வெளவால்கள் உலவும் வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 2,353 
 
 

ஆட்டோவில் வந்து இறங்கியபோது வீடு திறந்திருந்தது. லேசாக கொஞ்சம் திறந்திருக்கும் கதவின் அசைவின்மையும் அதன் அழுத்தமும் அது ரொம்ப நாளாக திறந்து கிடப்பதுபோல் தோன்றியது. ஒரு கோணத்தில் அது பழமையான தூசிபடிந்து நிற்க்கும் ஒரு வீட்டின் ஓவியம் போல் காட்சியளித்தது. கீழே கிடந்து மண்ணும் பேப்பர் குப்பைகளும் அதை உறுதிசெய்வது போல‌ வீடு உறைந்து அப்படியே நின்றுவிட்டிருந்தது.. அண்ணே.. என்று அழைத்தபடி கதவை தள்ளி உள்ளே சென்றான் வாசு. பதிலேதுமில்லை, அவன் குரல் அவனுக்கே சற்று நடுக்கத்துடன் எதிரோலித்தது, ஆனால் குப்பென்று ஒரு நெடி தூசியும், கரப்பான்கழிவின் நாற்ற‌மும், ரொம்பநாள் கிடந்த செத்த எலியின் நாற்றமும் எல்லாமும் சேர்ந்து நாசியை துளைத்த‌து. குடலை பிறட்டி வாந்திவந்துவிடும் போலிருந்தது.. கைவைத்தால் ஒட்டிகொண்டுவிடும் தூசி கிணற்றடியில் பரவிய பாசிபோல‌ எல்லா இடத்திலும் சமமாக‌ பரவியிருந்தது. மாமர இலைகளும், காகிதங்களும் இறைந்துகிடந்தன. அவைகள் மெல்லிய காற்றிற்கே கதறியடித்து ஓடிக்கொண்டிருந்தன‌. தாறுமாறாக கிடந்த இரு நீள‌பெஞ்சின் ஒன்றில் தூசியை ஊதி கையில் வைத்திருந்த‌ நீளபயண‌ப்பையை வைத்துவிட்டு உள்திண்னை வழியாக சமையலறை வரை சென்றான். தூசில் கால்தடம் கூடவே வந்து கொண்டிருந்தது. சமைப்பதற்கு தேவையான சிதறிக்கிடந்த‌ தூசிபடிந்த‌ சாமான்களை தவிர‌ மற்ற சாமான்களெல்லாம் ஏதுமில்லை. பறவைகளில் எச்சமோ ஏதோஒன்று பழுப்பாக ஆங்காங்கே கிடந்தன. வெளிமுற்றத்தில் தண்ணீர் பிடிப்பதற்கு கிடந்த பித்தளை பாத்திரங்கள், வென்னீருக்காக இருந்த பாய்லர் ஏதுவும் இல்லை. வெளிமுற்றம் வழியாக கை எங்கும் வைக்காமல் கவனமாக‌ நடந்து வாசல்வந்து, ஒட்டியிருந்த சந்து வழியாக பின்பக்கம் சென்றான். சமையலறை சுவற்றை நீண்டி கொல்லைக்கு செல்லும் வழியை அடைத்து, பின்பக்கத்தை வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அதுதான் அண்ணனுக்கு தற்போதைய வருமானமும்கூட.

சரோஜா பாட்டி முறத்தில் அரிசியை கொட்டி குனிந்த தலையும் இரண்டாக மடிந்த உடலுமாக‌ வாசல் படிக்கட்டில் அமர்ந்து கல்லை தேடிக்கொண்டிருந்தாள். அவள் கணவன் தாத்தா வகையில் தயாதி முறைவேண்டும். புருசன் இறந்தபின் தன் மகள் மற்றும் அவளின் கணவனோடு தன் கொஞ்சம் புத்திசுவாதினமற்ற மகனோடு வசிப்பவள். பாதிஇருண்ட அவளது வீட்டினுள் வெயினின் பிரதிபலிப்பில் செல்ஃபில் அடுக்கியிருந்த‌ சில‌ பாத்திரங்கள் மின்னின. அவளின் பேச்சில் வயதானதின் அசிரத்தை தெரிந்தது. யார்யாரோ வராங்க போராங்க யாருக்கு தெரியுது. உங்கண்ணன் எப்பவாவது வருவாரு இல்ல அவங்க கூட்டாளிகளோடு சேர்ந்து எங்கயாவது படுத்து கிடப்பாரு என் பையன் போய் தூக்கிட்டு வருவான் என்றாள். நம்பமுடியாதபடி அவன்தான் அண்ணனை கவனித்துக் கொள்வதாகவும் கூறுவாள். போனமுறைவந்த போது இந்த வீட்டைப்பற்றி அவள் பேசிய பேச்சுக்களும். அவள் செலவிற்கு பணம் கேட்கும் நச்சரிப்புகளும். நினைவிற்குவந்து தொடர்ந்து அவளிடம் பேச மனமில்லாமல் திரும்பி வந்து திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான். உள்ளே எலிகளின் கீரீச் கீரீச் ஒலிகள் விட்டுவிட்டு கேட்டுக் கொண்டிருந்தன. தெருவில் மக்களின் நடமாட்டம் இன்னும் வேகம் கொள்ளவில்லை. காலை இளவெய்யில் இதம் நேற்று இரவு பயணத்தின் கலைப்பை அதிகரிக்க செய்தது போலிருந்தது. அசதியாக‌ கண்களை இடுக்கிக்கொண்டு கொட்டாவி விட்டபடி வீதியை பார்த்து யோசனையில் இருந்தான். காக்கைகள் எங்கோ தொடர்ந்து கரைந்துகொண்டிருந்தன. எதிர்சாரி வீட்டுவாசலில் இரவெல்லாம் திரிந்த கலைப்பில் இரண்டு நாய்கள் வண்டியில் அடிப்பட்டதுபோல் படுத்துகிடந்தன.

திண்ணையும், திண்ணையின் முனையில் நிறுத்தப்பட்டிருந்த‌ முன்பைவிட அதிகம் ஆங்காங்கே உடைந்திருந்த சாயம் போன‌ தடுப்பு தட்டியை அன்னிச்சையாக‌ கவனிக்க‌ இந்த வீட்டைப் பற்றிய நினைவுகள் மன‌தில் அலைமோதின‌‌. அம்மா வெத்தலை மென்றப‌டி காலை நீட்டி இந்த‌ திண்ணையின் முனையில் அமர்ந்திருப்பாள். பள்ளிகூடம் விட்டதும் ஓடிவந்து அம்மாவின் கால்களில் சாய்ந்துகொண்டு இடுப்பை பிடித்துக் கொள்வான். வந்துட்டான், இவன் ஒருத்தன் ஹஹ என்றுவிட்டு சற்று தூக்கிய வெத்தலை மென்ற வாயுடன் சிரித்தபடி அவனுக்கே கேட்டு அலுத்துப்போன‌ அவனின் சிறுவயது பராகிரமங்களில் ஒன்றை பேசிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டு பெண்ணிடம் சொல்லாமல் அவளால் இருக்க முடியாது. அதில் ஒரு பெருமையும் அலாதி அன்பும்இருப்பது தெரியும் பக்கத்துவீட்டு பெண்மணி ஒவ்வொருமுறையும் புதிதாக கேட்பதுபோல ஆர்வத்துடன் கேட்டுகொள்வாள். மூன்று மகன்கள் மேல் அதீத கற்பனைகள் அவளுக்கு. ஆனால் எப்போதும் கம்னாட்டி, கழிச்சாலபோறவனே என்று திட்டிக்கொண்டே தான் இருப்பாள். யாரை அதிக திட்டுகிறாளா அவர்கள்மேல் அதிக பாசம் என்று அவர்கள் எடுத்து கொள்வதே வழக்கம். அதிலும் மிகதாமதமாக மூன்று குழந்தைகளுக்குபின் பிறந்த வாசுவின் மேல் அதிக பாசம் அவளுக்கு, அதிக திட்டல்களும் அவனுக்குதான்.

வீதியில் சென்றுகொண்டிருந்த பஞ்சுகாரத்தெரு எலக்ரீசியன் பையன்கள், தீடிரென திரும்பி அண்ணே.. என்று விளித்தபடி அவன் முன் வந்து நின்றார்கள். திரும்பி என்னப்பா என்பதற்குள்,

‘நீங்க உங்க அண்ணனதானே பாக்க வந்திருக்கீங்க, இதோ இங்கிருந்து போகும்போது மேளகார‌ தெருவ தாண்டி ஒரு சின்ன‌சந்து வரும் பாத்திருக்கீங்களா, முகனைல பழயபேப்பர்கட இருக்கும் பார்த்திருக்கீங்களா அந்த சந்துல‌ கொஞ்சம் தொலைவுல‌ போனிங்கன்னா ஒரு குப்பதொட்டிவரும் அங்க‌னதான் விழுந்து கிடக்காரு’. வேகமாக சொல்லிமுடித்தான். அது அவனுக்கு மிக சாதாரண ஒரு நிகழ்வாக இருந்தது.

சட்டென பதறியது மனம். அவர்கள் இயல்பாக பேச்சை மேலே தொடர்வதில் இருந்த முனைப்பு அவனை சற்று எளிதாக்கியதால், அவர்கள் சொல்லப்போவதை கவனிக்க ஆரம்பித்தான்.

ஈபி ஆபிசு இருக்கு பாருங்க அதுக்கு பக்கத்துல என்று விளக்கம் கொடுத்தான் இரண்டாவது சிறுவன்.

அவனால் சட்டென்று அனுமானிக்க முடியவில்லை, அவனின் அமைதியை கண்டு ‘வாண்ணே நா காட்றேன்.’ என்றான்

‘டே அவரு போய்பாருடா’

‘இல்லடா.. அவருக்கு அந்த இடமெல்லாம் போயிருக்கமாட்டாருடா, வாண்ணே நா காட்றேன்’.

இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது கதவை என்ன செய்வதென்று தெரியாமல் லேசாக சாத்திவிட்டு ரோட்டில் இறங்கி நடந்தான். வெய்யில் ஏறிக்கொண்டிருந்தது. பின்னாலேயே ஓடிவந்தார்கள் சிறுவர்கள்.

‘எப்போ டிரைன புடிச்சீங்க, இப்போ அங்க மழையா, குளிரா’ போன்ற விவரங்களை கேட்டுக்கொண்டே வந்தார்கள். ஒரு பெரிய மனிதனுக்கு பதிளலிப்பது என்ற‌ ஆர்வம் அவர்களிடையே ஒரு சந்தோச மழையை உருவாக்கியிருந்தது. மோரிவாய்கால் பாதைபோல‌ இருந்த அந்த சின்ன‌சந்துக்கு வந்து. அதன் உள்ளே நடந்து சென்றபோது தூரத்தில் வேட்டி கழன்று சட்டையெல்லாம் மணலாக ஈக்கள் மோய்க்க அவர் கிடந்தது ஒரு விபத்தை பார்ப்பதுபோல பார்த்தான்.. அந்த சந்தின் கடைசியில் ஒரு மதுக்கடை இருக்கிறது என்று நினைவிற்கு வந்தது.

பதற்றத்துடன் அவசரமாகஓடி‌ மண்ணை தட்டிவிட்டு உடைகளை சரிசெய்து அவரை தூக்கிக் தோளில் போட்டுக் கொண்டு வந்தபோது அவர்கள் மெதுவாக வந்து சேர்ந்துக் கொண்டார்கள். ரோட்டில் நடந்து வந்தபோதுதான் அவன் அந்த‌ சங்கடத்தை உணர்ந்தான். எல்லோர் கண்களும் அவன்மேல் இருப்பதாக தோன்றியது. சின்ன அண்ண‌ணின் உறவுபெண், அண்ணியின் பெரியம்மாவின் சின்னமருமகள் கையில் சின்னபையுடன் காய்கறி வாங்க வந்தவள் போலிருந்தாள் அவனைப் பாத்துக்கொண்டே சென்றாள், அவன் கண்கள் சந்தித்தபோது கேலியான ஒரு சிரிப்புடன் வேறுபக்கம் திருப்பிகொண்டாள். ஏனிந்த கேலி? எப்போதும் இப்படிதான் என்று அவரை பொதுமைபடுத்தும் ஒருவகை கிண்டல் அது. அந்த பெண்ணிடம் மட்டுமல்ல கூடவரும் சிறுவர்களிடமும் அண்ணன் மீதான எந்த‌ விசயமும் நகைச்சுவையாக இருந்தது அவர்களுக்கு. அவரை பற்றி சொல்லும் போது அத்தனை ச‌ந்தோஷம் அவர்கள் முகத்தில் நடனமாடியது. ஒரு மனிதனின் வீழ்ச்சியில் இத்தனை மகிழ்ச்சியா என எண்ணி மனம் வருந்திதியபடியே வீட்டிற்கு வந்தான்.

பெஞ்சில் படுக்க வைத்த போது அவரது கோலம் சட்டென துணுக்குறவைத்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு பார்த்ததைவிட பாதியாகிவிட்டிருந்தார். தூக்கிவ‌ரும்போது எடையற்றிருந்தார் என்பதை இப்போது நினைவிற்கு வந்தது. அவனையறியாமலே கண்களில் கண்ணீர் முட்டியது. ஏன் இப்படி ஆனார்? யாருக்கும் மனதாரகூட கெடுதல் நினைத்ததில்லையே? நெஞ்சு முடிகள் முன்பைவிட‌ வெள்ளையாகிருந்தன, துறுத்திக்கொண்டிருந்த கழுத்து எலும்புகள், வற்றிவிட்ட வயிறு, கைகளில் தோலின் சொறசொறப்பு என முற்றிலும் மாறிவிட்டிருந்தார்.

சிறுவர்களின் பேச்சில் இப்போது இருக்கும் மகிழ்ச்சியை தடுக்க விரும்பவில்லை. அண்ணன்கூட அந்த மகிழ்ச்சியை விரும்பி வரவேற்ப்பார் என நினைத்தான்.

‘உங்கண்ணன் காலைல கிளம்புவாருண்ணே, காசு இருக்குற நாளுன்ன நல்லா குடிச்சுபுட்டு ரோட்ல‌ தள்ளாடிக்கிட்டே வருவாருண்ணே, இல்லாதப்ப… கணேசண்ண வீட்டுக்கோ, இல்ல மாணிக்கம் செட்டியாரு கடைக்கோ போயிருவாரு… அங்க போயி சிரிச்சுக்கிட்டே… இப்படி நிப்பாரு. ‘

அவன் செய்து காட்டியதை இப்போது இரண்டாவது சிறுவன் அதீத பாவனையோடு விழுந்து விழுந்து சிரித்தான்.

‘மாணிக்கமண்ணே, போடா போடான்னு விரட்டுவாரு… கடேசியா தலையில அடிச்சுகிட்டு இந்தாடான்னு காசு கொடுப்பாரு, அப்ப‌ குடுகுடுன்னு ஓடுவாரு பாருங்க..’

இரண்டாவது சிறுவன் இப்போது நின்ற இடத்திலேயே கால்கள் பிடறியில்பட ஓடிக்காட்டினான். முதல் சிறுவனால் இப்போது சிரிப்பை அடக்கமுடியவில்லை.

‘சரக்கு வாங்கிட்டு வந்தோன்ன எல்லோரும் சேர்ந்து அடிப்பாங்க அப்புறம் அவருக்கும் கொஞ்சம் கொடுப்பாங்க‌…’

இப்போது இரண்டாவது சிறுவன் ஆரம்பித்தான். ‘கடத்தெருவெல்லாம் சுத்திசுத்தி வருவாரு இப்புடி இப்புடி தள்ளாடிக்கிட்டே… அப்புறம் எங்கயாவது விழுந்து கிடப்பாரு, அவரு பிரன்சுங்க பார்த்து தூக்கிட்டு வந்து போட்டுட்டு போவாங்க… ஒரு நாளு ராமசாமி கோயிலு தேர்முட்டி இருக்குது பாருங்க அங்க ரெண்டு நாளு அப்படியே கிடந்தாரு… ‘

வருத்தமற்ற ஒரு சந்தோசம் அவர்களிடையே ஏறியபடியே சென்றது. அவர்கள் கிளம்பி செல்லும் வரை அண்ணனையே கவனிப்பதுபோல‌ வந்த கண்ணீரை அடக்க இலக்கற்ற பார்வையுடன் அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான்.

சொல்றா தம்பி என்றுதான் அவனிடம் பேச்சை எப்போதுமே ஆரம்பிப்பார். தன்னைவிட 15 வயது மூத்தவர். அப்பாவை அவனுக்கு நினைவில் இல்லை. கோட் அணிந்த‌ கறுப்பு வெள்ளை போட்டோவில் ஒரு பக்கமாக முறைத்து பார்ப்பதுபோல நெஞ்சுவரை இருக்கும் அவரை அப்படியேதான் நினைவில் வைத்திருக்கிறான். முதலில் பள்ளியில் சேர்த்துவிட்டது, முதலில் சைக்கிள் விட கற்றுக்கொடுத்தது, பம்பரம் சுற்ற கற்றுகொடுத்தது, மீன் தூண்டில் போட கற்றுக்கொடுத்தது எல்லாமே அண்ணண்தான்.

எப்போதும் இத்தனை சந்தோஷமான மனநிலையில் எப்படி அவரால் இருக்க முடிந்தது என‌ நினைத்துக் கொள்வான். ஒரு மெல்லிய நகைச்சுவை உணர்வோடு யாரையும் புண்படுத்தாத ஒரு உரையாட‌ல்கலை அவரிடமிருந்தது. அவர் அருகில் இருக்கும்போது ஒரு அன்புசூழல் ஒன்று நாய்க்குட்டி போல சுற்றிவருவதாக தோன்றும். நீருக்கு அடியில் தெரியும் கூலாங்கல்லைப்போல‌ மின்னும் கண்களோடு உற்சாகத்துடன் அவர் பேசுவதை கேட்க சிலர் எப்போதும் இருப்பார்கள். கடைவாயில் இருக்கும் எத்துப்பல் தெரிய அவர் சிரிப்பில் தெரிக்கும் ஜோக்குகளை ரசிக்க சின்ன கூட்டம் உண்டு. ஆனால் ஒரு வயதிற்கு மேற்பட்ட ஆண்களிடத்தில் அவரிடமிருந்து ஒரு விலகல் இருந்தது. வாழ்வில் ஏதோ ஒரு இடம் பிடித்துவிட்டிருந்த நடுவயது மனிதர்களின் உலகத்தில் அவரால் இருக்கமுடிந்ததில்லை. வெட்டிதனமான நடைமுறை வாழ்க்கைக்கு உதவாத‌ பேச்சுகள் கொண்டவன், பணம், பதவி மூலம் பெறும் அதிகாரத்தை இத்தனை வயதிலும் பெறமுடியாதவன் என்று கவனமாகவும் அதே நேரத்தில் கேலியாகவும் விலக்கிவைக்கப்பட்டார். இதை எப்போதும் அவன் கவனித்திருக்கிறான் சின்னண்ணிடமும், அக்காவிடமும், மாமாவிடமும் அவன் எதிர்பார்க்காத‌ இதே விலகல் ஒரு கட்டத்தில் வந்தபோது அவனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவருக்கு அதைப்பற்றி கவலை இருந்ததில்லை. சிறுவர்களிடமும், வயதானவர்களிடமும் அவருக்கு எப்போதும் அன்பிருந்தது. பெரியவர்கள் ஏதும் உதவி கேட்டும், சிறுவர்கள் ஏதும் வாங்கிதின்ன கேட்டும் அவர் மறுத்ததாக நினைவில்லை.

நண்பர்கள் மூலம் ஆரம்பித்திருந்த குடிப்பழக்கம் மெல்ல பீடி, குட்கா, கஞ்சா என்று மாறி கொஞ்சம் கொஞ்சமாக‌ முழுநேர குடிகாரனாக மாற்றிவிட்டிருந்தது. அவர் முகத்தில் முதுமையின் அறிகுறிகள் முன்பே ஆரம்பித்துவிட்டன. தொங்கிய கன்னங்கள், கண்களுக்குகீழ் உப்பியசதைகள், ஒடுங்கிய கழுத்துமாக இருந்தார். முன்பைவிட இப்போது அதிகம் முதுமை தட்டியிருந்தது. மேலிருந்த பல்பு வெளிச்சத்தில் நிழல்படர்ந்த கன்னங்களுடன் திறந்த வாயுமாக‌ விகாரமாக தெரிந்தார். காற்றிற்காக சட்டையின் பட்டன்களை கழற்றிவிட்டான், கழற்றும்போது சிறுஅசைவுகளுக்குபின் அப்படியே சிலைபோல கிடந்தார். வற்றிவிட்ட உடலில் சதைகள் இல்லா வயிறு மட்டும் மெல்லிய இயக்கத்தில் இருந்தது.

தன்னுடைய வேலைகாக பலதடவை முயற்சித்தவர் அவருக்கான வேலையை அவர் தேடிக்கொள்ளவில்லை. அம்மா ஒரு சிட்பண்ட் வேலை வாங்கிகொடுத்தார். குடித்துவிட்டு வேலைக்கு செல்லவில்லை என்று இருமுறை வெளியே அனுப்பபட்டார். இருமுறையும் அம்மாதான் யார்யாரிடமோ பேசி மீண்டும் வாங்கி கொடுத்தார். அம்மா இறக்கும்வரை கொஞ்சம் கட்டுபாடுடன் இருந்தார். சுத்தமாக மாறிப்போனார்.
தண்ணீரை தெளித்து எழுப்பலாமா, எழுப்பி சாப்பிட ஏதும் கொடுக்கலாமா அல்லது அவர் நண்பர்கள் யாரையாவது அழைத்துவரலாமா என்ற யோசனையில் இருந்தான். கடைக்கு சென்று சாப்பிட்டு வரும்வரை எழுந்திருக்கவேயில்லை. தொடர்ந்து மனம் சலிப்பிலே இருந்தது.

சாப்பிட தம்பி கடைக்கு சென்ற போது அண்ணனின் நண்பர் ராமமூர்த்தி பார்த்ததும் அவர் நீண்டதன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

‘நல்லா காட்டியிருக்கலாம் தம்பி, எவ்வளவோ வசதி இப்பெல்லாம் வந்திடுச்சி, செலவ பாக்காம, கொஞ்சம் முயற்சி பண்ணியிருக்கலாம், அக்காவும் கோபுவும் பேச்சே கொடுக்கல. இப்ப முத்த விட்டுடிங்களேன்னு, தியாகராஜன் டாக்டருகூட திட்டினாரு, அப்பவே அவர் சொன்ன‌ பெரிய டாக்டர, அதான் அதுல‌ பெசலிஸ்டாமே, பாத்திருக்கலாம். இனிமே ஒன்னும் பண்ணமுடியாதுன்னு கண்டமேனிக்கு திட்டினாரு. நா உங்க அத்தான நேர்ல பாத்து சொல்லியும்கூட, ஒரு மனுசன் எத்தன வாட்டிதான் சொல்லுவான் சொல்லு, கேட்கவேயில்ல, எல்லாம் அவன் தலயெழுத்து போ.’

அண்ணனின் வயது அவருக்கு, அவருடன் படித்தவர், அவரின் மகளின் திருமணப்பேச்சு நடப்பதாக போனமுறை வந்தபோது செய்தி அடிப்பட்டது. ஜவுளி வியாபாரம் புடவை வாங்கி விற்பவர், இவருடன் அண்ணன் கொஞ்ச காலம் துணைவேலைக்கு கூட இருந்தார். போகும்போது நீயாவது பார்த்துக்க தம்பி என கூறிச்சென்றது மனதில் ஏதோ உறைத்தது.

அக்கா திருமணமாகி மடப்புரம் போனாள். சின்ன அண்ணன் வேலைக்காக மும்பைக்கு போனார். சின்னஅண்ணன் தான் அவனுக்கு வேலை வாங்க ஏற்பாடு செய்தார், அதேபோல் அவன் கல்யாணத்தை அக்காவும் அத்தானும்தான் செய்துவைத்தார்கள். அண்ணன் மீதான‌ பொருப்பற்று இருப்பதாக நினைக்கும் ஏனென்று புரியாத ஒரு சலிப்பு சின்னஅண்ணிடமும் அக்காவிடம் வந்தது இந்த இடத்திலுருந்து வந்ததாக நினைக்க தோன்றியது. ஆனால் அது ஒரு தற்காலிக நிகழ்வாக நினைத்திருந்தான்.

அக்காவின் இந்த சலிப்பு வேறு ஒருவரிடத்தில் காணமுடியாதது. அவள் பிறருக்கென்று செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு சுயநலமிருப்பதை மிக விரைவாகவே கண்டுணரமுடியகூடியது. நகை அசைவுகளை எப்போது உணர்ந்திருப்பதை கூறலாம் அக்கா. மார்பில் தவளும் டாலர் செயின் விலகி செல்வதை எப்போது அவள் மனம் அதன் அசைவுகளை அனுமானித்தபடி இருக்கும். அதை நேர்கோட்டில் கொண்டுவர‌ அவள் கைகளுக்கு பணிக்கப்பட்டிருந்தன போலிருக்கும். அத்தானுக்குகூட அச்செய்கையில் ஒரு பெருமை கொண்டிருப்பது தெரியும். கலாவிடம் பேசும்போது அது நகை குறித்த பேச்சாகவே இருக்கும்.

அக்காவை மிக மெதுவாக புரிந்துகொண்டதாக தோன்றும். அல்லது ஒரு வயதிற்குபின் பெண்கள் மாறிவிடுவார்களா? அண்ணனை பெரிய டாக்டரிடம் காண்பிக்கலாம் என்ற பேச்சு வந்தபோதெல்லாம் அக்கா ஏன் அதீத கோபம் கொண்டாள்? சின்னண்ணும் மாமாவும் அதை ஏன் பின் தொடர்ந்தார்கள்? வீட்டை விற்க சொன்னபோது ஏன் தீவிரமாக எல்லோரும் மறுத்தார்கள்?. அப்போதெல்லாம் தேவையற்ற கோபம் அவர்களிடமிருந்து வெளிப்படுவதையும், தனிபேச்சில் அவர் மீதான் கிண்டல்களும் பொதுபேச்சில் அவர் மீதான கோபங்களையும் கண்டிருக்கிறான்.

பலவாறு பித்துபிடித்தவன் போல மாலைமுழுவதும் வீதிகளில் சுற்றியழைந்தான். வீட்டிற்கு வந்தபோது அண்ணன் எழுந்திருக்க வில்லை.

அவன் உறங்க செல்லும்போது சட்டென அண்ணனின் முனகல் கேட்டு எழுந்தமர்ந்தான். அவரால் உடனே எழுந்து உட்காரமுடியவில்லை. கைநடுக்கத்துடன், தலைதள்ளாட்டத்துடன் அவனின் உதவியுடன் எழுந்தமர்ந்தபோது கண்கள் சந்தித்த கணத்தில் அழுத்தி விரிந்த உதடுகளுடன் சிரிக்கும் அதே கண்களை கண்டான். ஆனால் நிதானம் கண்டவுடன் அடிபட்ட பார்வையில் வேறுபக்கமாக பார்ப்பதுபோல் தோன்றியது. பின் மெதுவாக சிரித்தார். அவர் எப்போதும் சிரிப்பது இப்படித்தான் வாய்திறந்து எத்துப்பல்லுடன் கண்களில் கபடமில்லாமல் சட்டென சிரித்துவிடுவார். மனிதர்கள் இருவருக்கா துரோகம் செய்ய நினைக்கிறார்கள் என்று ஏனோ மனம் பதைத்தப‌டி இருந்தது.

என்ன சொல்வதென்று தெரியவில்லை. பீய்ந்த பழ‌ம்துணிபோல அவரை கண்டதில் பேச நா எழாமல் திணறினான்.

வந்திடியாப்பா என்றார் அதுகூட அதே உற்சாகத்துடன் இருந்தது போலிருந்தது.

எண்ணன்னே இப்படி இருக்கீங்க என்றபோது அவர் கண்கள் ஒரு முறை சந்தித்துக் கொண்டன..

எதுவும் பேச விருப்பமில்லாதவர்போல் கசப்பை தின்றுவிட்ட வாயாக அழுத்திய உதடுடன் மவுன‌ம் காத்தார். பிரசவ வேதனையில் இருக்கும் பசுபோல‌ என்னடா தம்பி செய்யறது… என்றார். பலமுனங்களுடன்தான் பேச்சு தொடர்ந்தது. சுற்றுமுற்றும் பார்த்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டு எப்போதும்போல பேச‌ ஆரபித்தார்.

என்வாழ்க்க இப்படியே போச்சு… அத விடு நீ எப்பவந்த கலா எப்படி இருக்கு… பொன்னு எப்படி இருக்கா… என்று ஆடிய கையுடன் நீண்ட முன்வந்த கழுத்துமாக மிக மெதுவாக கேட்டார்.

அவன் அவனையறியாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவரை நேர்கொண்டு கண்களை பார்த்து பேசமுடியவில்லை, சிறு விம்மலுடன் அவன் உடல் குலுங்கியது.

எல்லாம் நல்லா இருக்காங்கண்ணே… நீங்கயேண்ணே இப்படி இருக்கீங்க

அத விட்றா என்பது போல கை அன்னிச்சையாக ஆடி எதையோ தட்டுவதுபோல அசைத்தார். இந்தகணம் இங்கேயே முடிந்து ஒடிவிடலாம் எனதோன்றியது.. மூச்சு வேகமாக விட்டு தன்னை ஒருநிலை படுத்திக்கொண்டார்.

‘நீ வரமாட்டியோன்னு நினைச்சுகிட்டிருந்தேன். ஆனா எனக்கு தெரியும் நா சாவுறத்துக்குள்ள நீ வருவேன்னு. உங்கிட்ட கொஞ்சம் பேசிட்டேன்னா நிம்மதியா செத்துபோயிடுவேன்’.என்றார்

அப்படியெல்லாம் சொல்லாதிங்கணே.. என சட்டென‌ பெருங்குரலெடுத்து அழுதான்.

தனக்கு சில உண்மைகள் தெரியும் என்பது போல‌ அவர் உதடுகளில் தெரிந்த மெல்லிய சிரிப்பு மலந்தது.

மெல்லிய குரலுடன் இரவு முடியும் வரை பேசிக்கொண்டிருந்தார். எல்லாம் பழைய நினைவுகள் மட்டும். யாரையும் ஒரு குறைகூட சொல்லவில்லை. குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்களின் பெயர்களை ஏதோ மந்திரம் போல சொல்லிக்கொண்டார். அவன் எடுத்துவந்த உணவில் பாலைம‌ட்டும் அருந்திவிட்டு உறங்கிபோனார்.

தூசியும் அதீத நெடியும் பழகிவிட்டிருந்தது நாளை நன்கு சுத்தம் செய்து அண்ணனை நல்ல டாக்டரிடம் காண்பிக்கவேண்டும் என நினைத்துகொண்டான். தூக்கமும், அசதியும் அலைகழித்தாலும் ஒருவித முழிப்போடு மீதி இரவு முழுவதும் இருந்தான். வெளவ்வால்களின் ஓட்டம் கூடத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலையென தொடர்ந்தது. ரேழீயின் முற்றத்து வெளித்தில் அதன் உடலின் மினுக்கம் மின்னல் கோடுகள்போல் தெரிந்து மறைந்தன. வீட்டில் மனித நடமாட்டம் குறைந்ததுமே வெள‌வால்களின் நடமாட்டம் பெருகிவிடுகின்றன. பின் வீடு அவைகளுக்கானவை.

அக்கா, மாமா, சின்னண்ணன், கலா இவர்களுக்குள் ஒரு திட்டம் இருப்பதாக நினைத்துக் கொண்டேயிருந்தான். அண்ணிக்கு கடவுள் மீது அதீத நம்பிக்கை உண்டு, அதனாலேயே இதில் தலையிடுவதில்லை என தோன்றியது.

அண்ணன் முனங்கள் ஒலிகளோடு தூங்கிகொண்டிருந்தார் தீடீரென வெளவால்களின் கூட்டம் அதிகரிப்பதும் அதன் செம்பழுப்பு கண்கள் தன்னை நோக்கி வருவதுமாக இருந்தது. அவைகள் கன‌வுகள் என தெரியவர நெடுநேரமாகியது. இனிமேல் தூங்க முடியாது என்று நினைத்து எழுந்தபோது படபடப்பு நீங்க சிலநிமிடங்கள் ஆயின. தூக்கத்தில் நாலைந்து முறை தூக்கி போடப்பட்டதை மெல்ல நினைத்துக் கொண்டான். அதற்குள் கிழக்கே வெளிச்ச கீற்றுகள் வருவதை வலது ஓரத்தில் இருந்த இரும்புகம்பியின் ஊடே குளிர்ந்த காற்றுடன் வானம் விடிவதை கவனித்தான். முற்றத்தில் வெண்பழுப்பு நிறமாக தெரிந்த மேகங்களை கவனித்தபடி பாய், தலையனைகளை எடுத்து வைத்தான்.

அண்ணன் புரண்டுகூட படுக்காமல் அந்த பெஞ்சில் அப்படியே படித்திருந்தார். மெல்லிய குறட்டைஒலி கேட்பதாக தோன்றியது. எவ்வித சிறு அவைவுமின்றி கிடந்தது மேலும் துக்கத்தை ஏற்படுத்தியது. குனிந்து அண்ணனை பார்த்தபோது இதோ இறந்துவிடப்போகிறார் என்று மனம் ஏனோ பயந்து நடுங்கியது.

டீ குடிக்க‌ நிதானமாக‌ வீட்டைவிட்டு நடந்து செல்ல ஆரம்பித்தான். வட்டி குருக்குள் தெருவின் நடுவில் தெற்குபார்த்திருந்த வீட்டிலிருந்து கிளம்பி இலக்கின்றி நடக்க ஆரம்பித்தான். கல்லூரி சாலைவந்ததும் இடப்பக்கம் திரும்பி நடந்தபோது பூக்கடைகள், மெடிக்கல் என சிலகடைகள் மட்டுமே திறந்திருந்தன‌. ஜெகன்னாத பிள்ளையார் கோவில் வெளிச்சத்தில் கிடந்தது. வாசலில் பூகட்டும் பெண்மனி அவனை ஒரு முறைபார்த்து வாங்க வருகிறாரா என்று நோட்டமிட்டுவிட்டு பூகட்டுதலை தொடர்ந்தாள். கோவிலை கடந்தது வந்த மோரிவாய்க்காலின் நாற்றத்தில் அந்த பகுதி தினறியதாக தோன்றியது. வாய்காலில் மாட்டியிருந்த பேப்பர், கயிறு, மண், பிளாஸ்டிக் பொருட்கள் வெளியே ரோட்டோரமாக வீசியெறியப்பட்டிருந்தன. இன்னும் சற்று தூரம் வந்தபோது நாராயணன் காலனிதெருவிலிருந்து வெளிவந்த மதியம் பேசிய‌ ராமமூர்த்தி அண்ணன் அவனை பார்த்து சிநேகமாக பார்த்து சிரித்துவிட்டு சென்றார்.

மகாமகம் மேல்கரைக்கு வந்தபோது வெய்யில் ஆரம்பித்துவிட்டிருந்தது. இத்தனை காலைவேலையிலும் வாட்ச்மேன் கிழவர் எடிஎம்மில் காவலுக்கு அமர்ந்திருந்தார். வறுமையை காட்டும் உடலும் உடையும் மனதை அரித்தது. உடல் ஏன் இந்த காலையில் வேர்க்கிறது என்று பதற்றம் ஏற்ப்பட்டது. காலைவெயிலில் நடந்து அண்ணா சிலையருகே வந்தபோது தலைசுற்றியது. முனையில் இருந்த டீகடையில் டீகுடித்தான். மாஸ்டர் அவனையே பார்ப்பது போலிருந்தது. ராமமூர்த்தி அண்ணன் சொன்னது மனதில் ஓடியது. எத்தனை ஆதங்கத்துடன் சொல்லிவிட்டார்.

எதிரே மெடிக்கல், பூச்சிமருந்து கடைகள் திறந்துகொண்டிருந்தார்கள். அதன் சத்தம் அக்காலைவேளையில் மிக பெரியதாக இருந்தது. தஞ்சைவழிச் செல்லும் பஸ்கள் தறிகெட்டு புழுதியை கிளப்பியபடி தாறுமாறாய் அந்த வளைவில் ஓடிக்கொண்டிருந்தன. ஏன் இப்படி ஓடுகிறார்கள் என்று யோசிக்கும்போதுதான் சுயநினைவு வந்ததாக தோன்றியது.

உடலும் மனமும் ஒரு வரிசையில் வராமல் தவிப்பதை, அதன் அவஸ்தையை உணரமுடியாமல் அபிமுகேஷ்வரர் கோயிலில் மதில் சுவரில் சாய்ந்து கதறியழுதான். அழஅழ அதன் வேகம அதிகரித்து சென்றபடியே இருந்தது. நேற்றிரவே அண்ணன் பலமுனங்களுடன் இறந்துவிட்டிருந்தார். காலையில் அவரை கண்டபோது கண் திறந்து வாய்மட்டும் சின்ன புன்னகையுடன் சிலைபோல கிடந்தார். கைகளும் காலும் உடலோடு கட்டப்பட்டதுபோல திமிறினான். ஓடிச் சென்று குளத்தில் உயிரை மாய்த்துக்கொள்ள சொல்லி மனம் கதறியபடியிருந்தது. அண்ணே அண்ணே ஏன்ணே போனீங்க. தன்னை கவனித்தப்படி சென்ற சில மனிதர்கள்கூட அவன் மனதில் நிற்கவில்லை.

அரைமணி நேரம் அழுதிருப்பான் தான் எப்படியும் இறக்ககூடும் எனற நினைப்பு மாமவிடம் போன் பேசும் முன்புவரை இருந்தது அப்போதுதான் உணர்ந்தான். மாமா உடனே வருவதாக கூறியபின்னே மனம் ஆசுவாசமடைந்தது. மாமாவின் வருகையை அறிந்தபின் மனம் தெளிவடைந்தது. குளிர்சாதன பெட்டிக்கு சொல்லிவிட்டு சின்னண்ணிடம் கலாவையும் அழைத்துவர சொன்னான். கூடவே அலுவலகத்து போன் செய்து லீவ் சொன்னான் ஒரு புயலுக்குபின்னேயான‌ மரம்போல அவன் மனம் ஒருநாள் அமைதியாக கிடந்தது. இத்தனை நினைவில்லாமல் இருந்துகூட வேறொரு மனதால் உலக‌த்தை கவனித்து கொண்டிருப்பது போலிருந்தது.

மாமா, சின்ன அண்ணன், கலா அவனை பார்த்த பார்வையில் அவர்கள் பயந்திருக்கிறார்கள் என தோன்றியது ஏதோசில உண்மைகள் அவன் அறிந்திருக்கிறான், என்னேரமும் அதனால் தன்னை அதுபற்றி கேட்க அல்லது காயப்படுத்தகூடும் என்பதுபோல் கண்களை சந்திப்பதும்பின் விலக்கி கொள்வதுமாக இருந்தார்கள்.

கொள்ளி அவனேதான் வைத்தான். சின்னண்ணனும் மாமாவும் பதினோராம் காரியத்திற்கு வந்துவிட்டு உடனே போய்விட்டார்கள். அண்ணியும் கலாவும் அவர்கள் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். அக்கா மட்டுமே இருந்தாள். அக்கா எதுவும் நடக்காதுபோல அவனுடன் எப்போதும்போல பேசிக்கொண்டிருந்தாள். எப்போது கேட்டாலும் அதற்கு சரியான பதிலைதர காத்திருப்பதுபோல அவனை அவளால் சமாளித்துவிட முடியும் என்பது போல் வீட்டை சுத்தப் படுத்துவதில் முனைபுடன் இருந்தாள். மாமாவும் சின்னண்ணும், அண்ணியுடன், கலாவுடனும் வீட்டிற்கு ஒரு ஞாயிற்று கிழமை வருவதாக போன் செய்தார்கள்.

ஞாயிறு அன்று மதியம் அனைவரும் வந்து கூடியபோது எல்லோருக்கும் சகஜநிலை திரும்பிய‌து போலிருந்தது. மெல்ல பேச்சுகள் வீட்டைச் சுற்றி வந்தன. அந்த மகிழ்ச்சி ஒரு பங்கு அதிகம் கிடைப்பதில் இருக்கலாம்.. ராஜேந்திரன் மாமாவின் உறவுக்காரர் ஒருவர் வீட்டை வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக தெரிந்தது. பாயில் அமர்ந்து சட்டென எல்லோரும் வீட்டைவிற்பதையும் பங்கையும் பற்றிய பேச்சை ஆரம்பித்தபோது, தீர்க்கமாக வாசு, அனைவரையும் சற்று காத்திருக்க சொல்லிவிட்டு வெளிவாசல் வழியாக பின்பக்கம் சென்று சரோஜா பாட்டியை கைபிடித்து அழைத்துவந்து பாயில் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான்.

– சொல்வனம், இதழ் 93, அக்டோபர் 15, 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *