வீட்டை (கூட்டை) விட்டு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 16, 2023
பார்வையிட்டோர்: 2,701 
 
 

நான் அவன் வீட்டை விட்டு வந்துவிட்டேன், வீடா அது கூடு சார் ! கூடு. நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் குடியிருந்திருக்கிறேன். அங்கங்கு எழுபது எண்பது வருடங்கள் கூட குடியிருக்கிறார்கள். அது எல்லாம் குடியிருக்கும் வீட்டை வச்சுக்கறவன் முறையில இருக்கு சார்..!

நான் நாற்பத்தை அஞ்சு வருசம் நல்லாத்தான் சார் வச்சிருந்தேன். இவன் கேக்கலை சார் !. இவங்க அப்பா, அம்மா இருக்கறவரைக்கும், கட்டாயப்படுத்தி இவன் வீட்டை கவனிச்சுகிட்டாங்க சார், அதுக்கப்புறம், ஹூஹூம், கேக்கவே இல்லை சார், நான் என்ன சார் பண்ண முடியும் ? நான் இவன் வீட்டுக்கு கொஞ்ச காலம் குடியிருக்க வந்திருக்கறவன், இவனுக்கு அக்கறை வேணும் சார், தன்னோட வீட்டை எப்படி வச்சுக்கணும்கறது.

எனக்கென்ன சார் கவலை, இவன் வீடில்லையின்னா அடுத்த வீடு, என்ன கொஞ்ச நாளைக்கு தெருத்தெருவா அலையணும், அங்கையிங்கைன்னு பறந்தடிச்சு திரியணும், அதுக்கப்புறம் எனக்குன்னு ஒரு சின்ன வீடாவது கிடைக்காம போகாது. இருந்தாலும் இந்த மாதிரி ஆளுங்களை என்ன சார் செய்யறது?

நானும் பொறுத்து பொறுத்துத்தான் பார்த்தேன் சார், கடைசி ஆறு மாசம் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரி அப்படீன்னு போய் அப்பப்பா…இவனால நான் வீட்டுல நிம்மதியா இருக்க முடியலை சார், சரிதான் போடான்னு வெளிய போயிடலாமுன்னா, எதையோ ஒண்ணு செஞ்சு அதுவும் இந்த டாக்டர்களும் உடந்தை, என்னைய விடாம புடிச்சு வச்சு, வேதனையில சித்திரவதை பண்ணிட்டாங்க சார். இப்பத்தான் சார் வீட்டை விட்டு இல்லை இல்லை கூட்டை விட்டு வெளியே வந்து கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். வெளியில சுத்தறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு  என்ன பண்ணறது!

ஆளை பாருங்க, என்னமோ கண்ணை மூடி சுகமா தூங்கறமாதிரி படுத்துகிட்டு இருக்கான். ஏன் சார் நாற்பத்து ஐந்து வருசத்துல என்னைய வெளியே அனுப்பிட்டானே, இவனெல்லாம்…எரிச்சலா வருது ! எப்ப பார்த்தாலும் எல்லா கெட்ட பழக்க வழக்கங்களையும் செய்வான். வரைமுறை இல்லாம இப்ப பாருங்க என்னையும் விரட்டி விட்டுட்டு இப்படி அலைய விட்டுட்டான். போகட்டும் விடுங்க சார், அடுத்த வீடு கிடைக்கற வரைக்கும் இப்படியே அலையறதுதான். வேற வழி!

சார்  இதுவரைக்கும் இருந்தனே, அந்த வீடு இல்லை, இல்லை கூடு சார் கூடு எப்படி இருக்குதுன்னு பார்க்க போனேன் சார் ! என்னமோ அவ்னை சுத்தி சடங்கு மாதிரி செஞ்சுகிட்டு இருந்தாங்க, நெத்தியில வட்டமா ஒரு உலோகத்தை பதிச்சிருக்காங்க, தலைக்கு மேல விளக்கும், ஊதுபத்தியும் எரிஞ்சுகிட்டு இருக்கு!

எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு! நீங்களே சொல்லுங்க சார் இந்த வீட்டுக்கு, இல்லை கூட்டுக்கு நாற்பத்தி அஞ்சு வருசம்தான் இருக்கும், ஒழுங்கா இருந்தா இன்னும் பத்திருபது வருசம் இருந்திருக்கலாமில்லை!    எனக்கென்ன சார் நான் பறந்து போய் எங்காவது இருப்பேன். அடுத்த கூடு கிடைக்கறவரைக்கும்!

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *