கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2023
பார்வையிட்டோர்: 612 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மரணங்கள் சொல்லிக் கொண்டு யாரிடமும் வருவதில்லை. அதே போல சிலரின் மரணம் எம் வாழ்வின் அந்தம் வரை வந்து இதயத்தில் நோவெடுக்கச் செய்யும். எனக்கும் அவ்வாறானதொரு நோவு நெடுகாலமாய் இருக்கிறது. இனியும் இருக்கும். 

ஆம்! என் உம்மம்மாவும், தாத்தாவும் (தந்தையின் தந்தை) இன்று என்னுடன், என்னருகில் இல்லை என்பதை என்னால் ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது. காரணம் நான் என் உம்மம்மா மீதும், தாத்தா மீதும் அதிக பாசம் வைத்திருந்தேன் என்பதே. என்னை தொடர்ந்து கொண்டிருக்கும் அவர்களது விம்பம் இன்னும் என் கண்களிலிருந்து மறையவில்லை. என் இறுதி மூச்சு இருக்கும் வரை அது அழிந்து போகக் கூடியதுமில்லை. 

என் சிறு பராயம் தொட்டு தாத்தா எங்கள் வீட்டில் இருந்ததாய் ஞாபகம். எப்பொழுதாவதுதான் மாமிமார் வீட்டுக்கும், சாச்சா (வாப்பாவின் தம்பி) வீட்டுக்கும் போவார். ஆனால் இரண்டு நாட்களில் திரும்பிவிடுவார். நான் முதலாம் தரத்தில் படித்துக்கொண்டிருந்த போதெல்லாம் 12 மணிக்கே பாடசாலைவிட்டு வந்துவிடுவேன். எங்கள் வாப்பா கடையில் வியாபார சம்பந்தமான விடயங்களை கவனித்துக் கொண்டிருப்பதாலும், உம்மா ஆசிரியையாக 

ஆசிரியையாக இருப்பதால் பாடசாலைவிட்டு வரும் போது மணி இரண்டைத் தாண்டிவிடும். என்பதாலும் அப்போதெல்லாம் தாத்தாதான் என் நண்பராக இருப்பார். 

என்னுடைய தங்கையும் அப்போது குழந்தையாக இருந்த காரணத்தால் என்னுடைய தனிமையைப் போக்குவதற்கு தாத்தா உதவி செய்வார். அவரது மடியில் உட்கார்ந்து கொண்டு எங்கள் கடையில் பொருட்களை வாங்க வருவோரையும், போவோரையும் பார்த்துக்கொண்டிருப்பேன். 

அப்போது எங்கள் கடையின் வாடிக்கையாளர்களான சிலர் என்னுடன் சிங்களத்தில் பேசுவார்கள். முதலில் எதுவுமே புரிவதில்லை. எங்கள் பாடசாலையில்கூட ஆறாம் தரத்திலிருந்தே சிங்களப் பாடம் படிப்பிக்கப்பட்டது. அப்படியிருக்க முதலாம் தரத்தில் படித்துக் கொண்டிருந்த எனக்கு சிங்களம் எப்படித்தெரியும்? தாத்தாதான் விடை கூற பழக்கித்தந்தார். 

தாத்தா எப்போதும் ஒருவகை கருப்பு நிற கோட் அணிவதுண்டு. அத்துடன் வெள்ளைநிற தொப்பியும் தூங்கும் போதன்றி அவர் கழற்றி நான் பார்த்ததில்லை. அந்த கோட் பையினுள் சதாவும் ஏதாவதொரு இனிப்புப்பண்டம் காணப்படும். தாத்தாவுக்கு பச்சை அரிசிச் சோற்றுடன் பொரித்த கருவாடு, பருப்பு, ரசம் சாப்பிடுவதென்றால் ரொம்பவும் பிடிக்கும். எனக்கும் பிசைந்து ஊட்டிவிடும் போது என் உம்மா ஊட்டி விடுவதை விடவும் நல்ல ருசியாக இருக்கும். 

அவரிடம் இன்னொரு பழக்கமும் இருந்தது. அதாவது வெள்ளையரிசிச் சோற்றுடன் பால், சீனி, வாழைப்பழம் ஆகியவற்றை பிசைந்து சாப்பிடுவார். அந்த பழக்கம் இப்போதும் எனக்கிருக்கிறது. என் நண்பர்கள் நான் இப்படி சாப்பிடுவதைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். சிலநேரம் முகத்தையும் சுளித்துக் கொள்வார்கள். அதிருக்கட்டும். 

 அவர் கிணற்றுக்கு குளிக்கப்போகும் ஒவ்வொரு முறையும் என்னையும் அழைத்துச் சென்று என்னுடைய செருப்பு உட்பட என் உடைகளையும் கழுவித்தருவார். ஒருநாள் ‘நான் மௌத்தாகின காலத்துக்கு இதெல்லாம் நினைவு வருமா?’ என்று கேட்டுவிட்டு மௌனமாக இருந்தார். எனக்கு கடும் கஷ்டமாக இருந்தது. 

வாடிய என் முகத்தைப் பார்த்துவிட்டு ‘இல்லம்மா. என்னை ஞாபகம் வரும் போது யாஸீன் சூரா ஓதிக்கொள்’ என்றார் (யாஸீன் சூரா என்பது அல்குர்ஆனின் ஒரு அத்தியாயம்) நான் எதுவுமே பேசவில்லை. காரணம் அவர் மௌத்தாகும் விடயமொன்றை என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. 

இப்படியாக இருந்த போது என் தம்பியும் பிறந்தான். தம்பி மீது தாத்தாவுக்கு அலாதிப்பிரியம். அவனையும் தூக்கிக்கொண்டு புகையிரத வீதி வழியாக உலாத்திவிட்டு வருவோம். 

எங்கள் ஊரில் புகையிரத வீதி பக்கம் போவது தான் விசேஷமாக இருக்கும். காரணம் மலையகத்தின் எழில் கொஞ்சும் பசுமையான காட்சிகளைக் கண்டு களிக்கலாம். அத்துடன் நோன்புக் காலங்களில் பகல் மூன்று மணியைத் தாண்டிவிட்டால் பசி பொறுக்காது. சிறுவர்களாக இருந்தாலும் களவாக எதையும் சாப்பிட மனம் வராது. ஆகவே தாத்தாவுடன் எங்காவது காலாற நடந்து நேரத்தை போக்குவோம் அல்லது கெரம் விளையாடுவோம். 

என்னுடைய குழந்தைப் பருவம் இப்படி கழிந்து கொண்டிருந்தது. அன்று தாத்தா தம்பிக்கு சொல்லிய விடயங்கள் அவரது கடைசி வார்த்தைகளாக இருக்கும் என்று யாருமே நினைக்கவில்லை. அதாவது அவர் மாத்தளைக்கு ஜமாத் (மதப் பிரசாரப்பணி) போவதாகக் கூறி ‘உம்மாவுக்கு கரைச்சல் கொடுக்காதே ராஜா. நான் வரும்போது பிள்ளைக்கு பழங்கள் கொண்டு வருகிறேன்’ என்று சொல்லி விட்டுச்சென்றவர். திரும்பி வரும்போது எங்கள் எல்லோரையும் அழ வைப்பதாகத்தான் வந்தார். 

மாத்தளையில் அவர் தங்கியிருந்த ஒருநாள் சுபஹ் தொழுகைக்காக எழுந்திருந்த சமயத்தில் திடீரென நெஞ்சு வலி வந்திருக்கிறது. பலர் வைத்தியசாலைக்கு போக அழைத்தும் நெஞ்சைத் தடவியவாறு பேசாமல் படுத்திருக்கிறார். அது நிரந்தர உறக்கமாகிவிட்டது. ஆம். நான் ஐந்தாம் தரத்தில் இருக்கும் போது என் தாத்தா மௌத்தாகிப்போனார். 


உம்மம்மா என் நினைவுகளில் வந்து போகும் போதெல்லாம் என் ஆன்மா மண்டியிட்டு அழுவதுண்டு. தாத்தா எப்படி எங்கள் மீது உயிரையே வைத்திருந்தாரோ உம்மம்மாவும் அப்படியே. எங்கள் வீட்டிற்கு அவ்வப்போது வந்துபோனாலும் வெளிமடையிலுள்ள அவரது சொந்த வீட்டில் வாழத்தான் அவர் அதிக ஆர்வம் காட்டியதுண்டு. மாமி என்பதாலோ என்னவோ என் வாப்பாவுடனும் அதிகம் பேசாத கூச்ச சுபாவமுடையவர். 

உம்மம்மா இருக்கும் போது வெளிமடைக்கு போவதென்றால் கொள்ளை ப்ரியம் எங்களுக்கு. இப்போதுகளில் சாச்சி இருப்பதால் மாத்திரமே அங்கு செல்ல விரும்புவதுண்டு. உம்மம்மா மீது ஆழ்ந்த அன்பைக்கொண்டிருந்த நான் அவரின் கால் நகங்கள் தொடக்கம் வெட்டிவிடுவதுண்டு. அவர் மட்டும் என்ன? எங்கள் மூத்த மாமா கொடுக்கும் பணத்திலிருந்து ஏதேனும் வாங்கிவைத்து எமக்குத்தானே தந்திருக்கிறார். 

தடுமலோ இருமலோ பாட்டி வைத்தியமே சிறந்தது என்பதற்கிணங்க பல பொழுதுகளில் என் நோய்கள் தூர ஓடியிருக்கின்றன. மாதுளம் பழத்தை அவர் விரும்பி சாப்பிடுவார். எனக்கு கிடைத்ததையும் பல முறை உம்மம்மாவுக்கு கொடுத்து அவர் முகத்தில் சந்தோஷம் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். இப்போது மாதுளம்பழத்தை நான் விரும்புவதில்லை. என் உம்மம்மா மௌத்தானவுடனேயே அந்த ஆசையும் தீர்ந்துபோனது. 

உம்மம்மா பக்கத்தில் அவரது கம்பளிப்போர்வையை போர்த்தி அவரின் பழைய ஞாபகங்களை கேட்டபடியே படுக்க ரொம்பவும் ஆசை எனக்கு. அந்த போர்வை இப்போது எங்கள் மாமா வீட்டில் இருந்தாலும் உம்மம்மா இல்லாத இப்போதுகளில் அதைப்போர்த்த மனசு அடம் பிடிப்பதேயில்லை. 

உம்மம்மாவின் கண்களில் எப்போதும் ஒரு ஏக்கம் குடிகொண்டிருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். இன்று வரை அதற்கான காரணங்கள் என்ன என்று தெரியவில்லை. என்னுடைய திருமணத்தைப் பார்த்து என் பிள்ளைகளையும் தானே பார்ப்பதாக முன்பு அவர் சொல்லும் போது கூச்சமாகவும் கோபமாகவும் இருக்கும். காரணம் நான் ஏழாம் தரம் படிக்கிற காலமது. ஆனால் இப்போது அவர் எம்முடன் இருக்கும் பாக்கியத்தை நான் இழந்து விட்டேன் என நினைக்கும் போது என் இதயம் சோகமாய் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறது. 

தாத்தா எங்களைவிட்டுப் போனது போலவே என் உம்மம்மாவும் என் பதின்மூன்று வயதில் இவ்வுலக வாழ்வை நீத்து விடை பெற்றார். 

அவர்களுக்காக. என் துஆக்கள் என்றும் அல்லாஹ்விடம் தூதுரைக்கும். இன்ஷா அல்லாஹ்!!!

– வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *