வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம்

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,002 
 

சென்ற ஆண்டு வந்த வத்தலகுண்டு மாமா ‘குடிலில் ஒளிரும் விடிவெள்ளி’ பற்றி நிறைய செய்திகள் சொன்னாரு இல்ல! நம்ப ஏசு பொறந்தப்ப ஏதோ நட்சத்திரம் வந்துச்சு…அது வால் நட்சத்திரம் அப்டின்னு…ஏதேதோ கேள்விப் பட்டத பத்தி கேட்டப்ப ‘தம்பி… …அடுத்த ஆண்டு வரும் போது மறக்காம கேளு… சொல்றேன்னு” சொன்னாரு இந்த ஆண்டு மாமா வருவாருன்னு காத்திருந்தோம். ஆனா வரலையே! அவருக்கு ஏதோ அவசர வேலையாம். அதுக்கு பதிலா “வால் நட்சத்திரத்தையே அனுப்பி வைக்கிறேன். ஆனா ஜாக்கிரதைன்னு” போன்ல சொன்னாரு! எங்களுக்கு ஒண்ணும் புரியல! ஆனா காத்திருந்தோம். கடைசில வால் நட்சத்திரம் வந்து சேர்ந்தப்ப மயக்கம் போடாத குறைதான்!

மாமா எச்சரிச்ச மாதிரி வந்தது என்னவோ சரியான வால் நட்சத்திரம்தான்! பேரு பாலு! சரியான வாலு! அவரோட 5 வயது பேரன். அடேங்கப்பா கத்ரீனா கெட்டது போங்க! கிறிஸ்மஸ் நேரம் ஆச்சா… அம்மா பலகாரம் செஞ்சு ருசி பாக்க வைக்க வேண்டியதுதான். அஞ்சு நிமிஷத்துல தட்டு காலி! கைய போயி கழுவுடான்னா “வாணாம் பாட்டி, வெரலு எல்லாம் நக்கிப் புட்டேன்”ங்குறான். இந்தப் பயகிட்ட இருந்து பலகாரங்களை எப்படி பாதுகாப்பதுன்னு அம்மாவுக்கு ஒரே கவலை! வயசு பொண்ண ஊட்ல வச்சுக்கிட்டு சுத்தி சுத்தி வர வாலிப் பசங்ககிட்ட இருந்து அவள காப்பாத்த கவலை படுற அம்மாகாரி மாதிரி அம்மா அலைபாஞ்சி போனா!

சும்மா சொல்லக் கூடாது! பய படு சுறுசுறுப்பு! சாப்பாட்டுல மட்டும் இல்ல… எல்லாத்துலயும்தான். வருங்காலத்துல பெரிய அரசியல் தலைவனா வருவான் போல! வந்த அடுத்த நாளே எங்க அடுக்கு மாடி வீடுகள்ல குடிஇருக்கும் வாண்டுகள சேத்து பு8 கூட்டம் போட்டுபுட்டான்! எல்லாருக்கும் லீவு வேறு! கேக்கணுமா! பத்தாம் மாடியில இருந்து தடதடன்னு கடைசி அடுக்கு வீடு வரை ஓடுறது என்னா… உய்உய்னு விசில் சத்தம்தான்! மத்தியானம் யாரும் தூங்க முடியல. இவன் வெளியில இருந்தாலாவது வீPட்ல பிரச்சனை கொறையுமுனு பாத்தா வெளியில பிரச்சனை இவனால ரெண்டு மடங்கு ஆகிப் போச்சு! எல்லாரும் எங்க வீடு வரை வந்து பிராது குடுத்துட்டு போனாங்க!

என்ன பண்றதுன்னு யோசிச்சோம்! “மிச்சம் மீதி பலகாரம் செய்ய இவன சித்தாளா வச்சுக்க! சித்தாளு வேல எட்டாளு வேல…மா”ன்னு அம்மாவுக்கு சோப் போட்டோம். அம்மா அரண்டு போயிட்டா! முடியவே முடியாதுன்னுட்டு. ரொம்ப வற்புறுத்துனா ஸ்டிரைக்தான்னு பயமுறுத்துனா… ஆனா பயலோ ‘பாட்டி, பாட்டி நான் ஒனக்கு ஒதவி செய்றேனே… அம்மாவுக்கு நான் தான் ஒதவி செய்வேன்…ஒனக்கும் ஒதவி செய்றேனே… பிளீஸ்’னு கெஞ்சறான். நாங்களும் ஒத்து ஊத ஒரு வழியா அம்மா அரை மனசோட ஒத்துக்கிட்டா! அப்பாடான்னு நாங்க ஆளுக்கொரு வேலைய பாக்க கிளம்பிட்டோம்.

அம்மா வடைக்காக பருப்பை அரைத்துக் கொண்டு பரபரப்பா வேலையில மூழ்கி இருந்தா! கூடவே அப்பப்ப வெங்காயம், பச்ச மொளகா நறுக்கிக்கிட்டுனு ஒரே பிசியா இருந்தா. பாலு பய சத்தத்தையே காணோம். நாங்க நிம்மதியா அவங்க அவங்க வேலைய பாத்துக்கிட்டு இருந்தோம். “அடப் பாவி”ன்னு ஒரு சத்தம் உக்கிராண அறையில் இருந்து கேட்டது. கத்ரினா வேகத்துல பய வெளியே ஒடியாறான். கண்ணகி போஸ்ல ஆனா கைல கரண்டிக் காம்போடு அம்மா பின்னால ஓடியாறா… அப்பா, அண்ணா, தங்கச்சி, நானு எல்லாரும் என்னவோ ஏதுவோன்னு பதறி போனோம்!

அம்மா மூச்ச இரைக்க கத்தறா :’ இவன் கண்ணுல படாம மைசூர் பாகு செஞ்சு உக்கிராண அறையில வச்சிருந்தேனா… எப்படிதான் இந்த கழுகு மூக்குல வேர்த்துதோ…பாவி, பாதிக்கு மேல தின்னு தொலைச்சிட்டானே… கடங்காரன்….”
‘அட, சரிசரி விடு! சின்ன பய…”அப்பா அம்மாவ சமாதானப் படுத்துனார். “அது இல்லிங்க! கடல மாவு..இவ்வளவு தின்னா வயிறு என்னாத்துக்கு ஆவறது…” அம்மா அந்த ஆத்திரத்திலும் அந்த வாலுக்காக அனுதாபப் பட்டாள்!
“சரிமா, நீ போய் உன் வேலைய பாரு! மலை ஜோடிக்க போறேன். அவன நான் பாத்துக்கிறேன்…” – அம்மாகிட்ட சமாதானம் பேசி அனுப்பிவிட்டு அந்த வால் நட்சத்திரத்தை தேடுனா ஆளு சிட்டா பறந்துட்டான். மேல் வீடு கீழ் வீடுன்னு எல்லா இடத்திலேயும் தேடி கடைசியா எட்டாம் மாடி வீட்டுல புடிச்சேன். டிவி முன்னால, ஒரு கைல ரிமோட் கண்ட்ரோலும் மறு கைல பாப் கார்ன் பாக்கெட்டுமா!

வீட்டுக்காரர் கை எடுத்துக் கும்பிட்டார் – “ரொம்ப புண்ணியமாப் போவுங்க… தயவு செஞ்சி இந்த (குரங்கைன்னு சொல்ல வந்தவரு) பிள்ளைய கூட்டிக்கிட்டு போயிடுங்க! வந்ததுல இருந்து சானல மாத்தி மாத்தி ணயி பண்ணி இதொடு மூணாவது தடவையா ரவுண்டு வந்துட்டான்! டிவிக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு…”

ஒண்ணும் பேசாம பாலுவ இழுத்துக்கொண்டு வந்தேன். மொதல்ல கொஞ்சம் முரண்டு புடிச்சான்! “மலை ஜோடிக்க ஒரு கை கொடுடா ராஜா”ன்னு தாஜா பண்ணிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

மலை ஜோடிக்க ஆரம்பித்தேன். பயலும் கொஞ்சம் கை கொடுத்தான். அப்பப்ப உக்கிராண அறை பக்கம் போய் நோட்டம் விட்டான். அம்மா முன் ஜாக்கிரதை முனியம்மா ஆகி உக்கிராண அறைக்கு பெரிய பூட்டாவே போட்டு விட்டாள். பெரிய அண்ணன் அவ்வப்போது வந்து பார்த்து திருத்தங்கள் சொன்னார். மாலை ஆறு மணி ஆகி இருக்கும். பெரும்பாலும் மலை முடிந்துவிட்டது. இனி மின்சார பல்புகளை போட்டு எரிய விடவேண்டியதுதான் பாக்கி. குட்டி குட்டி விளக்குகளை மலையைச் சுற்றி வளைத்துப் போட்டேன். ஏறக்குறைய நான்கு சர்க்யூட்டுகள். பிளக்கை போட்டால் ஒண்ணு கூட எரியல. பாலுவ கூப்ட்டு பிளக்கு பக்கத்துல நிக்க வச்சேன். யாரும் பிளக்க போடமா பாத்துக்கன்னு உத்தரவு! அண்ணன் வேறு பக்கத்துல வந்து நின்னுக்கிட்டாரு. ஒவ்வொரு சர்க்யூட்டு, பல்புன்னு சரிபாத்துக் கிட்டு வர்றேன். கழுத ஒதைச்சா மாதிரி ஒரு ஒதை. கைகால் எல்லாம் ஒதறிப் போச்சு! “அண்ணே, வெளையாட கால நேரம் இல்லியா! இப்ப போய் இப்படி ஒதைக்கலாமா”ன்னு கேட்டேன். அண்ணன் முழிக்கிறாரு! “நான் ஒண்ணும் பண்ணலியே!’ என்கிறார். ‘டேய் பாலு பிளக்கை போட்டியா”ன்னு கேட்டேன். இல்லேனு தலை ஆட்டுனான். “சரி போடாதே’ன்னு சொல்லிட்டு மறுபடி செக் பண்ண கைய வெச்சேன். அவ்ளோதான் மறுபடி செம ஒதை! இப்போ புரிஞ்சு போச்சு… பயதான் பிளக்க போட்டிருக்கான் அதான் செம ஷாக் அடிச்சுருச்சு! “ஏண்டா இப்படி பண்ணன்னு” கைய ஓங்கினா, ” பிளக்கை சொருவுனா என்னா ஆகும்னு பாக்கத்தான்” ங்கிறான் பாவிப் பய மவன்!

ஒரு வழியா அத சரிபண்ணியாச்சு. இன்னொரு ஒயரை வெட்டி இணைக்க பிளேடைத் தேடுனா… அது இவன் கையில… “டேய் வாணாம்… வெட்டிக்குவ…” நான் சொல்லிக்கிட்டு இருக்கும் போதே ‘வீல்’னு சத்தம். பாலு கைல இருந்து ரத்தம். “ஓ”ன்னு அழுகை வேற… எல்லாரும் வந்து கூடிட்டாங்க. தங்கச்சி போய் டிங்ஞ்சர் எடுத்து வந்தா. அப்பாவும் நானும் பாலுவ புடிச்சுக்கிட்டோம். அண்ணன் பக்குவமா அவன் கைல டிங்ஞ்சர் போட்டு சின்ன கட்டும் போட்டு விட்டார். அப்படியும் அவன் வாலுத்தனம் அடங்குல… சமையல் கட்டுக்கும் வரவேற்பு அறைக்குமா சுத்திகிட்டே கெடந்தான்… சமையல் கட்டுல வடை சுட்டுகிட்டு இருந்த அம்மா அவனை பல முறை விரட்டி விட்டாள். அங்க போய் ஒளியறதும் இங்க தாவி குதிக்கறதுமா ஒரே அட்டகாசம். “ஒரு எடமா உட்காரேண்டா”ன்னு முதுவுல ரண்டு வச்சேன்.

மலை முடிச்சாச்சு! லைட் போட்டாச்சு! மலை கீழ் பக்கமா தாள சுத்தி மூடியாச்சு! அம்மா வடை சுட்டு முடித்த கையோடு பல வீடுகளுக்கு பலகாரம் கொடுத்து அனுப்பத் தொடங்கினா. தங்கச்சியும் நானுமா புது உடுப்புல மாத்தி மாத்தி பலகாரம் கொண்டு போய் கொடுத்துகிட்டு இருந்தோம்.

டெலிபோன் மணி அடிச்சுது. எடுத்து பேசிய அம்மாவின் முகம் எட்டுக் கோணலாக மாறியது! “என்னது எங்க வீட்டு வடையில மருந்து வாசனையா…? மசாலா கொஞ்சம் கூட போட்டுட்டேன் போல…அதான்!” அம்மா சமாளித்துக் கொண்டு பதில் கூறினாள்! அப்பா உக்கிராண அறையில போயி மிஞ்சி இருந்ததுல ஒரு வடைய புட்டு வாயில போட்டவரு தூ தூன்னு துப்புனாரு. “ஆமாண்டி வடையில மருந்து வாசனைதான் வருது… இம் அயோடின் டிங்ஞ்சர் வாசனை…” – அப்பா சொல்ல அம்மா ‘ஙே”ன்ன முழிச்சா! “வடையில மருந்து வாசனை எப்படி?” – யாருக்கும் புரியல!

“கண்டுபுடிச்சிட்டேன் கண்டுபுடிச்சிட்டேன்”ன்னு ஆர்க்கிமடீஸ் “யூரேக்கா யுரேக்கா”ன்னு கத்துன மாதிரி தங்கச்சி கத்துனா! “நம்ம பாலுவோட வாலுத்தனம் தாம்மா. அவன் வெரல வெட்டிகட்கிட்டான்னு டிங்ஞ்சர் போட்டு கட்டு கட்டுனோம்ல… பாவி வெரல வச்சுக்கிட்டு சும்மா இல்லாம அடுப்பங்கரையில போயி வடை மாவ ஒரு கலக்கு கலக்கி இருக்கான் போல! அதான் மருந்து வாசனை அடிக்குது வடை” என்றாள். “எங்க அந்த பய”ன்னு அம்மா கேட்க அப்பத்தான் கவனிச்சோம்… கொஞ்ச நேரமா அவன் சத்தத்தையே காணோமுன்னு.

எங்க போயிருப்பான்? வீடு முழுக்க தேடியாச்சு… ஆள காணோம். பரபரக்க நான் ஒரு பக்கம் தங்கச்சி ஒரு பக்கமா ஒடுனோம். எல்லா வீடுகள்ளயும் தேடுனோம். பயல காணோம்! எல்லாருக்கும் ஒரே கலவரம்.
மறுபடியும் டெலிபோன் மாமாதான்! பேரனுக்கு வாழ்த்து சொல்ல கூப்ட்டாரு. “பய வெளியே போயிருக்காண்ணா…” – அம்மா ஒரு வழியா சமாளிச்சா! அதுக்குள்ள பல டெலிபோன்கள்… வடையில மருந்து வாசனைன்னு. மசாலா அதிகம்னு அம்மா சமாளிச்சுக்கிட்டு இருந்தா! எங்கு தேடியும் பாலுவைக் காணோம்! ராத்திரி சாப்பாடு யாருக்கும் எறங்கல! மணி வேற ஆகிக்கொண்டே இருந்தது. இரவு சாமப் பூசைக்கு வேற போவனுமே! மணி பத்து பத்தரை இருக்கும்! பேசாம போலீசுக்கு போவ வேண்டியதுதான்னு முடிவுக்கு வந்தோம்.

அப்ப – மலை ஒரு குலுங்கு குலுங்கியது! எங்களுக்கு தூக்கி வாரி போட்டது. மறுபடியும் ஒரு குலுக்கல்! அட மலையில என்ன பூகம்பமா? எல்லாரும் திகீலோட மலைய பாக்க, “இம் பசிக்குது பாட்டி”ன்னு… சோம்பல் முறிச்சுக்கிட்டே மலை தாளை கிழிச்சுக்கிட்டு வெளியே வந்தான் பாலு.

“அடப் பாவி! எப்படா அதுக்கு உள்ள போன”ன்னு நான் அதட்ட அத்தனை பேரும் அவன் மேல் பாய்ந்தோம். அவன் மாவுல கைய போட்டுட்டு பாட்டி அடிக்க போறான்னு பயந்து போய் விளையாட்டா உள்ள போய் ஒளிஞ்சுகிட்டு இருக்கான். அது தெரியாம நானு மலை தாளை போட்டு மூடிட்டேன் போல. உள்ள பதுங்குன பய அசந்து போய் தூங்கிட்டான்!

எல்லாரும் அவன் மேல பாயவே டக்குனு குடில் முன்னாடி மண்டி போட்டு, ‘சேசு பாப்பா, சேசு பாப்பா சீக்கிரம் வந்து பொறந்துடுங்க… ஒங்க கூட நானு வெளையாடனும்”… கண்ணை மூடிக்கொண்டு பய பக்தியா அவன் செபிக்க நாங்க அந்த வால் நட்சத்திரத்தை – எங்கள் வீட்டுக்கு வந்த அந்த வால் நட்சத்திரத்தை அப்படியே அணைத்துக்கொண்டோம்.

ஆம், ஆயிரம் தவறுகள் செய்தாலும் ஏசு பாப்பாவை நம் மனக்குடிலில் பிறக்க அழைத்து விட்டால் நாமும் பாலுவைப் போல் நல்ல பிள்ளையாகிவிட மாட்டோமா!

– ஆல்பர்ட் [albertgi@gmail.com] (ஜனவரி 2009)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *