்த அடிப்படைப் பண்புகள் – எளிமை, தியாகம் எல்லாம் தேவையாகின்றன. பேராசையைக் கொல்ல வேண்டுமானால் விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை வேண்டும். அவா அறுத்தலே அச்சமின்மைக்கு ஆதாரம். இவ்வகையில் தனி மனிதத் தொகுதிகள் சிறந்தால் சமுதாயத்தில் சொத்துக்கள் பொதுவுடமையாக மாற்றம் பெறும் போது சிக்கல் நேராது. பண்டைய நீலகிரிக் கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்தாரும் பொதுவாக நிலம் திருத்தி உண்டு மகிழ்ந்தனர். ஒரு வீட்டில் துயரம் நேர்ந்தால் அனைவரும் அதைப் பங்கிட்டுக் கொண்டு ஆறுதல் கொள்வார்கள். ஒரு வீட்டில் தட்டுப்பாடு வந்து, புதிய பயிரைத் தெய்வத்துக்குப் படைக்குமுன் கொய்ய நேர்ந்தால், அதைத் தவிர்க்க மற்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுக்குத் தானியம் அளிப்பார்கள். இன்று அந்தப் பண்புகள் அழிந்து போய் விட்டன. தேவைகளைப் பெருக்கிக் கொண்டு பேராசையில் மக்கள் திளைப்பது தான் இதற்குக் காரணம். கைராட்டையை விண்வெளிக் கலத்தை விட மேன்மையாக ஏன் கருதுகிறேனென்றால் எல்லோரும் விண்வெளியில் செல்லும் பேராசையில் சோர்ந்து விழுவதை விட எல்லோரும் மானம் காத்துக் கொள்ளத் தம் உடையைத் தாமே தயாரித்துக் கொள்வதனால் பல எளியோரின் பிரச்னைகளைத் தீர்க்கலாமே என்பதனால்தான். குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி நண்பர் கூறினார். அதைப் பற்றிப் பேசுவதற்கோ ஆராய்வதற்கோ இது உரிய இடம் அல்ல. இந்த விஷயம் பற்றிய ஆசிரம வெளியீட்டை வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம். அடுத்து, இலட்சியங்கள் ஒருநாளும் தோல்வி அடைவதில்லை. காந்தியடிகள் எந்த இலட்சியத்தையும் புதிதாகத் தோற்றுவிக்கவில்லை. அலட்சியமாக நழுவ விட்டதை எடுத்துக் கொடுத்தார். இந்தியச் சமுதாயம் இன்றும் நிலைத்து நிற்கக் காரணமானவையே அந்த இலட்சியங்கள் தாம். நாட்டில் வேறு புதிய புதிய சமயங்களும் கொள்கைகளும் மோத வந்துங்கூட, சத்தியம், அஹிம்சை அன்பு ஆகிய நெறிகளின் அடிப்படையில் உயர்ந்து நிற்கும் ஆன்மிக வாழ்வு என்ற தத்துவத்தில், நோக்கத்தில், எல்லாச் சமயங்களும் ஒன்றே என்று நிலை கண்டதனாலேயே இந்தச் சமுதாயம் இன்னும் புதுமை அழியாமல் நிலைத்து நிற்கிறது…”

ஒலி பெருக்கித் தண்டைப் பற்றிக் கொண்டு அவள் புன்னகை புரிகிறாள். நெற்றி வியர்க்கிறது. இந்துநாத் மலைத்துப் போனாற்போல் உட்கார்ந்திருக்கிறான்.

தொலைவில் ஒரு கறுவல் முகம் உயர்கிறது.

“காந்தி மேலை நாட்டுக் கல்வி முறையை எதிர்த்தார். தம் மக்களுக்கு அக்கல்வியைக் கற்பிக்கவில்லை. ஆனால் முழுசும் மேல் நாட்டுக் காற்றிலேயே வளர்ந்த ஒருவரைத் தமக்குப் பிறகு தன் மொழியைப் பேசுவார் என்று தேர்ந்தது எதனால்?”

“மன்னிக்க வேண்டும் நண்பரே! நான் உயரிய இலட்சியங்களைப் பற்றியே பேச வந்தேனே ஒழிய காந்தி என்ற தனி மனிதரைப் பற்றியே பேச வரவில்லை” என்று அவள் ஒதுங்கப் பார்க்கிறாள்.

“ஹோ, ஹோ” என்ற ஆரவாரங்களும் கேலிகளும் எழுகின்றன.

“தோல்வி… வெட்கம்… அவருடைய இலட்சியங்களில் அவருக்கே நம்பிக்கை இல்லை என்று ஒப்புக் கொள்ளுங்கள்!” என்ற ஆர்ப்பாட்டங்கள்.

“நான்சென்ஸ்! இதென்ன கசாப்புக் கடையா?” என்று இரட்டைக் குரலில் கத்துகிறான் இந்துநாத்.

சூரியநாராயணர் அவளைப் பரிதாபமாகப் பார்க்கிறார்.

‘வயசுப் பெண்ணாக லட்சணமாகக் கல்யாணம் கார்த்திகைன்னு குடும்பத்தில் இருந்து பேர் சொல்ல மாட்டாயோ! இப்படி இதுக நார்நாராகக் கிழிச்சிப் போட வந்து மாட்டிப்பியோ?’ என்று இரங்குகிறார்.

“காந்தியைத் தனிமனிதர்னு விட்டு வைக்கலியே? இந்த நாடு கண்ணை மூடிண்டு அவர் சொன்னதைச் செய்யணும்னு தானே இப்ப சொல்கிறீர்கள்?” என்று மீண்டும் ஓர் குரல் ஒலிக்கிறது.

“கல்வி என்பது மனசைப் பண்படுத்த வேண்டும். அந்த வகையில் இந்நாட்டில் ஏட்டுக் கல்வி முறை பயனளிக்கவில்லை என்று அவர் கண்டாரே ஒழிய, மேலை நாட்டுக் கல்வியை அவர் வெறுக்கவில்லை. செயல்திறனும், கூரிய மதியும், நாட்டு மக்களைக் கவரும் சொல்வன்மையும் கூடிய ஒருவரை அவர் தமக்குப் பின் வாரிசாக்கியதில் தவறில்லையே?”

“ஏன்? அந்த வகையில் பல தலைவர்கள் இருந்தார்களே? அவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?”

அவளைத் திக்குமுக்காடச் செய்து ரசிக்கவே இந்தக் கேள்விகள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

“இதை விரிப்பதோ விவரிப்பதோ இன்றைய கூட்டத்துக்குப் புறம்பான விஷயம்…”

“புறம்பாக எப்படி ஆகும்? அந்த இலட்சியங்களை வெற்றிகரமாகச் செயல் முறையாக்கியதாக நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் அந்தத் தலைவரே, தம் கட்சிக்காக இலட்சியத்தைப் பலி கொடுத்து விட்டுக் கட்சியை வலுவாக்க வேறொரு மனிதருக்கு வாக்குக் கொடுத்தார். காந்தி அந்தக் காலத்திலேயே விலைக்கு வாங்கப்பட்டார். அந்த விலை நாட்டின் தலைமைப் பொறுப்பு – அல்லது பதவி!”

யமுனாவுக்குச் செவி மடல்கள் குப்பென்று எரிகின்றன.

இந்த அவதூறுகளை வீசுபவன் சுதீர்தான்.

“அம்மணி, காந்தியம் எந்நாளும் நடைமுறைக்கு ஒத்து வரமுடியாத பிதற்றல் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்!” என்று கறுவல் முகம் எழும்பி உட்கார்ந்து கெக்கலி கொட்டுகிறது.

பஜனை மண்டபத்தில் கூச்சலும், குழப்பமும் உண்டாகும்போது ‘நமப் பார்வதி பதயே!’ என்று எழுப்புவார்களே, அப்படி சூரியநாராயணர் மேசையைத் தட்டி விட்டு எழுந்திருக்கிறார்.

“ஒரு பேச்சாளரை நாம் பேசக் கூப்பிட்டிருக்கிறோம். ஒரு விஷயம் பேசச் சொல்கிறோம்; பேசுகிறார். கேள்வி கேட்பதே நாகரிகக் குறை. அதிலும் இது… அவசியமில்லைன்னு நினைக்கிறேன்” என்று தொடங்கி நன்றி கூறி கூட்டத்தை முடிக்க வழி செய்கிறார். யமுனா கெட்ட கனவினிடையே விழித்த குழந்தையைப் போல் உட்கார்ந்திருக்கிறாள். நன்றி கூறும் சம்பிரதாயச் சொற்கள் செவிகளில் விழுமுன் கரைந்து போகின்றன.

“பிரமாதமாகப் பேசினே. இதுகள் அசத்துகள். கேள்வி கேட்கறதுக்குன்னே கூட்டத்துக்கு வரும்…” என்று விடை கொடுத்துவிட்டு சூரியநாராயணர் மாலையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு பெரிய காருக்குள் ஏறிச் செல்கிறார். வழியனுப்ப வருவது போல் நான்கு பேர் தொடர்ந்து வருகையில் சுதீர் அவளுக்காக வழியில் நிற்பான் என்று எதிர்பார்க்கிறாள். நெஞ்சு சோர்ந்து விழுகிறது. சிகரெட்டும் கையுமாக இந்துநாத்தான் கதவடியில் நிற்கிறான்.

இப்போது வண்டியின் பின்னால் அவளருகில்தான் உட்காருகிறான். ஆனால் அவள் சிந்தையில் அவன் அருகில் இருப்பதே உறைக்கவில்லை. பெரிய தோல்வி கண்ட ஏமாற்றத்தில் திரும்பத் திரும்ப எதை எதையோ எண்ணிச் சோருகிறாள்.

“கொன்னுட்டே போ, யமுனா!”

வண்டி தார்ப்பாதையில் செல்கிறது. தெருவெல்லாம் ஒளி மயங்கள் – நெரிசல்கள் – போக்குவரத்து ஊர்திகள்.

“கடைசியில் வளைச்சு வளைச்சுக் கேள்வி கேட்டானே, அவனைத் தெரியுமா, யார்னு?”

“ஹம்…?”

“அவன் தான் சுதீர்குமார். கீழ வெண்மணிக்கப்புறம் ஆளே தலைமறைவா இருந்தாப்பல. இன்னிக்கு வந்திருக்கிறான்…”

“ஓ…”

“ஆனாலும் நீ படுபிரமாதம்? பாலிடிக்ஸில் பிரமாதமா ஷைன் பண்ணுவே!”

“…”

“என்ன பேசலே? அன்னிக்கு நான் சொன்னதை எதிர் பாராம சரின்னு ஒப்புக் கொண்டுட்டே. அப்ப…”

வண்டி ஓர் ஒளிமயமான உலகில் முன் வந்து நிற்கிறது.

ஒரு… ஓட்டல்.

“வீட்டுக்குப் போலாமே? மணி எட்டரையாகிறதே?”

“எனக்குத் தெரியாதா? நீ இறங்கு சொல்றேன்.”

“எதற்கு? வீட்டுக்குப் போகணும் எனக்கு…”

“எனக்கே ஒரே பசி, உன்னால்… அடக்கிட்டிருந்தேன்.”

அவள் இறங்க வேண்டித்தானிருந்தது.

மேல்மாடி… எங்கோ நீளப் போகிறான்.

குடும்பம் என்று போட்டிருக்கிறது. ஆனாலும் குடும்பம் ஒன்றும் அங்கு இல்லை.

“எனக்கு ஒன்றும் வேண்டாம்.”

அவன் பொருட்படுத்தவில்லை. ஏதோ இனிப்பு கொண்டு வரச் சொல்கிறான் போலிருக்கிறது.

சர்வர் போன பின் அங்கே யாரையும் காணவில்லை.

மேசையில் முழங்கையை ஊன்றி முகத்தைத் தாங்கிக் கொண்டு அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். அவள் வெளி வாயிலைப் பார்க்கிறாள்.

தோளில் அவன் கை படிகிறது.

சுரீரென்ற உணர்வுடன் குலுங்கி எழுந்திருக்கிறாள்.

ஆனால் அவன் ஒன்றும் நடவாதது போல் சிரிக்கிறான்.

“சீ, விடுங்கள்!”

“ரொம்பக் கோவிச்சுக்கிறியே?”

கையை எடுத்துவிட்டான். ஆனால் அவளுடைய செருப்புக் கால்மேல் அவன் வெற்றுப் பாதம் படிகிறது.

அப்போது சிப்பந்தி இரண்டு இனிப்பையும் தம்ளரையும் வைத்துவிட்டுப் போகிறான்.

“என்ன, கத்தப் போறியா? நாளைக்குப் பேர் பேப்பரில் வரணும்னு ஆசையானால் கத்து…!”

அவளுக்கு வியர்த்துக் கொட்டுகிறது.

“காலை எடுக்கிறாயா, என்ன வேணும்; ஸ்கௌன்டரல்…” செருப்பைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு நிற்கிறாள்.

“ஏனிப்படி கோவிச்சுக்கிறே கண்ணம்மா? கல்யாணமாறதுக்கு முன்ன கொஞ்சம் உரிமை எடுத்துக்கக் கூடாதா…?

“கல்யாணமா? என்ன பேத்தல்?”

“ஆஹா… ஹா… உனக்கு இன்னும் பெரியப்பா சொல்லலையா கண்ணு? என்னம்மா வெட்கப்பட்டு நடிக்கிறே, போ!”

“நான்சென்ஸ். இந்த மாதிரி எண்ணங்களை அடியோடு ஒழிச்சிடுங்க.”

“பார், பார்; உன்னை வேறு எவன் கல்யாணம் பண்ணிண்டாலும் என்னை விட அருமை தெரிஞ்சு நல்லது செய்ய மாட்டான். நான் இன்னிக்குக் கூட்டத்தைச் சமாளிச்சுக் கொடுத்ததற்கே நீ இந்த பூச்சாண்டித் தனத்தை மூட்டை கட்டி வைக்கணும். நீ யாருக்காகவும் பயப்பட வேண்டாம்…!”

“ஹம்…”

ஒரு உறுமல் உறுமிவிட்டு நாற்காலியைத் தள்ளிக் கொண்டு எழுகிறாள். எதிரே வரும் பணியாளன் மீது மோதாத குறையாக ஓடி வருகிறாள். ஜுர வேகமாக இருக்கிறது. எந்த பஸ்ஸில் ஏறுகிறோம் என்று தெரியாமலேயே, அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று ஏறுகிறாள்.

வேருக்கு நீர் முற்றிற்று.

– வேருக்கு நீர் (இந்திய அரசின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்), முதற் பதிப்பு: 2010, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *