கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2021
பார்வையிட்டோர்: 5,201 
 
 

அடைத்துவிட்ட படுக்கை அறைக்கு வெளியில் சிரிப்பலைகள் கேட்டு அடங்கிவிட்டன. அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் மங்கிய நீல பல்பின் ஒளி.

கட்டிலில் சாய்ந்தவாறு உட்கார்ந்திருக்கும் அவர். பக்கத்தில் நாணம் பூரணமாய் இன்னும் விட்டு மாறாத சித்ரா. மூலையில் மெல்ல சுழன்று கொண்டிருந்த பழைய மின் விசிறி ஒன்றின் முனகல் மட்டும் லேசாக கேட்டுக் கொண்டிருந்தது.

கழட்டி வைத்திருந்த கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்துவிட்டு அவர் சொன்னார்:

“நேரம் வெளுக்க ரெண்டு மணி நேரம்தான் இருக்குது… ஆமா.. இத்தனை நேரமாய் நான்தான் என்னவெல்லாமோ உளறிக் கொண்டிருக்கேன். எங்கிட்ட நீ ஒண்ணுமே கேட்கல்லியே… ஏதாவது கேளேன்.”

எத்தனையெத்தனையோ விஷயங்களை ஒருசேர கேட்டு அவரைத் திணற அடிக்கவேண்டுமென்று பரவசம் கொள்ளும் நெஞ்சம். இருந்தும், அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என்று வாய்ப்பூட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் தன்னை நைசாக அவர் கிளறுகிறாரா….

அவரை ஓர் தடவை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மௌமானபோது அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

“நான் கேட்கிறதுக்கு மட்டும் தான் பதில் சொல்லலாம். நீயாக வலிய ஒன்றும் பேசிவிடக் கூடாது. கேட்டுவிடக் கூடாது. அப்படிண்ணு யாராவது சொல்லித் தந்திருக்காங்களா?”

இல்லையென்று தலையாட்டிய போது “அப்படீன்னால் கேளேன்” என்று மீண்டும் அவர்…

இவள் மனசுக்குள் ஒருகணம் முக்குளியிட்டாள். முதலில் இவரிடம் எதைக் கேட்பது?

இவராக வலிய கட்டிக்கப் போவதாய் முன்வந்த அன்றிலிருந்தே தன்னை உறுத்திக்கொண்டிருந்ததைச் கேட்டு விடலாமா?

வழக்கம்போல் ஜாதகம் கொடுக்கல் வாங்கல்கள்…. பெண் பார்க்கும் படலங்கள்…. ஆனால் ஒன்றும் கூடிவரவில்லை …. எல்லா ஆண்களுக்கும் பெண் செகப்பாக இருக்க வேணும்…… மூக்கும் முழியுமா கடைந்தெடுத்த லட்சுமி விக்கிரகமாக இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால், போனால் போகட்டு மென்று தாலிகட்ட வேண்டுமென்றால், கை நிறைய லட்சங்கள், சீர்வரிசை. இல்லாவிடில் ரொக்கமாய் மாசச் சம்பளமாய் கிடைக்கும் வேலை….

இவையொன்றும் இல்லாத தன்னை இவருக்குப் பிடிக்கக் காரணம்?

சொந்தமாய் ஃபோட்டோ ஸ்டுடியோ போட்டிருக்கிறார். சம்பாத்தியத்துக்கு குறைச்சல் இல்லை. பையன் பார்க்கறதுக்கும் ஆள் மோசமில்லை என்றெல்லாம் தெரிந்த போது இந்த சம்பந்தம் எங்கே நடக்கப் போNeela Padamanaban - Viralkal - Nov 1991 -2picகுது என்று ஓர் நம்பிக்கையின்மை…ஆனா….

“என்ன பெரிசா யோசிக்கிறே…? சும்மா கேளு… எதுவானாலும் பரவாயில்லே…”

இவள் கையைப் பற்றிக்கொண்டு கட்டாயப்படுத்தினார்.

அவரை ஏறிட்டுப் பார்க்கும் போது மீண்டும் நெஞ்சுக்குள் கசிவு.

‘சீதனம் ஒண்ணும் பேச வேணாம். அவுங்களுக்கு என்ன செய்ய முடியுதோ அதைப் பொண்ணுக்குச் செய்யட்டும். எனக்கு பொண்ணை புடிச்சிருக்கு…’

இப்படி சொல்ல வேண்டுமென்றால்?

சற்று நேரம் இவள் விழிகளைப் பார்த்திருந்துவிட்டு அவரே சொன்னார்.

“நீ என்ன கேட்கப் போறேண்ணு எனக்குத் தெரியும். பரவாயில்லே. நீ வாய் துறந்து கேட்க வேணாம். உன் இந்தக் கண்கள் மீண்டும் மீண்டும் எங்கிட்டே அன்றிலிருந்தே கேட்டுக்கிட்டிருக்கின்றன. நானே பதில் சொல்லிடறேன்…”

சற்று நேரம் என்னமோ நினைத்துக் கொண்டிருந்துவிட்டு, அவர் கையிலிருந்த இவள் வலக்கர விரல்களை திடிரென்று தன் கண்களில் ஒற்றிக்கொண்டு, “இந்த மெல்லிசான நீண்ட விரல்கள்தான் காரணம்” என்றார்.

அவர் எதை சூசகமாய் சுட்டுகிறார் என்பது புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் குழம்புகிறது. ஆனால், மேலும் இதுபற்றி அவரிடமிருந்து விளக்கம் கேட்டுப் பெற இயலாத கூச்சம் உள்ளுக்குள்…

ஓர் சொப்னாவஸ்தையில் என்பதைப் போல், சூழ்ந்திருந்த ஒளியைப் போன்ற மங்கிய ஸ்தாயியில் அவர் குரல் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது இவள் செவியில் காட்சியாய் இவள் அந்தரங்கத்தில் மாய வடிவம் பெற்றுக்கொண்டிருந்த அந்த அடக்கமான குரல்…

“உன்னைப் பார்க்க இந்த வீட்டுக்கு நான் முதலில் வந்த அன்று…முன்னறையில் உட்கார்ந்ததும் கண்ணில் பட்டது சுவரில் சட்டம் போட்டு மாட்டியிருந்த ஓவியம்…. நிறைய வரைகள் இல்லை. ஒருசில வரைகள் மட்டும். வெள்ளைத் தாமரையும். வீணையும். பக்கத்தில் தெரிந்தும் தெரியாமலும் நிற்கும் அன்னப்பட்சியும். மயிலும் இல்லாதிருந்தால் அது கலைவாணியின் படம் என்று தெரிந்துகொள்ள முடியாத அத்தனை நாசூக்கு, நளினம். ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாய் வரையப்பட்ட அந்த சித்திரம் கணநேரத்தில் தன்னில் ஆவகித்துக் கொண்டது. அப்பத்தான் நீ கையில் காப்பியுமாய் வந்தாய். உன் முகத்தையோ, நிறத்தையோ நான் பார்க்கவில்லை. இந்த நீண்ட விரல்களை மட்டுமே கவனித்தேன். பிறகு, என் முடிவை உங்க அப்பா கிட்டெ சொல்ல எனக்கு வேறு எதையுமே யோசிக்க வேண்டி இருக்கவில்லை. அப்புறம்தான், விடைபெற்றுக்கொண்டு இறங்கும்போது தெருவாசலில் நின்று கொண்டு ஒருதடவை கூட அந்த சித்திரத்தை நான் சிரத்தையுடன் பார்ப்பதை கவனித்த உன் அப்பா அது தீ வரைந்த படம் அப்படீண்ணு சொன்னார்!”

சொல்லத் தெரியாத ஒருவகை உவகை உணர்வில் பூரிப்படையும் வெள் உள்ளம்… இந்த பூரிப்பை எப் படி இவரிடம் வெளிப்படையாக தெரிவிப்பது – ஆனால் தெரிவிக்க வேண்டும் என்ற சஞ்சலமும் ஆசையும்…

ஆனால்…

ஏதாவது அசட்டுத்தனமாய் சொல்லவோ, செய்யவோ செய்தால் தப்பாக ஏதாவது நினைத்துக் கொண்டு விட்டால் என்ற உறுத்தல்…

என்னைப் பார்க்க எத்தனை பேரோ வந்து போயிருக்காங்க. தவிர, அப்பாவைப் பார்க்க எத் தனையோ உறவுக்காரங்க, ஃப்ரண்ட்ஸ் இந்த வீட்டுக்கு வந்திருக்காங்க. ஆனா அவுங்க யாருமே இந்தப் படத்தை கண்டுகிட்டதாகவே காட்டிக் கல்ல…

எப்படியோ இத்தனையும் மிகவும் தயங்கிச் சொல்லி முடித்த போது அவர் சிரித்தார்.

“நானும் பார்த்திருக்க மாட்டேன். ஒருவேளை, பார்த்திருத்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் நானும் போயிருக்கக்கூடும். ஆனா….”

அவர் குரலில் இதைச் சொல்லும் போது ஒரு வேதனை…?

சற்று நேரம் மௌனமாய் இருந்து விட்டு, “லைட் ஸ்விட்ச் அங்கே தானே…” என்று கேட்டவாறு எழுந்து. அடைத்திருந்த அறைக் கதவுப் பக்கம் சென்று ஸ்விட்சைப் போட்டார்.

பளிச்சென்று அறைக்குள் பாலாய் பிரவகிக்கும் வெளிச்சம்.

இத்தனை நேரமாய் மனசுக்குள் துளித் துளியாய் நிரம்பிக் கொண்டி ருந்த தன்னம்பிக்கையும், தைரியமும் எல்லாம் மங்கிய நீலவொளியோடு கூட பொசுக்கென்று வடித்து போய் விட்டது போல்…. அறை ஒளியோடு கூட. மனதில் வந்து நிறையும் தாழ்வு மனப்பான்மையும் சுயவெறுப்பும்…

அவள் பக்கத்தில் வந்து கட்டிலில் உட்கார்ந்து, மீண்டும் அவள் வலக்கரத்தைப் பற்றி, விரல்களை இதமாய் நிவர்த்தி, உள்ளங்கை ரேகையின் மீது அவர் வலக்கை கட்டை விரலை வைத்துவிட்டு, “பார்த் தாயா?” என்று கேட்டார்.

இவள் பார்த்தாள். மனம் துணுக்குற்றது.

அந்த விரல் நடுவில் ஓர் வெட்டுக் காய வடு. தொழுநோய் பாதித்தது போல் வெளுத்து, குறுகி, சூம்பிப் போய், மொத்தத்தில் அலங்கோலமாய்…

இவள் முகபாவத்தைப் பார்த்து விட்டு, “பயப்படாதே. பார்க்கத் தான் பயங்கரமா இருக்கே தவிர, இப்ப வலியொண்ணும் இல்லே எலக்ட்ரிக் ஷாக்பட்டு இப்படியாகி விட்டதாகத்தான் எல்லோரும் தெனச் சிருக்காங்க. ஆனா நிஜமா நடந்தது…” என்று பதினைந்து – ஆண்டுகளுக்கு முன் பள்ளி இறுதியிலே வகுப்பில் அவர் படிக்கும்போது நடந்ததைச் சொன்னார்.

அடி நாட்களிலிருந்தே படம் வரைவதில் அபார ஆர்வம். வகுப் பில் கரும்பலகையில் ஏதாவது படம் வரைய வேண்டியிருந்தாலும், பள்ளி விழாக்களில் சித்திரம் தீட்டி ஏதாவது அலங்கார வேலைப்பாடு கள் செய்ய வேண்டியிருந்தாலும், தலைமையாசிரியர் உட்பட எல்லா ஆசிரியர்களும் இவனைத்தான் அழைப்பார்கள். வகுப்பில் சும்மா உட்கார்ந்திருக்கும் போதும் இவன் விரல்கள் எதையாவது இறுக்கிக் கொண்டிருக்கும்… சித்திரக் கலை யில் அப்படியொரு ஈடுபாடு. இதுக் கெல்லாம் குருவோ – ஆசானோ இல்லாது தன்பாட்டுக்கு சுயேட்சை யாய் தனக்குத் தானே வளர்த்திக் கொண்ட கலை.

அப்போதுதான், நகரத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எல்லோரும் பங்கெடுத்த சித்திரப் போட்டியில் இவனுக்கு முதல் பரிசு கிடைத்தது. பக்கத்து ஓவியக்கல்லூரி ஹாலில் ஏனைய மாணவ மாணவி களின் கூட தரையில் டிராயிங் வீட்டைப் பரப்பி ஒருமணி நேரத்தில் அவசரம் அவசரமாய் வரைந்து கொடுத்த ஓவியம். ஏதாவது ஒரு இயற்கைக் காட்சியை வரைய வேண்டுமென்றுதான் எண்ணியிருந் தான். தூரிகையை கையிலெடுத்து வரைவதற்குத் தயாராவது வரை இதே எண்ணம்தான்… ஆனால், திடிரென்று ஹாலுக்குள்ளே வரும் முன், வெளியில் ரோட்டோரத்தில் கண்ட ஒரு காட்சி…

பார்க்க அருவருப்பான, கோர முகம் கொண்ட ஒரு பிச்சைக்காரி… கிருஷ்ண விக்கிரகம் போன்ற அழகான குழந்தையை நெஞ்சோடு சேர்த்து பாலூட்டிக் கொண்டிருந்த காட்சி… இது அவள் பெற்ற குழந்தை தானா, இல்லை எங்கிருந்தாவது திருடியிருப்பாளா, திருடியிருந்தால் இப்படி பாசமுடன் தாயமுது ஊட்டிக் கொண்டிருப்பாளா? இப்படி நெஞ்சில் குடைந்தெடுத்த சந்தேகங் கள், யெற்கைக் காட்சியை நெம்பித் தள்ளிவிட்டு தூரிகை வாயிலாய் காகிதத்தில் வரைகளாய் நீண்டு, சுருண்டு ….

பள்ளி நோட்டீஸ் போர்டில், எல்லோரும் பார்க்கும் பொருட்டு மாட்டியிருந்த முதல் பரிசு பெற்று பள்ளிக்குப் பெருமை தேடித் தந்த படம் பூதனை மோட்சம் என்று ஆசிரியர்களும், மாணவர்களும் சொல்லிப் பரவசம் கொண்டார்கள். அத்தனைக்கு தத்ரூபமாக இருந்த சித்திரம்…

பல ஆசிரியர்களும், மாணவர்களும் வந்து பாராட்டினார்கள்.

ஆனால், மதிய இடைவேளையில் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வரும்போதே இவன் கவனித்தான். மாணவர்கள், சில ஆசிரியர்கள் சிறு சிறு கும்பலாய் கூடி நின்று என்னவோ பேசிக் கொள்கிறார்கள். இவனைப் பார்க்கும் அவர்கள் பார்வையில் வெறும் பாராட்டுதல் உணர்வு மட்டும் தானா….?

இவனுக்கு புரியவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்த வாறு வகுப்பறையில் வந்து தன் இருக்கையில் உட்கார்ந்ததும், அடுத்த வகுப்பிலிருந்து வெறி நாயாய் பாய்ந்துவரும் பத்ரன்…

“என் முகம் என்னடா ராட்சஸ முசுமா உனக்கு தோணறதாடா”

அவன் உதைப்பட்டு இருக்கையிலிருந்து கீழே விழுந்தான் இவன். அடுத்த உதையை தடுக்க நீட்டிய இவன் வலக்கை கட்டை விரலை கடித்துக் குதறி விட்டு, “உனக்கு இதுவே வேலையா போச்சு. பிடிக்காதவங்களைப் பற்றி தாறுமாறா படம் வரைவது… இனி எப்படி வரைவேன்னு பாக்கட்டும்” என்று விட்டு வகுப்பைவிட்டு வெளியில் இறங்கி ஓடிவிட்டான்.

இப்போது அறைக்குள் மங்கிய நீலவொளி மட்டுமே… ஜன்னலுக்கு வெளியில் கருமையிலிருந்து சிவப்புக்கு கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கொண்டிருக்கும் ஆகாயம்…

“ஸ்கூலில் சில ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நான் படம் வரைவது அவ்வளவாக பிடிக்காது என்பது எனக்கு முன்னாலேயே தெரியும். ஆனா… விளையாட்டுப் போக்கில் நான் கிறுக்கிய கார்ட்டூன் களும், ஸ்கெச்சுக்களும் அவுங்க மனசில் இத்தனைக்கு பெரிய பகையை வளர்த்திருந்தது என்பது இந்த சம்பவத்துக்கு அப்புறம்தான் எனக்குத் தெரிய வந்தது. பொறாமை புடிச்சவங்களும் இருந்திருக்கலாம். பத்ரன் எதுக்கெடுத்தாலும் வெகுண்டெழுகிற டைப்! ஸ்கூலில் பசங்களுக்கெல்லாம் அவன் கிட்டெ கொஞ்சம் பயமும் உண்டு. எங்கிட்டையும் வந்து மோதியிருக்கான்…. ஒரு வேளை அவன் மீது என் அகமனசிலிருந்த வெறுப்புத்தான் நான் அறியாமலேயே பூதனையின் முகத்தில் வந்து விடிந்திருக்கலாம். ஆனால் நான் வேணுமுன்னு அப்படி வரையல்லே… ஆனா யாரும் அதை நம்பவில்லை. மட்டுமில்லே முன்னால் என்னைப் பாராட்டினவங்க கூட உள்ளூர அவன் கட்சி அப்படீண்ணு அறிஞ்சுக்கிட்டபோது என்னால் தாங்கிக்க முடியலே…. “சும்மா வரை, இனி அவன் உங்கிட்டெ வாலாட்டாதவாறு பார்த்து கிறோம்” அப்பமண்ணு பத்ரனை விட முரடர்களான சில நண்பர்கள் தைரியம் தந்தாங்க. ரொம்ப நாள் சிகிச்சைக்கு அப்புறம், முன்போல் அல்லா விடிலும், சிரமப்பட்டால் வரைய முடியும்படி கட்டை விரலுக்கு சுவாதீனம் வந்தது. இருந்தும் அந்த ஷாக்கிலிருந்து என்னால் மீளவே முடியவில்லை … படம் வரைவதை நினைச்சாலே ஒரு கசப்பும், விரக்தியும்! மத்தவங்க அதை பயமுண்ணு அர்த்தப்படுத்தினாங்க. அப்புறம் படிப்பைக் கூட தொடர முடியலே… ஆனா அப்ப சரிவர புரிஞ்சுக்க முடியாததை இப்ப நான் நடத்திற போட்டோ ஸ்டூடியோவிலிருந்து நன்றாக புரிஞ்சுக்கிட்டேன்… மத்தவங்க கண்ணுக்கு அழகா இல்லாதவங்க, விருபமாக இருக்கிறவங்க கூட தம் படத்தை அது புகைப்படமாக இருந்தாக் கூட அழகா, கவர்ச்சியா இருக்கணுமுன்னுதான் ஆசைப்படறாங்க. நல்லா டச் பண்ணி சுந்தரவதனமாக்கிக் கொடுக்காட்டி போட்டோவை மூஞ்சியில் விட்டெறிஞ்சுகிட்டு போயிடுவாங்க!”

ஜன்னல் வழி அறைக்குள் விழும் இளம் வெயில். படுக்கையிலிருந்து எழுந்தாள் சித்ரா. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அவள் கணவனின் முகத்தில் நிறைந்து நின்ற நிம்மதி அவள் நெஞ்சில் புதுத்தெம்பை சுரக்கச் செய்தது.

– நவம்பர் 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *