தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,797 
 

“”இதப்பாருங்க தொச்சு மாமா… என்னடா, இந்த கிட்டா மணிப்பய இத்தனை பேசுறேன்னு நினைக்காதீங்க… கொட்டப்பாக்கை அடிநாக்குல வச்சிகிட்டு, நுனிநாக்கை கடிக்கிற அசமஞ்சம் இல்லை நான். எனக்கு எல்லாம் சரியா இருக்கணும்,” விசிறி மடிப்பு கலையாமல் அங்கவஸ்திரத்தை சரிசெய்தபடி கிட்டாமணி ஐயர், எச்சரிக்காத குறையாக சொல்லிவிட்டுப் போனார்.
“”என்னடா பட்டாபி… என்னடா இது கருமாந்திரம்? கொக்கு தலையில வெண்ணைய வச்சிக்கிட்டு, அது குடுமியை பார்த்துகிட்டே உட்கார்ந்த கதையால இருக்கு… இந்த கிட்டாமணி கருமித்தனம் உலகம் எல்லாம் பிரசித்தி. அப்படியிருக்கும் போது, நட்டுமாமா, அவர் வீட்டு விசேஷத்தை நம்ம தலையில கட்டி, மெனக்கெட வச்சிட்டாறேடா…”
தொச்சு மிக மென்மையாய் பட்டாபியின் காதுகளில் கிசுகிசுத்த போதும், கிட்டாமணிக்கு கேட்டிருக்குமாய் இருக்கும். அஷ்ட கோணலாய் முகத்தை வைத்துக்கொண்டு, பக்கத்தில் வந்து நின்றார்.
விருந்து“”மாமா… தப்பா நினைக்காதீங்க… நம் வீட்டுக்கு சமைக்கிறவங்க யாரும், சமைக்கும் போது தாம்பூலம் போடக்கூடாதுன்னு, நட்டு மாமா கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன். அவர் சொல்லலயா? அதுசரி, அவங்க நாலுபேரும், உங்க அடிபொடிங்க தானே?
“”தம்பிகளா… போய் மேலுக்கு வஸ்திரம் போட்டுகிட்டு வாங்களேன்டா… வெத்து மேலோட கக்கத்தை சொறியறது என்ன, சமையல்காரவங்க தேசிய சின்னமா? தொச்சு மாமா, நீங்க கொஞ்சம் சிரமம் பாக்காம, வாஷ்பேசின்ல போய் வாய்கொப்பளிஞ்ச்சுட்டு வந்திடுங்களேன்.”
அடுப்பின் அனலைவிட, கிட்டு மாமாவின் கிடுக்கிப்பிடி தகித்தது. ஒருநொடி இப்படி அப்படி நகரவில்லை மனுஷன்.
“”தொச்சு… நீ நினைக்கறது நல்லாவே புரியுதுடா… ஜாதிக்கூட்டத்துக்கு வந்தாலே, கிட்டு பண்ற அலப்பரை தாங்காது தான். ஆனா, என்ன செய்ய… இவர் நம்ம ஆடிட்டர் ஆதிகேசவனுக்கு மாமா முறை… அவர் பர்சனலா ரிக்கொஸ்ட் செய்றாருடா… நம்பள வரச்சொல்லி. எனக்கு அன்னைய தேதிக்கு சுந்தரேசன் வீட்டு முகூர்த்தம் இருக்கு… நீ பாத்துக்க… நீ வேற நான் வேறயா?”
கரண்டியை கையில்பிடிக்க கத்துக்கொடுத்த நட்டுமாமா கேட்கும் போது, முரண்டு பிடிக்க முடியுமா?
“”தொச்சு மாமா, என்னால ஆவல… நான் வீட்டுக்கு போறேனே…” கொத்சலான உடற்கட்டு கொண்ட நானா, சக்தியை திரட்டி, கத்திப் பேசியது சிரிப்பாய் இருந்தது.
“”என்னாச்சுடா நானா… உனக்கென்ன நோக்காடு இப்போ?”
“”நாலு கிலோ முந்திரி பருப்பு வாங்கித் தந்தாராம்… லட்டுல முந்திரியை காணலைங்கறார். பாயாசத்துல சர்க்கரை பத்தலை, சாம்பார்ல வெங்காயம் இல்லைன்னு கணக்கு கேட்குறார் மாமா… எண்ணி எண்ணி, எடுத்துப்போட இது வீட்டுல செய்யற கூட்டுக் குழம்பா… இது பந்தின்னு அந்த மனுசனுக்கு தெரியாதா?”
நானாவின் பேச்சுக்கேட்டு, அனைவரும் வாய்மூடிச் சிரிக்க, கிட்டு மாமா சிட்டாய் பறந்து எங்கிருந்தோ வந்தார்.
“”டேய் சாமா… முன்னாடி பதார்த்தத்தை வச்சுகிட்டு, ஈனு ஈசிட்டு நிக்காதடா… எச்சில் தெறிக்குமில்ல… அதுவும் உனக்கு முன்பல் வேற எடுப்பா இருக்கு. தொழில்ல பயபக்தி வேணுன்டா… நட்டு மாமாவோட நாசூக்கும், பதவிசும் உங்கக்கிட்ட இல்லயே…”
குட்டாத குறையாய் சொல்லிவிட்டுப் போனார்.
“”புதுசா புகுந்த வீட்டுக்கு வந்த மருமகளை, மாமியார்காரி பிடுங்கி எடுக்கிறா போல இருக்கே… எப்பத்தான் இந்த கல்யாணம் முடியுமோ,” சலித்துக்கொண்டான் சாமா.
கொஞ்சம் குள்ளமாய், துறுதுறுவென இருப்பார் கிட்டாமணி. அவரின் உலோபிதனத்துக்கு தான், ஆண்டவன் அவருக்கு இரண்டுமே பெண்ணாய் தந்ததாய் அக்ரகாரத்தில் பேச்சு உண்டு.
“”எட்டு நாள் பட்டினி கிடந்தாலும், இவர் வீட்டுக்கு சமைக்க வர்றதில்லைன்னு ஜாரணி மேல சத்தியம் செய்யணும்டா சாமா… போதும் இந்த ஒரு நாள் கூத்தே,” ஆவேசமாய் சொன்னார் தொச்சு.
“”ஜானவாசத்துல மீந்த லட்டெல்லாம், தனியா வைக்கச் சொன்னேனே, பத்திரமா இருக்கில்ல… எந்த இலையிலயும் ஒரு கரண்டி அன்னமும் வீணாகக்கூடாது.”
அடிக்கடி சமையல்கட்டுக்கு வந்து, எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே இருந்தார். பந்தியிலும், அவர் அலப்பரை தாங்கவில்லை.
“”வேணுமின்னா, கூச்சபடாம கேளுங்க… ஆனா, இலையில யாரும் வீணாக்கிடாதீங்க… ஜானகிராமா, பந்தி லட்சணம் தெரிந்து பரிமாறணும்டா… குழந்தைகளுக்கு இரண்டு இட்லியும், ஒரு வடையும் வை. அவங்க சாப்பிட்ட பின், மறுபடி வச்சுக்கிடலாம்.”
பந்தி அனைத்தும் முடிந்துவிட்ட நிலையிலும், நிறைய சாப்பாடு மீந்திருந்தது.
“”என்னண்ணா இது… “ஊருக்கெல்லாம் சொல்லிச்சாம் பல்லி; கழனி பானையில குதிச்சுச்சாம் துள்ளி’ங்கற மாதிரி ஆயிடுச்சு… ஆடிக்கொரு காசும், ஆவணிக்கொரு பணமும்ன்னு பார்த்து பார்த்து செலவழிச்சார் கிட்டாமணி. தாம்பூலப்பை கொடுத்தா, பைக்கு அம்பது செலவாகும்ன்னு, “அதெதுக்கு, வர்றவா வீட்ல. தேங்காய், பழம் இல்லாமயா இருக்கும்…’ன்னு வியாக்கியானம் பேசினவர், இப்போ இவ்வளவு சாப்பாட்ட என்ன செய்யப் போறாரோ…”
புறங்கையால் வாய்மூடி கெக்கபெக்கவென சிரித்தான் சாமா.
“”அதேதான்டா… எங்க வீட்டு பாட்டி சொல்லுவாங்க… கடன்காரனுக்கு கால் வரைக்கும் நஷ்டம்; கருமிக்கு கழுத்து வரைக்கும் நஷ்டம்’ன்னு…போச்சா, நல்லா வேணும்.” முணுமுணுத்தான் பட்டாபி.
ஆனால், தொச்சுவுக்கு மட்டும் நெருடலாய் இருந்தது. முந்நூறு பேர் வருகிற கல்யாணத்துக்கு, ஐநூறு பேருக்கு சமைக்கச் சொல்லும் அளவிற்கு கிட்டாமணி விவரம் பத்தாதவர் இல்லை. நிச்சயமாய் அவருடைய மனசில் வேறு எண்ணமிருக்கும்… அது என்னவென்று தான் புரியவில்லை.
திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் பரிசுப் பொருட்களை தந்துவிட்டு, செயற்கையாய் சிரித்து, முதுகுக்கு பின்னே விருந்தை குறை கூறிக்கொண்டும், கொத்தவரங்காய் மாதிரி இருக்கும் கிட்டாமணியின் மகள் கவுசல்யாவுக்கு, ராஜா மாதிரி மாப்பிள்ளையா என்று அங்கலாய்த்துக் கொண்டே, போலியாய் வாழ்த்தி, விடைபெற்று கொண்டிருந்தனர்.
பனிரெண்டு மணிக்கு மண்டப வாசலில் சலசலப்பு. இரண்டு பஸ் நிறைய ஆட்கள் வந்து இறங்கினர். கிட்டாமணியார் வாசலுக்கே சென்று, அவர்களை வரவேற்றார். யாராக இருக்கும்? தொச்சு ஆவலாய் வந்து எட்டி பார்க்க, உண்மையில் அசந்து தான் போனார்.
“கஸ்தூரி பாய் முதியோர் மற்றும் அனாதை குழந்தைகள் காப்பகம்’ என்று சிகப்பு எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. தளர்ந்தும், வறண்டும் போன முதியவர்கள், நிராதரவான குழந்தைகள். நேராக பந்திக்கூடத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு, கிட்டு மாமா தலைவாழை இலைபோட்டு, தன் கையாலேயே ஓடியாடி பரிமாறினார். சின்ன குழந்தைகளுக்கு அன்பாய் எடுத்து ஊட்டினார். அங்க வஸ்திரத்தால் அவர்களின் முகம் துடைத்தார்.
கஞ்சக்கருமி கிட்டாமணியாரா இது… நம்ப முடியவில்லை யாருக்கும்.
வயிறார சாப்பிட்ட முதியவர்களும், குழந்தைகளும் முகத்தில் அத்தனை திருப்தியோடு அமர்ந்திருந்தனர். மணப்பெண் கவுசல்யா, மாப்பிள்ளை ஸ்ரீதரன் ஆகியோர் கைகளில் கவர்களை கொடுத்து, முதியவர்களுக்கு கொடுக்கச்சொல்லி ஆசி வாங்கச் சொன்னார்.
அந்த வெள்ளை கவர்களில், ஐம்பது ரூபாய் சலவைத் தாள் படபடத்தது. பலருடைய கண்களில் கண்ணீர். இன்னும் சிலரோ, கண்ணீரே வற்றிப் போயிருக்க, நெஞ்சம் கசிய அமர்ந்திருந்தனர்.
“”என்ன மாமா இதெல்லாம்… உங்களை நான் என்னமோன்னு நினைச்சேன். இப்படி அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா தந்துகிட்டு இருக்கீங்க,”ஆடிட்டர் ஆதிகேசவன் தோள்தட்டி புன்னகைத்தார்.
“”என்ன நினைச்ச கேசவா… கஞ்சப் பயல்ன்னு தானே… எனக்கு, தெரியும்டா எல்லாம். எனக்கு அதுனால பாதகம் இல்லை. நான் யார்ங்கற அடையாளத்தை எனக்கு நான் சரியா காட்டிட்டா போதும்ன்னு நினைக்கிறேன்.
“”வயிறார சாப்பிட்டு, மனசார வாழ்த்துற மனசு, இந்த பெரியவர்களுக்கு மட்டும் தான் இருக்கு. சாப்பிட்டு அலுத்து கிடக்கற மனுஷங்கள் எல்லாம், இந்த பந்தியில குறை சொன்னாங்க. ஆனா, இவங்களுக்கெல்லாம், இந்த ஒவ்வொரு கவளமும் தேவாமிர்தம்டா…
“”இதுக்கு பேர் தான் விருந்து. விரும்பி இருந்து உண்றது தானே விருந்து. மீதமான சாப்பாட்டை அங்கே கொண்டு கொடுப்பதை விடவும், இவங்களை இந்த சுபநிகழ்ச்சியில பங்கெடுக்க வச்சு, அவங்களுக்கு உரிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் தந்து, வயிறார சாப்பாடு போட்டு, கையில பணம் கொடுத்ததை நான் பெருமையா நினைக்கிறேன். அதனால தான், இவங்களுக்கும் சேர்த்து சமைச்சேன்…
“”தாம்பூல பையில் கிடக்கிற ஆப்பிளும், சாத்துக்குடியும் என்னோட வசதியை வேணா அடையாளம் காட்டலாம். ஆனா, இப்போ இவங்க கையில தந்த அம்பது ரூபாய், ஒரு வேளை மாத்திரைக்கோ, மூட்டுவலி தைலத்துக்கோ பயன்பட்டா கூட, அந்த புண்ணியம் என் குழந்தைகளை வாழ்வாங்கு வாழவைக்குமில்லயா?”
அவருடைய வார்த்தையில், தன்னை மறந்து நின்றார் ஆதிகேசவன்.
கேட்டுக் கொண்டிருந்த தொச்சுவும், சிலிர்த்துபோய், கிட்டாமணியாரின் கைகளைப் பற்றி, கண்களில் ஒற்றிக்கொண்டு சொன்னார்…
“”மாமா… இனி உங்க வீட்டு விசேஷங்கள் எல்லாத்துக்கும், சமைக்கிற பாக்கியத்தை எனக்குத்தான் தரணும்!”

– எஸ். பானு (நவம்பர் 2012)

Print Friendly, PDF & Email

1 thought on “விருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *