கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 900 
 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கவிதா கருணாகரன்!

அந்த அழகிய பெயரை மீண்டும்… மீண்டும் கவிதா படித்துக் கொண்டிருக்க அவளது கண்களில் இருந்து நீர் தாரைதாரையாக வந்து கொண்டிருந்தது.

ஆண் வர்க்கத்தால் பெண்கள் நசுக்கப்படுகிறார்கள். அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்ற கருத்தால், தன்னையே ஒரு புதுமைப் பெண்ணாக எண்ணிக் கொண்டு இருபத்தெட்டு வயது வரை மணமாகாமலேயே நாட்களை ஓட்டியவளை… உறவினர்களும் நண்பர்களும், பெற்றோர்களும் வற்புறுத்தி ஒரு பொறியியல் பட்டதாரியான கருணாகரனுக்கு மணமுடித்து வைத்தார்கள்.

கருணாகரன் வெளிநாடு சென்று படித்து வந்தாலும், மிகவும் எளிமையானவனாகவும், ஆடம்பரம் ஆடம்பரம் எதுவும் இல்லாதவனாகவும் பெற்றோரை மதித்து வாழக் கூடியவனாகவும் இருந்தான். எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண்களை அதிகம் போற்றுகின்ற குணமும் அவனிடம் நிறைய இருந்தது.

உள்ளூரில் படித்து உயர்கல்வியை முடித்து உள்ளூர் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்த கவிதாவோ கொஞ்சம் ஆடம்பரம் விரும்புகிறவளாய் இருந்தாள். தன் கணவன் தனது உத்தியோகத்திற்கு ஏற்பக் கொஞ்சம் படாடோபமாய் இருக்க வேண்டும் என்று விரும்பினாள். அதை அவனிடம் நேரடியாகச் சொல்லவும் செய்தாள். அவனோ தனது மௌனப் புன்னகையினாலும், சாதுர்யமான பேச்சினாலும் அவளைச் சரிப்படுத்திவிடுவான். அவர்களின் ஆரம்ப வாழ்க்கை இப்படித்தான் ஓடியது. ஆனால் கால ஓட்டத்தில் அவனது கொள்கைகளே வீட்டில் அமுலாக்கம் பெற்றது. எவ்வளவுதான் நவநாகரீக முன்னேற்றத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நமது முன்னோர்கள் கட்டிக் காத்த பண்பாடும், கலாச்சாரமும் நம்மால் சிதைவுபட்டு விடக் கூடாது என்பதில் அவன் உடும்புப் பிடியாய் இருந்தான்.

ஆயிரம் தான் படித்துப் பட்டம் பெற்றிருந்த போதும், பெண் என்பவள் வீட்டில் வலம் வரும் அன்புத் தேவதையாய், அடுப்படி என்ற வேள்வியில் தினமும் யாகம் வளர்க்கும் கிரக லட்சுமியாய் இருப்பதையே அவன் விரும்பினான்.

படித்த மனைவி என்பவள் கணவன் நலம் பேணும் அன்புத் தோழியாய் உடலாலும், உள்ளத்தாலும் ஒருமித்த உணர்வுகளைப் பறிமாறிக் கொள்ளக் கூடியவளாய் இருப்பதையே பெரிதும் எதிர்பார்த்தான் . ஆனால் அவளோ அவனுடைய அபிலாசைகளுக்கு எதிர்மாறாக இருந்தாள்.

நவநாகரீக வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமாய் வேலைக்குச் செல்வதும், கைநிறைய சம்பாதித்து, விரும்பியதை அனுபவித்து மனம்போன போக்கில் வாழ்வை நடத்துவதும் அவளுக்கு விருப்பமாய் இருந்தது. பண்பாடு. கலாச்சாரம் என்று சொல்லிக் கொண்டு ஒரு அடிமைபோல் கணவனுக்குப் பணிவிடை செய்வதையும், ஒரு பொம்மையாய்த் தன்னை அலங்கரித்துக் கொண்டு கணவனுக்கு ஒரு போகப் பொருளாய் உலா வருவதையும் அவள் அறவே வெறுத்தாள்.

கணவன் மனைவி என்பது ஓர் ஒப்பந்தம் என்பதாக மட்டுமே அவள் முடிவு செய்து கொண்டாள். அதில் யாரும் யாருக்கும் அடிமையில்லை என்ற உறுதியான முடிவில் இருந்தாள். எண்ணையும் தண்ணீரும்போல் வாழ் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

இவர்களின் இந்த நாடகத்தின் அரங்கேற்றமாய் அருண் வந்து பிறந்தான். அவன் வரவு தன் ஆண்மையின் வெற்றி என்று பூரித்துப் போனான் கருணாகரன். மருத்துவ மனையில் இருந்து மனைவியையும் மகனையும் அழைத்து வந்த அந்த நாளை ஒரு திருநாளாகவே கொண்டாடினான்.

நண்பர்கள், உறவினர்கள் குழுமியிருக்க வீடே விழாக்கோலம் கொண்டிருந்தது. மகனைத் தந்த மனைவிக்குப் பட்டும் பொன்னும் வைரமுமாய்ப் பரிசளித்தான். விழா முடிந்து எல்லோரும் போனதும் இரவு படுக்கையில் அவளுக்குத் தன் அன்பு முத்தங்களை அள்ளித் தந்தான்.

“கவிதா… இனிமேல்தான் நாம ரெண்டு பேரும் கவனமா இருக்கணும்… ஒவ்வொரு வினாடியும் நம்ம பிள்ளைக்காகவே செலவு செய்யணும். அவனோட வளர்ச்சிக்கு நாம் தான் முன்னுதாரணமாய் இருக்கணும்…”

என்னை விட நீதான் அவன் மேல அதிகமா அக்கறை எடுத்துக்கணும்…”

அன்பும் கனிவும் ததும்ப ஆர்வமாய் அவன் பேசிக் கொண்டிருக்க, கவிதாவுக்கு அவனுடைய சொற்கள் அருவருப்பைத் தருவதாய்த் தெரிகின்றன. அவனது கைகளைத் தள்ளியவளாய்ப் படுக்கையில் எழுந்து அமர்கிறாள்.

“இப்ப நான் என்ன செய்யணும்னு சொல்றீங்க…இப்ப நான் எதைச் செய்யலேன்னு இப்படிக் குத்திக் காட்றீங்க… அக்கம் பக்கத்தில உள்ளவங்கள்லாம் புதுசா பிள்ளைங்க பெத்துக்கலியா…? நீங்கதான் அதிசயமாய்ப் பெத்திருக்கீங்களா…? ஏன் இப்படி அலட்டிக்கிறீங்க…?” அவனிடம் கேட்கிறாள்.

கருரணகரனுக்கு அவளது பேச்சும் போக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது. எவ்வளவு தான் நாகரீகத்தில் மோகங் கொண்டு அலைந்தாலும் ஒரு பெண் முதல் குழந்தையைப் பெற்றதுமே தாய்மையின் முழு குணத்தையும் தாங்கி நிற்பாள். செயலாலும் சொல்லாலும் முற்றிலும் மாறி விடுவாள் என்பதை அவன் அறிந்திருந்த காரணத்தினால் அவன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்கிறான். அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு பரிவுடன் பேசுகிறான்.

“கவிதா… மற்றவர்களைப் பற்றி நமக்கு என்ன பேச்சு! நம்முடைய பிள்ளையோட எதிர்காலத்தைப் பத்திதானே நாம கவலைப்படணும் ! நமக்குப் பின்னால நம்ம குடும்பப் பெருமையை… நம்ம குலக்கொடியா வந்திருக்கிற நம்ம பிள்ளைதானே காப்பாத்தணும். அவன் வழியாகத் தானே நம்முடைய பாரம்பரியம் பண்பாடெல்லாம் காப்பாத்தப்படணும்… அதுக்கு நீதானே வழிகாட்டியா ஒரு பள்ளிக் கூடமா இருக்க முடியும்… இதை நீயும் நானும் முடிவு பண்ணாம வேறு யாரு வந்து முடிவு பண்ணுவாங்க…”

அவள் அவனை நேருக்கு நேராய்ப் பார்க்கிறாள்.

“இப்ப நான் என்ன பண்ணனும்…”

கடுமையாகக் கேட்கிறாள். அவன் அவளைத் தன் கைகளுக்குள் அணைத்துக் கொண்டான்.

“பச்சை உடம்புக்காரி பதட்டப்படக் கூடாதும்மா… அமைதியாகக் கேளு… நான் சொல்லப் போற விஷயம் உனக்குப் பிடிக்கலேன்னா கோபப்படாதே… உன்னோட முடிவை நீ தாராளமாச் சொல்லு. ஆனா நான் சொல்லுறதுல உன்னோட முழு ஒத்துழைப்பும் இருக்கணுங்கிறது தான் என்னோட ஆசை. இப்ப நீ எடுத்தெறிஞ்சு பேசிட்டு பின்னால் வருத்தப்படக் கூடாது. நிதானமா யோசனை பண்ணி பதில் சொல்லும்மா…”

அவன் பொறுமையின் எல்லைக்கே சென்று நின்றான். அவள் தலையை ஆட்டினாள். ஆனால் முகம் மட்டும் இறுகிக் கிடந்தது. திருமணம் என்ற பந்தம் பெண்ணுக்குப் பெருமை தரக்கூடியது என்று சொன்ன வார்த்தைகளெல்லாம் எவ்வளவு பொய்யானவை. எல்லாம் ஏமாற்றுப் பேச்சு…” என்று மனம் குமுறிக் கொண்டிருந்தது. அதன் பிரதிபலிப்பை விழிகள் காட்டின.

“நம்ம பிள்ளையைப் பாத்துக்கிறதுக்காக நான் வேலைக்காரி வைக்கமாட்டேன். அவனுக்குத் தாய்ப்பால் கொடுத்து, உன்னோட உண்மையான அன்பிலேயும் அரவணைப்பிலேயும் நீ வளர்க்கணும், எப்பவும் உன்னோட பார்வையிலேயுேம் கண்காணிப்பிலேயும் அவன் வளர்றதுதான் அவனுக்கு நல்லதுன்னு நான் நெனைக்கிறேன்…”

“அதுக்காக… நான் என்னதான் செய்யணும்… நானே அந்த வீட்டு வேலைக்காரியா மாறணுமா?”

“இல்லே… உன்னோட பிள்ளைக்கு உண்மையான தாயா மாறணும்… அதுக்காக நீ உன்னோட வேலையை விட்டுட்டு வீட்டில் இருந்து பிள்ளைய கவனிக்கனும்!”

அவன் முடிக்கவில்லை, அவள் துள்ளி எழுந்தாள், உடம்பெல்லாம் பதற நின்றாள்.

“என்ன சொல்றீங்க நீங்க…! நான் பிள்ளையைப் பார்த்துக்கிறதுக்காக என்னோட வேலையை விடணுமா…? உங்களுக்கு மூளை கலங்கிப் போச்சுதா? முடியாது… இதை என்னால ஏத்துக்க முடியாது. நான் படிச்ச படிப்பு! வாங்கின பட்டம் என்னோட மரியாதை எல்லாம் என்னாகிறது…? இவ்வளவையும் தூக்கிப் போட்டுட்டு கேவலம் ஒரு வேலைக்காரியாட்டம் நான் வீட்டுலேயே அடங்கிக் கெடக்கணுமா…? உங்களோட அடாவடித்தனத்துக்கு அளவே இல்லையா? ஒருக்காலும் நான் ஒத்துக்க மாட்டேன்…!”

கொதித்து நின்றாள் கவிதா. அவளை மேலும் பேசவிடாமல் அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

கருணாகரன் போனபின் கட்டிலில் விழுந்து நீண்ட நேரம் அழுது கொண்டேயிருந்தாள் கவிதா. அருகே தூங்கும் குழந்தையைப் பார்க்கவே பிடிக்கவில்லை அவளுக்கு. இதைக் காரணம் காட்டித் தானே தன்னை வேலைக்குப் போக வேண்டாம் என்று கூறுகிறான். இந்தத் தொல்லையே வேண்டாமென நான் இவர்களை விட்டுத் தூரமாய்ப் போய்விட்டால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாற் போல் ஆகிவிடும் அல்லவா…?

கவிதாவின் மனம் தீவிரமாய் ஆலோசித்தது. மறுநாள் நேரடியாகக் கணவனிடமிருந்து விடுதலை வாங்கிக் கொண்டு விடை பெறவேண்டும் என்ற முடிவோடு உறங்கப் போனாள். அவள் விரும்பிய பொழுதும் விடிந்தது. அவசரமாய் எழுந்து விளக்கைப் போட்டாள். இருட்டை விரட்டிய வெளிச்சம் அவள் இதயத்தில் பெரிய இடியைத் தூக்கிப் போட்டது.

கட்டிலில் கணவனையும் தொட்டிலில் குழந்தையையும் காணாது அதிர்ந்து போனாள் கவிதா. வீடு முழுவதும் தேடிவிட்டு வாசலுக்கு வந்தாள். வாசலில் நிற்கும் அவர்களின் காரைக் காணவில்லை! உடம்பெல்லாம் நடுங்க ஓடிப்போய்த் தொலைபேசியை எடுத்தவள் மறுகணம் அவளது பெயரைத் தாங்கியிருந்த கடித உறையைப் பார்க்கிறாள். தொலைபேசியை அப்படியே மேசையில் வைத்து விட்டு அந்த உறையைப் பிரித்து உள்ளிருந்த கடிதத்தைப் படிக்கிறாள்.

‘கவிதா… உன்னை மனைவியாய் அடைந்த போது நீ என் வாழ்வை வளமாக்கி வரலாறு படைக்கப் போகிறாய் என்று கனவுகள் கண்டேன். என் வாரிசை உன் வயிற்றில் சுமந்த போது என் கனவுகள் இறக்கை கட்டிக் கொண்டன. என் மகனை நீ ஈன்ற பொழுதில் நீ அதிர்ஷ்டங்கள் அனைத்தையும் ஒரு சேர என் மடியில் கொண்டு வந்து கொட்டி விட்டாய் எண்ணிப் பூரித்துப் போனேன். ஆனால் நீயோ வேறுவிதமாய்ப் பயணத்தை திசைமாற்ற எண்ணங்கொண்டு விட்டாய். குழந்தைகள் இறைவனால் நமக்கு வழங்கப்படும் மிகப் பெரிய வரமாகும். அந்தக் குழந்தைகளை வீட்டுக்கும் நாட்டுக்கும் பயனுள்ள பிள்ளைகளாய் வளர்த்து ஆளாக்கிவிட வேண்டிய பொறுப்பில் உள்ள நாமே அவர்களை விட்டு விட்டுப் பொருள் தேடவும் புகழ்தேடவும் வெளியே போய்விட்டால் அவர்களின் எதிர்காலம் என்ன ஆவது?

கவிதா… நீ நினைத்தால் உன்படிப்பை வைத்து உன் அறிவை வைத்து வீட்டில் இருந்தவாறே பொருளைத் தேடலாம். புகழைத் தேடலாம். ஆனால் உன்னால் அதையெல்லாம் செய்ய முடியாது. நீ சுதந்திரப் பறவையாய் பறக்க நினைப்பவள். இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்கத் துடிக்கும் பழக்கம் எனக்குப் பிடிக்காத ஒன்று!

உன்னுடைய குணங்கள் குழந்தையைப் பாழாக்கிவிடும். அவனை வளர்ப்பதும் என்னைக் கவனிப்பதும் கேவலம் என்று நினைக்கும் உன்னிடமிருந்து முற்றாக விலகிப் போகிறேன். மணவாழ்க்கை பிடிக்கவில்லை என்பதற்காக மணவிலக்குப் பெறவும் நீ முடிவு செய்யலாம் ஆனால் நான் அதைச் செய்ய மாட்டேன். நான் நம் குழந்தையை எப்படியெல்லாம் வளர்க்க விரும்பினேனோ அப்படி வளர்க்க என்னால் முடியும். உனக்கு நான் எந்த வகையிலும் தொல்லை தரமாட்டேன். எனது நன்றியும் நல்வாழ்த்துக்களும்.

அன்புடன்
கருணாகரன்.

கவிதா கடிதத்தைப் படித்து விட்டுச் சிலையாக அமர்ந்தாள். அவனது கொள்கைகள் பிடிக்காமல் அவனிடமிருந்து மணவிலக்குப் பெற்று விட வேண்டும் என்று இரவில் முடிவு செய்தவள், இப்போது அவனது முடிவினால் நிலை குலைந்து போனாள். எந்த உறவுகள் சுமை என்றும், தொல்லை என்றும் நினைத்து அவற்றை உதறிவிட்டுப் போகத் துணிந்தாளோ, துடித்தாளோ அந்த உறவுகள் நிஜமாகவே தன்னை விட்டு பிரிந்து போனபின் அந்தப் பிரிவினால் ஏற்பட்டுள்ள தவிப்பும், ஏக்கமும் இப்போது அலை அலையாய் பெருகத் தொடங்கியது.

ஒரு பெண்ணுக்குக் கணவனால் கிடைத்த கௌரவம், பிள்ளையினால் கிடைத்த பெருமை வேறு எவற்றாலும் வந்து சேர்ந்து விட முடியாது என்பதை இனித் தொடரப் போகும் தனிமை அவளுக்கு உணர்த்த ஆரம்பித்து விட்டது. வெறிச் சோடிக் கிடக்கும் வீடும் வாசலும் கட்டிலும் தொட்டிலும் அவளது அறியாமையைக் குத்திக் காட்டிக் கேலி செய்வது போன்ற பிரமை…!

மணவிலக்கு என்பதை வெகு சுலபமாகத்தான் கைக்குள் எடுத்துக் கொண்டு பல வண்ணங்களாய்ப் பிரகாசிக்கும் தன் எதிர்காலத்தைத் தானே இருளாக்கிக் கொண்ட அந்தப் பேதையின் விழிகள் அருவியாய்ப் பெருக்கெடுத்து விட்டன. அவளுக்கு ஆறுதல் கூற யார்தான் வரப் போகிறார்கள்? அவளது நவ நாகரீக நண்பர்களா?… படித்த படிப்பும் பட்டங்களுமா…?

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *