வெறும் மனிதன் ஒருவனின் மரணம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 1,377 
 
 

(1981 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கீழே சலசலத்து ஓடும் வெள்ளம். அதன் வீச்சில் துள்ளித் துவண்டு, எங்கேயோ அமிழ்ந்து போகும் கெழுத்து மீன் குஞ்சுகள். அவற்றைப் பிடித்துவிடும் எத்தனிப்பில் கரையின் இரு மருங்கிலும் தூண்டில் தடியுடன் காத்திருக்கும் சிறுவர் கூட்டம்.

அந்த மதகுக் கண்களுக்கு மேல் குந்தி இருந்து கொண்டு அவற்றையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சின்னவன்.

‘களுக்…. களூக்…’ என ஒரு இழுப்பு. தூண்டிலில் ஏதோ ஒன்றின் கனப்பு. நீரின் சுழிப்பையும் எதிர்த்து ‘தங்கூசி’ எங்கேயோ நகர்ந்தது. மறுபடியும் ‘வெடுக்’கென ஒரு வெட்டு. தூண்டில் தடிகள் மேல் எழுந்தன. தூண்டிலில் அகப்பட்டுக் கொண்ட மீன்குஞ்சுகள் அந்தரத்தில் உடலைப் போட்டு அடிக்க கரையிலேயே….கூய் கூய் என ஆரவாரித்தது.

மகிழ்ச்சியில் விரிந்த முகங்கள் மறுபடியும் தூண்டில் கயிற்றை அகல எறிய, எதுவுமே அகப்படாத சில ஏமாற்றத்துடன் இன்னும் தான் ஒரு இழுப்புக்காக காத்து நின்றனர்.

‘வீட்ட சாக்குக்குள்ள ஒழிச்சு வைச்சிருக்கிற தூண்டிலக் கொண்டுவந்து நானும் ஒருக்கா மீன்பிடிச்சா என்ன?’

எப்போதோ ஒரு நாள் ‘தூண்டிலக் கையால தொடக் கூடாதடா வடுவா. என்னப் போல நீயும் உப்புத் தண்ணியுக்க கச்சக்கட்டோட இறங்கப் போற போல இருக்கு’, என்று அப்பன் அடித்த கையோடு அந்த ஆசையை விட்டவன் தான் இவன்..

ஆனாலும் என்ன! நீர் நிறைந்த மீன்கள் ஒன்றின் மேல் ஒன்று புரள இவனுக்கோ இருப்புக் கொள்ளவில்லை. கையில் கனத்துக் கெண்டிருந்த புத்தகங்களை கல் ஒன்றின் மேல் வைத்தான். நனைந்த மண்ணில் புதைந்து கிடந்த சிற்பிகளைத் தேடிக் கிண்டி எடுத்தான்.

‘சர்…..’ என்று பறந்தது ஒரு சிப்பி. அப்பொழுது தான் புரண்டு நீரின் மேல் எழுந்து கொண்டிருந்த மீன் குஞ்சின் மேல் விழுந்திருக்க வேண்டும். ஆனாலும் என்ன, ஒரு மீன் தன்னும் செத்து விழவில்லை. அவன் மீண்டும் மீண்டும் சிற்பிகளைக் கையில் எடுத்து எறிந்து கொண்டிருந்தான்.

அந்தச் சூழ் நிலையிலே இழந்து போனவன், திடீரென விழித்துக் கொண்டவன் போல் நிமிர்ந்து கண்கள் மிரள விழித்து நாலுபக்கமும் பார்த்தான். அவன் பார்த்துக் கொண்டிருந்த போதே அந்தச் செந்நிற வட்டம் வானத்தின் அடிவயிற்றுள் புதைந்தே போனது. ‘சடக்’கென ஒளி அவிந்து இருள் முளைத்தது. நீர் நிலைகளின் பழுப்புத் தோல் உரிய மெல்லிய கருமை இழுத்துப் போர்த்துக் கொண்டது.

அங்கு நின்றவர்களில் இப்பொழுது எவரும் அங்கு இல்லை. அவன் அந்த இடத்தை விட்டு எழுந்து கொண்டான். கையில் புஸ்தகங்களை எடுத்துக் கொண்டே வீட்டைத் தேடி நடந்தான்.

அவன் படலையைத் திறந்த போது முதலில் கண்ணில் பட்டது, தகர விளக்கு. வெளிச்சத்தில், பாயில் கிடந்த அப்பாவும் அவர் அருகே குந்திக் கொண்டிருந்த ஆச்சியும்தான்.

இவன் மெதுவாக உள்ளே வந்தான். இப்பொழுதுதான் முற்றத்தில் நின்று கொண்ருந்த அப்புவின் சம்மாட்டி தொம்மையனைக் கண்டு கொண்டான். இவன் எதுவுமே பேசாமல் காருக்குள் புத்தகங்களை வைத்துவிட்டு பைக்குள் கசங்கிப் போயிருந்த படங்களை எடுத்து ஒவ்வொன்றாக அழகாகாக் கொப்பியில் ஓட்டத் தொடங்கினான். சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, நீலம், கலர் கலராக ஏதேதோ மலர்கள். அவன் இதுவரை பார்த்திராத மலர்கள். இவனுடைய சிநேகிதன் ஏதோ ஓர் புத்தகத்தில் கத்தரித்துக் கொண்டு வந்து கொடுத்தவை அவை.

இப்போதுதான் நீண்ட மௌனத்தின் பின் தொம்மையனின் பேச்சுக் கேட்டது. இவன் எப்போதோ இங்கு வந்திருக்க வேண்டும். வெகு நேரமாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டும். அவனுடைய கரகரத்த குரலில் களைப்புத் தெரிந்தது.

‘இந்தா அன்னம்மா…. நான் போறன் நாளைக்கிடையில ஒரு முடிவு தெரியவேண்டும். என்ர காசக் கொண்டு வந்து வைக்க வேணும். இல்லாட்டி இவன் சின்னவனையாவது என்னோட கடல விடவேணும் நீங்க படுகிற கஷ்டத்தில இவனுக்கு என்ன படிப்பு வேண்டியிருக்கு’

தொம்மையரின் காலடி ஓசை விசுக் விசுக்கென்று தேய்ந்து மறைந்ததும் தான் ஆச்சியின் குரல் கேட்டது.

‘சீ..இப்படியும் ஒரு மனுசனுக்குப் போய் உழைச்சுக் குடுத்தியே. ஒரு ஆயிரத்தி ஐநூறு ரூபாய்க் காசுக்கு நோய் வாய்ப்பட்டுக் கிடக்கிற மனுசன் எண்டும் பாக்காமல் வீட்டில வந்து கிடந்திற்றுப் போறானே சீ..இவனும் ஒரு மனுசனா..’

சாருக்குள் இருந்த சின்னவனுக்கு எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தது. ‘சரக் சரக் ‘ சென்று படம் ஒட்டிய பக்கங்களைப் புரட்டினான். அழகாகச் சிரித்த மலர்களெல்லாம் வெறும் கலர் – கலரான கோடுகளாகத் தெரிந்தது. அவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.

அவனுக்கு நன்றாகவே ஞாபகத்தில் இருந்தது. இப்படித் தான் ஒரு மாலை நேரத்தில் அப்பு விடுவலைக்குப் போய் திரும்பி வந்திருந்தார். ஈக்கிலில் கோர்த்துக் கையில் கொண்டு வந்த கொய் மீன்களை அப்படியே திண்ணையில் போட்டுவிட்டு ‘அலுப்பாயிருக்கு அன்னம்மா…. கொஞ்சம் சுடுதண்ணி வைச்சுத்தா’ என்று சொல்லிவிட்டுப் படுத்தவர், அதன் பின் எழுந்து கொள்ளவே முடியவில்லை. கைகால்கள் அப்படியே சுரணையற்றுப் போனது. குரலும் நின்று போனது.

இதுவரையும் தொழிலுக்குக் கூட்டிப் போக வந்த தொம்மையர் அன்றிலிருந்து கொடுத்த கடனைப் பெற்றுப் போக வந்து கொண்டிருந்தான். தொம்மையனுக்குத் தெரியாதா என்ன இனி அப்புவிடம் உழைப்பு சக்தி எதுவுமே இல்லை. எல்லாம் தேய்ந்து போனது என்பது.

இவனைக் கண்டு கொள்ளும் போதெல்லாம் சின்னவனுக்கு என்ன என்னவெல்லாம் சிந்தித்துப் பார்த்துக் கொண்டதுண்டு. அந்த வேலிக் கதியாலோடு சாத்தியிருந்த அப்புவின் கறள் பிடித்த ‘மண்டா’வினால் சதை பெருத்த அவன் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து. எப்போதோ ஒரு நாய் இவன் வீதியில் செல்லும் போது வாகனம் ஒன்றில் அடிபட்டு சதை சிதறிக் கிடந்தது போல்… ஆசைப்பட்டுப் பார்த்ததோடு சரி. அவனால் அந்தப் பெரிய ‘மண்டாவை’ நிமிர்த்தித் தூக்கக்கூட முடியுமோ, என்னவோ.

படக்கொப்பியையும் விறுக்கென்று மூடிவிட்டு அந்த மண் தரையிலேயே விழுந்து படுத்து விட்டான். தூக்கம் வருவது போல் இருந்தது. ஆனால் தூக்கம் வரவில்லை. கண்களில் நீர்த்திரையின் எளிவு. இமைகள் கூட மூடத்தான் செய்தது.ஆனாலும் அவன் உறங்கவில்லை.

திடுமென ஒரு சோர்வில் நித்திரை நிஜமாக வந்தபோது யாரோ தலையைத் தடவிக் கொடுப்பது தெரிந்தது. இந்த ஸ்பரிசம் அவன் பிறந்ததிலிருந்தே சாஸ்வதமாகி எஞ்சி நிற்கும் ஒன்று.

‘தம்பி சின்னவன், எழும்பிச் சாப்பிட்டுட்டுப் படு. இந்தா கொஞ்சம் வாயத்திற’

இவன் அரை வாய் திறந்த நிலையில் ஆச்சியின் கையிலிருந்த சோற்றுக் கவளம் உள்ளே சென்றது. இவன் இருமித் திணறினான். ஆச்சி தலையில் அடித்துச் செருமி விட்டுக் கொண்டு தண்ணீரை வாய்க்குள் ஊற்றினான்.

‘தம்பி..’

‘ஊ…ம்’

அடுத்த கவளத்தை உருட்டி வாய்க்குள் திணித்தபடியே ஆச்சி கேட்டாள்- ‘தம்பி நீ தொம்மயற்ற விடுவலைக்குப் போறியா’

அவனுக்கு மறுபடியும் புரைக்கேறியது. மறுபடியும் தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தாள். அவன் குறைப் பிரக்ஞையிலேயே எல்லாம் நடந்தது.

‘அப்புவும் இப்படியே படுக்கையில் விழுந்திட்டார். இனி எங்களுக்கு உழைக்கிறதுக்கு ஆர் இருக்கினம். சம்மாட்டியட்ட பட்ட கடன் ஆர் குடுப்பினம்’

சின்னவன் இப்போது நன்றாகவே எழுந்து குந்திக் கொண்டு நினைவுடனேயே பேசினான்.

‘அப்புவ ஆர் கடன் வாங்கச் சொன்னது அவனட்ட’

‘உங்கட அக்காவுக்கு அவன்ர காசு வந்து தான்ரா கலியாணம் நடந்தது’

‘அதுக்கு நான் என்ன செய்ய’

‘நீ தன்னட விடுவலயில வந்தா…… கடன் கழிச்சு விடுகிறோம்’

‘நான் அவனோட கடலில் போக மாட்டன். நான் போகமாட்டன் எண்டால் போகவே மாட்டன்.’

சின்னவன் சோற்றை அப்படியே விட்டுத் திடுமென எழுந்து விட்டான். செம்பில் நீரை வார்த்து வாயைக் கழுவிக் கொண்டு மறுபடியும் கிடந்த இடத்திலேயே படுத்து விட்டான்.

‘கொஞ்சம் எழும்புமோன பாயப் போட்டு விடுகிறன்’

‘எனக்குப் பாயும் வேணாம் ஒண்டும் வேணாம் போ…..’

ஆச்சி அதற்குமேல் அங்கிருக்க வில்லை. எழுந்துவிட்டது தெரிந்தது. ஆச்சியின் நீண்ட பெருமூச்சு மாத்திரம் கேட்டது. மறுபடியும் அவன் உறங்கிப் போனான். நிஜமாகவே உறங்கிப்போனான்.

ஏதோ ஓர் கனவின் சோகத்தில் அழுதுகொண்டே திடுமென விழித்துக் கொண்டான் சின்னவன். மெல்லிய முணுமுணுப்பும் அழுகுரல்களுமாய்ப் பக்கத்திலே கேட்டது. அவன் உணர்வுப் பொறிகள் மையத்துள் வருவதற்கு முன்பே அவை பெரிதாக சப்தித்தன.

இவன் எழுந்து குந்திக் கொண்டான். நித்திரை அழுத்தத்தில் முதலில் முன்னே விரிந்து கிடந்த நிகழ்வுகள் இவனைத் தொடவில்லை. சில கணங்கள் ஒலித்திரைக்குள் மையமான சில சலனங்கள், அது மெல்ல மெல்லத் தெளிவாகி புலனைத் தொட்ட போது, வெளியே சுள் என்று எறித்தது வெய்யில்.

இதற்குள் விடிந்து விட்டதா!

அப்பு கட்டிலில் நீட்டி நிமிர்ந்து கிடந்தார். அவருடைய இமைகள் இரண்டும் மூடியபடி கிடந்தன. கைகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிய படி நெஞ்சில் கிடந்தன. விரல் இடுக்குகளில் பெரிய கறுப்புச் செபமாலை ஒன்று செருகியிருந்தது. புது வேட்டியும், சால்வையுமாய் அழகான அப்புவை இதற்கு முன்னும் எப்பொழுதோ பார்த்த நினைவு. பெரிய அக்காவின் திருமணத்தின் போது.

தலைமாட்டில் கால் பக்கமுமாய் நான்கு ‘கத்திரிசாலில்’ பெரிய மெழுகுவர்த்திகள். அப்பால் சற்றுத் தூரத்தில் அதே மங்கலான வெளிச்சத்துடன் அந்த வீட்டின் தகர விளக்கு. அப்புவின் கட்டிலைச் சுற்றி மூத்த அக்கா, சின்ன அக்கா, அண்ணன் பெண்சாதி. மாமி, இன்னும் ஊரில் உள்ள என்னென்னவோ உறவு சொல்லிக் கொள்பவர்கள்.

இப்பொழுது அழுகுரல்கள் பலமாகவே கேட்டன. அக்கா தான் கீச்சிட்ட குரலில் உச்ச ஸ்தாயியில் தலையை விரித்துப் போட்டு அழுதாள். ஆச்சி நெஞ்சு நெஞ்சென்று குத்திக் கொண்டு அழுதாள். எங்கிருந்தோ அழுது கொண்டிருந்த சின்ன அக்கா இவனைப் பார்த்து விட்டாள். ஓடி வந்து இவனுடைய கழுத்தை அணைத்து இறுகப் பற்றி முகத்தைத் தேய்த்து என்ன என்னமோ சொல்லி அழுதாள். சுருட்டுப் புகையின் நெடியும் மெழுகுவர்த்தியின் கசிவும், அந்தச் சூழ்நிலை, அவனுக்கு நினைவு தெரிந்ததிலிருந்து புதுசுதான். யார் யாரோ எல்லாம் பொருத்தமில்லாமல் எதை எதையோ சொல்லி அழுது கொண்டிருந்தனர். சிலர் அழுகை இவனுக்கு வேடிக்கையாகக் கூட இருந்தது.

இவனுக்கு அழுகை வரவில்லை. நித்திரையும் கூடத்தான். எங்கேயாவது சப்தம் வராத இடமாகப் படுப்பதற்கு நினைத்துப் பார்த்துக் கொண்டான். முற்றத்தில் போடப்பட்டிருந்த பந்தலின் கீழ் நிறையவே மனிதர்கள்.சுருட்டும், வெற்றிலையுமாய் ஏதேதோ பேச்சு. சவப்பெட்டி திறந்த நிலையில் எல்லாமே தயாராகி விட்ட வேளை. இந்தச் சந்தடிகள் ஆரவாரம் எதுவும் புலன் தொடாமல் எப்படி இவன் நித்திரையில் இழந்து போயிருக்கிறான்.

கோவில் சங்கிடுத்தான் திடுமெனப் பந்தலுக்குள் நுழைந்த போது சிலர் எழுந்து அவரிடம் வந்தனர். மூத்த அக்காவின் புருசன் தான் நெருங்கிக் கேட்டார்.

‘சுவாமி என்னவாம்? வருவாராமா…’

‘சுவாமி வரமாட்டேராம். தீர்வுக்காசு பலமாசம் கட்டுப் படாமல் நிலுவையாக நிற்குதாம். நிலுவை முழுக்க கட்டி முடிச்சாத்தான் பிரதேம் எடுக்க வருவேராம்.’

‘செத்தவற்ற தீர்வுக்காக தொம்மையார் ஒவ்வொரு நாளும் உழைப்பில் கழிச்சு எடுத்தவர் தானே, பிறகு என்ன நிலுவை.’

‘தொம்மையர் கழிச்ச காசு ஒண்டும் சுவாமியிட்ட கட்டயில்லப் போல இருக்கு.’

‘இது ஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா? தனக்குக் குடுக்குமதிக்கு அந்த மனுசனப் போட்டு எவ்வளவு பாடுபடுத்தினவர். ஆனா அவர உழைப்பில் கழிச்சத அப்படியே அமத்திப் போட்டாரே.’

பந்தல் சலசலத்தது. பேச்சும் வசவுகளுமாய்ச் சனங்கள் மத்தியிலே ஏதோ குரல்கள் தொம்மையனைச் சபித்தன.

‘அப்ப என்னதான் செய்யிறது. சுவாமி வராட்டா இப்படியே பிரேதத்தை விடுவதா. கனகாலமாகப் பாயும் படுக்கையுமாகச் சீரழிந்த உடம்பு’ அக்காள் புருசனின் பேச்சைப் பலரும் ஆமோதித்தனர்.

‘தூக்குங்கடா பிரேதத்தை. வாறது வரட்டும். தூக்குங்க.’

யாரோ ஒருவன் முன்னுக்கு வந்து குரல் கொடுத்தான் எல்லோர் புலன்களும் இவன் நோக்கிற் திரும்பவும், இவனை யார் என்று பார்ப்பதற்காகவே முதல் முறையாகவே இருப்பை விட்டு எழுந்து வந்தான் சின்னவன்.

“அப்ப சுவாமி..கோவில்…’

‘அது எல்லாம் பிறகு பாத்துக் கொள்ளலாம். முதலில் செத்தவனக் கொண்டு போய் மரியாதையா அடக்கம் பண்ணுவம். தூக்குங்கடா’ சனங்கள் முண்டி அடித்து நெருக்கவும் சின்னவன் எங்கேயோ பின் தள்ளப் பட்டான். அழுகையும் ஒப்பாரியுமாய் பிரேதப் பெட்டி தலைக்கு மேல் உயர்ந்து நகர்ந்தது.

– இதழ் 150 – மார்ச் 1981, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *