வெள்ளைத் தீ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2021
பார்வையிட்டோர்: 6,995 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குங்குமம் இடறிய சுடலைச் சிவப்பு. முதல் நட்சத்திரங்கள் திக்கின. கோடை ஆற்றின் நடுவயிற்றுள் நான். மணல் அள்ளி தண்ணீர் செய்தேன். அருவி. விழித்தேன். உள் வீங்கிய முலைக்காம்புகளை வார்த்தைகள் சப்பிக் கொண்டிருந்தன. புரிந்தது. உன்னைத் திருட கவிதையின் பிறாண்டல்.

தரமாட்டேன் உன்னை . எப்பொழுதும் எவருக்கும்.

கர்ப்பத்துள் தூங்கும் உன்னை எழுப்பி, முகம்பார்க்க மரணமே சரி.

வார்த்தைகளற்ற கவிதையில், வர்ணங்களற்ற ஓவியத்தில், சப்தங்களற்ற இசையில் உன்னை எழுதி எழுதி எழுதி அழிப்பேன். எழுதுவேன். அழிப்பேன், எழுதுவே…. அழிப்….

எழுதுதலில் அதிருப்தியுற்று அழித்தலில் திருப்தியுறுவேன், என் இடிபாடே உன் அழகு. என் மூளியே உன் பூரணம்.

எப்பொழுது கிராமத்திற்குப் போனாலும், “உன்னை ஒரே ஒரு முறை பார்க்கனும்னு கண்ணம்மா ஆசைப்படுகிறாளடா. போ. போய் பார்த்துவிட்டு வாயேன்” என்கிறாள் அம்மா.

முடிந்ததா என்னால்? முடியுமா என்னால்?

கண்ணம்மா என்றால் கண்ணம்மாவாகி விடுவாயா? என் கண்ணம்மாவுக்கு நீ யார்? பணிவிடை செய்து. மல்லாந்து. ஊட்டி… நல்லதுக்கு வாழ்த்தி, கெட்டதுக்கு அழுது. பார் யாருடைய சாவிலெல்லாமோ என்னைக் கிடத்தி, அழுது. துரிசெய்து, துளியையும் துடைத்திருக்கலாமே இன்னுமா கண்ணம்மா நீ? கண்ணம்மாக்கள் நீ.

மருமகளாய்…. மனைவியாய்…. நாத்தியாய்… கொழுந்தியாய்… அண்ணியாய்… தாயாய் கிளைகள் பரப்பி, நீ தழைந்து நிற்கையில் எந்தக் கிளையினில் என் கூடு? இத்தனைக் கிளைகளுக்கும் நடுவே உலர்ந்த கிளையா நான்? முறித்து அடுப்பில் வை. இருமும் யாருக் கேனும் கஷாயம் காய்ச்சு.

அப்படியே வந்துவுன் வாசலில் நின்றாலும், எந்தப் புன்னகையால் என்னைத் திறப்பாய்? எந்தப் பிடிவாதத்தால் எனக்குள் துழைவாய்? எந்த வீம்பால் தாழ்ப்பாள் போடுவாய்? எந்த விசும்பலால் உன்னை ருசுச் செய்வாய்? நம்மைச் சேர்த்து உச்சரிக்க கண்ணாடி ஏது?

மணிலா பட்டறை காவலுக்காக நான், நடுமணல் களத்தில், கட்டிலில் படுத்திருக்கிறேன், தலையில் சாப்பாடும். கையில் லாந்தருமாய், பெரிசான நிழலைத் துணைக்குக் கூப்பிட்டுக்கொண்டு வந்து, என் முன் நிற்கிறாய்.

“அப்பா எங்க?”

“அந்த ஊர்ல யாரோ போயிட்டடாங்கலாம். அப்பாவும், அம்மாவும் போயிருக்காங்க”.

“அதுக்கு நீ வர்ணுமா?”

“பசியோட இங்க நீ கவாங் கவான்னு கெடக்க, மூக்கப்புடிக்கத் தின்னுட்டு அங்க நான் முடங்கிக் கெடக்கனுமாக்கும்..”

“இல்ல… இந்த நேரத்துடை இப்படி ஒத்தையில…”

“இப்ப ஒன்னும் ஆயிடுல்ல. உன்னெ பட்டினி போட்டுட்டு அங்க என்னால நிம்மதியா தூங்க முடியாது. வா.”

Arivumathi - VellaiThee - Oct 1992 -2-picஊட்டல்கள் முடித்து, லாந்தரை நீலம் செய்து. ஒற்றைக் கட்டிலில் மல்லாந்தோம். நிலா கவிழ்ந்து கொட்டியிருந்தது. பேசிக் கொண்டிருந்தோம். பனியின் ஜில்லிப்பில் மாம்பூ வாசம். வெப்பாலை மரத்தில் மின்மினிகள். தூக்கம் திட்டத் திட்டஇமைகளால் பேசினோம். நட்சத்திரங்கள் நழுவின. வெள்ளி பூத்தது. ஊரின் முதல் கோழி, ‘இன்னுமா?’ என்றது. எழுந்து சரசரவென போய்விட்டாய்.

எனக்கு மீசை அரும்பும் வயசு. உனக்குக் காளான் முட்டும் வயசு. ஆண் என்றும் பெண் என்றும் பிய்ந்து கொள்ளாத வயசின் விளிம்பு. நிகழ்கையிலா, வாழ்க்கை? நினைத்துப் பார்க்கையிலா?

வேண்டாம், கண்ணம்மா. பேனாவுக்குத் தூரத்திலேயே இரு. இந்த ஆடம்பரங்களில் வந்துச் சொட்டாதே. கவிதையை வெறு. சிணுங்கல்களுக்கெல்லாம் அவிழாதே. கொஞ்சல்களையெல்லாம் பிடித்துத் தள்ளு. ‘அப்புறம் பார்க்கலாம்’ என்கிற சமாளிப்பு வார்த்தையையும் விடாதே. கொல். வர்ண ஓவியத்தின் ஆழத்தில் பதுங்கும் பென்சில் கோடுகளாய்த் தூங்கு. அள்ளித்தராதே. முகம் சொல்லாதே.

‘இனி இந்த வருடத்திற்கு மிச்சமில்லை’ என்று சொல்லிவிட்ட மழை. விடிந்தும் விடியாமலும் வீரனார் கோயில் திசையிலிருந்து கம கம கம கம கம.

ஈயத்தட்டு, ஈயக் கிண்ணம், குள்ளப்புட்டி, தொடை முழுசும் தெரிய பிடித்துக்கட்டிய பாவாடைப் பள்ளம் ஆகியவற்றோடு ஊரின் சிறிசுகள்… நீ நான்… எல்லோரும் ஓடுகிறோம்.

வீரனார் கோயிலைச் சுற்றிலும் வெள்ளைத் தீ. திருதிருவென. அவ்வளவும் காட்டுமல்லி. பறிக்கப் பறிக்கப் பறிக்க மாளாத தீ. சர்க்கரைத் தீ. திகட்டும் காற்று. கைவிரல்களை முட்டிப்போகும் தேனீக்கள்.

கிண்ணங்கள் தளும்ப, தட்டுகள் வழிய, குள்ளப புட்டிகள் திணற… மடிகள் பெருக்க

வீரனார் முன்னால் போய் குவியல் குவியலாய்க் கொட்டிவிட்டு வந்து மறுபடியும்… மறுபடியும் பறிக்கிறோம்.

வெள்ளம் பறித்த பீடம். ஆற்று மணலில் புதைந்தும் புதையாமலும். மீட்கப்பட்ட வீரனார் பிதுங்கிய விழிகளும், முறுக்கிய மீசையுமாய் அழிஞ்சி மரத்தடியில்.

எண்ணெய்ப் பிசுக்கேறிய வேல்கள். குலங்கள், உச்சியில் செருகிய காய்ந்த எலுமிச்சைகளோடு.

முலைகள் வீங்கிய குறத்தி, சிதைந்த முகத்தளாய். ஒன்றுக்கு முட்டிக்கொண்டுவந்த அவசரத்தில் வீரனாரைப் பார்த்து மழித்து விட, கோபத்திற்கு ஆளாகி…. ரத்தங்கக்கிச் செத்ததாய் ஐதீகம். அப்படித்தான்….. குதிரையிலிருந்து இறங்காமல் ஆற்றைக் கடந்த வெள்ளைக்காரன் கதையும்… சிலையும். ஆதாரம் ஆற்றோடு.

முதல் கம்பு
முதல் சோளம்
முதல் காய்ப்பு
முதல் விளைச்சல் எல்லாமே வீரனாருக்கு.

சுருட்டு, கள், சாராயத்தோடு படைக்கப்படும் எதுவும் ஆண்களே தின்று தீர்க்க வேண்டியது.

உலக்கைப் போட்டு ஒதுங்கும் எந்தப் பெண்ணும் இதன் எல்லைக்குள் ஆகாது. இங்கு படைக்கப்படுகிற எதுவும் வீட்டிற்குப் போன பிறகும் ‘விளைந்த பெண்கள்’ தொடல் தப்பு. குத்தம்.

வீரனாருக்கு முன்னால் குவியல் குவியலாய்த் தீ. இன்றைக்குப் போதும் என்றே தயக்கமான சமாதானத்தோடு வருகிறோம். எல்லோரும்.

அவரவர் குவியலிலிருந்து. கை நிறைய கைதிறைய அள்ளி அள்ளி, பந்தியில் சோற்றை அள்ளிப் போடுகிற மாதிரி, வீரனார் மூச்சுத் திணற. குறத்தி மார்பு நோக, குலங்களின் தகடுகள் சிணுங்கச் சிணுங்கச் சொரிகிறோம். சொரிகிறோம். வீரனாரைச் சுற்றிலும் திகு திகு திகு திரு.

குவியல் தொலைந்து… மடியும் வடித்து… கண்ணை மூடிக்கொண்டு, கைகளை ஒட்டிக் கும்பிடுகிறாய்.

என் ஈயக் கிண்ணப் பூக்கள் மட் டும் உனக்காக என்று எடுத்து மடியில் கொட்டிக் கொள்கிறாய். செடிகளின் எல்லைகளைத் தாண்டி வருவதற்குள்ளாக, கிண்ணம் சிரிக்க. அள்ளி அள்ளி என்மீது வீசியபடி வருகிறாய்.

அன்று ஊரின் சுமங்கலிக் கூந்தலெங்கும் வெள்ளைப் பூ. ஊற்றுத் தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு வந்த உன் தலைமட்டும் இருட்டு.

தவிக்கும் என் முகம் படித்து, ரசித்து. குடத்திற்குள் கைவிட்டு. வெள்ளைச் சரம் எடுத்து, கைகளில் வைக்கிறாய். முடி கீறி தீ மூட்டு கிறேன். பார்க்கப் பார்க்க திகு திகு திகு திகு திகு திரு. கோடானு கோடி வண்ணத்துப் பூச்சிகள் மனசு திணற றெக்கையடித்துச் சிலிர்க்கச் செய்கின்றன. குயில்களின் சப்தம் உறிஞ்சி வந்த தேனீக்கள் உள்ளுக்குள் உன் கிளையில் அடைகட்ட ஆரம்பித்து விட்டன. உட்குகையுள் உன் பெயரெழுதும் எழுத்துக்களாய் ஏராளமாய் மின்னிட்டாம் பூச்சிகள்.

தண்ணீர் எடுத்து வருகிறவரை காத்திருக்கிறேன். வருகிறாய். முன்னால் சப்தச் சிரிப்பு. பின்னால் வாசனைச் சிரிப்பு. இடுப்பில் ஈரச் சிரிப்பு, காலில் கொலுசுச் சிரிப்பு.

சிரிக்கச்சிரிக்க அந்த நடை வீட்டிற்குப் போனவள்தான். அப்புறம் நீயும் பூ.

அருகில் நெருங்க முடியாதபடிக்குச் சடங்குச் சுவர்கள். வீரனார் கோயில் எல்லைக்கு மட்டுமா. என் திசைகளெங்கும் தாரமாகிப் போனாய். உன்னைப் பார்க்க உயிர் அரித்தது. சூன்யக் காடுகளெங்கும் உன்னை விதைத்தேன். சூழ்ந்தப் பொய் களில் எல்லாம் உன்னைத் தேடினேன். பொய்களின் நிறத்தோடும், வாசனையோடும். இறகோடும். அசைவோடும். சப்தத்தோடும் உன்னை ஒப்பிட்டுப் பார்த்தேன். எனக்குள் இருந்த கவிருன் வயசுக்கு வந்தது. அந்த அவஸ்தைகளில்தான்.

சில நாட்களுக்குப் பிறகு மாற்றுத் தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு வந்துத் திரும்புகையில், வழிமறித்து நின்றேன். தலையில் மல்லிகை இடுப்பில் தண்ணீர். காலில் கொலுசு. உதடுகளில் பற்கள்.

புன்னகைக்க முயலும் உதடுகளில் பழைய கண்ணம்மா. சுற்றுமுற்றும் பார்க்கும் கண்களில் புதிய கண்ணம்மா. எந்தக் கண்ணம்மா ஜெயிக்கப் போகிறாள் என்கிற தவிப்பில் நான் திணறிக் கொண்டிருக்கையில், என்முன் நீ இரண்டுமுறை தாவணியைச் சரி செய்தாய்.

அந்த நிமிடத்தில் என் பழைய கண்ணம்மாவை உள்ளே தள்ளி பூட்டி விட்டு, சாவியைத் தலையைச் சுற்றி தூர எறிந்துவிட்டு, புதிய கண்ணம்மாவிற்கு வழிவிட்டு, நடந்து போக சொல்லிவிட்டு, திரும்பிப் பார்த்தேன்.

கூந்தலில் வெள்ளைச் சாம்பல் கண்ணம்மா! கண்ணம்மா இல்லை நீ. நீ என் கண்ணம்மா இல்லை. கண்ணம்மாவைப் போல ஒரு கண் ணம்மா. என் ஆழத்தில் தூங்கும் கண்ணம்மாவின் மீது உன் நிழல் விழுந்து… தூக்கம் கலைய அனுமதிக்க மாட்டேன்.

வற்புறுத்தாதே. ஆசைப்படாதே. விசாரிக்காதே.

கட்டிலில் படுத்து மல்லாந்தேன். உயர உயர உயர உயரத்தில் கடைசியாய் என் கண்ணம்மாவிற்கு முடிகிறி நான் மூட்டிய வெள்ளைத்தீ நிலா. திரு திரு திரு.

பொய்யை மீறிய அழகு எது?

அறியாமையை மீறிய சுகம் எது

எங்கும் எங்கும் கண்ணம்மா.

பார்க்கத் துடிக்கும் நீ மட்டும் பொய்.

– அக்டோபர் 1992

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *