(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவளை அவன் வெறுக்கிறானா? அல்லது விரும்புகிறனா? அவனுக்கே புரியாத புதிர்.
கடவுள் அவனுக்கு அழகையும் அந்தஸ்தையும் ஆடம்பர வாழ்வினையும் அளித்துள்ளார். ஆயினும் ஏதோ ஒரு குறை அவன் இதயத்தை முள்ளாக உறுத்தியது.
ஊமைத் தாயை எண்ணியா? இல்லை… தன் ‘அழகு’ மனைவியை நினைத்தா? அல்லது ஊர் சுற்றும் உதவாக்கரைத் தம்பியை நினைத்தா? அவன் சிந்தித்தான்.
ஊர் சுற்றும் தம்பி! பொறுப்பற்றவன் ! ‘தான்’ மட்டும் என்ன! ரொம்பப் பொறுப்பு. வாய்ந்தவன் என்று கூறிவிட முடியாது. போலியானதொரு வேஷம். சோகத்தை மூடிமறைக்கும் மெல்லிய மேலெழுந்த சிரிப்பு. உள்ளம் நாற்றம் எடுத்தாலும் உடல் மணக்க ‘செண்ட்’ இவற்றுடன் அவனும் உல்லாசப் பேர்வழியாக ஊர் சுற்றித் திரிந்தவன்தான், இருந்தாலும் அவ்வப்போது ஓரளவு பொறுப்புணர்ச்சி ஏற்படுவதுண்டு.
“எப்போது கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்?” என்று ஊமை ஜாடையில் கேட்டுக் கேட்டு உயிர் வாங்கும் தாயாருக்குப் பதில் சொல்லாமலே இஷ்டப்படி காலம் கழித்தவன்தான் அவன்.
செண்டின் மணம் மங்க, உடலில் வியர்வைத் துளிகளோடு, சராசரி வெறும் மனிதனாய்,, லட்சியமற்ற அற்பப் பிறவியாய் ஓர் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவனுக்கு அவன் மீதே எரிச்சல் வந்தது!
எது உண்மையான வாழ்வு என்று புரியாத தவிப்பு!
மறு நாள் –
ஏதோ ஒரு ‘வெறி’யில் திருமணம் செய்து கொண்டு விடுவது என்ற அவசர முடிவுக்கு அவன் வந்தான்.
ஒரு முடிவுக்கு வந்த பிறகு காலம் தாழ்த்துவது என்பது அவனால் முடியாத காரியம்!
தன்னைத் தான் கட்டுப்படுத்தித் தன் உணர்ச்சிகளை வெல்லும் உயர்ந்த மனிதன் அல்ல அவன்!
வெறும் மனிதன்! சராசரி சாதாரண மனிதன்!
அவன் அந்த முடிவோடு அன்று வெளியே கிளம்பியபோது அவன் கண் எதிரில் தட்டுப்பட்ட முதல் பெண் வனிதா, இதற்குமுன் அவளை அவன் சந்தித்ததுண்டு, ஒரே ‘பஸ் ஸ்டாப்’பில் இருவரும் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர்.
ஓடிந்து விடுவது போன்ற உடல் அமைப் புடன் இடுப்பைச் சுற்றித் தழுவிய அந்தப் புடவை இன்னும் அவரை மெல்லியதாகக் காட்ட, ஒரு கூடைப் புத்தகங்களுடன் அவள் நின்ற காட்சி அவன் கண் முன் வந்தது.
எல்லோரையும் போல் அவனும் அன்று அவளை அலட்சியமாகத்தான் பார்த்தான். பஸ்ஸில் ஏறும்போது நழுவி விழுந்த புத்தகங்களை அவன்தான் எடுத்து அவளிடம் தந்தான். அப்போதுகூட அவளைப் பற்றியோ, அவள் உருவ அமைப்பைப் பற்றியோ அவன் சிந்திக்கவில்லை. ஏதோ பீகார் பிராந்தியப் பஞ்ச உருவத்தைப் பார்க்கும் இரக்கம்தான் அவன் உள்ளத்தில் ஏற்பட்டது.
அதற்குப் பிறகு இன்னொரு நாள் –
‘எக்ஸிபிஷூ’னில் அவள் ‘கீச் மூச்’ என்று ஏதோ ஒரு கடையில் பேரம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டான்.
அவளது குழி விழுந்த எலும்பு தெரியும் கன்னங்களையும், சதைப் பிடிப்பற்ற மெல்லிய கரங்களையும், எவ்வித உருவ அமைப்புமின்றிச் சப்பிட்டுக் கிடக்கும் உடலின் அழகற்ற தன்மையையும் பார்த்து ‘ஐயோ பாவம்’ என்று இரக்கப்பட்டான்.
கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தீவிரத்தன்மையுடன் மன அமைதிக்காக அவன் சினிமா பார்க்கக் கிளம்பியபோது தான் அவள் மீண்டும் அவன் கண்களில் தட்டுப்பட்டாள். அவன் அவளை இப்போது உற்றுப் பார்த்தான்.
உடனே திருமணம் செய்து கொண்டுவிட வேண்டும் என்ற அர்த்தமற்ற பரபரப்பு! ஊமைத் தாயிடம், உதவாக்கரைச் சகோதரனிடம் இறக்கி வைக்க முடியாத என் இதயச் சுமையை யாரிடமாவது இறக்கி வைக்க வேண்டும் என்ற தவிப்பு!
அவள் கிடைத்தாள்.
அடுத்த முகூர்த்தத்திலேயே ஊமைத் தாயின் உள்ளம் மகிழ, ஊர் கூட, உற்றமும், சுற்றமும் சூழ அவன் திருமணம் நடந்தேறியது.
அவளுக்குக்கூடப் பிரமிப்பாகத்தான் இருந்திருக்க வேண்டும் – அவனுடைய திடீர் முடிவைக் கேட்டு.
ஏதோ மகத்தான காரியம் ஒன்றினைச் சாதித்துவிட்ட மகிழ்ச்சி சில தினங்களுக்குத் தான் அவனுள் இருந்தது.
பிறகு…?
அவன்தான் சராசரி மனிதனாயிற்றே! அவளைப் பார்க்கும்போதெல்லாம், அவள் அவன் அருகில் நெருங்கும்போதெல்லாம் தான் ஏதோ ஓர் அர்த்தமற்ற இக்கட்டில் தன்னைச் சிக்க வைத்துக் கொண்ட பிரமை அவனுள் எழுந்தது.
இப்போதெல்லாம் கண்ணாடி முன் நின்று தன்னை வெகு நேரம் பார்த்துக் கொண்டான். தனக்குத் தானே ஏதோ அநீதி இழைத்துவிட்ட தவிப்பு அவனுள் பரவியது. அழகான, பருத்த, திரண்ட தன் உடல் அமைப்பு, சிவந்த மேனி, சுருள் சிகை. சுழலும் விழிகள் – இவை அத்தனைக்கும் ஈடாக அவளிடம் என்ன இருக்கிறது? மனத் தராசு எடை போடுவதை அவனால் தடுக்க முடியவில்லை.
இல்லறம் என்பதற்குத் தேவையானது அன்பு ஒன்றுதானா? அழகு வேண்டாமா?
‘ஓ! நான் எத்தனை பெரிய மூட்டாள் ! என் வாழ்வை அழித்துக் கொண்டேனே!’
சும்மா? இரவுகளில் மட்டும் உல்லாசமாய் வெளியே, போய்விடுவது போலல்ல உண்மை வாழ்வு! விலக்க விலக்க ஒட்டிக் கொள்ளும் அர்த்தமற்ற பசையாகவல்லவோ இருக்கிறது!
“ஏன் இன்று இவ்வளவு நேரம்?” என்று என்றாவது அவள் கேட்டால் அவனுள் எரிமலை மூளும். இந்தக் கேள்வியைக் கேட்க அவள் யார்? கேட்டால் ஊர் சிரிக்கும்! ‘அவள் உன் மனைவி’ என்ற உரிமையை நிலை நாட்டும்!
ஐயோ! எவ்வளவு பெரிய தப்பு! அவன் அழகுவாழ்வே அழிந்து விட்டதே!
தனக்காக அவன் அழுத நேரத்தில், தன்னுல் அவள் வாழ்வும் அழிக்கப்பட்டு விட்டதே என்ற உண்மையைப் பற்றி எண்ணிப் பார்க்க அவனுக்கு அவகாசமில்லை.
அன்று –
ஏதோ அதிசயமாய் இருவரும் சினிமாவுக்குப் போனார்கள், உள்ளத்துக்கு வாழா விட்டாலும் ஊருக்காவது வாழவேண்டி யிருக்கிறதே!
இதே போன்ற ஒரு சினிமாவினால்தான் தன் வாழ்வு அழிந்து விட்டது என்ற அர்த்தமற்ற வெறுப்பு அவனுள் எழுந்தது.
”ஓ! அன்று இந்தச் சனியன் வராமல் இருந்திருந்தால் எத்துணை நன்றாக இருந்திருக்கும்! ஏன்? வேறு யாராவது ஒருத்தி அழகாக வந்திருப்பாள், என் அருகில் அமர்ந்திருப்பாள். நான் அவசரப்பட்டு விட்டேன். ஏன்? இப்போது மட்டும் என்ன? ஓடி விடலாமா எங்கேயாவது? ஓடு…. ஓடு…” உள்ளம் பேயாய் ஊளையிட்டது.
பாதிப் படத்தில் எழுந்து விட்டான்.
“ஏன்? படம் நன்றாகத்தானே இருக்கிறது?”
அவள் கேட்ட கேள்வி சாதாரணமானது தான், ஆனால் அதில் கனல் கக்கும் எரிமலை ஒளிந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
முன்பெல்லாம் அவனை இப்படி யாராவது கேட்பார்களா? எந்தனை படங்களில் பாதியில் எழுந்து வந்திருக்கிறான்? படம் முழுவதையும் பார்ப்பதும், பார்க்காததும் அவன் சொந்த விருப்பம்! அதில் தலையிட அவள் யார்? யார் அவள்? இந்தக் கேள்வி அவன் கண் முன் விசுவரூபம் எடுத்துச் சிரித்தது.
முழுக்க முழுக்கத் தனக்காகவே வாழ்ந்தவன் : பிறரின் இன்ப துன்ப பாகத்தில் பங்கெடுத்துக் கொள்ளாதவன்; பிறருக்காக எதையும் வாழ்வில் செய்யாதவன்.
இன்று எங்கோ பிறந்து இங்கு வந்த ஒருத்திக்காகத் தன் உரிமைகளை, உணர்ச்சிகளைப் பங்கிட்டுக் கொள்வதோ அல்லது தன் உரிமைகளை விட்டுக் கொடுப்பதோ, தனக்குத் தானே இழைத்துக் கொள்ளும் அநீதியாக, துன்பமாகத் தோன்றியது.
அவன்தான் ஈராசரி வெறும் மனிதனாயிற்றே!
“வாயை மூடிக் கொண்டு வா” அவன் கத்திய கத்தலில் அங்கமெல்லாம் நடுங்க அடங்கிப் போனாள் அவள்.
ஓ! திருமணம் என்ற பந்தம் எத்தனை சிக்கல் திறைந்தது! எல்லாவற்றையும் உதறி விட்டுக் காட்டாற்று வெள்ளமாக, ‘ஓ’வென்ற பேரிரைச்சலுடன் சுத்திக் கொண்டு ஓடும் ரயிலாக எங்காவது ஓட வேண்டும் என்ற ஆவேசம் அவனுக்கு!
வெள்ளத்துக்கும் அணை உண்டு, ரயிலுக்கும் தண்டவாளம் உண்டு என்ற உண்மை மறந்துவிட்டது அவனுக்கு.
அவனோடு ஆபினில் வேலை பார்க்கிறாளே, சரளா, புதிதாகச் சேர்ந்தவள். அவள்தான் என்ன அழகு! இதற்கு முன்னால் அவள் வேலைக்கு வந்திருக்கக் கூடாதா? அதனால் என்ன? இப்போதாவது வந்தாளே!
அவனுள் ஒரு புது உற்சாகம் பொங்கி வழிந்தது.
என்றுமில்லாத திருநாளாய்க் கணவன் தன் மீது சொரியும் அன்பு மழையைக் கண்டு திகைத்தாள் வனிதா, தன் கணவனுக்குத்தான் புத்தி பேதலித்து விட்டதோ அல்லது தான் காண்பதுதான் கனவோ?- சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு.
அருகில் நெருங்கி வரும் அந்த முகத்தை… அதில் தெரிந்த சிவந்த விழிகளை… அதற்குள் தெரிந்த தன் சின்னஞ்சிறு உருவத்தை அவள் பிரமிப்போடு பார்த்தாள்.
“சரளா?” – என்ற குழறலோடு அவள் கைகளை இறுகப் பற்றினான்.
பலி வாங்கும் ஆட்டினைப் புலி அடிப்பது போல் இருந்தது அவளுக்கு!
அவன் கரங்கள் அவள் கைகளை மேலும் முறுக்கின. அவனுக்குத் திடீரென்று ஞானோதயம் பிறந்தது. ஓ எவ்வளவு மெலிந்த சுரங்கள்! இவள் வனிதா அல்லவா?
மயக்கநிலை மாறிச் சட்டென விழிப்படைந்தான் அவன். ஓரே நிமிடத்தில் அவளைவிட்டு விலகினான்.
”வனிதா!” -நிதானத்தோடு பேச ஆரம்பித்தான் அவன்.
“வனிதா… தெரிந்தோ தெரியாமலோ நாம் பிணைக்கப்பட்டு விட்டோம்…ஆனால்… ஆனால்… எனக்கு உன்னிடம் காதல் ஏற்படவில்லை… நான் உன்னை… முழு மனத்தோடு… “- எப்படி முடிப்பது என்று தெரியாமல் அவன் தவித்தபோது அவள் முடித்தாள்.
“தைரியமாகச் சொல்லுங்கள், வெறுக்கிறீர்கள். அப்படித்தானே?” அவளும் பதில் சொல்ல முடியவில்லை. முழு மனத்தோடு அவனால் ஏற்க முடியவில்லை. ஆனால் முழு மனத்தோடு அவன் வெறுக்கவும் இல்லை.
“சொல்லுங்கள்.நான் என்ன செய்ய வேண்டும்?”
“நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உனக்குத் தெரியும்… நாம் முழு மனத்தோடு நிம்மதியாய் வாழவில்லை… ஏதோ ஒரு பிளவு நம்மிடையே இருக்கிறது. இல்லையா?”
“எனக்கு அப்படித் தோன்றவில்லை, ஒரு வேளை உங்கள் கண்களுக்கு அப்படித் தெரிந்திருக்கலாம். நான் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறேன்…”
அவனுக்கு எரிச்சல் வந்தது.
அவள் ஒரே மாதிரியாக இருக்கிறாளாம். அவன்தான் சில சமயம் ‘ஒரு மாதிரியாக இருக்கிறானோ?
“நான் சொல்வதைக் கேள்…. இப்படி நமக்குள் புழுங்கி ஊருக்காகப் போலி வாழ்வு வாழ்வதைக் காட்டிலும்……”
“காட்டிலும்…?” அவள் குறுக்கிட்ட போது அவன் மேலே தொடரத் தயங்கினான்.
தான் காட்டும் முடிவு தனக்கே சரியில்லை என்பது போல் தோன்றியதோ?
தான் தேர்ந்தெடுத்த முடிவு சரியானது தான்… ஆனால் அவனுக்குக் காரணம் காட்டத்தான் சரியாகத் தெரியவில்லை. இப்படி இந்த நரகத்தில் எத்தனை நாட்கள் உழலுவது? இதற்கு ஒரு முடிவு…?
”நான் சொல்வதைக் கேட்க உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். புதுமையாகத் தோன்றலாம். ஒட்டாத உறவை ஒட்ட வைப்பதைக் காட்டிலும் வெட்டிவிடுவது நல்லதில்லையா?”
நேரடியான பேச்சுக்கு வராமல், தான் கேட்பது தனக்கே தவறாகத் தோன்றுவதால் ”இல்லையா?” என்ற கேள்விக்குறியோடு அவன் ‘முடிவை’ச் சுட்டிக் காட்டியவிதம் அவளுக்குப் புரிந்தது!
“ஓட்ட வைப்பதற்கும், வெட்டுவதற்கும் நாம் யார்? திருமணம் என்ற புனிதச் சடங்கின் மூலம் ஏற்பட்ட இந்த உறவை அன்பெனும் பசை போட்டு ஒட்ட வைப்பதுதான் அழகு! பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதுதான் வாழ்க்கை! மீறுவது என்பது ஏற்பட்டால் பழைமைக்கும், அன்புக்கும் என்ன அர்த்தம்? கரையின்றி நிற்கும் சமுத்திரம்கூட ஒரு சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் நிற்கிறது; அசுரப் புயல்கூட ஓர் ஆவேசத்துக்குப்பின் அடங்கித்தான் போகிறது? வாழ்க்கைக்கு ஒரு வரையறை வேண்டும்…”
அவள் முடிக்கவில்லை. ஆனால் அவன் முடித்து விட்டான்.
“நிறுத்து! உன் உபதேசம் கேட்சு வரவில்லை, உன் பழைமைப் பேச்சு ஏதும் எனக்குத் தேவையில்லை. இப்படிப்பட்ட பத்தாம் பசலியாக மக்கள் இருந்தால் இந்தியா என்றுதான் முன்னேறப்போகிறதோ? நான் உன்னை விவாகரத்து செய்வதென்று முடிவு செய்து விட்டேன்.”
அவள் அதிர்ச்சியடையவில்லை. அவள் எதிர்பார்த்ததுதான்,
ஆனால்… ஆனால்…
விவாகரத்திலும், தினம் தினம் ஒரு பெண்ணை நாடுவதிலும்தான் இந்தியா பின் தங்காமல் முன்னேறமுடியும் என்பதோ அவளுக்கு இதுவரையில் தெரியாமல் இருந்தது! இன்றுதான் புரிந்தது !
அவள் நிதானமாகப் பேசினாள்:
“உங்கள் தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் மணமில்லா இந்த மணம் யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் நிகழ்ந்ததல்ல. என்னைக் குற்றம் சாட்டவோ, என் மீது பழியைச் சுமத்தவோ உங்களால் முடியாது. உங்கள் முடிவு அவசர முடிவாக இருக்கலாம். ஆனால் நான் உங்களை வற்புறுத்தவில்லை. இவ்வளவு பலவீன மனம் படைத்தவராக இருக்கும் பட்சத்தில் எதிர் காலத்தை முன்பே சிந்தித்திருக்க வேண்டும். நான் அழகற்றவள் என்பதோ, உங்களுக்குப் பொருத்தமற்றவள் என்பதோ திடீரெனத் தெரிந்த உண்மையல்லவே! இரண்டு மாதங்களுக்குமுன் இதைச் சொல்லி இருந்தால் நான் கூட இதை வரவேற்றிருப்பேன். ஆனால்… ஆனால்… என் வயிற்றில் வளர்ந்து வரும் உங்கள் குழந்தைக்காக நான் இப்போது இந்த ஏற்பாட்டை ஏற்க முடியாமல் இருக்கிறேன். எனக்கு மனைவி என்ற உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் என் வயிற்றிலுள்ளதற்கு உங்கள் குழந்தை என்ற உரிமை என்றும் உண்டு. அது வளர்ந்து ஆளாகும் வரை எனக்கும் இங்கு உரிமை உண்டு. பிறக்கப் போகும் குழந்தையின் உரிமைகளில் தலையிட எனக்கு அதிகாரம் இல்லை….”
அவள் உள்ளே போய் வீட்டான்!
அவன் திகைப்பின் எல்லையில் நின்றிருந்தான். அவள் ஒரு தாய்! அவன் ஒரு தந்தை!
உரிமையைக் கழற்றி எறியும் தருணம் முடிச்சு இன்னும் இறுகுகிறதே! என்றோ அவன் அறிவிழந்த அரை வினாடிக்கு ஆண்டவன் தந்த தண்டனையா? பரிசா?
அவன் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு விட்டானே? நாளுக்கு ஒரு ‘டானிக்’ பாட்டிலும், வைடமின் மாத்திரைகளும், வேளைக்கு ஒவ்வொரு பழமுமாக அவன் வாங்கி வந்து கொண்டிருந்தான். அவள் உடம்பு மேலும் இளைக்காமல் இருக்க, உடம்பை வலுப்படுத்த என்ன என்னமோ ‘இன்ஜெக்ஷன்’! அவனே ஊசி போட்டான். அவளால் அவனைப் புரிந்து கொள்ளவே முடியனில்லை.
எப்படியோ விவாகரத்துப் பிரச்னை தாற்காலிகமாக ஒதுக்கப்பட்டது பற்றி அவளுக்கு மகிழ்ச்சியே !
அன்று –
தன்னை மறந்த அசதியில் ஈஸிசேரிஸ் சாய்ந்தபடியே உறங்கி விட்டிருக்கிறாள்!
“பிள்ளைத்தாய்ச்சி’ப் பெண்ணுக்கு உறக்கத்துக்குக் கேட்பானேன்! அவள் கண் விழித்த போது…..?
வீட்டில் ஒரே அமளி.
அவள் மைத்துளன், ஊர் சுற்றும் ‘அவர். தம்பி’ மோட்டார் சைக்கிளில் வரும் போது அடிபட்டு ‘ஆக்ஸிடெண்ட்’ ஆகியிருக்கிறதாம்…. அண்ணன் ஓடியிருக்கிறான்.
‘பகீர்’ என்றது அவளுக்கு. தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. அடிவயிற்றை என்னவோ செய்தது.
பழகிய தோஷத்துக்கே இப்படி என்றால் பெற்ற வயிறு என்னமாய்ப் பற்றி எரியும்? கடவுளே! அவர் நல்ல சேதியுடன் வர வேண்டுமே… அதோ… அதோ… அவன் வருகிறான். ஆனால்…. நடை ஏன் இப்படித் தளர்த்திருக்கிறது? கண்கள் ஏன் இப்படிச் சிவந்து கிடக்கின்றன? அவன் வந்து என்ன சொல்லப் போகிறான்…?
“அம்மா!”
தாயைக் கட்டிக் கொண்டு ‘கோ’வெனக் கதறி விட்டான் அவன், “நம்மை யெல்லாம் ஏமாத்திட்டுப் போயிட்டான் அம்மா….”
ஒரு கணம் அந்த ஊமைத்தாய் திகைத்து நின்றாள். உண்மை உணர்ந்த உள்ளம் சிலிர்த்தெழுத்து பொங்கு கடலாய்ப் பொங்கிய அதிசயம்!
மரத்திருந்த உள்ளம் திடீரென்று செயல் பட்ட வித்தை! அது அவிழ்த்த இரகசியங்கள்!
கூடி நின்ற கூட்டம் திகைத்து நின்றது!
ஊமை பேசிய விந்தை நிகழ்ச்சி அது! உள்ளம் அழுது அழுது கூறிய அற்புதக் காட்சி அது!
மெய்சிலிர்த்தது அவனுக்கு!
மகனின் இழப்பில் ஊமை உள்ளம் உணர்ச்சிக் காவியமாய்ப் பொங்கிய விந்தை அவனுக்குப் பிரமிப்பாகத்தான் இருந்தது! தாய்மைக்கு இத்தனை சக்தியா? வனிதா அன்று சொன்னது உண்மைதானே? சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கும் கட்டுப்பட்டுத்தான் உலகம் ஊமை உணர்ச்சிகளுடன் வாழ்த்து வருகிறதோ? இவைகளை மீறுவது என்றால் இதில்? இதில் புதுமை இருக்கலாம்: புரட்சி இருக்கலாம்… ஆனால் அன்பற்ற வறண்ட பாலை யாகிவிடுமோ உலகம்?
ஈர உடையுடன் சொட்டச் சொட்ட அவன் வீட்டில் அடியெடுத்து வைத்தபோது உலகமே சூன்யமாகிவிட்ட நினைப்பு, அவன் தனி மரம்!
இப்படியே ஒவ்வொருவராக அவனைவிட்டுப் போகப் போகிறார்களோ?
ஏன்? அவனே அப்படித்தாளே ‘விலக்கி’க் கொள்ளப் பார்க்கிறான்!
‘சட்’டென நினைவில் உறைத்தது ஒன்று.
ஆமாம்….. வனிதா எங்கே? அவள் அவனுடன் ‘அங்கெல்லாம்’ வரவில்லையே !
உள்ளேயிருந்து வேலைக்காரி வந்தாள்,
”வனிதா அம்மா திடீர்னு ‘வயித்து வலி’ன்னு துடிச்சாங்க…. டாக்டர் அம்மா வந்தாங்க. தீடீர்ன்னு மயக்கமும் போட்டிடுச்சி… டாக்டர் அம்மா வனிதா அம்மாவை அவசரமாத் தன் காரிலே ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போயிருக்காங்க…”
அந்த டாக்டர் அம்மாவின் விலாசம் தேடி அவன் ஆஸ்பத்திரிக்கு ஓட்டமாய் ஓடினான்.
அந்த அறையை அவன் நெருங்கும் சமயத்தில்…..
”அவர் மேலே தப்பில்லை, டாக்டர்… நான்தான் அந்த மருந்தெல்லாம் வாங்கி வரச் சொன்னேன், எனக்கு என்னமோ குழந்தை பிறந்தால் இருக்கிற பலமும் போயிடுமோன்னு பயம். அதனால்தான்…. தவிர அவருக்கே ‘இன்ஜெக்க்ஷன்’ போடத் தெரியுமாதலால் வெளி உதவியை நாடாமலே” வனிதாவின் மெலிந்த குரலை அடுத்து லேடிடாக்டரின் கண்டிப்பான குரல் கேட்டது.
“ரொம்ப அழகுதான் போ, பெண்ணே இப்படிச் செய்வாள்னு நான் நினைக்கவேயில்லை. ஏதோ தற்செயலாய் தான் அந்த அறையின் அலமாரியைத் இறக்க நேர்ந்ததே ஓர் அதிசயம்தான்! கெட்டிக்காரி… வெளியார் பார்த்தால் தெரியாதபடி பாட்டியை மாற்றி மருத்துகளை வைத்திருக்கிறாயே… நான் மட்டும் டாக்டராக இல்லாது போலிருந்தால் அந்தக் கருத்தடை விஷ மாத்திரைகளை ‘வைட்டமின் பில்ஸ்’ என்றுதான் நினைத்து ஏமாத்திருப்பேன். நல்ல பெண்!”
வனிதாவின் மெல்லிய அழுதை சோக கீதமாய்ப் பின்னணி பாடியது !
“டாக்டர்! என்னை மரணவாயிலிருந்து காப்பாற்றினீர்கள். என் வயிற்றில் வளரும் சிசுவையும்தான், இன்னுமோர் உதவி டாக்டர்… தயவுசெய்து அவர் என்னைப் பார்க்க இங்கு வந்தால் இந்தக் கேள்விகளைக் கேட்டு அவரைக் குழப்பாதீர்கள் டாக்டர், அவர் மேல் தப்பே இல்லை… அவர் நல்லவர். ரொம்ப நல்லவர்……” தனக்குத் தானே சமாதானம் சொல்வதுபோல் அந்தக் குரல் மெலிந்து ஒலித்தது.
உள்ளே அழைய வந்தவன் அங்கேயே நின்று வீட்டான், ‘ஐயோ’ வனிதா…. நீ எவ்வளவு நம்பிக்கையுடன் நான் தந்த மருந்துகளைக் கண்ணை மூடிக் கொண்டு விழுங்கினாய்! ‘இன்ஜெக்ஷன்’ குழாயை விஷத்தால் நிரப்பியபோது நம்பிக்கையுடன் உன் கசுரங்களை என்னிடம் ஒப்படைத்தாயே. வனிதா! நான் உன்னிடம் அரக்கத்தனமாய் நடந்து கொண்டதற்கு உன் அன்பால் இப்படித் தண்டிக்காதே வனிதா….. நீ தண்டிக்காவிட்டால் என்ன? குற்ற உணர்வே எனை கொன்றுவிடும் போலிருக்கிறதே நீ பெண் என்று நிரூபித்து விட்டாய்; தாயாகப் போகிறவள் என்று நிரூபித்து விட்டாய்!
சற்றுமுன் அவன் தாய் கதறிய அந்தக் கதறல்… அவனுள் மீண்டும் எதிரொலித்தது. “டேய், பாலு! உன்னைப் பத்து மாசம் சுமந்து முழுசா முழு உருவமா நான் பெத்து எடுக்கிறதுக்குள்ளே நான் பட்டபாடு !…. ‘இருக்கிற ஒரு பிள்ளை போதும்னு’ உன் அப்பா வாங்கித் தந்த கண்ட கண்ட மருந்துகளைக் குடிச்சு… டேய்..பாலு, அப்போ என் மனம் பட்ட பாடு உனக்குத் தெரியுமா? உன் ஆயுள் கெட்டி! உடலெல்லாம் வெந்த நிலையில் தீ பிறந்துட்டே! அந்த விஷ மருந்துகளோட வேகம் என் வாய்தான் ஊமையாச்சு! பரவாயில்லே நீ பிழைச்சயேன்னு நான் என் மனசுலே எத்தனை சந்தோஷப்பட்டேன் தெரியுமா? கடைசியிலே?”
தாயின் கதறல் பேரலையாய் காதில் மோதியது! தான் ஊமையாகி மகனுக்கு உயிரளித்தாள் அவன் தாய்.
அவன் மனைவி….?
தான் குற்றவாளியாகிக் கணவனைக் காப்பாற்றினாள்!
ஆனால் அவனோ..?
எந்த உணர்ச்சியும், தியாகமும் இல்லாத ஓர் அற்ப மனிதன்! ஒரு சாதாரண மனிதன்!
ஒரு வெறும் மனிதன்!
தனக்குள் மெல்ல முணுமுணுத்தவாறு அந்த மெலிந்த, அழகற்ற, எலும்புக்கூட்டு மனைவியை நேருக்கு நேர் சந்திக்கும் துணிவில்லாமல், நெஞ்சில் உரமில்லாமல் – அந்த அவலட்சணத்தின் முன் தன் அத்தனை அழகும் அர்த்தமற்ற ஓர் அழுக்காகிப்போன அருவருப்புடன் அந்த வெறும் வெளியே நடந்தான்!
– 1967-11-26