எப்போது விடியும் விடியுமென்று காத்துக்கிடந்த நதினிக்கு இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. தூங்குவதற்கும் அவள் மனம் சம்மதிக்கவில்லை. சற்று கண்ணசரலாம் என்று இமையை எப்படியாவது கஸ்டப்பட்டு மூடினாலும் அவைகள் சிறகை விரித்துப் பறக்கும் பறவைபோல் திறந்துகொள்கின்றன. அந்த சிறிய அறைக்குள் நடந்து பார்த்தாள். மீண்டும் பெட்டின்மீது வந்து அமர்ந்து பார்த்தாள். சற்றுநேரம் கழித்து ஜென்னல் கதவைத் திறந்துகொண்டு வெளியே எட்டிப் பார்த்தாள். இதற்கிடையில் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கடிகாரத்தையும் பார்த்துக்கொண்டாள். இவள் பதட்டத்தைப் புரிந்துகொள்ளாத அந்தக் கடிகாரம் இயல்பாகத் தன் வேலையைச் செய்துகொண்டிருந்தது. நம் வாழ்க்கையில் நாம் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். காலத்தை மாற்றமுடியுமா என்ன?, அது நம் கையிலா இருக்கின்றது. எல்லாம் தெரியும் நந்தினிக்கு. இருந்தாலும் இந்தப் பொழுது சடுதியில் விடிந்துவிடவேண்டும். அவ்வளவுதான் அவளின் சிறிய ஆசை. கால்மேல் கால் போட்டுக்கொண்டு பெட்டின்மீது படுத்திருந்த நந்தினி எதையெதையோ மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாள். இந்த யோசனைகளுக்கு நடுவே அவளின் கால்கள் ஒன்றின்மீது ஒன்று மாறி மாறி உட்கார்ந்துகொண்டிருந்தன. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஆயிரம்பேர் கூடி நின்று அட்சதை போட்டு வாழ்த்திய திருமண உறவை நாளையோடு நீதிமன்றம் வெட்டிவிடப் போகிறது. திவாகரனோடு ஓராண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகின்றது. மனதில் கொஞ்சம் நஞ்சம் தேங்கிக்கிடக்கும் நினைவுகளைக் கூட நாளையோடு பொசுக்கிவிடலாம். இனி திவாகரன் என்ற பெயர்கொண்ட நபரைக் கூட என் வாழ்நாளில் சந்தித்துவிடக்கூடாது என்று நந்தினி எண்ணிக்கொண்டிருக்கையில் காலைக் கதிரவனின் ஒளிக்கீற்றுகள் ஜென்னல் கதவுகளைத் துளைத்துக்கொண்டு தன் படுக்கையின்மீது விழ நந்தினி எழுந்துகொண்டாள்.
அந்த நீதிமன்றம் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது. வழங்கறிஞர்களும் நீதிமன்ற ஊழியர்களும் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்தனர். சில வழக்கறிஞர்கள் நீதிபதி கேட்கும் வினாக்களுக்கு இப்படி இப்படித்தான் பதிலளிக்க வேண்டும் என்று தங்கள் வழக்காளர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தனர். சில புதிய குற்றவாளிகள் நீதிபதி முன்னர் சரணடைவதற்காகத் தம் வழக்கறிஞர்களோடு வெளியில் காத்துக்கொண்டிருந்தனர். அந்த நீதிமன்ற வளாகத்திற்குள் சரியாகப் பத்து மணிக்கு வந்து சேர்ந்தாள் நந்தினி. அவளோடு அவள் பெற்றோரும் சகோதரனும் வந்திருந்தனர். அவர்களின் முகங்களில் சோகக்கலை படிந்திருந்தது. அவள் மட்டும் அவர்களுக்கு விதிவிலக்காய் இருந்தாள். தன் மனதைக் காயப்படுத்திய திவாகரனுக்குத் தீர்ப்பு வழங்கும் நாளல்லவா?, அவன் துக்கத்தை இவள் கொண்டாட வேண்டாமா! கொண்டாட்ட மனநிலையில்தான் இருந்தாள் நந்தினி.
இரண்டு பேருமே வேலைக்குப் போகின்றவர்கள். இரண்டுபேருமே ஒரே நேரத்தில் வீடு வந்து சேர்வார்கள். சேர்ந்தே சமைப்பார்கள். சேர்ந்தே சாப்பிடுவார்கள், பரஸ்பரம் பேசிக்கொள்வார்கள். கைநிறைய காசு, மனம் நிறைய ஆசைகள், இஸ்டம்போல் வாழ்க்கை. இடையிடையே கோபம், கொஞ்சல் என்றுதான் போய்க்கொண்டிருந்தது நந்தினிக்கும் திவாகரனுக்குமான வாழ்க்கை. அவர்களின் இந்த விளையாட்டுத் தனமான வாழ்க்கையில் ஓராண்டு உருண்டு ஓடியதே தெரியவில்லை. அடுத்த ஆண்டில்தான் நாட்களை அவர்கள் நரகமாய் ஆக்கிக் கொண்டனர். விட்டுக் கொடுக்கும் குணத்தை வீட்டிற்கு வெளியே விடும் கால்செருப்பைப் போல அவர்கள் வெளியிலேயே விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர். ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்ளாமல் பகையைத் தழுவிக்கொண்டனர்.
பெற்றோரும் மற்றோரும் உடன் இல்லாத நகர வாழ்க்கை. பக்கத்து வீட்டில் மனிதர்கள் இருக்கிறார்களா விலங்குகள் இருக்கின்றனவா என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் கூட இல்லாத அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள். ஒருவர் முகத்தையே ஒருவர் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொள்ளுதலில் உண்டாகும் சலிப்பு. ஒருவரின் பலவீனத்தை இன்னொருவர் எளிதாகப் புரிந்துகொள்ளும் சூழல். இவையெல்லாம் சிறிய சண்டை என்றால் கூட ஊதிப் பெரிதாக்கிக் கொள்ளும் வாய்ப்பினை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருந்தன. சிறு தவற்றைக் கூட மன்னிக்கும் குணமற்ற மனிதர்களாக அவர்கள் வளர்ந்திருந்தனர். இப்படித்தான் ஒருநாள் அவர்களுக்குள் சிறு வாய்த் தகராறு உண்டானது. அது கைகலப்புவரை சென்று முடிந்தது. சிறிதாய் வெடித்த கருத்து வேறுபாடு பூதம்போல் மிகப்பெரிதாய் வெடித்து கீரியும் பாம்புமாய் பார்த்துக்கொண்டனர் நந்தினியும் திவாகரனும். பல நேரம் சமாதான முயற்சிகளை எடுத்துப் பார்த்த திவாகரனுக்குத் தோல்விதான் மிஞ்சியது. சில நாட்களுக்குள்ளாகவே தனி அறைக்குத் தாவினாள் நந்தினி. எத்தனை நாட்களுக்குத்தான் தொலைக்காட்சி பெட்டிபோன்ற உயிரற்ற பொருட்களோடு உறவாடிக் கொண்டிருப்பது. அவளுக்கு மனிதர்கள் மீது ஞாபகம் வந்துவிட்டது. தன் தவறுகளைச் சகித்துக்கொள்ளும் தன் கோபத்தை ஏற்றுக்கொள்ளும் அப்பா அம்மா கனவில் வந்து அழைக்க, தன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலிக்கயிற்றைக் கழற்றி திவாகரனின் டேபிளில் வைத்துவிட்டுத் தாய்வீட்டிற்கு நடையைக் கட்டத் தொடங்கினாள் நந்தினி.
அலைபேசியில் அழுது பார்த்துவிட்டு நேரகவும் சென்று தன் தவறுகளைத் திருத்திக்கொள்வதாய்ச் சொன்ன திவாகரனின் கையில் விவாகரத்து நோட்டிசைக் கொடுத்துவிட்டு வாய்ப் பேசாமல் உள்ளே போய்க் கதவைச் சாத்திக்கொண்டாள் நந்தினி. அவள் மேஜர் அல்லவா!, அவள் எடுக்கும் முடிவை அவள்தானே தீர்மானிக்க வேண்டும். அவள் விசயத்தில் நந்தினியின் அப்பாவும் அம்மாவும் ஊமையாகிப் போயிருந்தனர். திவாகரனின் தாய்த் தந்தையரை அவள் ஒரு பொருட்டாகவே மதித்தாகத் தெரியவில்லை. திவாகரனின் மீது இருக்கும் அதே வெறுப்பும் கோபமும் அவனின் அப்பா அம்மா மீதும் இருந்தது. சம்மந்திகள் இருவரும் சங்கடப்பட்டு நின்றதுதான் மீதி.
இரண்டு மூன்றுமுறை இருவரையும் கூப்பிட்டு வைத்து சமாதானமாய்ப் போகச் சொன்ன நீதிபதி மன நல ஆலோசனைக்குக் கூட சிலநாள் ஒதுக்கித் தந்தார். அவை எல்லாம் நந்தினிக்கு அவசியமில்லை. அவள் எப்போதோ முடிவெடுத்துவிட்டாள் அவனைவிட்டு விலகுவதென்று. அப்புறம் எதற்கு ஆலோசனையெல்லாம். ஆறேழுமாதம் நடந்துகொண்டிருந்த வழக்கு இன்றைக்கு முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையை நேற்றே கொடுத்திருந்தார் நந்தினியின் வழக்கறிஞர். நீதிபதி தீர்ப்பினைப் படிக்கவேண்டும் திவாகரனின் திணறலைப் பார்க்க வேண்டும் என்றது நந்தினியின் வக்கிர புத்தி.
நீதிமன்றத்திற்கு வெளியிலேயே நின்றுகொண்டிருந்த நந்தினியின் கண்கள் அதன் நுழைவுவாயில் பகுதியையே பார்த்துக்கொண்டிருந்தன. எத்தனையோ முகங்களையும் மனிதர்களையும் வரவேற்பறையில் நின்று வரவேற்பவள்போல் நின்றுகொண்டிருந்த நந்தினியின் கண்கள் திவாகரனையே தேடித் திரிந்தன. அவன் வருவதாய்த் தெரியவில்லை. கைகளைப் பிசைந்துகொண்டாள். தன் ஆசை நிறைவேறாமால் போய்விடுமோ என்று அச்சப்பட்டாள். அதெப்படி நிறிவேறாமல் போகும், கண்டிப்பாக திவாகரனைப் பார்த்துவிட்டுத்தான் இந்த நீதிமன்ற வளாகத்தை விட்டுப் போவேன் என்று தீர்க்கமாக முடிவெடுத்துக்கொண்டாள் நந்தினி. நீண்டநேர சிந்தனைக்குப் பிறகு அந்த நீதிமன்ற வளாகத்தையே நோட்டமிட்டவள் திவாகரனின் வழக்கறிஞரைப் பார்த்துவிட்டாள். ஏன் திவாகரன் வரவில்லை என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். நேராகப் போய்க் கேட்டுவிடலாம் என்று வழக்கறிஞருக்கு அருகே போனாள் அவள்.
சற்றுநேரத்திற்கு முன்புதான் நீதிமன்றத்திற்கு வரும் வழியில் விபத்தில் சிக்கி திவாகரன் இறந்துவிட்டான் என்ற தகவலை ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் அவன் வழக்கறிஞர். இந்த செய்தி காற்று வழியாக அவள் காதில் வந்து விழுந்தது. அதிர்ந்துபோனாள் நந்தினி. இப்போது அவள் மனதில் ஊடுருவி இருந்த கெட்ட திவாகரன் தொலைந்துபோயிருந்தான். நல்ல திவாகரன் மட்டுமே அவள் இதயத்தை ஊசிபோல் தைத்துக்கொண்டிருந்தான். அவன் செய்த சின்ன சின்ன தவறுகளும் பேசிய வார்த்தைகளும் இப்போது அவளுக்குப் பெரிதாகவே தெரியவில்லை. அவன் இப்படி விபத்தில் சிக்கி இறப்பதற்குத் தான் தான் காரணம் என்று நம்பினாள் நந்தினி. திவாகரன் இறந்துவிட்ட செய்தியைக் கேட்ட சற்று நேரத்தில் அவள் மனம் இப்படி மாறிப்போனதை அவளால் நம்பவே முடியவில்லை.
திவாகரனுக்கு விவாகரத்தைப் பரிசாகக் கொடுக்க நினைத்தவளுக்கு விதவைப் பரிசைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான் அவன். இனி தீர்ப்பு எப்படிவந்தாளும் இருவருக்கும் ஒன்றுமில்லை.